கைகேயியின் மனமாற்றம்

பொதுவாகப் பெண்களுக்கு அவர்களின் ஆழ் மனத் தேவை என்னவென்று பார்த்தால் தன்னுரிமையும் சுதந்திரமுமாகத்தான் இருக்கும். கூடவே அவர்களின் பிறந்த வீட்டுப் பெருமையைக் காப்பாற்றுவதுமாக இருக்கலாம்.

கைகேயியின் மனமாற்றம், உளவியல் கோணத்திலிருந்தும் சரி, பொதுவான நாடகத் தன்மையிலும் சரி, ஒரு அற்புதமான நிகழ்வாக மலர்கிறது கம்ப ராமாயணத்தில். தவிர ராமாயணத்திற்கே காரணமாகவும், அடிப்படையாகவும் இருப்பது அவள் மனமாற்றம் தான் என்று கம்பனே கூறுகின்றார்.

வசிட்டன் மற்றும் அமைச்சர்கள் பலரையும் கலந்து ஆலோசித்து இராமனுக்கு முடிசூட்ட நிச்சயிக்கிறான் தசரதன். பிறகு சோதிடரைக் கேட்டு நாளையும் குறிக்கிறான். இச்செய்தியை அயோத்தி மக்களுக்கு முரசறைந்து தெரிவிக்கின்றனர் வள்ளுவர். இதைக்கேட்ட மக்கள் யாவரும் ஆர்த்தனர், களித்தனர் ஆடிப்பாடினர். தங்கள் நகரை இந்திரலோகம் போலவே அழகு செய்தனர்.

கூனிமட்டும் பண்டொருநாள் இராமன் வில்லால் மண்ணுருண்டை கொண்டு தன்னை அடித்ததை நினைவில் இருத்தி,

ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள்
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் ஆகக்

கைகேயியின் மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் கைகேயியைத் தொட்டு எழுப்பிக் கூறுகிறாள்:

இராகு என்கிற பாம்பு தன்னை முழுங்க நெருங்கும் நேரத்திலும் கூடத் தன் குணம் கெடாது ஒளி வீசுகின்ற திங்கள் போல, பெரிய துன்பம் உன்னை வந்து அடையும் போது நீ வருத்தப் படாமல் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே!

அதற்குக் கைகேயி (தூக்கத்திலிருந்து எழுப்பியதால்) சற்று சலிப்புடனே கேட்கிறாள்:

எவ்விடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?

manthara

பகைவரை அழிக்கும் வில்லைக் கொண்டவர் என் பிள்ளைகள் (எனவே பகைவரால் துன்பம் நேரிட வாய்ப்பில்லை). அவரவர் துறை தொறும் அறம் பிறழாதவர்கள் (அதனால் ஊழ்வினைத் துன்பமும் அண்டாது). தொடர்ந்து அவள்

புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?

இராமனைத் தன் பிள்ளையாக நினைப்பதோடு அல்லாமல் பெருமிதமும் கொள்கிறாள் கைகேயி!

துன்பம் வந்துவிட்டது என்ற கூற்றை நிராகரித்து விட்ட கைகேயியைப் பார்த்து அடுத்த கணையாக பொறாமையைத் தூண்டிவிடப் பார்க்கிறாள், கூனி

வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள்

கைகேயி அதற்கு, என் கணவனோ மன்னருக்கெல்லாம் மன்னவன்; மைந்தனோ எடுத்து உரைப்பதற்கு அரிய பெரும் புகழை உடைய பரதன்;

இதற்கும் மேலே என்ன வாழ்வு வந்து விடப் போகிறது கோசலைக்கு?
என்று அலட்சியமாகக் கேட்கிறாள்.

கோடிய வரி சிலை இராமன் கோ முடி
சூடுவான் நாளை, வாழ்வு இது

என்று கூனி கூறவும் மிக்க மகிழ்வெய்தி (இந்த நல்ல செய்தியைக் கொண்டுவந்து சொன்னதற்காக) அவளுக்கு ஒரு மாலையைப் பரிசாகக் கொடுக்கிறாள், கைகேயி!

ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள்

கைகேயியின் உள்ளத்து அன்பெலாம் கடல் போல ஆரவாரித்து மேல் கிளம்ப, அவளது முழுமதி போன்ற முகமானது உவகையால் மேலும் பிரகாசமானதாம்.

கூனியோ அம்மாலையைத் தூக்கி எறிகிறாள்; காலால் மிதிக்கிறாள். பின் வெகுண்டு நோக்கி அப் பேதயைப் பித்தி! நீயும் நின் சேயும் துயர்ப் படுக! நான் போகிறேன் உன் மாற்றாளிடத்து என்கிறாள். மேலும், நீ எதற்காக உவக்கிறாய்? கரிய செம்மலான இராமனும் சிவந்த வாய் சீதையும் உவந்து சிங்காசனத்தில் வீற்றி இருக்க, அவந்தனாய் உன் மகன் பரதன் வெறும் நிலத்தில் இருப்பானே! (அவந்தன் – ஒன்றுமே இல்லாதவன்; பயனற்றவன். ஒரு அருமையான சொல்!).

இராமன் செல்வம் மற்றும் பெருமைகள் எல்லாம் பெற்றிருக்க, பரதன் வெறுமே மூச்சு விட்டுக் கொண்டு உயிர் வாழ்கிறான் அவ்வளவே. நீ பெற்றதாலேயே அவனுக்கு இத் துன்பம். அரசர் வரிசையில் வைத்து எண்ணப் படப் பிறவாத அவன் இறத்தலே நன்று. தசரதன் ஏன் அவனை வெகு தூரம் (கேகய நாட்டிற்கு) அனுப்பினான் என்று எனக்கு இன்றுதான் விளங்குகிறது. ஐயகோ! பரதனே! உன் தந்தையும் கொடியன்; தாயும் தீயளால். என்ன உன் நிலை! நீ செய்யக் கூடியதுதான் என்ன! என்று பலவாறு புலம்புகின்றாள். கடைசியாக, உனது அரிய குணங்களெல்லாம் புல்லிடைப் புகுந்த அமுதம் போல வீணாயிற்றே! என்று உருகுகிறாள்:

கல்வியும் இளமையும் கணக்கில் ஆற்றலும்
வில் வினை உரிமையும் அழகும் வீரமும்
எல்லை இல் குணங்களும் பரதற்கு எய்திய
புல் இடை உக்க நல் அமுதம் போலும் ஆல்

இதற்கு கைகேயியின் எதிர்வினைதான் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கூனி கூறிய கொடிய வார்த்தை அவள் வாயைக் கசக்கச் செய்ததாம். ஏற்கனவே கூனி, தான் கொடுத்த மாலையை எறிந்து கீழே போட்டு மிதித்ததால் கோபமடைந்திருந்த கைகேயி, எரிகின்ற நெருப்பில் நெய் ஊற்றினாற் போல மேலும் கோபமடைந்தாள். கண்கள் சிவக்க அவள் மந்தரையை ஏசத் தொடங்குகிறாள்.

எனக்கு நல்லையும் அல்லை நீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை

என் பிறந்த வீட்டுப் பெருமையும், புகுந்தவீடாகிய சூரிய குலத்தின் அறமும் சிதையும்படி உன் புலைச் சிந்தையால் என்ன சொன்னாய், தீயோய்! மனம் போனபடி முறை அற்றவற்றை சொல்லினை, மதியிலா மனத்தோய்!

நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறம் திறம்பினும் செய் தவம் திறம்பினும் செயிர் தீர்
மறம் திறம்பினும் வரன் முறை திறம்புதல் வழக்கோ

நின் நாக்கைத் துண்டிக்காமல் விடுகிறேன் அதுவே உன் பாக்கியம். இத்தகைய பேச்சு வெளியார் காதில் விழுந்தால் நீ அரசருக்கெதிராகச் சதி தீட்டியதாக அறிந்து அரச தண்டனை கிடைக்கும். அறிவிலி! என் எதிரே நிற்காதே போ!

