மோசமான நிலைகள்

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:
நாற்பத்து மூன்று வயதான அமெரிக்கர் மிஷெல் டீ எழுதிய வாலென்சியா என்ற நாவல் சென்ற ஆண்டு ஒரு திரைப்படமாக வெளியாயிற்று. தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் நிதியுதவியுடன் மிஷெல்ல் டீ இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை தற்பாலின விழைவு கொண்ட 21 இயக்குனர்கள், ஆளுக்கொரு அத்தியாயம் என்று படமாக்கினர். ஆம், மிஷெல் டீ தன் அந்தரங்க வாழ்வையும் ஒரு களப்பணியாளருக்கு உரிய படைப்பூக்கத்துடன் பொதுவெளியில் நிகழ்த்துகிறார். பன்முகத் திறம் கொண்ட மிஷெல் டீ, புனைவிலக்கியத்தைப் போதிக்கிறார், புது இலக்கியத்தைப் பிரசுரிக்கச் சிற்றேடு ஒன்றை நடத்துகிறார், பிரசுர நிலையம் ஒன்றைத் துவக்கி நிர்வகிக்கிறார், இதுவரை ஒன்பது நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது புனைவுகள் விமரிசகர்களால் பெரிதும் பாராட்டப்படிருக்கின்றன.
 
டீ வாலிப வயதில் பல அத்துமீறல்களைச் செய்தவர், 30களில் தன் காதலியைக் கண்டு பிடித்த பின்-முந்தைய தலைமுறையினரைப் போலவே -கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்று பெற்றோர் பாத்திரம் வகிக்கத் தயாராகிறார். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, முந்தைய அத்துமீறல்களுக்குத் தானும் ஏதோ விலை கொடுக்க வேண்டி இருக்கலாம் என்ற அச்சம் இவருக்கு இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை உணர்த்துகிறது. 
 
பொதுவான வாழ்வின் சாதாரணங்களிலிருந்து வாலிபத்தில் வெகுவாக விலகிப் போனவர், பழைய சமூகத்தின் உறைந்த கட்டுப்பாடுகளைப் பொதுவாழ்வில் ஏற்காதவர், தன் வழிப்படி நடப்பதை மதிப்பவர், சில அடிப்படைகளில் பன்னெடுங்காலமாக மனித சமூகம் செய்தவற்றைத் தாமும் செய்ய விழைகிறார். அனைவராலும் புரிந்து கொள்ளவோ, கனிவுடன் அணுகவோ முடியாத கடும் போராட்டத்தில் மனித நாகரீகம் மெல்ல வெல்கிறது, தன்னிச்சையே உயர்வு என்ற மனோபாவம் வீழ்கிறது. ஒட்டி வாழ்வது பயனுள்ளது என்பதும் இவருக்கும் இவர் போன்றவருக்கும் தெரிய வருகிறது. பாவனைகளின்றி, உள்ளதை உள்ளபடி பேசும் இயல்பான குரலில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை உணர்த்தும் உண்மை ஒன்று உண்டென்றால், அது வாழ்பவர்களின் துயரம் வாழ்ந்து காட்டியதால் தருவிக்கும் நம்பிக்கைதான்.​​

***     ***

சான் ஃஃப்ரான்ஸிஸ்கோவில் நான் என் வீட்டுச் சமையலறையில், கணினியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, என் அம்மா கூப்பிட்டார். விஸ்தாரமான ஒற்றைப் படுக்கையறை அடுக்ககம் ஒன்றில், தனியாக வசிக்கிறேன். வீட்டுக்கு வருபவர்கள் கழுத்தை நீட்டித் திரும்பிப் பார்த்து என்னோடு வீட்டைப் பகிரும் நபர்களைத் தேடுவார்கள். இதுவரை நான் கொடுத்த எந்த வாடகையையும் விட இப்போது இதற்குக் கொடுப்பது அதிகம். ஆனால், தம் இருபதுகளில் இருந்த மூன்று பேருடன் – ஒரு மதுக்கடையில் பரிமாறுபவர்/ நிகழ்ச்சிக் கலைஞர், ஒரு வங்கியாளர்/பால்மாறி உடை அணிபவர், இன்னும் ஒரு மாணவர் – முன்பு நான் சேர்ந்து வசித்தபோது கொடுத்ததை விட 300 டாலர்களே கூடுதல். அந்த அடுக்ககத்துக் குளிர்பதனப் பெட்டியில் நோய்ப்பட்டுச் சுருங்கிய ஈக்கள் நிரம்பிக் கிடப்பதைப் பார்த்த பின் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன். மீதியிருந்த உணவுப்பொருட்களிடையே அந்தக் குளிர்ச்சியில் அவை மிக மெதுவாக ஊர்ந்தன. அவை அங்கேயே பிறந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன், அவற்றில் குட்டியாக இருந்தவை சிறு புழுக்கள் என்றும் தெரிந்தது. எனக்கு 39 வயதாகி இருந்தது, என் 40ஆவது பிறந்த நாளை அங்கே கொண்டாடுவதற்கு அச்சம் கொண்டேன். அதனால் இடம் பெயர்ந்தேன்.
sv-ws-logo copyஃப்ளோரிடாவில் தன் வீட்டு முன்தாழ்வாரத்திலிருந்து அம்மா கூப்பிட்டிருந்தார். தன் கணவரோடு அங்கு வாழ்கிறார். இரவு நேர செவிலியாக அவர் வேலை பார்ப்பதாலும்,  தூக்கத்தில் அவர் கணவர் அதிர்ச்சிகளைத் தரும் வலியால் அவதிப்படுவதாலும், அவள் வீட்டில் படுக்கையறை பெரும்பாலும் பயன்படுவதில்லை.. உப்பிய, பொய்த்தோலால் ஆன முன்னறை இருக்கைகளில் முறை போட்டுக் கொண்டு உறங்குவார்கள். எப்போதும் ஃபாக்ஸ் செய்திகள் ஓடிய, அலறும் தொலைகாட்சிப்பெட்டி முன் உறங்குவார்கள், இத்தனைக்கும் இருவருமே குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில்லை. அந்த தொலைகாட்சிப் பெட்டியும் சரி, அவர்கள் நாள் பூராவும் தண்ணீரைப் போல கோப்பை கோப்பைகளாகக் குடித்த காஃபியும் சரி, அவர்களை ஏதும் தொல்லை செய்யவில்லை. அதிகப்படி அறை ஒன்றிலிருந்த ஃபூடானை1 முன்னறைக்கு அவர்கள் நகர்த்தி இருப்பதாகவும், அந்த அறையில் இருக்கைகளுக்கும், தொலைகாட்சிப் பெட்டிக்கும் இடையிலிருக்கும் தரையில், இப்போது மறுபடி சேர்ந்து உறங்க முயல்வதாகவும் என் அம்மா சொல்கிறார். அவள் கணவனுக்கு- அவர் முதுகெலும்பு ஓட்டைகளும், கட்டிகளும் நிரம்பி இருக்கிறது- சாதாரண கட்டில்மேல் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாது, ஆனால் தரையில் விரித்த ஃபூடானில் அவரால் சமாளிக்க முடியும். ஆனால் அவரோ ஏற்கனவே ஒரு முறை ஃபூடானிலிருந்து உருண்டு கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டு விட்டிருந்தார் என்றாலும் அவர்கள் அருகருகே படுத்து உறங்கி வெகுகாலமாகிறது, அதனால் அவள் சிறிது உற்சாகமாக இருக்கிறாள்.
என் அம்மா கூப்பிட்டதால் என் கணினியை விட்டு நீங்கி, படுக்கையில் படுத்துக் கொண்டு அவரோடு பேசுகிறேன். ரத்தம் தேங்கி இதயம் பழுதாகப் போகிற வியாதியின் துவக்க கட்டத்தில் தன் கணவன் இருப்பதாகத் தான் நினைப்பதைச் சொல்கிறார். அவர்களுக்கு இது பற்றி இன்னும் தெளிவாகப் புரியவில்லை. அவருக்கு மருத்துவப் பாதுகாப்பு வசதி இல்லை. அதனால் அவருடைய பாதம் வீங்கி இருப்பதும், அவருடைய வயிறு உப்பி கடினமான பந்து போல ஆகி இருப்பதும், அவருக்கு மூச்சு விடச் சிரமமாக இருப்பதும் எதனால் என்று புரிந்து கொள்ள அவர்கள் செய்யும் முயற்சிகள் அத்தனை பயனளிக்கவில்லை.
‘மருத்துவப் பாதுகாப்பு வசதி நிலைமை மிகவும் கேவலமான ஸ்திதியில் இருக்கிறது.’ என் அம்மா சொல்கிறார். அவருடைய குரலில் நாற்பது வருட பாஸ்டனின் வடக்குக் கரை வாழ்க்கையின் சுவடுகள் தெரிகின்றன. ‘ர’ ஒலிகள் என்று சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இல்லை, சில சொற்கள்- ஹாஃப் என்பதை எடுத்துக் கொள்வோம்- ஒரு நுண்ணிய உச்சரிப்பைக் கொண்டுள்ளன, அது அந்த வட்டார மொழியின் இங்கிலாந்திய வேர்களைக் காட்டுகிறது. என் அம்மா நியூ இங்கிலாந்துப் பகுதியிலிருந்து, குறிப்பாக செல்ஸீ நகரிலிருந்து.வருபவர். அந்த நகர் நொடித்துப் போய், மாநில அரசிடம் அடைக்கலம் புகுந்ததால் 90களின் துவக்கத்தில் நாடு தழுவிய செய்திகளில் அடிபட்டது. இங்கு வாழும் மக்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் பங்கு மாநிலத்தின் சராசரியை விட அதிகம்.
