உயிர்த்தெழும் நினைவுகள்/கடந்த காலம்

ஒரு காலகட்டத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை இறந்தகாலம், கடந்தகாலம் என்றெல்லாம் நாம் குறிப்பிட்டாலும், அவை நினைவிலிருந்து முற்றிலும் மரிப்பதில்லை, நாமும் அவற்றை முற்றிலும் கடந்து விடுவதில்லை. சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி, அவை  காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி,  அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. எவ்வளவு சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு நினைவின் அடுக்குக்களில் எதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே தான் பல பத்தாண்டுகளாக அசோகமித்திரன், தன் பால்ய/பதின் பருவ நினைவுகள் குறித்து  நிறைய எழுதி இருந்தாலும், கடந்த 2-3 ஆண்டுகளில் வெளிவந்த அவரின்  சிறுகதை/குறுநாவல்கள் தொகுப்பு நூல்களான ‘1945ல் இப்படியெல்லாம் இருந்தது'(சிறுகதைகள்), ‘நண்பனின் தந்தை’ (இரு குறுநாவல்/நெடுங்கதைகள் , மூன்று சிறுகதைகள்)  இரண்டிலும், வேறு வேறு களத்தின்/காலகட்டத்தின்  கதைகள் இருந்தாலும், அவரின் பால்ய/பதின் பருவ கால நினைவுகள் சார்ந்த கதைகளே பிரதான பங்கு வகிக்கின்றன.

ami_tn copyஅசோகமித்திரனின் புனைவுலகை ஏற்கனவே அறிந்தவர்களுக்கு பழக்கமான பாத்திரங்களை/களங்களை இந்தக் கதைகளில் நாம் காண்கிறோம். பத்து, பன்னிரண்டு வயதில்  பேதமையுடன் அனைத்தையும் உள்வாங்கும், என்ன நடக்கிறது  என்று முழுதும் புரியாவிட்டாலும் உள்ளுணர்வில்  ஏதோ தவறு என்பதை மட்டும் எப்படியே உணரும் சிறுவன் (‘லீவு லெட்டர்’ நெடுங்கதை ), அந்தப் பேதைமை நீங்கும்/நீங்கப்போகும் கல்லூரி படிக்கும் பதின்ம வயதுடையவன் என இவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். இவர்கள் மட்டுமல்ல, ‘பதினெட்டாவது அட்சக்கோட்டின்’,  மஸூத்தும், நாசிர் அலிகானும், ”தோஸ்த்’  கதையில் பெயர் குறிப்பிடப்படாத ‘தோஸ்த்தாகவும்’,  ‘சுப்பாராவ்’ கதையில், ‘நஸீராகவும்’ வருகிறார்கள். ‘இரண்டாவது    ரிச்சர்ட்’ நாடகத்தில் , ‘ஜான் ஆப்காண்ட்’, ‘ரிச்சர்ட்’ இருவருக்கும் மேலாக புலம்பும் ரங்காவுக்கு பதில் ‘மாணிக்கம்’ என்ற புது ஆங்கில உரைநடை ஆசிரியர்.  போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் மேயச்சென்று விடும் கோணல் கொம்பு மாட்டையும், ‘சனீஸ்வரன்’ என்றழைக்கப்படும் ஜோசியரையும், கிரிக்கெட் பற்றிய பதிவுகளையும் நாம் மீண்டும் இந்தக் கதைகளில் சந்திக்கிறோம். இங்கு பழைய கதைகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்று எண்ண வேண்டாம்,  கோணல் கொம்பு மாட்டிற்கு என்ன ஆனது, தோஸ்த்தின் தந்தை, என இவர்களைப் பற்றி நுட்பமான வேறுபாடுகளுடன் இன்னொரு கோணத்தில் தெரிந்து கொள்கிறோம். அ.மி புனைவுகளில் தந்தை இறந்த பிறகு தலைமகனாய் (அக்காக்கள் உண்டு) குடும்ப பாரத்தை சுமக்கும் கதைசொல்லியை அதிகம் பார்த்த நாம், ‘பம்பாய் 1994’ குறுநாவலில் அவரின் அண்ணனையும் பார்க்கிறோம்.  (இள வயதில் தந்தையை இழப்பதைப் பற்றி அதிகம் எழுதும் இன்னொருவர் ‘யுவன் சந்திரசேகர்’. ஆனால் யுவன் கதைகளில் வருவது போல் இங்கு கதைசொல்லி தந்தையுடன் நெருக்கமாக இருப்பதில்லை, தந்தை-மகனிடையே formal உறவையே அசோகமித்திரன் புனைவுகளில் காண்கிறோம்).

ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்த நாட்களைப்  பற்றிய பதிவுகள் நிறைய உள்ளன. அடர்த்தியாக சொல்லப்படும் தகவல்கள், ஓவியர் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்கும் போது உருவாகும் வரிவடிவங்கள், ஒரு கட்டத்தில் ஒன்றிணைவதைப் போல் கதைகளோடு பொருந்தி விடுகின்றன. கதைசொல்லி பதிவு செய்யும்
தார் ரோடுகளில் இருபுறமும் நிறைய வெற்றிடம் இருந்ததால் அங்கேயே நின்றுகொண்டு பார்த்துக் கொண்டே இருக்கலாம். எங்கோ அங்கொரு கட்டடம், இங்கொரு கட்டடம். கூரை, சீமை ஓடு வேய்ந்ததாக இருக்கும். எப்பக்கம் திரும்பினாலும் பிரம்மாண்ட ஓவியம் போலத் தோன்றும்
நிலவியல்  இன்று அருகி வரலாம், ஆனால் மின்வசதி இல்லாத இருட்டான மருத்துவனைகள் இன்றும் இருக்கக்கூடும்.
 

nanbanin_thanthai_ashokamitran
ஆனால் இந்தக் கதைகள் கடந்த காலத்தைப் பற்றிய பதிவுகள் மட்டுமே அல்ல. இவற்றில் வரும்  மனித உணர்வுகளும்/உறவுகளும்  இன்றும் பொருத்தமானவை.  தீ விபத்தின் கோரத்தால், மிகுந்த மன உளைச்சலுக்கு (PTSD)  ஆளாகும் கதை சொல்லியின் அண்ணனின் உணர்வுகளை, தந்தை இல்லாமல் தாயின் உறவினர்கள் வீட்டில் வாழும் சிறுவனின் உணர்வுகளை, அவனுக்கு இயல்பாக நடக்கும் புறக்கணிப்பை,டாங்காக்காரர், பள்ளிக் காவலாளி இவர்கள் மீதும் ஏற்படும் குழந்தைமையான ஈர்ப்பை (ஆனால் பெரியவர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை, எளிதில் மறந்தும் விடுகிறார்கள்)  , ஓரிரு வயதான சகோதர/சகோதரியை இழந்து, முகமே நினைவிலிருந்து மறைந்து (புகைப்படங்கள் அதிகம் எடுக்காத காலம் அது),சிரிப்பாக,மழலையாக மட்டுமே  நினைவில் தங்குவதை யாரும் உணர முடியும்.
‘பம்பாய் 1944’ குறுநாவல்  ‘bildungsroman’ (ஒருவன் தன் பேதைமை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சிறுவன்/இளைஞன் பிறகு ஆண் என்று மாறுவதை விவரிப்பது) பாணி கதை. உறவினர் வீட்டில் வாழும் கதை சொல்லி, பிறகு அண்ணனுடன் பம்பாயில் வசிக்கிறான். படித்து முடித்து வேலைக்கு செல்கிறான், புதுஅனுபவங்களை/எதிர்கொள்கிறான். அவனுக்குத்  தெரிகிறதோ இல்லையோ, அவனைத் தொடரும் வாசகனுக்கு அவனுக்கு ஏற்படும் முதிர்ச்சி புரிகிறது. புது உறவுகள் மலரும் என்ற நிலையில், ‘மணல்’ குறுநாவல் போல், ஒரே நேரத்தில், திடீரென்று   முடிந்து விட்டது போன்றும், அதே நேரம் மிகப் பொருத்தமானதாகவும் தோன்றும் tantalizing முடிவோடு, கதை முடிகிறது. பால்ய காலத்தைப் பற்றிய இந்தக் கதைகள் தனித் தனியாக பார்க்கும் போது, மற்றவற்றிலிருந்து வேறுபட்டு அதே நேரம் தன்னளவில் முழுமையாக  இருந்தாலும், இவற்றை மொத்தமாகப் பார்ப்பது அ.மி  சொல்வதை ஒரு முழு வாழ்க்கையாக/நிலவியலாக/காலகட்டமாக தொகுத்துக் கொள்ள உதவுவதோடு அவர் புனைவுகளைப் பற்றிய இன்னும் காத்திரமான சித்திரத்தை அளிக்கும்.

