நெருப்பும் புகையும் கண்டறிவான்

“வீட்டில் இருக்கும் அதிகம் விரும்பப்படாத பொருட்களை விரும்பத்தக்‌கதாக மாற்றுவோம்” என்ற இந்த சிந்தனையை மையமாக வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதே நெஸ்ட் லாப்ஸ் (Nest Labs) என்ற ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனம்.

இதே சிந்தனையை மையமாகக் கொண்டு இவர்கள் முதன்முதலில் உருவாக்கியதே ‘நெஸ்ட் லர்நிங்க் தெர்மோஸ்ட்டாட்’ (Nest Learning Thermostat) எனப்படும் வெப்பநிலை சீர்நிலைக் கருவி. இதன் விலை $249 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. எதற்கு இவ்வளவு அதிகமான விலை என்று எண்ணும் போது, இது பயன்படுத்தப்படும் விதத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு, மின்னாற்றல் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள். இதனால் இந்த நிறுவனம் அடைந்த லாபம் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. இதன் தலைமை நிர்வாக அதிகாரியான தோனி ஃபாடெல் (Tony Fadell), ஆப்பிள் நிறுவனத்தில், ஐபாட் வடிவமைப்பு குழுவில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்துறையில் இவ்வாறான கவனிப்பை ஏற்படுத்திய இந்த நிறுவனம் அடுத்ததாக வடிவமைத்தது என்ன என்ற நம் கேள்விக்கான பதில் தான் ‘நெஸ்ட் ப்ரொடெக்ட்’ (Nest Protect) என்ற புகையைக் கண்டறியும் கருவி (Smoke Detector).

Nest_CO_Smoke_Ceiling_Google_Detection_Alarm

வெண்மை நிறத்தில் வட்ட சதுரமாக, கவனத்தை கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த கருவியைப் பார்க்கும்போது, சூரியகாந்தி பூவின் அழகான பாங்கு நம் நினைவிற்கு வருகிறது. மற்ற தெர்மொஸ்ட்டட்களைப் போலவே இவையும் அளவிற்கு அதிகமான புகையோ அல்லது கரிமம் ஓருயிரகம் (carbon monoxide) வாயுவோ உணர்ந்தறியப்படும்போது, நம்மை எச்சரிக்கின்றன. இது தான் இக்கருவிகளின் முக்கிய வேலை ஆகும். எனவே பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஒரே காரணத்தினால் மட்டும் இதை $129 விலை கொடுத்து வாங்கிவிட முடியுமா என்ன!? அப்படியானால் இதன் சிறப்பம்சம் தான் என்ன? சிறிதளவு அபாயம் உணரப்பட்டால் கூட அலறும் விதமாக இவ்வகை கருவிகள் அமைக்கப்படுவதால் , பல வீடுகளில் இக்கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

‘நெஸ்ட்’ இல் நிலைமை மிகவும் மோசமாக இல்லாத போது எச்சரிக்கை அழகான குரலில் தரப்படுகிறது. எனவே இவ்வாறான குரல் எச்சரிக்கையின் மூலம் பயன்படுத்துபவர் பதற்றம் இல்லாமல் நிலைமையை கையாள வழிவகை செய்யப்படுகிறது. மேலும் இதன் பாட்டரிகள் செயலிழக்கும் நிலைமையின் போது கூட பதறவைக்கும் வகையில் ஒலி எழுப்பப்படுவதில்லை. மாறாக இதன் நடுவில் வட்டவடிவத்தில் எரியும் ஒரு விளக்கின் நிறமே பாட்டரிகளின் நிலையை நமக்கு தெரிவிக்கின்றது. பச்சை நிறத்தில் எரிந்தால் சரியாக உள்ளதென்றும், மஞ்சள் நிறத்தில் இருப்பின் பாட்டரி மாற்றப்படவேண்டுமென்றும் நாம் அறிகிறோம்.

