ஸ்பிதிக்கு ஒரு பயணம் – 1

“கயிறு அறுந்து பலர் இறந்து போனார்கள்,” என்றான் அமித், கீழிருந்த பள்ளத்தாக்கைக் காட்டி. “இந்தச் சாலை கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, பல தொழிலாளர்கள் உயரத்திலிருந்து விழுந்து இறந்தார்கள். அந்த மரணங்களைத் தவிர்க்க இங்கே ஒரு கோவில் கட்டியாக வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் சொன்னார்கள். அப்படித்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டது.” அமித் காரை கோவிலின் முன் நிறுத்தியிருந்தான். அங்கு ஏற்கனவே இருந்த பல கார்களின் வரிசையில் எங்கள் காரும சேர்ந்து கொண்டது. வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்று பத்திரமான பயணம் வேண்டி வணங்குகின்றனர். சுற்றுலாப் பயணிகளில் சிலர் கோவிலுக்குப் போகின்றனர், வேறு சிலர் மலைச் சாலையின் விளிம்பில் நின்று கண் முன் விரியும் இயற்கை அழகை ரசிக்கின்றனர்.

மலைப்பாதை திரும்புமிடத்தில் கோவில் இருந்தது. சாலையைச் சற்றே அகலப்படுத்தி கோவிலுக்கு இடம் கொடுத்திருந்தார்கள். அது சிறிய கோவில், சுண்ணாம்பு அடித்து வெண்மையாய் இருந்தது. அதன் கோபுரம் குறுகி, உச்சத்தில் உள்ளச் சிறிய கொடிக்கம்பத்தில் இருந்த காவிக்கொடி காற்றில் தொடர்ந்து படபடத்துக் கொண்டிருந்தது. கோவிலினுள் ஒரு பளிங்குச் சிலையும் பூசாரியும் மட்டும் தான் இருக்க முடியும். அவர் வெளியே வந்து தேங்காய்த் துண்டங்களை பிரசாதமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். மலைச்சரிவின் விளிம்பில் நின்றிருந்தது அந்தக் கோயில். அது ஒரு அடி பின்னால் நகர்ந்தாலும் மலையிலிருந்து செங்குத்தாய் பள்ளத்தாக்கில் விழ வேண்டியதுதான். “இந்தக் கோவிலைக் கட்டியதும், துர்மரணங்கள் நின்றன, சாலையை எந்தப் பிரச்சினையும் இன்றிக் கட்டி முடித்தனர்,” என்றான் அமித்.

நான் சில கிலோமீட்டர்கள் தொலைவில் உயர்ந்தெழுந்த மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இருபுறமும் முடிவற்று நீளும் இமயமலைத் தொடர் அது. விண்ணை,முட்டும் இருண்ட மலைகளின் சிகரங்களை வெண்பனி போர்த்திருந்தது. என் பாதங்களுக்குக் கீழ், ஆழத்தில் ஒரு குறுகிய சமவெளி, அதில் ஒரு நீர்க்கோடாய் சட்லெஜ் நதி மௌனமாய் நீண்டது – அதன் ஓசைகள் கேட்காத உயரத்தில் நாங்கள் இருந்தோம். என் வலப்புறம் வளைவுகளாய் முறுக்கப்பட்ட சாலை பல மலைகளைக் கடந்து முனை திரும்பி மறைந்தது. அமித் சாலையைக் காட்டி, “இதில் இன்னும் சில கிலோமீட்டர்கள் பயணித்தால் நாம் மறுபுறம் போய் விடுவோம்,” என்றான்.

Spiti_Valley_Sutlej_India_Himachal_Pradesh_Tours_Travels

“இந்த மலைகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன்.

“ரூபி பாபா சரணாலயம் இருக்கிறது. அங்கிருந்து ரூபி பாபா கணவாய் வழியாக நாம் மூத் செல்லலாம். பின் சமவெளியில் உள்ள கிராமங்களில் ஒன்று அது. அங்கிருந்து காஜா இரண்டு மணி நேரப் பயணம்தான்,” என்றான் அமித்.

