கனவுகள் மீதூரும் பாதை

குடுகுடுவென உருண்டோடும் சரிவுகளோடு  நிலம் முடிந்து கடல் தொடங்கும் கார்ன்வால் பகுதியின் ‘நிலத்தின் எல்லை’ ஓரத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது வானம் கருத்துக் கொண்டு வந்தது. ஆகஸ்டு மாதமாயிருந்தாலும் மூன்று நாட்கள் வாரயிறுதியின் போது மழை வந்தாகவேண்டிய நிர்பந்தம் இந்த நிலப்பகுதிக்கு உண்டு. மழை வரத்தொடங்குவதற்கான அறிகுறி தென்பட்டதும் ’நன்னயப் புள்ளினங்காள்’ தத்தம் வீடுகளுக்கு மௌனமாக, து்ரிதமாகத் திரும்பிக் கொண்டிருந்தன. இங்கிலாந்தின் தென்கரைக் கோடியின் கடைசி கற்களின் மீது நின்றபடி `போஸ்` கொடுத்தவர்கள் பூகம்பம் வருவதுபோலக் களேபரமாக்க் கலைந்து, அருகிலிருந்து வண்டிகள் நிறுத்துமிடத்திற்குச் சத்தமாகக் கத்தியபடி விரைந்தனர். பல வாகனங்களும் கலையத் தொடங்கின. வறுத்த மீன், பொறித்த நத்தைகள் விற்றுக்கொண்டிருந்த தற்காலிகக் கூடாரக்  கடைகளின் நிழற்குடைகள் கழற்றி மடிக்கப்பட்டன.

பெரிய விருந்து முடிந்த அரங்கம் போல்,  நாள் முடிவுக்கான ஆயத்தங்கள் மெல்ல தெரியும்போது, நான் கற்களில் இறங்கத்தொடங்கினேன்.

 cornwall

லண்டனிலிருந்து அதிகாலையில் தொடங்க வேண்டும் என்ற எங்கள் திட்டத்தின் முதல் எதிரியைக் கண்டுபிடிக்க ஆளாளுக்கு மற்றவரைக் குற்றம் சுமத்திகொண்டே வந்ததில் பழுத்த வெயிலில் பயணம்.  உடலும் மனமும் புகை வண்டி போல் உஷ்ணப்பட்டிருந்தன. பின் மதியம் கிளம்பி நானூறு மைல்களை ஆறு மணி நேரத்தில் கடந்ததைச் சாதனையாக நான் நினைத்திருந்தேன். உலகின் எல்லா மனைவிகளையும் போல், கணவனின் சாதனையில் ஏதேனும் விடுபட்ட சோதனையைத் தேட என மனைவி முற்பட்டாள்.

இந்தப் பயணத்தில் எங்கெல்லாம் எப்போது போகப்போகிறோம் எனத் துளியளவும் எனக்குத் தெரியாது. இங்கிலாந்தின் தெற்கு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே இப்பயணத்தின் இலக்கு. எப்போதும் திட்டம் போட்டபடி பயணம் செய்வது வழக்கமானாலும், இந்த முறை விடுமுறையும், இடங்களின் வசீகரங்களும் எங்களை வழிநடத்தட்டும் என்றிருந்தோம்.

இங்கிலாந்தில் எந்த நிலப்பகுதியும் கடல்/ஆறிலிருந்து எழுபத்து மைல்களுக்குள் இருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் நீர்ப்பரப்போடே அமைந்திருக்கும் இங்கிலாந்தில் அதன் கடற்கரைப்பகுதிகளுக்குத் தனி அழகுண்டு. தள்ளுபடியில் வாங்கிய துணி போல ரசிக்கத் தொடங்குமுன் சுருக்க முடிந்துவிடும் கோடைக் காலம் தான் நம் எதிரி. பொதுவாக மார்ச் வரை சூரியன் மூன்று மணிக்கே கல்லா கட்டி டியூட்டி முடித்துவிடுவார். இதனாலேயே கோடைக் காலத்தில் தங்குமிடங்கள் எல்லாம் ரொம்ப பிசி.