என் அம்மாவுக்கு மருத்துவப் பாதுகாப்பு வசதி இருக்கிறது, கணவருக்கு இல்லை. அவரை அந்தப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்க்க ஆகும் செலவு மிக அதிகம். ஆனால் உள்ளூர் இலவச மருத்துவமனையில் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்கள், ஏனெனில் அங்கு இலவசமாகக் கவனிக்கப்பட, நோயாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஒன்று இருக்கிறது. அதை விட என் அம்மாவின் வருமானம் அதிகமாம். என் அம்மாவை அவள் எத்தனை சம்பாதிக்கிறாள் என்று நான் கேட்பதில்லை, அது மரியாதைக் குறைவாக எனக்குப் படுகிறது. ஒவ்வொரு சமயம் நானும் என் சகோதரியும் அவளுக்குக் காசோலைகளை அனுப்புகிறோம், மிகச் சமீபத்தில் அவர் தான் வேலை பார்க்குமிடத்தில் முழங்காலை உடைத்துக் கொண்டபோது, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு அனுப்பினோம். தொடர்ச்சியான சில நிர்வாகத் தில்லுமுல்லுகளால், அந்த விபத்துக் காலத்துக்கு ஊதியத்தோடு தரப்பட வேண்டிய விடுப்பு அம்மாவிற்கு மறுக்கப்பட்டது. அவருக்கு ஊதியம் கிட்டாததால், அவர் மிகவும் சீக்கிரமே வேலைக்குத் திரும்பினார், வலியைத் தடுக்கும் மருந்துகளை நம்பியும், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியும், பல முதியவர்கள் இருந்த பகுதிக்குச் செவிலி வேலை செய்யப் போனார், அவர்களில் சிலராவது அம்மாவை விட இளையவர்கள். என் அம்மா அங்கு தரையில் சிந்தித் தேங்கிய மூத்திரத்தில்தான் வழுக்கி விழுந்திருந்தார்.
என் அம்மாவின் நண்பர்கள் பொய் சொல்லு என்று அவரிடம் சொல்கிறார்கள், தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதாகச் சொல்லச் சொல்கிறார்கள். கணவருக்கு முகவரியாக ஒரு தபால் பெட்டியை வாங்கிக் கொள்ளலாம், அவருடைய தபாலை எல்லாம் அதற்குத் திருப்பி விடலாம். தான் வேலையில் இருக்கும்போது மட்டும் இரவு நேரத்தில் தன் வீட்டில் இருக்க கணவரை அனுமதிப்பதாகவும், ஆனால் பகலில் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவதாகவும் சொல்லலாம். இது அவருக்கு மேலான மருத்துவ சிகிச்சையைப் பெற்றுத் தரும் என்கிறார்களாம்.
”என்னால் அத்தனை பொய்யெல்லாம் சொல்ல முடியாது,” என் அம்மா சொல்கிறார், “ யாருக்கும் அத்தனை தூரம் எல்லாம் போகும்படி நேரக் கூடாது.”
சான் ஃப்ரான்ஸிஸ்கோவில், இருபது வருடமாக நான் வாழ்கிறேன், எனக்கு மூன்று தடவைதான் மருத்துவப் பாதுகாப்பு கிட்டியிருக்கிறது: ஒரு வருடம் நகரிலிருக்கும் டெண்டர்லாயின் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான வீடுகளிலிருந்து ஈயச் சுவடுகளை அகற்றும் பணி நடக்கையில் அந்தத் திட்டத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தபோது; புனைவு எழுதப் பயிற்றுவிக்கும் போதனையாளராக, மில்ஸ் கல்லூரியில் ஒரு வருடம் வேலை பார்த்தபோது; சென்ற ஐந்து மாதங்களாக, என் துணைவி தன்னை வேலைக்கு வைத்திருக்கும் இடத்தில் என்னைத் தன் மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்த்திருப்பதால். இதர காலங்களில் பெரும்பாலான நேரமும் என் மருத்துவ வசதி முழுதும் இலவச மருத்துவ மனைகளில்தான் கிட்டியிருக்கிறது. நான் அப்படி உள்ள எந்த மருத்துவ மனைக்குள்ளும் நுழைய முடியும், நாள் பூராவும் காத்திருந்து விட்டு, கடைசியில் ஒரு மருத்துவரால் பார்க்கப்பட்டு, ஒரு சிறு காகிதத் துண்டில் என் மருந்துக்கு என ஐந்து டாலர் செலவோடு போகும். நோயாளிகளின் செலவைக் குறைக்க அங்கு ஊழியர்கள் தம்மால் ஆனதையெல்லாம் செய்தார்கள். நான் ஒரு தற்பால் சேர்க்கையாளி என்றாலும், பல வருடங்களாக என் வருடாந்தரப் பெண்ணுறுப்பு நலத்துக்கான சோதனைகள் எல்லாம் மைய அரசின் குடும்ப நலத் திட்ட நிதியால்தான் சாத்தியமாயின. என் அம்மாவும், அவருடைய கணவரும் இருந்த இடத்துக்கு அருகாமையிலிருந்த இலவச மருத்துவமனை வாரத்தில் ஒரு நாள்தான் திறந்து வைக்கப்பட்டது, அதுவும் வருபவர்கள் வரிசை வாரியாகவே கவனிக்கப்பட்டார்கள்.
என் அம்மாவின் கணவருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகள் மறுக்கப்பட்டன, மூன்றாவது முறையாக. தன் கணவர் உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கு மேல்பட்டுப் படித்திருப்பதால்தான் என்றும், அவர் நோய்வசப்பட்ட வருடத்துக்கு முந்தைய வருடம் அவர் எத்தனை சம்பாதித்திருந்தார் என்பதையும் வைத்துத்தான் அது மறுக்கப்பட்டது என்றும் அம்மா சொல்கிறார்..
என் அம்மாவும், கணவரும் செயல்முறைப் பயிற்சிப் பள்ளியில் செவிலியாவதற்குப் பயின்றார்கள். அதை, செல்ஸீ நகரத்தின் முன்னாள் போர்வீரர்களுக்கான மருத்துவமனையில், போர்வீரர்களின் விடுதி ஒன்று நடத்தியது.. அது ஒரு இலவசப் பயிற்சி. படிப்பை முடித்தால், பயின்றவர் அந்த விடுதியிலேயே வேலை செய்ய வேண்டும். எனக்கு 9 வயதான போது என் அம்மா அந்தப் பயிற்சியை முடித்திருந்தார், உடனேயே என் அப்பாவை விவாகரத்து செய்து விட்டார். எப்போதாவது இதைப் பற்றி யோசிக்கையில், படிப்பும் அதிகம் இல்லாது,  மோசமான திருமணங்களிலும் சிக்கியிருந்த நகரப் பெண்களுக்கு அப்படிப்பட்ட திருமண வாழ்விலிருந்து வெளியேற உதவும் கருவிகளையும், வருமானத்தையும் கொடுத்த ஒரு திட்டமாகத்தான் அது எனக்குத் தெரிகிறது.
அந்த விடுதியில் வேலை செய்தபோதுதான் என் அம்மா, தற்போதைய கணவரைச் சந்தித்தார். அவர் அங்கு ஒரு கடைநிலை ஊழியர், கைகளில் வீட்டிலேயே குத்திக் கொண்ட பச்சை அடையாளங்களும், ஒரு காதில் வளையமுமாகக் காட்சியளித்த அவரைப் பார்த்து முதலில் என் அம்மா சிறிது அச்சமுற்றிருக்கிறார். அம்மாவின் விவாகரத்து ஆகி, ஒரு வருடம் கழித்து அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். இன்னொரு வருடத்துக்குள் அக் கணவரும் போர்வீரர் விடுதியில் நடந்த அந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கெடுத்து ஒரு செவிலி வேலைக்கான உரிமத்தைப் பெற்றார் (LPN).
முதியோருக்கான செவிலி வேலையில் என் அம்மா தொடர்ந்து பணியாற்றுகிறார். அவருடைய ஆதர்சம் என்னவோ குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதுதான். பதிவு செய்யப்பட்ட செவிலியாக (RN) அவர் ஆவதற்கு ஓரிரு வருடங்கள் அவர் மறுபடி கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டி இருக்கும், அப்போது அவருக்கு ஊதிய உயர்வும், மேம்பட்ட வேலை வாய்ப்புகளும் கிட்டும். வீட்டில் அதற்கெதிராக முடிவெடுக்கப்பட்டிருந்தது; என் அம்மா தான் ‘அந்த’ மனிதர்கள் போலத் தான் ஆகப் பிரியப்படவில்லை என்று சொன்னார்.
‘எந்த மனிதர்கள்?” நான் கத்தினேன். ‘கூடுதலாகச் சம்பாதிக்கும் மனிதர்களா? நம்மை விட வசதியாக வாழ்கிறவர்களா?’
“ எல்லாரையும் விடத் தாம் மேலானவர்கள் என்று நினைக்கிறவர்கள்,” அம்மா சொன்னார். “தவிர, மறுபடியும் படிக்கப் போக முடியாத அளவு எனக்கு வயதாகி விட்டது.”
சமீபத்தில் என் அம்மா பிக்லாட்ஸ் என்கிற ஒரு பேரங்காடியில் பகுதி நேர வேலை ஒன்றுக்கு முயற்சி செய்தார், கிடைக்கவில்லை. நிர்வாகம், அவர் மிகவும் சலிப்படைந்து விடுவார் என்று பயந்ததாம். ஒரு புத்தகக் கடையிலோ, அல்லது வால்மார்ட்டில் வரவேற்பாளராகவோ வேலை செய்ய வேண்டுமென அவர் ஆசைப்படுகிறார். பல பத்தாண்டுகளாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்குச் சேவை செய்தபின், ஓரளவு இலேசானதாகவும், சுலபமாகவும் இருக்கும் வேலை கிட்டிச் செய்ய வேண்டும் என்பது அவர் கனவு.
