மௌனத்தின் குரல் – ஓர் அறிமுகம்

mounathin kural

வருடத்தில் பத்து மாதங்கள் ஒற்றைப் பிள்ளையாய் எங்களின் பெரிய வீட்டில் வளையவரும் எனக்கு ஏப்ரல் மே மாதங்கள் கோடையல்ல – வசந்தம். ஏனென்றால் அப்போதுதான் சென்னையிலிருந்து கடைசி சித்தியும், பாபு அண்ணாவும், லதாவும் வருவார்கள். பெங்களூரிலிருந்து இரண்டாவது சித்தியும் அவர் பையன் ராஜு அண்ணாவும் வருவார்கள். எல்லோரையும் விட முக்கியமாய் திருச்சியிலிருக்கும் என் பெரியம்மா பெண் அகிலாவும் வந்துவிடுவாள். ஒவ்வொருவராய் வரும் நாட்கள் குறித்த தபால் கார்டுகள் வந்தது முதலே என் குதூகலம் ஆரம்பமாகிவிடும்.

பெரியம்மா, சித்திகள், அம்மா என எல்லோரும் சேர்ந்து செய்வதால் விதவிதமான ருசியும் மணமும் கொண்ட உணவுகள் நேரா நேரத்துக்கு கிடைக்குமென்றாலும் எங்கள் ஆர்வமெல்லாம் பகல் முழுவதுமான விளையாட்டுக்களில்தான் குவிந்திருக்கும். ஊஞ்சலை பஸ்ஸாக்கி ட்ரைவராகவும், கண்டக்டராகவும், பயணிகளாகவும் மாறி மாறி விளையாடுவது, கொல்லைத் தாழ்வாரத்தில் கட்டம் போட்டு தாயம் விளையாடுவது, புளியங்கொட்டைகளைக் கொண்டு பல்லாங்குழி விளையாட்டு என்று பகல் முழுவதும் நிமிட நேரம் கூட இடைவெளியில்லாமல் விளையாட்டு மும்மரத்தில் சுற்றும் எங்களைப் பிடித்து சாப்பாட்டைத் திணிக்க அம்மாக்கள் திணறித்தான் போவார்கள்.

பின் மாலைப்பொழுதிலேயே முற்றம் முழுமைக்கும் தண்ணீரை வாளிகளில் கொண்டு வந்து விசிறி அடித்து தயார் செய்து விடுவோம். என்னதான் கோடைக்காக தென்னங்கீற்றுகளால் பாதி முற்றத்திற்கு தட்டுப் பந்தல் போட்டிருந்தாலும் இந்த தண்ணீர் அடிப்பது இல்லையென்றால் இரவில் அங்கே படுக்க முடியாது.  பின் இரவு உணவு முடிந்ததும் எல்லோரும் முற்றத்தில் அப்பாவின் ஈசிச் சேரைச்  சுற்றி அமர்வோம்.

அப்பா ஒரு கதைக் களஞ்சியம். புராண, இதிகாசக் கதைகள், தெனாலிராமன், பீர்பால் போன்ற விகட கவிகளின் சாமர்த்தியக் கதைகள், ஊரின் தலபுராணங்கள் என்று அவரிடம் ஒரு பெரிய பட்டியல் உண்டு. அதிலிருந்து சில கதைகளைச் சொன்ன பின் நான் அன்றைய பள்ளி நிகழ்வுகளைச் சொல்வேன். இந்த தினப்படி வழக்கத்தில் அகிலா வரும் நாட்களில் பெரிய மாற்றமிருக்கும். அப்பா தன் கதையை முடித்தவுடன் அகிலாவை பாடச் சொல்லுவார். பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள் என அப்பாவின் நேயர் விருப்பமாய் ஒன்றிரண்டு தமிழ்ப்பாடல்களும் மீதமெல்லாம் அவளுக்குத் தெரிந்த தெலுங்கு, சமஸ்கிருதக் கிருதிகளும் என கணீரெனப் பாடுவாள். அப்பாவின் கதா காலட்சேபத்தின் போதெல்லாம் சமையலறைக்கும், கொல்லைக்குமாய் அலைந்து கொண்டிருக்கும் அம்மா, சித்தி, பெரியம்மா என எல்லோரும் அகிலா வாயைத் திறந்தவுடன் கைவேலைகளைப் போட்டுவிட்டு வந்து தாழ்வாரத்து இருட்டு மூலைகளில் உட்கார்ந்து கொள்வார்கள்.