போதி என் எதிர்நின்று ! நின் புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனென்; புறம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய்
ஆதி ஆதலின் அறிவிலி ! அடங்குதி என்றாள்

ஆனால் மந்தரை அச்சுடு மொழி கேட்டும் அகன்றிலள்; கொடிய நஞ்சை முறித்து விட்டாலும், அதன் எச்சம் சிறிதே தங்கி உடலை வருத்துவது போல கைகேயியின் காலில் விழுந்து தஞ்சமே! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் என்று மேலும் சொல்கிறாள்.

அறம் நிரம்பிய அருள் உடைய அரும் தவத்தவரே ஆனாலும் பெரிய செல்வம் வந்துவிட்டால் சிந்தனை வேறுபடும். ஆகவே, இராமன் கோசலை முதலோர் அரச பதவி பெற்றபிறகு உங்களைக் கொல்லாமல் விட்டாலும், மனத்தால் இடையறா இன்னல் இயற்றுவர்.

தவிர, தன் புதல்வன் அரசாளுவான் எனில் இப்பூமி முழுவதும் கோசலைக்கு சொந்தமாகி விடும். பிறகு உனக்கும் பரதனுக்கும் அவள் (பரிதாபப் பட்டு) உதவிய ஒரு பொருள் அல்லாமல், உனக்கென்று எதுவும் இருக்காது.

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை
வேண்டி ஈதி ஓ ? வெள்குதியோ ? விம்மல் நோயால்
மாண்டு போதி ஓ ? மறுத்தியோ ? எங்ஙனம் வாழ்தி ?

உன்னை வந்து உதவி கேட்பவர்களுக்கு என்ன பதில் கூறுவாய்? கோசலையைக் கெஞ்சிக் கேட்பாயா? இல்லை உன் நிலையை நினைத்து அவர்கள் மேல் கோபம் கொள்வாயா? தன்னிரக்கத்தால் தற்கொலை செய்து கொள்வாயா? எப்படி வாழப் போகிறாய்?

இந்த இடத்தில் தான் கைகேயி கொஞ்சம் தயங்குவதைப் பார்க்கிறாள் கூனி. அவள் தொடர்ந்து, உன் சுற்றமும் சூழலும் ஓர் உதவி கேட்டு உனை வந்தடையும் போது நீ என்ன செய்வாய்? தற்போது உன் கணவன் தசரதனுக்குப் பயந்து சீதையின் தந்தை சனகன் உன் கேகய நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்கிறான். ஆனால் அவன் இராமனுக்கு மாமன். இராமன் முடி சூடிய பின் அவன் படைஎடுத்து கேகய நாட்டை அழிக்காமல் விடுவான் என்று என்ன நிச்சயம்? மேலும் உன் தந்தைக்கு மிகப் பெரிய பகைகள் உள்ளனர். அவர்கள் போரிட முனையும் போது இவர் (கோசல நாட்டார்) சென்று உதவாரெனில் உன் சுற்றம் அழிவது உறுதி. ஆக உன் குலம் அழிய வழி வகுக்கின்றாய். கூடவே பரதனின் குல வழிக்கும் தீங்கு இழைக்கின்றாய். கெடுத்து ஒழித்தனை உனக்கு அரும் புதல்வனை. இப்பொழுது இராமனுக்கு வந்தடையும் பேரரசு அவன் குல மைந்தர் தமக்கும், மிஞ்சினால் தம்பி இலக்குவனுக்கும் தான் கிட்டும்; பிறர்க்கு ஆகுமோ? என்று முடிக்கிறாள்.

இவ் உரையைக் கேட்ட பின்பு தான் கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது; அவள் நல் அருள் துறந்தனள். ஆனால் அவளது

இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள்
இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றனவே

என்று கம்பன் கூறுகின்றார்.

