புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை

வேளூர் வெ. கந்தசாமிப் பிள்ளையாக எழுதப்பட்ட ‘புதுமைப்பித்தன் கவிதைகள்’ மிக பிரபலம் என்று நினைக்கிறேன். ஆனால், இப்போதுதான் வாசிக்கிறேன் – ஒரு கவிதை நீங்கலாக.

“…கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

என்ற சத்திமுத்து புலவர் பாடலையொட்டி, காச நோய் பீடித்த கடைசி காலத்தில் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதியதாக இந்தப் பாடல் மட்டும் முன்னரே படித்த நினைவு –

“கையது கொண்டு மெய்யது பொத்தி
போர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென
சுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை
லொக்கு லொக்கென இருமிக் கிடக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!”

மற்றபடி எதுவுமில்லை.

புதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது. செய்தால், தவறாகவும் இருக்காது.

pudumaippiththan

புதுமைப்பித்தன் கவிதைகளில் ‘மாகாவியம்’ என்ற அந்த ஒரு கவிதை மட்டுமாவது இன்றைக்கும் நிற்கக்கூடிய ஒரு செவ்வியல் தன்மை கொண்டதாக எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதை ஒரு விரைவு வாசிப்பிலேயே சொல்லிவிட முடிகிறது. இது போன்ற ஒரு கவிதையை டி. எஸ். எலியட்டோ ராபர்ட் ஃப்ராஸ்ட்டோ (ஃப்ராஸ்ட் இப்படி எழுதக்கூடியவர் அல்ல என்றாலும்) ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நம் கல்லூரி உப பாடக் கவிதைத் தொகுப்புகளில் சந்தேகமில்லாமல் அதற்கும் ஒரு இடமிருக்கும். ஆனால் இந்தக் ‘மாகாவியத்‘தை மறந்து விட்டோம், இதனால் நாம் தவற விட்ட பிற்காலத்திய கவிதைகள் எத்தனை இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் “ஐயோ!” என்றிருக்கிறது. இத்தனைக்கும், “மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்” என்று க.நா.சு சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

ஆலால முண்டவன் அற்றைநாள் மதுரையில்
அணி செய்த தமிழ ணங்கை
வாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை
வாரிச் சொரிந்த கவியே!

என்ற ‘மகா ரசிகனி’ன் கண்டனத்துக்குக் காரணமான அந்த ‘மகா காவியத்’தையும், அதற்கு ‘மகா கவிஞன்’ கொடுத்த பதிலையும் விரிவாக எழுத வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,

“தாளால் உலகளந்தான்
தனைமறந்து தூங்கிவிட்டான்.
மூளாத சீற்ற
முக்கண்ணனும் இன்று
ஆளாக்கு அரிசிக்காய்
அல்லாடித் திரிகின்றான்…”

என்பதில் இருக்கிறது பதில்.

முன்னுரையும் குறிப்புகளும் நீங்கலான இந்த அறுபது பக்கத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கான நியாயத்தை ரகுநாதன் மிக விரிவாகவே சொல்லியிருக்கிறார். இது அத்தனையும் இன்று காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாம், புதுமைப்பித்தனின் “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையின் ஒரு மேற்கோள் நீங்கலாக. உயிர்த்துடிப்பு மிக்க அந்தப் பத்தியில் கவிதையை இவ்வாறு அணுகுகிறார் புதுமைப்பித்தன்:

“யாப்பு விலங்கல்ல. வேகத்தின் ஸ்தாயிகளை வடித்துக் காட்டும் ரூபங்கள். குறிப்பிட்ட யாப்பமைதி, பழக்கத்தினாலும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு விடும்போது, ரூபத்தின்மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என்றும் கொள்ள வேண்டும். வெண்பாவும் விருத்தமும் கண்ணிகளும் ஒரு விஸ்தாரமான அடித்தளமே ஒழிய, வெண்பாவிலேயே ஆயிரமாயிரம் ரூப வேறுபாடுகள் பார்க்கலாம். இன்று ரூபமற்ற கவிதை என்று சிலர் எழுதி வருவது, இன்று எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் என்று கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்களென்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை. இன்று வசன கவிதையென்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல”.

