தேடல்

டாக்டரிடம் சென்ற நாள் எனக்கு நன்கு ஞாபகம் உள்ளது. அது வேலை முடிந்த ஒரு மாலை வேளை. சைகொதெரபிக்குச் செல்வது இந்த ஊரில் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. மன்ஹாட்டனில் இது ஒரு ஃபேஷனாகவே இருந்தது. ’ஷ்ரிங்க்’ (shrink) ஜோக்குகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன போலும். ஆனால் மன நல மருத்துவரிடம் செல்லும் அனைவரையும் மெண்டல் என ஒற்றை லேபிளுக்குள் வகைப்படுத்தும் சூழலில் இருந்து வந்த எனக்கு இது சாதாரண விஷயம் அல்ல. வீட்டில் தெரிந்தால் அடிக்க வந்து விடுவார்கள். “வெளிய தெரிஞ்சா யாருடா பொண்ணு கொடுப்பா ?”  அப்டி ஒன்றும் எனக்கு பெரிய பிரச்சனை இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். சென்ற வாரம் ராமின் வீட்டில் நடந்த கலாட்டாவிற்குப் பின் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஜனனி தான் முதலில் இந்த யோசனையை சொன்னவள்.

“ஹலோ அர்ஜுன், என்ன நேத்து நைட்டு வீட்டுக்குப் பத்திரமா போயிட்டியா?”

“ஜனனி, ஆமா. டாக்சிக்காரன் கொண்டுவந்து விட்டுட்டான். தேங்க்ஸ் பார் காலிங் தி கேப்.

சாரி, நேத்து ராம் வீட்டில அப்பிடி நடந்துகிட்டதுக்கு.”

“பரவாயில்லை அர்ஜுன். அப்புறமா ராம் கிட்ட சாரி கேட்டுடு. எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்கார். போய்ப் பார்க்கிறாயா? “

“டாக்டர் எதுக்கு? எனக்கு அடி எதுவும் பெருசா படல. ராம் எப்படி இருக்கான்?”

“இல்ல இவர் வேற.ஷ்ரிங்க்.”

“என்ன விளையாடுறியா? ஐ வாஸ் ஜஸ்ட் ஸ்ட்ரெஸ்ட் எ லிட்டில். “

” ஐ நோ. ஆனா ஒரு தடவ போய்ப் பார்க்கலாம். அட்லீஸ்ட் நீ நினைக்கிறதயாவது அவர் கிட்ட சொல்லலாம் இல்ல. ரொம்ப எஃபெக்டிவ் ஆனவரு, நிறைய பேருக்கு அவரோட எக்ஸ்பீரியென்ஸ் ஹெல்ப்ஃபுல் ஆ இருந்திருக்கு. இட் காண்ட் கெட் வொர்ஸ் அர்ஜூன். பிஸைட்ஸ், அவர் ஒரு கேல் (Cal) அலும்னி.”

“சரி ஜனனி, ஒரு தடவை போய்ப் பார்க்கிறேன்.”

குட், அவரோட கிளினிக் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் அனுப்புறேன். மேக் ஏன் அப்பாய்ண்ட்மெண்ட் அண்ட் கோ ஸீ ஹிம்.”

டாக்டரின் கிளினிக்கில் அவரைப் பார்க்க நேரம் பெற்றுச் சென்றேன். கிளினிக் ஒரு தனி வீடு போலத் தான் இருந்தது. இந்த ஊரில் ஒரு தெருவில் உள்ள எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டவை. அநேகமாக எல்லா வீடுகளிலும் தான் முதலில் தென்படும். இந்த வீடு வித்தியாசமாக இருந்தது. சற்று உயரம் குறைவாக, செவ்வக வடிவில் இருந்தது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள். நல்ல நிழல், அமைதி. உள்ளே சென்று வரவேற்பாளரிடம் பெயர் சொன்னேன். அவள் என்னை உட்க்காரச் சொல்லிவிட்டு இண்டர்காமில் பேசினாள். வரவேற்பறை ஒரு நீள் செவ்வக வடிவில் இருந்தது. தரையில் கரு நிற கிரானைட், இந்த ஊர் வழக்கத்துக்கு மாறாக. ஒரே ஒரு சோபா மட்டும் இருந்தது. சுவற்றில் எதுவும் இல்லை.

