கவிதைகள்

கடந்து செல்கையில்
நடந்து நடந்துfoot
கடந்துவிடுவதாகவே நினைக்கிறோம்.
படுக்கைக்கடியில் கதைகள்,
பேருந்திருக்கையில் அழுகைகள்,
வாசற்தரையில் காயங்கள்,
உடைந்த கண்ணாடிகளில் கோபங்கள்,
தெருவிளக்கடியில் கிடைத்த சேதிகள்,
வாசனைகளில்கூட ஒளிந்துகொண்டிருக்கிறது
காலம்.
நடந்து நடந்து
கடந்துவிட்ட இடங்கள்
மீண்டும் வந்து இணைகின்றன,
மறைந்து எரியும் தெருவிளக்குகளில்
உடைந்த கண்ணாடிகளில்
விரிசல் மறைக்கப்பட்ட வாசற்தரைகளில்
காலியான பேருந்துகளில்
படுக்கைக்கடியில் ஒரு புத்தகத்தில்.
இருப்பவை இருந்துகொண்டேதான் இருக்கின்றன.

***

 
சமையல் தோட்டம்tomato_barcode
டப்பாவில் அடைத்துவைத்த
கருவேப்பிலை வாடுவதற்குள்
வீடு திரும்பியிருந்தேன்,
மிக நீண்டதொரு
பயணத்திலிருந்து.
தினமும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறேன். ஆனால், பார்க்காமலும்.
எத்தனை காலைகளாக
செஞ்சிவப்பாக முழித்துக்கொண்டிருக்கிறது
இந்த கிழட்டுத் தக்காளி.
மண்ணிலிருந்து வந்திருந்தால்தானே!
 
— ச.அனுக்ரஹா
 

*****

இன்று பெற்றேன் இரவின் கையொப்பம்
night

மறக்காமல் இரவு
எனக்காக எழுதும் கடிதம்
இங்குதான் இருந்திருக்கின்றது
ஒவ்வொரு நாளும்
என் வீட்டு வாசலில்
குனிந்துபார்க்கவும் நேரமில்லாததுபோல்
எனக்குள் இருக்கும் அலுவலகத்திற்குள்
உழன்றபடியே கடந்து போயிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும் இந்தவழியில்
வீடுதிரும்புவதற்குள்
வெயிலில் உலர்ந்து
காற்றில் மறைந்த அந்தக்
கடிதங்களின் செய்திகளை
எங்கேப்போய் தேடுவது?
உள்ளறையின் நித்திரையில்
நான்கண்ட கனவுகளெல்லாம்
உறக்கம் கலைகயில் வெளியேறி
இந்தப்பூக்களில்தான்
பூத்து கிடந்திருக்கின்றன
பகல்கனவுகளின் இருளில்
குருடனாய் அலைந்திருக்கின்றேன்
என் அகக்கனவுகள்
காலாவதியாவது தெரியாமல்
விழித்துக்கொள்வதற்குள்
வாடி நிறமிழந்து
மட்கிய பூக்களின் முகமெல்லாம்
இப்போது எங்கே பூத்திருக்கும்?
இனி எந்த கடிதத்தையும்
தவறவிடப் போவதில்லை
எனக்குப் புரியாமொழியில் இருப்பினும்.
எந்தப்பூவின் துளித்தேனையும்
மிச்சம்வைக்கப் போவதில்லை
என் இழப்பின் கசப்பை
ஈடுசெய்யும் வரையிலும்.
இரவுகள் மனம் கனியட்டும்.

*

மனம் எனும் தனிப்பறவை
bird
எதனது கண்கள் வழியேயும்
தன்னையே பார்த்துக்கொள்வதாய்
நினைத்துக்கொள்ளும் பிரபஞ்சத்தின்
சிறு கூட்டில்
நனைந்த சிறகுகளோடு
அமர்ந்திருக்கும் ஒரு பறவை
ஈரம் கூடும்தோறும்
எடைகூடும் பறவைக்கு – இனி
எழுந்து பறக்க வழியேயில்லை
வெளிபரவும் மெல்லிய ஈரத்தின்மீதும்
இரக்கமற்று வீசி
தடமின்றி உலரச்செய்யும்
வாழ்வின் காற்றால்
ஏக்கமும் உடைய
உள்ளிருந்து பெருகுகிறது
ஒளிகசியும் ஒரு பெருநீர்ச்சுனை
எனினும்
இடைபடும் தன்னிரக்கப் பெரும்பாலை
எந்த சுனையிலும் பசியடங்கா
தீத்துளை – நனைந்த சிறகோ
வெறும் தளை
புலன்களாய் சிதைந்துகிடக்கும் தடங்களில்
உருகிவழிந்து, பறவையை
உலரச்செய்தபடியே இருக்கிறது
ஆதிவினையில் சூல்கொண்ட பசி
பறவைக்கும் பறத்தலுக்கும் இடையிலும்கூட
ஊறி இறங்குகிறது
ஊழியென பெருகும் நீர்
துவளும் சிறகுகள்
துடுப்பாவதொன்றே
ஈரத்தோடும் எடைதுறந்து மீண்டும்
கட்டற்று அலையும் வழியென
கண்டுகொள்கையில்
காலம் ஏதும் மிச்சமில்லை
அந்த தனிப்பறவைக்கு.
 
–சோழகக்கொண்டல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.