பனுவல் போற்றுதும் – குறம்

nanjil

சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர், தமிழ்ப் பிரபந்தங்களின் பட்டியல் தயாரித்தபோது, அதன் 85-வது வரிசை எண்ணாகச் சொல்லும் குறத்திப் பாட்டு என்பதே குறம் ஆகும். முன்பே சொன்னோம், குறத்திப்பாட்டு, குறம் என்பன குறவஞ்சியின் முன்னோடித் தலைமுறை என்று.

தமிழில் 17-ம் நூற்றண்டைச் சேர்ந்த, குமரகுருபரரின் மீனாட்சியம்மை குறம் புகழ்பெற்றது.

கி.பி. 18-ம் அல்லது 19-ம் நூற்றாண்டில் அனந்தப் பிள்ளை உபாத்தியாயர் என்பவர் ’திரௌபதை குறம்’ என்றொரு நூல் எழுதியுள்ளார். திரௌபதை என்பவள் பாஞ்சாலி என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

’திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக் குறம்’ என்றொரு நூல் 19-ம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் நம்மாழ்வார் மீது பாடப்பெற்றதாக அறிகிறோம்.

குறத்தி குறி சொல்லும் பிரபந்தமே குறம் எனப்பட்டது. கலம்பகம் எனும் பிரபந்த வகையில் குறம் என்றொரு உள் உறுப்பும் உண்டு. முக்காலமும் தெரிந்து திறம்பட உரைப்பதே குறத்திப் பாட்டு எனப்படும் குறம் என்மனார் புலவர். குறத்தில், குறத்திப் பாட்டு மட்டுமே இருக்கும். குறவஞ்சியில் வேறு பல கூறுகளும் அமையும்.

எனவே குறவஞ்சியைப் பேசி முடித்த கையுடன் குறமும் பேசிவிடலாம் என்று தோன்றியது.

மதுரை மீனாட்சியம்மை குறம்

1101115158_std

[குமரகுருபரர்]

திருவைகுண்டத்தில் வேளாளர் மரபில் சைவ சமயக் குடும்பத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் குமரகுருபரர். பிறந்து ஐந்து வயது வரை வாய்பேசாது வளர்ந்தார். பெற்றோர் அவரையும் கூட்டிக் கொண்டு போய், திருச்செந்தூர் முருகன் மீது கசிந்துருகி வேண்டியபோது குழந்தை ‘அம்மா’ என்றழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ எனும் நூலைப் பாடினார் என்பர். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்ட காலத்து, அவர் முன்னிலையில், அங்கயற்கண்ணி சந்நிதியில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார். சில காலம் மதுரையில் தங்கியிருந்து ‘மீனாட்சி அம்மை குறம்’. ‘மீனாட்சி அம்மை இரட்டைமணிமாலை’, ‘மதுரைக் கலம்பகம்’, ‘நீதி நெறி விளக்கம்’ பாடினார். சிலகாலம் சென்று திருவாரூர் சென்று ‘திருவாரூர் நான்மணி மாலை’ பாடினார். பின்பு வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் புள்ளிருக்கும் வேளூர் சென்று முத்துக்குமரன் மீது ‘முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்’ பாடினார். அப்படியே, அஞ்சல் நடையாய் சிதம்பரம் ‘சிதம்பர மும்மணிக் கோவை’ ‘சிதம்பர செய்யுட் கோவை’ அடுத்து தருமை ஆதீனம் சென்று மாசிலாமணி தேசிகன் எனும் தமது ஞானாசிரியன் மீது ‘பண்டார மும்மணிக் கோவை’.

தென்திசையில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு, நாடுகள் பல கண்டு வடதிசைக் காசிக்குப் பயணம். காசி சென்று ‘காசிக் கலம்பகம்’ இயற்றினார். இந்தி கற்க விரும்பி கலைமகளை யாசித்து ‘சகல கலா வல்லி மாலை’.

இது ஒரு துறவியின் பயணம். பதின்மூன்று அரும் நூல்கள் தமிழுக்கு. நமக்குக் காட்பாடியைக் கடக்கக் குதிங்காலில் தெம்பில்லை. உலக இலக்கியக் கரை கடக்கும் ஆசைக்கும் குறைவில்லை.