“நீங்கள் உள்ளே போகலாம். டாக்டர் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.”

உள்ளே சென்றேன். மற்றொரு செவ்வக அறை. டாக்டருக்கு ஒரு மேசை, அதன் இரு புறமும் ஒரு நாற்காலி. பின்னர் சற்று தள்ளி சற்றே உயரமான கால் நீட்டி சாய்வதற்கு வசதியாக ஒரு சேர். வேறு எதுவும் இல்லை.

instruments_music_head_shrink_psychiatry_confusion

டாக்டர் வெண் தாடியுடனும் குறும்பு கொப்பளிக்கும் கண்களுடனும் இருந்தார்.

” ஹை, நான் டாக்டர் ஸ்பென்ஸர்” கை நீட்டினார்.

“ஹெல்லோ டாக்டர் ஸ்பென்ஸர், நான் அர்ஜுன். உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி”

“எனக்கும் அப்படியே. எப்படி இருக்கிறீர்கள், ஊர் பிடித்திருக்கிறதா? பெர்க்லியில் இருந்து மாற்றலாகி வந்திருகிறீர்கள் அல்லவா?”

“ஆமாம் டாக்டர். ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது, நன்றி. நல்ல கூட்டம், நெரிசல். டியூப் ட்ரெயின் மொத்த ஊரையும் சுருக்கி வைத்திருக்கிறது.”

சிரித்தார் “ஆமாம் நெரிசல் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அதுவும் ஒரு அனுபவம் தான்”

பின்னர் பெரிய சேரில் சாய்ந்து உட்காரச்சொன்னார். பக்கத்தில் வந்து நின்று கொண்டார்.

“சொல்லுங்கள் அர்ஜூன், உங்களுக்கு எதாவது பிரச்சனை என்று நினைக்கிறீர்களா?”

“பிரச்சனை என்னிடமா என்று எனக்கு தெரியவில்லை டாக்டர். என்னால் மற்றவர்களுடன் அவ்வளவாக ஒத்துப் போக முடிவதில்லை. நண்பர்கள், அலுவலக சக ஊழியர்கள் யாருடனும்”

“அவ்வாறு ஒத்துப் போகாதது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது?”

“ஸ்ட்ரெஸ் டாக்டர். அவர்களிடம் உரசல். பின்னர் அதைச் சரி செய்வதற்குச் செய்யும் சமரசங்கள். அதைப்பற்றி யோசிப்பதற்கு செலவிடும் நேரம். இவையனைத்தும் சேர்ந்து பெரிய மன அழுத்ததத்தைத் தருகிறது.”

“நண்பர்களுடன் உரசல் என்ன காரணத்தினால் வருகிறது? குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.”

“நான் பொதுவாக அதிகம் பேசக் கூடியவன் இல்லை. என் பாட்டுக்கு இருக்கக் கூடியவன். ஆனால் ஒரு கூட்டமாக இருக்கும்போது அந்தக் கூட்டத்திற்கென சில விதிமுறைகள் தன்னிச்சையாக உருவாகி விடுகின்றன. உதாரணத்திற்கு அலுவலகத்தில் இருந்து அனைவரும் சேர்ந்து மதிய உணவு போகும் போது அல்லது நண்பனின் வீட்டிற்குப் போகும்போது. பின்னர் அந்த விதிமுறைக்குள் பொருந்திப் போவதற்காக நான் என் இயல்பை மீறி எதாவது செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது சொல்ல வேண்டி இருக்கிறது.

இவ்வாறு இயல்பை மீறுவது அதனளவிலேயே எனக்கு எரிச்சலைத் தருகிறது. அதனுடன் சேர்ந்து நான் சொல்வது பெரும்பாலான நேரங்களில் அசந்தர்ப்பமாக ஆகிவிடுகிறது.”

“நீங்கள் கூடிய மட்டும் உங்கள் இயல்பை மீறாமல் இருக்க முயற்சிக்கலாம் அல்லவா?

