பொட்டுப்பாட்டி

pottupaatti

அப்போதுதான் மூட்டப்பட்ட செங்கல் சூளையிலிருந்து வெளிவரும் கரும்புகையென அந்த சிறிய ஓலைக்குடிசை கரும்புகையை கக்கிக்கொண்டிருந்தது. அதனூடே இருமல் சத்தமும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடந்தவாரம் நரியங்குளத்துக் கரையில் பொறுக்கிக் கொண்டுவந்த விறகுக் கட்டின் கடைசி சுள்ளிகள்தான் எரிந்துகொண்டிருந்தன. கறிவைத்து முடிக்கும்வரை இந்த விறகு போதுமா போதாதா என்று குழம்பியவளாய் விறகுக் கட்டையும் அடுப்பையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள் பொட்டுப்பாட்டி.

முறிக்கப்பட்ட அரிசி முறுக்குத் துண்டென முன்னிரு பற்கள் உதட்டைத் துருத்திக்கொண்டிருந்தன. அதைத்தவிர பல் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ரேசனில் வாங்கப்பட்ட சேலையை பொதிந்தாற்போல் உடுத்தியிருந்தாள். உள்ளங்கை ரேகையென உடலெங்கும் சுருக்கங்கள். முன்பு பாம்படம் தொங்கிய காது பலவருடங்கள் முன்பு மகளை கல்யாணம் கட்டிக் கொடுத்த நாளிலிருந்து ஆளற்ற ஆலமர ஊஞ்சலாகிப் போனது.

வேப்பஞ்சுள்ளி புகை கண்ணெரிச்சலையும், அமட்டலையும் உண்டாக்கியது.இன்னும் அரைமணி நேரம் இந்த நரகுழிக்குள் இருந்து வெளிவந்தால்தான் ரேசனில் வாங்கிய அரிசியையும்,பரும்பில் பறித்த கும்பட்டிக்கீரையையும் இரைப்பைக்கு அனுப்ப முடியும்.

இரவு மட்டும்தான் சமைப்பாள்.காலை மதியத்திற்கு பழைய சோறுதான்.இரவு வைக்கும் குழம்பு காலையோடு சரியாய் போகும்.மதியம் எப்போதும் துவையல்தான். மதியத்திற்கு என்றாவது கத்தரிக்காயை சுட்டு புளியில் கரைத்து உண்பது மிகப்பிடிக்கும்.

சோறு வெந்துவிட்டிருந்தது.கீரையைக் கடையும் வரை இந்த விறகு கரையாமல் இருக்க வேண்டும் என்று மீண்டும் எண்ணிக் கொண்டாள்.மகன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் கஸ்டப்பட அவசியம் இருந்திருக்காது. நான்கு ஊர் தாண்டி கட்டிக் கொடுத்த ஒரே மகளால் மாதத்திற்கொருமுறை வரும்போது பருப்பு வடையோ,உளுந்து வடையோ வாங்கிவர முடியுமே தவிர விறகெல்லாம் பார்த்துக் கொடுப்பது இயலாத காரியம். என்றாவது பூவம்பழம் வாங்கி வந்தால் விருப்பப்பட்டு உண்பாள் பொட்டுப்பாட்டி.

நாள் முழுக்க வயலுக்கு களைஎடுக்க,காய்கறி பறிக்க, நடவுநட என கூப்பிட்ட வேலைக்கெல்லாம் செல்வாள். எவ்வளவு ரூபாயென்றாலும் மகள் வரும் நாளன்று மகளின் கிழிந்த மணிப்பர்சுக்குள் கசங்காமல் திணித்து விடுவாள். அன்று தங்கபாண்டி வயலில் தக்காளிக்கு களைவெட்டி வீடுவந்து சேர்வதற்குள் மழையும் வந்துவிட்டதால் வெளியில் கிடந்த விறகை அள்ளி பத்திரப்படுத்த முடியவில்லை.ரேசனில் வாங்கிய மண்ணெண்ணெய் விளக்கெரிக்கவே சரியாய் இருக்கும்.வேறு வழியில்லாமல் மண்ணெண்ணெய் ஊற்றி விறகை எரித்துக் கொண்டிருந்தாள்.

