பைத்தியக்காரன் உலகிலே பைத்தியக்காரன் என்றால் பைத்தியம் அல்லாதவன் என்று தான் அர்த்தம். – க.நா.சு
ரமேஷின் வீடு இருப்பதோ காந்திபுரத்தில். அவனுக்கு சாய்பாபா காலனியில் என்ன வேலை ? கேள்வியெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. அவன் ஒன்றும் என்னைப் போல் இல்லையே. இப்படிச் சொல்வதால் என்னை நானே இளக்காரமாக எண்ணுகிறேன், அல்லது யாரென்றே தெரியாத உங்களிடம் முட்டாள் போல் பிரகடனப்படுத்துகிறேன் என எண்ண வேண்டாம். என்னை அவனே அதிக முறை கேவலப்படுத்தியிருக்கிறான். எனக்குக் கதை எழுதுவது, அப்படிக் கூட அல்ல, யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துற என்னும் தோரணையில் கிண்டலடித்திருக்கிறான். உண்மைதான் என் வேலை அனைத்தும் எழுதுவது மட்டுமே. எனக்கு அதைத் தாண்டி எதையும் செய்யத் தெரியாது. இப்போது கூட எனக்கு ஒரு மாதம் விடுமுறை. எனக்கு எனில் எனக்கும் சரி ரமேஷிற்கும் சரி. அவனுக்கும் இன்ன பிற என்னுடன் படிப்பவர்களுக்கும் இது முழுக்க முழுக்கப் பொழுதினையே தள்ள முடியாத நேரங்காட்டிகள். எனக்கு இந்த விடுமுறையே போதவில்லை. எழுதுவதில் கிடைக்கும் சுகம் அதை செய்யாமல் இருக்கும் நேரங்களில் கிடைக்க மறுக்கிறது.
சரி விஷயத்திற்கு வருகிறேன். ரமேஷின் அப்பா துணி சம்பந்தமாக ஏதோ வேலை செய்பவர். சரியாகச் சொல்லவில்லையே என என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அதில் அதிகம் நாட்டமே இல்லை. எப்போதுமே தனியாக இருப்பதால் அவர்களின் பின்புலங்களை அறிந்து கொள்ள எண்ண மாட்டேன். அந்த வேலையில் இவனுக்குப் பெரும் கவலை. அது என்ன எனில் அப்பா இப்படி மாடு மாதிரி உழைக்கிறாரே நாமும் ஏதாவது வேலை செய்வோம் அவரின் பளுவினைக் குறைப்போம் என எண்ணினான். இப்போதல்ல பத்தாம் வகுப்பு படிக்கும் போதே. அடிக்கடி அறையில் இருக்கும் போது கூட அவனுக்குச் சிந்தனைகள் இருக்கும் ஏதாவது வேலை செய்வோம் என்று.
ஒருவகையில் அவன் சொல்வதும் நியாயம்தான் ஏன் எனில் பரிட்சை என்றாலும் நாங்கள் அதற்கு முந்தைய நாள் மட்டுமே விடிய விடிய படிக்கிறோம். மீதி நாட்களை ஏன் படிக்கிறோம் என்ற போர்வைக்குள் அடக்கி வைக்க வேண்டும் ? இதனால் வேலை செய்யலாம் என நினைத்து அதற்கான முயற்சிகளை எடுத்து கடைசியில் அது திவாலா கம்பெனியாக இருந்து தப்பித்ததெல்லாம் நான் அவ்வப்போது காதில் கேட்டது.
அப்படி இவன் தன் அப்பாவிற்குக் கூட மாட இருக்கலாம் என நினைத்தது மட்டுமின்றி, சரக்குகளை இறக்கி வைக்கும் வேலையினை இவனே எடுத்துக் கொண்டான். எத்தனை தூரமானாலும் வண்டியிலேயே சென்று கொடுத்துவிடுவான். இவனுடைய அப்பாவோ தன் மகனிற்கு அதிகம் வேலை இருக்கக் கூடாது என வேலைகளைத் தன் தலை மேல் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார். மகனோ அப்பாவிற்கு அதிகம் வேலை இருக்கக் கூடாது எனத் தன் தலையில் போட்டுக் கொள்கிறான். ஆரம்பத்தில் அவனின் கடையில் வேலை பார்த்த முருகன் என்பவனின் வண்டியில் அப்பாவின் காசில் போட்ட பெட்ரோலில் ஓட்டி வந்து கொண்டிருந்தான். அதன்பின் அப்பாவே ஒரு வண்டியினை வாங்கிக் கொடுத்தார்.