உதாரணத்திற்கு, அதிகம் பேசாமல் ஆனால் ஒரு மென் சிரிப்பை மட்டும்  அணிந்த வண்ணம் இருக்கலாம். அல்லது ஒரு சில harmless ஜோக்குகளை நினைவில் இருத்திக் கொண்டு இந்த மாதிரி சூழ்நிலையில் உபயோகப் படுத்தலாம்.”

“அவ்வாறு செய்வது எனக்கு செயற்கையாகத் தோன்றுகிறது டாக்டர். மேலும் ஜோக்குகளுக்கு அதை பர்ஃபார்ம் செய்து சொல்வது அதன் பொருளடக்கத்துக்கு இணையாகத் தேவைப்படும் ஒன்று. அது என்னிடம் இல்லை. தவிர இன்னொரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால் நண்பர்கள், அலுவலக மேலதிகாரிகள் பெரும்பாலான சமயம் நேரடியாக ஒரு விஷயத்தை சொல்வதில்லை. மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். பல சமயம் குறைகளை, கிண்டல்களை, சில சமயம் பாராட்டுகளை. அந்த மாதிரிச் சூழ்நிலையில் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரிப் பேச்சுகளை நான் முதலில் எதிர் கொள்ள நேர்ந்த போது, சரி இந்த ஒரு மனிதர் தான் இப்படி என்று நினைத்திருந்தேன். ஆனால் மெல்ல மெல்ல இதை நான் எல்லா இடங்களிலும் எதிர் கொள்ள நேர்ந்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது, அனைவரும் எனக்குத் தெரியாமல் ஏதோ சதியில் ஈடுபட்டுள்ளதைப் போல. அவர்கள் குறைகளை என்னிடம் நேரடியாகச் சொன்னால் அவற்றை மறுத்துப் பேசுவதற்கோ அல்லது அவற்றுக்கான காரணங்களைச் சொல்வதற்கோ என்னிடம் ஆயிரம் இருக்கும். ஆனால் என்னிடம் நேரடியாகக் கேட்கப்படாததால் நான் எதுவும் சொல்வதில்லை. கோபம் மட்டும் எஞ்சும். இவ்வாறு மறைமுகமாகப் பேசுவது, குற்றம் சாட்டுவது ஒரு பெரிய அநீதி என்றே நினைக்கிறேன். இது எதிராளிக்குப் பதில் அளிக்கும் வாய்ப்பைத் தருவதில்லை.”

boat_spoilt_all_alone_lonely_separated_skyfall_destroyed

“நீங்கள் சிறு வயதில் இருந்தே இவ்வாறு தான் இருந்தீர்களா, அல்லது இது பின்னர் நிகழ்ந்ததா?”

“இவ்வாறு என்றால்?”

“ம்ம்ம்..அதிகம் பேசாமல், தனிமையாக, கொஞ்சம் ரிஜிட் ஆக? ஏனென்றால் இப்படி இருந்திருந்தீர்கள் என்றால் நண்பர்கள் நிறைய வாய்த்திருக்க மாட்டார்கள் அல்லவா?”

“சிறு வயதிலிருந்தே இல்லை என்று நினைக்கிறேன் டாக்டர். இளங்கலையில் படிக்கும் போது கூட நிறைய நண்பர்களுடன் தான் இருந்தேன். அப்போது நான் என் பாட்டுக்குச் செய்யும் பல வேலைகள் நண்பர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும், எதற்கு என்று எனக்குச் சரியாகத் தெரியாது. அவர்கள் என்னை அதற்குக் கிண்டல் அடிப்பார்கள், நானும் கூடச் சேர்ந்து சிரிப்பேன். இன்றைய நண்பர்கள் பலரும் இளங்கலை நண்பர்கள் தான்.”

“பின்னர் இங்கே வந்து பெர்க்லியில் படித்தீர்கள் அல்லவா? என்ன படித்தீர்கள்?”

“கம்ப்யூட்டர் ஸையன்ஸ்”

“அங்கே உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? தனித்துச் சொல்லும்படி, நடத்தையில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்திய ஏதாவது அனுபவம்?”

