கொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல் – அவரது சிறுகதைகளுக்கு ஒரு சிறு அறிமுகம்

கொர்த்தாஸார் என்ற பெயரை எண்பதுகளில், சென்னையின் லாண்ட்மார்க் புத்தகக் கடையில் முதல் முறையாக அறிந்தேன். லாண்ட்மார்க் என்று சொல்லும்போது யாருக்கும் கிடைக்கும் வேசியாய் மிகையலங்கார மால்களில் பகட்டுச் சரக்குகளை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறாளே அந்தக் கிழவியைச் சொல்லவில்லை. நவீன உம்ரா ஜான் என என்.ஹெச். ரோட்டின் அடக்கமான அந்தச் சிறு பேஸ்மெண்ட்டில் புத்தகப் பிரியர்களுக்கு நுட்பமான மகிழ்வளித்த அந்தப் பருவப் பெண்ணைச் சொல்கிறேன். அங்குதான் நான் ஆல்பர்டோ மாங்கெல்லின் (Alberto Manguel) அசத்தலான “Anthology of Fantastic Literature’ என்ற புத்தகத்தை வாங்கினேன். அதில், House Taken Over என்ற சிறுகதையின் சுருக்கமான முன்னுரையில் மாபெரும் சிலேயக் கவிஞன் பாப்லோ நெரூதாவின் மேற்கோளையும் வாசித்தேன்:

“கொர்த்தாஸாரை வாசிக்காத எவனும் சபிக்கப்பட்டவன். அவரது எழுத்தை வாசிக்காதிருத்தல் கண்ணுக்குத் தெரியாத மோசமானதொரு வியாதியால் பீடிக்கப்படுவது போல; காலப்போக்கில் அது படுபயங்கரமான பின்விளைவுகளுக்குக் கொண்டு சென்றுவிடும். பீச் பழங்களைச் சுவைத்தேயிராதவனின் தலையெழுத்தைப் போன்ற ஒன்று இது. சத்தமேயில்லாமல் அவனது இதயத்தை சோகம் நிறைக்கும், நாளுக்கு நாள் அவன் முகம் வெளிறிப் போகும் – கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் தலைமுடிகள் அனைத்தையும் இழக்கவும் கூடும்”

அந்த நாட்களில் என் தலைமுடிகள் அனைத்தும் பத்திரமாக, முழுக்க முழுக்க கருப்பாக இருந்தன. நான் நெரூதாவால் வசீகரிக்கப்பட்டேன். இரு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த அவரது வெயிண்டெ பொயமாஸ் தெ அமூர் (Veinte poemás de amor) கவிதைகளை மனனம் செய்தேன். ஒரு காதலி இல்லாத குறையைப் போக்க அது ஒரு நல்ல மாற்றாகத் தோன்றிற்று – “I want to do with you what spring does with the cherry trees” (வசந்த காலம் செர்ரி மரங்களுடன் செய்வதை நான் உன்னுடன் செய்து பார்க்க வேண்டும்). ஸ்ப்ரிங் என்றால் என்னவென்றும் தெரியாது, செர்ரி மரத்தையும் பார்த்ததில்லை. ஆனால் செர்ரி மரங்களை ஸ்ப்ரிங் என்ன செய்திருக்கும் என்பதை என்னால் விரிவாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது!

இன்று ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் என் வீட்டின் முன் உள்ள செர்ரி மரம் சில நாட்களுக்கு மட்டுமே நிகழ்த்தும் அற்புதத்தை பார்க்கும்போதும் அந்நாட்களில் நான் கவிதை வரிகளைப் படித்து அனுபவித்த உணர்ச்சி வேகத்தை மீண்டும் அடைய முயற்சித்து ஒவ்வொரு முறையும் தோற்கிறேன். இப்போது உங்களுக்கும் சொல்கிறேன், நெரூதாவின் இந்த ‘இருபது காதல் கவிதைகள்’ நீங்கள் பதின்ம பருவத்தில் வாசித்ததில்லை என்றால், நம்புங்கள், கண்டிப்பாக உங்கள் ஊழ்வினை உறுத்து வந்தூட்டுகிறது.

