மாதொருபாகன் – மனிதன் இழந்து கொண்டிருக்கும் இன்னொரு பாகம்

திரு.பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலை முன்வைத்து..

maathorupagan‘மாதொருபாகன்’, ‘பெண்ணிற்கு தன் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி, பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைக் குறிக்கும் பெயர்’ என்று ஆசிரியர் இந் நாவலின் தலைப்பை அறிமுகப்படுத்துகிறார். இக்கதையும் காளியும் பொன்னாவும் தம்பதி என இணைந்த ஒரு அலகாக, சமூகத்தை எதிர்கொள்வதைப் பற்றியதுதான். ஆணானாலும் பெண்ணானாலும், அவர்களுக்கான சமூக பாத்திரங்களை ஏற்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், இருவரும் ஒரு உருவத்தில் பிணைக்கப்பட்டவர்களே. குழந்தையில்லாத தம்பதியாக அவர்கள் இருவருமே, சமூகத்தின் பேச்சுகளுக்கும், தீர்ப்புகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. உடற்கூறியலின்படி வலது மூளை இடப்பக்க உடலையும் இடது மூளை வலப்பக்க உடலையும் இயக்குவது போல, சமூகத்திற்கான அவர்களது எதிர்வினையும், நமது பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இருக்கின்றது. குழந்தை இல்லாத குறையை யாரும் சுட்டிக்காட்டிச் சொன்னால், பொன்னா ஆண்மையுடன் சீறுவதும், காளி தலைகுனிந்து விலகுவதுமாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் இறுதிக் காலகட்டத்தில், திருச்செங்கோடு அருகே உள்ள கிராமத்தில் நிகழ்கிறது கதை. பொன்னாவை, அவளது பதினாறாம் வயதில் காளி காதலித்து மணமுடிக்கிறான். திருமணமாகிப் பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்களும் செய்யாத பரிகாரங்கள் இல்லை, வேண்டாத தெய்வங்கள் இல்லை. ‘காட்டு சாமிகளுக்கு கிடா வேண்டுதல், கோயில் சாமிகளுக்கு’ பொங்கல் பூசை’ என்று எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றார்கள். குழந்தை இல்லாமையால், இருவரும் அவரவர் வட்டங்களில் அவரவர் அன்றாடங்களில் சமூகத்தில் எதிர்கொள்ளும் விலகல், தனிமை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது நாவல். மிக விரிவான ஆராய்ச்சி மூலம், அக்காலத்துக் கொங்கு சமூகத்தை அவர்கள் வாழ்க்கை முறையை, விழுமியங்களை, சடங்குகளை நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர். அதோடு நாவலில் அமைந்திருக்கும் கொங்கு வட்டார வழக்குகளும் வாசிப்பதற்கு அலாதியான உணர்வை அளிக்கின்றன.

பொன்னாவும் காளியும் செய்யும் ஒவ்வொரு பரிகாரத்தின் மூலமும் அவர்களது சமூக நம்பிக்கைகளையும் அவற்றின் பின்னணியையும் அறிந்துகொள்ள முடிகிறது. இப்பரிகாரங்களின் வரிசை, கொங்குச் சமூகத்தின் அப்பகுதியின் ஒரு உப கதையாக, வரலாற்றுத் துண்டாகவும் விரிகிறது. பாட்டி சொல்லும் கதையில், அவர்கள் சமூகத்தின் மூதாதைகள், அக்காலத்தில் அடர் வனமாக இருந்த திருச்செங்கோட்டு மலையைச் சுற்றிக் குடியேறுகிறார்கள். வனத்தை அழித்து வேளாண்மை செய்யத் துவங்குமுன், ஆடு மாடுகள் மேய்க்கும் தொழில் செய்கிறார்கள். அப்போது, ஒரு சில இடையர் இளைஞர்கள் காட்டுக்குள் ஒரு இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததால், அநீதி இழைக்கப்பட்ட அப்பெண், அங்கு தெய்வமாக்கப்படுகிறாள். பின்னர் அந்த இளைஞர்களின் குடி வளர்ந்த பின்னும், அந்த தெய்வத்தின் சாபம் அவர்களைத் துரத்துவதாக நம்பப்படுகிறது. அந்த காட்டு தெய்வமான பாவாத்தாவிற்கு, காளியின் பாட்டி பொங்கல் வைத்து பரிகாரம் செய்யச் சொல்கிறாள்.