நிறையத் தகவல்கள் இருந்தாலும்,  ஊதிப் பெருத்த உரைநடையாக இல்லாமல், எப்போதும் போல் எளிமையான அதே நேரம் அடர்த்தியான உரைநடையை இந்தக் கதைகள் கொண்டுள்ளன. ஒரு கதையில், கதை சொல்லியின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்து விட, தன் பால்ய கால அனுபவத்தை
எனக்கு ஒரு அண்ணா உண்டு.  சுந்தரம். அவன், அப்பா இருக்கிற சிறுவனாக உறவினர் வீட்டுக்குப் போய் விளையாடியிருக்கிறான். நான் எப்போதுமே அம்மாவுடன் சமையல் அறையில், இல்லது போனால் இருட்டாக உள்ள ஸ்டோர் அறையிலேதான் வளர்ந்தேன். குழந்தையிலிருந்து அடுப்புக் கணப்புடன் இருட்டுக்கும் எனக்குப் பழக்கமாகிவிட்டது
சொல்லும் சிறு பத்தி, கதைசொல்லியை பற்றி மட்டுமல்ல, அவன் தாயின் நிலைமை பற்றியும், ஏன் ஒரு காலத்தில்  கணவனை இழந்த பெண்கள் அனைவரின் நிலைமையையும் (இன்றும் அந்தச் சூழல் சில இடங்களில் இருக்கக் கூடும்), ஒரு பறவைக் கோணத்தில் சொல்லி விடுகிறது
 

ASOKAMITHTHIRAN-11-APPA-2 (1)
 
(அசோகமித்திரன், தன் தந்தையின் மடியில். நன்றி : காலம் இதழ்)

நிஜாமின் புகைப்படங்களை பற்றி அவை “‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று கூறுவது போலிருந்தது”, ஐந்து பெண்களைப்  பெற்ற ராமலட்சுமி, முதல் மூன்று பெண்களுக்கு உறவிலேயே திருமணம் முடித்தப் பின் “உறவினர்களில்  அதற்கு மேல் யாரையும் கண்டெடுக்க முடியவில்லை”  எனபதால் வரதட்சணையோடு கல்யாணம் செய்ய வேண்டிய நிலைமை என வாழ்வில் இயல்பாக, அதன் துயரத்திலும் உள்ள அபத்தத்தை, தனக்கே உரிய இயல்பான அங்கதத்தோடு, அதே நேரம் சக மனிதர்கள் மேல் உள்ள பரிவோடும் கூறிச்செல்கிறார்.
பெண்கள் படும் துயரங்களை, அவர்கள் வாழ்வை பரிவோடும், கருணையோடும் எழுதுபவர் அ.மி. இந்தப் பெண்கள் ஒரே வார்ப்பில் படைக்கப்பட்டவர்கள்  இல்லை.  முற்றிலும் பலவீனமானவர்களோ அதே நேரம் தங்கள் தளைகளை தகர்த்தெரிபவர்களோ  இல்லை. தன் ஐந்து பெண்களையும், கணவனின் தயவின்றி வளர்க்கும் திடம் ராமலக்ஷ்மியிடம் (கட்டைவண்டி) உள்ளது. அவர் கடைசி பெண் சுய முயற்சியில் கணினி கற்று, முன்னேற முயல்கிறார். ஆனால் கணவர் என்ன செய்கிறார் என்று பிறர் ராமலக்ஷ்மியிடம் கேட்டால்   “அவர் என்ன பண்ணுவார். கட்டைவண்டி ஓட்டுவார் “ என்று (சமுதாயம்/மரபு கற்பித்துள்ளபடி)விட்டுக் கொடுக்காமல் சொல்கிறார். கணவன் இறந்த பின், தன் பிறந்த வீட்டில் குரலற்றவராகவே பல காலம் இருக்கும் கதைசொல்லியின் தாய் (பம்பாய் 1944), தன் பெரிய மகன் வேலைக்குச்  சேர்ந்து, ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து, அவனுடன் வசிக்க ஆரம்பித்தவுடன், இயல்பாகவே தன்னுடைய ஆளுமையை மீட்டெடுத்து யாரும் அறிவிக்காமலேயே, பெரிய மகன்/மருமகள், சிறியமகன் உள்ள அந்த வீட்டின் தலைவராகிறார். ஆனால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை.
