தாவர நூல்கள்

1.
1_தமிழரும்_தாவரமும்தமிழரும் தாவரமும்
ஆசிரியர்: கு. வி. கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
நூலாசிரியர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் (Plant Science) துறையின் தலைவராக இருந்தவர். பண்டைய காலந்தொட்டு இன்று வரை தமிழர்களின் வாழ்வில், பண்பாட்டில் கலந்திருக்கும் தாவரங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட தாவரங்கள், தலமரங்களும் அவை இருக்கும் தலங்கள் முதலிய தகவல்களையும் இந்நூலில் காணலாம். தமிழார்வமும், தாவர ஆர்வமும் உள்ள அனைவரிடனும் இருக்க வேண்டிய அவசியமான நூல்.
2_kurinji paatu2.
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்
ஆசிரியர்: இரா. பஞ்சவர்ணம்
வெளியீடு: தாவரத் தகவல் மையம், பண்ருட்டி
நூலின் தலைப்பை வைத்தே இந்நூலின் உள்ளடக்கத்தை அறிய முடியும். “பூவெல்லாம் கேட்டுப் பார்” படத்தில் சூர்யா ஜோதிகாவிடம் 100 பூக்களின் பெயரை விடாமல் சொல்லிக் கொண்டே போவார், நினைவிருக்கிறதா? அவையனைத்தும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள பூக்களின் பெயர்கள். இந்நூலில் அப்பூக்களை அடையாளம் கண்டு படங்களுடன் விளக்கப்ட்டுள்ளது.
கபிலரின் இப்பூக்கள் பற்றி இதற்கு முன் பலர் ஆராய்ந்துள்ளனர். அதில் ஒன்றை இந்த வலைப்பூவில் காணலாம். இந்நூலில் அடையாளம் காணப்பட்ட பூக்களையும் இது சம்பந்தமாக செய்யப்பட்ட மற்ற ஆய்வுகளின் தரவுகளையும் யாராவது ஒப்பீடு செய்தால் நன்றாக இருக்கும்.
நான் இந்த நூலை வாங்கியதோடு சரி, இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. எனினும் அவ்வப்போது புரட்டிப் பார்த்ததில் ஒரு இந்நூலாசிரியர் தாவரங்களை வகைப்படுத்துதலிலும், பெயரிடுதலிலும் ஒரு புதுமையை புகுத்தியிருப்பது தெரிந்தது. அதாவது வகைப்பாட்டியலில் (Taxonomy) உயிரினங்களுக்கு அறிவியலாளர்கள் பெயரிடுவது போல இரு சொல் பெயரீட்டு முறையில் (binominal classification) ஒவ்வொரு தாவரத்திற்கும் தமிழில் பெயரிட்டுள்ளர். இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.
இந்நூலாசிரியரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரது இணையதளத்தைக் காணவும். http://www.plantinfocentre.com
3_TamilNadu_Plants3.
வனங்கள் ஓர் அறிவியல் விளக்கம் & தமிழ்நாட்டுத் தாவரங்கள்
ஆசிரியர்: ச. சண்முகசுந்தரம்
வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்
அண்மையில் வாங்கிவை. முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை. எனினும், முதல் பார்வையிலேயே சொல்லிவிடலாம், இரண்டு நூல்களுமே மிகவும் அருமையான படைப்புகள். ஆசிரியர் ஒரு ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. முதல் நூலை வேகமாகப் புரட்டியதில் இந்தியாவில் தென்படும் வனங்களை வகைகளுக்கு அருமையான சில தமிழ் பதங்களை கொடுத்திருந்தார். தமிழ்நாட்டுத் தாவரங்கள் நூலில் பல வகையான தாவரங்களின் விளக்கங்கள் பாதி பக்கத்திற்கு தரப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில கோட்டோவியங்களையும் காண முடிந்தது.
4.
