பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்

Courtesy : The Hindu
Courtesy : The Hindu

1940களிலும் 50களிலும் பிறந்தவர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட TMS, 70 மற்றும் 80களின் தலைமுறைகளின் ரசனைகளில் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டும் ஆழமாக ரசிக்கப்படாமலும் போனது “தலைமுறை” என்னும் காலக்கடத்தியின் பல அவலங்களில் ஒன்று என்றாலும் இழப்பு தலைமுறைகளுக்கே அன்றி அவருக்கல்ல.

அத்தகைய பிறழ்வு நிகழ்ந்த தலைமுறையைச் சேர்ந்த நானும், துவக்கத்தில் அத்தகைய “ஒதுக்கீடு” முறையில் அவரின் பாடல்களில் கவனம் செலுத்தாது போனது எங்கள் ரசனையின் இயல்பாகவே இருந்தது. அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. நவராத்திரி என்றால் கச்சேரிகள் களைகட்டும் மீனாட்சி அம்மன் கோயிலின் ஆடி வீதியில், பலநூறு ஆண்டுகளாய் பல்லக்கில் மன்னர்களும், பாதசாரியாய் பக்தர்களும் கடந்து போவதை கம்பீரமாக பார்த்தபடி நிற்கும் பிரமிப்பூட்டும் காலம் பூசப்பட்ட பெருஞ்சுவரில் சாய்ந்தபடி, பெருகிக் கொண்டிருக்கும் கூட்டத்தினூடே என் அப்பாவின் கைபிடித்தபடி சற்று தள்ளியிருந்த மேடையை பார்த்துக் கொண்டிருந்தேன் நான். விளக்கொளிகளின் வீச்சில் தகதகத்துக் கொண்டிருந்தது ஆடி வீதி.

தனது பிரத்யேகமான சின்னங்களை, அதற்கேற்ற வண்ணங்களின் வரிசையில் தனது நெற்றியில் நிறைத்து பாடிக் கொண்டிருந்தார் TMS. “இளைய நிலா பொழுகிறதே” பாடலோ “பனி விழும் மலர் வனம்” பாடலோ ஏன் இந்த மீனாட்சி கோயில் கச்சேரிகளில் பாடவே மாட்டேன் என்கிறார்கள் என்ற ஏமாற்றம் இருந்த விவரம் தெரியாத சிறுவனான எனக்கு, அவரின் பாடல்கள் போரடிப்பது போல இருந்தது. இன்னும் சற்று நேரம் தான்…இன்னும் சற்று நேரம் தான் என்று என் அப்பா சமாதானப்படுத்தியபடி இருந்தார். “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” பாடலையோ “உள்ளம் உருகுதையா” பாடலையோ எதிர்பார்த்து அப்பா காத்திருக்கிறார் என்று விளங்கும் வயதில் நான் இல்லை.

அடுத்த பாடல் துவங்கும் முன், தனது தடிமனான கறுப்பு நிற கண்ணாடி பிரேமைப் பிடித்தபடி பேசியது இன்றும் காட்சியாய் நினைவில் இருக்கிறது. “இப்போ நான் பாடப் போற பாட்டு, முருகன் அருள் இருந்தால் மட்டுமே பிழையில்லாம பாட முடியும்” என்று சொல்லி விட்டு ஆரம்பித்தார் “முத்தைத்திரு பத்தித் திருநகை…”. அருவிக்கு படிகள் அமைத்து அதன் மீது தண்ணீரை இறங்கி வரச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி தமிழ் பெருகி தடதடவென்று அருவியென வருவது போல ஒரு அற்புதத்தை அர்த்தம் புரியாத பொழுதிலும் உணர்ந்தேன் நான். ஆகாய அகலத்தின் ஒரு பகுதியை பெயர்த்து வைத்தது போன்று நீண்டு அகண்டிருந்த‌ ஆடி வீதியில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து வெளிப்பட்டு கோயில் முழுவதும் பிரவாகமாக பெருக்கெடுத்தோடியது அந்தப் பாட்டு.

அந்தப் பாடலின் நூல் பிடித்துக் கொண்டே வருடங்கள் ஓடி, அருணகிரிநாதர் அறிமுகம் கிட்டி, பிறகு மெதுமெதுவாக நம் பழமைமிகு நூல்களின் பக்கங்களை தொட்டுப் பார்க்கும் அளவுக்கேனும் இந்த மனதை தயார் செய்யத் தூண்டிய‌ அந்த இரவும் அந்தப் பாடலை பாடிய TMSசும்…

சில வருடங்களுக்குப் பின் ஒரு மாலையில், மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். இப்பொழுது போல அகன்ற நெடுஞ்சாலைகள் அப்போது இல்லை. இருமருங்கிலும் புளிய மரங்கள் நிறைந்த குறுகிய சாலையே அன்று பெருவாரியான நகரங்களை புள்ளிகளாக்கி கோலமிட்டிருந்தன. எனவே மதுரையிலிருந்து திருநெல்வேலி போவதற்கு அப்பொழுதெல்லாம் நான்கு மணி நேரத்திற்கு மேல் எளிதாக ஆகும். வானம் முழுவதும் மை பூசியது போல இருட்டிய பொழுது, கோவில்பட்டி அருகே சாலையோரம் வண்டி நின்றது. “காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் பத்து நிமிசம் வண்டி நிக்கும்” என்று சொல்லியபடி எழுந்த டிரைவர் பக்கத்து சிறுகதவை நெம்பித் திறந்தபடி கீழே குதித்தார். நானும் இறங்கி சற்று “உலாத்த” துவங்கினேன். சிறு உணவகமும் அதையொட்டி ஒரு “கேஸட் கடை” ஒன்றும் தவிர சுற்றிலும் கருவேல மரங்கள் நிறைந்த முட்புதர்களே சுற்றிலும் தெரிந்ததன.

பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தங்கள் அந்தப் புதர்களிலிருந்து வந்தபடி இருந்தன. அதன் பிண்ணணியில்தான் கேஸட் கடையிலிருந்து கிளம்பியது “சட்டி சுட்டடா”. அந்த சூழலின் ஒரு அர்த்தமற்ற அமைதியும், பூச்சிகளின் சத்தமும், கும்மிருட்டும், சத்தமின்றி ஆங்காங்கே நகர்வது போலத் தெரியும் வானமும் இந்தப் பாட்டை எனக்குள் போட்டு என்னமோ செய்வது போலத் தோன்றியது. அதிலும், இந்தப் பாட்டில் ஒவ்வொரு ஸ்டான்சா முடிவிலும் வரும் வரியில் “…தடா” என்று முடித்தபின் பாட்டு ஒரு நொடி மொத்தமாக அடங்கி பின் தொடரும். அந்த ஒரு நொடி அமைதியும் அந்த இரவின் கனத்தையும் தாங்க முடியாமல் பேருந்துக்குள் வந்து அமர்ந்து கொண்டேன் நான்.

இந்தப் பாட்டு என்னை வருடக்கணக்கில் பின் தொடர்ந்து வருகிறது. எதிர்பாராத இடங்களில் இந்தப் பாடலின் ஏதோ ஒரு வரி எங்கிருந்தோ ஒலிக்கும். அந்த நிமிடத்திற்கான நம் அனைத்து இயக்கங்களையும் ஒரு நொடி கிள்ளி எறிந்து விட்டுப் போகும். இன்று, அந்த “என்னமோ செய்ததின்” அர்த்தம் சற்று பிடிபடுவதால் இந்தப் பாடலில் திளைத்து எழுவது விருப்பமான நிகழ்வாக மாறி விட்டது. துயரத்தின் சாயலை பிடித்தபடி துவங்கி, வாழ்க்கை குறித்த அச்சத்தை நம் மீது எறிந்து, அந்தத் துயரத்தை பிடித்தபடியே அச்சத்தை விரட்டி, இங்கு நாம் இழப்பதற்கும் பெறுவதற்கும் எதுவுமேயில்லை என்ற தத்துவத்தின் விளிம்பிலேறி நின்று, ஒரு அசாத்தியமான தன்னம்பிக்கையையும் வாழ்க்கையின் விசாலத்தையும் நம்முள் விதைக்கும் அற்புதங்களின் கலவை இந்தப் பாட்டில் உண்டு. “எறும்புத் தோலை உரித்து” யானையை பார்க்கையில் வெளிப்படும் அறிதலின் வியப்பு, இதயத் தோலை உரிக்கையில் வரும் ஞானத்தில் தெளிந்து, “இறந்த பின்னே வரும் அமைதி” கிடைக்கையில் அடங்கி விடுகிறது! நாம் ஆட்டம் போட்டு அடங்குவதை இந்தப் பாடல் சொல்வது போல வேறெந்த பாடலும் நமக்கு ஆணியடித்து புரிய வைத்ததில்லை. வரிக்கு வரி அதன் பொருளுக்கேற்றவாறு மிகவும் நுட்பமான குரலொலி மாறுதல்களுக்கு உட்படுத்தி நம்மையும் அந்த உணர்வுகளிலேயே குளிக்க வைத்திருப்பார் TMS.

ஒரு முறை ஊட்டி செல்லும் பொழுது ஒரு கொண்டை ஊசி வளைவில் வண்டியை நிறுத்தி “view point” ஒன்றிலிருந்து பள்ளத்தாக்கின் அழகை பார்த்துக் கொண்டிருந்தோம்…அந்த பசுமை போர்த்திய பள்ளத்தாக்கில் மறைந்திருந்த மலைக்கிராமம் ஒன்றிலிருந்து “ஆரவாரப் பேய்கள் எல்லாம்” ஓடி மலையேறி காற்றிலே வந்து கொண்டிருந்தது…எங்கள் பேச்செல்லாம் சட்டென்று அடங்கி, பாட்டு முடியும் வரை ஒரு வித பரவசத்தில் அனைவரும் மெளனித்திருந்தோம். அந்த சூழலும் பாட்டும், கடவுள் எங்களுக்கு மிக அருகில் கடந்து போவது போன்ற உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது…