எது எப்படியிருந்தாலும் இது போன்ற ஒரு இணையற்ற பரிந்துரைக்குப்பின் கொர்த்தாஸாரின் கதைகளைத் தேடிக் கொண்டிருப்பதைவிட எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. அந்நாட்களில் கொர்த்தாஸார் புத்தகங்களைப் பார்ப்பது என்பது சென்னையில் அவ்வளவு எளிதல்ல. சிறுகதைத் தொகுப்புகளில்தான் வேறு சில கதைகளை வாசிக்க முடிந்தது – என் நினைவாற்றல் சரியாக இருக்கிறதென்றால், க்ளிஃப்டன் ஃபேடிமனின் (Clifton Fadiman) தொகுப்பு ஒன்றில் மறக்கமுடியாத அவரது Southern Thruway படித்திருக்கிறேன். பல ஆண்டுகள் காத்திருந்த பின்னரே இங்கு வாஷிங்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் Blow-up தொகுப்பு என் கைக்கு வந்தது. அதன்பின் கொர்த்தாஸாரின் பல சிறுகதைத் தொகுப்புகளையும் நாவல்களையும் வாசிக்க முடிந்திருக்கிறது.

ஆனாலும்கூட என் வாழ்வில் மெல்ல மெல்ல சோகம் சேர்ந்திருக்கிறது, என் முகம் சொல்லத்தக்க வண்ணம் வெளிறிவிட்டது, சத்தமின்றி என் தலைமுடியும் கொட்ட ஆரம்பித்துவிட்டது. கவிஞர்கள் பெரும் பொய்யர்கள்! ஆனால் கறாராகச் சொல்வதென்றால் நெரூதா சொன்னது எதிர்ப்பொருளில் உண்மையாயிருக்க வேண்டியதில்லை. ஆம், ஆடனின் புகழ் பெற்ற வரியை மாற்றி எழுதுவதென்றால், “நாமனைவரும் கொர்த்தாஸாரை வாசித்து, முதுமை எய்த வேண்டும்”.

julio_cortazar_Authors_Writers_Classics

முதலில் சில அவசிய குறிப்புகள்

கொர்த்தாஸாரின் பிறப்பு – ப்ரஸ்ஸல்ஸ் நகரில், 1914ஆம் ஆண்டு. பெற்றோர் ஆர்ஜென்டீனா நாட்டவர். நான்கு வயதில் ஆர்ஜென்டீனா திரும்புதல், 1930களில் பள்ளியாசிரியப் பணி. 1944-45ல் கொய்யோ பல்கலைக்கழகத்தில் (Universidad Nacional de Cuyo) ஃப்ரெஞ்சு இலக்கியம் கற்பித்தல். 1951ல் பாரிஸ் நகரில் கல்வி பயில உதவித்தொகை பெறுதல். பெஸ்டியாரியோ (Bestiario) என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த அதே மாதத்தில் ஆர்ஜெண்டீனாவிலிருந்து பாரிஸ் பயணம். 1860ல் ‘The Winners’ என்ற அவரது முதல் நாவல் பதிப்பு. 1963ல் அவரது நாவல்களில் மிகப் பிரபலமான ஹாப்ஸ்காட்ச் (Hopscotch) பிரசுரம். அவரது புனைவுத் தொகுப்புகளில் End of the game and other stories (1956), Cronopios and Famas (1962), All fires the fire (1966) முதலானவை குறிப்பிடத்தக்கவை. கவிதை முயற்சிகள் மற்றும் நாவலாகவும் இல்லாத சிறுகதைகளாகவும் இல்லாத கொலாஜ்களிலும் அவர் ஈடுபட்டார். இவற்றில் புகழ்பெற்ற “Around the day in Eighty Worlds”(1967) குறிப்பிடத்தக்க ஒன்று.

Blow-up மற்றும் Southern Thruway ஆகிய சிறுகதைகளால் உந்தப்பட்டு முறையே மிகலாஞ்செலோ அண்டோனியோனி (Michelangelo Antonioni) மற்றும் ழான் ல்யூக் கோதாஹ் (Jean Luc Goddard) படம் பிடித்துள்ளனர். ஒரு அமெச்சூர் ஜாஸ் கலைஞனான கொர்த்தாஸார் ட்ரம்பெட் என்ற இசைக்கருவியை வாசித்திருக்கிறார் (அது காமம் ததும்பும் கருவி என்று நம்பியதால்) மும்முறை மணமானவர். 1984ஆம் ஆண்டு பாரிஸில் காலமானார்.