தான் நோயில் விழும் முன், முடியாதவர்கள் பிறர் உதவியோடு வாழும் இல்லம் ஒன்றில் பணிபுரிந்த என் அம்மாவின் கணவர், மேலாளராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் அதற்குக் கழுத்தில் ‘டை’ ஒன்றை அணிய வேண்டி இருந்தது. இது அவரை மிக உறுத்தியது. அந்த இல்லத்திற்குப் பளுவாக இருந்த ஏழையான இல்லவாசிகளின் செலவை ஈடு கட்ட வேண்டி, அங்கு வசித்த வசதி படைத்த இல்லவாசிகளிடம் அதிகப்படியாகக் கட்டணம் வசூலிக்கும்படி அவருக்குச் சொல்லப்பட்டது. மேலும், உடன் உழைத்த இதர செவிலியரையும், உதவியாளர்களையும் அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென எதிர்பார்ப்பு இருந்தது. அவர் வேலையை விட்டு விட்டார். என் குடும்பம் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஏற்றதில்லை; வாழ்நாளில் பெரும்பகுதியை அதிகாரம் கொண்டவர்கள் மேல் கசப்போடு வாழ்ந்து விட்ட எங்களுக்கு, அப்படி ஒரு அதிகாரமுள்ள பதவிக்கு மாறுவது என்பது உளநிலையளவிலேயே செய்ய முடியாததாக இருக்கிறது. வெகு நாட்களுக்கு, மேல்மட்டத்தினர்பால் நான் கொண்டிருந்த ஆங்காரம், என் நிலையை முன்னேற்றிக் கொள்வதில் நான் காட்டிய சுணக்கம், இதெல்லாம் என் சொந்த ஒழுக்கப் பார்வையிலிருந்து கிளைத்த விடலை மார்க்சிய நிலைப்பாட்டால் நேர்கிறவை என்று நான் கருதி இருந்தேன். என்னுடைய நடு 30களில்தான், நான் என் வீட்டில் கேட்டதனைத்தையும் கிளிப்பிள்ளை போலத் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.
மேலாளர் பதவியை விட்டு நீங்கிய பின், என் அம்மாவின் கணவர், வீடுகளுக்கே சென்று கவனித்துக் கொள்ளும் செவிலியாக வேலை செய்தார். பல இடங்களுக்குப் போய், வீட்டோடு அடைபட்டு இருந்த நோயாளிகளை மருந்துகள் கொடுத்தும், அன்றாடப் பராமரிப்பு செய்தும் கவனித்துக் கொண்டார். கேள்விப்பட்டவரையில், அவர் மிகவும் வேண்டப்பட்ட செவிலி. அவரும் என் அம்மாவும் தாங்கள் எத்தனை அருமையான செவிலியர் என்பதில் பெருமை கொண்டவர்கள். தான் வேலைக்குப் போனவுடன் முதலில் செய்யும் காரியம், நோயாளிகளின் மூக்குக் கண்ணாடியை, வெதுவெதுப்பான நீரில் சோப்புப் போட்டுக் கழுவுவதுதான் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். அந்தச் செயல் பற்றி மனதில் எழும் காட்சி மீது நான் அதிகமான நேரம் கவனம் செலுத்த முடியாது. அந்தச் செயலில் உள்ள மிருதுவான கனிவும், கடமையுணர்வும் என் இதயத்தில் ஊடுருவிப் பாய்கிறவை.
என் அம்மாவும், அவள் கணவரும் தம் கவனிப்பில் இருப்போரிடம் தமக்குச் சமமானவர்களிடம் பேசுவது போலவே பேசுவார்கள். அவர்களைக் கருணையோடும், மரியாதையோடும் நடத்துவார்கள். நியூ இஙகிலாந்துப் பகுதியில் தமது பயிற்சியைப் பெற்றது குறித்து அவர்களுக்குச் சிறிது கர்வம் இருந்தது- ‘ பாஸ்டனில்’ என்று என் அம்மா அழுத்திச் சொல்வார். ஃப்ளோரிடாவிலோ அல்லது அவருடன் பணி செய்த பலரும் பயிற்சி பெற்றிருந்த ஏதோ பெயரே தெரியவராத ஊர்களிலோ அல்ல. என் அம்மா ப்ரிகம் அண்ட் விமன்ஸ் மருத்துவமனையிலும், பெத் இஸ்ரேல் மருத்துவ மனையிலும் தன் செயல்முறைப் பயிற்சி காலத்தில் பணி செய்திருந்தார். நியூ இங்கிலாந்துப் பகுதியின் மருத்துவப் படிப்பு உலகத்தரம் வாய்ந்தது.
வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்கும் செவிலியாகப் பணி செய்தபோது, என் அம்மாவின் கணவர் தன் வேலை பற்றிச் சலித்துக் கொள்ளத் துவங்கினார். அடுத்த நோயாளியைப் பார்க்கத் தன் ட்ரக்கைத் தனியாக ஓட்டிக் கொண்டு, ஏரோஸ்மித் குழுவின் பாடல்களைக் கேட்டபடி போகும்போதும், சிகிச்சை செய்கையில் பலரோடு நட்புறவோடும், மனம் விட்டுப் பழகியபடியும், இலேசாகக் கூத்தடித்தபடியும் இருக்கவும் அந்த வேலையில் இருந்த சுதந்திரம் அவருக்குப் பிடிக்கத்தான் செய்தது, ஆனால் நிர்வாகம் அவர் ஓட்டிய மைல்களுக்குச் செலவுததொகை கொடுக்கவில்லை, பெட்ரோலோ மிகவும் விலை அதிகமாக இருந்தது. தவிர அவரது ட்ரக்குடைய தேய்மானம் வேறு இருந்தது. அவர் எந்த ஏஜென்ஸிக்கு வேலை செய்தாரோ அது அவருக்குச் சில நேரம் ஏதும் வேலை கொடுக்காமல் இருந்தபோதும், வேறு எந்த ஏஜென்ஸிக்கும் வேலை செய்வதைத் தடுத்து ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடச் செய்தது. பிறகு அவர் நோய்வாய்ப்பட்டார், வேலை செய்வது என்பது ஒரு தேர்வாகவே இருக்கவில்லை.
பல வெட்கங்களின் கலவை என் அம்மாவைத் தன்னுடையதும், தன் கணவரதுமான பிரச்சினைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் செய்திருந்தது. தன் குழந்தைகள் மீது ஒரு பாரமாக இருப்பதை அவள் விரும்பவில்லை. பெற்றோர் என்றால் தம் மக்களுக்குப் பணம், உதவி, ஆதரவு ஆகியனவற்றைத் தர வேண்டுமே அன்றி அவற்றைத் தாம் நாடி நிற்கக் கூடாது. அவருடைய கணவரோடு எனக்கு அத்தனை நல்ல உறவு இல்லை என்பதைப் பற்றி நான் கவலைப்படக் கூடாது என்று அவர் கருதினார், அவர்கள் சேர்ந்து வாழக் கூடாது என்று நான் விரும்ப மேலும் காரணங்களை எனக்குக் கொடுத்து விடக் கூடாது என்றும் அவள் கருதி இருக்கலாம். அவளுடைய கணவரும் கூட, சில நேரங்களில் ஒளிவு மறைவெல்லாம் கொண்டவர்தான். அவர்கள் இருவருமே நம்பத் தக்கவர்கள் அல்ல என்பது போல சில நேரம் எனக்குத் தோன்றும். முழு விஷயத்தையும் சொல்லாமல் ஏதோ மறைத்து வைக்கிறார்கள் என்றும் தோன்றும். ஒருக்கால் அப்படியெல்லாம் அவர்கள் செய்யவில்லையோ என்னவோ.
என் அம்மாவின் கணவர் ஃப்ளோரிடாவை விட்டுக் கடைசியாக வெளியே வந்தது 2007 ஆம் வருடத்துக் கிருஸ்துமஸின் போது. அப்போதுதான் அவர்கள் சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்கு வந்தார்கள். என் சகோதரியும் அவளது கணவரோடும் , அவரது குடும்பத்தோடும் வந்தாள். என் சகோதரியும், நானும் சேர்ந்து என் அம்மாவையும், மாற்றாந்தந்தையையும் யூனியன் சதுக்கத்தில் ஒரு விடுதியில் தங்க வைத்தோம். அது அத்தனை போக்குவரத்தின் நடுவிலும், நாள் பூராவும் ஓடும் மின் கம்பி ஊர்திகளின் பெரும் சத்தத்தோடும் இருந்த இடம். அவர் அத்தனை நோயாளியாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பவல் தெருவில் மூன்று குறுக்குத் தெருக்களைக் கடந்து நடந்து போய் அந்தப் பேரங்காடிக் கட்டடத்தில் இருந்த உணவு விடுதிச் சதுக்கத்தில் ஒரு பர்கரை வாங்கப் போவது என்பது அவரைக் கிட்டத்தட்ட கொன்றே விட்டது. நடக்கும்போது கடும் வலியால் தாக்கப்பட்டவராகத் தெரிந்தார், நம் உடலிலிருந்தே நம்மை அடித்துத் துரத்தும் வகையான வலி அது. ஒரே நேரத்தில் முன்னே போவதில் உன்னிப்பாக இருப்பவர் போலவும், நில் என்று தன் உடல் கட்டளையிடுவது ஏதுமே தெரியாது போய் உணர்வற்ற நிலைக்கு வந்து விட்டவர் போலவும் தெரிந்தார்.
”அவருக்கு என்ன பிரச்சினை?” என் சகோதரி விடுதியின் வரவேற்பறையில் கேட்டாள், “ அவருக்கு இனி ஒரு சக்கர நாற்காலி தேவைப்படப் போகிறது.”
“ஓ, சக்கர நாற்காலியில் உட்காருமுன் அவர் தன்னைச் சுட்டுக்கொண்டு விடுவார்,” கொஞ்சம் கிலியோடும், தற்காப்பு முனைப்போடும் என் அம்மா சொன்னார், “கடவுள் தடுக்கட்டும் அதை, ஒருவேளை ஒரு கருணை இல்லத்திற்குப் போக நேரலாம். ஆனால், அவர் நிச்சயம் தற்கொலை செய்து கொள்வார்.”