ஒரு செய்தி.- சிதம்பரத்தில் குமரகுருபரர் தங்கி இருந்தபோது ‘சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை’ இயற்றியதாகச் சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் உ.வே.சா.வுக்கு இந்தச் செய்தியில் உடன்பாடில்லை.

காசியில் குமரகுருபரர் தங்கியிருந்தபோது, வடமொழி கற்று,, தமிழ் இலக்கியங்கள் பற்றியும், கம்ப இராமாயணம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றினார் என்றும், கேட்கப் பெருந்திரள் மக்கள் கூடினர் என்றும், அவர்களில் ஒருவர் துளசிதாசர் என்றும், துளசி ராமாயணத்தில் கம்பரின் செல்வாக்குக்கு அது காரணம் ஆயிற்று என்றும் கூறுகிறார்கள்.

முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, காசி வரையில் சென்று தமிழின் சிறப்பை இந்தியில் எடுத்துரைத்த குமரகுருபரரின் தமிழை இன்று சொல்வாரில்லை, கேட்பாரில்லை,வாசிப்பாரில்லை. அவரது இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்களையும், ஒரு கலம்பகத்தையும் பின்னால் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

துறவியும் புலவருமான குமரகுருபரர் இயற்றிய கந்தர் கலிவெண்பா ஒரு சமய நூல் என்றாலும் அந்தச் சின்ன வயதில் ஞானம் பெற்றவரின் அருள் வாக்காய், ‘ஏகத்து உருவும் அருவும் உருவு அருவும்’ என்றும்

‘தொன்னூல் பர சமயம் தோறும் அது அதுவே
நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து.’

என்று சர்வ சமயத்துக்கும் உகந்து பேசமுடிந்திருக்கிறது.

சகலகலா வல்லி மாலையில் இரண்டு பாடல்களைச் சொல்லாமல் என்னால் கடக்க இயலவில்லை. கட்டளைக் கலித்துறையில், எழுத்தெண்ணிப் பாடும் இலக்கணத்தில், கலைவாணியை வாழ்த்தி முதல் பாடல். பாடலைப் பிரித்து எழுதுவதால் சந்தம் குலையும். கட்டளைக் கலித்துறையின் இலக்கணமும் இருக்காது. பிரித்து எழுதா விட்டால் பொருள் விளங்காது.

‘வெண் தாமரைக்கு அன்றி, நின் பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ!
சகம் ஏழும் அளித்து
உண்டாண் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலா வல்லியே!’

நின் பதம் வெண்தாமரை மட்டும் தான் தாங்க இயலுமா? வெள்ளை உள்ளமாகிய தண் தாமரைக்குத் தகாது கொலோ? ஏழு உலகங்களும் காத்து, திருமால் அறிதுயில் கொள்ள, ஒழிக்கும் தொழில் செய்யும் சிவனும் பித்தாக, உண்டாக்கும் தொழில் செய்யும் நான்முகன் சுவைக்கும் கரும்பே! சகல கலா வல்லியே!

‘சொல் விற்பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல
நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!
நளினம் சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலா வல்லியே!’

நல்ல நாவன்மையும், அஷ்டாவதானம் – தசாவதானம் – சதாவதானம் என்று அவதானம் செய்யும் ஆற்றலும், ஆசுகவி – மதுரகவி – சித்திரக் கவி- வித்தாரக் கவி என்றும், வெண்பா- ஆசிரியப்பா- கலிப்பா- வஞ்சிப்பா என்றும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளினமுடைய திருமகளுக்கு அரிதென்று, எக்காலமும் சிதையாதக் கல்விப் பெருஞ்செல்வம் நல்கும் பேறே! சகல கலா வல்லியே!

கல்விக் கடவுளுக்கான படையல் இது. கிரேக்கத்தின் கல்விக் கடவுளுக்கு அத்தினா எனப் பெயரென்றும் அவளுக்கான வணக்கமாய், தலைநகருக்கு ஆதென்ஸ் என்று பெயரிட்டதாயும் சொல்வார்கள்! அதுபோல சகல கலாவல்லி மாலை!