cornwall-map

ஒரு வழியாக, நிலத்தின் எல்லையைப் (Land’s End) பார்த்துவிட்டு, ஆங்காங்கே போகும் நடைபாதைகள் வழியே அருகில் எங்கள் விடுதி அறையைப் பதிவு செய்திருந்த போர்த்குர்னோ (Porthcurno) கிராமத்துக்குச் சென்று திரும்பிவிடலாம் என முடிவானது. இருட்டிக் கொண்டு வந்ததால் ஒரு கிணறை எட்டிப் பார்ப்பது போல், நிலத்தின் எல்லைக்கருகே நின்று கடலைப் பார்த்துத் திரும்ப வேண்டியதாக இருந்தது. சலனமற்று நின்றிருந்த கடல் கான்க்ரீட் தரைபோலச் சீராக இருந்தது.

நில எல்லை நிறைய கற்குவியல்களாகவே தூரத்திலிருந்து காட்சி அளித்தது. நேரடியாக அங்கு செல்ல முடியாது. நடைபாதை சிறு மலையில் ஏறி, அது கடலுக்குள் இறங்கும் வரை நீளும். அந்த எல்லைக்குப் பிறகு அட்லாண்டிக் சமுத்திரம் ஆரம்பம். அதற்குப் பிறகு இங்கிலாந்துக்கு சூரியனுக்குக் கீழே, குறிப்பிட்டுச் சொலலும்படி கணிசமான நிலமேதும் அதற்குச் சொந்தம் கிடையாது.

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில துண்டுத் தீவுகள் இன்னும் பிரிட்டிஷ் என்ற முததிரையைச் சுமந்திருக்கின்றன, அதெல்லாமும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கப் போகின்றனவோ! ஸ்காட்லாந்தே பிரிந்து தனி நாடாவேன் என்று பயம் காட்டு்கிறது. உலகெங்கும் எத்தனையோ நிலப்பகுதிகளில் எல்லா மக்கள் சமுதாயங்களையும் ஊடுருவி, பிரிவினையை விதைத்த, பல மக்களிடைய பெரும் விரோதத்தை விட்டுச் சென்ற பிரி்ட்டிஷார் அன்று விதைத்த வினையின் விளைவை  இன்று அறுக்கத் துவங்கி்யுள்ளனர்.

கார்ன்வால் பகுதியில் மட்டுமல்லாது இங்கிலாந்தின் கடற்புறப் பகுதி முழுவதும் அழகான மலைத் தொடர்களால் நிரம்பியுள்ளது. தெற்கு மூலையில் சுண்டு விரல் அளவுக்கு நீண்டிருக்கும் இப்பகுதி பல காலங்களாக போர் தடவாளக் கிடங்காக இருந்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மன் மொழி பேசும் குண்டுகளிலிருந்து தப்பிக்க பல லண்டன் குடும்பங்கள் கார்ன்வால் பகுதிக்கு இடம் மாறின. யுத்தத்துக்குப் பிறகு இப்பகுதியின் நிலங்களைப் பராமரிக்கவும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் National Heritage, English Heritage போன்ற அமைப்புகள் இப்பகு்தியைத் தத்தெடுத்தன.

நடைபாதை குறுகலாக மாறி, கிட்டத்தட்ட ஒற்றையடிப்பாதையான படிகள் தொடங்கும்போது மலையின் மேல் பகுதிக்கு வந்திருந்தோம். வரிசையாகப் பெரிதாகவும் சிறியதாகவும் குன்றுகள் எல்லை அரணாக நின்றுகொண்டிருந்தன. ஒரு கி.மீ இறக்கம் என அறிவிப்புப் பலகை காற்றில் ஆடியபடி கைகாட்டியது. பேருந்து நிறுத்துமிடத்தைத் திசை காட்டி சரியாகக் காட்டியதிலிருந்து எங்கள் இறக்கம் எல்லைக்குத்தான் கொண்டு செல்லும் என உறுதிப் படுத்திக்கொண்டோம். அந்த அளவு திசை காட்டி ஆடியதில் ஏற்பட்ட பீதி.