வாழ்க்கையில் அப்படித் தேய்ந்து முடங்கி முடிவதற்கு ஒரு புத்தி பூர்வமான விடையாகத் தற்கொலையை எப்போதுமே என் குடும்பத்தினர் விதந்துரைத்திருக்கின்றனர். “ஒரு புட்டி செகொனல் மாத்திரைகளும், ஆறு புட்டிகள் பியரும்,” என்று என் பாட்டி தன் காலத்தைப் பற்றிச் சொல்வார், அதாவது அவர் காலம் வருவதற்கு முன் புற்று நோயோ, முழு மறதி நோயோ வந்ததென்றால் அப்படித் திட்டம். அப்படி அவருக்கு காலம் முன்கூட்டியே வந்தது, நுரையீரலில் புற்று நோயாக, 54 வயதிலேயே. ஆனால் தூக்க மாத்திரைகளோ, ஆல்கஹாலோ இல்லை, மாஸ் ஜென்ரல் மருத்துவ மனையில், நோயோடு போராடியபடி படுத்திருக்கையில், கெமொதெரபியால் முடியெல்லாம் கொட்டி வழுக்கையான தலையோடு, உடல் சுருங்கி, உலர்ந்து சைனாடௌன் சிக்கன் போல ஆகி, வலி குறைக்கும் மாத்திரைகளோடு நீண்ட இழுவையான சாவுதான் வந்தது.
என் அம்மா மனதை அழுத்தும் இந்த வகை துரிதச் சாவு விருப்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார், நான் அவரிடம் அதை நிறுத்தும்படி கட்டளையிடும் வரை. அதன் பிறகு அவர் இன்னும் வாழ்கிறார்.
சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நகர மையத்தில, பயணிகளுக்காக இருந்த ஒரு மருத்துவ மனைக்குத் தன் கணவரை என் அம்மா இட்டுச் சென்றார். மருத்துவரை அலுவலக நேரம் கடந்து, இரவில் அவர் பார்த்தார். அவருக்கு வலி நிவாரண மாத்திரைகளுக்குச் சீட்டு கொடுக்கப்பட்டது, ஆனால் அந்தச் சீட்டு காஸ்ட்ரோ என்ற பகுதியில் இருந்த 24 மணிநேரமும் திறந்திருக்கும் மருந்துக் கடையில்தான் செல்லுபடியாகும் என்று இருந்தது. அங்கே ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்தார் அம்மா. இதை அடுத்த நாள் காலையில்தான் நான் தெரிந்து கொண்டேன். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து, அவருடைய கணவர் மாத்திரைகளின் மேக மூட்டத்தில் மிதந்து கொண்டிருந்தார். நிஜமாகச் சொன்னால் போதை மருந்து கலந்த வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்குமே ஒரு மிதப்பான உணர்வு அதில் இல்லை அவர். அந்தப் போதை கலந்த மாத்திரைகள் நமக்குத் தேவையில்லாத போதும் அப்படி ஒரு மிதப்பான உணர்வைக் கொடுக்கும். அவர் சாதாரணமாகத்தான் இருந்தார். அந்த மருந்து அவருடைய உடல் படும் பாட்டை உறிஞ்சிக் கொண்டதால், அவர் சிரிப்போடு, சான் ஃப்ரான்ஸிஸ்கோவைப் பார்த்ததால் உற்சாகம் கொண்டவராக, எங்கள் விடுமுறை நாளின் இரவு உணவை நாங்கள் உண்ட ஒரு ஃப்ரெஞ்ச் சாப்பாட்டுக் கடை இருந்த நாப் குன்றத்துக்கு எங்களை அழைத்துப் போன மின்கம்பி ஊர்தியின் புறங்களில் சாய்ந்து நோக்கியபடி, கிருஸ்துமஸ் தினத்தன்று எங்களோடு இருக்க முடிந்தது. அவர் வெலிங்டன் மாட்டுக்கறியை அன்றுதான் முதல்தடவை உண்டார், அது அவருக்குப் பிடித்திருந்தது. எனக்கும்தான். நாங்கள் இருவரும் இறாலுடன் அரிசிச் சோற்றை ருசித்துச் சாப்பிட்டோம். பண்டிகைப் பரிசுகளுக்காக யாரும் யாருக்கும் பணம் செலவழிக்கக் கூடாது என்பதாக ஒரு ‘ரகசிய சாண்டா’ (secret Santa) ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தோம். ஆனால் என் அம்மா அதை மீறி, எனக்கு ஓல்ட் நேவி கடையிலிருந்து ஒரு நீல கம்பளிச் சட்டை பரிசளித்தார். அந்தச் சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்திருந்த என் அக்காவின் மாமியார், எல்லாரும் திரும்ப நகர மையத்துக்கு மின்கம்பி ஊர்தியில் போன போது, வண்டியைச் செலுத்திய ஊழியரின் கையுறை அணிந்த முஷ்டிக்குள் பல பண நோட்டுகளைத் திணித்தபடி கிருஸ்துமஸ் தினத்தன்று அவர் வேலை செய்ய நேர்ந்ததற்குத் தன் பரிவைத் தெரிவித்தார். அதற்கு அந்த ஊழியர் வண்டியின் மணியைச் சிறிது சோர்வோடு அவரை நோக்கிக் கொண்டு தட்டினார்.
விடுதியின் நுழைவாயிலறையில் நான் சொன்னேன், “மா, நீங்க என்னைக் கூப்பிட்டிருக்கணும். உங்களுக்காக நான் காஸ்ட்ரோவுக்குப் போயிருப்பேன். நான் டாக்டர் இடத்துக்கும் வந்திருப்பேன்.’ ஆனால் என் அம்மா என்னைக் கவலைப்படுத்த விரும்பவில்லை, அவருக்கு என்னைப் பற்றிக் கவலைப்படவே நேரம் போதவில்லை; சமீபத்தில் என் துணைவியோடிருந்த உறவு உடைந்தது பற்றி, நான் புதிதாய் ’ஏ ஏ’ (AA= alcoholics anonymous) அமைப்புக்கு சிபாரிசு செய்த நபர் பற்றி எல்லாம்தான் [கவலைப்பட்டார்.] நான் இப்போது குடிப்பதில்லை என்பது பற்றி அவருக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், இத்தனை குடிகாரர்களோடு நான் நேரம் செலவழிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.
அம்மா எங்களைப் பார்க்க வரும்போது நாங்கள் செய்ய விரும்புவதெல்லாம் அவருக்குச் சாப்பிடக் கொடுப்பதும், நிறைய பொருட்கள் வாங்கித் தருவதும்தான். ஏதோ டுனா மீன் சான்விச்சுகளையும், பன்றி மாமிசப் பர்கர்களையும், டிஸ்னி கடையிலிருந்து பளபளவென்றிருக்கும் சில்லறை சாமான்களையும் வாங்கிக் கொடுப்பது அவரைக் காப்பாற்றி விடுமென்பது போல. ஆனால் அவர் எங்கள் அம்மா, அவள் செய்ய விரும்புவதெல்லாம் எங்களைப் பராமரிப்பதுதான், எங்கள் பகலுணவுக்கும், இரவுணவுக்குமான செலவைத் தான் கொடுப்பதையும், கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு பகட்டான சமையல் பாத்திரக் கடையில் வார்ப்பிரும்பு வாணலியையும், பளபளப்பான சிலிகான் திருப்பிகளையும் எனக்கு வாங்கித் தருவதையும்தான் அவள் விரும்பினாள். என் அம்மாவிடமிருந்து எதையும் வாங்கிக் கொள்வது துன்பமாக இருந்தது, ஆனால் மறுப்பதோ அம்மாவின் மரியாதையைக் குறைப்பதாக, அவருடைய குழந்தைகளைப் பராமரிக்க அவர் விரும்புவதை ஏற்காததாக இருக்கும். எங்கள் வாழ்வு சரியாக ஓடுகிறது, எங்கள் குடும்பம் எங்கும் இருப்பவை போலவே இயற்கையாக உள்ளது என்று அவர் உணர்வதைப் பறிப்பதாக இருக்கும். அவர்கள் மிகவும் முடியாத முதியோராக ஆகாத வரையிலும் குழந்தைகள் பெற்றோர்களைப் பராமரிப்பதில்லையே, அப்போதும் குழந்தைகளுக்கு ஏதாவது சொத்தாகக் கிட்டுமே, இல்லையா?
என் அம்மாவும், கணவரும் பணவிவகாரங்களில் கிறுக்குத்தனமான முடிவுகள் எடுப்பார்கள். அம்மாவிடம் ஏதோ பணம் வந்ததற்குக் காரணம் 90களில் அவர் வேலை செய்த இடத்தில் அவருடைய முதுகு சேதமானதுதான். அதற்கு நஷ்ட ஈடாகக் கிடைத்த பணம் மாஸச்சூஸெட்ஸ் மாநிலத்தில் அவர் ஒரு வீடு வாங்கப் போதுமானதாக இருந்தது. அதன் பின் குறுகிய காலத்திலேயே, என் சகோதரியும், நானும், அம்மாவின் கணவர் அந்த வீட்டுச் சுவர்களில் துளைகள் போட்டு எங்களை வேவு பார்த்த அருவருப்பான நடத்தையை வெளிப்படையாக்கி, எதிர்த்தோம். கொஞ்ச காலத்துக்குக் குடும்பம் உடைந்தது. அப்போது என் அம்மா தன் கடன் அட்டைகளில் முடிந்த மட்டும் கடன் வாங்கிக் கொண்டு, டிஸ்னிஉலகத்துக்குப் பயணங்கள் போனார். அவர் கணவர் கடலில் ஆழத்துக்கு மூழ்குவதற்குப் பயிற்சி எடுத்துச் சான்றிதழ் பெற்றவராகி, [ஃப்ளோரிடாவின் கீஸ்] பகுதிக்குப் பயணங்கள் போய், புலிச் சுறாக்களோடு ஆழ்கடலில் நீந்தினார். கடைசியில் அவர்கள் விடுமுறைக்குப் போன இடத்திலேயே வாழ முடிவு செய்து, ஃப்ளோரிடாவுக்கே குடி பெயர்ந்து விட்டார்கள். தன் கணவரின் சகோதரருக்கே கணிசமான அளவு விலையைக் குறைத்து அந்த வீட்டை விற்றார் அம்மா, வாங்கிய விலை கூடத் திரும்பக் கிட்டவில்லை என்பதை அவர் பொருட்படுத்தவில்லை. அவளுடைய கணவரின் சகோதரர் மிகவும் அல்லல்பட்டுக் கொண்டிருந்தாராம், மனைவி வேலைக்குப் போக மறுத்த சோம்பேறியாக இருந்தாள், இரண்டு பதின்ம வயதுப் பிள்ளைகள் இருந்தனர், தவிர ஃப்ளோரிடாவில் வீடுகள் மலிவான விலைக்குக் கிடைத்தன.