“பெர்க்லி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்குள்ளவர்கள் அனைவரும் ஒரு லிபரல் மனநிலை கொண்டவர்கள், பலதையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். திறமையானவன் என்றால் மற்ற விஷயங்கலை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. உங்களுக்கு தெரியாதது அல்ல.”

“ஆம். பெர்க்லி நாட்கள் நான் மிகவும் ரசித்து அனுபவித்தவை.

“அந்தச் சூழல் உங்கள் நடத்தையில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியதா? வேறு ஏதாவது உங்களுக்குக் குறிப்பாக நடந்த அனுபவம்?”

“ம்ம்ம். நான் ஒரு டெட்டி பேருபேருடன் (teddy bear) நிறைய நேரம் செலவழிக்குமாறு ஆனது.”

“டெட்டி பேபேருடனா? விளக்க முடியுமா?”

“அங்கே படிப்பு, அதன் சம்பந்தமான வேலை அதிகமாக இருந்தது. எங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் லேபில் ஒரு பெரிய டெட்டி பேர்பேர் இருந்தது. நாங்கள் எழுதிய நிரலி எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை என்றால் ஆசிரியர் முதலில் அந்த டெட்டி பேருடன் சென்று பேசச் சொல்வார்.

டெட்டி பேருக்கு நிரலி என்ன செய்ய வேண்டும், அதனிடம் எதிர்பார்க்கப்படும் விடை என்ன, அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது, தற்சமயம் என்ன விடை தருகிறது என்று விளக்க வேண்டும். அவ்வாறு டெட்டி பேருக்கு விளக்கிச் சொல்லும் போதே நான் செய்த தவறு பெரும்பாலும் விளங்கி விடும் என்பது ஆசிரியரின் எண்ணம். அது அவ்வாறு நடக்கவும் செய்தது. நான் அந்த டெட்டி பேருடன் நிறைய நேரம் செலவழித்தேன். முதலில் என் நிரலியில் பிழை வரும் பொது. பின்னர் நிரலியியை வடிவமைக்கும்போது. பின்னர் நான் தனியாக ஒரு டெட்டி பேர் வாங்கி என் அறையில் வைத்துக் கொண்டேன்.”

“அதன்பின் அந்த டெட்டி பேருடன் மற்ற விஷயங்களைப் பேச ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? அது உங்கள் உற்ற நண்பனாகி விட்டது?”

“ஆமாம் டாக்டர். ஜனனிக்குப் பின் டெட்டி பேர் தான் என் உற்ற தோழன்.”

teammate_for_life_uc_berkley_colleges_teddy_bear

“அந்த ஆசிரியர் ஒரு இளம் பெண்ணை நிறுத்தியிருந்தால் மாணவர்கள் இன்னும் நன்றாகப் படித்த்திருப்பார்கள் இல்லையா?”

“இல்லை டாக்டர். அதற்கு பெர்க்லியில் பஞ்சம் இல்லை. லேப்பில் இளம்பெண் டிஸ்ட்ராக்‌ஷன்தான்.”

டாக்டர் சிரித்த்துக்கொண்டே சொன்னார் “அஃப் கோர்ஸ்

“ஓக்கே, அர்ஜுன், நீங்கள் எழுந்திருக்கலாம். நாம் மேசையில் சென்று பேசலாம்.”

நானும் டாக்டரும் மேசையின் இருபுறமும் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். டாக்டர் தண்ணீர் தந்தார்.

“அர்ஜூன் உங்களிடம் பெரிதாக பிரச்சினை எதுவும் இல்லை.”

எனக்கு சற்றே ஏமாற்றமாகக் கூட இருந்தது. இந்த ஏமாற்றம் ஆச்சரியமாகவும் இருந்தது. அதே சமயம் அந்த ஆச்சரியம் என் மீதே லேசாக எரிச்சல் ஏற்படுத்துவதாக இருந்தது.