அந்தி சாய்ந்து மழை வரத்தொடங்கிய பின்னும் நகராமல் இருந்து, பொங்கிவரும் கடல் அலைகளைப் பார்த்திருந்தேன். இந்தியாவில் பார்த்திருந்த கடற்கரைகளில் காண்பனவற்றைப் போல பெரிய அலைகள் அல்ல இவை. சின்னச் சின்ன சுருளைகளாக இறுகச் சுருட்டும் பாயைப் போல எழும்பியதும் அதன் காலடியிலேயே விழுந்தன அலைகள். மெல்ல மழை நிற்கும்வரை காத்திருந்தேன். ஒரு நிபந்தனையற்ற வரம், எல்லையில்லா பிரியம் சொரிந்தது போல வானுக்கும் மண்ணுக்கும் ஒரு அடிப்படை புரிதலாகவிரு்ந்தது அம்மழை.

’பெண்ணைப் பெருமயல் செய்தாருக்கு என் செய்கேன்?’ என நம்மாழ்வார் சொற்படி இயற்கையின் கட்டற்ற விசேஷத்தில் நம்மை இழப்பது பயணத்தின் ஒரு நிலை. கடலாகப் பார்த்துப் போட்ட சிறு நிலத்தை நாடென்றும் நகரமென்றும் உறவென்றும் பகையென்றும் பிரித்துச்சொல்வதன் அர்த்தம் தான் என்ன?

Cornwall -lands end

நன்றாக இருட்டுவதற்குள் எங்கள் விடுதி இருந்த போர்த்குர்னோவுக்கு வந்து சேர்ந்திருந்தோம். மலை உச்சியில் சிறு பொட்டு போல ஒரு கிராமம். நான் தங்கியிருந்த விடுதிக்கு கிழக்கே ஒரு நடைபாதை, தூர இருட்டுக்குள் நுழைந்தது. உள்ளே செல்லச் செல்ல நிலவின் வெளிச்சத்தில் கண்கள் முழுவதும் பழகிவிட்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த மலையுச்சியின் ஒரு சரிவை ஒட்டி அந்தத் தேசிய நடை பாதை வளைந்திருந்தது. இங்கிலாந்தில் இருக்கும் பன்னிரெண்டு தேசிய நெடும் நடை பாதைகளுக்கு இதன் வழியே சென்றுவிட முடியும். பாதையோரம் மதியம் பெய்த மழையின் ஈரத்தில் மர இலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கிடந்தன. மலையில் விளிம்பைச் சுற்றியபடி கடக்கும்போது தூரத்தில் கடலின் பழுப்பு நிறம் தெரிந்தது. உறைந்த ஏரியைப் போல அசைவற்ற கடல்.

`இந்தக் கரையில தான் முதல்முறை நான் நிலத்தைப் பார்த்தேன். தெரியுமா?`

நெடுநேரமாகக் கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்ததில் அந்தக் குரல் என்னைக் கொஞ்சம் தடுமாறச் செய்தது. மையமாகச் சிரித்துவிட்டு தொலைத்ததைத் தேடும் தீவிரத்தோடு பாறைகளை மோதி பால்நிறத்தை இழக்கும் அலைகளை மீண்டும் பார்க்கத் தொடங்கினேன்.

`ஆமாம். கிரேக்க அரசன் டேனே மாதிரி. இரும்பு கூடையிலல்ல. மற்றபடி பொட்டி சைஸ் இருந்த படகில் பிறந்து இந்தக்கரையில் இறங்கினோம்.`

பெரியவரை அப்போதுதான் முழுவதாகக் கவனித்தேன். எப்படியும் எண்பது வயதாவது இருக்கும். பள்ளம் விழுந்த கசங்கிய கண்களில் சிறு குழந்தையின் பளபளப்பு. நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த பென்ஸென்ஸ் கடற்கரை அவரது பிறந்த ஊர் எனும் குறுகுறுப்பு அவரிடம் தெரிந்தது.

இங்கிலாந்தின் கடைசி நிலப்பகுதி. பெரியவருக்கு முதல் நிலம்.

`எங்கள் ஊரிலும் இப்படி ஒருவர் உண்டு. பழைய ராஜா. பிறந்த முறை தெரியக்கூடாது என அவனது அம்மாவால் பெட்டியில் வைத்து நதியில் ஓடமானவன்,`. சொன்ன பிறகு நான் சொன்னதன் முழு அர்த்தம் எனக்குப் புரிந்தது.

