பாடுதும் காண் அம்மானை!

அம்மானை
படம் உதவி: விக்கிப்பீடியா

மூன்று பெண்கள் அமர்ந்து கொண்டு கற்களால் செய்யப்பட்ட ஒருவிதமான காயை வீசிப் பிடித்து அம்மானை விளையாடுகிறார்கள். இது விளையாட்டாகவே இருப்பினும், ஆடுவதற்கும் அதன் வேகத்திற்கும் பொருத்தமாகப் பாடல்களையும் இப்பெண்கள் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!!

         முதலில் ஒருத்தி, “திருமாலாலும் அறிய இயலாத இறைவனாம் அண்ணாமலையாருக்கு அழகாக அமைந்த வில்லும் போர்வையும் அங்கமும் (உடலும்) முறையே மேருமலையும், யானைத் தோலும், மாதின் உடலில் பாதியும் ஆகும், அம்மானை,” என்று கூறி அம்மானையை மேலே வீசுகிறாள்.

         ‘நாராயணன் அறியா நாதர் அருணேசருக்கு

       வார் ஆர் சிலை கலை மெய் மாது அங்கம் அம்மானை’

         (வார் ஆர் சிலை= அழகான வில்; கலை= உடை, போர்வை; மெய்= உடல்; மாது அங்கம்= மாதின் உடல்; பார்வதியின் பாதி உடல்).

         அடுத்த பெண் இதற்கான மறுமொழியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்!! அவளும் சளைக்காமல் உடனே, “அழகான வில்லும் யானைத்தோல் போர்வையும் உடல் மாதின் அங்கமும் ஆனாலும், அடியே! ஆராய்ந்து பார்த்தால் அவர் எடுப்பது பிச்சை அல்லவோ, அம்மானை,” என்று ஏளனமாகக் கேட்டபடி அம்மானையை வீசுகிறாள்.

         ‘வாரார் சிலை கலை மெய் மாது அங்கம் ஆம் ஆயின்

       ஆராயும் கால் எடுப்பது ஐயம் அன்றோ அம்மானை!’

         (ஐயம்= பிச்சை)

         மூன்றாமவளோ வெகு சாமர்த்தியக்காரி. இருவர் கூற்றுகளுக்கும் பொருந்தும் வகையில், “அன்னம் கண்டறியாத அவர் பிச்சை எடுப்பதற்கு ஐயப்பாடும் உள்ளதோ? அம்மானை!” என இடக்காக விடையிறுக்கிறாள். இப்போது மற்றவர்கள் தான் இவளுடைய கூற்றுக்குத் தமக்குப் புரிந்தவாறு பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்!!

         ‘அன்னம் அறியார் எடுப்பது ஐயமோ அம்மானை!’

         (அன்னம் அறியார்= உணவைக் காணாதவர் என்ற பொருள்; ஆனால் உட்பொருள் அன்னப் பறவை வடிவான பிரம்மனும் காண இயலாத ஐயன் என்பதாம்! ஐயமோ= பிச்சையோ; ஆனால் இங்கு ஐயப்பாடு அல்லது சந்தேகம் என்ற பொருளில் வந்தது!)

திருமால், பிரமன் ஆகிய இருவரும் பன்றி, அன்னப் பறவை ஆகிய உருவெடுத்துத் தேடியும் அடிமுடி காணவொண்ணாத ஒளிப்பிழம்பாக அண்ணாமலையார் நின்ற வரலாறு அழகுபட சாமர்த்தியமாக இங்கு இப்பெண்களால் அம்மானை விளையாட்டின் போது உரைக்கப் படுகின்றது.

         உட்கருத்து: (வராக உருவெடுத்த) திருமாலும் காண இயலாத அண்ணாமலையாருக்கு மேருமலையே வில்; யானையுரி உடை; பார்வதியான மாதின் உடலில் ஒரு பாதி அங்கம் ஆகும்; இரண்டாமவள் இப்பொருள் புரியாதவள் போல, வெளிப்படையான பொருளை மட்டும் கொண்டு, “இதுவெல்லாம் இருப்பின், அவர் ஏன் பிச்சை எடுக்கிறார்?” எனக் கேட்கிறாள். உடனே மூன்றாமவள் சமயோசிதமாக, இருபொருள் பட, “அன்னத்தையே (சோற்றையே) கண்டறியாதவர் பிச்சை எடுப்பதில் வியப்பு என்ன?” என்பாள். சிறிது ஆழ்ந்து பார்த்தால், “அன்னப் பறவை வடிவு கொண்ட பிரமனாலும் காண முடியாதவர் அல்லவோ? இதில் ஐயமும் உளதோ?” என்ற பொருள் தோன்றும்!

