தி க சிவசங்கரன் என்ற தி க சி

தி க சி யின் மரணம் அவர் நினைத்தபடியே நடந்தது என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. தனது மரணம் சமீபித்துவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தார்கள். 29.12.13 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் திருநெல்வேலி சென்றிருந்த போது, அவர்களது 23, சுடலைமாடன் கோவில் தெரு வீட்டில், சந்தித்தோம். பழங்கள் (இனிப்பு கூடாது என்பதால்) காரவகைகளுடன் சென்றிருந்தோம். எதையோ படித்துக் கொண்டிருந்த தி.க.சி. எங்களைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் “வாங்கய்யா” என்று வரவேற்றார்கள். மிகவும் மெலிந்திருந்தார்கள் என்றாலும் முகத்தில் அயர்ச்சியோ சோர்வோ இல்லை.

என் கையில் கையினால் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். “படியுங்க” என்றார்கள். அந்த பேப்பரில் “இதயம் பலவீனமாக இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசவேண்டாம். கடலைமாவு பலகாரங்கள் கொடுக்கவேண்டாம். அதிக நேரம் பேசவைக்காதீர்கள்” என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

படித்துவிட்டு நிமிர்ந்த என்னைப் பார்த்து சிரித்தார்கள். “டாக்டரோட யோசனைகள்” என்றார்கள். என் மனைவி கையில் வைத்திருந்த ப்லாஸ்டிக் பையைப் பார்த்து “எதுக்கு இதெல்லாம். ஒண்ணும் சாப்பிடத்தான் கூடாதே” என்று கூறிவிட்டு வீட்டில் எல்லோரையும் நலம் விசாரித்தார்கள். சுவரோரத்தில் மெஸ்ஸிலிருந்து வந்த மதிய சாப்பாடு இருந்தது. மேஜை மீதும் தரையிலும் பத்திரிகைகள், புத்தகங்கள்.

காது மந்தமாகி வெகுகாலமாகி விட்டது. நாம் பேசுவதை வாயசவை வைத்துதான் புரிந்து கொள்வார்கள். நான் அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன். நான் குறுக்கிட்டு ஏதாவது பேசினால், அவர்களுக்குக் கேட்பது சிரமமாக இருக்கும் என்பதால் பொதுவாக நான் அவர்களிடம் தேவையிருந்தால் தவிர பேசுவதில்லை. அன்றும் அப்படித்தான் நடந்தது.

இடையே என் மனைவி நாங்கள் வாங்கி வந்திருந்த ஆப்பிள்கள், காரவகைகளை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு “வாழைப்பழமாவது வாங்கி வருகிறேன். நீங்கள் பேசிக்கொண்டு இருங்கள்” என்று சென்றுவிட்டாள். அவள் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டு வந்ததைப் பார்த்து, “எதுக்கும்மா இது? …இதற்காகவா போனே?” என்றார்கள். நாங்கள் அவர்களுக்கு அதிகம் தொந்திரவு கொடுக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டு விடைபெற எழுந்தோம். அப்போதுதான் அதைச் சொன்னார்கள் தி.க.சி.

“ராமசந்திரன்…மார்ச் முப்பதிலே எனக்கு 90 வயசாகுது. கல்லறையிலே ஒரு காலை எடுத்து வச்சுட்டேன். பிழைத்துக் கிடந்தால் அன்னைக்குப் பார்ப்போம்…” என்றார்கள்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க…அதெல்லாம் இருப்பீங்க…” என்றேன். ஆனால் நான் சொன்னது பலிக்கவில்லை. அவர்களே அவர்களது மரணத்தை உணர்ந்து சொன்னதுதான் கடைசியில் பலித்தது. அந்த மார்ச் முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே காலமாகி விட்டார்கள்.