இருமலும்,புகையும் விசித்திரமாகத் தெரிய அந்த வழியாக பால் வாங்க சென்ற கண்ணம்மாள் மெல்ல குடிசைக்குள் நுழைந்தாள்.பொட்டு முனைப்போடு அணைவது போல் பம்மாத்து செய்யும் விறகுடன் ஊதி ஊதி மல்லுக் கட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏம்ளா இப்டி கெடந்து சாவுத? ஒம் மொவளுக்கு முணிஞ்சி முணிஞ்சி குடுக்கலா ஒரு மண்ணண்ண அடுப்ப வேங்குனா பேதியா எடுக்கு”

“எளா கண்ணம்மயா..பொச கெட்டவள.இந்த சனியம்பிடிச்ச மழ இப்ப வரும்னு நான் என்னத்த கண்டென்.அந்த பேதிலோவான் என்ன மட்டும் தனியா கெடந்து சாவுன்னு போட்டுட்டு பேட்டான்”

“செரிளா இந்த வெறவ வச்சா எரிச்சிட்டு இருக்க”

“போனவாரம் நரியங்குளத்துல கெடந்த அஞ்சாறு சுள்ளியள கெட்டிட்டு வந்தென்.அதயும் பேதிலபோற மழ நனச்சிப்புட்டு.என்னய்ய சொல்லுத. இனும நாளக்கி எரிக்க வெறவு பெறக்கப் போனாதான் உண்டு”

“இப்போ வெறவு பத்தலனா சொல்லு கொண்டாந்து தாறேன்.எங்க போயி நாளக்கி  பெறக்கி அழப்போற? காட்டுவள்ல வெறவே இல்லியே. நாங்களே எங்க சீமக்கருவ மரத்துவள வெட்டிப்போட்டுதான் எரிச்சிக்கிட்டு இருக்கோம்”

“எங்கயாது போணும்ளா”

என்னமும் பண்ணித்தொல”என்றவாறே கொண்டையை அவிழ்த்து முடிந்து கொண்டு வெளியேறினாள் கண்ணம்மா.

தொழுவத்திலிருந்து ஆட்டுக்குட்டிகள் இரண்டும் அவள் கடந்த பின்னும் வாசலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

சமைத்து முடித்து, குளிக்க வெந்நீர் வைக்கவும் விறகு காலியாகவும் சரியாய் இருந்தது. நாளை எங்கு சென்று விறகு பொறுக்குவதென்ற ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தாள்.

“நரியங்குளத்துல முள்ளலாம் குத்தவைக்கு விட்டுட்டானுவ. தெக்கு கொளத்துக்குப்போனா வெறவ கொண்டுவர வழியில்ல.நாலு எத்தம் தாண்டி வர முடியாது. காக்கேயன் புளியந்தோப்புக்குள்ள விடமாட்டான். இல்லனா அங்கபோயாது அஞ்சாறு சுள்ளியள பெறக்கலாம்.அப்பிடியே கிழக்கனிக்கி தங்கையா அண்ணாச்சி வெளயத்தாண்டி போவேண்டியதான்” என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

மண்ணெண்ணெய் விளக்கு காற்றில் களித்துக்கொண்டிருந்தது. வளவுக்குள் சென்று குளித்துவந்து, உணவு உண்ண தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. மனதிற்குள் பலவிதமான எண்ணங்கள் கனன்று கொண்டிருந்தன.

”எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் குடித்தே அழிக்கும் மருமகனிடம் சிக்கிச் சீரழியும் மகள்,இருபது வருடங்களாக தனியே விட்டுவிட்டு சிவனடி சேர்ந்த கணவன்,நெல் பானைக்குமேல் ஒழுகும் ஓலைக்கூரை,பெருமழை வந்தால் நனையும் ஆடு, நாளை விறகு பொறுக்கச் செல்லும் இடம், குளித்தபின்பு காலி பானையை கவிழ்த்தினோமா இல்லையா என்ற சந்தேகம்”என்று நொடிக்கொருமுறை மாறும் சிந்தனையை அந்த மண்ணெண்ணெய் விளக்கை அணைத்தால் சரியாகிவிடும் என்றெண்ணி அணைத்து தோற்றுப்போனாள்.

