பொங்குது மனசு

பொங்கல் விழான்னாலே உங்களுக்கெல்லாம் பொங்கல், கரும்பு, பொங்கப்பானை, மாடு, எல்லாம்தானே நினப்புக்கு வரும்..?
ஆனா எங்களூர்காரங்களுக்கு கழுத நினப்புக்கு வரும்.
ஆமா மதுரைக்காரய்ங்யளுக்குத்தான். பொங்கல் விழாவ ஒட்டி கழுதைப் பந்தையம், ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, சேவக்கட்டு, பிள்ளைங்களுக்கு ஓட்டப்பந்தையம், லெமன் ஸ்பூன் லருந்து கபடி, ஒயிலாட்டம்..ன்னு தூள் பரக்கும்.
அதுவும் பொங்கலை ஒட்டி ஒரு ரெண்டு மூணு நாள் மட்டுமில்ல கிட்ட தட்ட பத்து பாஞ்சு நா நடக்கும் பார்த்துக்கங்க..
பொங்கல் விழால ஒரு ஸ்பெஷல் என்னான்னா அதோட டைமிங்கு.
கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முந்தின நா சரி கணக்கா வரலாறு&புவியியல்ன்னு அரைப்பரிட்சை முடியும். அப்றம் புத்தாண்டுக்குப்பெறகு ஒரு ரெண்டு மூணு நாள்தான் பள்ளிக்கூடம். மறுபடி பொங்கல் திருவிளாதான்.
பரிட்சை முடியிற அன்னிக்கே பள்ளிக்கூடத்தில சொல்லிவிட்ருவாங்க..
“அரைப்பரிட்சை கேள்வித்தாளைப் பார்த்து அனைத்து கேள்விகளூக்குமான பதில மும்முறை நோட்டில் எழுதி வரவும்”ன்னு போர்டில எழுதி வேற போட்ருவாங்க..
மனசு என்னமோ இன்னிக்கே எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு, க்றிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் எல்லாத்தையும் செம்ம ஆட்டமா கொண்டாடணமின்னு..நினைக்கும்.
ஆனா பாருங்க… வீட்டுக்கு வரும்போதே செட்டு சேர்ந்து சந்தோசக் கூப்பாட்டில…நோட்டு புத்தகத்த வீர பாண்டிக்கு தின்னக்கொடுத்து அம்மாகிட்ட அடி வாங்கின அனுபவம் எல்லாம் பலருக்கும் இங்க..

10BGDONKEY_889137f

அதாரு வீர பாண்டி? வேறாரு நம்ம தெரு அயர்ன் வண்டிக்கார அய்யாவு வோட களுத.
அய்யே..திட்டலீங்க. கழுதையேதான். கா…லே…ல… அய்யாவு கூட வரும். முத வீட்ட ஒட்டி இருக்கிற வேப்ப மரத்தாண்ட  நிப்பாட்டிட்டு அவரு அயர்ன் வேலைய ஆரம்பிப்பாரு.
பள்ளிக்கூட பிள்ளைங்க எல்லார் கிட்டயும் அய்யாவு கேட்குற ஒரே கேள்வி..
”இரும்பு மனிதன் யாரு?” தெரிஞ்சவங்க பதில் சொல்வாங்க இல்லாதவங்கள தெரிஞ்சிக்கிட்டு வந்து சொல்லச் சொல்லுவாரு. பதில் ‘வல்லபாய் படேல்”ன்னு சொன்னமின்னா..நாந்தான் அதுன்னுவாரு. ஏனாம்? ’அயர்ன் மேன்’ இல்ல இவரு? அதனாலன்னு சிரிப்பாரு.
சரி விட்ருவம். களுதகிட்ட போவம். எங்கூர்ல கழுத ரேஸ் நடக்கும்ன்னு சொன்னேனில்லியா..? எங்களுக்கும் அதாவது எங்க ஏரியா பிள்ளைங்களுக்கும் ஒரு ஆசை. வீர பாண்டியும் அதுல கலந்துக்கணுமின்னு…
எங்கூர்ல வைகைக் கரைய ஒட்டி நிறைய வண்ணார் குடும்பங்கள் இருக்கும். அவங்களோட சொத்தே இந்த கழுதைங்கதான். வருசா வருசம் பொங்கலை ஒட்டி கழுதைப் பந்தையம் தூள் பறக்கும்.
எங்க வீர பாண்டிக்கும் ட்ரெய்னிங் ஆரம்பம்.
