சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம்

ஜோனாதன் ஜேம்ஸ் ஆகிய ஜே.ஜே., ஆல்பெர் காம்யு இறந்த நாளுக்கு மறுநாள் இறந்து போகும் எழவுச் செய்தியுடன் தொடங்குகிறது நாவல். மலையாள எழுத்தாளனான ஜே.ஜேவைப் பற்றி தமிழில் ஏன் எழுத வேண்டுமென்று பாலு என்ற கதைசொல்லியின் வியாக்கியானத்தை முன் வைத்து கதையைத் துவக்குகிறார் சுந்தர ராமசாமி. உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்லி.

JJ_Sila_Kurippugal_Sundara_Ramasamy_Kalachuvadu_Classics_SuRa_Authors_Tamil_Books

ஜே.ஜே. சில குறிப்புகள், இதுவரை நான் படித்த எந்த நாவல்களைப் போலும் கிடையாது. இது நாவலா அல்லவா என ஒரு கணம் திகைக்கச் செய்யும் கட்டமைப்பைக் கொண்ட புத்தகம். நாவலென்றால் தொடர்ச்சியான சம்பவங்களினாலான, ஒரு முடிவை நோக்கி பயணிக்கும் கதையெனவே கருதப்படும் வேளையில், இதுவும் நாவல்தான் ஆனால் கதையென தெளிவாக எதுவும் கிடையாது என்று உணரத்துகிறது. ஒரு கதாபாத்திரம், அக்கதாபாத்திரம் குறித்த சில மனிதர்களின் கோணங்களில் கருத்துக்கள், பின் அக்கதாபாத்திரத்தின் சொந்த எண்ணக் கீற்றுகளின் சில துளிகள், அவ்வளவே இந்த நாவல்; ஆனால் ஒரு நாவலுக்குரிய ஒருங்கிணைப்புடன். நாவல் என்றால் என்ற என்ன என்பதான விளக்கத்தையே  நம்மை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் கட்டமைப்பு.

சிறிது ஜே.ஜே பற்றிய தத்துவ விசாரணையுடன் தொடங்குகிற நாவல், பாலு என்ற எழுத்தாளனின் ஆதர்சமாக ஜே.ஜேவை அறிமுகப்படுத்தும்போதுதான் நாம் முதன்முதலாக ஜே.ஜே வைப் பார்க்கிறோம். ஜே.ஜேவைப் பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கும் பாலுவின் மூலம் நாம் ஜே.ஜே ஒரு பெர்பெக்‌ஷனிஸ்ட் என்ற பிம்பமாகவே அறிந்து கொள்கிறோம். போகப்போக இது அத்துணை உண்மையில்லையென்றானாலும், அவன் ‘உண்மையைத் தேடியவன்’ என்றதில் மாற்றமில்லை.

ப்ளாக் எழுத வந்த புதிதில் ’பின்நவீனத்துவம் என்றால் கட்டுடைப்பு இருக்க வேண்டும்’ என்பது பரவலான நகைச்சுவை. ஆனால், பின்நவீனத்துவம் என்றால் என்னவாக இருக்க இயலும் என்று என் நாவு லேசாக சுவை கண்டது இந்த நாவலில்தான். பாலு என்ற fanboy ஜே.ஜே பற்றி எழுதத் தேடி அலைவதாக தொடங்கும் நாவல், அங்கங்கு அவன் சந்திக்கும்  சில நபர்கள் அளிக்கும் தகவல்கள் மூலமாக ஜே.ஜே வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் விவரணையாக பரவி, புத்தகத்தின் இரண்டாவது பாகம் முழுக்க அவனது டைரி குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக முடிகிறது. இன்னுமே நான், ’கதையில் இது நடந்தது’, ’கதையின் முடிவு’ என்றல்லாமல் நாவல், புத்தகம் எனக் கூறுவதிலேயே தெரியும், இது நாவலேயன்றி கதையல்ல. கதைசொல்லி ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறாரே தவிர, ஒரு கட்டத்தில் நாவலை மெல்ல பாலுவிடமிருந்து எடுத்து பத்திரமாக வாசகனின் கையில் கொடுத்துவிடுகிறார். ஒரு வகையில் நாம் நாவலின் நடை, ஜேஜேவின் குணாதிசயங்களுக்கு பழக்கப்பட்டபின் கதைசொல்லி அதிகம் அவசியப்படவில்லையென்பதாலோ என்னவோ, பாலுவின் விவரணைகள் பெரும்பாலுமாக குறைந்து ஜே.ஜேவின் வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் நாம் ஜேஜேவை நேரடியாக அறிகிறோம், பாலுவின் ரசனைகளின் இடையூறுகள் இல்லாமல்.