அவர்கள் இடம் பெயர்ந்து ஒரு வருடம் கழித்து, அந்த சகோதரர் வாங்கிய வீட்டை லாபத்துக்கு விற்று விட்டு, ஃப்ளோரிடாவிற்கே தானும் குடி பெயர்ந்தார். அவர் வாங்கிய வீடோ இவர்கள் வீட்டை விடப் பெரியதாகவுமிருந்தது, அதில் கண்ணாடிக் கூரையால் மூடிய ஒரு நீச்சல் குளமும் இருந்தது.
ஒரு புயல் ஊரையே சின்னாபின்னமாக்கியபோது, என் அம்மாவின் விடு தப்பியிருந்தது, ஆனால் அவர் மிகவும் பீதியடைந்திருந்தார். வேலை பார்த்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் அவர் இருந்த தளத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து, அத்துண்டுகள் அவர் பார்த்துக் கொண்ட நோயாளிகள் மீது விசிறப்பட்டிருந்தன. கார்கள் நிறுத்தப்பட்டிருந்த வெளியில் கடந்து போன சூறாவளி, அங்கு ஏதோ வேற்றுக் கிரகம் போன்ற சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. [காற்று அழுத்தத்தில்] அவருடைய காதுகள் அடைத்துக் கொண்டன. [வெளிப்] பெருஙாற்று, அந்த முதியவர்களைச் சுவற்றிலிருந்த ஒரு துளையை நோக்கி உறிஞ்சி இழுத்தது. ட்ரினிடாடிலிருந்து வந்த, உரிமம் பெற்ற உதவியாளர்களை, செவிலியருக்கான ஓய்வறையில் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒடுங்கி இருப்பவராகக் கண்டார், அவர்களை நோயாளிகளின் அறைகளுக்குத் திரும்பச் சொல்லிக் கட்டளையிட்டார். அவர் வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டைச் சுற்றி இருந்த மரங்கள் கீழே விழுந்து வீட்டையே மறைத்திருந்ததால் வீடும் போய்விட்டது என்றெண்ணி அழுதிருக்கிறார். அப்புறம் வீடு இருப்பதைக் கண்டு மன அழுத்தம் போனதால் மறுபடி அழுதிருக்கிறார். அடுத்த மாதம் பூராவும், ஹோம் டெப்போ கடையில் ஒரு பெரிய அடுக்குக் கட்டு நிறைய குடிநீர் பாட்டில்களை வாங்கும்போதும், வீட்டிலிருந்த போது என்னோடு தொலைபேசியில் பேசும்போதும் திடீர் திடீரென விட்டு விட்டு அழுது கொண்டிருந்தார். வீடோ இருண்டு, எண்ணெய் நெடியடித்த இடமாக மாறியிருந்தது. ஜெனரேட்டர்கள் மூலம்தான் மின்சாரம் கிட்டியது, ஜன்னல்களெல்லாம் மரப்பலகையால் அடைக்கப்பட்டிருந்தன, குளிர்பதன வசதி நிறுத்தப்பட்டு, ஃப்ளோரிடாவின் சதுப்புகளிலிருந்து வீசும் உஷ்ணக் காற்றோடு போராடியவண்ணம் வீட்டில் மின் விசிறிகள் மெதுவாகச் சுற்றின. விழுந்திருந்த மரங்களை வெட்டி அகற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஆள் வந்தபோது, அவன் ஒரு முன்பின் தெரியாத ஆளாக இருந்தாலும் ஒரு சிறுமியோடு அவன் வந்திருந்தான் என்பதால் பரிதாபப்பட்டு அவனிடம் மூன்று நாள் சம்பளத்தை முதலிலேயே அம்மா கொடுத்து விட்டிருந்தார். அந்தச் சிறுமிக்குச் சர்க்கரை போட்ட எலுமிச்சை ரசத்தைக் கூடக் கொடுத்தாராம். அவன் அரை நாள் வேலை செய்து விட்டுப் போனவன், திரும்பி வரவேயில்லை.
என் சகோதரி திருமணம் செய்து கொண்ட போது, திருமணச் செலவு பற்றிய கவலை அம்மாவுக்கு அப்படி ஒரு கவலை கொடுத்து அவரைத் தின்று விட்டது. வீட்டோடு வந்திருந்த ஒரு துண்டு நிலத்தை விற்கத் தீர்மானித்தார். திருமணச் செலவுக்கான ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட்டிருந்தன என்பதோ, அவருடைய விமானப் பயணத்துக்கான சீட்டுகளும் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்தன என்பதோ, அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு விட்டன என்பதோவெல்லாம் அவருக்குப் பொருட்டாக இருக்கவில்லை. அவரும் திருமணத்துக்கு உதவ விரும்பினார் என்பதுதான் முக்கியமாக இருந்தது. திருமண உடுப்பை அவர் வாங்கித் தர விரும்பினார், திருமணத்துக்கு அடுத்த நாள் பகல் உணவுக்கான செலவை அவர் கொடுக்க விரும்பினார். விற்பனைக்கான வாய்ப்புகள் எழுந்தன, வீழ்ந்தன, எழுந்தன, வீழ்ந்தன.
“உனக்கு தரையில் புதைத்த ஜோசஃப் பற்றித் தெரியுமா?” என்று என்னிடம் கேட்டார் அம்மா. ஒரு காலத்தில், தாம் வாங்க விரும்பிய நிலங்களிற்கு வெளியே யூரோப்பிய கன்னியாஸ்த்ரீகள் புனித ஜோசஃப்பின் உருவச் சிலையைப் புதைப்பார்களாம். இப்போதோ தாம் விற்க விரும்பிய வீட்டு நிலத்தில் புனித ஜோசஃப்பின் உருவப்பொம்மையை மக்கள் புதைத்தார்கள். கதோலிக்கப் பொருட்கள் விற்கும் மையத்திலிருந்து ஒரு புனிதஜோசஃப் பொம்மையை அம்மா விலைக்கு வாங்கி, அதை அந்தத் துண்டு நிலத்தில் புதைத்தார். துரித விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், கொஞ்சம் பொறுத்திருந்தால் கிட்டியிருக்கக் கூடிய விலையை விட மிகக் குறைந்த விலைக்கு அதை விற்று விட்டார், ஏனெனில் திருமண நாள் சீக்கிரமே வந்து கொண்டிருந்தது.
நில விற்பனையில் கிட்டிய பணம் எதையும் தன் திருமணத்தில் அம்மா செலவழிக்க விடாமல் தடுக்கவே என் சகோதரி முயற்சி செய்தாள். அதை ஒரு வங்கியில் அம்மாவின் பெயரில் போட்டு வைக்க வேண்டுமென்றே அவள் விரும்பினாள். அம்மா அவளுக்காகச் செலவழிப்பதை அனுமதிக்க வேண்டுமென்று என் சகோதரியிடம் சொன்னேன். “அவளுக்கு அது மிக முக்கியமாக இருக்கிறது,’ என்றேன். “தன்னுடைய பணத்தைப் பற்றி முடிவுகள் எடுக்க, அவளுக்குத் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது அவசியமாக இருக்கிறது.” என்றேன். என் சகோதரியின் மனநல ஆலோசகர், அது உண்மைதான் என்று சொன்னாராம், அதனால் அம்மா நண்பகல் உணவுக்கான செலவைக் கொடுத்தார்.
அவள் கணவரின் மருந்துகளுக்கான மாதச் செலவு 400 டாலர்கள் ஆகிறது. ஃப்ளோரிடா மாநிலத்தில் அவர்கள் இருக்கும் பகுதியில் ‘மாத்திரைக் கூடங்கள்’ நிரம்பி வருவதால், அவருடைய மருத்துவ மருந்துச் சீட்டுக்கான மருந்துகளைக் கடைகளிலிருந்து வாங்குவது இப்போது மேன்மேலும் கடினமாகிக் கொண்டிருக்கிறதாம். அந்த இடத்தில் போலி மருத்துவநிலையங்கள் உருவாகி, அவற்றில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மார்ஃபீனையும், ஆக்ஸிகொண்டினையும் மருந்தாகக் கொடுத்துத் தள்ளுகிறார்களாம். இவருடைய மருந்துகளோ மார்பீனும், ஆக்ஸிகொண்டினும்தான். வலிக்கான மருத்துவமனைகளோ போலிஸ் நிலையங்கள் போல ஆகி விட்டிருக்கின்றன, வரும் எந்த நோயாளியும் போதை அடிமைக் குற்றம் செய்பவர் போல் கருதப்படுகின்றனர். எல்லா நோயாளிகளையும் போலிஸ்காரர்கள் அடிக்கடி சோதிக்கின்றனர், மருத்துவமனைகளை அடிக்கடி முற்றுகை இடுகின்றனர். மருத்துவ நிலையங்களின் முன் கார் நிறுத்தும் இடங்களில் போலிஸ் கார்கள் காத்து நிற்கின்றன.
அவருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்பதால், அவர் இந்த வலி மருத்துவ மனைகளில் மருத்துவச் சீட்டு பெற முடியுமென்றாலும், அங்கு மருந்து வாங்க முடியாது, ஏனெனில் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருந்து கொடுப்பதில்லை. வால்மார்ட்டில் உள்ள மருந்து நிலையத்துக்குத்தான் போகிறார், ஆனால் அங்கோ போதைத் தன்மை உள்ள மருந்துகளை விற்பதில்லை. ஒரு தனியார் மருந்து விற்பனை நிலையத்தைக் கண்டு பிடித்திருக்கிறார், ஆனால் இந்த வலி மருத்துவமனைகளின் மருந்துச் சீட்டை அங்கீகரிக்க அங்கு பயப்படுகிறார்கள். அவர்களிடம் பேசி ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார், என் அம்மாவின் கணவர்.
