உங்களின் மாருதி கார் விபத்திற்குள்ளாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போனால் போகிறது என்று மாருதியின் சல்லிசான விலைக்காகவாவது அதே காரை மறுபடி வாங்குவீர்கள். அதே மாருதி ஒரு மிகச் சிறிய சாலை உரசலுக்குப் பின் எரிந்து போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே காரை மறுபடி வாங்குவீர்களா?
ஹுண்டாய்க்கோ ஹோண்டாவிற்கோ மாறிவிடுவது மனித குணம்.
ஆனால், எண்பதாயிரம் டாலர் (கிட்டத்தட்ட ஐம்பத்தி ஒன்று இலட்சம் ரூபாய்) பெறுமானமுள்ள கார் எரிந்து போனாலும், அதையே மறுபடி வாங்குவேன் என்கிறார் மேரிலாந்து டாக்டர். இது ‘டெஸ்லா’ நிறுவனத்தின் மின்சாரக் கார். உலகின் விலையுயர்ந்த கார் ஓடினாலும் செய்தி… எரிந்தாலும் செய்தி என்பதாக இந்த விபத்து நிகழ்ச்சி யூட்யூபில் விழியமாகப் பகிரப்பட்டு பரவலாக பேசப்பட்டு பார்க்கப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் மூன்று கார்கள் எரிந்துபோனது. எல்லாமே எங்கோ இடிபட்டு, மரத்தில் மோதி, சுவற்றில் சிராய்த்து ஏற்பட்டதால் உண்டான பூர்ணாஹுதிகள்.
விமானங்கள் அடிபட்டு மக்கள் இறந்தால் முக்கிய செய்தி. இந்த மாதிரி சின்னச் சின்ன சில்லறைக் காயங்கள் எல்லாம் எப்படி முக்கியத்துவம் ஆகிறது?
“ஆதாரமற்ற பொருளாதாரம்” என்பார் விக்கி. இந்த செய்திகளால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகிதம் சரிந்திருக்கிறது. சந்தைமுதலில் (market capitalization) நான்கு பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த வருட ஆரம்பத்தில் டெஸ்லாவின் மொத்த சந்தைமுதலே நான்கு பில்லியனாகத்தான் இருந்தது.
நான்கு பில்லியனில் வருடத்தைத் துவக்கிய நிறுவனம் எப்படி ஆறு மடங்காக (600% !!!) வளர்ச்சி கண்டு 24 பில்லியனைத் தொட்டது?
மாயம் ஒன்றுமில்லை. அதன் முதலாளி இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் எலொன் மஸ்க். இவர் பேபால் (PayPal) ஆரம்பித்தவர். அதை ஒன்றரை பில்லியன் டாலருக்கு விற்றவர். விற்ற கையோடு மண்ணிலிருந்து வான்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லும் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) துவங்கினார். கூடவே டெஸ்லாவும் தொடங்கினார். வேகமாக காரை ஓட்டுபவர்களும் இளமையான காரை வேண்டுபவர்களும் விரும்பும் ரோட்ஸ்டர் (Roadster) காரை உருவாக்கினார். அதன் அடுத்த தலைமுறையாக மாடல் எஸ் (Model S) உருவாகி இருக்கிறது.
மற்ற புதுக்கார்களுக்கும் இந்த டெஸ்லா காருக்கும் என்ன வித்தியாசம்?
ஒவ்வொரு வருடமும் புது ரக கார்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்கிறார்கள். ஆனால், அவை எல்லாமே சென்ற வருடத்தின் பழுதுகளை நீக்கி கொஞ்சம் புது கணினி உள்ளே போட்ட கார்கள். அடியில் இருந்து முடி வரை புத்தம்புதிதாக கார் கண்டுபிடித்து கல்ப காலம் ஆகி விட்டது. டெஸ்லா இவற்றில் இருந்து மாறுபடுகிறது. 93% புத்துருக்கோடு உருவானது.