காலையில் எழும்பும்போது வெளி இன்னும் சற்று குளிர்ந்து இறுகியிருந்தது.ஆட்டுத்தொழுவத்தை சுத்தம்செய்து முடித்து நான்குமூலையும் பிய்ந்த ஓலைப்பெட்டியை இடுப்பில் இடுக்கியவாறு,தூக்குச்சட்டியுடன் கிழக்கு நோக்கி நடந்தாள்.ஆங்காங்கே தேங்கியிருந்த நீரில் செவிட்டுப் பாம்புக்குட்டிகள் நெளிந்துகொண்டிருந்தன. எதிரே இருந்த வேப்பந்தோப்பின் இலைகளினூடே வெளிச்சம் கிழக்கிலிருந்து ஊடுருவியது.

அரைமணி நேரத்திற்குள் தங்கையா அண்ணாச்சி தோப்பிற்கு மேற்குப்பக்கமுள்ள பரும்பை அடைந்தாள். தெற்குநோக்கி கடக்கும் கிளிக்கூட்டம் சிவலிங்கம் சோளக்கொல்லைக்குத்தான் செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். தூரத்து பனைமரத்தடியில் குட்டிமட்டையும், சில்லாட்டையும் விழுந்து கிடப்பதுபோல் தெரிய உற்சாகமாய் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவள் கண்ணைப்போல் சூரியன் பிரகாசிக்கத் தொடங்கியது.
கிடந்த இரண்டு குட்டிமட்டைகளையும், மூன்று சில்லாட்டைகளையும் பன்னருவாள்கொண்டு இலகுவாக வெட்டி, கட்டி எடுத்துக்கொண்டாள். ஒருநாள் காப்பி போடுவதற்கு போதும்.திரும்பி அந்த வழியேதான் கடக்கவேண்டும் என்றெண்ணி அருகில் இருந்த பாறையில் வைத்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
தங்கையா தோப்பின் வடக்குவேலியில் இருந்த கள்ளிச்செடியை கூர்மையாய் நோக்கிக்கொண்டு சென்றாள். ஒருகள்ளியின் இருகிளைகள் காய்ந்துபோய் நின்றன. அருகில் சென்று வெட்ட வசதியாக நின்றுகொண்டு முதல்வெட்டை வெட்டினாள்.

“யாரே?”என்ற குரல்கேட்டு திடுக்கிட்டாள்.குரல் எந்த திசையிலிருந்து வந்தது என்று அவளால் ஊகிக்கமுடியாததால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அடுத்த வெட்டை வெட்டினாள்.ஒருகிளை முறிந்து கீழே விழுந்தது.

“யாரும்மா அது?”என்று ஒரு கருத்த உருவம் புதரிலிருந்து வெளிவந்தது.

“ஒண்ணும் இல்லயா.அஞ்சாறு வெறவு பாக்கலாம்னு வந்தேன் பாத்துக்கிடுங்க. இந்த கள்ளி எளவு பட்டுபோயி நிக்கிலா அதான் வெட்டலாம்னு பாத்தேன்”என்று பாசாங்காய் சிரித்தாள்.

“இங்கலாம் ஒண்ணும் வெட்டமுடியாது. நீ பாட்டுக்கு வெட்டிட்டு பேருவ நாளக்கி ஆடுமாடுலாம் இதுவழியாதான் உள்ள வந்து பயிர மேயும்.எந்த ஊரு ஒனக்கு”என்றவன் பீடியை பற்றவைத்தான்.

“இந்தா மேலூர்தான்யா. கடலுமணி தெரியுமா? நாட்டாம அவனோட ஒண்ணுவிட்ட சித்தி”என்று பெருமையாக சிரித்துக்கொண்டாள்.