`ம்ம். நான் என் அம்மாவோடும் அப்பாவோடும் தான் இங்கு வந்திறங்கினேன். அந்தவிதத்தில் அதிர்ஷ்டக்காரன் தான். நீங்கள் பாகிஸ்தான்காரரா?`

`இல்லை. இந்தியன். ஆனால் இங்கு ஆறேழு வருடங்களாக இருக்கிறேன்.` கப்பலில் காதலி வருவதை எதிர்பார்ப்பவர் போல பெரியவர் பரவசமாக நின்றிருந்தார். மேலும் எதையும் அவரிடம் கேட்க விரும்பவில்லை.

`இன்று இரவு மினாக் தியேட்டருக்கு வருவேன். விடுதிக்குப் போகும் நேரம் ஆகிவிட்டது. ஹாவ் எ குட் ஒன்,` எனக் கிளம்பிவிட்டேன்.

மழை வருவதற்கான அறிகுறிகளை மாலை மேகங்கள் தக்க வைத்திருந்தன. இங்கிலாந்தில் பியர், ஃபிஷ் அண்ட் சிப்ஸுக்கு அடுத்து தயார் நிலையில் இருப்பது மழைதான். காட்டேஜை விட்டுக்கிளம்பும் போது மேகங்கள் இல்லாமல் இருந்தன. குடையோடு கிளம்பி, சுற்றியிருந்த ஒன்றிரண்டு தெருக்களை கவனித்தேன். எள் போட்டால் பல நூறு ஆண்டுகளும் அங்கேயே கிடக்கும்.

Minack-theatre-night

அன்றிரவு மினார்க் நாடக அரங்கில் A Midsomer’s dream நாடகம் பார்க்கப் பதிவு செய்திருந்தேன். கோடைக்கால அரங்கம் என்றழைக்கப்படும் மினாக் மேடை மற்றப் பருவங்களில் இயங்குவதில்லை. பென்ஸன்ஸ் பகுதியின் கடல்விளிம்பைத் தொட்டுக்கிடக்கும் மேட்டில் மினாக் நாடக அரங்கு அமைந்திருக்கிறது. நான் உள்ளே சென்று பார்வையாளர்கள் பகுதியின் மேல் வரிசையில் உட்கார்ந்துகொண்டேன். மற்ற வரிசைகள் எனக்குக் கீழே அரைவட்ட வடிவில் வரிசையாக மேடையை நோக்கி சரிந்துகிடந்தன. எல்லாமே கல்லால் கட்டப்பட்ட வரிசைகள். உட்கார்ந்தபின்னர் தான் கவனித்தேன், அந்த அரங்கில் மிகச் சொற்பமாகவே கல்லில்லாத பொருட்கள் இருந்தன. மலையிலிருந்து பிளந்தெழுந்ததுபோல அரைவட்ட உலகம். நான் உட்காரும் இடத்திலிருந்து  திறந்தவெளி அரங்காக அமைந்திருக்கும் மினாக் மேடை கடலுக்கு மேலே மிதப்பது போல கட்டப்பட்டிருக்கிறது. கடலுக்கு மேலே மிதக்கும் மேடை. எங்களுக்கும் நிலவுக்கும் மத்தியில் மேடை.

நாடகம் தொடங்கப்போகிறதென ஒரு மணி ஒலித்ததும் பார்வையாளர் பகுதி விளக்குகள் மறைந்து நாடக மேடை உயிர் பெறுகிறது. நிலவைத் தவிர அங்கு வேறேந்த வெளிச்சமும் இல்லை. மெல்ல மேடையில் இருப்பவை பார்வைக்குத் தட்டுப்படத் தொடங்குகின்றன. `உலகமே ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள்,` எனச் சொன்னவரின் நாடகம் கடல் விளிம்பு மேடையில் நிகழத் தொடங்குகிறது. வீடு திரும்பும் கடற்புள்ளின்ங்களின் சத்தம் கவனத்தைக் கலைத்தாலும், அவற்றின் சிறகடிப்பு சூழலை கூடுதலாக ரம்மியமாக்குகிறது.