pudumaipithan

ரகுநாதன் மிகத் துல்லியமாக “எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை”த்தான் புதுமைப்பித்தன் தமது கவிதையின் மூலம் நமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறார்,” என்று எடுத்துக் கொடுப்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதைகளை வாசிக்கும்பொழுது டெம்ப்ளேட்டுகளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் சமகாலத்துக்குரிய கவிஞர் பேயோனுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இதிலும் இன்னும் பல விஷயங்களிலும் ஒற்றுமையுண்டு என்ற ஆச்சரியம் தெரிகிறது.

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான்வேண்டேன்
பொற்றோளாய்! உன்னுடைய பெருமைமிகு சர்விஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ!

என்று ‘திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாள்வார் வைபவம்‘ எழுதிய புதுமைப்பித்தன், கொஞ்சமும் தளை தட்டாமல்

நிழலூது நெடுமரக்
கிளைகளிடை சாயும்
வெயிற்குழாய்கள்


ஆகப்பெரிதின்
அடியில் நின்று
வானோக்குகிறேன்
ஸ்காட்டியே, என்னை
பீம் செய்து ஏற்றிடு!

என்ற பேயோனின் ‘இயற்கை’ கவிதையையும் எழுதியிருக்க முடியும் . இரண்டு கவிதைகளும் ரூபங்களை எவ்வளாவு எளிதாக கலந்தடித்து விளையாடுகின்றன என்பதில் இருக்கிறது வியப்பு.

மேற்குறிப்பிட்ட “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையில் புதுமைப்பித்தன் இதையும் எழுதுகிறார் – வசனம் குறித்து,

“யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைத் தொகுப்பதல்ல. வசனம் சமயத்தில் பேச்சு முறைக்குச் சற்று முரணான வகையில் கர்த்தாவைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, செயலை விளக்கும் நிலை அவசியமாகும் பொழுது பின்னிக் கிடந்து, வார்த்தைகளை அதன் பொருள் இன்னது என்று விலங்கிட்டு நிறுத்தும்,”

என்று இரு கால்களும் பூமியின் காங்கிரீட் தளத்தில் வேர்விட்டு நின்றதுபோல் துவங்கி, தான் முன்சொன்னதை விளக்கும் முகமாக,

“அதாவது சட்ட ரீதியான தத்துவ ரீதியான நியாயங்களைப் பற்றி விவாதங்கள் நடத்தும்பொழுது வார்த்தைகளின் பொருட்திட்பம் இம்மியளவேனும் விலகாது இருப்பதற்காக, இன்ன வார்த்தைக்கு இன்ன பொருள்தான் என்று வரையறுத்துக் கொண்டு, அவற்றின் மூலமாக செயல் நுட்பங்களை நிர்த்தாரணம் செய்து, மனித வம்சம் நிலையாக வாழ்வதற்கு பூப்பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் செயல் வகுப்பு வசனத்தினால்தான் இயலும்,”

என்று வெகு விரைவிலேயே விலா நோகச் சிறகடித்து மேகங்களைத் தொட்டு விடுகிறார் புதுமைப்பித்தன். இந்தப் பகடிகளும் சுய எள்ளல்களும் நமக்கு இப்போதெல்லாம் ரொம்பவே பழகிப் போயாச்சு என்றாலும், வரையமைக்கப்பட்ட நம் கற்பனையின் ரூப ஒழுங்குக்கு எதிரான இந்தத் துணிகரக் கொள்ளை மூச்சிரைக்க வைக்கிறது.