புதுசு கண்ணா புதுசு இருக்கட்டும்… ஐம்பது இலட்சம் செலவழிக்க வெகுமதியானதுதானா?
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினி இருநூறு டாலருக்கு கிடைக்கிறது. ஆனால், ஆப்பிள் மெகிண்டாஷை எந்த மடையராவது இரண்டாயிரத்து ஐநூறு டாலர் செலவழித்து வாங்குவாரா!? அந்த மாதிரிதான் டெஸ்லா கார்.
காரின் முகப்பில் இருக்கும் மூடியைத் திறந்து பார்த்திருக்கிறீர்களா? உள்ளே மகிழுந்தின் இரண்டாயிரத்தி முன்னூற்றி எழுபத்தி நான்கு உதிரி பாகங்கள் இருக்கும். அவை எல்லாம் எங்கெங்கோ இணைக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் பொறி இயக்கும். புகை வரும். ஆங்காங்கே சுடும். எப்படி இதை ஓட்டுகிறோம் என்று கலக்கம் தோன்றி குதிரை காலம் மீது ஏக்கம் கலந்த பாசம் உதிக்கும். டெஸ்லாவின் முன்பக்கத்தை திறந்தால் உங்கள் பெட்டி படுக்கைகளை வைத்துக் கொள்ளலாம். நாய்க்குட்டியையோ கள்ளக்கடத்தலையோ ஒளிக்கலாம். நிஜமாகவே விஸ்தீரமான மேல்விதானம். பின்புறத்திலும் பொதி சுமக்கும் கீழ்விதானம்.
இவை எல்லாவற்றையும் விட வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டாம். வண்டியைக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்திவிட்டால் போதுமானது. அதுவே போய் சொருகிக் கொண்டு மின்சாரத்தை வேண்டிய மட்டுமே இழுத்துக் கொண்டு தன்னுடைய மின்கலங்களை ரொப்பிக் கொண்டுவிடும். ஒரு தடவை நிரம்பிய மின்கலம் கொண்டு முன்னூறு மைல் (ஐநூறு கிலோமீட்டர்) செல்லலாம். அதன் பிறகு மாற்று மின்கலம் போட ஒன்றரை நிமிடங்களே எடுக்கும். அல்லது ஓய்விடத்தில் மறுபடியும் மின்கலத்திற்கு மின்சாரம் காட்டலாம்.
மின்விசையில் செல்லும் கார் ஒன்றும் அமெரிக்காவிற்கு புதிது இல்லை. இதற்கு முன்பே நிஸ்ஸான், செவ்ரொலே போன்ற பல நிறுவனங்கள் மின்னூட்டத்தில் உயிர் பெற்று ஓடும் கார்களை உற்பத்தி செய்கின்றன. மற்ற நிறுவனங்கள் எல்லாம் ஒரு பெரிய மின்கலனை வைத்துக் கொண்டு அதில் சக்தி பெற்று ஓடுகின்றன. ஆனால், டெஸ்லா கார், ஏழாயிரம் லித்தியம் மின்கலஅடுக்குகளைக் (lithium-ion batteries) கொண்டு காரை நகர்த்துகிறது.
புதிய மின்கலன் கண்டுபிடிப்பது சிரமம் ஆனது. அதிலும் கார் போன்ற பெரிய யானையை நகர்த்துவதற்கான சக்தி கிடைக்க செய்வது அதனினும் சிரமம் ஆனது. அவ்வளவு பெரிய மின்கலனிற்கு சிறிய காரில் இடம் கண்டுபிடித்து அடக்குவது அதனினும் சிரமமோ சிரமம். இங்குதான் பெரிய நிறுவனங்களான ஃபோர்டும் டொயோட்டாவும் சறுக்குகிறது.