பகலெல்லாம் எல்லோரும் சமமாக ஓடியாடித் திரிந்தாலும் இரவில் மட்டும் அவளுக்கு கிடைக்கும் இந்த நட்சத்திர அந்தஸ்து லேசான பொறாமையைத் தருமென்றாலும் படுத்து தூங்கும் போதே அந்தப் பொறாமையும் காணாமல் போய்விடும். காலையில் அதே அன்னியோன்னியத்தோடு எங்கள் அட்டகாசம் தொடரும்.

கோடை விடுமுறை தவிர்த்தும் அவள் எங்கள் ஊருக்கு வரும் இன்னொரு சந்தர்ப்பம் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ஒட்டி வரும். வருடா வருடம் திருவையாறு தியாகராஜ உத்சவத்தில் அவளுக்கு கச்சேரி வாய்ப்பு நிச்சயம். அவளது கச்சேரி நேரம் தவிர்த்து மற்ற ஆராதனை நாட்களிலும் அவளும், பெரியப்பாவும் ரசிகர்களாக அந்த காவிரிக் கரைப் பனியிலும், இசையிலும் நனைவார்கள். நாங்களோ அங்கே போனாலும் கூட தியாகராஜரின் சன்னிதியில் தீபாராதனை பார்த்துவிட்டு, அங்கே திருவிழா போல மொய்க்கும் திடீர் கடைகளில் இக்கிரி பிக்கிரி சாமான்களை வாங்கிக் கொண்டு டவுன் பஸ் பிடித்து நேரத்தோடு ஊர் வந்து சேர்ந்து விடுவோம்.

கோடைக் காலகொண்டாட்டமெல்லாம் அண்ணன்கள் ஒன்பதாவது வரும் வரைதான். பிறகுதான் பொதுத் தேர்வு ஜுரம் வந்து விடுமே – எனவே சில வருடங்களின் பின் விருந்தினர் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஆனாலும் மாறாதது அகிலாவின் ஆராதனை நேர விஜயம் மட்டுமே. பட்டப் படிப்பை நாங்களிருவரும் முடித்த போது அவள் வேலைக்கு ஒரு புறம் முயற்சித்துக் கொண்டே முறையான கச்சேரிகளையும் செய்ய ஆரம்பித்திருந்தாள். வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கூட ஓரிரண்டு நிகழ்சிகள் செய்தாள். வேலையோ சங்கீத முயற்சிகளோ சரியாக அமையும் முன்னரே அவளுக்கு நல்ல வரன் அமைந்து விட்டது. பெண்ணுக்கு ஜென்ம சாபல்யம் திருமணமல்லவா? எனவே மற்ற எல்லா முயற்சிகளையும் ஏறக்கட்டிவிட்டு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் செய்து அனுப்பி விட்டார்கள் பெரியம்மாவும் பெரியப்பாவும்.

வெகுநாட்களுக்குப் பின் ஒரு ஞாயிற்றுக் கிழமை அவளைப் பார்க்கப் போயிருந்தேன். வேலைகளுக்கு நடுவே என்னோடு பேசிக் கொண்டே அருமையாக சமைத்தாள். சாப்பாடானதும் தன் மகனைத் தூங்க வைத்துவிட்டு வருவதாகச் சொல்லி அறைக்குள் சென்றாள். அவள் வரும் வரை படிக்கலாமென பக்கத்தில் கிடந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். அறையிலிருந்து தொடர்ந்து பல்லியின் உச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. முதலில் கவனிக்கவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் இப்படி தொடர்ந்து பல்லி கத்தும் சத்தம் கேட்காதே என வியப்புடன் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அகிலாதான் தன் மகனை மடியில் போட்டுக் கொண்டு வாயால் உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தாள். வியப்புடன் மீண்டும் வந்து என்னிடத்தில் அமர்ந்து கொண்டேன்.