இனி அவரது கதைகள்.

julio-cortazar-complete_Collections_works_Books_Author_Writer

கொர்த்தாஸாரின் சிறுகதைகள் பற்றி பேசும்போது போர்ஹெஸ் (Borges) சொன்னது இது – “கொர்த்தாஸார் கதை ஒன்றின் கருப்பொருள் என்னவென்று யாராலும் சொல்ல முடியாது. தீர்மானிக்கப்பட்ட வரிசையில் எழுதப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட சொற்களைக் கொண்டவை அவரது சிறுகதைகள். அவற்றைச் சுருக்கிச் சொல்லும்போது ஏதோ ஒன்றை இழந்துவிட்டதை உணர்கிறோம்.” ‘House Taken Over’ என்ற கொர்த்தாஸாரின் முதல் சிறுகதை பிரசுரமாக போர்ஹெஸ் காரணமாக இருந்தார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

எளிமையான கதைக்கரு: ஓரளவுக்கு வசதியான சகோதர சகோதரிகள் இருவர் தங்கள் மூதாதையரின் வீட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் கதவின் மறுபுறத்தில் ஏதோ ஒரு சத்தம் வருவதை சகோதரன் கேட்கிறான். உடனே அவன் கதவைத் தாழிட்டுவிட்டு தன் சகோதரியிடம் சென்று மிகவும் இயல்பாக, “கதவை மூட வேண்டியதாகப் போய் விட்டது. பின் பக்கத்தை அவர்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள்,” என்று சொல்கிறான். அவர்கள் வீட்டின் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்குத் தேவைப்படுவனவற்றில் சில, எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதியில் இப்போது இருப்பதால் வேண்டிய சிற்சில மாற்றங்களைச் செய்து கொள்கிறார்கள். வாழ்க்கை வழக்கம் போல போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நாள் ‘அவர்கள் பகுதியில்’ இருக்கும் சமையலறையிலிருந்து ஒரு சத்தம் வருகிறது. உடனே வீட்டை விட்டு வெளியே ஓடுகிறார்கள். வாசல் கதவை வெளிப்புறம் பூட்டிவிட்டு, அதன் சாவியை வீட்டுக்கருகில் இருக்கும் சாக்கடையில் வீசி எறிகிறார்கள். தப்பியோடும்போது சகோதரி, தான் பின்னுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்த கம்பளி நூல் கண்டைக் கீழே போட்டு விடுகிறாள், அவரகள் தப்பியோடும் பாதையில் விரிந்து அது தொடர்ந்து செல்கிறது.

இவ்வளவு எளிமையான, திறந்த அமைப்பு கொண்ட கதையாக இருப்பதால் ‘எடுத்துக் கொள்ளப்பட்ட வீடு’ பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தருகிறது. முறையற்ற கலவியைத் தண்டிக்கும் மூதாதையர், பணக்கார வர்க்கத்தை வெளியேற்றும் ஒடுக்கப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத வர்க்கம், வேற்றுக் கிரகவாசிகளின் படையெடுப்பு என்று இன்னும் பலவற்றைக் அடையாளம் சொல்லப்படாததாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆனால் இது குறித்து ஒருமுறை கொர்த்தாஸார், இந்தச் சிறுகதை எழுதுவதற்கு முன்பு தான் கண்ட ஒரு கொடுங்கனவைத் தெளிவாக்கிக் கொள்ளவே முயற்சித்திருப்பதாகச் சொன்னார்.

இந்த முதல் கதையில்கூட கொர்த்தாஸாரிய நடையின் முக்கியமான கூறுகளை நம்மால் அடையாளம் காண முடிகிறது. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையின் வழக்கமான வேலைகளைப் பற்றிய விவரணைகள் வாசகருக்குப் பழக்கப்பட்ட இயல்பு நிலையைக் கதையில் நிறுவுகின்றன. அதன்பின் இந்த இயல்புநிலையைக் குலைக்கும் விதமான அசாதாரணத்தின் அறிமுகம். அசாதாரணமும் கதையில் இயல்புத் தன்மை கொண்டதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அடுத்த அசாதாரண நிகழ்வின் நுழைவு இந்த இயல்புநிலையைக் குலைப்பது வரை இதுவே இயல்பாக இருக்கிறது… இது சங்கிலித் தொடராய் தொடர்கிறது. அசாதாரணமானதும் இயல்பானதும் அடுத்தடுத்து இருப்பதைப் போகிறபோக்கில் நிறுவுவதில்தான் நாம் கொர்த்தாஸாரின் தனித்திறமையைக் காண்கிறோம்.

