ஹிக்விட்டா

ல முக்கியமான மலையாள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர் எம்.எஸ் என்ற திரு.எம்.சிவசுப்ரமணியம். இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான இவர், காலச்சுவடு சிற்றிதழின் தயாரிப்புகளில் பல விதத்திலும் பங்காற்றுபவர். எம்.எஸ். மொழிபெயர்த்த எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் (நாவல்), ஸ்பானிஷ் எழுத்தாளர் ஃபெர்னான்டோ ஸோரென்டினோவின் ஆட்டுக் குட்டிகள் அளிக்கும் தண்டனை (சிறுகதைகள்), பாஸ்கரனின் ஜானு (வாழ்க்கை வரலாறு), பேபி ஹால்தாரின் விடியலை நோக்கி (சுய வரலாறு), மரியா ஸ்ரெஸ்ஸின் ஆதியில் பெண் இருந்தாள் (ஆதிவாசிக் கதைகள்) ஆகியவை மிக முக்கியமான புத்தகங்கள். சொல்வனத்துக்காக இவர் மொழிபெயர்த்திருக்கும் மலையாள எழுத்தாளர் திரு.என்.எஸ்.மாதவன் அவர்களின் ஹிக்விட்டா என்ற சிறுகதையை இங்கே படிக்கலாம்.

ms

[எம்.எஸ்]

எம்.எஸ் குறித்து மறைந்த கவிஞர் திரு.ராஜமார்த்தாண்டன் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

rh

‘பெனல்டி கிக்குக்காக காத்து நிற்கும் கோல்கீப்பரின் தனிமை’ என்ற ஜெர்மன் நாவலைப் பற்றி இத்தாலியிலிருந்து வந்த இலக்கிய நண்பரான ஃபாதர் கப்ரயற்றி ஒன்று அல்லது இரண்டு முறை ஃபாதர் கிவர்கீஸோடு பேசியிருப்பார். நாவலின் பெயரைக் கேட்டவுடனேயே கீவர்கீஸுக்கு அதைப் படித்துவிட்டது போலத் தோன்றியது – ஒரு தடவையல்ல, பல தடவை. மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, இரண்டு கைகளையும் விரித்து, கோல்கீப்பர் பெனல்ட் கிக்கிற்காக காத்திருக்கிறான். காலரியில் ஐம்பதினாயிரம் எச்சில் நிரம்பிய தொண்டைகள் அப்போது நிசப்தமாயிருக்கும். ஒரு பார்வையாளன் மட்டும் இடையிடையே மூன்று தரம் கூவுவான்.

இது போன்ற பல கதைகள் மூலம் கோல்கீப்பரின் தொடர்ந்த பரம்பரைகளை கீவர்கீஸ் மனதில் உருவாக்கிக்கொண்டிருந்தார். அந்த ஜெர்மன் நாவலைப் படிக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றவே இல்லை. அதோடு கோல்கீப்பரின் ஜாதகக் கதைகள் முடிந்துவிடும். பிறகு நாவலில் எழுதியவை மட்டுமேயாக அவனுடைய கதை சுருங்கிவிடும்.

முதல் சில நாட்கள் கோல்கீப்பர் மாற்றமில்லாமல் ஏசு கிருஸ்துவாயிருந்தான். ஒண்ணாம் நம்பர் ஜெர்ஸி அணிந்த கர்த்தா பல பந்துகளை அடித்து மாற்றினான். சில தினங்களுக்குப் பிறகு திடீரென்று கோல்கீபர் கோலியாத்தாக மாறினான். எதையாவது முணுமுணுக்கக்கூட அருகே ஆளின்றி, ஆகாயத்தை முட்டும் தனிமையில், கவணில் இருந்து பறந்து வரும் பெனல்டி கிக்கிற்காக காத்திருந்தான் கோல்கீப்பர். அவனுடைய பல்வேறு சாத்யதைகள் தினதோறும் வளர்ந்துகொண்டே இருந்தன.