சிலருக்கு வாழ்க்கை சுலபமாக இருக்கிற போது வேறு சிலருக்கு எப்போதும் தொல்லைகளால் நிரம்பியதாகவே இருக்கிறதே அது ஏன்? எனக்கு ஏன் முதுகெலும்புப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணிக்கும் வியாதி வரவில்லை? என் அம்மா செல்ஸீயில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து தெரிந்து கொண்டார், அவருடைய கணவரின் தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள் மூன்று பேருக்கு விசித்திரமான முதுகெலும்பு நோய்கள் இருக்கின்றதாம். அவர்கள் எல்லாரும் வளர்ந்தது, ஒரே பேட்டைப் பகுதியில். அங்குள்ள சில தெருக்கள் முடிகிற இடத்தில் ஊரின் பெரிய குப்பை மேடு இருக்கிறது.
“உன்னால என்ன செய்ய முடியும்?” அம்மா சொல்கிறார், அது கேள்வியாகக் கேட்கப்பட்டதில்லை. “அதுதான் எப்பவும் நடக்கிறது.” அவர் தன் கணவரின் உடல்நிலை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்,”அதென்னவோ அப்படியேதான் இருக்கிறது.”
பூமியிலிருக்கும் மருத்துவ உதவியாளர்களிலேயே மோசமான உடல் நிலை உள்ளவர்கள் யாராவது உண்டென்றால் அது என் அம்மாவும், அவரது கணவருமாகத்தான் இருக்கும். 1980களில் தாம் பெற்ற கல்வியை மேம்படுத்த அவர்கள் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இருவரும் எப்போதும் தொடர்ந்து புகைக்கிறார்கள், அதற்குப் பரிசாகக் கிட்டப் போகிற சாவுக்குத் தயாரான நிலையிலேயே இருக்கிறார்கள். நாடு பூராவும் எழுந்து கொண்டிருக்கிற புகை பிடித்தலுக்கு எதிரான சட்ட பூர்வமான முயற்சிகளைக் குறித்து என் அம்மா கடும் ஆத்திரம் கொண்டு பொங்குகிறார். அவர் கலிஃபோர்னியாவுக்கு வரும்போது, விமானநிலையத்திற்கு வெளியில் கூட எங்கும் புகை பிடிக்க அவருக்கு அனுமதி இல்லை. சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் பூங்காக்களில் புகை பிடிக்க அவருக்கு உரிமை இல்லை. “இன்னும் கொஞ்சம் போனால், நம் வீட்டிலேயே புகை பிடிக்க நமக்கு உரிமை இருக்காது.’ என்று அரற்றுகிறார்.
“அம்மா, நீங்க ரொம்பப் படுத்தறீங்க,” என்கிறேன் நான். ‘மக்கள் பிறருடைய புகையைத் தாம் சுவாசிப்பதை விரும்பவில்லை. அது அருவருப்பானதுதானே.”
கொஞ்சம் வெட்கியவராகி,’எனக்கு அது தெரிகிறது.” என்கிறார், “ அது படுமோசம்தான்.” எல்லாரையும் சந்தோஷமாக வைக்க வேண்டுகிற அவரது இயல்போடும், யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற நினைப்போடும் அவர் புகை பிடித்தலுக்கு அடிமையாகி இருப்பது மோதுகிறது.
அவரது கணவருடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. “அப்படின்னா என்ன அர்த்தம்?” நான் கேட்கிறேன், “இதை எப்ப கண்டு பிடிச்சீங்க?”
“நாங்கள் அந்த இலவச மருத்துவ மனைக்குப் போயிருக்கிறபோது, நான் அங்கே வர அனுமதிக்கப்படுகிற அளவுக்கு மேலே சம்பாதிக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்களே, அப்போது,” குரலில் இளக்காரம் தொனிக்கச் சொல்கிறாள், “ நுகரும் ஒரு மருந்துக் குப்பியைக் கொடுத்து விட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.’
”இப்ப எப்படி இருக்கிறார் அவர்?”
“ரொம்ப மனசுடைஞ்சு போயிருக்கிறார்.” தன் உடல்நிலையால் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தான் ஏதும் கொடுக்க முடியாத நிலையில் இருப்பது குறித்து அவளுடைய கணவர் மிகுந்த மனச்சோர்வில் இருக்கிறார். அதற்கு ஈடு கட்டுவதற்காக அவர் புல்வெட்டும் வேலைகளை ஏற்கிறார், தன் சக்திக்கு மீறிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். அவை அவர் கீழே விழுவதிலும், வலி மிக மீறிப்போகும் நிலையிலும் முடிகின்றன. அம்மா அவரை விட்டுப் பிரிந்து போய்விடுவார் என்று கருதி அவர் அழத் தொடங்குகிறார். பல வருடங்களாக நானும் என் சகோதரியும் என் அம்மா அவரை விட்டுப் பிரிந்து விட வேண்டும் என்றுதான் விரும்பினோம். இப்போதோ அம்மா பிரிந்தால் அவர் இறந்துதான் போவார்.
“அவருடைய கால்கள் மறுபடி வீங்கினால், நாங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குத்தான் போவோம்,” அம்மா என்னிடம் சொல்கிறார். “ அவர் நிலை அத்தனை படுமோசமாக இல்லை, 911 ஐக் கூப்பிடத் தேவை எல்லாம் ஒன்றும் எழவில்லை.” “படுமோசம்” என்பது என் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல்.“ அவரைப் படுக்கையோடு கிடத்த, அவர் அந்த நிலைக்கு வரும்வரை அவர்கள் இருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ’படுமோசம்’ என்பது என்ன நிலை என்பதை அத்தனை கருக்காக அவர்கள் இருவராலும் சொல்ல முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவருமே அப்படி ஒரு நிலையில்தான் கொஞ்ச காலமாகவே இருக்கிறார்கள்.
“தலைகாணிகள் மீது உயர்த்தி வைத்துக் கொண்டால் அவருடைய கால் வீக்கம் வடிந்து விடுகிறது.”அவள் விளக்குகிறாள். “முன்பு அவை அத்தனை சிவப்பாக, பளபளப்பாக இருந்தன.”
ஒரு நிலையை நேராக விளக்க என் அம்மாவால் முடிவதே இல்லை.
Caregiving
நிரந்தரமாகத் தன் சக்திக்கு மீறிய ஒரு கட்டத்தில்தான் அவர் இருக்கிறதாக நான் நினைக்கிறேன். “அவர் காலில் ஏன் நீர் கோர்த்துக் கொள்கிறது?” நான் கேட்கிறேன். “அது ரத்தம் தேங்கி இதயம் நின்று போகும் நிலைக்கு வருவதால் நேர்வது,” அவள் சொல்கிறாள். “ இதயம் ரத்தத்தை அழுத்திச் சுழற்றுவதில்லை, அதனால் கால்புறம் திரவம் சேர்ந்து கொள்கிறது.” ஷவரில் குளித்து விட்டு அம்மாவின் கணவர் அமர வந்த போது, வியாழனறோ, வெள்ளியன்றோ நான் பார்த்தேன், “நீங்கள் நன்றாக இல்லை போலத் தெரிகிறதே.” என்றேன். அவர் மேல்மூச்சும் கீழ்முச்சுமாக வாங்கிக் கொண்டிருந்தார். என் அம்மா தன்னுடைய நர்ஸ் கருவிகளில் ஒன்றை வெளியில் எடுத்தாள், ஒரு ஆக்ஸிமீட்டர் அது. அதை விரலில் மாட்டிக் கொண்டால், ரத்தத்தில் எத்தனை பிராணவாயு இருக்கிறது என்று காட்டும். நான் சொன்னேன், “அதை மாட்டிக் கொண்டு, சமையலறை வரை ஒரு நடை போங்கள்.”
அவர் சமையலறைக்குத் தள்ளாடியபடி போனார். அங்கு இன்னும் பயிற்சி பெறாத மால்டீஸ் நாய், கீரா, செய்தித்தாள்களில் சிறுநீர் கழிக்குமிடம் இருக்கிறது. அவர் தள்ளாடியபடி திரும்பினார்.
“தொண்ணூத்தி ஒண்ணு.” அவள் சொன்னாள். “இது சரி இல்லை. 92 ஆக இருந்தாலே நாங்கள் நோயாளிகளை ஆக்ஸிஜன் குழாயில் சேர்த்து விடுவோம். ஆனால் இப்போது கூடி விட்டது. அவர் அத்தனை மோசமான நிலையில் இல்லை.”
”படு மோசமான நிலை” (dire straits) என்ற சொற்களை எல்லாம் யார் இப்போது புழங்குகிறார்கள்? அவர்கள் ஒரு கூட்டம். இன்னும் என்னென்னவோ வட்டார வழக்குகளையெல்லாம் என் அம்மா சுமந்து திரிகிறார். “சும்மா சொல்லல்லை” என ஒன்று. அதை இப்படிச் சொல்வார்,”சும்மாச் சொல்லல்லை, ஆனால், ஃபளொரிடாவுக்கு மாறி வரத்துக்கு முன்னாலே, நர்ஸுகளுக்கு என்ன வாய்ப்பு இருக்குண்ணு நான் தேடிப் பார்த்திருக்கணும். இங்க தொழிற்சங்கமே இலை. இதுவோ ‘வேலை செய்ய உரிமை’ உள்ள மாநிலம், அப்படின்னா என்ன அர்த்தம், வேலை செய்ய நமக்கு உரிமை இருக்கு, அவங்களுக்கு எப்ப வேணா வேலையை விட்டு நம்மைத் துரத்த உரிமை இருக்கு.” அல்லது, ‘மார்பிள்ஹெட்டுக்கு ஒளி உதயமாச்சு’ன்னு ஒரு வழக்கைப் பயன்படுத்துவார். மார்பிள்ஹெட் என்று மாஸச்சூஸெட்ஸ் மாநிலத்தில் ஒரு படாடோபமான ஊர் உண்டு, ஆனால் இந்த இடத்தில் அந்த சொல்வழக்குக்கு அர்த்தம் வேற, நம்ம தடிமண்டைக்குக் கூட ஏதோ புரிய ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
”இவர் டாக்டர் கிட்டே பேசப்போகிறார்,” அம்மா தொடர்ந்தாள்.”சில மருந்தையெல்லாம் நிறுத்தணும்னு ஆசைப்படறார்.”
“என்னது, அவருக்கு டாக்டர் யாரும் இல்லைன்னு நான் நெனச்சேனே?”