குமரகுருபரருடைய மீனாட்சி அம்மை குறம் பற்றித்தான் பேசப் புகுந்தோம். அறிமுகமே அதிகமாகிவிட்டது.

காப்புச் செய்யுள் ஒன்றும், வாழ்த்துச் செய்யுள் ஒன்றும் தவிர்த்து ஐம்பது பாடல்கள். பெரும்பாலும் சிந்து, கொச்சகக் கலிப்பா, அறுசீர் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம்.

உலாப் பிரபந்தங்களில், கையை உடைய விலங்கு என்பதால், யானையைக் கைம்மா என்று பல புலவர்கள் கையாண்டுள்ளனர். நினைவில் கொள்ளுங்கள் கைம்மா என்று, கைமா என்று அல்ல. குமரகுருபரர் கைக்கயம் என்றொரு சொல்லை ஆள்கிறார். கஜம் என்ற வடமொழிச் சொல்லுக்கு யானை என்று பொருள். கஜமுகன், கஜராஜன், அஷ்டதிக்கஜங்கள், கஜானன், கஜகேசரி என்பன வழக்குகள். கஜம் எனும் சொல் தற்பவத்தால் கயம் ஆகி கைக்கயம், கையை உடைய யானை என்றாகிறது.

பாட்டுடைத் தலைவன் மீதுக் காமம் கொண்ட தலைவியைக் கண்டு குறத்தி குறி கூறுவதே குறம் எனப்பட்டது. இங்கு தலைவி அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி, சொக்கேசனைக் கூடக் குறி சொல்கிறது

குறம்

‘செந்நெல் முத்தும் கன்னல் முத்தும் ஒளி
திகழ் மதுரை அங்கயற்கண் அம்மை
பொன்னு முத்தும் சொரியும் வெள்ளருவிப்
பொதியமலைக் குறத்தி நான் அம்மே!’

என்று குறத்தியின் அறிமுகம் முதலில். மேலும் குறத்தி தன்னை விவரித்துப் பாடுகிறாள். அறுசீர்க் கழில்நெடிலடி ஆசிரிய விருத்தத்தில்,

செண்டிருக்கும் வடவரையிற் சேலிருக்கும்
அரசிருக்கும் தென்னர் ஈன்ற
கண்டிருக்கும் மதுரமொழிக் கனியிருக்கும்
துவரிதழ் அங்கயற்கண் பாவை
வண்டிருக்கும் நறைக்கமல மலரிருக்கும்
பரிபுரத்தாள் மனத்துள் வைத்துக்
கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும்
பொதியமலைக் குறத்தி நானே!

இமயமலையில் படை எடுத்துச் சென்று தனது மீன் சின்னத்தைப் பொறித்த தென்னன், பாண்டியன், ஈன்ற கற்கண்டு போன்ற மதுர மொழிக் கனியை, செவ்விய இதழ்களை உடைய அங்கயற்கண்ணிப் பாவையை, வண்டு இருக்கும் மணமுள்ள தாமரை மலரை ஒத்த, சிலம்பணிந்த மென்பாதங்களைக் கொண்டிருப்பவளை, மனதில் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்முனி, குடமுனி, கும்பமுனி, அகத்தியமுனி குடியிருக்கும் பொதிகைமலைக் குறத்தி நான் அம்மே!

இந்தப் பாடலைப் பொருள் புரிந்து வேகமாகச் சந்தமுடன் சொல்லிப் பாருங்கள்! குமரகுருபரரின் தமிழின் தரம் அறியலாம்.

காவடிச் சிந்துவுக்குப் புகழ்பெற்றக் கழுகுமலை அருகில் அமைந்திருக்கும் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். குமரகுருபரரின் சிந்து ஒன்றைப் பார்ப்போம்.

’மங்கைக் குங்குமக் கொங்கைப் பங்கயச்
செங்கை அஙகயற்கண்ணினாய் மறை பண்ணினாள்
பங்கனைக் கழல் அங்கனைச் சொக்க
லிங்கனைக் கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே!’