பின் சமவெளிக்கு நடந்து செல்லும் பாதை அது, ஆனால் நாங்கள் மலைகளைச் சுற்றிச் செல்லும் சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். அது ரீகாங் போ, கல்பா, காப், நகோ, தபோ, தன்கர் மடாலயம் வழி காஜா சென்றடையும்.

ரீகாங் போ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். வானின் கரிய மழை மேகங்கள் பனிச் சிகரங்களில் மறைகின்றன. மெல்லிய இருளில், சுற்றிலும் இருந்த மலைகள் உயரே எழுந்து அச்சுறுத்துகின்றன, நெருங்க முடியாத உயரத்தில் இருக்கின்றன என்ற அச்சம். பனிச் சிகரங்களில் ஒன்றைக் காட்டி, “அங்கே பனிப் பொழிவு இல்லாதபோது மழை பெய்து கொண்டிருக்கும்,” என்கிறான் அமித். நான் அண்ணாந்து பார்க்கிறேன், மங்கலாய் ஒரு வெண்திரையில் சிகரம் நிழலாடுகிறது. ட்ரெக்கிங் செல்பவர்கள் இந்த மழையில் சிக்கிக் கொள்ளும்போது என்ன செய்வார்கள்?

இன்னும் சில கிலோமீட்டர்கள் சென்றதும் சட்லஜ் மீதிருக்கும் பாலத்தைக் கடக்கிறோம். வலப்புறம் திரும்பி பஸ்பா நதி சட்லஜைச் சந்திக்கும் இடத்தை நோக்கி மலைச்சாலை உயர்கிறது. இங்கே தெள்ளிய சட்லஜும் பஸ்பாவும் பால்போல் நுரைத்துச் சங்கமித்து, மலைச்சரிவில் ஒற்றை நதியாய் பயணிக்கின்றன.

இப்போது நாங்கள் ஒரு அணையைக் கடக்கிறோம். இங்கு அணை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. காற்று புழுதியாயிருக்கிறது, தரை சேறும் சகதியுமாய். மண்ணைப் பெயர்த்தெடுத்துச் செல்லும் கனரக இயந்திரங்களின் ஓசையில் நதி அடங்குகிறது. சுற்றிலும் ஓயாத இரைச்சல். கட்டுமானப் பணியாளர்கள் பாறைகளை இயந்திரங்களைக் கொண்டு துளையிட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர். ராட்சத இயந்திரங்கள் உடைந்த கற்களைத் தூக்கிச் சென்று வேறொரு இடத்தில் குவிக்கின்றன. தட்தட் என்று சீரான கதியில் டீசல் ஜெனரேட்டர்கள் புகைந்து கொண்டிருக்கின்றன. பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தென்னிந்தியர்கள். அவர்கள் ஆடைகள் வியர்வையில் நனைந்திருக்கின்றன. சிலர் மஞ்சள் வண்ண ஹெல்மட் அணிந்திருக்கின்றனர், சிலர் தலையில் ஒரு அழுக்கு கைக்குட்டையைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். புழுதியிலிருந்து தப்பிக்க நாங்கள் காரின் கண்ணாடியை உயர்த்திக் கொள்கிறோம். இந்த இடத்தைக் கடக்கவே இருபது நிமிடங்கள் ஆகின்றன. அணைக்கட்டுமான ஓசைகள் மெல்ல மெல்ல அடங்கி மௌனத்தின் அமைதி எங்களை உள்ளிழுத்துக் கொள்கிறது. எப்போதுமிருக்கும் இயற்கையின் ஒலிகள் கேட்க ஆரம்பிக்கின்றன: பறவைகளின் பாடல்கள், மரங்களில் இலை அசையும் ஓசை, நதியின் சலசலப்பு.

இன்னும் சில கிலோமீட்டர்கள் சென்றதும் அமித் காரை நிறுத்துகிறான். எங்களைக் கீழே இறங்கி வரச் சொல்கிறான். சுற்றிலும் யாருமில்லாத தனிமையில் நான் அவனருகே போய் நிற்கிறேன். “பொய் சொல்லக்கூடாது. உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும். பார்க்க முடியவில்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். பார்த்தால் மட்டும்தான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்,” என்கிறான். எனக்குக் குழப்பமாக இருக்கிறது.