மரங்கள்: ஆசிய-பசிபிக் மரங்கள் பற்றிய குழந்தைகளுக்கான புத்தகம்
மொழிபெயர்ப்பாளர்: நிர்மலா பாலா
வெளியீடு: National Book Trust, India
குழந்தைகளுக்கான நூல் எனக் குறிப்பிட்டிருந்தாலும் இது அனைவருக்குமான நூல். யுனெஸ்கோவில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய- பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 18 நாடுகளிலிருந்து பெறப்பட்ட அந்நாடுகளின் மரங்களை, வனப்பகுதிகள் பற்றி சுவாரசியமாக கதை வடிவிலும், தகவல்களாகவும் தரப்பட்டுள்ளது. இந்நாடுகளில் தென்படும் மரங்கள், வனங்களின் சூழியல் ஒழுங்கு, மரங்களின் பயன்கள். அழிக்கப்பட்டு வரும் வனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்நூலைப் படித்து தெரிந்து கொள்ளலாம்
5.
சங்க இலக்கியத் தாவரங்கள்
ஆசிரியர்: கு. சீநிவாசன்
வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம்
தலைப்பை வைத்தே நூலினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு நூல் இருப்பது எனக்குத் தெரிய வந்தது நாஞ்சில் நாடனின் “பனுவல் போற்றுதும்” நூலின் வாயிலாகத் தான். அதை அறிந்ததிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் போதெல்லாம் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழக பதிப்புத்துறைக்கு சென்று விசாரித்து வந்தேன். இந்நூல் out of stock. மறுபதிப்பு வர இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் தான் இந்நூலின் நகல் கிடைத்தது. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. இது என்னுடைய prized possession.
6.
சாயாவனம்
ஆசிரியர்: சா. கந்தசாமி
வெளியீடு: காலச்சுவடு
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்த நூல். ஆனால் இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்துவது நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். வளர்ச்சிப் பணிக்காக வனத்தை அழிக்கும் இந்த நூலின் கதாநாயகனான சிதம்பரம் போன்றோர் இவ்வுலகில் இப்போது ஏராளம். அவன் போன்றோர் மென்மேலும் உருவாகாமல் இருக்க இந்த நூலை அனைவரும் படித்து அடுத்தவர்களுக்கும் இந்நூலை படிக்குமாறு பரிந்துரைக்கவேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்நூலை பாடமாக வைப்பது அவசியம்.
7.
மரங்கள்: நினைவிலும் புனைவிலும்
தொகுப்பாசிரியர்: மதுமிதா
வெளியீடு: சந்தியா பப்ளிகேஷன்
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மரம் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ஓரிரு மரங்கள் இருக்கலாம், சிலருக்கு பல மரங்கள் இருக்கலாம்.  அந்த சிலர் எழுத்தாளர்களாக இருந்தால் அவர்கள் தமது வாழ்வில் கண்டு வியந்த, தமது வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி எழுதாமல் இருக்கவே மாட்டார்கள். நாஞ்சில் நாடனின் ஆலமரமும், மதுமிதாவின் மனோரஞ்சிதமும் அதற்கு சில எடுத்துக்காட்டு. இவர்களைப் போல பல படைப்பாளிகளின் நினைவில் இருக்கும் மரங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
 
English
8.
The Tree: A Natural History of What Trees Are, How They Live, and Why They Matter
ஆசிரியர்: Colin Tudge
வெளியீடு: Broadway Books
மரங்கள் எப்போது இவ்வுலகில் தோன்றின, எப்படி பரிணமித்தன, பல்வேறு சூழலுக்கு தம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன, எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன,  முதலிய பல இயற்கை வரலாறு செய்திகளையும், உலகில் தென்படும் பல வகையான மரங்களைப் பற்றிய பல அரிய, நம்மை வியப்பிலாழ்த்தும் தகவல்களையும் இந்நூலினைப் படித்து அறிந்து கொள்ள முடியும்.
9.