மாலையில் சந்தித்த பெரியவரை நினைத்துப் பார்க்கிறேன். இந்த மேடையை விடப் பெரும் நாடகம் நடக்கும் வெளியில் அவர் இன்னும் நின்றுகொண்டிருக்கக் கூடும். அவர் காத்திருப்பதும் ஒரு பெரிய நாடகத்தின் சிறு பகுதியைப் போலத் தோன்றியது. சட்டென எல்லாமே அபத்தமாகவும், ஒவ்வொரு நிகழ்வும் நடிக்கப்படுவது போலவும் தோன்றிற்று. நம் உலகை இதுவரை பார்த்திராத ஒருவன் முதல்முறையாக இந்த மினாக் நாடக அரங்கைக் கடலிலிருந்து பார்த்தால் என்ன நினைப்பான்? அப்போது இந்த அரங்கும், அந்தப் பெரியவர் நிற்பதும் உறைந்து போயிருந்தால், இந்த உலகமே ஒரு மாபெரும் நாடக மேடை என்பதை வேற்றுகிரகவாசி கட்டாயம் நம்பியிருப்பார்.

Minack

1920களில் கட்டப்பட்ட இந்த அரங்கம் அசராது உழைத்த ரொவீனா கேட் (Rowena Cade) எனும் பெண்மணியின் கனவு.  அவர் முதல் உலகப்போருக்கு முன்னர் மினார்க் அரங்கின் வேலைகளைத் தொடங்கிவிட்டார் என்றாலும் போருக்குப் பின்னர் தான் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கின. 1893 ஆம் ஆண்டு பிறந்த போது அவரது தந்தையின் பஞ்சு ஆலை மிகவும் செழிப்பாக நடந்து வந்தது. `Spondon House` எனும் பெயரில் ஒரு பெரிய மாளிகையில் அவர்களது குடும்பம் தங்கியிருந்த போது நண்பர்களது உதவியில் பல நாடகங்களை நடத்தியிருக்கிறார்கள். அவரது அப்பாவிடமிருந்து நாடக ஆசை தொற்றிக்கொண்டாலும், வெறும் கதை திரைக்கதை எழுதுவதோடு ரோவீனா நிறுத்தவில்லை. தானே ஆடைகளைத் தைப்பது, மேடை அலங்காரங்களை வடிவமைப்பது, ஒத்திகை அரங்குகளை தயார் செய்வது என சகல அம்சங்களையும் அவர் மிகுந்த ஆர்வத்தோடு செய்திருக்கிறார். தந்தையின் பஞ்சாலை நொடிந்ததில் சிதறிப்போன குடும்பம் கார்ன்வால் பகுதியில் குடிபெயர்ந்தது.

கார்ன்வால் பகுதி இங்கிலாந்தின் தென் பகுதியின் வால். கடலை ஆசையோடு கைநீட்டி தொட்டுப்பார்க்கும் விரலாக வரைபடத்தில் காட்சியளிக்கும். 1950களில் இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாண்ட் பகுதிகள் இணைந்து United Kingdom ஆகும் சமயத்தில் இங்கிலாந்தின் எல்லைப்பகுதி சச்சரவுகள் ஒரு வழியாக முடித்துவைக்கப்பட்டன. அதன்படி, வடக்கு வேல்ஸ் பகுதியில் இருந்த ஹார்லெக் (Harlech castle) எனும் கோட்டை இங்கிலாந்துப் பகுதியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என விரல் நீட்டி குற்றஞ்சாட்டிய ஜென்மத்துப் பகை முடிவுக்கு வந்தது.

எண்பது வருடங்களாக இயங்கி வரும் இந்த நாடக அரங்கு இப்போதும் வருடாவருடம் கோடைக் காலத்தில் ஷேக்‌ஷ்பியர் நாடகங்கள் முதல் நவீன நாடகங்கள் வரை பலவற்றை நடத்துகிறது. கடல் பின்னணியில் தொன்மக்கதைகள் நடத்தும்போது நாம் அடையும் மன எழுச்சிக்கு அளவே இல்லை எனலாம். எந்தவிதமான மேடை வடிவமைப்பும் இல்லாமல், நாடகக் கதாபாத்திரங்கள் நேரடியாகத் தோன்றி நடிப்பதால் நாம் பண்டைய காலத்துக்கு நேரடியாகச் சென்று சேர்கிறோம்.

நாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது? சமீபத்தில் வந்த செய்தியில் வயதானவர் தன் கையாலே மலையைக் குடைந்து பாதை அமைத்தார் எனப் படித்தேன். ரொவீனாவும் பதினைந்தடி நீளம் உள்ள தூண்களை உருட்டி வந்து கையால் தூக்கி மேடையின் பக்கவாட்டில் அமைத்தார் என அவரது கட்டிட உதவியாளர் தெரிவிக்கிறார்.

ரெண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் எல்லைப்பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் ரொவீனாவால் அரங்கை உருவாக்குவதற்கு எதுவும் செய்ய முடியவில்லை. மினாக் நாடக அரங்கு நடக்கும் மலைக்குள் அவர் நுழையத் தடையிருந்தாலும் நாடக மேஜைகள், தூண்கள் போன்றவற்றை அமைப்பதற்காக அருகிலிருந்து மலைக்கற்களை சேகரித்தவண்ணம் இருந்தார். பழைய ஸ்க்ரூ ட்ரைவர் மூலம் கற்மேடைகளின் மீது பூசிய சிமெண்ட் கெட்டியாகிப் போவதற்கு முன்னர் பல வடிவங்களை அவர் வரைந்துவிடுவார். இப்படியாகப் போர் நடந்த நாட்கள் முழுவதும் அரங்கத்துக்குத் தேவையானவற்றை அமைப்பதில் முனைப்போடு இருந்தார்.

 RovenaCade

ரொவீனா மற்றொரு முக்கியமான சேவையும் செய்தார். ப்ளிட்ஸ்க்ரீய்க் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடந்த சமயத்தில் லண்டன் முழுவதும் இடை விடாக் குண்டுப் பொழிவின் அபாயம் இருந்ததால், புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை கார்ன்வால், வேல்ஸ், யார்க்‌ஷையர் போன்ற மலைப்பகுதிகளிலிருந்த புகலிட மையங்களுக்கு அனுப்பிவைத்தனர். பென்சன்ஸ் பகுதியில் இருந்த புகலிட அமைப்புகளோடு இணைந்து ரொவீனா பணியாற்றினார்.

தனது நாட்குறிப்பில் இதைப் பற்றி எழுதும்போது, `பெயர் தெரியாத அந்த பனிமலர்களை அள்ளி அணைத்துக்கொள்ளும்போது இல்லாத எனது வாரிசுகளைப் பற்றிய எண்ணம் என்னை வதைக்கும். எத்தனை விதமான பிஞ்சுகளை நாம் பரிசுகளாகப் பெற்றிருக்கிறோம். ஒரே நொடியில் அவற்றை எல்லாம் பஸ்பமாக்கித் திருப்பி அனுப்புவதில் தான் நாம் எத்தனை தீவிரமாக இருக்கிறோம்?! ஒரே ஒரு நொடி என் அரங்கின் விளிம்பில் நின்று கடலின் ஆடலையும், வானின் விரிவையும் மனமார உணர்ந்தால் போதும். இப்பேர்ப்பட்ட அழிவுகளை கனவிலும் நினைக்க மாட்டோம்.`

முதல் உலகப்போர் முடிந்ததும் மினாக் நாடக அரங்கு முழுமையாகக் கட்டப்பட்டது. போர் நடந்தபோது ரொவீனா உருவாக்கிய மேடைகளும், கற்தூண்களும் அதனதன் இடங்களில் சென்று அமர்ந்தன. 1932ஆம் ஆண்டு வந்தது. The Tempest எனும் ஷேக்‌ஷ்பியரின் நாடகத்தை அரங்கேற்றம் செய்வது என ரொவீனா முடிவெடுக்கிறார். இரவு எட்டு மணி – இருள் மங்கிய நேரத்தில் மலை உச்சியில் அரைவட்ட வடிவில் கார் விளக்குகள் ஒளிரத்தொடங்கின. அது தவிர ஆங்காங்கே வாயு விளக்குகளும் இயங்கின. மேடையில் போதிய வெளிச்சம் இல்லாதுபோனாலும் வேறொரு மேஜிக் இறங்கியது. பார்வையாளர்கள் உள்ளே நுழையும்போது முழு நிலவு அவர்களை வரவேற்றது. அன்று முழு அரங்கம். மினார்கின் மேஜிக் என்ன என்பதை ரொவீனாவும் புரிந்துகொண்ட நாள்.