“ஆனால் நான் என்ன கவனித்தேன் என்று சொல்கிறேன். நீங்கள் இளங்கலைப் படிப்பைப் படித்து முடிக்கும் வரை இருந்த இயல்பு உங்கள் நண்பர்களிடமும், சுற்றத்திடமும் உங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் இளங்கலை வகுப்பில் படிக்கும் போதே கூட அதாவது இயல்பிலேயே அதிகம் பேசாதவராக சற்றே இறுக்கமானவராக இருந்திருக்கலாம். ஆனால் அந்தச் சூழ்நிலையில் அது அவ்வளவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல என்பது என் அனுமானம். அதனால் அப்போதே நீங்கள் மீறியஉற்சாகம் உள்ளவராக நடித்திருக்கலாம். ஆனால் பெர்க்லி வந்தபின் அந்தச் சூழ்நிலை உங்கள் இயல்பை ஏற்றுக் கொண்டது; அதில் உங்கள் படிப்பு, திறமை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது உங்கள் திறமையை அங்கீகரித்தது. நீங்கள் அதற்கு ஆட்பட்டீர்கள். உங்கள் திறமையைக்கொண்டு ஈடு கட்டினால் போதும் என்று நினைத்தீர்கள். உதாரணத்திற்கு நண்பர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் சேர்ந்து இருப்பதற்கும் பதிலாக, வேலையில், படிப்பில் எதாவது மேலாகச் செய்வது முன்னதை ஈடு கட்டிவிடும் என்று நினைத்தீர்கள். படிப்பில் சாதிப்பது உங்களுக்கு ஒரு உள்ளொடுங்கி ஆக இருக்கும் உரிமையைக் கொடுக்கும் என்று நினைத்தீர்கள்.

மற்றொன்று உங்களுக்கும் டெட்டி பேருக்குமான உறவு. உங்கள் டெட்டி பேர் என்பது ஒரு கணிணி தான். அந்த டெட்டி பேரின் மீது ஒரு கணிணியின் ஆவியைத்தான் ஏற்றி வைத்து அதனுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். கணிணிகள் பொய் சொல்வது இல்லை. மறைமுகமாகப் பேசுவது இல்லை. அதனால் அவைகளுடன் தர்க்கம் செய்வது சுலபம். அதே நேரம் அவைகளுக்கு மனிதரின் எந்த உணர்ச்சியும் இல்லை. வஞ்சகமும் இல்லை. நேர்மையும் இல்லை. கருணையும் இல்லை, முதுகில் குத்துவதும் இல்லை. நீங்கள் மனிதர்களையும் கணிணியைப் போன்று இருக்க எதிர்பார்த்து விட்டீர்கள். அதுவும் ஒரு பாரபட்சமான கோணத்தில். மனிதன் கருணை காட்டினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என நினைக்கிறேன். ஆனால், நேர்மை, சரி என்று நீங்கள் நினைப்பவற்றில் இருந்து அவன் இம்மி விலகினாலும் உங்களுக்கு அது உறுத்திக் கொண்டு தெரிகிறது. கோபம் வருகிறது. இதுதான் பிரச்சினை என்று நினைக்கிறேன்.

“டாக்டர் நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியாக இருக்கலாம். ஆனால் மனிதன் அடையக்கூடிய உயரத்தை, அவன் கருணையின் ஆழத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

”என் பிரச்சினையைச் சரி செய்வதற்கு என்ன செய்யலாம்?”

“சும்மா ஏற்றுக்கொள்வது தான். பெர்க்லி உங்களை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் உங்கள் நண்பர்களை, சுற்றத்தை அவர்களின் குண விசித்திரங்களோடு ஏற்றுக் கொள்வதுதான். உள்நோக்கிப் பாருங்கள் உங்களிடமுள்ள குறைகளைக் காணும் போது மற்றவர்களின் குறையை மன்னிப்பது எளிது. உதாரணமாக, உங்கள் இளங்கலை நண்பர்கள் நீங்கள் இப்போது மாறி விட்டதாக நினைக்கலாம், அவர்களை நீங்கள் ஒதுக்குவதாக நினைக்கலாம். “

“அப்படி என்றால் மற்றவர்களின் குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவன் குறைகள் உள்ளவனாக இருக்க வேண்டுமா? ஒரு பேச்சுக்காவது நான் குறைகள் அற்றவன் என்று வைத்துக் கொண்டால்? அப்போது என்ன செய்வது? அவர்களை நிராகரிக்கலாமா?”

