அசோகமித்திரனின் செகந்திராபாத் உலகம்: முடிவிலாப் பயணம்

அசோகமித்திரனின் செகந்திராபாத் கதைகள் ஒரு புள்ளியை நோக்கி குவிகின்றன: அப்பாவின் மரணம்.

செகந்திராபாத்தில் ஏறக்குறைய தன் பதின்ம வயதுகள் வரை வளர்ந்து தந்தை இறந்தபின் சென்னை வாழ்க்கையை அசோகமித்திரனின் ஆரம்பிக்கிறார். அவரின் பெரும்பாலான செகந்திராபாத் கதைகள் தன் இள வயதில் அங்கு வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவங்கள், நினைவுகளின் பிரதிபலிப்பாக இருப்பதை படிப்பவர்களால் உணரமுடியும். அதன் அலைகள்தான் ஏறக்குறைய 30+ சிறுகதைகளாகவும், சில குறுநாவல்களாகவும், ஒரு நாவலாகவும், நெடுங்கட்டுரையாகவும் வெளிப்படுகின்றன. இந்த கதைகளின் கரு ஒரு வளரும் சிறுவனின் நேரடி வர்ணனைகளாக செதுக்கப்பட்டாலும், அடிநாதம் தன் தந்தையின் இழப்பைத்தான் சொல்லிச் செல்கிறது. இந்தக் கட்டுரை சிறுகதைகளை மட்டும் பார்க்கிறது, கவிதா பதிப்பகம் வெளியிட்ட அசோகமித்திரன் சிறுகதைகள் எனும் இரண்டு பெருந்தொகுதிகளில் உள்ள செகந்திராபாத் கதைகள் மற்றும் சென்ற இதழில் சொல்வனத்தில் வெளிவந்த ’இரண்டு விரல் தட்டச்சு’-ம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஜெயமோகன் இலக்கிய முன்னோடி வரிசையில் அசோகமித்திரனின் கதைகளை ஒரு துளிக்குள் விரியும் உலகம் என்பார். இன்னும் சற்று யோசித்தால் சரியான ஒரு கணத்தில் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரால் வண்ணங்கள், கோணங்கள் அமைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களாக அந்தக் கதைகள் ஒளிரும். ஒரு பெரிய ஓவியத்தின் சிறு சிறு பகுதிகளாக அருகில் நின்று பார்த்தால் தென்படும் அந்தப் புகைப்படங்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது இணைந்து ஒரு முழு உருவமாக மாறும் திறமை அசோகமித்திரனுக்கு அமைந்திருக்கிறது.

அவர் காலத்தில் இதைப் போன்றே மத்திய குடும்ப உலகத்தை எழுதிய இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் அதை மிக ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அசோகமித்திரன் படைப்புகள் அவர்களின் நேர் மாறான ஒன்று. வாசகனை நோக்கி சவால் விடுபவை. அடிநாதம் கிடைத்தது போல் இருக்கும், ஆனால் கண்ணாடிகளால் ஆன அறையைப் போல பிம்பமா, உண்மையான உருவமா என்று மறுவாசிப்புக்குத் தள்ளிவிடும். இவரின் கதை சொல்லும் பாணியை இதுவரை வெற்றிகரமாக பின்பற்றியது அ.முத்துலிங்கம் மட்டுமே.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோர் பலதரப்பட்ட தடங்களில் எழுதிச்சென்றபோது, அசோகமித்திரன் ஒரு பனித்துளியையே பிரம்மாண்டமாக மாற்றினார். சென்ற இதழில் சொல்வனத்தில் கல்யாணராமன் குறிப்பிட்டது போல “Eternity is contained in the moment”என்பார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு, அவருடைய கதைத் தருணங்களில் பொதிந்திருக்கும் வரலாறும், சமூக அமைப்பும் அரசியலும் தெரியவரும்.”