“அங்கே பாருங்கள்,” என்கிறான் அவன், வெகுதொலைவில் தெரியும் பனி போர்த்த சிகரங்களைக் காட்டி. “நடுவில் உள்ள மலையைப் பார்த்தீர்களா? அதன் உச்சியைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். என்ன தெரிகிறது?” நான் உற்றுப் பார்க்கிறேன், எதுவும் பிடிபடுவதாயில்லை. “வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை,” என்கிறேன். “நடுவில் உள்ள மலையின் உச்சியை கவனமாகப் பாருங்கள்,” என்று மீண்டும் வலியுறுத்துகிறான் அமித். இப்போது மறுபடியும் அந்த மலையைப் பார்க்கிறேன், இப்போதுதான் ஒரு வித்தியாசமான காட்சி தென்படுகிறது. அந்த மலைச்சிகரத்தின் உச்சியில் செவ்வண்ணம் படர்ந்திருக்கிறது, அது வியப்பால் விரியும் என் கண்முன் கன்னங்கரேல் என்று மாறுகிறது. என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கு முன்னரே அது தூய வெண்ணிறமாய் மாறி சில நொடிகளில் பழையபடி சிவக்கிறது. இந்த நிறமாற்றம் திரும்பத் திரும்ப நடப்பதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன் நான்.

என் கண்கள் விரிந்திருப்பதையும் திறந்த வாய் மூடாதிருப்பதையும் பார்த்து நான் அதிசயிப்பதைக் கண்டு கொள்கிறான் அமித். முகம் தளர்ந்து கொடுத்துச் சிரிப்பில் அவன் முகம் பிரகாசிக்கிறது. “அற்புதம், இல்லையா?” என்று கேட்கிறான். (பின்னர், அன்று மாலை, கல்பாவில் ஒரு விடுதியில் ஓய்வெடுக்கும்போது அங்குள்ள சுற்றுலாப்பயணிகளுக்கான குறிப்பேடு ஒன்றில், மலை மீதிருக்கும் பாறையில் உள்ள கனிமங்கள்தான் இந்த நிறமாற்றத்துக்குக் காரணம் என்று படிக்கிறேன்). கல்பாவை அடையும்போது மாலை மணி நான்கிருக்கும். HPTDC விடுதியிலிருந்து பார்க்கும்போது கின்னர் கைலாஷ் சிகரங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. மேகங்கள் அவற்றை முழுமையாக மறைக்கும்வரை அவற்றின் மாறும் வண்ணங்களை மிகத் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். “வாருங்கள், அருகிலுள்ள கிராமம் செல்வோம். உங்களுக்கு இந்தப் பயணம் ரசிக்கும்,” என்று அழைக்கிறான் அமித்.

அவனுக்கு வயது இருபத்து ஐந்து இருக்கலாம், ஹிமாசலத்தைச் சேர்ந்தவன் என்று எளிதில் சொல்லிவிடலாம். நல்ல நிறம், ஒடிசலான உடலமைப்பு, களைப்பில்லாமல் எப்போதும் உற்சாகமாக இருக்கிறான், ஆரோக்கியமானவன். கட்டை மீசை, நீள்வட்ட முகம் எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றம். அவனது சுபாவத்தில் இரண்டு இயல்புகள் தனித்துத் தெரிகின்றன: இந்தப் பகுதிகளுக்கு அவன் அடிக்கடி காரோட்டி வந்தாலும் மலைகளைப் பார்த்து அஞ்சினான் என்பது ஒன்று, அவன் ஒரு குமார் சானு ரசிகன் என்பது இரண்டாவது. இவற்றில் முதலாவது குணத்தை நான் விரும்பினேன், எப்போதும் இல்லையென்றாலும் பொதுவாகவே அவன் வெகு நிதானமாக காரோட்டினான். ஆனால் இரண்டாவது இயல்பு  ஒரு பிரச்சினையாக இருந்தது – என்னால் குமார் சானுவின் குரலை எப்போதுமே சகித்துக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் காரில் மீண்டும் மீண்டும் அவன் பாடல்களைதான் அமித் பாட விட்டான்.