நிகழ்காலத்தில் நடக்கும் ‘ஒரு சொல்’,’குடும்ப புத்தி’ ஆகிய கதைகளில் வரும் பெண்கள் நாம் மேலே பார்த்தவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், இவற்றின் கோணமும் கோணமும் வேறு மாதிரி உள்ளது.இந்தக் கதைகளில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இவற்றில் மனைவி, கணவனை மோசமாக ஆதிக்கம் செலுத்துபவராக உணர்த்தப்படுகிறார். கணவன், சமையல் போன்ற வேலைகளில் மனைவிக்கு உதவுவது மிகவும் பெருந்தன்மையான விஷயமாக (பல கணவர்கள் நிஜத்திலும் அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதும் உண்மை),அதை அவர்களின் மனைவிகள் உணராதவர்களாக இருக்கிறார்கள். நவீன யுகத்தில் மாறி வரும் கணவன்-மனைவி உறவின் இயக்கங்களை (dynamic), ஆண் உணராமல் இருப்பதை இந்தக் கதைகளில் குறிப்பிடுகிறாரா, அல்லது இவை ஆசிரியரின் கருத்தா என்று தெளிவாக இந்தக் கதைகளில் வெளிவரவில்லை 
‘சுப்பாராவ்’ என்ற கதை கதைசொல்லியின் அணிக்கு கிரிக்கெட் போட்டியில் கிடைத்த எதிர்பார்க்கவே  முடியாத வெற்றியைப் பற்றியது.  ‘under dog’ வெற்றி பெறுவது என்ற பொது இழை இருப்பதால்  ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ தொகுப்பில் உள்ள ‘பேப்பரில் பேர்’ கதையை இது ஞாபகப் படுத்தினாலும்,
இரண்டிலும் கதைசொல்லிகளின் பார்வை வேறு.
சுஜாதாவின் கதையில் ஒரு சாகச உணர்வு உள்ளது. பலஆண்டுகள் கழித்தும், கே.விக்கும், சுஜாதாவுக்கும் வெற்றியின் அந்தச்  சிலிர்ப்பு, இன்னொரு போட்டி ஏற்பாடு செய்யலாமா என்று விளையாட்டாக பேசுமளவுக்கு உள்ளது.  ‘சுப்பாராவ்’கதையில்,வென்றதைப் பற்றிய  நம்பமுடியாமையை (wide eye disbelief), மேட்ச் நடந்த அன்றும் சரி, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதை நினைவு கூறும் போதும் சரி கதை சொல்லி உணர்கிறார், கண்டிப்பாக இவர் மறு போட்டி பற்றி பேச/நினைக்கக் கூட மாட்டார்.  மேலும் இந்தக் கதையின் மையப் புள்ளி, மேட்சில் வென்றது அல்ல.  போட்டிக்குள்-போட்டியாக (contest within a contest), கதை சொல்லியின் மனதில் ஐம்பதாண்டுகளாக உள்ள ஒரு சிறு உறுத்தலே மையப் புள்ளி. ஒரே கதை களத்தை/சம்பவத்தை இரு எழுத்தாளர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்ற வகையிலும்  இந்தக் கதை சுவாரஸ்யமானதே.
‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’, ‘கடை திறக்கும் நேரம்’ கதைகள் போன்று திரைப்படங்களில் நகைச்சுவை சம்பவங்கள் வந்துள்ள நிலையில், அவற்றை இருபக்கக்கதைகளாகப்  படிப்பது கொஞ்சம்  ஆச்சர்யத்தையும்/குழப்பத்தையும்  அளிக்கின்றது.
சிறுகதைகளில் ‘திடீர் திருப்பத்துடன்’ முடியும் கதைகள் (twist endings) பிரபலம். ஆனால் அந்த இறுதித் திருப்பம், வாசகனுக்கு அதிர்வூட்ட வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக, கதையுடன் ஒட்டாமல் போகவும் வாய்ப்புள்ளது . இந்தத் தொகுதிகளில் உள்ள கதைகளிலும் திருப்பம் என்று கருதக்கூடிய முடிவுகள் உள்ளன, ஆனால் அவை கதையின் போக்கை மாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கோடில்லாமல்,முன்நடந்த சம்பவங்களை, பாத்திரங்களைப்  பற்றி அதுவரை நமக்கு உள்ள முடிவுகளை, மறுபரிசீலனை செய்ய தூண்டுபவையாக, கதையின் போக்கோடு ஒட்டியும் உள்ளன.
