எம். வி. வெங்கட் ராம்

வருடம் 1994.

1993 ம் வருடத்திய சாகித்ய அகாதமி விருதுகள் அப்போதுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழில் எம்.வி. வெங்கட்ராமுக்கு, அவருடைய  “காதுகள்” என்ற படைப்புக்காக அந்த விருது கிடைத்து இருந்தது. அவரைப் பேட்டி கண்டு, அவரைப்பற்றியும் அந்த நாவலைப் பற்றியும் எழுதியிருந்தேன்.

m.v.venkatramபட்டு சரிகை, நெசவு தொழிலாகக் கொண்ட சௌராஷ்டிர குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் மணிக்கொடி உள்பட பல  பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தார். பின்னர்  எழுதுவதில் உள்ள ஆர்வத்தில் எழுத்தையே முழுநேரத் தொழிலாகக்கொண்டார். புதினம், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பலவிதங்களில் இவர் எழுதிக்குவித்திருந்தார். மாகத்மா காந்தி, லியோ டால்ஸ்டாய் என்று எழுதிய வாழ்க்கைச் சரித்திரங்கள் அநேகம். நான் பேட்டி கண்ட 1994 வரை 15 சிறுகதைகளும் 7 நாவல்களும் எழுதியிருந்தார்.

தொடர்ந்து கட்டுரைகளே அதிகம் எழுதிக்கொண்டிருந்த வெங்கட்ராம், நாவல்கள் எழுதுவதில் அத்தனை வேகம் காட்டவில்லை. “அரும்புகள்” என்ற நாவலுக்கு அடுத்து,  சுமார்  5 வருடம் புனைவு ஏதும் எழுதாமல் மௌனம் காத்தார். அது அவர்  தனக்குத் தானே விதித்துக்கொண்ட  மௌன விரதம். அது ஒரு படைப்பின் மௌனம் என்றும், நல்ல படைப்புகள் உருவாவதற்கு அப்படி ஒரு மௌனம் தேவை என்றும்  அன்று  என் பேட்டியில்  அதைக் குறிப்பிட்டார். இருந்தாலும்  அவர்  கதைகளுக்கு பெரிதாக வணிக ரீதியில் ஏதும் வரவேற்பு இருக்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்தது. அது தன் தன்னம்பிக்கையை  ஓரளவு பாதித்தது என்றும் சொன்னார்.  இப்படி 5 வருடம் இருந்த மௌனத்திற்கு பின்னர் பிறந்த  கதைதான் “காதுகள்”.

சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும்  கொடுத்தது. ” தாமதமேயென்றாலும்,  இத்தனை வருட என் உழைப்புக்கு பலன் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. என் படைப்புக்கு இது ஒரு பெரிய அங்கீகாரம் என்றார்.

அவருடைய முதல் நாவல் “நித்யக்கன்னி” மகாபாரதக் கதையின் ஒரு சிறு புள்ளியைக் கருவாகக் கொண்டு உருவானது. குழந்தைகள் பிறந்தாலும் தான் எப்போதுமே கன்னியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய பெண்ணை விசுவாமித்திரர் மணந்து கொள்ளும் சிறு கதையை வைத்து பின்னப்பட்ட ஒரு அதீத கற்பனை கதை அது. கதைக் களன் அதீதக் கற்பனையாக இருந்தாலும், தற்கால சமூகப் பின்னணியைக் கருத்தாகக் கொண்டு  எழுதியிருந்தார். பெண்கள் சம உரிமையை அந்தக் கதை மூலம் தான் வலியுறுத்துவதாகக் கூறினார். “நம் சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையும், பெண்கள் முன்னேற்றமும் மிக அவசியம் என்று நினைத்துதான் அந்தக் கதையையே உருவாக்கினேன். பெண்களுக்கு எதிராக  எத்தனையோ  அநீதிகள் நம் சமுதாயத்தில் நடக்கின்றன. ஒரு எழுத்தாளராக என்னால் செய்ய முடிந்தது அதைப் பற்றி எழுதி விழிப்புணர்வை உண்டாக்குவதுதான்.”