ஏற்கனவே சில பெண்கள் இப்படி குழந்தைகளை தூங்க வைத்துப் பார்த்ததுண்டு என்றாலும் அற்புதமான குரல் வளமும், அருமையான சங்கீத ஞானமும் உள்ள இவள் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்ற குறுகுறுப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. இத்தனைக்கும் பாம்பே ஜெயஸ்ரீயின் வாத்சல்யம் என்ற பன்மொழி தாலாட்டுப் பாடல் தொகுப்பைப் பற்றி என்னிடம் சிலாகித்துச் சொல்லி அதை கேட்க வைத்தவளே அவள்தான். மகனை தூங்க வைத்து முடித்து வெளியில் வந்தவளிடம் இதைக் கேட்ட போது கைப்பான சிரிப்போடு சொன்னாள் – “என்ன செய்யட்டும்? அவருக்கும் சரி அவங்கம்மாக்கும் சரி, முணுமுணுப்பா பாடினாக் கூட பிடிக்காது. சினிமாவுக்கு போனால் கூட பாடல் காட்சிக்கு எழுந்து வெளியில் போய்விடும் நவீன ஔரங்கசிப் அவர். கல்யாணத்துக்கப்புறம் பாட்டை சுத்தமா நிப்பாட்டியாச்சு.”

திருமணத்திற்குப் பின் தன் ரசனைகள், விருப்பு வெறுப்புகள் என எல்லாவற்றையும் உடைத்து கணவனின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டியது பெண்களின் கடமையாகவே நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆண் வாயைத் திறந்து இதைச் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. தன் விருப்பமின்மையை உணர்த்திவிட்டாலே பெண் அவளை உடனடியாக மாற்றிக் கொண்டாக வேண்டும். வன்முறை என்றால் அடிப்பதும், சுடுவதும் மட்டுமல்ல மனதை முறித்துப் போடும், ரசனைகளை குழிதோண்டி புதைக்க வைக்கும் இது போன்ற செயல்களும் கூட ஒரு வகை வன்முறையே.

சசி தேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதிய That long silence என்ற புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு நாவலான மௌனத்தின் குரல் என்ற வாஸந்தியின் நாவல் இத்தகைய ஒரு பெண்ணின் மொழியிலேயே பிரச்சனைகளையும், அதன் காரணங்களையும் விரிவாய் அலசுகிறது. தனது மத்திம வயதில் நாயகி ஜெயாவுக்கு தன் பிரச்சனைகளை சுய விமர்சனத்தோடு தெளிவாய்ப் புரிந்து கொள்ளவும், அதைத் தவிர்க்க தான் செய்ய வேண்டியது என்ன என்று உணரவும் நேரம் வாய்க்கிறது.  ஒருவரை தன் விருப்பு வெறுப்புகளை அப்படியே தொடர அனுமதிப்பதே ஆணின் பெருந்தன்மையாகவும், அப்படி அனுமதிக்கப்பட்டாலுமே அவ்வாறு தொடர்வதே பெண்ணுக்கு குற்ற உணர்ச்சியைத் தருவதாகவும் இருப்பது எப்படி என்பதை இந்த நாவல் காரண காரியங்களோடு ஆராய்கிறது.