ஃபாதர் கீவர்கீஸின் அதிகார எல்லை தெற்கு தில்லி. சில மலையாளிகள், பிஹாரில் இருந்து வந்து வீட்டு வேலைக்காரிகளான பல ஆதிவாசி சிறுமிகள். தெய்வ விசுவாசிகளாக இத்தனை பேர்கள்தான் வாரத்தில் ஒருநாள் அவர் பிஷப்பைப் பார்க்கச் செல்வார். எப்போதாவது இலக்கிய சர்ச்சைக்காக ஃபாதர் கப்ரியற்றியும் வந்து கலந்து கொள்வார். அண்மையில் சில வாரங்களாக, திருப்பலி முடிந்து வெளியே வரும்போது ஆதிவாசிப் பெண் லூஸி மரண்டி ஃபாதர் கீவர்கீஸுக்காகக் காத்து நிற்கிறாள்.

‘ஃபாதர், அவன் திரும்பவும் வந்தான்.’ சென்ற தடவை பார்த்தபோது லூஸி கூறினாள்.

‘யார் லூஸி?’

போன ஞாயிற்றுக்கிழமை நான் சொன்னேனே, அவன்தான்.’

‘ம். அவனுடைய பெயர் என்னவென்று சொன்னாய்?’

‘ஜப்பார்.’

‘அதுதான். ஜப்பார். எனக்கு ஞாபகம் இருக்கு. அவன் எதற்காக வந்தான்?’

‘போன வாரம் சொன்னேனே. அதற்குத்தான்.’

கீவர்கீஸ் லேசாக ‘ம்’ என்றார். ‘திரும்பவும் என்னை அவன்கூட வரச் சொல்கிறான்.’

நினைவுகள் சட்டென்று ஃபாதரின் மனதில் எரிநட்சத்திரங்களாகப் பாய்ந்து வந்தன. ஆதிவாசிகளிடமிருந்து கோழியும், இலுப்பையும், முரட்டுத் துணியும் வாங்கி விற்கும் ஓர் இடைத் தரகனாயிருந்தான் ஜப்பார். பின்னர், குறிப்பாக வறட்சி மாதங்களில், ஆதிவாசிச் சிறுமிகளை வேலைவாங்கித் தருவதாகச் சொல்லி வெளியே கொண்டு செல்ல ஆரம்பித்தான்.

அப்படித்தான் ராஞ்சியில் இருந்து ரயிலேறி, கடுகு எண்ணை மணக்கும் ஸ்டேஷன்களைக் கடந்து, லூஸி தில்லி அடைந்தது.

வாக்கு மாறாமல் ஜப்பார் லூஸியை ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தினான். மாதாமாதம் அவளைப் பார்க்கச் செல்வான். ஆரம்பத்தில் அவன் பைசா கேட்பானோ என்று லூஸிக்கு பயம். ஆனால் ஜப்பார் ஒவ்வொரு தடவையும் அவளுக்கு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொண்டு வருவான். நெற்றியில் வைக்கிற பொட்டு, சந்தனம் மணக்கும் பௌடர், லூஸியின் முதல் பிரேசியர் – அதுவும் கருப்பு நிறத்தில்!
ஒருநாள் ஜப்பார் லூஸியிடம், ‘வேலையை விட்டு விட்டு என்னுடன் வா’ என்றான்.

சற்றும் சந்தேகமின்றி லூஸி அவனுடன் சென்றாள். அன்று மாலை ஜப்பார் அவளுக்கு மஞ்சளில் சிவப்புப் புள்ளிகள் வைத்த ரெடிமேட் ஸல்வாரும் கமீஸும் வாங்கி வந்தான்.சிவப்பு நைலக்ஸ் துப்பட்டாவினால் அவள் தலையை மூடினான். தடித்த உதடுகளில் பளபளக்கும் கறுப்பு லிப்ஸ்டிக் பூசி, சற்று வற்புறுத்தி, தன்னுடன் வெளியே அழைத்துச் சென்றான்.