“ஓஹோ..கடலு எனக்கு நல்ல பழக்கந்தான்.அதுக்காவலாம் வேலிய வெட்டமுடியுமாம்மா?”

“சரிய்யா நான் இனும வெட்டல என்று சோற்று வாளியையும், பெட்டியையும் எடுத்துக்கொண்டு விருட்டென்று பின்வாங்கினாள்.

“இந்தாம்மா வெட்டுன கள்ளிய தூக்கிக்க”

“கிழக்கனிக்கி பேட்டுவரும்போது எடுத்துக்கிடுதேன்”என்றவளுக்கு அந்த சத்தம் தூரத்தில் கேட்டது.“பட் பட் பட் பட் பட்”

“கோவப்படாதங்க பெரியாளு.கடல போட்டுருக்கென் பாத்துக்கிடுங்க.சும்மாவே தண்ணி இல்லாம கெடந்து சாவுதேன்.இதுல இந்த கெடக்காரனுவ வேற எங்க வேணும்னாலும் ஆட்டப்பத்திக்கிட்டு வந்துருதானுவ. நீயும் இந்த வேலிய வெட்டிட்டா அவனுவளுக்கு நல்ல வசதியாப்போவும்”என்றதும் அவளுக்கு அவன்மேல் பரிதாபம் ஏற்பட்டது.

“அய்யய்யோ தெரியாம வெட்டிட்டன்யா. எளவு காடே தீஞ்சுபோயி கெடக்கு.நேத்துதான் மழையே வந்துருக்கு.ஆனாலும் எரிக்க வெறவு கெடைக்கமாண்டிங்கு.கொளத்துல சும்மா வளருத கருவமரத்தக்கூட ஏலத்துக்கு  விட்டிருதானுவ. எங்களப்போல எடம் இல்லாதவிய என்னய்யா செய்ய”

“பட் பட் பட் பட் பட்”

“கெழக்கோடி அந்த ஓடக்கிளபோங்க நெறைய பட்ட மஞ்சணத்தி நிக்கி.பாத்து வெட்டுங்க. ஈரத்துக்கு பூச்சி பொட்டைய இருக்கும்”

“சரிய்யா”என்றவாறே நடக்க ஆரம்பித்தாள்.பசி எடுக்கவே சாப்பிட்டுவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டு பின்பக்கம் திரும்பினாள்.அவன் வேலியை சரி செய்துகொண்டிருந்தான்.

“எய்யா தொட்டில தண்னி கெடக்கா சாப்புடணும்”

“கெடக்கு போயி சாப்புடுங்க.எளவு கொஞ்சம் சப்புனு கெடக்கும் பாத்துக்கிடுங்க”

“ஊர்க்கெணத்து தண்ணியே அப்டிதானய்யா இருக்கு”

“பட் பட் பட் பட் பட்”

“யாரோ மரம்தான் வெட்டுகிறார்கள்”என்று எண்ணியவாறே கிணற்றின் அருகில் அமர்ந்து கீரையைத் தொட்டுக்கொண்டு கஞ்சியை குடித்து முடித்தாள். ஒருவேளை ஓடைக்குள்ளிருந்து யாரோ மரம் வெட்டுவதால்தான் இந்த ஒலி வந்துகொண்டிருக்கிறதோ என்று திடுக்கிட்டவளாய் எழும்பி வேகமாக ஓடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சத்தம் சமீபத்தில் கேட்டது. நினைத்ததுபோலவே இருவர் காய்ந்த மஞ்சணத்தி மரத்தை வெட்டிக்கொண்டிருந்தனர். கணநேரத்தில் நம்பிக்கையிழந்தாள்.

அவர்களும் இவளைப் பார்த்துவிட்டனர்.”யாரோ கெளவி மாதி தெரியுதுல.வெறவு பெறக்கதான் வந்துருப்பானு நெனக்கென்”

“யய்யா எனக்கு அஞ்சாறு சுள்ளியள தந்தியனா புண்ணியமாப்போவும்.எரிக்க வெறவே இல்ல.”