தங்கள் சூழலிலிருந்து பிரிக்கப்படும்போது அசாதாரணமானவை அபத்தங்களாகின்றன. ஆனால், கவனமாகக் கட்டமைக்கப்பட்ட , தமக்கான பின்னணியில் அவை கண்ணைக் கவரும் மெய்ம்மை கொண்டிருக்கின்றன. எனவே லிஃப்டில் பயணிக்கும்போது முயல்களை வாந்தியெடுப்பவன் (“Letter to a Young Lady in Paris”), ஃபூனெஸ்ஸின் பரம்பரை இல்லத்தில் எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வீட்டின் பல்வேறு அறைகளுள் வந்து செல்லும் புலி (Bestiary), என்று அவரால் விளக்கப்படாத, நம்மால் விளக்கப்பட முடியாதனவாக, கொர்த்தாஸார் கதைகளில் நுழைக்கும் எல்லாவற்றையும் சந்தோஷமாக வாசித்துச் செல்கிறோம். (Bestiary கதையை படிக்கும் போது அதில் புன்யுவெல் (Bunuel) திரைப்படம் ஒன்றில் வருவது போல் இருக்கும் ஒரு காட்சியைக் கண்டுபிடிகக முயலுங்கள்.)

“அசாதாரணமானதும் கூட மிகவும் யதார்த்தமான சூழலில்தான் பிறக்கிறது,” என்று கொர்த்தாஸார் ஒரு கட்டுரையில் இதைச் சுருக்கமாக விவரிக்கிறார். “வினைவிளைவு உறவுகள், வரையறை செய்யப்பட்ட உளவியல்கள், துல்லியமாய் வரையப்பட்ட பூகோளங்கள் – இந்த அடிப்படைக் கோட்பாடுகளைச் சட்டங்களாகக் கொண்ட அமைப்பு” ஆதிக்கம் செலுத்துவதாகவும், அவரவெளியில் நிலவுவதாக நம்பிய ‘பொய் யதார்த்தத்தை’ எதிர்ப்பதாகத் தனது கதைகளில் உள்ள அசாதாரணக் கூறுகள் செயல்படுகின்றன என்றும் கொர்த்தாஸார் கருதினார். இந்த பொய் யதார்த்தத்துக்கு மாறாக, “யதார்த்தத்தின் மெய்யான ஆய்வு என்பது அதன் விதிகளை அறிவதல்ல, விதிவிலக்குகளை அறிவதே,” என்று அவர் நம்பினார்.

வேற்றுத்தன்மை, ஒரு உயிரின் இருப்பை மற்றொன்று துளைத்தல் போன்றவை இவரது கதைகளில் பேசப்படுகின்றன. டானியல் டென்னெட் “Intentional Stance” என்று ஒன்று சொல்கிறார் – நம்மால் பார்க்கப்படுவனவற்றுக்கு இருப்பும் நோக்கமும் அளிக்கப்பட்டு, அவற்றின் பார்வையை நம் முன்அனுமானங்களைக் கொண்டு தீர்மானிக்கும் இந்த நிலைப்பாட்டின் உச்சத்தை இவரது கதைகளில் காணலாம். உதாரணத்துக்கு Axolotlஎன்ற கதையை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு மனிதன் மீன் காட்சியகம் ஒன்றுக்குச் செல்கிறான், அங்கு சாலமண்டர் போலிருக்கும் மீன் ஒன்றின்பால் மிகவும் ஈர்க்கப்படுகிறான், அவனது மனம் நிஜமாகவே அந்த Axolotlன் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. அதன்பின் கதை, மீன் தொட்டிக்குள்ளிருந்து சொல்லப்படுகிறது.

“Meeting” என்ற கதை கொரில்லா போராளியின் அனுபவத்தை ரொமாண்டிக்காக விவரிக்கிறது. அதன் கதை என்னவென்று சொல்லி உங்கள் வாசிப்பின் சுவயைக் கெடுக்க விரும்பவில்லை, ஆனால் அதில் மோட்ஸார்ட்டின் ‘The Hunt’ என்ற தந்தி வாத்தியக்கார்கள் நால்வரின் இசை(ஸ்ட்ரிங் குவார்ட்டட்) குறித்த அட்டகாச வர்ணனையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். பார்வைக்குரிய காட்சிகளும் செவிப்புலனின் உணர்வுகளும் லட்சியவாதத்துடனும் கொரில்லா அனுபவத்தின் பெருஞ்சோகத்துடனும் ரொமாண்டிக்காகப் பிணைக்கப்பட்டு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலவையாக உருவம் கொள்கின்றன. இது கதையில் கச்சிதமாகப் போருந்துவதாகவும் இருக்கிறது.