அழகி லூஸியும் ஜப்பாரும் சென்றடைந்தது ஒரு ஹோட்டல் அறையின் முன்னால். அறைக்கு உள்ளே செல்வதற்குமுன் ஜப்பார் சொன்னான்:

‘நான் வரவில்லை. உள்ளே சேட் நல்ல மனுஷன். அவன் படும் அவஸ்தையைப் பார்த்தால் இதுதான் முதல் தடவை என்று தோன்றுகிறது. உன் அதிர்ஷ்டம். அறைக்குள் போனதும் எழுநூற்றி அம்பது ரூபாய் தருவான். அதை என்னிடம் கொண்டு தந்துவிடு. பிறகு காரியம் முடிந்தபின் உன் சாமர்த்தியத்துக்குத் தக்கபடி இனாம் கிடைக்கும். அது உனக்கேதான்.’

லூஸி திரும்பி ஒரே ஓட்டமாக ஹோட்டலின் லாபி வழியே வெளியே ஓடினாள். அவள் பின்னே ஜப்பார். ஓட்ட முடிவில் லூஸி ஜப்பாரின் வீட்டில் தாழிட்ட அறைக்குள் இருந்தாள்.

‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’ – ஜப்பார் லூஸியின் தலைமயிர் வகுத்த இடத்தில் எரியும் சிகரெட் கொண்டு குங்குமப் பொட்டு வைத்தான். பின்னர் அவளுக்குத் திருமண வயது ஆகவில்லையென்றும், அவள் சின்னஞ்சிறுமியென்றும் சொல்லி அதே சிகரெட் கொண்டு அவளுடைய உள்ளங்கால் வெளுப்பில் கிச்சுகிச்சு மூட்டினான்.

அப்போதெல்லாம் ஏதோ ஹிந்தி சினிமாவில் வரும் வில்லனைப்போல் ஜப்பார் பேசினான் என்றாள் லூஸி.

அங்கிருந்து லூஸி எப்படித் தப்பினாள் என்று ஃபாதருக்கு நினைவில்லை. காரணம் கதை அந்த இடத்தில் வரும்போதே மனதின் காலரிகள் நிரம்பி முடிந்திருந்தன. கவனக்குறைவான கோல்கீப்பர் பெனல்டி கிக் எல்லாம் பிடித்துவிட்டான் என்றாலும் ஒன்றன்பின் ஒன்றாக பந்துகள் அனைத்தும் அவனுடைய கையிலிருந்து நழுவி விழுந்தன. விதைகளை மண்ணில் இறைத்துப் பாழாக்கிய யூதாவின் மகன் ஓனானாயிருந்தான் அன்றைய கோல்கீப்பர்.

லூஸிக்கு தெற்கு தில்லியில் ஒரு வீட்டில் மீண்டும் வேலை கிடைத்தது.- ஜப்பாருக்குத் தெரியாமல். ஆனால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க பத்து நாட்கள்கூட தேவைப்படவில்லை அவனுக்கு.
‘அப்போ ஜப்பாரிடம் நீ என்ன சொன்னாய்?’

‘வரமுடியாது என்று.’

‘ரொம்ப சரி.’

‘ஆனால் ஜப்பார்…’

‘நீ போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடு’ – ஃபாதர் யோசனை கூறினார்.

‘ஜப்பாரை விட போலீஸிடன் எனக்கு அதிக பயம்.’

‘அப்படிச் சொன்னால் வேற வழி?’

‘ஃபாதர் என்கூட…’

‘நீ பயப்படாதே. நான் போகிறேன்.’

ஃபாதர் அறைக்குள் வந்தார். மைதானம் காலியாக இருந்தது. பாப்கார்ன் கவர்களும் ஐஸ்க்ரீம் கப்களும் நினைவுக் குறிப்புகள்போல் சிதறிக் கிடந்தன. கோல் கீப்பர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம்.

இரவு உணவு முடிந்து படுக்கச் சென்றபோது ஃபாதருக்கு தூக்கம் வரவில்லை. இத்தாலியில் நடக்கிற உலகக் கோப்பைக் கால்பந்து குறித்து சட்டென்று நினைவு வந்தது. சிறிய கறுப்பு-வெள்ளை டி.வி.யைத் திறந்து அதன் முன்னே அமர்ந்தார்.