“நாங்களே காடெல்லாம் சுத்தி இப்பதான் இத கண்டுபிடிச்சோம். செரி செரி பெரிய கட்டயள நாங்க எடுத்ததுபோவ சுள்ளியள நீ வேணும்னா கெட்டிக்க”

சரியென்று சுள்ளிகளை கட்டுவதற்கு ஏற்றாற்போல் வெட்டி கட்டத்தொடங்கினாள்.

“இந்தா பெரியாளு தெக்கோடி பேறாத. இப்பதான் ஒரு கண்ணாடி விரிசன் அங்கோடி போச்சி”

“யம்மாடி இந்த எளவுவளு மழ பெஞ்சதும் வெளிய வந்துருக்கும்”என்று அவன் சொன்ன இடத்திற்குச் செல்லாமல் எதிர்பக்கமாய் நின்று வெட்டிக்கொண்டே பேச்சுக்கொடுத்தாள்.

“தம்பியளுக்கு எந்த ஊரு?நா இங்கோடி பாத்ததில்லையே”

“தண்ணியூத்தும்மா”

“ஏ பாயி மக்கா பதுனஞ்சி மயிலு இருக்கும அங்க இருந்தா வந்திய?”

“பெறவு என்னய்யம்மா வயித்து பொழப்புக்கு. இதவெட்டி செங்கமால்ல போட்டாதான் இன்னய பொழப்பு.இந்த வயசான காலத்துல நீங்க எதுக்கு இப்டி கெடந்து கஸ்டப்படுதிய?”

“ஒன்ன மாதியொரு மொவன் இருந்துருந்தா நா ஏன்யா இங்க வந்து கெடந்து சாவப்போறேன். ஒத்த மொவளயும் கெட்டிகுடுத்துட்டேன். பெறவு என்னய்ய. எரிக்க வெறவு எப்டியும் பெறக்கித்தான ஆவேண்டியிருக்கு”

வெட்டிக்கொண்டிருந்த அந்த பெரியமரம் கள்ளியை கிழித்துக்கொண்டு விழுந்தது.

நுண்ணிய பரிவு அவர்களையறியாமல் அவள்மேல் படர்ந்தது.இடையிடையே ஏதேதோ பேசிக்கொண்டனர். மணியும் உச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலையில் மழைவருமென பேசிக்கொண்டனர்.ஒருவாரத்திற்கான விறகு சேர்ந்துவிட்டது என்று ஊகித்துக்கொண்டவள் அவசர அவசரமாக கட்டத்தொடங்கினாள். அவர்கள் சாப்பாட்டிற்கு தங்கையா கிணற்றுக்கு செல்லவேண்டும் என்று பேசிக்கொள்ள, அவள் விறகைக் கட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானாள்.

தலையில் கட்டு அழுத்தாமலிருக்க அருகிலிருந்த வடலியில் குருத்தோலைக்கு அடுத்த ஓலையை வெட்டி அடியில் வைத்துகட்டினாள். கட்டி முடித்து அசைத்துப்பார்த்தாள். வீடுவரை கொண்டுசெல்வது சற்று கடினம் என்றே தோன்றியது.என்றாலும் வேறு வழியற்றவளாய் அவர்களிடம் தூக்கிவிடச் சொன்னாள். வலதுகையில் பெட்டிக்குள் காலிதூக்குச்சட்டியை இட்டு இடுப்பில் வைத்துக்கொண்டாள். கட்டின் பாரத்தை கருவிழியின் பரபரப்பில் அறியமுடிந்தது.