நாவலின் முன்னுரையில் சஷி தேஷ்பாண்டே சொல்கிறார் – ஒருவர் சுய விசாரணை செய்து கொள்ள வேண்டுமென்றால் அவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும் என்று. தன்னுள் உள்நோக்கி ஆழ்ந்த நிலையில் எழுதாமல் தன்னைச் சற்று தள்ளி நின்று தன்னுடைய அனுபவங்களையும் அதைப் பற்றிய பிரக்ஞையையும் தனித் தனிக் கூறுகளாக புரிந்து கொள்ளும் நிலையில் எழுதப்படும் எழுத்தே கறாரான சுயவிமர்சனமாக இருக்க முடியும் என்கிறார். நாவலைப் படிக்கையில் இவ்வரிகள் மிகையில்லை என்பதை உணர முடிகிறது.

வாஸந்தியின் சொந்த மொழி நடை அதிக அலங்காரங்கள் இல்லாமல், நேர்த்தியாக சொல்ல வருவதை மனதுக்குள் பதிப்பது. அதே லாவகத்தோடு அவர் இந்த மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார். மூல நாவலான சஷி தேஷ்பாண்டேயின் ஆங்கில நாவல் 1990க்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்றது என்பதால் இந்த மொழிபெயர்ப்பு நாவலை அகாடமியே வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு விஷயத்திலும் தனது செயல்பாட்டை, ரசனையை பெண் வீட்டின் ஆண்மகனின் மனம் கோணாமல் அமைத்துக் கொள்ள வேண்டியிருப்பதன் அவசியத்தை, நாவலின் துவக்கத்திலேயே அழகாய் சித்தரிக்கிறார் சசி. சாஸ்திரீய சங்கீதத்தையே விரும்பிய தந்தைக்கு எதிரில் ஜெயா சினிமாப் பாடல்களை ரேடியோவில் கேட்கும் போது அவர் சொல்லும் “எத்தனை மோசமான ரசனை உனக்கு ஜெயா!” என்ற வார்த்தைகள் அவளுக்கு அவமானத்தை மட்டுமல்ல ரசனைகளை புதைத்துக் கொள்வதே நல்லது என்ற காரியார்த்தமான தெளிவையும் கொடுக்கிறது. அதனால்தான் திருமணமான பின் சினிமாவுக்கு முன் காட்டப்படும் விளம்பரங்களைப் பார்க்க தனக்கு ஆசையிருந்தும் அதைச் சொல்ல தைரியம் இல்லாமல் போகிறது. மோகனின் வாயிலிருந்தும் “எத்தனை மோசமான ரசனை உனக்கு ஜெயா!” என்ற வார்த்தைகளைக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஒன்றும் அவசரமில்லை என்று காட்டிக் கொண்டே சீக்கிரம் போய்ச்சேர முயற்சிக்கிறாள்.

நாவல் ஜெயாவும், அவள் கணவன் மோகனும் அஞ்ஞாத வாசம் செல்லும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. மோகனின் பணியில் ஏற்படும் ஒரு சிக்கலில், அது சார்ந்த சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப ஒரு தற்காலிக நடவடிக்கையாக ஜெயாவின் மாமாவின் பழைய ஃப்ளாட் ஒன்றிற்கு செல்கிறார்கள் இருவரும். ஏற்கனவே குழந்தைகள் இருவரும் விடுமுறைக்காக குடும்ப நண்பர்களோடு சுற்றுலாவிற்கு போயிருக்கும் நிலையில் இம்முடிவு அவர்களுக்கு சற்றே எளிதாக இருக்கிறது. இந்நிலையில் ஜெயா அந்த ப்ளாட்டில் வெகுநாள் முன்பு தங்க வைத்திருந்த சற்றே மனநிலை பாதிக்கப் பட்ட தாய்வழி உறவினரான குஸும் பற்றிய நினைவுகளோடு துவங்குகிறது ஜெயாவின் மன அலைகள்.

