யதுகிரி அம்மாள்
இந்தியா பத்திரிகை நடத்திய மண்டயம் ஸ்ரீனிவாசாரியாரின் மகள், யதுகிரி அம்மாள். பாரதியுடனும் பாரதி குடும்பத்தாருடனும் நெருங்கிப் பழகியவர். பாரதி வாழ்கையைக் குறித்து பல ருசிகரமான தகவல்களை இவர் எழுத்துக்களில் காணலாம்.
மாசி மகத்தன்று புருஷர்கள் பெண்டுகள் எல்லோரும் பெருமாளுடன் கடற்கரைக்கு தீர்த்தமாடப் போயிருந்தோம். புதுச்சேரியில் இந்தக் காட்சி மிகவும் அழகாக இருக்கும்.
ஸ்நானம் ஆனப் பிறகு வீட்டிற்கு சென்று சமையல் சாப்பாடு எல்லாம் முடிந்தன. பாரதியார் தன் குழந்தை சகுந்தலாவுடன் நாலு மணிக்கு வந்தார். என் கடைசித் தங்கை ரங்கநாயகியும் அவளும் ஒரே வயசு. இரண்டு பேரும் ஜதையாக விளையாடுவார்கள்.
சகுந்தலா: ரங்கா, உங்காத்தில் என்ன சமையல்?
ரங்கா: கொத்தவரங்காய் கறியமுது, தேங்காய்த் தயிர் பச்சிடி, பருப்பு, திருக்கண்ணமுது.
சகுந்தலா: இன்னிக்கு என்னடி விசேஷம்?
ரங்கா: சமுத்திரத்தில் குளித்தோம், பெருமாளை சேவித்தோம். பருப்பு, திருக்கண்ணமுது சாப்பிட்டோம்.
சகுந்தலா: போம்மா! என்ன பண்டிகை, சொல்லேன்.
ரங்கா: எனக்குத் தெரியாதம்மா.
சகுந்தலா: ஐயோ அசடே! இன்னிக்கு மாசி மகம்டீ, மாசி மகம்.
இதுவரை அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த பாரதியார் கலகலவென்று சிரித்து “பாப்பா, ரங்கா, இங்கே ஓடி வாருங்கள். நீங்கள் இருவரும் கிளிபோலப் பேசுகிறீர்கள். ஒன்று தங்கக் கிளி, இன்னொன்று இரும்புக் கிளி. யார் எந்தக் கிளி ஆகிறீர்கள்?” என்றார்.
சகுந்தலா: அப்பா, நான் தங்கக் கிளி. ரங்கா இரும்புக் கிளி. சரிதானே அப்பா.
ரங்கா: இல்லை. நானே தங்கக் கிளி. நீ இரும்புக் கிளியாக இரு.
சகுந்தலா: அதெல்லாம் முடியாதடி. எங்கப்பா தான் சொன்னார். நான் தான் தங்கக் கிளி.
ரங்கா: போம்மா. நீ சண்டை போடாதே. நாம் இரண்டு பேருமே தங்கக் கிளிகளாக இருக்கலாம் அம்மா!
பாரதியாருக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. ரங்காவை எடுத்துக் கொண்டு மெத்தை மேல் இருந்த என் தந்தையிடம் சென்று, “நான் குழந்தைகளின் மனம் நோகும்படி சொன்னேன். இந்தக் குழந்தை சரிப்படுத்தி விட்டது.!” என்று கூறி, அவர்களின் சம்பாஷணைகளைச் சொன்னார். பிறகு எப்பொழுதுமே என தங்கையை தங்கக் கிளி என்று தான் கூப்பிடுவார்.
பாரதியார்: வா பாப்பா சகுந்தலா! ரங்கா உன்னையும் தங்கக் கிளி ஆக்கி விட்டாளே!
சகுந்தலா: போ அப்பா. நான் வருகிறதில்லை. என்னை நீயே வந்து எடுத்துக் கொண்டு போ.
அவர்களை முன் போல் விளையாடும்படி விட்டு விட்டார். நான் என் பாடங்களை முடித்துக் கொண்டு அங்கு வந்தேன். அவர். “ யதுகிரி, இன்று தங்கம்மா பண்ணின வேடிக்கையைக் கேட்டாயா?” என்றார்.
“என்ன பண்ணினாள்?” என்று கேட்டேன்.