மின்கலன் கண்டுபிடிக்க டெஸ்லா ரொம்ப சிரமப்படவில்லை. ஏற்கனவே பரவலாக இருந்த லித்தியம் அயனியை கையில் எடுக்கிறது. “நான் ஒரு தடவ சொன்னா…” மாதிரி ஏழாயிரம் லித்தியம் மின்கலங்களை ஒரே இடத்தில் எந்திரமயமாக இணைக்கிறது. காசு அதிகம் இல்லாத லித்தியம். எளிதில் புழங்கும் லித்தியம். ஏற்கனவே புகழ்பெற்ற லித்தியம். எல்லோருடைய மடிக்கணினியிலும் இருக்கும் லித்தியம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. அருகருகே லித்தியம் மின்கலங்களை அடுக்கும்போது தீப்பிடிக்கும் ஆபத்து வருகிறது.
இதனால்தான் இந்த மாதத்தின் மூன்று விபத்துகளும் பங்குச்சந்தையை அச்சமுற வைத்திருக்கிறது. எப்படி இந்த நெருப்புகள் உருவாகின என்று அமெரிக்க அரசும் விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் இவற்றை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்கிறது. அதனால், விலாவாரியான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், காரின் அடிப்பாகத்தில் ஏழாயிரம் லித்தியம் அடுக்குகள் இருக்கின்றன. அதில் கீறல் விழுகிறது. பேட்டரியின்மீது சாலையின் கீழே இருந்த குப்பை உலோகத் துண்டு ஓட்டை போட, அதன்மூலம் ஜ்வாலை ஏற்படுகிறது.
இதை டெஸ்லா சோதிக்கவில்லையா?
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அடியிலும் கடுமையான பாதுகாப்பு பரீட்சார்த்தங்கள் செய்கிறார்கள். இந்த விபத்துகளில் கூட எந்தவிதமான உயிர் இழப்பும் ஏற்படவில்லை. பேட்டரியில் ஓட்டை விழுந்த உடனேயே கம்ப்யூட்டர் திரையில் அபாய விளக்கு எரிந்திருக்கிறது. ஓட்டுநரை ஓரங்கட்ட சொல்லி இருக்கிறது. அவரும் காரை ஒதுக்குப் புறமாக நிறுத்தி, அதனுள்ளே இருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு தள்ளி நின்றபின்பே புகைய ஆரம்பித்து இருக்கிறது.
என் வீட்டு வாசலில் சும்மா நிறுத்தியிருந்த ஃபோர்ட் கார் சில ஆண்டுகள் முன்பு தானே தீப்பற்றி எரிந்து போனது. ஃபோர்ட் கார் நிறுவனத்தை அழைத்தபோது, ரொம்ப சகஜமாக, “ஆமாம்… அந்த வருடத்து மாடலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. உங்கள் இன்ஷூரன்ஸிடம் பேசிக் கொள்ளுங்கள்” என கத்தரித்து விட்டார்கள். ஆனால், டெஸ்லாவில் எரிந்து போன காருக்கு பதில் புதிய காரையும் கொடுத்துவிடுகிறார்கள்.
இந்த மாதிரி இராஜ உபசாரம் டெஸ்லா வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது. நமது கைபேசிக்கும் ஸ்லேட்டு கணினிக்கும் புதிது புதிதாக நிரலிகளை தரவிறக்குவது போல் டெஸ்லா காருக்கும் நாளொரு அப்ளிகேஷனும் பொழுதொரு நிரல்துண்டும் (widgets) போடலாம்.
மற்ற கார்களைப் போல் டெஸ்லாவில் எந்தவிதமான திருகல்களும் ரேடியோ பொத்தான்களும் குளிரூட்டுவதற்கான விசைகளும் கிடையாது. உங்கள் கணித்திரை போல் பதினேழு இன்ச்சில் பெரிய வெள்ளித்திரை. அதோடு ஐபோன் சிரி போல் பேசலாம். “தேவா இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்களைப் போடு” எனலாம். ”எழுபத்திரண்டு டிகிரி வை” என கட்டளை இடலாம். “போலீஸ் மாமா ரேடாரில் வேவு பார்க்கிறார்” என்பதை அறிந்து பம்மலாம். சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்கலாம். அப்படி தவிர்க்க இயலாமல் மாட்டிக் கொண்டால் தி ஹிந்து பேப்பரை வாசிக்கலாம். தானியங்கியாக வாசிக்க சொல்லி கேட்கலாம்.