கொர்த்தாஸார் பற்றி யோசிப்பதில், அவரது கதைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் படித்துப் பேசத் தூண்டும் பேரவா எழும் ஆபத்து உண்டு. எனவே நான் எனக்கே ஒரு எல்லையை வரைந்து கொண்டு கையளவு கதைகளை மட்டும் பேசப்போகிறேன்.

யதார்த்தத்தின் மையத்தில் அசாதாரணத்தை இருத்துவது என்ற கொர்த்தாஸாரின் கொள்கைக்கு Southern Thruway என்ற கதை நல்ல ஒரு உதாரணம். பாரிஸின் தென்பகுதியில் ஒரு மாபெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை விவரிக்கிறது இக்கதை. இந்தப் பயணிகளின் அநாமதேய நிலையை நிறுவ இதில் உள்ள பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படுவதில்லை. மாறாக, அவர்கள் பயணிக்கும் வாகனங்களைக் கொண்டே அவர்கள் விவரிக்கப்படுகின்றனர் – “2cvல் வந்த இரு கன்னியாஸ்த்ரீகள், சிம்காவில் வந்த இரு சிறுவர்கள்” இப்படி. “வியர்த்தொழுகும் பயணிகளுக்கு சரித்திரம் இருப்பதாகத் தெரிவதில்லை,” என்ற கதையின் துவக்க வரிகளே இந்த அநாமதேயத்தன்மையைச் சுட்டுகிறது.

இதன்பின் கதை, ஸ்தம்பித்த இந்த போக்குவரத்து நெரிசலின் எல்லைகளுக்குள் ஒரு சிறிய உலகை விவரிக்கிறது – அகண்ட உலகினுள் உருவான குறுகிய ஒரு புதிய உலகம். மாதக்கணக்காக இந்த நெரிசல் நீடிக்கிறது. புதிய சமூக உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்படுகின்றன. குழுக்கள் உருவாகின்றன, அடிப்படைச் சாமான்களுக்கான கொடுக்கல் வாங்கல் புழக்கம் ஏற்படுகிறது, எல்லைக்கோடுகள் வரையப்படுகின்றன, இதனுள் மனிதர்கள் காதலிக்கின்றனர், கர்ப்பம் தரிக்கின்றனர், தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

இறுதியில் துவங்கியது போலவே எதிர்பாராமல் ஸ்தம்பித்த போக்குவரத்து சீர்படுகிறது, வாகனங்கள் நகரத் துவங்குகின்றன, குழுக்கள் கலைகின்றன, போக்குவரவற்று ஸ்தம்பித்த சாலையில் தங்கள் மேல் திணிக்கப்பட்ட வாழ்வு முறைக்கு ஏங்கத் துவங்குகிறான் ஒரு பொறியாளன். பாரிஸின் அன்றாட உலகின் இயல்பு வாழ்வுக்கு தான் திரும்பியது குறித்து இப்போதே அவன் சுகமில்லாமல் உணரத் துவங்கிவிட்டான் – “இங்கே யாருக்கும் பிறரைப் பற்றி எதுவும் தெரியாது. இங்கே எல்லாரும் முன்னோக்கிய நேர்ப்பார்வையில் பயணிக்கின்றனர், எப்போதும் முன்னோக்கி.”

எண்பதுகளில் நான் இந்தக் கதையை முதலில் வாசித்தபோது தலைகால் புரியாத உவப்பை ஏற்படுத்தியது. இப்போதும் ஒவ்வொரு முறை மறுவாசிப்பு செய்யும்போதும் அதன் வசீகரம் குறைந்தபாடில்லை.

“The Pursuer” நீண்ட, கடினமான சிறுகதை. இது படைப்புப் பாதையின் இயக்கசக்தியை, ஜானி கார்ட்டர் என்ற ஜாஸ் இசைக் கலைஞனின் வாழ்வைக் கொண்டு விவாதிக்கிறது. புகழ் பெற்ற ஜாஸ் இசைக் கலைஞரான சார்லி பார்க்கரின் வாழ்வையொட்டி எழுதப்பட்ட இந்தக் கதை ஜானி கார்ட்டரின் நண்பரும், ஜாஸ் விமரிசகருமான ப்ரூனோவின் பார்வையில் சொல்லப்படுகிறது. “Brief Prologues to a Personal Library”யில் ஓரிடத்தில் கொர்த்தாஸார் குறித்து போர்ஹெஸ் காலம் இவரது கைப்பாவை என்று சொல்கிறார்: “காலம் – நாம் எதைக் கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோமோ அதனுடனும் இவர் விளையாடுகிறார்”. ஜானி கார்ட்டரைத் தொடர்ந்து வாதனை செய்பனவற்றில் காலமும் ஒன்று. மீபோருண்மைத் தன்மை கொண்ட புதிர் போல் காலத்தைக் கருதி தன் இசை கொண்டு அதை அணுகுகிறான் அவன். தன் அனுபவத்தின் பரந்த வெளிகளைக் சில மாத்திரைகளில் குறுக்கி வாசிக்க அனுமதிக்கும் கருவியாக அவனுக்குத் தன் சாக்ஸஃபோன் இருக்கிறது.