வெங்கட்ராமின் பெரும்பாலான கதைகளில் வறுமை மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். காதுகள் கதையிலும் அப்படியே. நித்தியக் கன்னி ஒரு அதீத கற்பனை என்றால், காதுகளும் அதுபோல் நம்ப முடியாத சம்பவங்களால் புனையப் பட்டது.

ஏன் இப்படி வித்தியசமான அதீத கற்பனைகளில் ஒரு ஆர்வம் என்று அவரைக் கேட்டேன். “என் ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசமான உத்திகளை கையாளுவது எனக்குப் பிடிக்கும். நித்தியக்கன்னி கதை மகாபாரத்தத்தில் ஒரு சிறு புள்ளிதான். ஆனால் அதைப் பெரிதாக புனைவது எனக்குப் பிடித்தது. அதில் நிறைய கவிநயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தேன்”  என்றார். வேள்வித்தீ, மற்றும்  அரும்புகள்  கதைகளும்  சமுதாயப் பிரச்சனைகளை அலசும் களன்கள்தாம். அரும்புகளில் நிறைய மனோ தத்துவப்  பின்னணியில் புனைந்திருந்தார்.

காதுகள் புனைவின் உரைநடையில் நிறைய கனவு அல்லது மாயத்தோற்றம்  கலந்து இருக்கும். கதையின் நாயகன் மகாலிங்கம் ஒரு முருக பக்தன். அவனுக்கு திடீரென்று காதுகளில் யாரோ பேசும் குரல்கள் கேட்க ஆரம்பித்து அவனுக்கு மிகவும் தொல்லை கொடுத்தது. அவனுடைய முருக பக்தியிலிருந்து அந்தக் குரல்கள் அவனைப் பிடித்து அகற்ற முனைவதாக அவனுக்குத் தோன்றுகிறது. முருகன்தான் அவனுக்கு தெய்வமும்  ஆசானும். முருகனிடமிருந்து தன்னைப் பிரிக்கத் திட்டமிடும் அந்தக் குரல்கள் அவனுக்கு மிகவும் கவலையைக் கொடுக்கிறது. ஒருவழியாக தைரியமாகவும், மிக மன  உறுதியோடும்  அந்தக் குரல்களிலிருந்து எப்படி தன்னை விடுவித்துக்கொண்டான் என்று கதை முடிகிறது.

இந்தக் கதை ஏதோ  ஒரு உருவகம் போலவோ, ஒருவரின் உண்மை அனுபவத்தை சித்தரிப்பது போலவோ  இருக்கிறதே என்று அவரைக் கேட்டேன்.

“உங்களுக்கு அதிலென்ன சந்தேகம்?” என்று பட்டென்று திருப்பிக் கேட்டார். ” ஏன் அந்தக் கதையில் நான் சந்தித்த சங்கராச்சாரியார் போன்ற சந்நியாசிகள் பெயரைக் கூட குறிப்பிட்டு இருக்கேனே,” என்று சொல்லிவிட்டு, சற்று நேரம் கழித்து,  “ஆமாம் அது என் கதைதான். அதில் வரும் அத்தனைக் கஷ்டங்களையும் நான் அனுபவித்து இருக்கிறேன். நான் 35 வயதாக இருக்கும்போது அந்தக் கஷ்டம் எனக்கு வந்தது. சுமார் 20 வருடம் தொடர்ந்து கஷ்டப்பட்டேன். என் முருகன் கருணையால்தான் இன்று நான் உங்கள் முன்பு சாதாரணமாகவும் நலமாகவும் இருக்கிறேன். அந்த முருகன் உதவியால்தான் நான் பட்ட கஷ்டங்களை விவரிக்க இன்று உயிரோடு இருக்கிறேன்.” என்று தன் அனுபவங்களை  விவரித்தார்.