இந்த வருடம் மட்டும் இருபதாயிரம் டெஸ்லா கார்கள் விற்கும். ஒரு ஒப்புமைக்கு மாஸ்டா (Mazda) நிறுவனம், ஒன்றேகால் மில்லியன் கார்களை ஆண்டுதோறும் விற்கிறது. ஆனால், பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தை மாஸ்டா-வை விட அதிகமாக மதிப்பிடுகிறார்கள்.
ஏன்?
டெஸ்லா என்பது கார் நிறுவனம் மட்டுமல்ல. இந்தியன் ஆயில், எக்ஸான் மோபில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மாதிரி அது எரிசக்தி நிறுவனமும் கூட. இவர்களின் மின்கலன் வடிவமைப்பை தங்கள் கார்களில் பயன்படுத்திக் கொள்ள பலரும் போட்டி போடுகிறார்கள். பென்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அனைத்து மகிழுந்து நிறுவனங்களும் டெஸ்லாவின் மின்கலன் நுட்பத்தை உபயோகிப்பார்கள்.
மற்ற மின்கல வடிவமைப்பாளர்கள் எல்லோருமே மண்ணைக் கவ்விவிட்டார்கள். ஏப்ரலில் ஃபிஸ்கர் (Fisker) நிறுவனம் மஞ்சக் கடுதாசி தந்தது. டெஸ்லாவைப் போலே நஷ்டத்திற்கு காரை விற்ற நிறுவனம். ஆனால், டெஸ்லாவைப் போல் சரியான சமயத்தில் இலாபம் காட்டாமல், திவாலாகிப் போனது.
டெஸ்லா நிறுவனத்தைப் போலவே பெட்டர் ப்ளேஸ் (Better Place)ம் மின்கலன் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. நெடுந்தூரம் செல்லும்போது ஓரிரு மணித்தியாலங்கள் காத்திருந்து மின்கலங்களை உயிரூட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவே, மின்னூட்டம் இல்லாத மின்கலத்தை அகற்றி விட்டு, மின்னேற்றப்பட்ட மின்கலத்தை அந்த இடத்தில் போட்டு, ஓட்டுநரை அனுப்பி வைப்போம். அதன் பின் வேறொருவருக்கு உங்கள் மின்கலத்தை பொருத்துவது. மின்கலம் எதுவாக இருந்தால் என்ன… நமக்குத் தேவை மின்னேற்றம் நிறைந்த பயணம். இதையேதான் டெஸ்லா இப்பொழுது அறிமுகம் செய்கிறது.
அவர்களிடம் எல்லாம் இல்லாத எது டெஸ்லாவிடம் இருக்கிறது?
முதலில் செய்து முடிக்கும் திறனை முடுக்கி விடும் எலொன் மஸ்க். அடுத்ததாக அவர் கொடுக்கும் விட்டமின் சி – பணம். கடைசியாக கார் பந்தாவாக தோற்றமளிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்க பிரபலங்களான ஜே லீனோ முதல் வில் ஸ்மித் வரை வாங்கித் தள்ளும் மோக வேகம்.
எல்லோரும் டெஸ்லா வைத்திருக்கிறார்களே… நமக்கென்று தனித்துவம் வேண்டும் என ஏங்கும் ஆசாமியா நீங்கள்? உங்களுக்கு 1963ஆம் வருடத்தின் ஃபெராரி ஜி.டி.ஓ.வை பரிந்துரைக்கிறேன். விலை அதிகமில்லை. வெறும் 52 மில்லியன் மட்டுமே!
எப்படியோ யாராவது இந்த பெட்ரோல் பூனைக்கு மணி கட்டினால் சரி. பெட்ரோலில் இல்லாத அரசியலா இதில் இருக்கிறது?