ஆக, கூனி உனக்குக் கேடு வந்தது என்று கூறும் போது, எனக்கு எப்படிக் கேடு வரும் என்று எள்ளுகிறாள் கைகேயி. கோசலைக்கு வாழ்வு வந்தது என்ற போதும், இப்பொழுது இருக்கும் வாழ்வை விட என்ன பெரு வாழ்வு வந்து விடப் போகிறது என்று அலட்சியப் படுத்துகிறாள். எப்படி பரதனுக்கு முடிசூட வில்லையென்றால் அவனது வாழ்வு வீணாகிவிடும் என்னும் போதோ, நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைத்தாய் என்று அடிக்காத குறையாக அவளைத் திட்டித் தீர்க்கிறாள். உனது தன்னுரிமையும் சுதந்திரமும் பறிபோகும், நீ கோசலையை அண்டி நிற்கவேண்டியிருக்கும் என்ற போதே அவள் சற்றே நிலை தடுமாறுகிறாள். உன் சுற்றமும் சூழலும் கேடு உறுவார்கள் என்றதும் தான் முற்றிலும் மாறிவிடுகிறாள். முன்பு

எனக்கு நல்லையும் அல்லை நீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை

என்றவள், இப்பொழுது கூனியைப் பார்த்து,

எனை உவந்தனை இனியை என் மகனுக்கும்

என்று கூறுகிறாள். பின் அவளையே பரதன் முடி சூட வழி என்ன என்றும் கேட்கிறாள்.

இப்படி உளவியல் கோணத்தில் சிறந்து விளங்கும் கைகேயியின் மனமாற்றக் காட்சி, பொது நாடகத் தன்மையிலும் மேலோங்கி நிற்பதை நாம் காணலாம்:

முதலில் தூங்கிக் கொண்டிருக்கும் கைகேயியைத் தொட்டு எழுப்பும் மந்தரை (கான்று எரி நயனத்தாள், வெகுளியின் மடித்த வாயினாள்), உன் வாழ்வுக்குக் கேடு வந்து விட்டது என்ற அவளின் அறைகூறலும், அதற்குக் கைகேயி எரிச்சலுடன் எனக்கு என்ன கேடு வரும் என்பதும், பின்பு கோசலையின் வாழ்வு பற்றிய தர்க்கமும், இராமன் முடி சூடுவான் என்ற உரை கேட்ட கைகேயியின் (மந்தரை எதிர்பார்த்ததற்கு மாறான) மகிழ்ச்சியும், அவள் பரசளித்தலும், அதனை எறிந்து காலால் மிதித்தழிக்கும் மந்தரை, தொடர்ந்து வெவ்வேறு கணைகளைத் தொடுத்து கைகேயியின் மனத்தை மாற்ற முற்படுவதும், கைகேயியின் வெகுளியும்.

பின்பு அவள் மனம் மாறுவதும், என்று இப்படி தொடர்ந்து நம் கவனத்தையெல்லாம் ஒருமுகப் படுத்துகிறது இக் காட்சி. எட்ஜ்-ஆஃப்-த-சீட் சீன் என்பார்களே, அதன் முழு இலக்கணமும் இதுதான்.

0 Replies to “கைகேயியின் மனமாற்றம்”

  1. உங்கள் கம்ப ராமாயணப் பதிவுகளை, மிகத் தீவிரமாக வாசித்து வருகிறேன். அதிலும் ஒளிப்பதிவாளர் கம்பன் பதிவு, மிகச் சிறந்தது. நான் அ.ச.ஞா-வின் கம்ப ராமாயண புத்தகங்களின் வாசகன்.. அவர் கம்பனின் அறம் மற்றும் அழகியல் சார்ந்த ஒப்பியல் நோக்குகளை சுவைபட எடுத்தாளுவார்.. தங்களிடம் 21ம் நூற்றாண்டிற்கான, இளைஞரின் மன ஓட்டத்துடன், கம்பனை காண முடிகிறது..நிச்சயம் இது எனக்கு புது அனுபவம்.. மிக்க நன்றி. தங்களின் அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அகமகிழ்வேன்.
    இயலுமெனில் அழைக்கவும்: 8489137037. கம்பனைப் பேசுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.