தன் காதில் விழுந்த குரல்கள் நிஜம், தன் கற்பனையில்லை  என்பதில் அவருக்கு சந்தேகமேயில்லை. தன் அமானுஷ அனுபவத்தை தன் கதையில் விவரிக்கிறார். ஆனால் சில வாசகர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஒரு செவி சம்பந்தமான ஒரு பிரமை அல்லது மனத்தோற்றம் என்று அவருடன் வாதாடுவார்களாம். அவருடைய சக எழுத்தாளர் ஒருவர் இந்த நிலையை ஒரு ஆன்மீக வன்முறை என்று குறிப்பிட்டார். மற்றொரு எழுத்தாளர்  இது ஒரு எதிர்கால நிகழ்வு என்று குறிப்பிட்டார். இன்னுமொருவர் இது ஒரு மன வக்கிரங்களின் பிரதிபலிப்பு என்றார்.

இவர்கள் எல்லோருக்கும் வெங்கட்ராமின் பதில்: ” இவை எல்லாமுமாகவே இருக்கலாம். ஆனால் நான் பல்வேறு  சன்னியாசிகளுடன் கலந்து கொண்ட ஆலோசனைகளைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன். நான் எத்தனை கஷ்டப்பட்டேன்; என் அனுபவம் என்ன என்று எனக்குதான் தெரியும். பிறர் அனுபவங்களைப் பற்றி இப்படி விமர்சிப்பதற்கு முன் சற்று யோசிக்க வேண்டும்.”  என்றார்.

இந்தக் கதையில் தீய சக்திகள் என்று குறிப்பிடும்போது “காளீ’ என்று இவர் குறிப்பிட்டுள்ளது அன்று சர்ச்சைக்குள்ளானது. அதைப் பற்றியும் இவர் விளக்கினார். “நான் காளி என்று குறிப்பிட்டது காளி என்ற தெய்வத்தையல்ல. பலர் இப்படி தவறாக நினைக்கிறார்கள். இன்றும் பல தென்னிந்திய  கிராமங்களில் தீய சக்திகள்  அப்படி குறிப்பிடப்படுவதுண்டு. அதைத்தான் நான் குறிப்பிட்டுளேன் என்று விளக்கி, தான் குறிப்பிட்டது  தீய சக்திகளைத்தான் என்று அழுத்தமாக சொன்னார். அவருடைய “உயிரின் யாத்திரை” நாவலும் இப்படி ஒரு அமானுஷ அனுபவத்தை களனாகக் கொண்டதுதான்.

வெங்கட்ராம் 2000 ம் வருடம் ஜனவரி மறைந்தார்.

பி.கு: அந்த நாளிதழில் இந்தக் கட்டுரை வெளியான விதம் எனக்குப்  பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. என் பத்திரிகையாளர் தொழிலில் ஒரு அனுபவ  பாடமாகவும் அது  அமைந்தது. மிகப் பழமையானதும், அருமையான ஆங்கிலத்துக்கு உதாரணமாகவும் கருதப்பட்ட அந்த நாளிதழில் இந்த என் கட்டுரை மிகவும் மோசமாக எடிட் செய்யப்பட்டு இருந்தது. நான் சரியாக எழுதியிருந்த பல வார்த்தைகள் அச்சு கோர்க்கும்போது அடிபட்டு எக்கச்சக்க எழுத்துப்பிழைகளுடன் வெளி வந்தது எனக்கு நம்ப முடியாத அதிர்ச்சி. பிழைகளை சுட்டிக் காட்டி ஆசிரியருக்கு நான் உடனே கடிதம் எழுதினாலும், யானைக்கும் அடிசறுக்கும் கதையாக பெரும் ஊடகங்களிலும் இப்படி தவறுகள் நடக்கும் என்று நான் புரிந்து கொண்டது இந்த அனுபவத்தில்தான்.

0 Replies to “எம். வி. வெங்கட் ராம்”

  1. ஏம் வி. வெங்கட்ராமை நீங்கள் பேட்டி கண்டீர்கள் என்பதே ஒரு பெருமை அருணா. தீவிர எழுத்துக்குச் சொந்தமானவர்.அவரது அனுபமும் அமானுஷ்யத்தைப் பற்றி இருக்கிறது. என்னால் நம்ப முடிகிறது. சீரான கட்டுரை. மிக மகிழ்ச்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.