பி.டி. மாஸ்டரின் மகன் என்பதால்தான் கீவர்கீஸ் புட்பால் டீமில் சேர்த்துக்

N S Madhavan
N S Madhavan

கொள்ளப்பட்டான் என்று தலைமுறைகளாக மூத்திர ஈரத்தில் பூஞ்சைகாளான் கட்டிக் கிடக்கும் ஸ்கூலின் வடக்குச் சுவரில் யாரோ கரியினால் எழுதியிருந்தார்கள் என்றாலும், ஒல்லூர் உயர்நிலைப் பள்ளி கோல் போஸ்டில் மழை வில்போல் வளைந்து வந்து வீழ்ந்த கார்னர் கிக்கின் மூலம் கீவர்கீஸை ஸ்கூலில் எல்லோரும் அறிந்துகொண்டனர். ஆங்காங்கு புல் முளைத்திருக்கும் செங்கல் பாவிய தரையில் மூங்கில் கம்பாலமைத்த கோல் போஸ்ட்டுகள் நாட்டப்பட்ட மைதானத்தில் வெறும் காலோடுதான் அவர்கள் ஃபுட்பால் விளையாடினார்கள்.

மாவட்ட சாம்பியன்ஷிப் முதல் விளையாட்டில் ஒல்லூர் உயர் நிலைப்பள்ளியை தோற்கடித்தபின் அவர்கள் குன்னங்குளத்துக்குச் சென்றனர். பஸ்ஸில் பையன்கள் அமைதியாயிருந்தனர். மாநில டீமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’யமன்’ ரப்பாயிதான் குன்னங்குளம் ஸ்கூல் காப்டன். அப்பா மட்டும் பேசிக்கொண்டிருந்தார். ‘பந்து காலில் பட்டதும் உடன் கண்கள் சுழல வேண்டும். நம்முடைய டீமில் யாராவது மார்க் செய்யாமல் நிற்கிறர்களா என்று பார்க்க…’

அப்பா ஸ்கூல் பண்டில் இருந்து வாங்கித்தந்த நேந்திரம் பழமும் பருப்பு வடையும் தின்று, குன்னங்குளத்தாரின் கூவலும் கேட்டு, ஆட்டம் ஜெயித்து, ஆளற்ற இரவில் பஸ்ஸில் திரும்பி வரும்போது தாளமிட்டுப் பாடினார்கள்.

‘ஐயோ போச்சே குன்னங்குளம் போசே
ஐயையோ போச்சே ரப்பாயி போச்சே’

‘நீயும் பாடு’ – அமைதியாயிருந்த கீவர்கீஸிடம் கண்களை உயர்த்தி அப்பா பரிவுடன் சொன்னார்.

‘பயப்படாதே. நான் இப்போ உன் அப்பா இல்லை. பி.டி.மாஸ்டர்.’

அடுத்த ஆட்டம் சொந்த ஸ்கூல் மைதானத்தில் நடந்தது. காப்டன் கோபிநாத் உதைத்துவிட்ட பந்தை நெஞ்சில் வாங்கி, பின்புறமாகக் கத்திரிவெட்டாக கோல் அடித்ததுடன் கீவர்கீஸைத் தேடி மலபாரில் இருந்து ஆட்கள் வரத் தொடங்கினார்கள். ஒரு ஆட்டத்துக்கு பத்து பதினைந்து ரூபாய் பேசப்பட்டது. அவனுக்கு ஸெவன்ஸ் டூர்ணமெண்டில் விளையாட அழைப்பு வந்தது.

அறுவடை முடிந்த வயல்களில் பந்தயம் கட்டுபவர்களின் ஆர்ப்பரிப்பில் கீவர்கீஸ் ஸெவன்ஸ் விளையாடியது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு தடவை அது பற்றிப் பேசினார்.

‘மகனே, ஃபுட்பால் எனது தெய்வ விசுவாசம். ஸெவன்ஸோ கிருஸ்துவுக்கு எதிரானது.’

ஆனால் கீவர்கீஸுக்கு ஸெவன்ஸ் விளையாடாமல் இருக்க முடியவில்லை. அப்பா அவனிடம் ஃபுட்பால் குறித்துப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

அப்பா இறந்த வருடம்தான் கீவர்கீஸ் பி.ஏ.யில் தோற்றது. தந்தையிடம் காட்டிய தவறுகளுக்கு பிராயச்சித்தமாக விளையாடுவதை நிறுத்தியதும், பிறகு சில நாட்கள் சென்றபின் கடவுளின் ஊழியத்திற்கான அழைப்புக் கிடைத்ததும் அந்த வருடம்தான்.