Sundara_Ramasami_Tamil_Writers_Famous_Authors_Caricature_Paintings

 உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார். இது மட்டுமல்லாது அரசியல்வாதி, எழுத்தாளர்கள், சக சாதாரண மனிதன், வாசகன், ரசிகன், ஆத்திகன், நாத்திகன் என எல்லாருக்கும் ஒரு ஊசி வைத்திருக்கிறான் ஜே.ஜே; ஊசியின் தடிமன்தான் வேறு; மருந்து ஒன்றுதான்- உண்மை. இதில் சுவாரசியமான விஷயமென்னவென்றால் இல்லாத ஒரு எழுத்தாளனும் எழுத்தாளக்கூட்டமும் நிஜத்தில் இருப்பதான தோற்றத்தை நாம் நம்பும் வகையில் அங்கங்கே குறிப்புகளைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் சு.ரா

இவ்வகையில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழலே உருவாக்கி, அதைப் பயன்படுத்தி, தமிழகத்தின் அரசியல், எழுத்துலகம், அறிவுச்சூழல் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார் சு.ரா.. கதையின் நோக்கம் விமர்சனம் செய்வதோ நொட்டை சொல்வதோ என்பதையும் தாண்டி நம்மை அது குறித்து  சிந்திக்க வைப்பதாகவே தோன்றுகிறது.

தொடக்கத்தில் ஒரு தியரடிக்கல் அப்ரோச்சாக வெறுமனே தத்துவ வியாக்கியானம் போல இருந்தாலும் 50 பக்கத்தைத் தாண்டிய பிறகு புத்தகம் கீழே வைக்க முடியாத அளவு சுவாரஸ்யம். என்றுமில்லாத பழக்கமாக பென்சிலும் கையுமாக உட்கார்ந்து அடிக்கோடிட்டபடி படித்துக் கொண்டிருந்தேன். இந்த அறிமுகமே ஒரு வகையில் கிட்டத்தட்ட, சில மதில் பூனைகளாக கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, படிக்கலாமா என கேட்கும் நண்பர்களுக்கு ஊக்கமூட்டவே. ஒரு கட்டத்தில் புத்தகத்தில் வரும் பாலு சொல்வது போல, ”புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜேஜே இரண்டாவது வகையைச் சார்ந்தவன்”. இந்த நாவலோ ஒரு கட்டம் தாண்டியதும் தினமும் வேக்ஸ் செய்யப்பட்ட மால் பாத்ரூம் கண்ணாடி போல ஒரு தெளிவு பெற்று விடுகிறது. பின்னுரையில் சுகுமாரன் சொன்னது போல நமக்குத் தோதான கருத்துக்களைப் பிடித்துக் கொண்டுவிடுகிறோம். வரும் வருடங்களில்  இந்தப் புத்தகம் மென்மேலும் வெவ்வேறு ஒளிகளின் கீழ் வெவ்வேறு நிறங்களில் எனக்கு வெளிப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