Trees of Delhi: A Field Guide
ஆசிரியர்: Pradip Krishen
வெளியீடு: DK Publishing (Dorling Kindersley)
இவரது முதல் நூல். தாவரங்களுக்கான களக்கையேடுகளில் தலை சிறந்தது எனலாம். தில்லியில் அதன் சுற்றுப்புறத்தில் தென்படும் சுமார் 252 வகையான மரங்களின் தகவல்களைக் கொண்டது. பூ, காய், இலை, மரப்பட்டை, கிளை என ஒரு மரத்தினை அடையாளம் காண உதவும் அனைத்து பாகங்களின் அழகிய தெளிவான படங்களைக் கொண்டது இக்கையேடு. பல மரங்களைப் பற்றிய வியக்க வைக்கும் பல தகவல்களையும் தந்திருக்கிறார். ப்ரதீப் க்ரிஷென் ஒரு முன்னாள் ஆவணப்படத் தயாரிப்பாளர். இவர் எழுத்தாளர் அருந்ததி ராயின் முன்னாள் கணவர்.
10.
Jungle Trees of Central India
ஆசிரியர்: Pradip Krishen
வெளியீடு: Penguin Books India
மத்திய இந்தியாவில் தென்படும் மரங்களுக்கான களக்கையேடு. இம்மரங்களில் பல இந்தியா முழுவதிலும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ள பல மரங்களைக் கண்டறியவும் இந்நூல் பயன்படும். மிக நேர்த்தியான வடிவமைப்பில், நான்கு ஆண்டுகள் உழைப்பில் விளைந்தது இந்நூல். ஒரு மரத்தினை அடையாளம் காணத் தேவையான பாகங்கள் அனைத்தையும் அழகிய, தெளிவான சுமார் 2000 படங்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது.
11.
The Book of Indian Trees
ஆசிரியர்: K. C. Sahni
வெளியீடு: Oxford University Press & Bombay Natural History Society
சுமார் 150 இந்திய மரங்களைப் பற்றிய தகவல்களை இந்நூலில் அறியலாம். மரங்களின் பாகங்கள் கோட்டோவியங்கள், புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கும். மரங்களின் வணிகப் பயன்கள், மரங்களைப் பற்றி அது தென்படும் இடங்களில் மக்களால் சொல்லப்படும் கதைகள், விளக்கப்பட்டுள்ள மரங்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்குமிடையேயான உறவு என பல சுவையான தகவல்களை கொண்டது இந்நூல்.
12.
Discover Avenue Trees – A Pocket Guide
ஆசிரியர்: S. Karthikayen
வெளியீடு: http://www.ecoedu.in
இந்நூலின் ஆசிரியர் S.கார்த்திகேயென் ஒரு அருமையான, அனுபவம் மிக்க இயற்கையியலாளர். ஏற்காடு மலைப்பகுதியில் மூங்கணத்தான்கள் (Madras Tree Shrew) குறித்து ஆராய்ச்சி செய்தவர். பெங்களூரு மாநகரத்தில் தென்படும் மரங்களைப் பற்றிய சுவையான தகவல்களை கொண்ட இவரது வலைதளத்தில் (www.wildwanderer.com/blog) வெளியான தொடரின் சுருக்கமான கையடக்க நூல் வடிவம் இது. அண்மையில் இவரை பெங்களூரில் சந்தித்த போது இந்நூலில் அவரது ஆட்டோகிராப்பை வாங்கிக்கொண்டேன். அழகான வடிவமைப்பு. மரங்களைப் பார்க்கச் செல்லும் போது உதவிக்காக இந்நூலை சட்டைப் பைக்குள் வைத்துக் எடுத்துச் செல்லலாம்.
13.
Our Tree
ஆசிரியர்: Pranab & Smita Chakravarti
வெளியீடு: National Book Trust, India
குழந்தைகளுக்கான நூல். மரம் ஓரிடத்தில் சும்மா நின்று கொண்டிருக்கவில்லை, அது பல விதமான உயிரினங்களின் புகலிடமாகிறது என்பதை படங்கள் மூலம் விளக்கும் நூல்.