இந்தக் கதைகளில் ஒருவனுக்கு மட்டுமே இடம். அவன் சந்திரசேகரனாக இருக்கலாம். ‘நான்’-ஆக இருக்கலாம். அவன் அதில் தனக்கேயான உலகில் மற்ற கதை மாந்தர்களைப் பார்த்து, பழகி, அனுபவங்களை, விருப்பு, வெறுப்புகளை பதிவு செய்கிறான். அவர்கள் பல ரகம். அவன் அக்கா, மாரிஸ், சில்வியா, அவள் தங்கை லாரா, வஹாப், முனீர், டாக்டர் புருஷோத்தம், அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட பசு மாடு, எருமை மாடு, ஹரிகோபால், ராமகிருஷண ராஜு என்று பலரும் அவனை சுற்றும் அணுத்துகள்களாகிறார்கள்.

ஆனாலும் அவன் அவர்களுக்கு சாதாரணன். சில பாத்திரங்களால் பாதிக்கப்படுபவன். அவர்களில்லாமல் அவன் இல்லை. அவன் இல்லாமல் அவர்கள் முழுமை அடைவதில்லை. ஆனால் அவன் ஊரை விட்டுப் போனால் இரண்டு நாட்களில் மறக்கப்படக்கூடியவன். அவனின் நட்பை அனைவரும் ஏற்கிறார்கள். இவன் போட்டிக்கு வரமாட்டான், தன்னை, தன் சொல்லை என்றும் மீறி செய்யமாட்டான என்ற சில பள்ளி நண்பர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்கள்தான் இந்தக் கதையின் அச்சுக்கள்.

அவனுக்குத்தான் இவர்களோடு எத்தனை அனுபவங்கள்… சில்வியாவோடு நடனம் ஆடுகிறான். வஹாப் கூட படம் பார்க்கிறான். பள்ளியையே பார்த்திராத முனீருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறான். ராமகிருஷ்ணராஜூவோடு ஏறக்குறைய ஊரை விட்டு ஓடி சினிமாவில் சேரும் முடிவு எடுக்கிறான். சுல்தான் பஜாரில் நிஜாம் அரசாங்க காவல் நிலையம் அருகில் இந்திய தேசியக்கொடியை ஏற்றுகிறான். ‘கியா பை’ என்று பேசுகிறான். பல இழப்புகளை சந்திக்கிறான். சில்வியா, ரைட்டர் மாமா, வெங்கடகிருஷ்ணராவ், தன் வீட்டில் வளரும் மாடு ஆகியோரின் இறப்புகள் நாயகனின் தந்தையின் அகால மரணத்தை நோக்கித் தயார் செய்கின்றன.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு இரு நண்பர்கள் போலத்தான் வெளிப்படுகிறது. இருவரும் அவரவர் இடங்களில் நின்று கொண்டு உறவைக் காக்கிறார்கள். அப்பா நாயகனை வழக்கமான அப்பாக்களைப் போன்று கண்டிப்பதில்லை. மகனும் அப்பாவின் பொறுமையை சோதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பா கதைகளில் மிகவும் தேவைப்படும் இடங்களில் மட்டும் வந்து போகிறார். அவனது வளர்ச்சியை மௌனமாக அங்கீகரிக்கிறார். மிக அழகானவளாகக் கருதப்படும் நிஜாமின் மருமகள் பெயரை மகன் சட்டென்று சொல்லும்போது அவர் பார்க்கும் பார்வையில் தன் மகனைப் புதிதாகப் பார்க்கும் ஆர்வம் பொதிந்திருக்கிறது.

இந்தக் கதைகளில் ஒரு பொதுத்தன்மையைக் கவனிக்கலாம். அனைத்து நிகழ்வுகளும் கதாநாயகனின் பார்வை வழியே நடக்கிறது. அவன் பார்வை வழியேதான் அவன் அப்பா நமக்கு அறிமுகமாகி, பல சம்பவங்கள் வழியே அவரது பாத்திரம் செதுக்கப்பட்டு, அவன் வார்த்தைகளிலேயே அவரது  இறப்பையும் அறிகிறோம்.

ஆனால் விதிவிலக்காக ’தந்தைக்காக’ கதையில் வரும் தந்தை-மகன் உறவில் மகன் தந்தையைப் பார்க்கும் கோணம் ஒரு மர்ம முடிச்சாகக் கொண்டு சென்று சட்டென்று கடைசியில் படிப்பவரை பாபுவின் பார்வையிலிருந்து நரசிம்மா பார்வைக்கு மாற்றும் திறமையான கதை.

