ஊர்தி
பள்ளிப் பருவத்தில்
கால் நடை
இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி
கல்லூரி போய் வர
பொடி நடையும் நகரப் பேருந்தும் –
வழித்தடம் 33
பதினெட்டு ஆண்டுகள்
பம்பாயில் மின் தொடர் வண்டி
மாற்றாலாகி வந்த கோவையில்
சின்னாள் 1A, 1C, 1E
நெடுநாள் 43, 43A, S-18
அதன் பின் 95, 114, 61, 23A
S-2, S-3, S-4
எதிர் வரும் காலம்
S-14, S-17, 107,3 D
இறுதி நாள் யாவ்ர்க்குமான
அமரர் ஊர்தி…
இறையே ! எம்பெருமானே !
கல்லினுள் தேரைக்கும்
அன்னம் பாலிக்கும் அருள் வள்ளலே !
எனக்கேன் இல்லை
விடை, பருந்து, வெள்ளை வாரணம்,
சிங்கம், புலி, புரவி,
குக்கல், எருமைக் கட,
மயில், மான், அன்னம்,
காகம் தத்தை என
நிரந்தரமாய்
ஓர் ஊர்தி…!
கூற்றம்

தொல் கடலின் வேங்கைச் சுறா
ஆழம் அறியும்
வேழம் அறியும்
கானில் பூத்த புளிய மரம்
கொடுங்காற்றின் குலப்பாடல்
கூளம் அறியும்
வல்லரவின் உட்செவிகள்
மேளம் அறியும்
கோளும் அறியும்
கொல் கூற்றின் கொக்கரிப்பு
நீயறிய மாட்டாயோ
உடன் பிறப்பே !
ரத்தத்தின் ரத்தமே !
தோழனே !
தொண்டனே !
தலைவன் யார் கயவன் யார் என்று !
[பட உதவி : தி ஹிந்து]
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