பாரதியார்: கடல் ஸ்நானமாகி, சமையலாகப் பொழுதாகும் என்று வழியில் ஒரு ஓட்டலுக்கு இருவரையும் அழைத்துப் போனேன். சகுந்தலா சமர்த்தாகச் சாபிட்டுவிட்டாள். தங்கம்மா ஒப்பவில்லை. அவளுக்குத் தனியாக மணை போட்டு வேறு இட்லி கொண்டு வரச் சொன்னேன். அவன் கண்ணாடி லோட்டாவில் தண்ணி கொணர்ந்தான்.”மேஜை மேல் இருந்த லோட்டாவிற்கு புளி போட்டுச் சுத்தம் செய்யவில்லை; வேண்டாம்” என்றாள். கடைசியில் ஒரு வெள்ளி லோட்டாவில் கொணர்ந்தான். இட்லி ஜில்லென்று போய்விட்டது. வேறு கொணர்ந்தான். அங்கு எல்லோரும் தங்கம்மாவைப் பார்ப்பவர்களே!
தங்கம்மா “எனக்கு இதெல்லாம் பிடிக்காது. வாயிலேடுக்க வருகிறது. அவன் ஒரு தொட்டித் தண்ணீரில் அவ்வளவு எச்சில் லோட்டாக்களையும் போட்டான். அப்படியாவது இந்த வயிற்றை நிறைக்காவிட்டால் என்ன்? நாம் போகும் போது காபி குடித்துக் கொண்டிருந்த குஷ்ட ரோகியின் லோட்டாவையும் அதிலேயே போட்டான். ஹோட்டல் ரொம்ப அழுக்கு! மோசமான இடம். என் பெரியம்மா உரித்தப் பலாச் சுளையைத் தீட்டு என்பாள். இங்கு சாப்பிட்டதைப் பார்த்திருந்தால் பொறுக்கவே மாட்டாள்” என்று பதில் சொன்னான்.
அவளுக்கு ஓட்டல் வழக்கமில்லை. “எங்களை எங்கள் தாயார் முந்திரிப்பருப்பு மிட்டாய், ஏலக்காய் மிட்டாய் கூட ஹோட்டலில் வாங்கக் கூடாது என்கிறார்” என்று நானும் பதில் சொன்னேன்.
பாரதியார்: பெரியவர்கள் எப்படியாவது இருக்கட்டும். பிறந்த சின்னக் குழந்தைகளுக்கும் கட்டா ?
நல்ல பழக்கம் பிறந்த போதே செய்தால் நல்லது அல்லவா என்று நான் கேட்டேன்.
பாரதியார்: இனிமேல் தங்கம்மாவை எங்கும் அழைத்துப் போவதில்லை.
“அவள் சொல்லியது சரிதானே? குஷ்டரோகி, க்ஷயரோகி, புண் பிடித்தவர்கள் எச்சிலை நாம் குடிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பின்னும் வற்புறுத்தினேன்.
பாரதியார்: நீ அவர்களுக்கு வக்கீலாக வாதாடிப் பயனில்லை.
“நீங்கள் சரியாகச் சொல்லுங்கள். நான் வாதாடவில்லை” என்றேன்.
பாரதியார்: நம் பெரியவர்கள் எச்சில் விஷயத்தில் கண்டிப்பான சட்டம் செய்திருப்பது நல்லதே. நாம் ஒரேயடியாக ஜாதி பேதம் செய்வது தப்பு. பிராமணன் க்ஷயரோகி, அவனிடம் சாப்ப்பிடால் மடி, சூத்திரன் நல்ல திடகாத்திரம் உடையவன், அவனிடம் சாப்பிட்டால் தீட்டு. இன்னொரு வேடிக்கை ரயிலில் பார்த்தேன். ஒரு சின்ன வண்டியில் நானும் சின்ன கணவன் மனைவியுமாக இருவரும். ஆக நாங்கள் மூன்றே பேர். கணவனும் நானும் ஊர்க்கதைகளை பேசினோம். அவன் காப்பி எடுத்துவரப் போனான். அப்பொழுது அந்த பெண், என்னை ஊர்ப் பெயரெல்லாம் விசாரித்தாள். கணவன் தலையைக் கண்டதும் வாய்ப்பூட்டு. நான் வெற்றிலை வாங்க இறங்கினேன். அவர்கள் இருவரும் ஸந்தோஷமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். என் தலையைக் கண்டதும் வாய்ப்பூட்டுச் சாத்தி ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டாள். இது என்ன வழக்கம். முட்டாள்தனம்! இல்லாவிட்டால் பேசாமல் இருக்க வேணும். அதைப் பற்றி பெரிய பிரசங்கம் பண்ணிவிட வேண்டும் போல் இருந்தது எனக்கு. அடக்கிக்கொண்டேன்.