பாலுவால் ஆதர்ச மனிதனாக பிசிறில்லாது அறிமுகமாகிறான் ஜேஜே. அடுத்தவர் கூறும் சம்பவங்கள் மூலம் அவனுடைய குணங்களும் எண்ண ஓட்டங்களும் விளக்கப்படும்போது வழவழப்பான ஓட்டினைக் கொண்ட அவித்த முட்டையை உடைத்து எடுக்கப்படும் முட்டையின் வெள்ளைக் கருவின் மேற்பரப்பினைப் போன்று சில இடங்களில் உடைந்து பிய்ந்தே இருக்கின்றது அந்த ஆதர்ச பிம்பம். ஆனாலும் மஞ்சள் கருவினைப் போன்று உண்மையின் ஒளி உள்ளே பத்திரமாக இருக்கிறது. ஜேஜே: சில குறிப்புகள், உண்மையை நோக்கிய ஒரு ஓய்வில்லா பயணம். ஒருவாறாக ஆதர்ச மனிதனாக தோன்றிய ஜேஜேவின் பிம்பம் மெல்லத் திரிந்து நாவலின் கடைசியில் அவனது பலவீனமான தருணங்களையும் காண்கிறோம், துருத்திய எலும்பாக. ஆனால் அவை அவனைத் தடைகளைத் தாண்டி இலக்கை நோக்கி ஓடும் தடைஓட்டப்பந்தய வீரனாகக் காட்டுகிறதேயொழிய, தரையில் நீச்சலடிக்கும் இயலாமையாக வெளிப்படவில்லை.

உண்மை, உண்மை எனக் கூவுவது ‘சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பது போலான பட்டவர்த்தனமான உண்மைகள் மாத்திரமல்ல. நம் உள்மனத்தில் உள்ள நாமே ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மைகளும் உண்டு. மனப்பூர்வமாக கூறாத பிறந்தநாள் வாழ்த்து, ஊருக்காக பின்தொடரும் முற்போக்குத்தனம், புரட்சிக்குக் காத்திருக்கும் மத்தியதர குடும்பஸ்தன், தன் மகனுக்கு கல்யாணம் செய்தால் பொறுப்பு வருமெனும் தந்தை, பங்களா உள்ள கம்யூனிஸ்ட், பக்தியுள்ள நாத்திகன் என பெரும், சிறு உண்மையில்லாத் தன்மைகள் நமக்கு எவ்வளவு புளித்த பாலென்றால், நமக்கு அது இப்பொழுது தப்பாகப்படுவதில்லை. ஹிட்லரின் அமைச்சர்களில் ஒருவரான கோயபல்ஸ் ஒரு மிகப்பெரிய பொய்யைச் சொல்லிவிட்டுத் அதையே தொடந்து சாதித்தால் உண்மையாக்கிவிடலாம் என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு

’Breaking Bad’ என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகத்தில் வரும் வால்டர் வொயிட் ஒரு வேதியியல் ஆசிரியனிலிருந்து ஒரு போதைப் பொருள் கடத்தல் மன்னனாக ஆகிறான். ஆன பின், பல கொலைகள் செய்த பின், கடைசியில் குட்டு வெளிப்பட்டு, மறைந்து வாழ்ந்து கஷ்டப்படுகிறான். அந்த சமயத்தில்தான் இத்தனை காலம் தனக்கு இருப்பதாகக் கருதும் moral sense என்பது உண்மையில் சமூகத்துக்காக, தன் சுயநலத்துக்காக தானாக இட்டுக் கொண்டதாக உணர்கிறான். அவன் அதை உடைத்து தனக்கு moral senseஓ, நியாய தர்மமோ பொருட்டல்ல, சுயநலமும், குடும்ப நலமுமே முக்கியம் என உணரும் அந்தத் தருணம், அந்த தொலைக்காட்சி தொடரின் காவிய உச்சத்துக்கு இட்டுச் செல்கிறது. (பார்க்கவில்லையென்றால் பார்க்க வேண்டிய தொலைக்காட்சித்தொடர்) நல்லதோ கெட்டதோ உள்ளிருக்கும் உண்மையை உணர்வது இலக்கை அடைய உதவும். அல்லது வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு தவறான பாதையில் போவது போன்றே. நம் கையில் முடிவிருப்பதில்லை. உண்மையை, ஜேஜேவைப் போன்று, ஒரு சர்வ ரோக நிவாரணியாகக் காண்பதைத் தவிர்த்தாலும் அது பல variableகளை நீக்கி வாழ்வை எளிமையாக்குவது உண்மை; கடினமாக்கி விடவும் செய்யலாமெனினும், சிக்கல் குறையும்.