சனிக்கிழமையானா வீட்டுல புள்ளைங்க எல்லாருக்கும் நல்லெண்ணை தேய்ச்சி ஊற விட்ருப்பாங்க எண்ணைக் குளீயலுகாக.. அம்மா குளிக்க கூப்பிடர வரைக்கும் வீரனுக்கு ஓட்டப்பந்தைய ட்ரய்னிங்தான். அது ஓடுறது இருக்கட்டும். நின்ன இடத்திலருந்து நகர வைக்கவே பெரும்பாடா இருந்துச்சு. ஆனா எல்லா கழுதையும் அப்டித்தான்றதால நாங்களும் தெம்பாயிட்டோம்.
ஏழெட்டு மாசம் ட்ரய்னிங். அதுக்கு தின்ரதுக்கு காகிதம்லாம் கிடையாது.. சோளம். வீட்ல கொடுக்கிற சாப்பாடு..ஊற வச்ச கொள்ளாம்பயிறு..இப்டி.. அந்த மாசம் பூராவும் செம்ம தீனிதான் வீரனுக்கு..
இந்த ட்ரைய்னிங்கோட பொங்கல் விழா அன்னிக்கு நாடகம், நடனம், எல்லாம் ந்டக்கும். அதுக்கு எங்களுக்கும் ட்ரய்னிங் நடக்கும் அந்த பாஞ்சு நாளும். கிறிஸ்மஸ் அன்னிக்கு யாரு என்ன டான்ஸ்ன்னு முடிவாகும். அதிலருந்து பொங்கல் வரைக்கும் தினம் ப்ராக்டிஸ்தான்.
கழுதைக்கு நல்லாவே ட்ரைனிங் கொடுத்திருந்தோம். அந்த கழுதை பேர பதிவு பண்ண போனா… அங்கேயே குடியிருக்கிறவங்களுக்குத்தான்னுட்டாங்க. வெளியாளுக்கு இல்லன்னுட்டாங்க… எப்டியோ தேத்தி வீரனுக்கு சீட் வாங்கியாச்சு.
போட்டி நடக்கன்னு தனி இடமெல்லாம் இல்ல. கூடல் ந்கர்லருந்து ஆல மரம் வரைக்கும் மெயின் ரோட்டிலதான் …அதுதான் போட்டிக்களம். மெயின் ரோட்லதான் பந்தையம் நடக்கும். ரேஸ் ந்டக்குற ஒரு அரை மணி நேரம் மட்டும் பஸ்ஸு ஓடாது. எல்லாரும் லோகல் ஆளுங்கன்றதால யாருஞ்சண்டைக்கு வர மாட்டாங்க.
போட்டி நாள்…
கழுதைய அடிக்கக்கூடாது, அதோட வாலில தகர டப்பா கட்டக்கூடாது(அப்டி கட்டினா இது ஓட ஓட டப்பா சந்தங்கொடுகும். அதுக்கு பயந்துக்கிட்டு இது இன்னும் வேகமா ஓடும்) “வேறேதும்” தின்னக்கொடுக்கக்கூடாது. ..ன்னு விதுமுறை சொல்லி ஒப்பு வாங்கிக்கிட்டாங்க. நம்ம அய்யாவு வும் எல்லாத்துக்கும் அந்த வீரனாட்டமே தலையாட்டிக்கிட்டாரு.
ரோடெல்லாம் ஒழுங்கு பண்ணியாச்சு.
நாங்க சின்னப்பிள்ளைங்க எல்லாம் அவரவர் வீதி முக்குல நின்னுக்கிட்டு சியர்லீடர்ஸ் வேலை பார்த்துக்கிட்டிருந்தோம்.
போட்டிக்களம் கிலோமீட்டர் கணக்குல இருந்ததால போட்டி ஆரம்பமானதுமே பிரகாசு சைக்கிள்ள வந்து தகவல் சொல்லிட்டான்.. வீரந்தான் முதல்ல வாரான் ந்னு..
எங்களுக்கு சந்தோசம் தாங்கல… வீரா வீரா ந்னு ஒரே கூப்பாடு…
வீரன் எங்களக் கடந்து ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் போகணும். அதுக்கு பின்னாடியே அய்யாவு மகன் ஓடி வாராரு… அவரால ஓட முடியல அந்த வேகத்தில வீரன் வரான்.