இன்று சாய்பாபா காலனியில் இருக்கும் தன் அப்பாவின் நண்பரிடமிருந்து சரக்கினை வாங்கி வர வேண்டும். ஏற்கனவே வாங்க வேண்டியது ஆனால் அப்பாவின் வெளியூர் பயணத்தினால் அது நீண்ட நாளாகி இப்போது தான் அவன் செல்கிறான். அவன் போன போது மணி காலை பதினொன்றரை தொட்டுக் கொண்டிருந்தது. அப்படி அவன் போகும் போது ஒரு கையில் போன் பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தான். வெகுதூரம் சந்து பொந்தெல்லாம் ஓட்டிக் கொண்டு சென்ற பிறகு திடீரென ஒரு பெரிய பள்ளம் வந்தது. போன் பேசிக் கொண்டே சென்றதால் அதனை கவனிக்கவில்லை. அதில் இறங்கி ஏறும் போது அவனின் அரை நிர்வாண அலைபேசி, என்னவென்று சொல்வது அவனின் அலைபேசியினை கழற்றி சிம் மாற்ற வேண்டுமென்றாலும் ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். அதை இவ்வளவு தைரியமாக காதில் தோளினைத் தூக்கிக் கன்னத்திற்கும் தோளிற்கும் இடையே வைத்து பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தான். இந்த மாபெரும் உலுக்கில் அவன் அலைபேசியின் பின்னால் இருக்கும் பேனல் ஓடிவிட்டது. டக்கென வண்டியினை நிறுத்தினான். நிறுத்திய இடமோ முச்சந்தி. நிறுத்த போர்க்காலப் ப்ரேக்கினை போடும் நேரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ இடித்து மறுபக்கம், அதாவது அருகில் வந்து கொண்டிருந்த ஆட்டோவின் கம்பியில் இடித்து இந்தப் பக்கம் இருந்த சாக்கடையில் பலவித சிராய்ப்புகளுடன் சென்று விழுந்தான்.
இலக்கியங்களில் “நான்” என்பதற்கு அநாயாசமான சக்தி இருக்கிறது என நம்புபவன் நான். நான் என்னும் வார்த்தையானது யாரென்றே தெரியாத ஒருவனைக் கூட யாரென்றே தெரியாத எழுத்தாளன் தன் இஷ்டத்திற்கு சித்திரிக்கும் ஒரு பாத்திரத்தின் குணத்துடன் ஒன்ற வைக்க முடியுமாம். இதைக் கண்டுபிடித்ததாகக் கூட சிலர் பினாத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த நானினைச் சவாலாக வைக்கிறேன். நான் சித்தரிக்கும் ஒரு நான். என்னைபோல ஒருவன் இருக்க வாய்ப்பிருக்கிறது எனில் எனக்கு இந்த உலகத்தில் என்ன மரியாதை ? வாசகனான நீ சுயத்தினை இழக்கிறாய் எனில் வாழ்வதற்கு லாயக்கற்றவன் நீ என்பது மட்டுமே பொருள்.
காலங்காலமாக இந்த உலகத்தில் ஐயையோ வேண்டாம் நம்மூரில் சொல்லிவரும் சொல்லித் தரும் விஷயம் பிரம்மா படைக்கும் போது தன்னையே மாதிரியாக வைத்து பிற மனிதர்களை படைத்தார் என்பதே. அவரை மாதிரியே படைக்கிறார் எனில் அனைவரும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும் ? அல்லது அனைவருமே பிரம்மாவாகத் தானே இருக்க வேண்டும்? அப்படி இங்கு இல்லையே. படைப்பிலிருந்தே இதனை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்போது கேவலம் எழுத்திற்காக எதற்கு உன் சுயத்தினை இழக்கிறாய்? அந்த எழுத்தும் உன்னுடையது அல்ல எனும் போது அதற்கு அடிமையாவானேன் ? இதனை ஏன் சொல்லுகிறான் என நினைக்கலாம்? எழுத்தாளனின் வேலையே உன்னுடைய முட்டாள்தனத்தினைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான். பிரதி என்னும் தாளில் நான் வைக்கும் புள்ளிகளில் கோலம் போட நினைக்காதே முடிந்தால் அது புள்ளிகளே அல்ல அது வெறும் பிரதி என நிரூபி.
