இருளற்ற இரவுகள்

எங்களது பள்ளிப் பருவத்தில் அதாவது 1940-50களில், சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இரவு நேரங்களில் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் ஜொலிக்கும். குறிப்பாக அமாவாசை நாளன்று ஆகாயம் கருநீலநிறமாகத் தோன்றும். நட்சத்திரங்களின் வைரங்கள் போல் டால் அடிக்கும் – பாரதியார் அதைக் கண்டுதான் கண்ணம்மா என் காதலி பாடலில் – அவளது “பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல்வயிரம் – நட்ட நடுநிசியில் ஜொலிக்கும் நட்சத்திரங்களடி” என்று பாடியுள்ளார். ஆமாவாசைக்கு முந்திய மற்றும் பிந்திய எட்டு, பத்து நாட்களில் நிலவற்ற இரவுகளிலும் நட்சத்திரங்கள் ஜொலிக்கும். இதற்கு விதிவிலக்கு மழைகாலம் – மேகம் சூழ்ந்திருக்கும் சமயம் மட்டும் நட்சத்திரங்களைக் காண முடியாது.

அந்தக் காலங்களில் கிராமங்களில் கடிகாரம் யார் வீட்டிலும் கிடையாது. சூரியன் உதிப்பதற்கு முன்பாக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டுமென்றால் வெள்ளி முளைக்கும் சமயம் எழுந்திருக்க வேண்டும் என்பார்கள். வெள்ளி (சுக்கிரக் கிரகம்) சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக கீழ்வானில் உதயமாகும். சூரியோதயத்திற்குப் பின் சூரிய ஒளி காரணமாக வெள்ளியைக் காண முடியாது. நிலவுக்கு அடுத்தபடியாக இரவு நேரத்தில் மிக அதிக ஒளியை, அதாவது எந்த நட்சத்திரத்தைக் காட்டிலும் அதிக ஒளியை, வீசுவது வெள்ளிதான். நிலவற்ற இரவுகளில் வெள்ளியின் ஒளியில் நமது நிழலைக் கூடக் கூர்ந்து கவனித்தால் பார்க்க முடியும்.

இப்போதெல்லாம் – அதாவது இன்றைய கால கட்டத்தில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் இரவு நேரங்களில் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் நட்சத்திரங்கள் ஏன் ஜொலிக்கவில்லை? காரணம் மின்விளக்குகள்தான். ஊர் முழுவதும், தெருக்களிலும் வீடுகளிலும் எரியும் மின்சார விளக்குகளை முன்னேற்றத்தின் வெளிப்பாடாகக் கருதுகிறோம். ஆனால் இந்த விளக்குகளின் ஒளி ஆகாயம் வரை பிரதிபலிப்பதால் நட்சத்திரங்களின் ஒளி மங்கிவிட்டது. பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்திருந்தால் நட்ட நடுநிசியில் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பற்றி அவரால் பாடி இருக்க முடியாது!

மின்விளக்குகள் கடந்த 100-150 வருடங்களில்தான் வந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள் இரவு நேரங்களில் ஒளி வெள்ளத்தில் முழ்கித் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக, மேற்கு ஐரோப்பியக் கண்டத்தையும் வடஅமெரிக்கப் பகுதியையும் செயற்கைக் கோள்களிலிருந்து பார்க்கும் போது ஒளிப்பிழம்புகளாக ஜொலிக்கின்றன. மின்விளக்குகள் வருவதற்கு முன்பு மண்ணெண்ணெய் அல்லது மெழுகுவர்த்தி அல்லது பல்வேறு தாவர எண்ணெய்களைக் கொண்டு விளக்குகள் எரிந்தன. அவற்றின் ஒளிமிகவும் குறைவுதான். அந்த ஒளி ஆகாயத்தில் பிரதிபலித்து நட்சத்திரங்களின் ஒளியைக் குறைப்பதில்லை.

உண்மை நிலை என்னவென்றால், மனித உடல் மனம் எல்லாமே பகல் நேரங்களில் மட்டும் செயல்படுவதுதான் இயற்கை நிலை. இயற்கை நிலைக்கு எதிராக செயற்கையான வழியில் இரவிலும் நமது செயல்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. நிச்சயமாக நமது கண்களின் கூர்மை மழுங்கிவிட்டது நிதர்சனம். மற்றபடி வேறு எவ்வாறெல்லாம் நமது உடலும் உள்ளமும் பாதிப்படைகின்றன என்பதை ஆராய்ச்சி வாயிலாகத்தான் அறிய முடியும்.

123_lc

ஒளிமாசும் (Light Pollution) விலங்கினங்களுக்கு விளையும் தீங்குகளும்

சமீப காலமாகத்தான் அறிவியல் வல்லுநர்கள், இரவுநேரங்களில் மனிதன் செயற்கையாகத் தோற்றுவிக்கும் ஒளிவெள்ளமும் சுற்றுச்சூழல் மாசுகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம்தான் இந்த ஒளிவெள்ளத்தைத் தோற்றுவித்தோம். நமது செயல்பாடுகள் இரவிலும் தொடர்வதால் இந்த செயற்கை ஒளி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஆனால் ஐந்தறிவு மட்டுமே கொண்ட விலங்கினங்களின் நிலை?