எங்களுக்கோ ஹார்டு வாய்க்கு வந்திருச்சி…
வாரான் வீரன் வாரான். முத களூதையா வாரான்…
வந்தவன்..முத வீட்டு வேப்ப மரத்தப் பார்த்ததும் சடன் ப்ரேக் போட்டு “ஷ்ச்சக்” வண்டி நின்னுருச்சு. பின்னாடி வந்த அய்யாவு மகன், நாங்க எல்லாருமே
”… ஓடு …ஓடு வீரா…”ன்னு சவுண்டு கொடுத்துக்கிட்டே இருக்கம். …ம்ஹும்.. எல்லா களுதையும் தாண்டினப்ப்றம் அத வேடிக்கை பார்த்துட்டு.. “ம்.ப்..புர்..” ந்னு தும்மிக்கிட்டு..
எல்லா களுதயும் ஜெயிச்சிருச்சு. L
களூத களூததான். சரி விடுங்க..

rekla

எங்கூர் ரேக்ளா ரேஸ் பார்த்துருக்கீங்களா?
மாடுகள வயசு, எடை, பலம் வாரியா பிரிச்சு, அதுங்களுக்கும் பந்தையம் நடத்துவாங்க. ஆனா அது மாட்டு ரேஸ் இல்ல. ஒத்தை ஆள் உட்காருர மாதிரி ஒரு சீட் மட்டும் இருக்கிற திறந்த வகை வண்டி அது. போட்டிகளுக்குன்னே தயார் செய்யிற வண்டி வகை அது. அதுல ஒரு மாடு அல்லது இரட்டை மாடுகள் கட்டி ஓட்டப்பந்தையம் நடத்துவாங்க.
அது வண்டின்றதாலயும், நிறைய வண்டிங்க கலந்துக்கும்ன்றதாலயும், ஆனா ரோடு மூணு வண்டிதான் ஒண்ணை ஒண்ணூ கடக்க முடியும்ன்றதாலயும், ஒரு வண்டி தவறிட்டாலும் பெருஞ்சேதாரமாகும்ன்றதாலயும் ஒரே நேரத்தில எல்லா ரேக்ளாக்கும் போட்டி ஆரம்பிக்க மாட்டாங்க. நேரத்த குறிப்பிட்டு ஒரு சீட்ட டோக்கன ரேக்ளா வண்டில கட்டிருவாங்க. ஒவ்வொண்ணா புறப்படும். ஆனா இந்த ரேஸ் கழுதப்பந்தையம் மாதிரி இருக்க்காது. புயல்தான். நம்மள வண்டி தாண்டும்போது ..”விஷ்க்’” ந்னு ஒரு காத்து க்ராஸ் ஆகும்.. அம்புட்டு வேகம்.
இந்த மாடுகள்ள கரிச்சான் வகை மாடுங்களுக்க்கான போட்டிதான் எங்க ஏரியாவில நடக்கும்.
போட்டி தூரம் தோராயமா எட்டுலருந்து பத்து கிலோமீட்டர் இருக்கும். இந்த ரேக்ளா ரேசுக்குமே மாடுகளை ராஜா போல பார்த்து பார்த்து வளர்ப்பாங்க. சாப்பாடு எல்லாம் இந்த வைக்கோல் வகையறா எல்லாம் இல்லை. ஊறவச்ச கொள்ளாம்பயிறு, பேரிச்சம்பழம், கருப்பட்டி, பச்சை வெங்காயம் இப்டி…
அதே போல அந்த வண்டியையுமே போட்டிய ஒட்டி ஸ்பெஷலா கட்டுவாங்க. இந்த வண்டியோட அளவு ரொம்பவே சின்னதுதான். ஒரு ஆள் உக்காரலாம். வண்டி சக்கரம் சுத்தளவும் மாட்டு வண்டிய விட சின்னதா இருக்கும். சக்கரத்தில டயர் சுத்தினா அதோட வேகம் குறையும்ன்னு மொட்டை கட்டையாத்தான் இருக்கும் அந்த சக்கரம். அதனால இதுல பயிற்சி இருக்கவங்கதான் உட்காரவே முடியும். இல்லாங்காட்டி முதுகெலும்ப்பே போயிடும். போட்டி சமயத்தில வண்டி ஓடையில வண்டிக்காரரு கிட்டத்தட்ட மல்லாக்க படுத்த மாதிரிதான் இருப்பாரு…கயித்தப் புடிச்சமானிக்க…
சட்டப்படி இதுல பந்தையப்பணம் கூடாது. அதாங்க பெட்கட்றதுன்னுறோமில்ல அது. ஆனா அந்த போட்டிக்கு சம்பந்தமே இல்லாத ஆளுங்களும் பணம் வைப்பாங்க..