காலங்காலமாக மனிதர்கள் தங்களின் சுதந்திரத்தினை நிலைநாட்ட யார் யாரையோ எதிர்த்தவண்ணமே இருக்கின்றனர். இன்னமும் இதன் எதிரொலிகள் உலகின் பல்வேறு இடத்தில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் யாருக்கும் தெரியாது இந்த நான் என்னும் விஷயத்தில் இருக்கும் நுண்ணதிகார மையம். அதனை எப்படி உடைப்பது என்பதையும் இப்பிரதியிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். படித்தால்தானே இந்தப் பிரச்சினை என வாசித்தலையே புறந்தள்ளிவிட்டனர். இந்த புறந்தள்ளிய சமூகத்தின் ஒருத்தி தான் ப்ரியங்கா. இன்று நானிருக்கும் உணர்ச்சிவசத்தால் கூட அவளை அந்தப் புறந்தள்ளிய சமூகத்தினில் சேர்க்கலாம். அவளுக்கும் என் பிரதிக்கும் இருக்கும் பிரச்சினைகளோ ஏராளம். அவளுக்குத் தமிழ் தெரியாது. எப்பவாவது எழுத்து கூட்டி அந்த மதுரைக்கினியாள் வாசிப்பாள். அப்போதும் சில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை! சரி போகட்டும் மதுரையும் எத்தனை ஆண்டுகள் தமிழினை வளர்க்கும் என அவள் சமஸ்கிருதமும் ஃபிரெஞ்சும் வாசித்தவள். அவளுக்கு என் பிரதியினை வாசித்துக் காண்பிப்பது முழுக்க என் இன்னுமொரு தோழி. கதை பற்றி என்ன சொன்னாலும் கடைசியிலவள் சொல்லும் வார்த்தை எனக்கு கதைகளே பிடிக்காது உன்னோடது மட்டும் வாசிப்பேன்!!!
இந்தப் பித்துகுளிகளின் மத்தியில்தான் நான் ஒரு எழுத்தாளன். அவள் சொல்லித்தான் ரமேஷின் விபத்தே எனக்குத் தெரியவந்தது.
அன்று மாலையே நான் நாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் யாரென்று எனக்குத் தெரியாது அதேநேரம் நான் யாரென்று அவருக்கு தெரியுமாம். எப்படி எனப் பார்த்தால் பல நாட்களுக்கு முன் நான் கிறுக்கும் கதைகளை எப்போதும் போல் பல வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருந்தேன். அதில் ஒன்று தான் சுபிக்ஷா பத்திரிக்கை. அதற்கு நான் அனுப்பிய கதை ஒத்துவராது அதில் தவறு இருக்கிறது அதைச் சொல்லவே தங்களை அழைக்கிறேன் என்றார். எனக்கு எந்தக் கதையினை அனுப்பினேன் என ஞாபகம் இல்லை. அங்கு போனபின்தான் நினைவே வந்தது அந்த கதையின் பெயர் “அம்புஜம் மாமியும் அடுத்த வீட்டு அந்தணனும்.” தவறாக நினைக்க வேண்டாம் தலைப்புதான் அப்படியே ஒழிய கதை குடும்ப அரசியலினைப் பற்றியது. அந்த பத்திரிகையோ பக்தி பத்திரிகையாம்! நானும் அதைக் கவனியாமல் அனுப்பி வைத்து விட்டேன். இப்போது நாராயணன் அதே கதையினைத் தன்னுடைய பத்திரிக்கையில் வெளியிடுகிறேன் என்றார். சந்தோஷமாக இருந்தது. அடுத்த நொடியே இப்போது பொருளாதாரக் காரணத்தினால் அது நலிந்து மூடி இருக்கிறோம். எப்போது ஆரம்பிக்கிறோமோ அதன் முதல் பிரதியிலேயே வெளியிடுகிறேன் என்றார். எனக்கு அதீதக் கடுப்பாக இருந்தது. மனதிற்குள் நினைத்து கொண்டேன் ஹரிவராசனத்தின் போது ஐயப்பனுக்கும் கனவுகளெல்லாம் வருமே. அப்படி அதில் நம்மைப் பற்றிய பகுதிகள் வரும் பத்திரிக்கைக்கு ஒருவன் கதை அனுப்பினானே அது என்ன என யோசித்து கொஞ்சம் அம்புஜத்தினையும் பார்த்திருக்க மாட்டாரோ. . . அப்படி மட்டும் பார்த்திருந்தால் நிச்சயம் என் கதை எப்படியாவது வெளிவந்திருக்கும். கைக்கு கிடைத்த வாய்ப்பு போவது போல் இருந்தது.