போதை மருந்துகளாலும் மதுபானங்களாலும் நிறைந்த அவனது அன்றாட வாழ்வில் அவன் தன் இசைக்கருவியை இசைக்கையில் தான் காணும் காட்சிகளுக்குக் குரல் கொடுக்க முயற்சி செய்கையில் அவை”சிரச்சேதம் செய்யப்பட்ட வாக்கியங்களாக” முற்றுப் பெறுகின்றன. ப்ரூனோ வலியுறுத்தும் தேய்வழக்காகிப் போன எளிய உண்மைகள் அவனுக்குப் போதவில்லை. அவற்றினும் மெய்யாய், இருத்தலின் வெற்றிடங்களை நிறைக்கக்கூடிய உண்மையைத் தேடிச் சென்று கைப்பற்றி, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறான் அவன்.

கலையாக்கத்தின் உண்மையான நோக்கம் இதுவே என்று கார்ட்டர் இந்தத் தேடலையே அடையாளப்படுத்துவதாகத் தெரிகிறது. இதன் நீட்சியாக கொர்த்தாஸார் என்ற எழுத்தாளனும் அமெச்சூர் ஜாஸ் இசைக் கலைஞனும் இதையே வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். இக்கதையின் சில பகுதிகள் கடினமான வாசிப்பாக இருக்கின்றன. ஆனால் கொர்த்தாஸார் இதைத் தன் எழுத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதினார். ‘Hopscotch’ என்ற அவரது முக்கியமான நாவலை எழுத அவருக்கு இந்தச் சிறுகதை அளித்த திறப்பு தேவைப்பட்டிருக்கிறது.