அதனால அந்த மாடுங்களுக்கு “வேறேதும்” கொடுத்திருவாங்களோன்னே அத தடை பண்ணிட்டாங்க.
இப்பங்கூட மே மாசத்தில புதுக்கோட்டைல மணல்மேல்குடி, கட்டுமாவடி சுப்ரமணிய சாமி கோவில் சார்பில நடக்க இருந்த ரேக்ளா ரேஸ் போட்டிய போலீசார் தடை பண்ணிட்டாங்க.. அந்த ஊர்ல சித்ரா பெளர்ணமி அன்னிக்கு வருசா வருசம் நடத்துவாங்க..எங்கூர் ஆளுங்களும், மாடுங்களூம் கூட போவாங்க அந்த பந்தையத்துக்கு.
இதுல மாடுங்கள துன்புறுத்தக்கூடாது குச்சீயால பின்பக்க்கம் குத்தக்கூடாது. வாலை கடிக்ககூடாது(கடிச்சா வலி தாங்காம இன்னும் விலகி வேகமா ஓடும்) திடீர்ன்னு ஆரன் (சத்தத்துக்கு பயந்து வேகமா ஓடும்)அடிகக்க்கூடாது..ன்னுல்லாம் சொல்லித்தான் ஆரம்பிப்பாங்க போட்டிய..இத கண்காணிக்க பந்தைய தூரம் முழுசும் ஆளுங்க நிப்பாங்கதான். ஆனாலும், திடீர்னு ரோட்டோரம் ஆளுங்களூம், ஆரவாரமும்..அதுங்க பதறிக்கிட்டு ஓடும். ஆனா கழுதைப் பந்தையம் கணக்கா இல்லாம சூரா வேகமா உற்சாகமா நடக்கும். ஆனா இனி அதெல்லாம் கிடையாது. பாவம் மாடுங்களூம் பாவம்ன்னு விட்ற வேண்டியதுதான்.
இது மெயின் ரோட்டுல நடந்து முடியும்போதே உடனேயே, ரய்லார் நகர் க்ரவுண்டில பிள்ளைங்களுக்கான போட்டிகள் ஆரம்பமாகிடும். பிள்ளைங்கன்னா சும்மா பத்திருபது இல்ல…அந்த ஏரியா முழுசும் அங்கதான் இருக்கும். எல்லாரும் எல்லா போட்டியிலயும் கலந்துக்க்குறாங்க..மேய்க்க முடியலன்னு ஒரு ஐடியா பண்ணுவாங்க…போட்டி நடத்துறவங்க.
திமு திமுன்னு இருக்குற கூட்டத்தில ஆங்காங்க அண்ணமார் நிப்பாங்க… “உயரந்தாண்டும் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் சதீஷ் அண்ணாவிடம் பெயர் கொடுக்கவும்”ன்னு மைக்ல அறிவிப்பாங்க..
சதீஷ் அண்ணாவ நோக்கி ஓடணும். முதல்ல வர பத்து பேர் பேர சேர்த்துக்குவாங்க.. மத்தவங்க எலிமினேட்டட். இதுல அண்ணங்காரங்க இன்னொரு குறுக்குசால் ஓட்டுவாய்ங்க.. தான் யார போட்டியில சேர்க்கணுமின்ன்னு நினைக்கிறாங்களோ அவங்க பக்கத்தில போயி அண்ணனுங்க நின்னுக்குவாங்க…மைக்ல அறிவிச்சதும் அவங்க பேர எடுத்துக்கலாமில்ல? இந்த நேரத்திலதான் சின்ன சின்ன ஆண்/பெண்  பிரியங்கள் பப்பரக்கான்னு பல்லிளிக்கும். அதுவும் ஒரு ஜாலிதானே?
இந்த அளகுல, லவுட்ஸ்பீக்கரில தோதா பாட்டு வேற போடுவாங்க…
’ஜூலி ஐ லவ் யு
பாரபக்க பாரபக்க பாரபக்க பாரபக்க
ஜூலி ஐ லவ் யு”
இந்த அக்காக்களும் அண்ணங்களும் கள்ள முழி முழிச்சுக்கிட்டு…நாங்க புரணி பேச நிறைய மேட்டரு சிக்கும்.