தலைக்கு அழுத்தாதவாறு சற்று சாய்த்து பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஏதோ ஒருகிளையிலிருந்து இருஎறும்புகள் அவள் கன்னத்தில் இறங்கின. வலது கை பெட்டியையும்,இடதுகை விறகு கட்டையும் பற்றியிருக்க பதறிப்போனாள்.பெட்டியை கீழே மெல்ல வைத்துவிட்டு சொறிந்துகொண்டாள்.” எளவு எங்கருந்து வந்துது சனியன்”.இப்போது குனிந்து பெட்டியை எடுக்கவேண்டும். அவர்கள் வேறு கடந்துவிட்டனர்.” இந்த எளவு பெட்டிய என்னத்துக்கு எடுத்துட்டு வந்தேன்”என்று தனக்குத்தானே விசனித்துக் கொண்டாள்.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெல்ல அமர்ந்து பெட்டியைப்பற்றினாள். மேலே எழும்புவது தோரணமலையின் உச்சிப்படிக்கட்டை ஏறுவதுபோல் இருந்தது. மெல்ல வந்தவழியே நடக்க ஆரம்பித்தாள். கள்ளியின் இருகிளைகளைக் காணவில்லை.அது இல்லாமல் போனது நல்லதுதான் என்று எண்ணிக்கொண்டாள்.

குட்டிமட்டையும் சில்லாட்டையும் கட்டிய கட்டு பாறைமேல் கிடந்தது.அதை எப்படி எடுத்துச் செல்வது என்று குழம்பியவள் இந்தக்கட்டை வீட்டில் போட்டுவிட்டுவந்து பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு அதைக்கடந்து சென்றாள்.

காலுடைந்த நத்தையென நகர்ந்து ஊர் எல்லையை அடைந்தாள்.

“எங்கெயோ வசமா மாட்டிருக்க கெளவி”என்றவாறு கடந்த சரசிற்கு பதில் சொல்ல திராணியற்றவளாய் வீடு நோக்கி நடந்தாள்.வேறொரு சமயமாக இருந்திருந்தால் சரசை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாள்.

வீட்டு முற்றத்தில் விறகுக்கட்டை பொத்தெனப்போடவும் ஆடு இரண்டும் கத்தத் தொடங்கின.அப்படியே அருகில் இருந்த முளைக்கம்பில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் எழும்பி உள்ளே சென்று எடுப்பது துன்பமாயிருந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் பிய்த்துக்கொண்டு செல்வதுபோல் இருந்தது.சற்று நேரம் கழித்து மெல்ல குனிந்தவாறே வீட்டிற்குள் சென்று பழைய கஞ்சியை நீரோடு கலந்து குடித்தாள்.உடல் நடுக்கம் சற்று அடங்கியதுபோல் இருந்தது. அப்படியே படுத்துக் கொண்டாள்.

இன்னும் ஒருமுறை செல்லவேண்டும் என்றெண்ணவும் சோர்ந்துபோனாள். சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்து ஆட்டிற்கு இரைவைத்துவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டாள். ஊரைக் கடக்கவும் மேற்குவானில் இடியும் மின்னலும் பலத்துக்கொண்டது.எந்த நேரமும் கிழக்கே இறங்கிவிடும் என்று பதறியவள் வேகமாக நடந்தாள். கருமேகங்கள் அவிழ்த்து விடப்பட்ட கன்றென கிழக்கு நோக்கி விரைந்தன. அவள் பாறையை அடையவும் மழை பலக்கவும் சரியாய் இருந்தது.ஊளைக்காற்றோடு மழை பலத்துக்கொண்டது. அருகில் இருந்த வேப்பமர அடியில் ஒதுங்கினாள். சுழற்றி சுழற்றி அடித்த மழையில் முழுதும் நனைந்துவிட்டாள்.

சில மணிநேரம் நீடித்தது மழை. மழை வலுகுறையவும் கட்டைத் தூக்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினாள். அவள் உடலோடு வழிந்த மழைநீரில் சில துளிகள் கண்ணீரும் சேர்ந்துகொண்டது.

வழியெங்கும் நீர் பெருகியிருந்தது. ஓடைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெல்ல நடந்து வந்து வீட்டுவாசலை அடைந்தாள். முந்தைய விறகுக்கட்டு நீரில் முழுவதும் மூழ்க இன்னும் சுண்டுவிரல் அளவே பாக்கியிருந்தது.

மழையில் நனைந்த ஆடுகள் இரண்டும் கத்தத் தொடங்கின.

0 Replies to “பொட்டுப்பாட்டி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.