         முழுப் பாடலைப் பார்க்கலாம்:

         ‘நாராய ணனறியா நாதரரு ணேசருக்கு

       வாரார் சிலைகலைமெய் மாதங்கம் அம்மானை!

       வாரார் சிலைகலைமெய் மாதங்கம் ஆமாயின்        

       ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ அம்மானை!

       அன்னம்அறி யார்எடுப்ப தையமோ அம்மானை?’

         இந்த வினாக்களும் அவற்றிற்குண்டான விடைகளும் அம்மானையை வீசும் சில நொடிகளில் நிகழ வேண்டும். சமயோசிதமும், உள்ளறிவும், புத்திக் கூர்மையும் கொண்டு புராணங்களில் நல்ல தேர்ச்சியும் உள்ள பெண்களால் தான் இவ்வாறு இருபொருள் படப் பாட முடியும். அல்லது அவர்கள் பாடியபடி அம்மானை ஆடுவதாகப் புலவர்கள் பாடலெழுதி உள்ளனர்.

         அம்மானைக்காகப் பாடலா? பாடலுக்காக அம்மானையா? எதுவானால் என்ன?

ஒரு விறுவிறுப்பான விளையாட்டு!

துறு துறுவென மூளைக்கு வேலை!

தமிழுக்கு அழகான இலக்கியம்!!

         மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன் கதையை அல்லது அவன் புகழைப் பாடி வினா- விடையாக அம்மானைக் காய்களை வீசி விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

         மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயைப் பிடித்து வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது. அவற்றைப் பின்னால் காண்போம்.

fancy_poem_article_post_separator

         ஆதி காலம் தொட்டு, நாகரிகம் வளர்ந்து, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான ஒரு நெறியாகக் கடைபிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும், அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்து வந்தன. தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்த உன்னத நிலையை அடைந்த போது மாந்தர்களின் வாழ்வில் பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப் பட்டது. அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைந்து தனிச் சிறப்புப் பெற்றன. முக்கியமாக மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பொழுது போக்காக பலவிதமான விளையாட்டுகளை விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

         இவற்றுள் பாவை நோன்பு, அம்மானை விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

         அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், பெரும்பாலும் கலம்பகம் என்னும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன. கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்ப் பேரறிஞர் உ. வே. சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும். முதன்முதலில் தமிழில் பாடப் பெற்றது நந்திக் கலம்பகம் ஆகும். இதன் இலக்கணத்திற்குள் புகாமல், இந்தக் கலம்பகங்களில் உள்ள அம்மானைப் பாடல்களை, அவற்றின் நயத்தை மட்டும் காண்போமே.

         மேற்கூறிய மூவர் அம்மானைப் பாடல்கள் பெரும்பாலும் கலம்பகத்தின் உறுப்பாகவே காணப்படுகின்றன. விறுவிறுப்பான விளையாட்டுக்கேற்ற வினா-விடைக் கவிதைகள் இவை. இவை தவிரத் தனியாக மூவர் அம்மானை என இலக்கியங்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. முதலில் மேலே நாம் பார்த்தது சைவ எல்லப்ப நாவலர் அருளிய திரு அருணைக் கலம்பகத்தில் பெண்கள் அம்மானை ஆடும் காட்சி.

fancy_poem_article_post_separator

         அடுத்து, குமர குருபரரின் மதுரைக் கலம்பகத்திலுள்ள அம்மானைப் பாடல்;

         அதே விதமாக மூன்று பெண்கள் அம்மானை ஆடிக் கொண்டு, புதிர் போடுவது போன்ற வினாக்களையும் விடைகளையும் கூறுகின்றனர்.

         முதல் பெண் கூறுகிறாள்: “பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும் தன் அடிமுடிகள் காண்பதற்கு அரியதானவரும், மதுரையின் ஈசனும் ஆகிய சிவபெருமான், தன் வெற்றியைக் காட்டும் மொழிகளைப் பேசி, ஒரு சித்தனின் உடம்பில் உறுப்புகளைத் தனித் தனியாக வெட்டி வென்று விட்டார்,” என்கிறாள்.