Chhatru_pitstop_Kunzum_Spiti_river_HP_India_Tourism_Travelers_Valley_Mountains

“உங்களுக்கு இந்தப் பயணம் ரசிக்கும்” என்று அமித் சொன்னதை நம்பி அவனோடு காரில் சென்றது தப்பாய் போயிற்று, சற்று நேரத்திலேயே அது ஒரு பயங்கர அனுபவமாக மாறி விட்டது. சூரியன் மெல்ல மெல்ல தூரத்தில் உள்ள மலைகளில் விழுந்து கொண்டிருக்கிறான். சாலை குறுகியதாக இருக்கிறது, உயர்ந்து எழும் மலையின் சரிவை வெட்டி அது அமைக்கப்பட்டிருக்கிறது. வலப்புறம் மலை எங்கள் மீது சாய்ந்து விழுந்துவிடும்போல் அதன் சுவர்கள் நெருக்கின,  இடப்புறம் மிகப்பெரும் சரிவு. சாலையின் வளைவுகள் மிகக் குறுகியவை, எச்சரிக்கையாக அவற்றில் திரும்ப வேண்டும். ஒவ்வொரு முறை சாலையோடு திரும்பும்போதும் ஒரு சிறு சறுக்கல்தான் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் இருக்கிறது என்பதை சந்தேகத்துக்கிடமில்லாமல் உணர முடிந்தது.

சிமெண்ட் மேடை போலிருந்த ஒரு இடத்தில் அமித் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான், “இதுதான் சூசைட் பாயிண்ட்.” நானும் ஜாக்கிரதையாகக் காரை விட்டு இறங்கி, பாதையின் விளிம்புக்குச் சென்றேன். கீழே பார்த்தபோது தலை சுற்றினாலும் நாங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. விமானத்திலிருந்து கீழே பார்ப்பதைப் போன்ற அனுபவம் அது, ஆனால் நாம் வெளியே இருக்கிறோம். இங்கிருந்து கீழே விழுந்தால் தரை தட்டும்வரை எதுவும் தட்டுப்படாது. செங்குத்தான சரிவு, மரம், தரை என்று எதுவும் கிடையாது. குறைந்து வரும் வெளிச்சம், ஆழத்துக்கு இன்னும் பல கிலோமீட்டர்களைச் சேர்த்தது. என் கால்கள் துவண்டு நான் இரு தப்படி பின்னகர்கிறேன். “யாராவது செத்துப் போக வேண்டும் என்று விரும்பினால் அவனை இங்கே அழைத்து வர வேண்டும். ஒரு முறை பார்த்தால் போதும், திரும்பி வர மாட்டான்.” அமித்தின் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் இரக்கமற்று இருக்கிறது.

அடுத்த நாள் காலை எந்த விளையாட்டுத்தனமும் இல்லாமல் எதிரிலிருந்த ஒரு மலையைக் காட்டி, “அதில் கருப்பாய் உள்ள இடங்களைப் பார்க்க முடிகிறதா?” என்று கேட்கிறான். விடிந்ததும் கல்பாவிலிருந்து கிளம்பியிருந்தோம், டீ குடிக்க  இரண்டு மணி நேர பயணத்துக்குப் பின் அப்போதுதான் காரை நிறுத்தியிருந்தோம். டீயும் கையுமாக மலையை நான் உற்றுப் பார்க்கிறேன். அதன் உருவம் மலை போலில்லை, எங்கிருந்தோ கொண்டு வந்த மண்ணைக் கொட்டியது போலிருந்தது. உயரமாக இருந்தாலும் கொஞ்சம் உரக்கச் சத்தம் போட்டாலே உதிர்ந்துவிடும் போலிருந்தது. “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மலை நொறுங்கி விழுந்தது,” என்கிறான் அமித். “ஒரு மிலிட்டரி கான்வாய் அப்போது அதையொட்டியிருந்த சாலையில் போய்க் கொண்டிருந்தது. எல்லா டிரக்குகளையும் மண் மூடியது, இப்போது அந்த டிரக்குகள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன என்று தெரியவில்லை. அவற்றில் சில டிரக்குகள் பெட்ரோல் எடுத்துச் சென்று கொண்டிருந்தன. அவற்றிலிருந்து கசிந்த பெட்ரோல் மெல்ல மெல்ல மேற்பரப்புக்கு வந்திருக்கிறது, அதுதான் இப்போது பார்க்க கருந்திட்டுக்களாகத் தெரிகிறது. இந்த மலையில் வயிற்றில் இருபது டிரக்குகள் இருக்கின்றன”. அதனுள் இருந்தவர்களுக்கு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.