Courtesy of UC Berkeley, Berkeley Art Museum/Pacific Film Archive

திருச்செங்கோட்டுப் பெரிய கோயில், ஒருவகையில் தனது புரணங்களினாலும் அளவினாலும் மறைத்துவிட்ட, காட்டு தெய்வமான பாவாத்தாவைத் தேடிச் செல்கிறான் காளி. அங்கு ஒரு பெருமர நிழலடியில் அமர்ந்திருந்த பாவாத்தாவைப் பார்த்தபோது,

‘தெய்வத்தின் காலடியில் போய் நின்றபோது இந்தப் பெரு நிலம் முழுவதும் தனது படுக்கைதான் என்று கருதிப் பள்ளி கொண்டிருக்கும் பிரமாண்ட உருவத்தை தரிசித்தான். கைகளும் கால்களும் திரண்ட அடிமரமாய் தோன்றின’.

ஆம், அவனது மூதாதை அன்று அங்கு அழித்தது, அந்த பிரமாண்டத்தின் தளிரை. மெதுவாக அந்த காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டன. காடுகளையும் மலைகளையும் அழித்துவிட்டு மனிதன் மட்டும் வளர்ந்துகொண்டே இருக்க முடியுமா? இயற்கைக்கு என்று ஒரு சமன்பாடு இருக்கிறதே. அந்த இயற்கை தெய்வம் அவர்களது பரிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

மறுபடியும் இயற்கையுடன் சவால் புரிவதாகவே அடுத்த பரிகாரமும் அமைகிறது. திருச்செங்கோட்டு மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயிலருகே, மிக ஆபத்தான மலை விளிம்பில் இருக்கும் வறடிக் கல்லை சுற்ற வேண்டும். உயிரைப் பணயம் ச் செய்ய வேண்டிய செயல். பொன்னாவின் பயத்தைப் போக்க காளியே மூன்று முறை சுற்றி வந்து காட்டுகிறான். அவள் ஒரு முறை சுற்றி வருகிறாள். அதற்கும் ஒரு பலனும் இல்லாமல் போகிறது.

அவர்கள் இருவருமாகவே இருந்துவிடலாம். குழந்தையில்லாவிட்டால் என்ன என்று ஒவ்வொரு முறை அவர்களுக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் போதும், அவர்களைச் சுற்றிய சமூகம் அவர்களை மெல்ல மெல்ல விலக்குகிறது. வாரிசில்லாமல் சொத்து சேர்த்து என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் சொத்தின் மீது பக்கத்துவீட்டு பெண்ணிலிருந்து காளியின் உறவினர்கள் வரை எல்லாருக்கும் ஆசை வருகிறது. பொன்னா, உழுத நிலத்தில் விதைப்பதற்கும், சமைந்த பெண்ணிற்கு சடங்கு செய்வதற்கும் தடை செய்யப்படுகிறாள். காளி தானாகவே, தன் நண்பர் வட்டத்திலிருந்து தனித்து, தானுண்டு தன் தொண்டுபட்டி உண்டு என்று மாறுகிறான்.

இவர்களுக்கு சமாதானம் அளிப்பவராக நல்லுப்பையன் சித்தப்பா இருக்கிறார். அவர்களை விலக்கும் சமூகத்தை அவர் தொடர்ந்து சவாலுக்கு இழுப்பவராக இருக்கிறார். தனக்கென ஒரு குடும்பம் இல்லாத போதும், தம் தம்பிகளிடமிருந்து சண்டையிட்டு தன் பங்கு சொத்தை உரிமையுடன் வாங்கிக்கொள்கிறார். தன் பங்கு நிலத்தில் வேளாண்மை செய்துகொண்டு தனியாகவே இருக்கிறார். திருமணம் என்ற அமைப்பில் நம்பிக்கை இல்லாதவராக, தன்னுடன் ஒரு விதவைப் பெண்ணை சில காலம் அழைத்து வந்து வாழ்கிறார். அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதும் அவளை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். ‘அந்த கண்டாரோலி முண்டக்கி ஆம்புள ஆவுல. புருசன் வேணும்னிட்டா,’ என்று சொல்லும் போது, அவர் குடும்பம் என்ற அமைப்பையும் அது ஆணிற்கும் பெண்ணிற்கும் அளிக்கும் வேறுபட்ட உரிமைகளையும் சலுகைகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்.