         ‘இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசனார்

       விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண் அம்மானை’

         (விருது கட்டி– வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து கொண்டு; சித்தன் என்பவன் தனக்கு ஆயுதக் கலை பயிற்றுவித்த ஆசிரியரிடம் பொறாமை கொண்டு, தானும் சிலருக்குக் கற்பித்து வந்தான்; இதனால் ஆசிரியரின் வருவாய் குறைந்தது; ஆதனால் சிவபெருமான், சித்தனின் ஆசிரியர் வடிவு கொண்டு சென்று அவனைப் போருக்கு அழைத்து, அங்கத்தை வெட்டிக் கொன்றார் என்பது புராணக் கதை)

         இரண்டாமவள் கூற்று: “அவ்வாறு வெற்றி மொழி பேசி சித்தனின் உடலைத் துணித்து வென்றார் என்றால், அருமையான அவருடைய ஒரு உடம்பு இரண்டு கூறாக ஆவது ஏன்?” எனக் கேள்வி கேட்டு அம்மானையை வீசுகிறாள்.

         ‘விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரேயாம் ஆகில்

       அருமை உடம்பு ஒன்று இருகூறு ஆவது ஏன் அம்மானை’

         (உட்பொருள்: இருகூறாக ஆவது என்பது ஈசனின் பாதியும் அன்னையின் பாதியும் என்பனவாகும்)

         மூன்றாமவள் பகரும் விடை: “அவருக்கு உடம்பு இரண்டு கூறாக ஆயினும், தழும்பு (காயம்) ஏதும் இல்லை!” என உரைப்பாள்.

         ‘ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

         (ஆனாலும் அவருக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லையே என்பது உட்பொருள். காயம்- உடம்பு; புண் அல்லது தழும்பு)

         முழுப்பாடல் இதோ:

         ‘இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்

       விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை

       விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்

       அருமையுடம் பொன்றிருகூ றாவதேன் அம்மானை

       ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

         அம்மாடி! வாயாடிகள் தான் இந்தப் பெண்கள். ஒருத்தருக் கொருத்தர் சளைக்காமல் வினாக்களும் விடைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றனவே!

fancy_poem_article_post_separator

அடுத்து பூண்டி அரங்கநாத முதலியார் தமது கச்சிக் கலம்பகத்தில் பாடியுள்ள ஒரு அம்மானைப் பாடல்:

         முதற்பெண்: “குறையாத வளங்களையுடைய காஞ்சியம்பதியில் வாழ்ந்தருளும் ஏகாம்பரனார் பகைவரது முப்புரத்தை எரித்து அழித்த தீயவர் பாரடி, அம்மானை,” என ஒரு செய்தியைக் கூறி ஆட்டத்தைத் துவங்குகிறாள்.

         ‘வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருள் ஏகம்பரனார்

       செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை’

         (வற்றா– குறைவில்லாத; செற்றார்= பகைவர்; தீயர்= கொடியவர்)

         இரண்டாமவள்: “பகைவரின் முப்புரம் அழித்த கொடியவராக இருப்பினும் வேத நூல்களைக் கற்ற அந்தணர்கள் அவரை அழகிய குளிர்ந்த கருணையை உடையவராகக் கூறுவது ஏன், அம்மானை?” என இடக்காகக் கேள்வியைக் கேட்கிறாள்.

         ‘செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்

       கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை’

         (அந்தணர்– பிராமணர்; அம்+ தண் + அர்- அழகிய குளிர்ச்சியை உடையவர்; கழறுவது- கூறுவது)

         இதற்கு ‘நறுக்’கென மூன்றாமவள் தரும் நயமான விடை: “அவ்வாறு கூறுதல், ஆறுதொழில் சேர்ந்த காரணத்தால் அம்மானை,” என்பதாம்!

         ‘கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.’

         (அறுதொழில்= அழிக்கும் தொழில்; அழித்து யாவரையும் ஒழித்தல்; சிவன் சம்ஹாரக் கடவுள் என ஒரு பொருள்; இன்னொன்று, அந்தணரின் ஆறு தொழில்களான ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்).

         பாடல் இதோ முழுமையாக:

         ‘வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே கம்பரனார்

       செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை

       செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்

       கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை

       கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.’