இந்தப் புத்தகம் பற்றிய முக்கியமான விமரிசனங்களில் பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரையும் ஒன்று – இவர் சொல்வது போல்தான் இந்தக் கதை முழுக்க விமர்சனமாக ஒரு எள்ளல் கலந்தே எழுதியிருக்கிறார் சு.ரா. ஜே.ஜேவை விடுத்து கதையைப் பார்க்க நினைத்தாலும் அது இயலும். பாலுவைப் போல அவனையும் ஒரு கருவியாகக் காண இயலும். பெருமாள் முருகன் கொடுத்த அத்தனை மேற்கோள்களும் கொடுக்க நினைத்தேன் நானும். ஆனால், இங்கு அப்படி கொடுத்தால் வளவளவென்று போய்விடுமெனத் தோன்றியது என் எழுத்து நடையில் – மேற்கோளிட்டு ஓயாது இந்த புத்தகமெனக்கு. இவர் சொன்ன எல்லா விமர்சனங்களையும் உணர்ந்திருந்தாலும் எனக்கு இவையனைத்துக்கும் அடியில் உள்ள சரடு, ‘உண்மை’ என்றே தோன்றுகிறது. ‘உண்மையைத் தேடியவன்’ ஜேஜே என்பதுதான் நாவலின் திறவுகோல் என எனக்குப் படுகிறது.

முல்லைக்கல் நாயர் ஒரு சமயத்தில் உடைந்து விடுகிறான். ’ஜேஜே என்னை வெறுத்துவிடுவானோ? நான் என்ன செய்வேன், எனக்கு நான் தொடரும் கொள்கைகளில் ஜே.ஜேவைப் போல சந்தேகம் உண்டு. ஆனால் நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? அதற்கெல்லாம் என் எதிரிகள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?’ என்ற தொனி வரும் வகையில் அவன் வருந்திப் பேசுவதை கம்யூனிஸத்தை தாக்கியிருப்பதாகக் கருதி பிரச்சினை பண்ண இடமிருக்கிறது. ஆனால் இதற்கும் அடிநாதம், ‘உண்மையைக் காண தைரியமில்லாதவன் X உண்மையைத் தேடுபவன்’ என்ற எதிர்மறைகளைப் பொருத்த முடியும்.  ஒவ்வொருத்தனுக்கு தோதான கருத்துக்களை எடுத்துக் கொள்கிறோம் என்று சுகுமாரனின் பின்னுரையிலிருந்து இக்கட்டுரையில் மேற்கொளிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். வாசிப்பிலும் விவாதத்திலும் முக்கியமான சமாச்சாரமே, அவனவன் பார்வையில் அர்த்தம் செய்துகொள்ள முடியும் என்பதை முதற்கட்டம் அங்கீகரிப்பதுதானே!

ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் பலமாதிரி புரிந்து கொள்ளலாம் என்றாலும், எல்லாரும் ஒப்புக்கொள்ளக்கூடியது, அரவிந்தாட்ச மேனன் போல ‘செவனே’ன்னு இருப்பதுதான் சொர்க்கமென்கிறார் சு.ரா என்பதுதான். அது சரியென்றே நினைக்கிறேன்.

ஜே.ஜேவின் டைரிக் குறிப்புகளின் தொகுப்பு பின் வருமாறு முடிகிறது:

“அரவிந்தாட்ச மேனன் பேனாவுக்கு மை ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சவரம் செய்துகொள்வதை, நகம் வெட்டிக் கொள்வதை, வேட்டியைச் சரிவரக் கட்டிக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். தாளத்திற்கும் லயத்திற்கும் உள்ள இசைவையே அவரிடம் பார்த்திருக்கிறேன். இவரை ஒத்தவர்களே உண்மையான கலைஞர்கள்”.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.