வானம் நன்றாக வெளுத்து சூரியன் பிரகாசிக்கத் துவங்கிவிட்டது. கல்பாவின் பச்சை மலைகளை விட்டு வந்தாயிற்று. கின்னாரின் ஃபிர்களையும் ஆப்பிள் மரங்களையும் விட்டு வந்தாயிற்று. சுள்ளெனச் சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களைப் பதப்படுத்திய பச்சை போயிற்று, இப்போது ஸ்பிதியின் உயரங்களின் பாலையுள் பிரவேசிக்கிறோம். பொட்டல் கற்களாலும் உதிரும் மண்ணாலும் அமைந்த மலைப் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட இல்லை. அனைத்து திசைகளும் சூரிய வெப்பத்தின் தகிப்பைப் பிரதிபலிக்கின்றன.

“ஸ்பிதி செல்லும்போது நான்  பெற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை,” என்கிறான் அமித். “அவர்கள் பயந்து விடுவார்கள். அமித்து, அந்தப் பக்கம் போகாதே, சிம்லா கங்ரா பகுதிகளில் மட்டும் வண்டியோட்டு என்று கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஒரு டிரைவராய் இருந்துகொண்டு இங்கே வர மாட்டேன் என்றெல்லாம் நான் சொல்ல முடியாது, இல்லையா?”

“நீ ஸ்பிதி செல்வதில்லையா?” என்று கேட்கிறேன்.

“ஒவ்வொரு சீசனிலும் நான்கைந்து டிரிப் அடிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் உயிரோடு வீடு திரும்புவேனா மாட்டேனா என்று பயந்து கொண்டுதான் செல்கிறேன். எப்போது இங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படும் என்பது கடவுளுக்குதான் தெரியும். மலைகள் நொறுங்குகின்றன, ‘நாலா’ என்றழைக்கப்படும் காட்டாற்று வெள்ளம் மிகப் பெரிய டிரக்குகளைக்கூட அடித்துக் கொண்டு சென்று விடுகின்றன. வீட்டுக்குப் போனதும்தான் நான் ஸ்பிதிக்குப் போயிருந்தேன் என்பதைச் சொல்வேன்.”

தண்ணீர் சாலையைச் சந்திக்கும் இடம்தான் நாலா. பல இடங்களில் சின்னஞ்சிறு ஓடைகளைக் கடந்து சாலை பாலமேறிச் செல்கிறது. ஆனால் மலைகளின் சில பகுதிகளில், பாலம் கட்ட முடியாத இடங்களில், மலையின் ஓடைகள் சாலையில் விழுந்துத் தெறித்து சட்லஜ் நதியை நோக்கிச் சரிவுகளில் புரண்டோடுகின்றன. சில நாலாக்கள் மிகக் குறுகலான நீர்க்கோடுகளாய் நெளிந்து சாலையைக் கடக்கின்றன, சில நாலாக்கள் வறண்டிருக்கின்றன. ஆனால் மலையின் உச்சியில் பனி வேகமாய் உருகும்போது இந்த ஓடைகள் நீர்ப்பெருக்கெடுத்து இறங்குகின்றன, அவை அபாயமானவை. வழக்கமாகவே சாலையை நீர் கடக்குமிடம் குண்டும் குழியுமாக இருக்கும், தரையையும் ஜல்லிக்கற்களையும் ஓடையின் நீர் எப்போதோ அரித்திருக்கும்.

டீ குடித்தபின் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயணித்தபின் அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் வரிசையில் நாங்களும் சேர்ந்தோம். “டிங்கு நாலாவாக இருக்க வேண்டும்,” என்கிறான் அமித். முக்கியமான நாலாக்களுக்குப் பெயர் உண்டு என்பதை அப்போதுதான் நான் அறிகிறேன். “தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். இந்த இடத்தில்தான் ஒரு முறை இரண்டு நாட்கள் சிக்கிக் கொண்டேன். அப்போது ஒரு டம்ளர் டீ இருபது ரூபாய்க்கு விற்றார்கள்.”