“அவருடைய வலியைக் கவனிக்கற டாக்டர், அந்த வலி க்ளினிக்லெ இருக்காளே, அவள் அங்கே சோதனைக் கூடத்தைத்தான் கவனிக்கிறாள், இவரோட முதல் நிலை டாக்டர் இல்லை அவள். அப்படி யாரும் இவருக்கு இல்லை. மாபடானுக்கு இவரை அனுப்பலாம்”- அது அம்மா வேலை பார்க்கும் மருத்துவ மனை- “ஆனா அங்கேயும் எதுவும் செய்ய மாட்டாங்க. அவங்க ‘காலை உயரமா வச்சுக்க, உப்பைக் குறை’ அப்படிம்பாங்க.”
“உங்களுக்கு அது எப்படித் தெரியும்?”நான் கேட்டேன். என் வாழ்க்கை ஒப்பீட்டில் எளிதாக இருப்பதால் நான் இப்படி உடனே ஏதோ நம்பிக்கையோடு வாழ்வை அணுகுகிறேனா? என் வாழ்க்கை நல்லபடி ஆகி இருப்பதால், எல்லார் வாழ்வும் அப்படி ஆகி விடும் என்று நினைக்கிறேனா? “ மாபடானுக்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால்தான் என்ன?”
“இவருக்கு மருத்துவ காப்பீடு இல்லியே? காப்பீடு இல்லாத நோயாளிகளை அவர்கள் பார்ப்பதில்லை.”
[மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய] ஹிப்பொக்ராடிக் உறுதி மொழி பற்றியெல்லாம் அரற்ற நான் ஆரம்பித்தேன். யாரையும் சாக விடமாட்டோமென்று மருத்துவர்கள் ஒரு சத்தியம் பண்ணுவதில்லையா? எல்லாரும் எப்போதும் நல்லதையே செய்ய முயற்சி செய்யும் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழ்ந்து எனக்கு வாழ்க்கையின் நிதர்சனம் ஏதும் புரியாமல் போயிருக்கிறது.
“சரி, பார்ப்போம்.” என்றார் அம்மா. “ நான் முன்னாடி சொன்ன மாதிரி, இவர் இப்ப கொஞ்சம் தேவலையாத்தான் இருக்கார். நான் எதார்த்தமாத்தான் எல்லாத்தையும் பார்க்கிறேன், மிஷெல். இவருக்கு முதுகிலே ஒரு நோய் வளர்ந்துகிட்டே போறது. இவரோ நிறைய புகை பிடிக்கிறார், இப்ப வேணா நிறைய குறைச்சுகிட்டு இருக்கார், ஆனா எல்லாரும் ஒரு சமயம் நோயாளியாத்தான் ஆகறாங்க.”
அம்மா இந்த அளவு உணர்ச்சி வசப்படாமல் இருப்பது பற்றி எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. தன் கணவர் தன் கண் முன்னே சாவது பற்றி அவளுக்கு ஏற்படப் போகும் மன வலி எனக்கு அச்சமாக இருக்கிறது. இப்போது அவள் இந்த அளவு ஒட்டாது பேசுவது என் பயத்தைக் குறைத்தது. என் தாத்தாவின் மூக்கில் புற்றுநோய் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தபோதும் என் அம்மா எதார்த்தமாகத்தான் இருந்தாள். “அவருக்கு நிறைய வயசாயிடுத்து.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அறுவை சிகிச்சை ஒன்றும் உதவாது என்று அப்போது நினைத்தாள். ஆனால் அவர்கள் அந்தப் புற்று நோயை அகற்றினார்கள், அவரும் இன்னொரு பத்தாண்டுகள் உயிரோடு இருந்தார்.
“நான் அதிகமாக்கிச் சொல்றதாவே நெனைக்கலெ,” என்றாள். “நான் பார்க்கிறது எனக்குப் புரியறது. இவரோட வயிறு ரொம்ப உப்பியிருக்கு.”
அம்மா மிகைப்படுத்துவதாக நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன். என் அம்மா மட்டுமில்லை, என் மொத்தக் குடும்பமுமே- யாரும் ஒரு போதும் மிகைப்படுத்துவதேயில்லை, இருப்பதைக் குறைத்துத்தான் சொல்வார்கள். பல வருடங்களாக என் அம்மா லாட்டரிச் சீட்டு வாங்குகிறார், அதில் ஏதும் ஜெயித்தால் எப்படிச் செலவழிப்பாரென்பதையும் மிக எளிமையாகவே சொல்வார். ”கொஞ்சம் எனக்கு வச்சுப்பேன்,” என்பார், “ஆனால் என் குழந்தைகள், உங்களுக்குக் கொடுப்பேன். உன் அப்பாவுக்கும், வில்லீக்கும் கொடுப்பேன்,” – வில்லீ அப்பாவின் பெண் சினேகிதி- ”டார்லீனுக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பேன், கார்லிக்குக் கொஞ்சம் கொடுப்பேன்.” அது ஒரு பிரார்த்தனை போல இருக்கும். என் அம்மா ஒரு உண்மையான கதோலிக்கர், சுயமில்லாத பரோபகாரம் செய்தால், அதனால் மேன்மேலும் சுயத்தின் விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புபவர். அவருக்கே தெரியாமல் அவருடைய ஐரிஷ் கதோலிக்கத்தினுள் இருக்கும் கிருஸ்தவமல்லாத நம்பிக்கைகளின் வேர்கள் அவரிடம் இருந்தன. அவருடைய பிரார்த்தனைகள் பல நேரம் மாந்த்ரீகம் போல இருந்தன. சாவை அத்தனை சாதாரணமாக ஏற்பதில் அவர் ஒரு ஸ்கார்பியோ ராசிக்காரர்: வாழ்விலிருந்து மரண உலகுக்குப் பயணிப்பதை எளிதாக்கும் அவருடைய வேலையால் அவர் ஒரு ஹெகெடி போல [மொ பெ குறிப்பு: Hecate மந்திர தந்திரங்கள், பாதாள உலகம், சூன்யம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்ட ஒரு கிரேக்கப் பெண் தெய்வம்.]
அம்மா, தன் கணவரின் உடலை எனக்கு விளக்குகிறார். “இதயம் சரியாக ரத்தத்தைச் செலுத்துவதில்லை, அதனால் உன் உடலில் உள்ள திரவம் உடலில் சரியாக ஓடாமல், ஓரிடத்தில் தேங்குகிறது. உன் கால்களில் திறப்பான்கள் (வால்வு) உண்டு, அவை உன் இதயத்துக்கு ரத்தத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும்.”
“அந்த திரவம் என்னது?”
“ரத்தம், பிளாஸ்மா, லிம்ஃப் திரவம். உன்னோட ரத்தங்கிறது வெறும் ரத்தமில்லெ.”
“அவரோட மருந்துகளை என்ன செய்யணும்னு அவர் நினைக்கிறார்?”
”அதெல்லாத்தையும் விட்டுட்டு, புதுசா ஆரம்பிக்கணும்னு விரும்பறார்னு நான் நெனைக்கிறேன். மருந்தே இல்லாமல் இருந்தா என்ன ஆகும்னு பார்க்க விரும்பறார். ஸிரிஞ்சோமையீலியாவைப் பத்தி யாருக்கும் அவ்வளவு ஒண்ணும் தெரியல்லெ.” அதுதான் அவளுடைய கணவரின் நோய். அவருடைய நோய் அதுவென்று கண்டு பிடிக்கப்பட்ட போது, அம்மா என்னைக் கூப்பிட்டு இண்டர்நெட்டில் அது பற்றி என்ன தகவலிருக்கிறதென்று பார்க்கச் சொன்னாள், அவளிடம் வீட்டில் இண்டர்நெட் இல்லை. வலையிலிருந்து பல பக்கங்கள் தகவலை இறக்கி அதை அச்சடித்து, அவற்றைத் தபாலில் ஃப்ளோரிடாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். “ட்யூக், யுஸிஎல் ஏ, தவிர மாஸ் ஜெனரல்- [மொ பெ. குறிப்பு: முந்தைய இரண்டும் பல்கலைகள், மூன்றாவது மாஸச்சூஸெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டனில் உள்ள பெரும் மருத்துவ மனை] -எல்லாம் இப்போதுதான் இதற்குச் சோதனைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.” ஒரு புது மருந்து இதற்கு இருக்கிறது, அதன் பெயர் நியுரோண்டின். “அது நரம்பு நசிவு வலிக்கு மருந்து. அது போதை மருந்து இல்லை.”
”எல்லாத்துக்கும் காரணம், மருத்துவக் காப்பீடு இல்லைங்கிறதுதான்.” அம்மா சொல்கிறாள், “ அது இல்லாமல் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று தெரிந்து கொள்ளக் கூட முடியாது. என்ன செய்ய முடியும்னு நாங்க பார்க்கப் போகிறோம். இது ஏதோ தீராத நோய்னுதான் தோணறது- ஆனா, இதொண்ணும் ‘ஐயோ கடவுளே! இவருக்கு மூச்சு விடவே முடியல்லே, இப்பவே 911 அவசர உதவியைக் கூப்பிடணுங்கிற மாதிரி இல்லெ,’ ஆனா, இந்த மூச்சுத் திணறல் புதிசுதான்.” ஒபாமாகேர் [2]  வெளி வந்தவுடன் என் சகோதரிக்கும், எனக்கும் அவர்களுக்கு இதுதான் தேவை என்ற நம்பிக்கை சிறிது சுடர் விட்டது. ஆனால் அவர்கள் இருக்கும் மாநிலமான ஃப்ளோரிடாவில் இருப்பது மிகவும் சிக்கலான அமைப்புகளில் ஒன்று. அவர்களுக்கு இண்டர்நெட் மீதும், தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதிலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கும் ஒவ்வாமையும் விலகலும் ஏதும் பயனில்லாத நிலையிலேயே முடிந்தன.