குஸுமைத் தொடர்ந்து கொண்டேயிருந்த தோல்வியின், புறக்கணிப்பின் நிழல்கள், அவளது ஏழ்மை, தோல்வியடைந்த திருமணம், துரத்திக் கொண்டே இருந்த மனச்சிக்கல்கள் எல்லாம் சேர்ந்து கடைசியில் ஒரு பாழடைந்த கிணற்றில் பாய்ந்து கழுத்து முறியத் தற்கொலை செய்து கொள்கிறாள். தன் ஆதரவில் தங்கியிருந்த அவளை கட்டாயப் படுத்தி அவளது புக்ககத்திற்கு அனுப்பியதுதான் அவள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமோ என்று ஜெயாவுக்கு ஏற்படும் குற்றவுணர்வு கச்சிதமாய் விவரிக்கப்படுகிறது.

பெரும்பாலான பெண்களைப் போலவே நானும் அப்பா செல்லம்தான். சிறுவயதில் நான் எதற்காகவேனும் கோபமாக இருந்தால் அப்பா என்னை சமாதானப் படுத்த பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் ஒரு திரைப்பாடல் – ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ என்ற அந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகள் மட்டுமே அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அந்த இரண்டு வரிகள் போதும் என் கோபத்தை ஏறகட்ட வைக்க. நீ எல்லோரையும் போல சராசரியானவள் இல்லை என்று சொல்லும் குரல் தரும் தன்னம்பிக்கை போல மனிதனை ஊக்குவிக்கும் சக்தி வேறொன்றுமில்லை. என் அதிர்ஷ்டம் என் வாழ்வின் எல்லா கட்டங்களிலும் அப்படிச் சொல்லும் என் அப்பா வழி நடத்துவது.

ஆனால் ஜெயாவிடம் “நான் உனக்கு ஜெயான்னு பேர் வச்சேன். ஜெயா வெற்றிக்கு” என்று கூறி வளர்க்கும் அவளது அப்பா பதின்பருவத்தில் இறந்து விட, ஜெயாவும் அவள் சகோதரர்களும் உறவினர்களின் தயவில் வாழ வேண்டியவர்களாக மாறுகிறார்கள். இந்த மாற்றம் ஜெயாவின் ஆளுமையை பாதித்த விதம் பற்றி அவள் தன் மனதுக்கு நெருக்கமானவராகவும், தனது வழிகாட்டியாகவும் கருதும் காமத்திடம் விவரிக்கிறாள்.

மாடி வீட்டில் குடியிருப்பவரான காமத் உடன் ஜெயாவுக்கான உறவு பல பரிமானங்களை உள்ளடக்கியது. ஒரு வகையான எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் சாத்தியங்களுள்ள அந்த உறவில் அவள் தன்னுடைய குறை நிறைகள் அனைத்தையும் அவர் அம்பலப் படுத்துவதாலேயே தொடர்ந்து சீண்டப்படுகிறாள். அதே நேரம் அவருடனான உறவு அவளுக்கு ஒரு பெரிய ஆசுவாசத்தை தருவதாக இருக்கிறது.

தந்தையின் மரணத்தையும் அது தனக்கு தந்த வலியையும் பற்றி விவரிக்கும் நாளில் அவள் வார்த்தைகள் தீர்ந்த பின்னர் அவரது அணைப்பில் இருப்பதை உணரும் போதும் அவளுக்கு அது விகல்பமாகவே படவில்லை. இரவில் குளிரும்போது அப்பாவின் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டது போல, கதகதப்பாக, இதமாக இருந்தது அந்த அணைப்பு என்று சரளமாக அதைக் குறிப்பிடுகிறார் ஆசிரியை.

ஆனால் அந்த உறவு அதைத் தாண்டிய நிலையையும் ஒரு நாள் தொடுகிறது. அதை ஒரு சராசரி மத்திய வர்க்கத்து இந்தியப் பெண் எப்படி எதிர்கொள்வாளோ அதே போன்ற இயலாமையுடனே கையாள்கிறாள் ஜெயா.