dsc_0017-2

திருநெல்வேலி டவுனில் நான் ஆறாவது படிக்கிற காலத்திலேயே தி.க.சி. வீடு இருக்கிற அந்த வளைவு(காம்பவுண்ட்)க்குச் சென்றிருக்கிறேன். தி.க.சி. வீட்டுக்கு எதிர்வீடுதான் தி.க.சி.யுடைய சிற்றப்பா வீடு. தி.க.சியின் சிற்றப்பா மகன் சிவசங்கரன் என்னுடன் அதே ஆறாம் வகுப்பில்தான் படித்தான். அவனைப் பார்ப்பதற்காக 1958-59ல் அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது எதிர்வீட்டில்தான் தி.க.சி. இருக்கிறார்கள், தி.க.சி. தமிழின் முக்கியமான விமர்சகர் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் அதே 23, சுடலைமாடன் கோவில் தெரு வீட்டுடன், தி.க.சி. வீட்டுடன், பூரவ்ஜென்ம பந்தம் போல இன்றளவும் எனது உறவு தொடர்கிறது. நான் படித்த அதே தெற்குப் புதுத்தெருப் பள்ளியில்தான் தி.க.சி.யின் இரண்டாவது புதல்வரான கல்யாணசுந்தரம் என்கிற வண்ணதாசனும், எனக்கு மேலே இரண்டு வகுப்புகள் தாண்டிப் படித்தார். அப்போதெல்லாம் வண்ணதாசனுடன் பழக்கம் ஏற்படவில்லை.

1970-ல் “தீபம்” பத்திரிகையில் எழுதுகிற வண்ணதாசன்தான், என் பால்யகால நண்பன் சிவசங்கரன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர் என்பது தெரிய வந்தது. ஒரு வாசகனாகத்தான் வண்ணதாசனை 1970 ஜூனில் சந்தித்தேன். அப்போதுதான் தாமரையின் பொறுப்பாசிரியரும், சென்னை சோவியத்லாண்ட் பத்திரிகையில் பணியாற்றுபவருமான தி.க.சி.தான் வண்ணதாசனின் தந்தை என்பதும் தெரியவந்தது.

நான் முதல்முதலாக தி.க.சி.யை நேரில் சந்தித்தது வண்ணதாசனின் தங்கை ஜெயாவின் திருமணத்தின்போதுதான். அதற்கு முன்பே தி.க.சி தாமரையில் எனது ‘யுகதர்மம்’ என்ற சிறுகதையை வெளியிட்டு, கதையைப் பற்றிக் கடிதமும் எழுதியிருந்தார்கள். தன் மகள் திருமண வீட்டில் என்னை, திருமணத்திற்கு வந்திருந்த கி.ராஜநாராயணன், ராஜபாளையம் எழுத்தாளர்கள் எல்லோரிடமும் சந்தோஷத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

தி.க.சி. “தாமரை”யின் பொறுப்பாசிரியராக சுமார் ஐந்தாண்டுகாலம் செயல்பட்டார்கள். தி.க.சி.யை விமர்சகராகத்தான் உலகம் அறியும். ஆனால் தி.க.சி ஒரு அபாரமான கலாரசிகர். நல்ல ரசிகன்தான் நல்ல விமர்சகனாகவும் செயல்படமுடியும் என்பது தி.க.சி விஷயத்தில் முழு உண்மை. தி.க.சி. நல்ல கர்நாடக சங்கீத ரசிகர்.

73-ல் முதல்முதலாக சென்னைக்கு நான் வந்தபோது, சித்ரா விஸ்வேஸ்வரனின் நடன் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றது தி.க.சி.தான். அதே 73-ல்தான் சென்னை சோவியத் கலாசாரநிலையத்தில் அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சுயம்வரம்’ படத்தின் ப்ரிவ்யூ நடந்தது. அதற்கும் தி.க.சி. என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தப் ப்ரிவ்யூவுக்கு அன்று அடூரும் வந்திருந்தார். முக்கியத் திரைப்படங்களை எல்லாம் தி.க.சி பார்த்துவிடுவார்கள். அது பற்றிய விமர்சனங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் “தாமரை’ யின் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தை தாமரையின் பொற்காலம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இருந்த பல இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கேட்டுவாங்கி தி.க.சி. தாமரையில் பிரசுரித்தார்கள். தி.க.சி. ஒரு மார்க்ஸிஸ்ட். அவரது இலக்கிய விமர்சன அணுகுமுறை மார்க்ஸிய கோட்பாடு சார்ந்தது. இலக்கியத்தை முற்போக்கு, பிற்போக்கு என்று அணுகியவர்கள் தி.க.சி.