இவரின் “மாதவி பொன் மயிலாள்” கேட்டால் “ளகரம்” “ழகரம்” சரியாக உச்சரிப்பதில் ஏற்படும் உற்சாகத்தை தனக்கும் தர வேண்டி நம் நாக்கு கெஞ்சும். “மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி…” என உணர்வில் நீண்டு ஏறி “ஊஞ்சல் ஆடி” என்று இறங்குகையில் நம் மனதின் மயக்கங்கள் அனைத்தும் ஒரு ஊஞ்சலாட்டம் போட்டு விட்டு வரும். “உள்ளத்தின் கதவுகள் கண்களடா…” என்கையில் இரவின் நிலவொளியில் பசும்புல்வெளியில் நம்மை அமர்த்தி வைக்கும். அவரது குரலே அந்த இரவை நம் வீட்டுக்குள்ளேயே அனுப்பி வைக்கும். இப்படி, தனது குரலால் நமக்குள் பதித்துப் போன பாடல்கள் நூற்றுக்கணக்கில் உண்டு…

சில ஆண்டுகள் முன், ஒரு பயணத்தின் இடையே, மழைக்குத் தயார் செய்து கொண்டிருந்த வானம் இருட்டிக் கொண்டிருந்த மாலை வேளையில், திருச்செந்தூர் வள்ளி குகை அருகில் நின்று கொண்டிருந்தேன். அருகில் உள்ள கடையில் இருந்து “மண்ணானாலும் திருச்செந்தூரில்…” ஒலித்துக் கொண்டிருந்தது. வணிக யுக்தியாக தோன்றினாலும், ஒரு இடத்தில், அந்த இடத்தின் பெயரே ஒலிக்கும் பாட்டை கேட்கும் பொழுது அந்த வரிக்கு ஒரு விசேடத்தன்மை கூடி விடுகிறது. பாடல் தொடரத் தொடர, மனதின் இரைச்சல் குறையத்துவங்கி, கடல் அலைகளின் பெரும் ஸ்வரத்தின் மேலே பாடல் மட்டும் மிதக்க… அவர் “முருகா…” என்று முடிக்கையில் கரையோரம் தள்ளாடும் கட்டுமரம் போல ஆங்காங்கே ஈரமாகியிருந்தது மனது. நாம் கடவுளை நம்புகிறோமா இல்லையா, கோயிலுக்கு போகிறோமா இல்லையா என்பதையெல்லாம் கடந்து, இது போன்ற அவரின் பாடல்களில் ஒரு உணர்வு நமக்குள் தோன்றியே தீரும். அந்த உணர்வின் பெயர் “தெய்வீகம்”.

TMS பாடல்களில் மூழ்கிட நமக்கு சில அனுபவங்கள் தேவைப்படக் கூடும். உதாரணமாக, காலம் நம்மிடம் ஒரு முறையேனும் “விளையாட்டு” காட்டியிருக்க வேண்டும். காலம் நம்மை அந்தரத்தில் தொங்க விட்டு ஆட்டம் காட்டும் பொழுது அந்த விளையாட்டின் வீரியம் தாள இயலாமல் நாம் தவிக்கும் தவிப்பே அவரின் தத்துவப் பாடல்களின் தொகுப்பு. கண்ணதாசன் வார்த்தெடுத்த வாழ்க்கையின் வலிகளை, வரிவரியாய் கோர்த்தெடுத்த அந்த வலிகளின் ஒலிகளை, அதன் திடம் சற்றும் நீர்த்துப் போகாமல் ஞானத்திரவமாய் நமக்குள் ஊற்ற TMS அன்றி இதுவரை வந்து போன எந்த பாடகரின் குரலாலும் முடியாது. மனிதம் உலகில் உள்ள வரை, அந்த மனிதம் வாழ்க்கையின் வலிகளில் உழலும் வரை, தமிழ் புழங்கும் ஏதோ ஒரு வீட்டில், தூக்கம் தொலைத்த ஏதோ ஒருவரின் இரவில் இவரின் குரல் “பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்” இருக்க வேண்டி பாடிக் கொண்டே இருக்கும்.

0 Replies to “பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்”

  1. நாற்பதுகளின் மைந்தனான எனக்கு, எழுபது எண்பதுகள் TMSஐ முதலில் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே வியப்பான செய்தி. காலம் அறிமுகப்படுத்தும் பன்முக அனுபவத் திவலைகள் தத்துவச் சிந்தனைகளுக்கு நீர் வார்க்கும் போது கண்ணதாசனையும் ஜெயகாந்தனையும் தமிழன் தவிர்க்க முடிவதில்லை. கண்ணதாசனின் சொற்களுக்கு உரிய தகுந்த சிம்மாசனத்தை TMS தன் வளப்பமான குரல் மூலம் சமைத்துக் கொடுத்தார். எம். எஸ். விஸ்வனாதன் அதற்கான இசை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததனால் இவர்களின் மூவரின் இணை முயற்சிகள் நாற்பது ஐம்பதுகளீன் மைந்தர்களின் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கை விழுமியங்களையும் வடிவமைத்துக்கொடுத்தன என்பது மிகைச் சொல்லல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.