விட்டில் பூச்சிகளும், வேறு சில பூச்சிகளும் பறவைகளும் இரவில் வீசும் ஒளிகாரணமாக உயிர்இழப்பது பற்றி “விளக்கும் விட்டில் பூச்சிகளும்” என்கிற தலைப்பில் நான் 2007ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். முன்பெல்லாம் இரவு நேரங்களில் ஆந்தைகள் மட்டும் குரல் எழுப்பும். அதிகாலையில் சேவல் கூவும். இப்போதெல்லாம் காகங்களும் குயில்களும் நள்ளிரவில் குரல் கொடுப்பதை நாம் கேட்க முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அகமதாபாத் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த இடத்தில் நூற்றுக் கணக்கில் பச்சைக் கிளிகள் பாடித் திரிந்தது. மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அதே கிளிகள் இரவு முழுவதும் பாடி எனது தூக்கத்தைக் கெடுத்தது மகிழ்ச்சி அளிக்கவில்லை. சேவல்கள் இரவு முழுவதும் கண்ட நேரத்தில் கூவுகின்றன.

சமீபத்தில் நான் படித்தறிந்த தகவல்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. எண்ணற்ற பறவைகள் ஒளிச்சாதனங்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்து மயங்கி விழுந்து மடிவது அதிகரித்து வருகிறது. புலம் பெயரும் பறவைகளும் குழப்பமடைகின்றன. மேலும் இரவு நேரங்களிலும் பகல் நேரம் போலவே ஒளி வீசுவதால் சில பறவைகளும், பல்வேறு உயிரினங்களும் இரவில் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேட்டையாடுவது உணவு சாப்பிடுவது இனப் பெருக்கம் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. தவளை – தேரை இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இனப்பெருக்க பருவங்களில் தாங்கள் போக வேண்டிய குளம் குட்டைகளை நோக்கி இரவு நேரங்களில்தான் இவை பயணிக்கும். ஒளி வெள்ளம் காரணமாக இவை குழப்பமடைந்து உரிய நேரத்தில் நீர்நிலைகளைச் சென்றடைவது குறைந்து வருகிறது. இதன் காரணமாக அவற்றின் ஆயுட்காலம் குறைவதற்கும், வேறு உபாதைகள் தோன்றுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ரிட்லி போன்ற கடல் ஆமைகள் மனித வசிப்பிடங்களுக்கு அப்பால் ஒளியற்ற கடற்கரையில் இரவு நேரங்களில் முட்டை இடும்போது ஆமைக்குஞ்சுகளுக்கு ஓரளவு பாதுகாப்பு உண்டு. ஆனால் செயற்கை ஒளி வீசும் கடற்கரைகளில் அவை இடும் முட்டைகளைப் பறவைகளும் வேறு சில பிராணிகளும் கபளீகரம் செய்து விடுகின்றன. இதுபோல் எந்தெந்த உயிரினங்கள் எப்படி எல்லாம் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன என்பது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால்தான் தகவல்கள் வெளிவரும்.

ஒளிமாசிற்கு மாற்று உண்டா?

உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். இருட்டான இரவில்தான் வான்கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளை உரிய முறையில் செய்ய இயலும் என்பதால் அதுபோன்ற ஆராய்ச்சி மையங்கள் இருண்ட இரவுப் பகுதிகளில் (Dark night zones) அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இரவு நேரங்களில் குறைந்த அளவில் குறைந்த ஒளி கொண்ட விளக்குகள் – அதுவும் கட்டிடங்களுக்குள்ளாக ஒளியைப் பிரதிபலிக்க விடாமலும், சிதற விடாமலும் தரையை நோக்கி மட்டுமே ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக ஜொலிக்கும் நட்சத்திரங்களை அங்கு நாம் காண முடியும். ஆப்பிரிக்கா கண்டத்தில் சில பின்தங்கிய நாடுகளில் இன்றும் அப்படிப்பட்ட சில இடங்கள் எஞ்சியுள்ளன என்பது ஆறுதல் தரும் விஷயம்.

இருண்ட – இரவு அமைப்புகள் (டார்க் நைட் அசோஷியேஷன்) அமெரிக்காவில் தோன்றியுள்ளன. யூட்டா மாநிலத்தின் சில பகுதிகள் “இருண்ட பகுதிகளாக” அறிவிக்கப்பட்டுள்ளன மேலும் புதிய இடங்கள் இருண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளைச் சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்து மகிழ்கின்றனர். அப்படி எல்லாம் இருண்ட பகுதிகளை உருவாக்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் நமது மின்விளக்குகளின் ஒளி ஆகாயத்தை நோக்கிச் செல்லாமல் பூமியை நோக்கி மட்டுமே செல்லும் விதத்தில் மாற்றியமைத்தால் நாமும் ஒரளவிற்காவது இருண்ட இரவுகளையும் ஒளிவீசும் விண்மீன்களையும் காண இயலும். பூச்சிகளும் பறவைகளும் ஏனைய உயிரினங்களும் குழப்பமடைந்து உயிர்விடுவதையும் தவிர்க்க இயலும்.

காந்திகிராமம்
17.1.2014