இறுதியாக நாம் ப்ளோ அப் (“Blow-up”) என்ற கதைக்கு வருகிறோம். அவரது கதைகளில் மிகவும் புகழ்பெற்றவற்றுள் ஒன்று. அதே பெயரில் வந்த ஒரு திரைப்படத்துக்கு உந்துதலாக இருந்த காரணத்தால் மேலும் புகழ்பெற்ற ஒன்றும்கூட. அதிலும், அந்தப் படத்தை எடுத்தவரும் ஒரு மாபெரும் கலைஞர் – அன்டோனியோனி. இந்தக் கதையைப் பற்றி எவ்வளவோ எழுதிவிட்டார்கள், நான் முன்னர் சொல்லப்பட்டதையே திரும்பச்  சொல்லப் போகிறேன் என்பது உறுதி. இருந்தாலும் கதையின் ஒரு விஷயத்தை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்- இதில் சொல்லப்படும் விஷயம் கொர்த்தாஸாருக்கு மிகவும் முக்கியமாக இருந்த அம்சம். இக்கதையின் புனைவாக்கத்தில் வாசகனும் ஒரு சக படைப்பாளியாகப் பங்கேற்பதைக் கவனிக்க வேண்டும்.
ராபர்டோ மிசேல் ஒரு சிலேய மொழிபெயர்ப்பாளன், அமெச்சூர் புகைப்பட நிபுணன். அடிப்படையில் கொர்த்தாஸாரின் ஆல்டர் ஈகோவான இவன் பதின்பருவத்தில் இருக்கும் சிறுவன் ஒருவனை அவனைவிட வயது முதிர்ந்த ஒரு பெண் தன்பால் ஈர்க்க முயற்சி செய்வதைக் காண நேர்கிறது, அவர்களைப் புகைப்படமும் எடுக்கிறான். அந்தப் பெண் இவன் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து விடுகிறாள். மிசேல்லிடம் புகைப்படச் சுருளைத் தனக்குத் தந்துவிடும்படி வற்புறுத்துகிறாள், அப்போது அந்தப் பையன் சத்தமில்லாமல் நழுவியோடி விடுகிறான். “காலைக் காற்றில் மறையும் தேவதைகளின் எச்சில் இழைகள் போல் அவன் மறைந்தான்”. “Las babas del Diablo” என்ற ஸ்பானிஷ் தலைப்பை அப்படியே மொழிபெயர்த்தால் “சாத்தானின் எச்சில்” என்று எழுத வேண்டும்.
அதன்பின் மிசேலின் அகந்தை தன்னுருவைப் பெருக்கிக் கொள்கிறது. தன் கலை அவர்களிடையே நிகழ்த்திய ஊடாட்டம்தான் அந்தப் பையன் தீமையிலிருந்து தப்பிச் செல்ல உதவிற்று என்று உறுதியாக அவன் நம்பத் துவங்குகிறான். தன்னைக் குறித்த இந்த அபரித மகிழ்ச்சியில் அவன் அந்தப் புகைப்படத்தைப் பன்மடங்கு பெரிதாக்கி, அதை தன் அறையின் சுவற்றில் ஒட்டி வைக்கிறான். இப்போது பெரிதாக்கப்பட்ட அந்தப் படத்தின் வெவ்வேறு கூறுகளை உற்று நோக்கும்போது அவன் தான் முன்னர், படைப்பியக்கத்தின்போது எது யதார்த்தம் என்று புரிந்து கொண்டானோ, அது முழுமையான புரிதலல்ல என்று உணர்கிறான். அது தவறாகவும் இருக்கக்கூடும் என்பது அவனுக்கு இப்போது புரிகிறது.
தனது படைப்பை இப்போது வாசிக்கையில் அவன் அந்தப் பெண் சிறுவனைத் தன்பால் வசீகரிக்கவில்லை என்பதை உணர்கிறான் – இது அதைவிடப் பெரும் குற்றம் : தற்பாலின விழைவு கொண்ட ஒருவனின் பாலுறவுச் சேவைக்கு ஆள் பிடிக்கிறாள் அந்தப் பெண். தன் புகைப்படத்தில் உள்ள காரில் அமர்ந்திருப்பவன் காட்சிக்கு தொடர்பற்ற ஒருவன் என்று அவன் இதுவரை நினைத்திருந்தான். ஆனால் அவன்தான் இந்த நிழல் சங்கதியின் இழைகளை அமைத்து ஆட்டுவிப்பவன் என்பதை இப்போது உணர்கிறான். இந்த இடத்தில், பெரிதாக்கப்பட்ட புகைப்படம் உயிர் பெறுகிறது. மிசேல் அந்தக் காட்சியை அதன் அத்தனை உள்ளர்த்தங்களுடன் மீண்டும் காண்கிறான். இவனும் காட்சிக்குள் உந்தித் தள்ளப்பட்டு, அந்தச் சிறுவன் மீண்டும் தப்பிச் செல்ல உதவுகிறான். ஆனால் இம்முறை அவன் தன்னை விழுங்கக் காத்திருக்கும் மெய்யாலுமே மிகவும் கொடுமையான தீய சக்தியிடமிருந்து தப்பிச் செல்கிறான். படைப்பியக்கத்தில் வாசகனும் பங்கேற்கிறான் என்ற இந்தக் கருத்து, ஒரு கலைப்படைப்பு தன் உண்மையான நோக்கத்தில் வெல்லத் தேவையான கர்த்தா வாசகனே என்ற இந்தக் கருத்தை, கொர்த்தாஸார் இன்னமும் விரித்து, தனது ஹாப்ஸ்காட்ச் (‘Hopscotch’) என்ற நாவலில் மீண்டும் பயன்படுத்துவார்.
ஹாப்ஸ்காட்ச் நாவலின் துவக்கத்தில் ஒரு செயல்முறைக் குறிப்பு அட்டவணை அளிக்கப்படுகிறது – இதை லினியராகவும் நான்-லினியராகவும் இருவகை வாசிப்புக்கும் உட்படுத்தும்படி வாசகனுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையை எழுதும்போது ஒரு மையத்திரிக்கேற்ப அனைத்தையும் கட்டமைப்பதைத் தவிர்த்திருக்கிறேன். நான் வாசித்து ரசித்த கதைகளூடே என் மனம் இலக்கில்லாமல் திரிய அனுமதித்திருக்கிறேன், அதன் பின் ஒரு குறிப்பிட்ட கதையின்பால் என்னை எது ஈர்த்தது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். கொர்த்தாஸாரின் கதைகளைக் கொண்டு ஒரு பாண்டியாட்டம் ஆடியது போலிருக்கிறது. பல கதைகளைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை என்பதையும் உணர்கிறேன் (Nurse Cora பற்றி என்ன சொல்ல, Cronopias and Famas என்ற சர்ரியலிய கற்பனையைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே, “சிலுவையிலிருந்து எவரும் உயிருடன் இறங்குவதில்லை” என்று முடியும் We love Glenda So Much என்ற கதையைப் பற்றி….. )