‘நாடக தினம்’ கதையில் சண்முக சுந்தரம் நடத்தும் நாடகத்தின் கதாநாயகி நாடக தினம் அன்று வர முடியாத சூழல் திடீரென்று ஏற்பட, முன்பு கதாநாயகியாக நடித்த பாக்கியத்தை மீண்டும் நடிக்க அழைக்கிறார். பாக்கியத்தை  ஒப்புக்கொள்ள அவர் கால்களில் விழும் போது . நாடகம் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவரை நாம் காண்கிறோம். பாக்கியம் இறுதியில் ஒப்புக்கொண்டு, மாலை நான்கு மணிக்கு வந்தால் போதுமா என்று கேட்க, நாலரை மணி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சண்முக சுந்தரம் வீடு திரும்புகிறார். ஆனால் வீடு வந்தவுடன்  ரிக்ஷாக்காரரிடம்,  மூன்று மணிக்கே பாக்கியம் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வர சொல்கிறார், கதை இங்கு முடிகிறது. கையறு நிலையில் உள்ள மனிதராக    கதை நெடுகிலும் வருபவர், பற்றிக்கொள்ள ஒரு ஊன்றுகோல் கிடைத்தவுடன், பல ஆண்டுகால அனுபவம் உள்ள  நாடக முதலாளியாக,  இன்னொரு தவறு நடந்து விடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கை உணர்வுடையவராக தெரிகிறார்.  அவருடைய முந்தைய செயல்கள் (காலில் விழுவது போன்றவை) உணர்ச்சிப்பெருக்கில் செய்யப்பட்டவையா அல்லது பாக்கியத்தை ஒப்புக் கொள்ள வைக்க  திட்டமிட்டே செய்யப்பட்டவையா?
‘கோயில்’ என்ற கதை, சூட்சுமமான, அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிறது. யதார்த்த பாணி கதையாக ஆரம்பிப்பது, ஒரு கட்டத்தில், வேறு தளத்திற்கு நகர்ந்து, ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வை (foreboding ) அளித்து, மிகை யதார்த்தமாக(surreal)  முடிகிறது. இந்த மாற்றங்கள், முடிவு அனைத்திலும் கதையின் நடையில் உருவ அமைதியும், அதன் போக்கில் எப்போதும் ஒரு சம நிலையும்  உள்ளது. கதையின் நடையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமலேயே இரு வேறு தளத்தில் இயங்கும் கதைகளின் உணர்வுகளை கொடுப்பதே இதன் சிறப்பு.
‘நண்பனின் தந்தை’ தொகுப்பை பற்றி அ.மி ‘இக் கதைகள் மங்கலாக இருந்த எனது கடந்தகால நினைவுகள் சிலவற்றை தெளிவாக்கின’.வாசகர்களும் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இயலும் என்று நம்புகிறேன். என்றும்  ‘1945இல் இப்படியெல்லாம் இருந்தது’ தொகுப்பில் ‘இவை எனக்களித்த மன நிறைவை வாசகர்களும் பெறக் கூடுமானால் நான் மிகுந்த மகிழ்சியடைந்தவனாவேன்’ என்கிறார்.  இரண்டும் மிகச் சரி, வாசகருக்கும் அ.மி புனைவுகளைப் பற்றியும் இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. கதைகளின் களங்கள் பரிச்சயமானதாக  இருந்தாலும், நம் தாத்தாக்கள் (முன்னோர்கள்) சொல்லும் நினைவுகளை, ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவற்றில் உள்ள புதிய நுணுக்கங்களால் (nuances) எப்போதும் மகிழ்வோடு தான் கேட்போம் இல்லையா. “.. இன்று   என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொண்டு விடுகின்றன. எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது” என்று படிக்கும் போது எழும் நெகிழ்ச்சியோடு, வாசகனாக இன்னும் அவர் எழுத வேண்டும் என்ற குரூரப் பேராசை தோன்றுவது , அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.