கற்பனையை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை புதுமைப்பித்தனுக்கு மிகுந்த உறுத்தலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ஓடாதீர்’ என்ற கவிதை இப்படி போகிறது என்றால் –

சொல்லுக்குச் சோர்வேது
சோகக்கதை என்றால்
சோடி ரெண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கைநிறையத் தர வேணும்!
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றதுபோல்;
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை.
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது!
காசை வையும் கீழே, – பின்
கனவு தனை வாங்கும்,-
இந்தா!… இது
காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது!

பாரதிக்குப் பின்’ என்ற கவிதையில்,

வேளைக்கு வேளை
விருதாக் கவிசொல்லி
நாளும் பொழுதும்
கழிஞ்சாச்சே – ஆழாக்குப்
பாலுக்கோ விதியில்லை;
பச்சரிசிக்கோ தாளம்;
மேலுக்கேன் ஆசாரப்
பேச்சு?

என்று போகிறது.

தொழில்‘ என்ற கவிதையில் முருகனுடன் உரையாடல்: கடவுளிடம் என்னென்னவோ பேசி, ‘கவிதை கொடு,’ என்று கெஞ்சுகிறார். முடிவில் முருகன் சொல்லும் பதில் இது –

வேலன் உரைக்கின்றான் : “வேளூரா! இன்னமு நீ
காலம் கலி என்றறியாயோ? – ஆலம்
உண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்
அண்டிவந்து கேட்பவரார் சொல்?


பண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்
கண்ணைச் சொருகி கவி என்பார் – அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?”

புதுமைப்பித்தன் கவிதைகளைச் சுரண்டினால் வெகு விரைவில் எள்ளல் வெளிப்பட்டுவிடும் என்பதை ஒரு பொதுக் குறிப்பாகச் சொல்லலாம். மேலும், மீமெய்யியல் சுரத்தால் பிணிக்கப்பட்ட தமிழைக் கையாள்வதிலுள்ள கோட்டிமை விலக்கப்பட முடியாதது என்று சொல்லி, அதை அடிக்கோடிடவும் செய்யலாம். தவறில்லை.

கள்ளம் விளைந்த களர்
கவியாமோ ? காவியங்கள்,
நொள்ளைக் கதை சொல்லி
நோஞ்ச நடை பயின்று
உன்னை வணங்கிடுமோ?

– ‘நிசந்தானோ சொப்பனமோ’ கவிதையில் புதுமைப்பித்தன் சரஸ்வதியிடம்,, “ஒரு வார்த்தை / நிசமாகக் கேட்கிறேன்/ ஒரு வார்த்தை//’ என்று தேடுகிறார் – அவரது தேவை நிசமான ஒரு வார்த்தை மட்டுமல்ல, நிசமாகக்கூடிய ஒரு வார்த்தையும்தான்.  “நீயுமிருத்தல், நினைவணங்கே/ நிசந்தானோ?//” என்ற கேள்வி,

உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகைதுள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ?

என்று மீமெய்யியல் விசாரத்துக்குக் கொண்டு  சென்று விடுகிறது. நிசமான வார்த்தை இல்லாமல் நம்பிக்கைக்கு இடமில்லை. நம்பிக்கை இல்லாமல் சிரிப்பில்லை, மொழிபாற்பட்டவை அனைத்தும் சொப்பனமாகி விடுகின்றன.  கவிஞனுக்குப் பொய் சொல்லும் தொழில்தான் மிச்சம் என்றாகிறது.

இவ்வாறாக ‘எமக்குத் தொழில் பொய்மை’ என்று  தன்னை என்னதான் நொந்து கொண்டாலும், உருப்படியாக ஏதாவது செய்யச் சொன்னால் வலிக்கிறது, சமகால இலக்கியவாதிகளின் அறச்சீற்றம் புதுமைப்பித்தனிடமும் காணக் கிடைக்கிறது. யாரோ புதுமைப்பித்தனுக்கு அறிவுரை சொல்லிவிட்டார்கள் போல, ‘உருக்கமுள்ள வித்தகரே’ என்ற கவிதை இப்படி துவங்குகிறது –

ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழு மென்று –
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்லவந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கடப்பாடு!