Julio_Cortazar_Dreams_Story_Introduction_Translations_World_Literature_Icons

ஆனால் துரதிருஷ்டவசமாக மனதில் விளையாடினாலும் பாண்டியாட்டம் எல்லைகளுக்குள் ஆடப்படும் விளையாட்டு; நினைவின் கூழாங்கல் ஒரு அளவுக்குட்பட்ட கற்பனைச் செவ்வகங்களாலான கட்டங்களுள் விழ வேண்டும். ஆனால் சாக்கட்டியில் வரையப்பட்ட கோட்டை நீங்கள் எப்போது வேண்டுமனாலும் அழிக்கலாம், அதன் செவ்வகங்களை இடம் மாற்றி ஆட்டத்தை வேறு சில கதைகளோடு மீண்டும் துவக்கலாம். ஆனால் எத்தனை முறை நீங்கள் இந்த விளையாட்டை “பூமியில்(Earth)” ஒன்றுமில்லாமல் துவக்கினாலும் எப்போதும் இந்தக் கதைகள் அளிக்கும் இனிய நினைவுகளின் ” சொர்க்கத்தை (Heaven)” அடைவது உறுதி.

நெரூதாவின் சாபத்துக்காளாகி முகம் வெளிறி தலைமுடிகள் கொட்டிப் போகிறதென்றாலும் அதிர்ஷ்டக்கார சிலருக்கு கொர்த்தாஸாரை முதல் முறை சுவைக்கும் அனுபவம் காத்திருக்கிறது : Blow-Up, All Fires the Fire என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளை அவர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன். அல்லது, கொர்த்தாஸார் படைக்கும் மாய உலகின் தமிழ் திவலையை என்னோடு சேர்ந்து நீங்களும் இங்கே எட்டிப் பார்க்கலாம் (முடிந்தால் ஒரு பச்சை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு) .

(விடுபட்டிருந்த பத்திகள் இரண்டு சேர்க்கப்பட்டன: 13 February 2016)
பயன்பட்ட புத்தகங்கள் / தளங்கள்

  • Blow-Up And Other Stories Translated By Paul Blackburn, Pantheon Books (1967, 1963)
  • All Fires the Fire And Other Stories Translated By Paul Blackburn, Pantheon Books (2005, 1973)
  • Prologues to a Personal Library in the Selected Non-Fictions of Jorge Luis Borges, Translated by Esther Allen, Suzanne Jill Levine and Eliot Weinberger, Penguin Books
  • Bio-facts and Quotes from Cortazar are from Julio Cortazar, a monograph by Evelyn Picon Garfield, Ungar Publishing Co.
  • Original Hopscotch collage is from thegreyparade.wordpress.com

0 Replies to “கொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல் – அவரது சிறுகதைகளுக்கு ஒரு சிறு அறிமுகம்”

  1. கொர்த்தஸாரின் அறிமுகக் கட்டுரைக்கு நன்றி. ஒர் சிறிய தகவல் – தமிழ் சிறுபத்திரிகைகளில் எண்பதுகளின் தொடக்கமே மார்க்வெஸ், கொர்த்தஸார்,போர்ஹே சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளன.கொர்த்தஸாரின் கதைகள் கல்குதிரை,உன்னதம்,லயம், பிரம்மராக்ஷஸ்,புனைக்களம், குதிரை வீரன் பயணம் போன்ற பத்திரிக்கைகளில் நாகர்ஜூனன், காலச்சுப்பரமணியன், குவளைக்கண்ணன், எம்.எஸ், இசக்கியப்பன், ராஜகோபால் போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளது. பிரபல சிறுகதையான ப்ளோ அப்-யை குவளை கண்ணணும் தெற்கு நெடுஞ்சாலையை எம்.எஸ்ஸும் புனைகளத்தில் மொழிபெயர்த்திருந்தார்கள். அவை இப்போது தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு கீழ்காணும் சுட்டியில் காணக் கிடைக்கிறது.
    http://ulagailakkiyam.blogspot.co.uk/2011/03/blog-post_25.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.