ரமேஷின் முகம் மற்றும் கைகள் தீக்காயம் ஆகி அதன்பின் வெள்ளைத் தோல் உருவாகுமே அது போல் இருந்ததாம். பேசுவது எல்லாம் சரி ஆனால் பார்க்கத்தான் கேவலமாக இருக்கிறான் என ப்ரியங்கா சொன்னாள். நான் அம்மாவிடம் ரமேஷிற்கு இப்படி ஆனதை எனக்குச் செய்தி கிடைத்த அன்றே சொல்லியிருந்தேன். என்னால்தான் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது மதத்திலும் கலாச்சாரத்திலும் ஒருவனுக்கு ஒருத்தி எனப் பின்பற்றுகின்றனர் ஏனெனில் அது நமது புராணங்களில் ஒன்றான ராமாயணம் சித்தரிக்கும் கோட்பாடு. அதே போல் கிரேக்கத்திலும் அண்ணன் தங்கையினை கல்யாணம் செய்து கொள்வார்களா? இந்தக் கேள்விக்கான பதில் எனக்கு கிடைத்தால் அதனையே இப்போது எழுதிக் கொண்டிருக்கும் என் நாவலில் அத்தியாயமாய்ச் செருகி விடுவேன். யாரிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை.
நாவல் எனும் போது தான் நான் அதிகமாக எடுத்து வைத்திருந்த குறிப்புகள் பற்றி என் நினைவிற்கு வந்தது. படம் பார்த்துக் கதை சொல் என்னும் தமிழ் கலைஞனின் வசனத்தினைச் சற்று மாற்றி பதிவினை வாசித்து லைக் அடி எனப் புதியதொரு கோட்பாட்டினை சுக்கர்பர்க் இந்தியாவில் நிறுவியது, என்ன தான் கேவலக் காரியங்கள் செய்தாலும் ஆட்சியில் மாண்டு போனால் நிச்சயம் புகழ வேண்டும், எங்காவது நீ நடந்து செல்லும் தெருவில் யாராவது ஒருவன் கையினில் கலர் பட அட்டை கொண்டு வெறும் எழுத்தாக இருக்கும் நூலினை வாசித்துக் கொண்டிருந்தால் அவனை எளக்காரமாகப் பார்க்க வேண்டும், என்ன தான் மகன் இலக்கியம் எனப் பிதற்றினாலும் ஊரார் யாராவது பையன் என்ன படிக்கிறான் எனக் கேட்டால் பொழுது போகலைன்னு புக்கு வாங்கிக் கொடுத்தேன்னு சொல்லணும், வயிற்றின் மர்மம் இன்னபிற.