டி.வி.யில் உலகக் கோப்பை விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதும், பெனல்டி கிக்குக்காக காத்து நிற்கும் பலவித கோல்கீப்பர்கள் ஃபாதரின் மனதைவிட்டு அகலவில்லை. ஃபாதர் விளையாட்டைப் பார்க்கவில்லை. கோல்கீப்பர்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார்.

இன்னொரு நாள் திருப்பலி முடிந்து வெளியே வரும்போது லூஸி மீண்டும் ஃபாதரின் அருகே வந்தாள்.

‘ஃபாதர்!’

‘ம்?’

‘ஜப்பார்.’’

‘ஜப்பார்?’

‘ஜப்பார் என்னை அவன் கூட வரச் சொல்கிறன்.’

‘நீ போக வேண்டாம்.’

‘நான் இருக்கும் வீட்டில் ஆட்கள் எப்போ வெளியே போவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இல்லாவிட்டால் எப்படி சரியாய் அந்த சமயம் பார்த்து அவன் என்னை போனில் கூப்பிடுகிறான்? எனக்கு பயமாயிருக்கு.’

‘எல்லாம் சரியாகும், லூஸி.’ ஃபாதர் திரும்பி நடந்தார்.

பெனல்டி கிக் மூலம்தான் கோல்கீப்பர்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளமுடியும் என்று கீவர்கீஸ் அறைக்குள் செல்லும்போது தனக்குள் சொல்லிக் கொண்டார். இன்னொரு விஷயமும் அவருக்குத் தெரிந்திருந்தது. பெனல்டி கிக்குக்காக காத்திருக்கும் கோல்கீப்பர் தனியன் அல்ல. மாறாக, ஆட்கள் கூட்டம்கூடி அவனது தனிமையைக் கெடுப்பதுதான் ஒரு கோல்கீப்பரை அதிகம் கஷ்டப்படுத்துகிறது.

ஃபாதர் கீவர்கீஸ் அதன் பின் லூஸியைப் பார்த்தது ஸ்கூட்டரில் போகும்போது. ஐ.என்.ஏ. மார்க்கெட்டின் சமீபம் ஆட்டோ ரிக்ஷாவில் போக்கொண்டிருந்த லூஸி அவரைப் பார்த்ததும் டிரைவரின் முதுகைத் தொட்டு வண்டியை நிறுத்தச் சொன்னாள். அதற்குள் ஃபாதர் ஸ்கூட்டரின் கியரை மாற்றி வேகமாகச் சென்றுவிட்டார்.

கோல்கீப்பர்களைப் பற்றிய கீவர்கீஸின் பாடத்தில் ஒரு சிறு அடிக்குறிப்பாக டி.வி.யில் கொலம்பியாவின் கோல்கீப்பரான ஹிக்விட்டா தோன்றினான். தாண்டவத்திற்குமுன் கவனத்தோடு சடையை அவிழ்த்துவிட்ட சிவனைப்போல நீண்ட சுருள் முடியும் கறுத்த கருங்கல் முகமும் மெலிந்த மீசையுமாக ஹிக்விட்டா மற்ற கோல்கீப்பர்களூக்கு முற்றிலும் மாறாக இருந்தான்.

கோல்கீப்பரின் முதல் கடமை சாட்சியாயிருத்தல். பெனல்டி கிக் ஏற்படும்போது அதை அவன் இழந்து விடுகிறான். பதிலாகக் கிடைப்பதோ பார்வையாளர்களின் சிறிய ஆமோதிப்புதான். ஆனால் ஹிக்விட்டா எந்தவித கூச்சமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் பிரவேசிக்கிறான். புதிய அட்சரேகைகளைக் கண்டுபிடிக்கும் மாலுமியைப் போல கோல்கீப்பர்கள் இதுவரை பார்த்திராத மைதானத்தின் மத்திய பாகத்துக்கு பந்தை இடவலமாக உருட்டி அவன் முன்னேறுகிறான்.