“அது மிகவும் எளிது. மற்றவர்களின் சிறு குறைகளையே கூட ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் அப்படி என்ன பெரிய உன்னதமான மனிதர்? நான் சொன்னவற்றை யோசித்துப் பாருங்கள்.”

“சரி டாக்டர்.”

“நீங்கள் ஏதாவது போதை மருந்துகள் உபயோகப்படுத்துவது உண்டா?”

“இல்லை டாக்டர். எப்போதாவது பியர், ஒய்ன் அருந்துவதோடு சரி”

“ஏதேனும் மருந்து, மாத்திரைகள்?”

“சில சமயம்–ஆண்டி டிப்ரஸண்ட்ஸ், சில சமயம் தூக்க மாத்திரைகள்.”

“அவற்றை இனிமேல் எடுக்க வேண்டாம். நல்ல ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். கொஞ்சம் மனச்சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் சாக்லட் பார் சாப்பிடுங்கள். ஷேக்ஸ்பியரைப் படியுங்கள்.”

“ஓக்கே டாக்டர். உங்களிடம் உரையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. என்னிடம் இவ்வளவு நேரம் செலவழித்ததற்கு மிக்க நன்றி.”

விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். டாக்டரிடம் பேசியது நிறைவாக இருந்தது.

பழுத்த மனிதர். பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சொல்கிறார்.

வீட்டிற்கு வந்து ஜனனியை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். சந்தோஷப்பட்டாள். ராமை அழைத்து சாரி சொன்னேன். “பரவாயில்லடா,” என்றான்.

இனிமேல் இதுதான் செய்ய வேண்டியது என முடிவெடுத்தேன்: கூட்டமாக இருக்கையில் எப்போதும் முகத்தில் ஒரு மென் சிரிப்பைத் தவழ விட்டு முகத்தைச் சாந்தமாக வைத்துக்கொள்வது. கிண்டல், மறைமுகக் குத்தல் எல்லாவற்றுக்கும் சிரிப்பையே பதிலாகத் தருவது. விவாதிக்காமல் இருப்பது. அல்லது மிதமாக விவாதிப்பது. மிக நெருங்கிய நண்பர்களுடன் இருக்கையில் தவிர மற்ற கூட்டத்தில் குடிக்காமல் இருப்பது(அநேகமாக டெட்டி உடன் மட்டும் தான் குடிக்க முடியும் போல.)

இந்த உத்தியைச் சில மாதங்கள் கடை பிடித்தேன். அது ஆச்சரியப்படும் விதமாக வேலை செய்தது. நண்பர்களுடனோ, சக அலுவலர்களுடனோ பெரிதாக உரசல் ஏற்படுவது நின்று போனது. மன அழுத்தம் குறைந்தது. மற்ற விஷயங்களுக்கு நேரம் நிறைய கிடைத்தது.

ஆனால் பின்னர் இதில் ஒரு பக்கவிளைவும் இருந்தது. நான் நானாக இல்லையோ என்று ஒரு சந்தேகம் மெல்லத் தோன்றி,  மனதைப் போட்டு அலைக்கழித்தது. வேலையில் என் வேகம் குறைந்தது. அடிப்படையில் என் ரிஃப்லெக்ஸ் மட்டுப்பட்டதைப் போன்று தோன்றியது.

இப்போது என்ன செய்வது? டாக்டரிடம் போக வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தேன்.

ஒரு பக்கம் நான் மேற்சொன்ன உத்தியைக் கடைப்பிடித்து மன அழுத்தம் இல்லாமல் இருப்பது. அல்லது அதைக் கைவிட்டு என் இயல்பில் இருப்பது. இரண்டிலும் உள்ள சாதக, பாதகங்களை அலசிப்பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இவ்வாறு எடை போட்டுப் பார்ப்பதே மிகவும் செயற்கையாக இருந்தது.

இப்போது என்ன செய்வது?

ஒரு நாணயத்தை எடுத்து மேலே சுண்டி விட்டேன்.

0 Replies to “தேடல்”

  1. சுவாரசியமாக ஆரம்பித்தது. இடையில் சற்று தொய்வாக தோன்றியது.
    மேன்மேலும் நல்ல படைப்புகளைத் தர கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்
    சிவா கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.