காமத்தின் அணைத்த கரங்களிலிருந்து விலகி ஓட வைத்தது காமத் மீது கொண்ட கோபமோ இல்லை அந்த உறவின் மீதான விருப்பமின்மையோ இல்லை என்பதை ஜெயா நன்கு உணர்ந்தே இருக்கிறாள். தனது செய்கையை நினைத்துப் பார்க்கையில் தன்னை தடுத்தது மோகன் என்ற தனிமனிதன் அல்ல திருமணம் என்ற அமைப்புதான் தன்னை எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வைத்தது என்று உணர்கிறாள். காமத்தின் மரணத்தின் போதும் ஜெயா இதேபோல் தனக்கு அதில் எந்த சம்பந்தமுமில்லாதது போல் இரக்கமற்றவளாக நடந்து கொள்வதும் இரவில் அதற்காக அழுவதும் அதே எச்சரிக்கையுணர்வு காரணமாகவே. தன்னை ஜெயா எனும் மனுஷியாக உணராமல், மோகனின் மனைவியாக மட்டுமே தான் உணர்ந்து வந்ததே தனது இந்த கோழைத்தனத்தின் காரணம் என்று அவள் உணர்கிறாள். இந்த உண்மையை தன் மனதுக்குள்ளேதான் என்றாலும் கூட ஒப்புக் கொள்வது எவ்வளவு சிரமமானது என்பதை எண்ணும் போதுதான் முன்னுரையில் சசி குறிப்பிட்ட இரக்கமற்ற தன்மையின் அவசியம் புரிகிறது.

மோகன் ஒரு பொறுப்பான, அன்பான கணவன் மட்டுமல்ல மிகவும் பெருந்தன்மையானவனும் கூட. அல்லது அப்படித் தன்னை உணரும் ஒருவன். தன் மனைவியை எழுத உற்சாகப் படுத்துபவன், அதை வெளிக்காட்டிக் கொள்வதில் பெருமை கொள்கிறவன். ஆனால் எப்படியான எழுத்துக்களை அவள் எழுதும் போது என்ற கேள்வியிலிருக்கிறது இந்தப் பெருந்தன்மையின் சூட்சுமம். மத்தியவர்க்கத்து இல்லத்தரசிகளின் சின்னச் சின்ன பிரச்சனைகளைப் பற்றி, எளிமையாக, நகைச்சுவை கலந்து எழுதும் ஒரு எழுத்தாளரை மட்டுமே அவனால் தாங்கிக் கொள்ள முடியும்.

ஒரு முறை தன் மனைவியை உடலாக அன்றி வேறு விதமாக பார்க்க நினைக்காத ஒரு கணவனைப் பற்றிய ஜெயாவின் கதை ஒரு பத்திரிக்கையில் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப் படுகிறது. ஆனால் அக்கதை தங்களுடையது என்று மற்றவர்கள் எண்ணிவிடுவார்கள் என்று அஞ்சுகிறான் மோகன். அக்கதையில் வரும் ஆள் என்று தன்னைத்தான் மற்றவர்கள் என்று அஞ்சுகிறான். எப்படி நீ நம் வாழ்வின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தலாம் என்று ஜெயாவிடம் கொந்தளிக்கிறான். அந்தக் கதையின் மூலம் அவன் ஆழமாகப் புண்படுகிறான் என்று எண்ணும் ஜெயா, அன்று முதல் அத்தகைய கதைகளை எழுதுவதை நிறுத்திவிடுகிறாள்.