ஃபாதர் கீவர்கீஸ் மற்ற கோல்கீப்பர்களை ஒதுக்கிவிட்டு ஹிக்விட்டாவை மட்டும் கவனிக்கத் தொடங்கியது அவன் பெனல்டி கிக்கை எதிர்கொள்வதை முதன் முதலில் பார்த்தபோதுதான். இரண்டு கைகளையும் காற்றில் வீசி, ஒரு அர்க்கெஸ்ட்ரா கண்டக்டர் மாதிரி, பிறைபோல வளைந்து கிடக்கும் ஸ்டேடியத்தில் பார்வையாளருக்காக கேட்கமுடியாத சங்கீதத்தின் உச்சஸ்தாயிகளை ஹிக்விட்டா சிருஷ்டித்தான். பந்தை உதைக்க நிற்கும் வீரர்களுக்கு அவனுடைய வாத்ய கோஷ்டியில் முதல் வயலின்காரனின் முக்கியத்துவம் மட்டுமே இருந்தது. கடைசியில் ஒருநாள் அது நிகழ்ந்துவிட்டது.

முன்னேறிக் கொண்டிருந்த ஹிக்விட்டாவின் காலிலிருந்த பந்தை எதிராளித் தட்டியெடுத்து ஆளற்ற போஸ்டில் கோல் அடித்து கொலம்பியாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றினான். ஆனால் ஹிக்விட்டா இந்த நிகழ்ச்சியின் உருவாக்கலிலும் தன்னுடைய பங்கை உணர்ந்தவனாய் மெதுவாகச் சிரித்துக் கொள்வதை கீவர்கீஸ் மட்டுமே கவனித்தார்.

திருப்பலி முடிந்து ஃபாதர் வெளியே வந்தபோது அன்றும் லூஸி அவருக்காகக் காத்து நிற்பதைக் கண்டார். அவளைப் பார்த்து தலையசைத்துவிட்டு, பேசுவதற்கு நிற்காமல் தனது அறைக்குத் திரும்பினார்.
மைதானத்தின் நடுவே தன் அணி ஆளிடம் பந்தை பாஸ் செய்தபின் திரும்பி வருகிற ஹிக்விட்டாவைப் பார்ப்பதுதான் ஃபாதருக்கு மிகவும் விருப்பம். கோல் போஸ்டின் அரவணைக்கும் சூட்டை அனுபவிக்க நிலைகுலைந்து ஓடி வருகிற மற்ற கோல்கீப்பர்களிலிருந்து மாறுபட்டு, அமைதியாக, எந்தவித பரபரப்பும் இல்லாமல் கோல் போஸ்டுக்குத் திரும்புகிறான் ஹிக்விட்டா.

‘ஃபாதர்’- லூஸி அழைத்தாள்.

கீவர்கீஸ் நின்றார்.

‘ஃபாதர், நான் ஜப்பார்கூடப் போகிறேன்.’ அவளுடைய எதிர்ப்பு தகர்ந்து விழத் தொடங்கியிருக்கிறது.

‘போக உனக்கு சம்மதமா?’

‘சம்மதமா என்று கேட்டால்…’

‘பிறகு?’

‘இன்று சாயங்காலத்துக்குள் அவனுடைய வீட்டுக்குப் போகாவிட்டால் என் முகத்தில் ஆஸிட் பல்பை வீசுவானாம். அவன் சொல்கிறான்.’

‘உனக்குப் போக விருப்பமா?’

‘நான் போனா ஒருவேளை அவன் என்னை கல்யாணம் செய்து கொள்ளலாம்’ என்றாள் லூஸி, நம்பிக்கையற்ற குரலில்.

‘உனக்குப் போவதற்கு முழுச் சம்மதமா?’

‘அவன் என் முகத்தில் ஆஸிட் வீசுவான்…’

‘நீ வா’ ஃபாதர் அவளைத் தன்னுடன் நடந்துவரச் சொன்னார். அறைக்கு வெளியே அவளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று, சட்டையின் மேல் அணிந்திருந்த அங்கியையும் ஜெபமாலையையும் கழற்றினார். பிறகு லூஸியை ஸ்கூட்டரின் அருகே அழைத்துச் சென்றார்.