இப்படி சுதி சேர்த்துக் கொண்டு, பிழைப்பை கவனிக்கக் சொன்னவரை ஒரு பிடி பிடிக்கிறார் பாருங்கள்…

யோக்கியமாய்
வாழ இங்கே
எந்த தொழில்
உண்டு?

என்று கேட்டுவிட்டு,

வேற்றரசர் நிழலிலே
வேலைக்கும் வழியுண்டு!
கூடை முறம் பின்னிடலாம்;
தேசத்து லெச்சுமியை
மானத்தை,
கவுரவத்தை,
கூட்டிக் கொடுத்திடலாம்;
நச்சி வந்த பேருக்கு
நாமங்கள் சாத்திடலாம்!
வேற்றரசர் ஆட்சியிலே
வேலைக்கும் வழியுண்டு
கூலிக்கும் அட்டியில்லை.


இந்தத் தொழில் செய்ய
எத்தனையோ பேருண்டு;
இந்தத் தொழில் செய்ய
என்னை அழைக்காதீர்!

அறச்சீற்றத்துக்கு அடுத்து தனி மனித தாக்குதல்! அதை இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை.

கடைசியில் கவிதை இப்படி முடிகிறது :-

ஒற்றைச் சிதையினிலே
உம்மெல் லோரையும்
வைத்து எரித் திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது!

கட்டுரையின் முடிவுக்கு வந்துவிட்டோம் – முத்தாய்ப்பாக ஒரு வருத்தம்.

பட்டமரம் தழைக்க / பைரவியார் சன்னிதியில் / வெட்டெருமை துள்ள…” என்பதாகட்டும், “சித்தம் பரத்துச் / சிவனார் நடங்கூற, / வத்திவச்சுப் பேச…” என்பதாகட்டும்,

வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்
மீளாத நரகமெனச் சிறையதனில் உற்றாரை
ஆளாக்கி வருத்திடினும் அதனையும்யான் பரவுவனே!

என்ற பைசாச சிரிப்பாகட்டும், மரபுக்கு எதிராக புதுக்கவிதை தன் முதுகைத் திருப்பிக் கொண்டது தமிழுக்கு ஒரு பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை என்ற வருத்தம் புதுமைப்பித்தனின் கவிதைகளை வாசித்தபின் வருகிறது.

சினிமாக்காரர்களுடன் சண்டை என்றால் ஒரு கவிதை (ஜெமினியின் அவ்வையார் படத்துக்கு புதுமைப்பித்தன் கதை வசனம் எழுதிய நாட்களில் பாடியது) –

அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா? – சவ்வாது
பொட்டுவச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடைகட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு!

கதை கேட்டவன் ஊரில் இல்லை என்றால் அவன் வீட்டில் விட்டு வர ஒரு சீட்டுக் கவி –

வருகின்றேன் சென்னைக்கு;
வந்தவுடனே கதையைத்
தருகின்றேன்; தவணை சொலித்
தப்பாதே – உருவான
பாதிக்கதை இங்கே
பஞ்சணையின் கீழிருக்கு;
மீதிக்கதை அங்கே
வந்து!

திருநெல்வேலி அல்வா கேட்டு ஒரு கவிதை –

அல்வா எனச்சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! – அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.

இலக்கியவாதிகள் என்ற பெருங்கூட்டத்தை விடுங்கள், ஆத்திர அவசரத்துக்கு இது போல் ஒரு கவிதை எழுத இன்றுள்ள கவிஞர்களில் எத்தனை பேரால் இயலும்?

தமிழுக்கு நிசமான ஒரு வார்த்தை கிடைக்கிறதோ இல்லையோ, இந்த மாதிரியான எளிய, விரைவான, வேகமான சொல்லடுக்குகளைப் பார்க்கவாவது பழைய ரூபங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வராதா என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.