14.
Trees and Tree Tales – Some common Trees of Chennai
ஆசிரியர்: Prof. K.N. Rao
வெளியீடு: Oxygen Books
சென்னையில் தென்படும் பல வகையான மரங்களைப் பற்றியும் அவை சார்ந்த சுவையான சில தகவல்களையும் கொண்டது இந்நூல். ஆசிரியர் ஒரு ஓய்வு பெற்ற தாவரவியல் துறை பேராசிரியர். பனைமர வகைகள், நாம் வணங்கும் மரங்கள், அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள், அழகிய இலைகளைக் கொண்ட மரங்கள், நாம் அதிகம் அறியப்படாத மரங்கள், பழம் தரும் மரங்கள் என சென்னையில் உள்ள மரங்களை இவ்வாறாக வகைப்படுத்தி இந்த நூலில் விளக்கியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவ்வகை மரங்களை சென்னையில் எந்தெந்த பகுதியில் காணலாம் என்பதையும் தந்துள்ளார். எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் மொழி நடை. சென்னைவாசிகள் மட்டுமல்ல ஆர்வமுள்ள அனைவருக்குமான நூல் இது. ஆனால் தற்போது out of stock. ஆகவே ஒருவேளை எங்காவது இந்நூலைக் கண்டால் உடனே வாங்கிவிடுவது நல்லது.
15.
The Trees in My Forest
ஆசிரியர்: Bernd Heinrich
வெளியீடு: HarperCollins Publishers
இந்நூலின் ஆசிரியர் வெர்மொன்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு உயிரியல் பேராசிரியர். இயற்கை அறிவியல் நூல்கள் பல இயற்றியவர். இந்த நூலின் சிறப்பம்சம் வனத்தில் அவர் காணும் மரங்களை அவரே அழகான கோட்டோவியங்களாகவும், விளக்கப்படங்களாகவும் சித்தரித்திருப்பது. அவருக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வனபகுதியில் உள்ள மரங்களைப் பற்றியும் அங்குள்ள கானுயிர்கள் பற்றியும் எளிய நடையில் விளக்குகிறார். ஓரின மரத்தோட்டங்களுக்காக (monoculture tree plantations) வனங்களை அழிப்பதையும், ஒரே வகையான அயல் மரத்தோட்டத்தை (exotic tree plantation) ஏற்படுத்த பல்லாயிரம் இயல் தாவரங்களை (native plants) அழிப்பதையும் முற்றிலும் எதிர்க்கிறார். அதை சூழல்சாவு (ecodeath) என சித்தரிக்கிறார். வனத்தை பராமரிப்பது அபத்தம் என்றும், வனம் என்பது தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் என்றும் விளக்குகிறார்.
இந்திய வனத்துறை அதிகாரிகள் பலர் படித்து அறிவு பெற வேண்டிய மிக முக்கியமான நூல் இது.
Reference books
16.
Forest Plants of the Nilgiris
தொகுப்பு & வெளியீடு: Keystone Foundation
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் தென்படும் தாவரங்கள் இரண்டு தொகுதிகளில் தரப்பட்டுள்ளது. இக்களக்கையேட்டில் இப்பகுதியில் காணக்கூடிய மரங்கள், கொடிகள், பெருங்கொடிகள் (lianas), புதர்கள், சிறு செடிகள், புற்கள் யாவும் விளக்கப்பட்டுள்ளது. நீலகிரிப் பகுதியில் வாழும் குரும்பர் இனத்தவரான திரு எல். பாலசுப்ரமனியம் இத்தாவரங்களின் விளக்கப்படங்களை (illustration) வரைந்திருப்பது இந்நூலின் சிறப்பு. தாவரங்களின் புகைப்படங்களும் தரப்பட்டுள்ளது. மற்றுமொரு சிறப்பு ஒவ்வொரு தாவரத்தின் ஆங்கிலப் பெயர், அறிவியல் பெயர் மட்டுமல்லாது குரும்பர், இருளர் மற்றும் பல பூர்வீகக் குடியினரின் பெயர்களையும் கொண்டுள்ளது இந்நூல்.