‘நெஸ்ட்’ இல் இருக்கும் பல பயன்பாடுகள் நம்மைக் கவர்கின்றன. உதாரணத்திற்கு காற்றில் புகையோ அல்லது கார்பன் மொனாக்சைடு அளவு அதிகமாக இருந்தாலோ நம்மை எச்சரிப்பதோடு நின்று விடாமல் புகை மற்றும் நீராவியை வித்தியாசப்படுத்தி அறிந்தும், இணைய இணைப்பின் மூலம் வீட்டில் எந்த அறையில் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அறிந்தும் நம்மை ஒரு தோழைமையுடன் பதற்றமில்லாத மனித குரலில் எச்சரிப்பது இதன் சிறப்பம்சம். மேலும் இரவில் இதமான விளக்காகவும் இது விளங்குகிறது. இதில் உபயோகப்படுத்தப்படும் உணரிகளும் (sensors) அவைகளை இயங்க செய்யும் வழிமுறைகளும் (algorithm), அதனால் பெறப்படும் தகவலும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளன. எனவே நெஸ்ட்  நிறுவனம் தனது முதல் கருவியான தெர்மோஸ்டட்டைப் போலவே ‘நெஸ்ட்’ இன் உருவாக்கத்‌தையும் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

நெஸ்ட் லாப்ஸ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி ஃபாடெல், ஆப்பிள் நிறுவனத்தில் ஐபாட் மற்றும் ஐஃபோன் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சொந்த வீட்டின் கட்டமைப்பில் மிகுந்த அக்கறை கொண்டு, தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும் முடிந்த அளவில் இயற்கை முறைகளையும் வைத்து அதனை நிர்மாணிக்க முடிவு செய்தார். இந்த சமயத்தில் தான் வீட்டு உபகரணங்களில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படாதது கண்டும், இந்தத் துறையில் இருக்கும் வாய்ப்பும் சாதகமாக அமையவே இவர் நெஸ்ட் லாப்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இதனை தொடர்ந்து ஆப்பிள் , கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் இருந்தும் பொறியாளர்களை அணுகினார். இதில் இவருடன் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த மாட் ரோஜர்ஸ் என்பவரும் அடக்கம். இதன் முதல் பணியிடமான கலிஃபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ நகரில் வீட்டில் உள்ள கார் கொட்டகையில் இருந்து உருவானதே நெஸ்ட் தட்பவெட்ப சீர்நிலைக் கருவி. செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) அடிப்படையாக கொண்டு, உருவாக்கப்பட்ட இக்கருவி மூலம் ஏறக்குறைய 1 பில்லியன் மின்ஆற்றல் அலகு (கிலோவாட் ஹவர்) மின்சாரத்தை சேமிக்க முடிந்தது. இதை அமெரிக்கா முழுவதிலும் பதினைந்து நிமிடங்களில் உபயோகப்படுத்தும் மொத்த மின்சார அளவிற்கு இணையாக கூறலாம்.

Nest_Explained_Protect_Detector_Parts_Devices_Google_Devices_Internet_Of_things

நெஸ்டில் வடிவமைக்கப்படும் பொருள்கள், முக்கியமாக இவற்றில்உபயோகப்படுத்தப்படும் உணரிகள் (sensors) மற்றும் செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) வைத்து அமைக்கப்படும் வழிமுறைகள் முதலியவற்றையே மூளையாகக் கொண்டு விளங்குகின்றன. நெஸ்ட் தெர்மொஸ்ட்டட் வீட்டில் மக்கள் நடமாடும் விதத்தைப் பொறுத்து தன் இயக்கத்‌தை மாற்றவல்லது. மக்கள் நடமாட்டம் உணரப்படாத போது இவை இயக்கத்‌தை மாற்றி அமைப்பதின் மூலம் மின்சார உபயோகம் வெகுவாக குறைகிறது. மேலும் வீட்டில் இருக்கும் மக்கள் இதனை இயக்கும் விதத்தை பொருத்தும் வீட்டின் அன்றாட மின்சாரத் தேவையை இதனால் கணக்கிட முடிகிறது.