ஏன் இன்னபிற போட்டு நிறுத்திவிட்டேன் எனில் இந்த வயிற்றின் மர்மம் இருக்கிறதே அது உண்மையில் அவ்வளவு திகிலூட்டக் கூடியது. மேலே சொன்ன அனைத்துக் குறிப்புகளையும் எப்படியும் என் நாவலில் எழுதுவேன். பசி ருசியறியாது என்பர், ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அது முழுக்க முழுக்கப் பொய். விடுதியில் என்னதான் சாப்பிட்டாலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் தோசை ஒரு எட்டு சாப்பிட்டாலும் அது இறங்கும். அங்கே பிரதானமாவது பசி. அதே, வீட்டில் ருசி இருப்பதால் என்ன தான் அகோரப் பசி எடுத்தாலும் மூன்று நான்கினைத் தாண்டிச் செல்ல மறுக்கிறது. இதில் இன்னுமொரு விஷயம் அம்மா அனைத்து இரவும் சாப்பிடும் போது என்னிடம் ரமேஷிற்கு எப்படி இருக்கிறது ரமேஷிற்கு எப்படி இருக்கிறது என விசாரிப்பது. என் பதில் தெரியாது என்பதோடு நின்றுவிடும். மனதில் நான் பேசிக் கொண்டிருக்கும் பதிலோ மிக நீளமானது. எனக்கும் ரமேஷிற்கும் என்ன சம்பந்தம் ? நான் இன்று அவனுக்குக் குசலம் விசாரிப்பதன் மூலமோ அல்லது துயரப்படுவதன் மூலமோ அவன் என்னுடைய பிரதியினை நூலாக்கப் போகிறானா? மொழிபெயர்க்கப் போகிறானா? வாசித்து யாரிடமாவது காண்பிக்கப் போகிறானா? அல்லது வாசிக்கத்தான் போகிறானா? இல்லையே. இதில் நான் ஏன் எனது நேரத்தினை இழந்து அவனுக்காக அனுதாபம் தெரிவிக்க வேண்டும்? இன்னும் ஒன்று சொல்கிறேன் அவன் சாகவில்லையே? அப்படி அவனின் மரணம் நிகழ்ந்திருந்தால் நான் அதனை கச்சாப் பொருளாக்கியிருப்பேன். என் அனுதாபங்கள் அனைத்தும் அப்படித்தான் அமையும். தமிழிலக்கணங்களில் தன்னிலை படர்க்கை என நிலைகள் இருக்கிறது. நான் படைப்பாளி. தன்னிலை நானை படர்க்கை நானாக மாற்றும் சக்தியினைப் பெற்றவன். என்னை அந்த படைக்கும் திறனிற்குக் கொண்டாடாத யாருக்கும் என் கண்களிலிருந்து ஒரு சொட்டு நீரும் அனுதாப வார்த்தைகளும் வராது. வாசிப்பவனுக்கும் கொண்டாடுபவனுக்கும் நீ சிந்தும் கண்ணீர் மட்டும் உண்மையாக இருக்குமா எனில் அந்தப் புனித நிலையினை நான் கனவுகளில் மட்டுமே எய்துகிறேன். நான் கனவுகளில் வாழ்பவன். அந்த கனவுகளில் கூட இப்போதெல்லாம் நாராயணனின் வார்த்தைகள் தான் வருகின்றன. வெகுஜனப் பத்திரிக்கைகளில் கதையினைப் பிரசுரிப்பது என்பது கொஞ்சம் புதிரினைப் போன்றது. ஒட்டு மொத்தப் பத்திரிக்கையினையும் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என நன்கு நுகர வேண்டும். அப்படி நுகர்ந்தபின் படைப்பாளிக்கு எந்த வெங்காயத் திறமை எழுத்தில் இருந்ந்தாலும் அதை அந்த அஜால் குஜால் வெகுஜனத்திற்கு ஏற்றாற்போல மாற்ற வேண்டும். அதே கொஞ்சம் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டால் போதும் நீ என்ன எழுதினாலும் வெளியிடுவார்கள்! மக்களின் கொண்டாட்டமெல்லாம் அந்த பத்திரிக்கைதானே தவிர குறிப்பிட்டுக் கதையினை எழுதும் எழுத்தாளர் அல்ல.
கனவுகளில் நான் அநேகம் புத்தகங்களை வெளியிட்டுவிட்டேன்.
பாவம் வெகுஜன மக்கள். புரியவில்லையா. . .முடிந்தால் ஆறாவது பத்தியினை வாசி அல்லது ஏழாவது பத்தியின் கடைசி வரியினை மன்னம் செய். . .