 
17.
The Flora of The Palni Hills Vol 1, 2 & 3
ஆசிரியர்: K. M. Matthew
வெளியீடு: The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli.
பல ஆண்டுகள் களப்பணியில் விளைந்தது இந்த ஆதார நூல் (Reference book). K.M. மேத்யூ ஒரு தலைசிறந்த தாவரவியலாளர். இவரது நூல்கள் இந்தியத் தாவரவியலுக்கு மாபெரும் பங்களிப்பாகும். இவரது இந்த மூன்று பாகங்கள் கொண்ட ஆதார நூலில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான பழனி மலைத் தொடரில் தென்படும் தாவரங்களை பல ஆண்டுகள் களப்பணியில் கண்டரிந்து ஆவணப்படுத்தியுள்ளார். முதல் தொகுதி அல்லி இணையாத தாவரங்களையும் (Polypetalae), இரண்டாம் தொகுதி அல்லி இணைந்த தாவரங்களையும் (Gamopetalae), ஒரு வட்டப்பூவிழ் உடைய தாவரங்களையும் (Monochlamydeae), மூன்றாவது தொகுதி ஒரு வித்திலைத் தாவரங்களையும் (Monocotyledones) உள்ளடக்கியது. இவர் சேகரித்த அனைத்துத் தாவரங்களும் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி (St. Joseph College), தாவரவியல் துறை, ரபினட் உலர் தாவரத்தொகுப்பில் (The Rapinat Herbarium) பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
இயல் விருது பெற்ற இயற்கையியல் எழுத்தாளரான தியோடோர் பாஸ்கரன் அவரது முதல் இயற்கையியல் கட்டுரைத் தொகுப்பிற்கு K.M. மேத்யூ சொன்ன வாக்கியத்தையே தலைப்பாக வைத்திருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அந்த நூலில் உள்ள “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக..” எனும் கட்டுரையை படிக்கவும்.
18.
Illustrations on the Flora of the Palni Hills
ஆசிரியர்: K. M. Matthew
வெளியீடு: The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli.
மேலே குறிப்பிட்ட மூன்று தொகுதிகளில் பழனிமலைத்திடரில் தென்படும் தாவரங்களை அடையாளம் காண உதவும் விளக்கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளது. இத்தாவரங்களின் விளக்கப்படங்கள் (illustrations) இந்த இரண்டு தொகுதிகளில் தரப்பட்டுள்ளது.
 
19.
K.M. மேத்யூ எழுதிய மேலும் இரண்டு ஆதார நூல்கள்
An Excursion Flora of Central Tamil Nadu, India மற்றும் Materials for the Flora of the Tamil Nadu Carnatic. முதலாவது நூலை அவரது மாணவரான எஸ். ஜான் பிரிட்டோ தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
A Pocket Flora of the Sirumalai Hills, South India – K.M. மேத்யூவின் மற்றொரு மாணவரான J. M. பள்ளித்தனம் எழுதியது சிறுமலை பகுதியில் தென்படும் தாவரங்களைப் பற்றிய நூலாகும்.

0 Replies to “தாவர நூல்கள்”

  1. Sweet Wormwood என அழைக்கப்படுகிற Artemisia Annua என்னும் மூலிகை மலேரியா நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இப்போது புற்றுநோய்க்கும் மருந்தாக ஆய்வுசெய்யப்படுகிறது. பிரதானமாக சீனத்தில் விளைவது. இந்தியாவிலும் பல பகுதிகளில் விளைவதாகத் தெரிய வந்தது. இந்த மூலிகையின் தமிழ்ப் பெயரை தாங்கள் எனக்கு அறியச்செய்ய இயலுமா…
    என் மின்னஞ்சல் முகவரி shahjahanr@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.