ஆனால் உண்மையில் தீவிரமான, உண்மையின் உள்ளொளியுடன் கூடிய எழுத்துக்களின் பக்கம் ஜெயாவை போக விடாமல் தடுத்தது மோகன் மட்டுமே தானா? பெண்கள் ஆக்ரோஷமாக, கோபத்துடன் சுய அடையாளத்துக்குப் போராடுபவளாக இருக்க முடியாது என்றும், பெண்ணால் கோபமோ நிராசையோ கொள்ள முடியாது, ஒழுங்கும் செக்குமாட்டுத் தனமும்தான் அவளுக்குப் படைக்கப் பட்ட குணங்கள் என்று ஒரு கட்டத்தில் தீவிரமாக நம்பும் ஜெயா, அது தரும் சௌகர்யமான சுய பச்சாதாபத்தை வளர்த்துக் கொள்கிறாள். எழுதினால் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே தான் தீவிர எழுத்துக்களின் பக்கம் போகாமல் இருந்தோம் என்பதை உணர்வதும், சரியாக அதே நேரத்தில் மோகன் மேலோட்டமான பெண்கள் எழுத்தை நோக்கித் தன்னைத் திருப்பியது எதேச்சையான ஒன்று என்று வெளிப்படையாக ஜெயா ஒப்புக் கொள்வதும் நாவலின் முக்கியமான புள்ளிகள்.

பெண்ணியப் பிரதிகளில் ஆண்களின் மீதும், அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த சமூகத்தின் சட்டகங்கள் பெண்களை நசுக்கும் விதம் பற்றியும் உணர்ச்சிபூர்வமான விமர்சனங்கள் நிறைய காணக் கிடைக்கும். ஆனால் அதில் பெண்கள் தடுமாறும் இடங்கள், அதிலிருந்து மீட்சிக்கான வழிகள் போன்றவை கறாரான விதத்தில் பேசப்படுவது அதிகமில்லை. அந்த வகையில்தான் சசி தேஷ்பாண்டேவின் இந்த நாவல் ஒரு முக்கியமான பெண்ணியப் படைப்பு என்று நான் எண்ணுகிறேன்.

 கதையின் துவக்கத்தில் தன்னையும் மோகனையும் ஒன்றாக பூட்டப்பட்ட ஜோடி மாடுகளாய் உணரும், அந்த உறவில் பாலன்ஸ் ஏற்படுத்தவும், மோகனின் மனதை நோகடிக்காமல் இருக்கும் படியான பதில்களை தேடிப்பிடித்து சொல்லவுமாக பயணிக்கும் ஜெயா நாவலின் முடிவில் திறந்த மனதுடன் மனதில் எண்ணுவதை அப்படியே சொல்பவளாக வாழ வேண்டுமென முடிவு செய்கிறாள்.

அதே போல் புரிதல் என்பது தனக்கு மட்டுமே நிகழக் கூடியதில்லை என்பதை உணர்ந்து அந்த மாற்றம் மோகனுக்கும் நேரிடலாம், அவனும் முகமூடிகளற்ற வாழ்விற்கு தயாரானவனாக மீண்டு வரலாம் என்ற நம்பிக்கையும் கொள்கிறாள்.  அற்புதமான வரிகளோடு நாவல் முடிவுறுகிறது.

 

மனிதர்கள் மாறுவதில்லை என்றாள் முக்தா. அது உண்மை. நாம் ஒரே நாளில் மாறிவிடுவதில்லை. வெகுநாட்கள் கழித்தும் நாம் மாறாமலிருப்பதும் சாத்தியம்தான். ஆனால் நாம் எப்பவுமே நம்பிக்கையுடன் இருக்கலாம். அந்த நம்பிக்கையின்றி வாழ்வு சாத்தியமில்லை. எனக்கு இப்போது நிச்சயமாக ஒன்று தெரியும். வாழ்வு வாழ்வதற்கு. அதை சாத்தியப்படுத்துவதற்கு.

***

0 Replies to “மௌனத்தின் குரல் – ஓர் அறிமுகம்”

  1. லக்ஷ்மி பாலகிருஷ்ணன், மிக அருமையான அறிமுகம். //வன்முறை என்றால் அடிப்பதும், சுடுவதும் மட்டுமல்ல மனதை முறித்துப் போடும், ரசனைகளை குழிதோண்டி புதைக்க வைக்கும் இது போன்ற செயல்களும் கூட ஒரு வகை வன்முறையே.// அவசியம் இந்தப் படைப்பைப் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.