‘வருங்கால மின்சார சக்தியின் மூளையாக நெஸ்ட் விளங்கும்’ என்று என்.ஆர்.ஜி. எனர்ஜி-யின் தலைவர் டேவிட் கிரேன் (David Crane) கூறுவதே இதன் நுண்ணறிவு சக்திக்கு சான்றாகும். என்.ஆர்.ஜி. சக்தி நிறுவனமும் நெஸ்ட்-இன் ஒரு பங்குதாரர் என்பது கொசுறுத் தகவல். வீடுகளில் வெப்பநிலையை இயக்கும் ஹனிவெல் போன்றோர்களோடு ஒப்பிட்டால், ஐயமில்லாமல் நெஸ்ட் என்பது அதன் போட்டியாளர்களை விட ஒரு படி மேலே இருந்தது என்பதும் மறுக்க முடியாது.

இதே வழியை பின்பற்றி இந்த நிறுவனத்தின் அடுத்த வீட்டு உபயோகப் பொருளான ‘நெஸ்ட் ப்ரொடெக்ட்’ என்ற புகையை கண்டறியும் கருவி (Smoke Detector) உருவாக்கப்பட்டது. புகையை கண்டறியும் கருவிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் கண்டிப்பாக மிகவும் தேவைப்படும் ஒரு உயிர்காக்கும் கருவி என்பதை மறுக்க முடியாது. மேலும் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட அளவில் கூட தேவைப்படும் ஒரு கருவியாகும். ஆனால் தற்போதுள்ள உபகரணங்களின் வடிவமைப்பு அவ்வளவாக விரும்பத்தக்‌கதாக இல்லை. எனவே இதனை சிறப்பான வடிவில் அமைக்க நெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டது.

இதன்படி மூன்று முக்கிய விஷயங்கள் கவனத்தில் வந்தன. ஒன்று இதன் முக்கிய பணியான பாதுகாப்பு. இரண்டு ஆபத்தின் நிலையை பொறுத்து தர வேண்டிய எச்சரிக்கை. இவை இரண்டும் மிக கவனத்துடனும் நேர்த்தியுடனும் கையாளப்பட்டுள்ளது. ஆபத்தின் பின் நிலைமை சரியானவுடன் அதற்கான செய்தியும் தரப்படுவதுடன் விளக்கின் நிறம் மீண்டும் பச்சையாக மாறுகிறது. இதனால் தவறான எச்சரிக்கை தவிர்க்கப்படுகிறது. மூன்று மேலும் இதை விரும்பத்தக்க வகையில் மாற்றி வடிவமைக்கும் முயற்சியின் எடுத்துக்காட்டாகவே, மனித குரலில் எச்சரிக்கை, எந்த அறையில் ஆபத்து என்பதின் தகவல், இரவு விளக்கு போன்றவை இவற்றால் தரப்படும் அதிகப்படியான சேவை. இதில் தரப்படும் எச்சரிக்கையின் செய்தியும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது. அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்கப்படும் குரல் 37 வயது தாயின் கனிவான குரல் என்பதும் தகவல்.

இந்த சிறப்பம்சங்களுடன் இதனை பெற மக்கள் $129 ஐ தரத் தயாராகவே இருக்கின்றனர் என்பதும், இவ்வளவு சிறப்பம்சங்களுடன் செயல்படும் இவற்றிற்கு இந்த விலை சரியானதே என்பதும் இவர்களின் வாதம். இது மற்ற சாதாரண உபகரணங்களின் விலையின் இரண்டு மடங்காகும்.