அந்த இடத்தில் இரண்டு நாட்கள் இருப்பது எனக்கு சந்தோஷமான விஷயமல்ல. “இப்போது எத்தனை நேரம் இங்கிருக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்கிறேன். “யாருக்குத் தெரியும்,” என்று சொல்லிவிட்டு அமித் காரை விட்டுக் கீழிறங்கி வரிசையாய் நிற்கும் வாகனங்களைக் கடந்து நடந்து சென்று மறைகிறான். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நாலா எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. அமித் திரும்பி வருவதற்காகக் கவலையுடன் காத்திருக்கிறேன். சற்று நேரம் சென்றபின் அமித் திரும்பி வருகிறான், என்னைப் பார்த்ததும் கையசைத்து கூப்பிடுகிறான்.

சாலையின் திருப்பத்தில் நிற்கும் அமித்திடம் செல்கிறேன். எங்களுக்கு முன், இருபது மீட்டர் தொலைவில் டிங்கு நாலா, சாலையில் ஓடும் ஓடை பத்து மீட்டர் அகலம் இருக்கும், அதன் மையத்தில் ஒரு ஆழமான பள்ளம், அதில் இறங்கினால் கார்கள் வெளியேறுவது கடினம். “ஒருமுறை இப்படித்தான் இங்கு ஒரு கார் சிக்கிக் கொண்டது. தண்ணீர் காரை அடித்துப் போய்விட்டது,” என்கிறான் அமித். அச்சுறுத்தும் சம்பவங்களை சமயத்துக்குத் தகுந்த மாதிரி சொல்வதற்குச் சேகரித்து வைத்திருக்கிறான் போல. மண்வாரி இயந்திரங்கள் அழைத்து வரப்படுகின்றன, அவை சாலையோரம் இருக்கும் பெரிய பெரிய கற்களைக் கொண்டு அந்தப் பள்ளத்தை மூடுகின்றன. இப்போது வாகனங்கள் நகரத் துவங்குகின்றன. சீரற்றுப் பரப்பப்பட்டிருக்கும் கற்களின்மேல் ஒரு குடிகாரனைப் போல் தள்ளாடிக்கொண்டு அந்த நாலாவைக் கடக்கிறது எங்கள் கார்.

கப் வருமுன்னர், எங்களுக்கு இடப்புறம் இருக்கும் ஒரு பாலத்தின் முன்னர் காரை நிறுத்துகிறான் அமித். நேராகப் போகச் சாலையில்லை, சட்லஜ் பிறக்கும் மலைதான் எதிரே வழியை மறித்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறது. இடப்புறத்திலிருந்து வரும் ஸ்பிதி பாலத்தின்கீழ் சட்லஜ் நதியைக் கலக்கிறது. காற்று உலர்ந்திருக்கிறது, புழுக்கத்தில் வியர்க்கிறது. சாலையெங்கும் புழுதி. நான் பாலத்தில் நடக்கிறேன், அதன் மத்தியில் நின்று திரும்பி என் எதிரே இருக்கும் மலையை வெறித்துப் பார்க்கிறேன். அந்த மலையின் மறுபுறம் சட்லஜ்ஜின் பெயர் வேறு. அந்த மலையின் மறுபுறம் வேறொரு தேசம்: சீனா.

‘இந்த மலையின்மீது ஏறி இதன் உச்சிக்குப் போனால், நாம் திபெத்தியர்கள் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்,” என்கிறான் அமித். “ஆனால் நம் ராணுவம் நம்மை அதற்கு அனுமதிக்காது”.

நம்மையும் வேறொரு, முழுமையாகவே மாறுபட்ட நாகரிகத்தையும் பிரித்து நிற்கும் மலை இது என்ற புரிதல் வினோதமான உணர்வெழுச்சியைத் தருவதாக இருக்கிறது. வேறொரு மண், வேறொரு பண்பாடு, வேறொரு உலகம்.

நம் பார்வைக்கு இவை அனைத்தையும் மறைத்து நிற்கும் சில மலைகள், இரு அரசுகள்.

(தொடரும்)

0 Replies to “ஸ்பிதிக்கு ஒரு பயணம் – 1”

Leave a Reply to xavierCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.