காளியை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டாதவர்களே இல்லை. அவனது அம்மா, மாமியாரிலிருந்து அத்தனை நண்பர்களும் உறவினர்களும் அதை மறைமுகமாகவேனும் குறிப்பிடுகிறார்கள். காளியும் அதைப் பற்றி முற்றாக யோசிக்காமல் இல்லை. அது அவனுக்கு சமூகம் நேரடியாக வழங்கும் உரிமை. பொன்னாவின் மனப்பதைப்பை அவன் உணர்ந்துகொண்டாலும், அதையும் தாண்டி அவன் மீதே இருக்கும் நம்பிக்கையின்மையால்தான் அவன் இன்னொரு திருமணத்தை நிராகரிக்கிறான். இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டு, அவளுக்கும் குழந்தை இல்லாமல் போய்விட்டால், அது அவனால்தான் என்றாகிவிடும். பொன்னா, திருச்செங்கோட்டு தேர் நோம்பியின் பதினாலாவது நாள் திருவிழாவிற்கு அனுப்பப்படுவது, அவளுக்கு அளிக்கப்பட்ட மறைமுகமான சலுகை. அதுவும் அவனது குடும்ப வாரிசுக்காக அளிக்கப்பட்ட ஒன்று. அங்கு அன்று வரும் ஆண்கள் எல்லோரும் தெய்வத்தின் வடிவங்கள். அவர்கள் அளிக்கும் பிள்ளை தெய்வத்தின் குழந்தை என்று நம்பப்படுகிறது. குடும்பம் என்ற அமைப்பை நிலைநிறுத்த இப்படி சில மீறல்கள் மறைமுகத் தூண்களாக இருப்பது நமது மரபில் மகாபாரத காலத்திலிருந்து வருவதுதான்.

ஆனால், இதை ஒரு ஒழுக்க மீறலாக மட்டுமே காளியால் பார்க்கமுடிகிறது. அவனே அத்திருவிழாவிற்கு தன் இளமையில் சென்றிருப்பதுகூட அவனுக்குப் பெரிதாக படவில்லை. அவன், தன் காட்டில் முன்பு வேலைப்பார்த்த காத்தாயி தம்பதியின் பிள்ளையைத் தத்தெடுத்துக்கொள்ள நினைக்கிறான். ஆனால், காத்தாயி காளியை அவன் சாதியிலேயே ஒரு பிள்ளையைத் தத்தெடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிடுகிறாள். பின்,குழந்தைகளே இல்லையென்றாலும் என்ன, இருவருமாக வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறான்.

துணை கூட இல்லாது தனியனாக இருக்கும் நல்லுப்பிள்ளை சித்தப்பாவிடம், குழந்தைகளுக்காகவேனும் திருமணம் செய்துகொள்ளலாமே என்று கேட்கும்போது, அவர் சொல்கிறார், ‘றக்க மொளச்சுதுதா பறந்து ஓடுச்சான்னு இருக்கோணும். அத உட்டுட்டு பெத்து வளத்து ஆளாக்கிக் கலியாணம் பண்ணிச் சொத்து சேத்து கஷ்டப்பட்டு சாகறது ஒரு பொழப்பா?’,’காக்கா குருவியாட்டம் இருந்தா எனக்கு கொழந்த பெத்துக்கறதுல இஷ்டந்தான்.’

மனிதர்களுக்கு குழந்தைகள் என்பது வெறும் உயிரின நீட்சியில்லை, அது அவர்களது அகங்காரத்தின் நீட்சியும் கூட. உயிரின நீட்சியை உத்திரவாதப்படுத்த உருவாகியதுதான் குடும்ப அமைப்பு. அதன் பகுதியாகதான் ஆண் பெண் என்ற இருமைகள் அழுத்தமாக உருவாக்கப்பட்டன. ஆணிற்கு என்று ஒரு சமூக பாத்திரமும் பெண்ணிற்கென்று ஒரு சமூக பாத்திரமும் நிலைகொண்டது.

ஆனால், உயிர் நீட்சியின் அடிப்படையான இயற்கை வளம் மனிதனைச் சுற்றிக் குறைந்துகொண்டே வருகிறது. இது அவனது அகங்காரத்தையும் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த மாறிவரும் சூழலில், குடும்ப, சமூக அமைப்புகள் பரிசுத்தமான ஆண்மை குணம், பரிசுத்தமான பெண்மை குணம் என்ற தேவைகளைத் தாண்டி வந்துகொண்டிருக்கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவம், ஆண்-பெண் சம உரிமைகளின் குறியீடு என்பதைவிட, மனிதனின் ஆதார குணங்களின் குறியீடாகவே பார்க்க முடியும். மனிதன் ஆணாக மட்டுமாக, இல்லை பெண்ணாக மட்டுமாக சிந்திப்பதைத் தாண்டியதுமே, பெண்களின் சம உரிமைகள் தானாக நிலைபெற துவங்கும்.