சில கதைகள் மேலோட்டமான வரிகளைக் காட்டி செல்லும்போது அதில் பொதிந்திருக்கும் ஆழம் மீண்டும் படிக்கும்போதுதான் தூண்டிலோடு நெடு நேரம் காத்திருந்து சிக்கிய மீனைப் போன்று மாட்டும்.

சில்வியா-வில் இறுதியில் லாரா-வின் மாறுதல். இது ஒரு வரியில் செய்தி படிப்பது போல் வந்து, படிப்பவரும் அதைக் காணாமல் கடந்து போகும் அபாயம் உண்டு. ஏன் அவள் அப்படி நாயகனை முறைக்கிறாள் என்று அப்போது நிகழும் சம்பவத்தோடு தொடர்பு செய்தால் கிடைக்கும் அர்த்தங்கள் பல.

அதைப் போலவே ’மாறுதல்’ கதையில் வஹாபிற்க்கும், கதாநாயகனுக்கும் பல வருடங்கள் கழித்து நடக்கும் உரையாடல்.
கதையில் மின்னல் போல வந்து மறையும் ஒரு பாத்திரம் அவர்கள் வயதானபின் அவர்கள் இருவருக்கும் ஒரு பாலமாக மாறுகிறாள். கதையில் இவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்த படத்தின் தலைப்பு கதாநாயகனுக்கு அந்த சமயத்தில் நினைவுக்கு வருவது போல், தன்னை மறந்துபோன (அல்லது மறந்துவிட்டதாகக் காட்டிக்கொள்ளும்) வஹாபிற்க்கு, அந்தப் பாத்திரத்தைப் பற்றிக் கேட்டவுடன் தன்னைப் பற்றிய நினைவு வந்திருக்கலாம் என்ற கோணத்தை மறைத்து வைக்கிறார்.

சில்வியாவின் சோகம் இரண்டு கதைகளில் காட்டி செல்கிறார். அவள் மணக்க இருந்த இராணுவ வீரன் இங்கிலாந்து சென்று திரும்பாமல் அவளது வசந்தகாலம் கடந்ததை ஆரவாரமில்லாமல் சொல்லி அந்த இழப்பை பிரம்மாண்டமாக்குகிறார்.

‘நானும், ஜே. ராமகிருஷணராஜுவும் சேர்ந்து எடுத்த படம்’ ஒரு laugh riot என்று தைரியமாக சொல்லலாம். அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டம் போடுவது, தனக்கு வேண்டிய வேஷம் கிடைக்காததில் கோபப்பட்டு நெருக்கமான மேஜையில் இடிபட்டு, ஏறக்குறைய மின்விசிறியில் மோதிக்கொண்டு வெளியேறுவது, ராமகிருஷ்ணராஜு-வின் வெற்று சவடால்களில் மனம் மயங்கி பத்திரத்தில் கையெழுத்துப் போட சம்மதிப்பது என்று பல இடங்களில் பதின்ம வயதின் விடலைத்தனம் வெளிப்படும் இடங்களில், ராமகிருஷ்ணராஜுவின் அம்மாவின் செயலில் அவள் தன் மகன் மீது வைத்திருக்கும் மதிப்பையும் கதையில் ஒரு செய்தி போல வெளிப்படுத்தும் விதம் என.

முனீரின் நட்பு சாதாரணமாக ஆரம்பித்து அதன் உச்சத்தை அடையும் இடம். முனீர் அவன் முதலாளியோடு தந்தை இறந்துபோனபின் பார்க்க வருகிறான்:

“முனீர்!” என்று சந்தோஷத்துடன்தான் அவனருகே சென்றேன். ஆனால் அவனருகே சென்றவுடன் இருவரும் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதோம்.”