“செல்லம்மா சொல்லிக் கொண்டே இருந்தார். ரெயிலே ஓடி இருக்காது” என்றேன். “ஏன்?” என்று கேட்டார். “அவ்வளவு கூட்டம் கூடி இருக்கும்” என்றேன்.
“அந்தப் பெண் செய்தது சரியா ?” என்றார்.
“அடிமைக்கு எஜமானன் முன் பேசும் சுதந்திரம் இல்லை. ஆவல் அடக்க முடியாமல் அவன் இல்லாத போது அந்த பெண் உங்களைக் கேட்டாள்” என்று நான் அவள் பழியை சுமக்கப் பார்த்தேன்.
பாரதியார்: நல்ல அடிமை.! அவளையே கேட்டுவிட வேண்டும் என்று இருந்தேன். வீண் வம்பு எதற்கு என்று சும்மா இருந்தேன்.
“பெண்களின் அடிமை நீங்கினால், அவர்களும் தைரியத்துடன் நாலு பேருடன் பேசுவார்கள். தலையில் அடித்தால் தலைவணங்கி எதிரில் வரும் வண்டி, ஆடுமாடுகள் கூடத் தெரியாமல் போகிறார்கள்” என்று நானும் முறையிட்டேன்.
பாரதியார்: நான் பார், பெண் விடுதலை பற்றிய பெரிய கட்டுரை எழுதப் போகிறேன். பாட்டுக்களும் பாடுகிறேன். ஆனால் பழைய வழக்கங்களை உதறி விட வேண்டும்.
“நீங்கள் விடுதலை கொடுத்ததாக ஆகவில்லையே! புது விதமான சட்டங்களை அல்லவா செய்கிறீர்கள்? விடுதலை எங்கு வந்தது?” என்று நான் சற்றுத் தூண்டினேன்.
பாரதியார்: உனக்குத் தெரியாது. பழைய சாத்திரங்கள் உதவா, நம் தேசத்தை விட எல்லா தேசங்களும் முன் வந்துவிட்டன. நம் தேசப்பெண் அடிமையாய் பின்னே இருக்கிறாள்.
“நீங்கள் என்ன சொன்னாலும் பெண்களால் தான் இந்த தேசம் நின்றிருக்கிறது. நீங்கள் மில் வேஷ்டி உடுத்துகிறீர்கள். நாங்கள் தறியில் நெய்த புடவையை உடுத்திக் கொள்கிறோம். வழக்கங்கள், பண்டிகைகள், ஆசாரங்கள், பிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் எல்லாம் எங்களால் தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இங்கிலீஷ் பண்டிதர்களான உங்களுக்கு அவைகளை படித்துப் பார்க்க வேளை எங்கு இருக்கிறது? யாரவது ஒரு வெள்ளைக் காரன் சொன்னால் அப்போது தான் உங்கள் தாயார்களை, “பாராயண புஸ்தகம் இருக்கிறதா? என்று கேட்பீர்கள்” என்று இந்தியப் பெண்களின் பெருமையை எடுத்துச் சொன்னேன்.
பாரதியார்: பலே! ஐயர் சொன்ன பிரசங்கத்தை அப்படியே விழுங்கி விட்டிருக்கிறாயே! பரவாயில்லை.குழந்தைகளிடம் தோற்றாலும் சந்தோஷமே. குரு சிஷ்யனிடம் தோற்பது ஒரு பெருமை. அதை நம் தேசத்தில் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
“நாங்கள் கும்மி அடிப்பதற்கு புதிய மெட்டில் ஒரு பாட்டு பண்ணிக் கொடுங்கள்,” என்று கேட்டேன்.
பாரதியார்: இன்று தங்கம்மா கும்மி அடிப்பதற்கு ஒரு பாட்டுச் சொல்லும்படி கேட்டாள். நீயும் அதையே கேட்டாய். நாளைக்கு வரும் போது சொல்லுகிறேன்.
மறுநாள் “கோட்டைமேலே ரெண்டு” என்கிற மெட்டில்,
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசி களிப்போடு நாம் பாடக்
கண்களிலே ஒளி போல உயிரில்
கலந்தொளிர்தெய்வநற் காப்பாமே”
என்ற காப்பையும் எட்டுப் பாட்டுக்களையும் பாரதியார் பாடினார்.