இந்த நாவல் காட்டும் சமூகப்பார்வை இன்று பெரிய அளவில் மாறிவிடவில்லையென்றாலும், சமூக அமைப்பு மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நமது அரசாங்கங்களே ஒரு குழந்தைக்கு மேல் ஊக்குவிப்பதில்லை. பத்து, பதினைந்து குழந்தைகள் இருக்கும் இடத்தில் இன்று ஒரே ஒரு குழந்தைக்கான வளங்கள்தான் கிடைக்கின்றன. குழந்தைகள் பெற வாய்ப்புகளற்ற ஓரினத் திருமணங்கள் பல இடங்களில் சமூக ஆதரவைப் பெற்றுக் கொண்டுவருகின்றன. குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியையும் வாழ்க்கையையும் அளிக்க முடியாதோ என்ற பதட்டத்தினால், சில நாடுகளில் தம்பதிகள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவே தயங்குகிறார்கள். எல்லா உரியினங்களுக்கும் இயற்கையால் விதிக்கப்பட்டதுதான் இது. தாம் வாழும் சூழல், தம் வாழ்க்கைக்கு குந்தகமாக மாறும் போது அவ்வுயிரினம் தானாக அழிய வேண்டியதுதான். மனிதன் எப்போது அந்த எல்லையை எட்டப் போகிறான் என்று பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய மாற்றத்தை மனித இனம் எப்படியெல்லாம் சந்திக்கலாம் என்பதைப் பற்றியும்.

இந்த நாவல் காட்டும் விழுமியங்களும் வாழ்க்கைமுறையும் எல்லாம் இயற்கையைச் சார்ந்தவை. இதில் வரும் வழக்காடல்களும், மரங்களும், சின்ன சின்ன இயற்கைக் குறிப்புகளும் எல்லாம் அக்கால வாழ்க்கைமுறையின் ஆவணங்களாகும். ஆசிரியர் இவற்றை முறையாக ஆராய்ச்சி செய்து இந்த நாவலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். இதில் ஆவணபடுத்தப்பட்டிருக்கும் இயற்கையைச் சார்ந்த வாழ்க்கைமுறை பற்றி தியடோர் பாஸ்கரன் அவர்கள் தமது மதிப்புரையில் எழுதியிருக்கிறார். அறுபது எழுபது வருடங்களில் நாம் நம் இயற்கையை ஆவணப்படுத்துதலுக்குரியதாக மாற்றிவிட்டோம். அன்று இயற்கை நமது சமூக அமைப்புடன் பிணைந்திருந்தது. ஒரு கிராமத்தின் அத்தனை மனிதர்களுக்கும் அவர்களின் இயற்கை வளங்கள் மீது பொறுப்பு இருந்தது. இன்று சமூகம் என்ற அலகிலிருந்து தனிமனிதன் என்ற அலகாக மாறிக்கொண்டிருக்கிறோம். இப்போது நமது பிரக்ஞையில் சாதி, மதம் போன்றவற்றுடன் ஆண் பெண் என்ற பகுதிபாடுகளும் களையப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில், நாம் மனிதன் என்ற ஒற்றைப் பிரக்ஞையில் இயற்கைக்கும் சூழலுக்குமான சரிபாதியை அளிக்க வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டோம். இயற்கையுடன் இயைந்த ஒரு புதுவகை சமூக அமைப்பை நோக்கி நாம் செல்ல துவங்கும் காலம் வந்துவிட்டது.

0 Replies to “மாதொருபாகன் – மனிதன் இழந்து கொண்டிருக்கும் இன்னொரு பாகம்”

  1. இந்த பதிவில் இருக்கும் உண்மைகளையும் கொஞ்சம் பார்க்கவும்.. காழ்புணர்ச்சியின் அடிப்படையில் தனது எழுத்தாற்றலை ஆயுதமாக பயன்படுத்துவதால் பொய்கள் உண்மையாகாது..
    http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html

Leave a Reply to இரா. கண்ணன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.