இதில் மேலும் ஒரு படி மேலே போய் பிரபல முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான வர்ஜின் அமெரிக்கா நெஸ்ட் உடன் இணைந்து பயணிகளுக்கு மேலும் சொகுசான பயண அனுபவத்தைத் தர தயாராக உள்ளது. மார்ச் 2014 இல் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 2014ஆம் ஆண்டிற்குள் வர்ஜின் அமெரிக்கா வின் A320 வகை விமானங்களின் இருக்கைகளின் பின்னால் நெஸ்ட் தெர்மோஸ்டாட்கள் பொருத்தப்படவுள்ளன. முதலாவதாக இந்த வசதியை பெறப்போவது போஸ்‌டன் ,நெவர்க் மற்றும் சான் ஃப்ரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலீஸ் ஆகியவற்றின் இடையே ஆன வழித்தடங்கள். இதன் மூலம் இவர்கள் பயணிகளின் தனிவிருப்பத்திற்கேற்ப அவர்கள் உள்ளிடும் வெப்பநிலை அளவிற்கேற்றார் போல அவர்களின் இருக்கைகளை சுற்றி உள்ள வெப்ப நிலையை மாற்றி அமைத்துக்கொள்ளும் வழியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் வர்ஜின் அமெரிக்கா விமான சேவையின் ‘எலிவேட் மெம்பர்’ எனப்படும் சிறப்பு சேவை பெறுபவராயிருப்பின் அவர்களின் விருப்பம் முன்னமே அறியப்பட்டு, அவர்கள் விமானத்தின் உள்ளே வருமுன்னே அவர்களின் இருக்கைகளை ஆயத்தப்படுத்துகின்றனர். பயணிகளின் உணவு விருப்பத்திற்கு ஏற்றார் போலவும் இதனை மாற்றி அமைக்க உள்ளனர் . மேலும் நெஸ்ட் இன் ‘ஆட்டோ அவே’ என்ற சிறப்பு சேவையையும் இதனுடன் இணைத்து ,பயணிகள் இருக்கைகளில் இல்லாத போது இதன் இயக்கத்தை நிறுத்தி, விமான எரிசக்தியையும் மிச்சப்படுத்த திட்டங்கள் உள்ளன.

இது வரை உருவாக்கப்பட்டுள்ள இந்த இரு சாதனங்களும் தனித்தும், ஒரே வீட்டில் இரண்டும் இருக்குமானால் இவை ஒன்றோடொன்று இணைந்தும் செயல்படவல்லது. உதாரணத்திற்கு, புகை அளவிற்கு அதிகமாக உணரப்பட்டால், ‘நெஸ்ட் கருவிகளுக்கு தகவல் அனுப்புவதால், வீட்டில் இயங்கும் சூடாக்கும் அமைப்பு (heating unit) செயல்படுவது நின்று, நிலைமை மேலும் ஆபத்து ஆகாமல் தவிர்க்கப்படுகிறது.இவற்றால் வீட்டின் பாதுகாப்பு மேலும் கண்காணிக்கப்படுகிறது.

ஆனால் இவ்வகை உபகரணங்களின் உணரிகள் மூலம் பெறப்படும் தகவலை இந்த நிறுவனம் எப்படி கையாளுகிறது. இந்த செயல்பாடு நம்மால் கவனிக்கப்படாவிட்டாலும் மிக முக்கியமானதாகும். இவை மக்களின் அந்தரங்கத்திற்கு எந்த அளவில் தொந்தரவாக இருக்கும் என்பதும் கேள்வியாகவே உள்ளது. வீட்டில் நடக்கும் சிறு சிறு விஷயங்களும் தகவலாக வெளியே அனுப்பப்படுவது குறித்து நாம் சிந்திக்கத்‌தான் வேண்டியுள்ளது. இந்த தகவலை கொண்டு தங்கள் நிறுவனத்தில் உருவாக்கப்படவிருக்கும் அடுத்தடுத்த உபகரணங்களை சிறப்பான வகையில் தர இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதே இவர்களின் வாதம்.

தகவல் திருட்டைத் தவிர்க்க இவர்கள் மிகுந்த முயற்சி எடுத்தாலும், இது எந்த அளவில் சாத்தியம்? இந்த மாதிரி பிரச்சினைகளை கையாள இந்நிறுவனம் ‘கூகுள்-இன் துணையை நாடியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு பிரிவில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த சிறு சிறு தகவலை ‘Big data analytics’ மூலம் வியாபாரமாக மாற்ற காத்திருக்கும் கூட்டமும் உண்டு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.