தொடர்ந்து வெளிப்புறத்தில் கடலுக்கு மிக அருகே இயங்குவதால் இயற்கையின் சீற்றங்களால் மினார்க் மிகவும் பாதிப்படைந்தது. 1952இல் உதவித்தொகை பெற்றாலன்றி வேறெப்படியும் நாடகங்களை நடத்த முடியாது எனும் நிலைமை வந்தது. தனது கையால் கட்டப்பட்ட அரங்கு அழிவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. லண்டனுக்கு ஓடினார் ரொவீனா. போர் சமயத்தில் செய்த உதவிகளுக்கு பிரதிபலனை எதிர்பாராதவர் என்றாலும் தனது வாழ்நாள் கனவை சிதைத்துப் பார்ப்பதை விட மேலானது எனப் பலரிடம் உதவி கேட்டார். போர் முடிந்த காலகட்டம் என்பதால் அரசு கஜானா நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதால் உதவி கிடைக்கவில்லை. மீண்டும் தனது புகலிடமான கார்ன்வாலுக்குச் சென்றார். அங்கு Cornwall Heritage Socitety என்ற அமைப்பின் உதவி கிடைத்ததில் மினாக் நாடக அரங்கு மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு பின்னடைவுகள் அற்று இன்று வரை நடந்துவருகிறது.

நாடகம் முடிந்ததும் பார்வையாளர்கள் வெளியே போகும்வரை காத்திருந்தேன். கடல் அலைகளின் சத்தம் மட்டும் அந்தப்பகுதியை நிறைத்தது. நான் என் சிறுவயதில் பெரும்பான்மையான நாட்களைக் கழித்த புதுச்சேரி கடற்பகுதி நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பழகிய ஓசை; நாசிக்குள் வரும் காற்று, உப்புக் காற்றால் துருப் பிடித்த என் வீட்டு ஜன்னல் கம்பிகளை நினைவூட்டியது. கடலின் இருண்ட தூரங்களைப் பார்த்தபடி நின்றிருந்தேன். மலையும் கடலும் ஒரே நிறத்தோடு இணைந்தது போலொரு தோற்றம். அரங்கின் விளிம்பிலிருந்து பார்த்தபோது மலையில் வீற்றிருந்த அரங்கம் பெரிய போர்வையை உதறியது போலக் கிடந்தது. கிடைத்த முழுத் தேங்காயை செய்வதறியாது உருட்டிக்கொண்டிருக்கும் நாய் போல மனிதனுக்கு மலைகளை என்ன செய்வதென்று தெரிவதில்லை. சுற்றிலும் கார்ன்வால் பகுதியின் மலைத்தொடர் உறைந்த பேரலை போலக் காட்சியளிக்கிறது.

உள்ளங்கை குழியிலிருந்து

இறக்கிவிடு இறக்கிவிடு எனத்

துடிதுடித்தன விதைகள்

பின்னர் ஓரிரவில் தேவதேவனின் கவிதை வரிகளைப் படிக்கும்போது மனிதனின் துடிப்பும் மினாக் நாடக அரங்குவெளியும் நினைவுக்கு வந்தன. தனது இயல்பின் எல்லை இன்னதென்னத் தெரியாமல் மனிதன் துடிதுடிக்கிறான். அந்த துடிதுடிப்பில் இயலாமையின் நிழலும் ஒளிந்திருக்கிறது.

ஆழிப்பேரலையின் கனம் முழுவதும் கண்களில் அழுத்துவது போலிருக்க லண்டன், கார் பயணம், நிலத்தின் எல்லை, ஷேக்ஸ்பியர் நாடகக் குள்ளன், புதுச்சேரி கடற்கரை வானொலி நிலையம், கடலில் மூழ்கிப்போன ரயில் டிராக் என பல இடங்களும் குழம்பிக் குழம்பி நினைவில் மீண்டன.

பெரியவர் நின்றிருந்த இடத்தைப் பார்த்தேன். தேடி வந்தவரை சந்தித்துவிட்டார் போலும். நான் அறைக்குத் திரும்பினேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.