நிழல்கள் உலவும் தெரு
மரத்தின் கிளைகளிலிருந்து
நிலவுச்சுடர் தெறிக்கச் சிதறிவிழுந்தது
ஒரு வாதாங்கொட்டை.
வாலைமடித்துக் கூர்கண்கள் ஜொலிக்கக்
குப்பைத்தொட்டியினருகே
காத்திருந்தது ஒரு நாய்.
பாடல்கள் இறைத்துப் புகைவரைந்து
சக்கரங்களைச் செதுக்கிச் சிற்பமாய்ச்சென்றது
ஒரு இளவேகவண்டி.
பொம்மைகளையும் போர்வைகளையும் சுமந்து
நம்பிக்கை ஒளிர அடுத்தபுகலிடம்
விரைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
நகரும் நிலவொளியில்
நிச்சலனமற்றிருந்தது
நிழல்கள் உலவும் தெரு.
*
”இணைய”ற்ற தெப்பம்..

மந்திர உச்சாடனங்களுக்குள்
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.
மின்சாரமற்ற தெருக்களை
ஒளியேற்றுகிறது திருவிழா.
ஒன்பது தலைமுறை கடந்தும்
ஒய்யாரமாய் ஓடிவரும் தேர்.
இணையங்களற்ற வெளியில்
இன்றொரு நாளாவது
இணைந்து ஏறுகிறோம்
மிதக்கும் தெப்பத்தில்.
***
மொழி
அந்நியமொழி வார்த்தைகள்
சேர்த்துச் சேர்த்து
வாக்கியம் வாங்குவதாய்
ஒவ்வொன்றாய் அர்த்தப்படுத்தி
வாழ்வை இழைக்கிறேன்
வல்லமையெல்லாம் பெறும்நொடி
வேறொரு மொழிகிளைத்தோ
புதியதொரு உரைபு முளைத்தோ
என்னை மீண்டும் பிறப்பிக்கும்
நான் குழந்தை.
***