அந்தக் கூட்டத்திலேயும் கிளு கிளுண்டு..சில இளசுங்க..
ரயிலார்  நகர் முருகன் கோவில் தெரியுமா? அந்த கோவில் பின்பக்கமிருக்கிற அபிஷேக ஓடை(அபிஷேக தீர்த்தம் வெளிவருமில்ல? அந்த ஓடை) லதான் காதலர்கள் தன் காதல் கடிதங்கள சுருட்டி வைப்பாங்க.. வைக்கும் முன்ன தன் ஆளுக்கு கண்ண காட்டிட்டு வைப்பாங்க. சில சமயம் இவன் லெட்டர அடுத்தவங்காதலி எடுத்திருவா..ஆனா நேர்மையா கொண்டோயி கொடுத்திருவாங்க உரியவருகிட்ட..
ஆனா பாருங்க..காதலிக்கிற வயசோ, வக்கோ இல்லாத பன்னண்டு வயசு பொடிசுங்களுக்கு அந்த நாள் பூராவும் ஒரே வேலை. யாரும் பார்க்காம இருக்க்கிறப்ப அந்த லெட்டர களவாண்டு.. அந்த தகவல ஊரெல்லாம் பரப்பி ஒரண்டையிழுக்கிறதுதான்.
ஆனா பாருங்க நாங்க தாவணி போடுற காலம் வந்த போது அம்மா அந்த போட்டிக்கெல்லாம் அனுமதி இல்லன்னுட்டா..
மார்கழி முழுசும் கோலம் போட்டது போதாது பொங்கல் அன்னிக்கு கோல போட்டி வைப்பாங்க.. எங்க தெரு எதிரெதிர் வீடு.. இந்த வீட்டு வாசல்ல ஆரம்பிச்சு எதிர் வீட்டு வாசல்ல முடியுற மாதிரி பெரிய்ய்ய்ய்ய கோலமெல்லாம் போடுவோம் பொங்கலன்னிக்கு.
நாந்தான் ஃபஸ்ட் போட்டு முடிச்சேன்ன்னு பீத்துறதுல ஒரு சந்தோசம். அஞ்சு மணிக்கு போட்டா…போடுறத பார்க்க ஒரு கூட்டம். போட்டு முடிச்சிட்டு உள்ற போயி திரும்புறதுக்குள்ள அது மேல சைக்கிள் ஓட்டி அத கலைக்க ஒரு கூட்டம்.. (பசங்க டைப்பு கிளாஸ் போறானுங்களாம்..)அப்றம் அதை ஒட்டி ஒரு சண்டை..ன்னு சூரா போகும்.
பக்கத்தில ஊரு நாட்டுல சொந்த நிலம் இருக்கிறவங்களோட பொங்கலுக்கு ஊருக்குப் போவோம்,. இல்லாட்டி குக்கர் பொங்கல்தான்.
காலேல பொங்கல நெய்யோட வழிச்சு கொட்டிக்கிட்ட பிற்பாடு.. மதியம் 11 மணி போல முத வீட்டு படியில உட்கார்ந்து கரும்பு தின்னுவோம். லீவு வேறயா? கரும்பு, பனங்கிழங்கு..தின்னுக்கிட்டே இருப்பம். பொங்கல் அன்னிக்கு அடுத்த நாள் எல்லா காயும் போட்டு கூட்டாஞ்சோறு செஞ்சு …முடிஞ்சவங்க ஆத்தங்கரை போவோம். அதுதான் எங்களூரு பீச்சு. அதுலயே எல்லா கடையும் வந்திருக்கும். வளையல் கடைலருந்து, பஜ்ஜி, டெல்லி அப்பளம்..ன்னு. அன்னிக்கு எல்லாரையும் பார்கக்ணும்ன்னு ஒரு சாங்கியம். அப்டி போறதால சின்ன சின்ன மன்ஸ்தாபம் இருந்தாலும் விட்டுப்போயிடும்.
ஆத்து மணல்ல பொங்கலுக்க்கு வாங்கின துணிய அழுக்கு பண்ணக்கூடாது, மறுநாள் ஸ்கூலுக்க்கு அதத்தான் போட்டுப் போகணுமின்னு அம்மா சொல்லும்போதுதான் நெனப்புக்கே வரும்… அந்த வாசகம்.
“அரைப்பரிட்சை கேள்வித்தாளைப் பார்த்து அனைத்து கேள்விகளூக்குமான பதில மும்முறை நோட்டில் எழுதி வரவும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.