         நாமும் ஒப்போது இந்த அம்மானை விளையாட்டில் ஆழ்ந்து விட்டோமல்லவா?

fancy_poem_article_post_separator

         அடுத்ததாக இவர்கள் பாடுவது, காசிக் கலம்பகத்தில் குமர குருபரர் பாடிவைத்துள்ள அம்மானைப் பாடல்:

         முதல் பெண் பாடியபடி ஆடுகிறாள்: “பிறைமதியின் கீற்றை அணிந்திருக்கும் காசி விஸ்வேசர் கரும்புவில்லைக் கொண்ட மன்மதனைத் தன் நெற்றிக் கண் நெருப்பால் எரித்தனர் கண்டாயோ, அம்மானை!”

         கலைமதியின் கீற்று அணிந்த காசிஅகி லேசர்

       சிலைம தனைக் கண்அழலால் செற்றனர்காண் அம்மானை!

         (சிலை மதனை= வில்லேந்திய மன்மதனை)

         இதற்கு இரண்டாமவள், “வில்லேந்திய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தார் என்றால், மலைமகளான உமையவளுக்குத் தன் உடலில் ஒரு பாகத்தை எதற்காகக் கொடுத்தார்,” என வினா எழுப்பி அம்மானையை வீசுகிறாள். அதாவது, தம்மைக் காதலில் விழச் செய்ய மதனன் அம்பு விடுத்ததனால் சினம் கொண்டு அவனை நெற்றிக் கண்ணால் எரித்தவர் பின் உமாதேவிக்கு தனது உடலில் ஒரு பகுதியை எதற்காகக் கொடுத்தாராம்? எனக் கேட்கிறாள்.

         சிலைமதனைக் கண்அழலால் செற்றனரே ஆமாகின்

       மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை

         அதற்கு மூன்றாமவள் சளைக்காமல் கூறும் சமயோசிதமான விடை: “அடியே! இறைவர் காதல் மயக்கம் கொண்டு விட்டதனால் தமது உடம்பில் பாதியை மலைமகளுக்குத் தர மாட்டாரோ?” என்பது.

         வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை

         பாடலை முழுமையாகக் காண்போமா?

         கலைமதியின் கீற்று அணிந்த காசிஅகி லேசர்

       சிலைம தனைக் கண்அழலால் செற்றனர்காண் அம்மானை

       சிலைமதனைக் கண்அழலால் செற்றனரே ஆமாகின்

       மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை

       வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை!

fancy_poem_article_post_separator

         இப்பெண்கள் சிவபிரானைப் பற்றி மட்டுமல்ல; திருமாலின் கதைகளையும் பாடிக் களிக்கின்றனர்; பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்தில் இருந்து ஒரு அம்மானைப் பாடல்:

         முதல் பெண்: “வண்டுகள் விரும்பிச் சேரும் சோலைகளையுடைய திரு அரங்கர் எல்லாப் பொருளும் ஆனவர் ஆவார்; ஆயினும் ஆண், பெண், அலி அல்லாதவராவார். தெரியுமா? அம்மானை!” என ஆரம்பிக்கிறாள்.

                  ‘தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்

              ஆனவர்தாம்; ஆண், பெண், அலி அலர்காண், அம்மானை!’

         இரண்டாமவள்: “எல்லாப் பொருள்களும் ஆகிய அவர் ஆண், பெண், அலி அல்லாதவரானால் சீதையை மனைவியாகக் கொள்வாரோ? அம்மானை!” என நையாண்டி செய்கின்றாள்.

                  ‘ஆனவர்தாம் ஆண், பெண், அலி அலரே ஆமாகில்

              சானகியைக் கொள்வாரோ தாரமாய்? அம்மானை!’

         மூன்றாமவள்: “அவ்வாறு அவர் சீதையை மனைவியாகக் கொண்டதும் ஒரு சாபத்தால் (வில்லின் பொருட்டால்) தான் அம்மானை!” என முத்தாய்ப்பு வைக்கிறாள்.

                  ‘தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால், அம்மானை!

         விரிவாக விளக்கத் தேவையிராது எனக் கருதுகிறேன். இப்பொழுது இந்த அம்மானை விளையாட்டின் வினா-விடை முறைமைகள் புரிந்திருக்கும் அல்லவா?

         முழுப் பாடல் இவ்வாறு:

         ‘தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்

       ஆனவர்தாம்; ஆண், பெண், அலி அலர்காண், அம்மானை!

       ஆனவர்தாம் ஆண், பெண், அலி அலரே ஆமாகில்

       சானகியைக் கொள்வாரோ தாரமாய்? அம்மானை!

       தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால், அம்மானை!’

0 Replies to “பாடுதும் காண் அம்மானை!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.