‘நீ ஏறிக்கொள்’ – ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துகொண்டே ஃபாதர் கூறினார்.

‘ஜப்பாரின் வீடு எங்கே?’

‘ஷக்கூர்புர் பஸ்தியின் அருகே.’

ஃபாதர் ஸ்கூட்டரை கார்களுக்கும் ஸ்கூட்டர்களுக்கும் இடையே இடவலமாகத் திருப்பி வேகமாக ஓட்டினார்.

தட்டியதும் ஜப்பார் கதவைத் திறந்தான். சுருண்ட முடியும் இணைந்த புருவமும் ஐந்தரை அடி உயரமும் உள்ள ஜப்பாரின் முகத்தில் மீசை இன்னும் கறுக்கவில்லை. இருந்தும் அவன் தலைமயிர் சற்றே நரைக்கத் தொடங்கியிருந்தது. நிர்ணயிக்க முடியாத வயது.

‘நீ வந்துவிட்டாயா?’ ஜப்பார் கேட்டான்.

அவனுடைய மிருதுவான குரல் ஃபாதரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக அந்த சப்தம் பிறந்த சதைப்பற்றிய கனத்த தடித்த காளைக் கழுத்தை கண்டபோது.

‘நீ உள்ளே போ’ ஜப்பாரின் குரல் இன்னும் மெதுவாக ஒலித்தது.

‘போகமாட்டாள்’ – கீவர்கீஸ் கூறினார். அப்போதும் ஜப்பார் லூஸியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் ஃபாதரைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

‘நீ உள்ளே போ.’

‘போகமாட்டாள்’ – ஃபாதர் மீண்டும் கூறினார். ஜப்பார் அப்போதும் அவர் பக்கம் திரும்பவில்லை. உணர்ச்சியற்ற குரலில் அவன் லூஸியிடம் ஏதோ அந்தரங்க விஷயம் சொல்கிறமட்டில் ‘லூஸி இந்த ஆள் இங்கிருந்து போவதல்லவா நமக்கு நல்லது?’ என்றான்.

‘இல்லை’ என்றாள் லூஸி.

அப்போது ஜப்பாரின் கை உயர்ந்ததும், லூஸி ஒரு அடி பின்னால் நகர்ந்ததும், தலைச்சேரியின் சமீபம் ஒரு வயலில் ஸெவன்ஸ் காணவந்தவர்கள் ‘கீவரிதே…கீவரிதே’ என்று ஆர்ப்பரித்ததும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.

பழைய புகைப்படங்களின் மஞ்சள் நிற நினைவில் பி.டி.மாஸ்டர் தூரத்தில் ஒரு கமுகு மரத்தில் சாய்ந்து நிற்கும் காட்சி கண்களின் ஓரத்தில் ஆடைபடிந்து கிடக்கும்போதே கீவர்கீஸ் காலை உயர்த்தி உதைத்தார். அகன்ற மார்பில் பந்தை ஏந்தி தலையினால் முட்டினார். கால் உயர்ந்து அடுத்த அடி விழுந்தது. மீண்டும் மீண்டும், திரும்பவும் ஸ்லோமோஷனில் அடி தொடர்ந்தது. தரையில் விழுந்த ஜப்பாரின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. பெரிய எழுத்துக்களில் ஓக்லஹாமா என்று எழுதிய பனியனை சுருட்டிப் பிடித்துத் தூக்கி ஃபாதர் கீவர்கீஸ் கூறினார்:

‘நாளை சூரியன் உதிக்கும் என்று உண்டென்றால் உன்னை தில்லியில் காணக்கூடாது.’

ஃபாதர் கையைவிட்டதும் ஜப்பார் நிற்கமுடியாமல் தள்ளாடி தரையில் விழுந்தான்.

லூஸியை அவள் தங்கியிருந்த வீட்டின்முன் இறக்கி விட்டுவிட்டு ஃபாதர் தம் அறைக்குத் திரும்பினார்- அமைதியாக, எந்தவித பரபரப்பும் இல்லாமல்.