எப்படியுமே அவளுடைய கணவர் மருத்துவமனைக்குப் போக விரும்பவில்லை. ”ஓ, ஆமாம், நீ கட்டறத்துக்கு இன்னொரு பில் இருக்கு, வாங்கிக்க.” அம்மா அவர் பேசுவது போல நடித்துக் காட்டுகிறார். “ ’நானும் ஏதும் காப்பீட்டுக்குக் கொடுக்க முடியாது.” ஆனால், எனக்கு அதைப் பத்தி ஒரு கவலையும் இல்லெ. அவசர சிகிச்சைப் பிரிவிலேருந்து எனக்கு 2000 டாலருக்கு ஒரு பில் வந்தால் நான் கவலைப்படுவேன்னு நீ நெனக்கிறியா? சீரியஸாப் பாரு, எனக்கு 62 வயசாறது. இப்ப அவங்க எனக்கு என்ன செய்து விட முடியும்? அவுங்களுக்கு மாசம் 10 டாலர் கொடுப்பேன். இப்படி மாசாமாசம் நான் ஏதாவது கொடுக்கிற வரைக்கும் அவங்களால என்ன செய்து விட முடியும்?”
கடன்பட்டவர்களை அடைக்க சிறை ஏதும் இல்லை, என் அம்மா அடிக்கடி சொல்ல விரும்புகிற வாக்கியம், அது நல்ல விஷயம்தான். டிஸ்னிக்குப் பயணம் போய், ஃப்ளோரிடாவுக்கு இடம் பெயர்ந்து, வீட்டுக்குள் ஒரு சுடுதண்ணீர்க் குளியல் தொட்டியைப் பொருத்தி- அந்த வீட்டை அவர்கள் கடைசியில் இழந்தும் விட்டார்கள்- அவள் ஓட்டாண்டியாகி விட்டிருந்தாள்.
“அந்தத் தலைமுறையைப் பற்றி நான் நிறையப் படிக்கிறேன்,’ என்றாள் அம்மா. அவள் சொன்னது தன் கணவரின் தலைமுறையைப் பற்றி, அவளை விடச் சுமார் பத்தாண்டுகள் இளைய தலைமுறை. ”60களிலும், 70களிலும் மக்கள் என்னென்னவோ மோசமானதை எல்லாம் செய்தார்கள், அது அவர்களையும், அவர்களோட ஈரல்களையும், இதயங்களையும் சேதம் செய்தது, அது இப்போது வெளியே தெரியும்படி வருகிறது.”
போதை மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் பலருக்கு இருப்பதைப் போல, அவருக்கு ஹெபடைடிஸ் ‘ஸி’ நோய் இருக்குமா என்று நான் யோசித்தேன்.
“அடங்காத காட்டான்கள் அவர்கள்,’ என்கிறார் அம்மா, [சொல்லத் துவங்கும்போது] ஏதோ கர்வத்தோடும், குழப்பத்தோடும் இருந்தவர், சட்டென இருண்டவராகவும் குற்ற உணர்வோடும் தெரிபவராக மாறினார். “இதைப் பற்றி உன்னோடு பேசுவதில் நான் ஓரளவு மோசமாக உணர்கிறேன். உன்னோடு ஒரு வாரமாக நான் எதையும் பேசவில்லை, ஆனால் இப்போது இதையெல்லாம் உன்மீது குவிக்கிறேன்.”
வாயிற்கதவு மணி அடிக்கிறது, மால்டீஸ் நாய் கீரா ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்குகிறது. “கொஞ்சம் இரு, அது என்னோட பிட்ஸா,” என்கிறார் அம்மா. அவர் பிட்ஸாக்காரருக்குப் பணம் கொடுக்கையில், நான் தொலைபேசியில் காத்துக் கொண்டிருக்கிறேன். என் அம்மாவுக்குப் பேசுவதற்கு நிறைய பேர் இல்லை. வேலை செய்கிற இடத்தில் யாரோ கொஞ்சம் அறிமுகமானவர்கள் இருக்கலாம். சிறுமிப் பிராயத்தில் பழகிய சிலரோடு அவர் மறுபடி தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக் வழியே, அவர்கள் இருவருக்கும் நோய்ப்பட்ட மனைவியர் உண்டு. எல்லாருமாகத் தங்கள் துயர்களைப் பகிர்கிறார்கள். அவருடைய பெற்றோர்கள் இறந்தாயிற்று, ஒரே சகோதரனும் போதைக்கு அடிமையாகி, மனநோயாளியாக இருக்கிறார். அச்சகோதரன் எப்போது போதையில் உச்சத்தில் இருக்கிறார், எப்போது மனநோயால் குழம்பி இருக்கிறார் என்பதைக் கண்டு பிடிப்பதே கடினமாக இருக்கிறது. அம்மா மறுபடி தொலைபேசியில் பேச வருகிறாள்.
“நீங்க இதைப் பத்தி என் கிட்டப் பேசத்தான் வேணும்னு நான் நெனக்கிறேன்.” அவரிடம் நான் சொல்கிறேன், அவரும் “அப்படித்தான் போல இருக்கு,” என்கிறார்.
அம்மாவும் நானும் என்று பார்த்தால், எங்களிடையே இருக்கும் எல்லைக்கோடுகள் குழப்பமானவை. அவருடைய துயர்களை என்னோடு இத்தனை பகிர்ந்து கொள்வதற்கு நான் தடை போட்டிருந்தேன், ஏனெனில் தான் எப்படிச் சாக வேண்டும் என்று அவர் விருப்பத்தைச் சொல்லிக் கேட்க நான் விரும்பவில்லை. அவருடைய கணவரோடு நேரே பேசவும் எனக்கு விருப்பமில்லை, என்றாலும் அதெல்லாம் அவருக்கு எத்தனை கடினமாக இருக்கிறது என்பதையும் நான் கேட்க விரும்பியிருக்கவில்லை.
என் அம்மாவின் பிட்ஸா ஆறிப் போகிறது, அவர் போய் அதைச் சாப்பிட வேண்டும்.
”அம்மா, உங்கள் மேல் எனக்கு ரொம்பப் பிரியம் இருக்கு,” நான் சொல்கிறேன்,
அவர் “ நான் உன் மேல் அதை விடக் கூடுதலாய் பிரியமாயிருக்கிறேன்.” என்கிறார். அதைத்தான் அவர் எப்போதுமே சொல்வார், “ முத்தங்களும், அணைப்புகளும்,” என்று பாடும் குரலில் சொல்கிறார், தொலைபேசியில் பல முத்த ஒலிகளைச் செய்கிறார், பிறகு அதை முடித்து வைத்து விடுகிறார்.

+

 michelle-tea

[இங்கிலிஷ் மூலம்: மிஷெல் டீ.
இவர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் வசிக்கிறார். ‘கெட் டு பாட்டம் ஆஃப் ஸீ’ என்கிற தலைப்புள்ள இவரது புத்தகத்தை மக்ஸ்வீனிஸ் பிரசுரம் இந்த இலையுதிர் காலத்தில் வெளியிட இருக்கிறது. இந்தக் கட்டுரையை, n+1 பத்திரிகையின் 2014 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்து இதழில் பார்க்கலாம். இதழ் எண் 20. அந்த இதழின் மையக் கரு: பிழைத்திருப்பது. (Survival)]
தமிழில்: மைத்ரேயன்]

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
n+1 பத்திரிகையில் சாதாரணர்கள் பலர் எழுதுகிறார்கள். தம் சிக்கலான வாழ்வின் பல முடிச்சுகளைத் தம் சக்திக்கேற்ப, திறனுக்கேற்ப, சூழலை ஒட்டிய விவர ஞானத்தோடும், சிறிது நகைப்போடும், கரிசனத்தோடும், எல்லைகள் பற்றிய தெளிவோடும் எழுதுபவர்களே அதிகம்.
அப்படி எழுதும் பலரில் ஒருவரான மிஷெல் டீ என்பாரின் சுயசரிதை போலவும், ஒரு அளவு புனைகதை போலவும் தோன்றும் ஒரு குறிப்பை மொழி பெயர்த்துக் கொடுக்கிறேன். இவர் நாற்பதுகளிலிருக்கும் இளைஞர் என்று தெரிகிறது.
இது வகைமைகளை மீறிய எழுத்து, அதனாலும் மொழி பெயர்க்கிறேன். நேரடியாக மனித வாழ்வின் பல கோணங்களைப் பற்றிச் சொல்கிறது, பிரசங்கிக்காமல் மெல்லிய துயர்க் குரலும், இப்படி ஏன் சிக்கலாகிறது வாழ்வு என்று குறைப்பட்டுக் கொண்டும் பேசுகிற இதை அமெரிக்காவின் கீழ் மட்டத்து மக்கள் நடுவே வாழ்க்கை எப்படி எல்லாம் உடைந்திருக்கிறது என்பதையும் காட்டுகிறதாக நான் கருதியதால் மொழி பெயர்த்திருக்கிறேன்.
மைத்ரேயன்
மொழி பெயர்ப்பாளரின் குறிப்புகள்:
1 ஃபூடான் (Futon) என்பது மரச்சட்டங்களால் ஆன சோஃபா போன்ற ஒரு இருக்கை. இதையே படுக்க வசதியான, தாழ்வான ஒரு கட்டிலாகவோ, தரையிலிருந்து சற்றே உயர்த்தப்பட்ட படுக்கைமேடையாகவோ பயன்படுத்தலாம். இதில் மெத்தை ஒன்று சுருட்டப்பட்டு ஒதுக்குப் புறமாக வைக்கக் கூடியதாக இருக்கும். இருக்கையையும் மடித்து சிறு மேடை போல ஆக்கி விடலாம். ஜப்பானில் மரபாக இருந்த இது இன்று உலகளவில் பரவி விட்டது.
2.  ஒபாமா பதவியேற்ற முதல் நான்கு வருடங்களுக்குள் மிக்க எதிர்ப்புக்கு நடுவே அவரும் அவர் கட்சியினருமாக அனைத்து அமெரிக்க மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு அவசியம் என்ற ஒரு சட்டத்தைக் கொணர்ந்தனர். ஏதுமே வசதி இல்லாதாருக்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளாருக்கு அரசு இலவச மருத்துவ வசதிக்குக் காப்பீடு கொடுக்கும். இது ஒரு அளவு வரை மருத்துவப் பராமரிப்புக்கு வழி செய்யும். பூரணமான மருத்துவ வசதியைத் தராது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.