107-வது சொல்வனம் இதழில் வந்த ‘இரண்டு விரல் தட்டச்சு’ கதையில் அப்பாவை இழந்ததால் இழந்த வாழ்க்கையை நாயகன் இரண்டு விரலால் மட்டுமே வாழ்க்கை முழுக்க தட்டச்சுவதை சொல்லி செல்வதன் வழியே நமக்குக் கடத்துகிறார். அப்பா உயிருடன் இருந்திருந்தால் தட்டச்சு பயிற்சி பெற்று முன்னேறியிருக்கலாம். ஆனால் அவரின் அகால மரணம் பயிற்சியை சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

மிஸஸ் சிம்ஸன் ஏமாற்றப்பட்டவள் (அவள் பார்வையில்). நாயகனும் அப்பாவின் மரணத்தால் தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய வாழ்க்கையை இழக்கிறான். மிஸஸ் சிம்ஸன் காலம் முழுக்க இன்ஸ்டிடியூட் நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திலும், நாயகன் குடும்பக் கவலையில் உழல்வதால் இரண்டு விரலால் தட்டச்சிக் கொண்டிருக்கிறான். மிஸஸ் சிம்ஸனும், நாயகனும் கதை முடிவில் தங்கள் இழப்புகளால் ஒரே கோட்டில் இணைகிறார்கள்.

திரு. சிம்சனாவது அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால் அப்பா யாரிடமும் சொல்லாமல் விடைபெறுகிறார் என்ற கோணத்தையும் வைக்கிறார்.

செகந்திராபாத் கதைகள் வரிசையில் வராத ‘புதுப்பழக்கம்’ சிறுகதையிலும் இதைப் போன்றே ஓர் இழப்பை ஒரு வரியில் சொல்லி செல்கிறார். கதாநாயகன் தார் ரோடு போடும் தொழிலாளி. அவன் கையில் எப்போதும் மண்ணெண்ணை வாசம் அடிக்கிறது. ஒரு நாள் தென்றல் போல் அதே குழுவில் வேலை செய்யும் பெண் இவனோடு சாப்பிட உட்காருகிறாள். அப்போது அவள் இந்த எண்ணெய் வாசத்தைப் பற்றி சொல்ல, அவனுக்கு கையில் மோர் ஊற்றி சுத்தம் செய்தால் அந்த வாசனை போகும் என்று தெரிந்து அவ்வாறே செய்கிறான். இரவில் அவளை நினைக்கிறான். ஆனால் அந்தப் பெண் அந்தக் குழுவில் நிரந்தரமாக வேலை செய்வதில்லை. பின் அவள் நினைவையே அவன் மறக்கிறான். என்றாலும் மோரினால் கை சுத்தம் செய்வது நிற்கவில்லை என்று முடித்துவிடுவார்.

அசோகமித்திரனின் கதைகளில் வரும் நகைச்சுவை வரிகளை dry humor வகை என்று சொல்லலாம். தீவிரமாக கதை நிகழ்ந்து கொண்டிருக்கும்போது சட்டென்று வந்துவிழும் வரிகள் பல:

“பணம் இல்லேன்னா பொணம்கூட மதிக்காது, ஐயர்” என்று டாக்டர் சொன்னார். எனக்கு அப்போதே பிணம் ஏன் மதிக்க வேண்டும் என்று தோன்றியது.’ (டாக்டருக்கு மருந்து)

“நான் நாற்காலி மீதும் ஜி. வரலஷ்மி தரையிலும் நின்றால்?”

“ஒவ்வொரு காட்சியிலும் நீ நாற்காலி மீது நிற்பதைப் பார்த்தால் எல்லாரும் சிரிக்கமாட்டார்களா?”’ (நானும் ஜே. ராமகிருஷ்ணராஜுவும்…)

கதாசிரியரின் இளவயது இழப்பைச் சொல்லிச் செல்லும் செகந்திராபாத் கதைகளில் எல்லா நிகழ்வுகளும் ஒரு கனவாகத்தான் கலைந்து போகின்றன. ராமகிருஷ்ணராஜுவின் ஊர்விலகல், டெரன்ஸ், மாரிஸ், லாராவின் விளையாட்டு பருவம் முடிந்து வேலைக்குப் போகும் தருணம், ராம்லால் காணாமல் போய்விட்டதாகக் கருதப்படும் தன் மனைவியோடு நடத்தும் இல்வாழ்க்கை, மீரா-தான்சேன் சந்திப்புப் பற்றிய தப்பான வரலாற்றுக் குறிப்புடன் போய் சேர்ந்துவிட்ட தன் அக்காவைப் பற்றிய குறிப்பு என்று அதிகமாக அலட்டாமல் சொல்லி சென்று அதில் வாசகனை மூழ்க அடிக்கும் திறமை என்று பல உதாரணங்களைக் காட்டலாம்.

இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் சரியாக வரிசைப்படுத்தினால் ஒரு கதாபாத்திரத்தின் வளர்ச்சி அடியாழத்தில் நடந்து கொண்டிருக்கும். அது சிறிது சிறிதாக வளர்ந்து, தன்னைத் தயார் செய்து கொள்கிறது, தன் தந்தையின் மரணத்தை நோக்கி. அதுதான் ’டாக்டருக்கு மருந்து’ மற்றும் ‘இரண்டு விரல் தட்டச்சு’ கதைகளில் ஒரே வரியில் அப்பா மருத்துவமனையிலிருந்து திரும்பி வரவில்லை என்ற செய்தித்தாள் பாணியில் படிக்கிறது. செகந்திராபாத்தில் தன்னை வழியனுப்பி வைத்த முனீரின ஸ்பானர்களோடு சென்னை வந்து சேர்ந்து முதிர்ச்சியடைகிறது.

அனைத்து செகந்திராபாத் கதைகளுமே இழப்பைப் பேசி அதன் பின் வாழும் வாழ்க்கையின் மாற்றங்களை மிக சாதாரணமான வார்த்தைகளில் சொல்லி செல்கின்றன. ஆனாலும் கதையில் வருபவர்கள் அந்த இழப்புகளை ஏற்றுக் கொண்டு தன் வாழ்க்கையை வாழ முன் நகர்கிறார்கள்.

அசோகமித்திரன் எழுத்தில் உணர்ச்சி வசப்படுபவரல்ல. ஆனாலும் க.நா.சுவின் இறப்பிற்கு இரங்கல் எழுதியபோது இறுதி வரிகளில் ‘எனக்கு தேவையான தருணத்தில் என் அப்பா இறந்தார். இப்போது எனக்குத் தேவையான தருணத்தில் க.நா.சு இறந்திருக்கிறார். இரண்டுமே என்னைப் பொறுத்தவரையில் அகாலம்’ என்று பதிவு செய்யும்போது செகந்திராபாத் கதைகள் முழுமை அடைகின்றன

oOo

நண்பர்களுக்கு படிக்க வசதியாக, செகந்திராபாத் கதைகள் பட்டியல் கீழே (2000 வருடம் வரை + சென்ற சொல்வனம் இதழ்): சிறுகதைகள் மட்டும். குறுநாவல்கள் பட்டியலலில் ‘இன்ஸ்பெக்டர் காந்திமதிநாதன்’ தவிர்த்து வேறு நினைவில் இல்லை.

 1. ஐநூறு கோப்பைத் தட்டுக்கள்
 2. சுந்தர்
 3. தொப்பி
 4. விண்ணப்பம்
 5. மாறுதல்
 6. வண்டிப்பாதை
 7. நானும் ஜே.ராமகிருஷணரஜுவும் சேர்ந்து எடுத்த சினிமாப் படம்
 8. அவள் ஒருத்திதான்
 9. கதர்
 10. தந்தைக்காக
 11. நடனத்துக்குப் பின்
 12. பங்கஜ் மல்லிக்
 13. உத்தர ராமாயணம்
 14. அழகு
 15. அலைகள் ஓய்ந்து…
 16. பைசா
 17. விடுமுறை
 18. கொடியேற்றம்
 19. ஹரிகோபாலின் கார்பன் பிரதி
 20. அப்பாவின் சிநேகிதர் (அப்பாவின் இறப்பிற்குப் பின் நீட்டிக்கும் உறவு)
 21. சாயம்
 22. முனீரின் ஸ்பானர்கள்
 23. சில்வியா
 24. ஆறாம் வகுப்பு
 25. டாக்டருக்கு மருந்து
 26. வசவு (அப்பாவின் இறப்பிற்குப் பின் நீட்டிக்கும் உறவு)
 27. மறதி
 28. சாமியாருக்கு ஒரு மணப்பெண்
 29. நரசிம்ம புராணம்
 30. மீரா-தான்சேன் சந்திப்பு
 31. கோபம்
 32. இரண்டு விரல் தட்டச்சு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.