கோட்பாடு, தத்துவம் என்றாலே வறட்சியானதுதான். இந்த வறட்டுத்தன்மை மார்க்ஸியத்திலும் உண்டு. தாமரை சி.பி.ஐ.யின் இலக்கியப் பத்திரிகை. அதில் வெளிவரும் சிறுகதை, கவிதைகளில் தி.க.சி. பொறுப்பேற்பதற்கு முன்பு ஒருவிதமான வறட்டுத்தனமும், கட்டுப்பெட்டித்தனமும் இருந்தது. ஆனால் தி.க.சி. பொறுப்பேற்ற பிறகு கலாபூர்வமான படைப்புகள் தாமரையில் இடம்பெறலாயின.

எனது யுகதர்மம், மயானகாண்டம், கிரிமினல், பூமணியின் ‘வயிறுகள்’, கி.ராஜநாராயணனின் ‘வேட்டி’, பா.ஜெயப்பிரகாசத்தின் ‘அம்பலக்காரர் வீடு’ போன்ற கலாபூர்வமான பல சிறுகதைகள் தி.க.சி. பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் தாமரையில் வெளியாகின. அக்காலத்தில் இலங்கை எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, கதிர் காமநாதன், செ.யோகநாதன்,டேனியல், திக்குவல்லைகமால் போன்ற பல இளம் படைப்பாளிகளின் படைப்புகளை தி.க.சி. கேட்டுவாங்கி தாமரையில் பிரசுரித்தார்கள். வண்ணதாசனும் ‘சிவ.கல்யாணசுந்தரம்’ என்ற தனது இயற்பெயரிலேயே பல கவிதைகளை தாமரையில் எழுதியிருக்கிறார்.

கவிஞர் ஞானக்கூத்தன் எந்த முற்போக்கு முகாமிலும் சேராதவர். அவர் மார்க்ஸிஸ்டும் அல்ல. அவர் கவிதையின் அழகியல் சார்ந்து இயங்கிய கவிஞர். ஆனால், தி.க.சி. ஞானக்கூத்தனின் கவிதை பற்றிய கட்டுரை ஒன்றை தாமரையில் பிரசுரித்தார்கள். அந்தளவுக்குத் திறந்த மனதுடனும், கலை, அழகியல் உணர்வுடனும் தி.க.சி. இயங்கியதால்தான் அந்தத் தாமரை இதழ்கள் மிகத் தரமாக இருந்தன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அதன் ஆரம்பக் காலத்தில் நிறுவி, வளர்த்த பெருமையும் தி.க.சி.க்கு உண்டு. 70-களில் சென்னை எல்.எல்.ஏ பில்டிங்கில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெற்றன. இக்கூட்டங்கள் பெரும்பாலும் தி.க.சி.யால் ஏற்பாடு செய்யப்பட்டன.

தி.க.சி. நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட. ஜார்ஜி குலியாவின் ‘வசந்தகாலத்தில்’ என்ற நீண்ட நாவலை தி.க.சி. மொழிபெயர்த்திருக்கிறர்கள். சோவியத் செய்திக்கட்டுரைகளை அவர்கள் மொழிபெயர்ப்பதை பலமுறை நேரிலிருந்து பார்த்திருக்கிறேன். வேகமாகவும், அதே சமயம் சரளமாகவும் தி.க.சி. மொழிபெயர்ப்பார்கள்.

பெண்ணியம், தலித்தியம், போன்ற தற்கால இலக்கியப் போக்குகள் மீது தி.க.சி.க்குப் பிடிப்பு இருந்தது. இவை பற்றிய கருத்துக்களை தனது நேர்ப்பேச்சிலும், பத்திரிகைகளிலும் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். நான் எப்போது திருநெல்வேலிக்குச் சென்றாலும் தி.க.சி.யைப் பார்க்காமலிருக்க மாட்டேன். நல்லகண்ணு, வைகோ முதலான அரசியல்வாதிகள் முதல், தன்னைத் தேடிவரும் வாசகர்கள் வரை தி.க.சி.க்கு விரிந்து பரந்த நட்பு வட்டம் இருந்தது.

தி.க.சி.யின் மறைவு இலக்கிய உலகுக்கும், பல நண்பர்களுக்கும் பேரிழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

0 Replies to “தி க சிவசங்கரன் என்ற தி க சி”

  1. நெகிழ்வான மற்றும் பொருத்தமான அஞ்சலிக் கட்டுரை .
    தமிழக முதல்வர் விருப்பப் படி
    சுடலை மாடன் கோவில் தெருவை
    தி க சி தெரு என்று பெயர் மாற்றம் செய்து, தி க சி அய்யாவின் நினைவுடன் வாழ்வோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.