கொல்லிப்பாவை என்பது மிக அழகிய பெண்ணிற்கான உவமை. கொல்லிப்பாவையே! குங்குமச் சாந்து கொங்கைகளில் பூசிய மங்கையே! பங்கயம் போன்ற சிவந்த கரங்களை உடையவளே! அழகிய கயல் கண்ணினாய்! மறைகள் பண்ணிசைத்துப் போற்றப் படுபவளே! நீ உமையைப் பங்கனாகக் கொண்டவனை, கழலும் எலும்பு மாலையும் அணிந்தவனை, சொக்கலிங்கனைக் கூடி இன்புறுவாய்!

கொச்சகக் கலிப்பாவில் ஒரு பாடல்:

’கடல் அலைக்கும் வெம்மலையாம் கைம்மலையும் ஆயிரம் வாய்ப்
படம் அலைக்கும் அரவு அரசும் பரித்து அருளும் பார்மடந்தை
குடம் உலைக்கும் தடமுலையாம் குலமகள் இரண்டு எனவும்
வடமலைக்கும் தென்பொதியும் மலயமலை என்மலையே!’

பூமியின் பெரும்பகுதியான கடல்களை அலைக்கும் கொடிய திசைமலைகளான எட்டு யானைகளையும், அஷ்ட திக்கஜங்களையும்;ஆயிரம் வாய்களை உடைய படங்களை அலைக்கும் அரவு அரசனான நாகராஜனையும், அனந்தனையும், ஆதி சேடனையும்; தாங்கிக் காக்கும் பார்மடந்தையான பூமாதேவியின் குடம் போன்ற இருதடமுலைகளை ஒத்தன வடமலை ஒன்று, எனது தென் பொதிக மலயமலை ஒன்று அம்மே!. இப்பாடலில் கவனிக்க வேண்டிய சொல்லாட்சி அரவரசு – நாகராஜன்.

தமிழிசைப் பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் தவிர்த்திருக்க முடியாத பாடல் ஒன்று, T.R.மகாலிங்கத்தின் கணீர்க் குரலில் செவிகளில் ஒலிப்பது:

‘திங்கள் முடி சூடிமலை தென்றல் விளையாடு மலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மை திருஅருள் சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை பொதியமலை எம்மலையே!’

திரையிசையில் நீங்கள் கேட்பது இந்தப் பாடலின் மலிந்த வடிவம். இன்று கொண்டாடலாம், குமரகுருபரரும், தமிழ் சினிமாவுக்குப் பாட்டெழுதினார் என்று. என்ன செய்ய? ஆற்றலுள்ள புலவன் உயிர் சலிக்கும் வரிகளைத் தமிழுக்குக் கொடையளித்து மறைந்து போனான். எடுத்தாண்டவர்கள் பொருள் குவித்துச் சுகித்திருந்தார்.

குமரகுருபரரின் பாடல் சிகரங்களில் ஒன்று, நாம் கீழே பார்க்கப் போகும் எண்சீர்க் கழில் நெடில் அடி ஆசிரிய விருத்தம். பெரும்பாலும் தமிழ் ஆர்வம் உள்ளோர் கேட்டோ வாசித்தோ மகிழ்ந்திருப்பார்கள்.

’சிங்கமும் வெங்களிறும் உடன்விளையாடும் ஒருபால்,
சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும் அங்கு ஒருபால்,
வெங்கரடி மரயினொடும் விளையாடும் ஒருபால்,
விட அரவும் மடமயிலும் விருந்து அயரும் ஒருபால்,
அங்கணமர் நிலம் கவிக்கும் வெண்கவிகை நிழல்கீழ்
அம்பொன் முடிசூடும் எங்கள் அபிடேகவல்லி
செங்கமலப் பதம் பரவும் கும்பமுனி பயிலும்
தென்பொதிய மலை காண் மற்று எங்கள் மலை அம்மே!’

என்ன ஒரு பெருமிதம் பாருங்கள்! அபிடேகவல்லியின் செங்கமலப் பாதம் பரவும் கும்பமுனி தங்கி வாழும் தென் பொதிய மலைகாண் எங்கள் மலை அம்மே! அந்த மலையில் சிங்கமும் கொடிய யானையும் சேர்ந்து விளையாடும் ஒரு பக்கம், சினங்கொண்ட புலியும் பெண்மானும் திளைத்து ஆடும் மற்றொரு பக்கம், கொடிய கரடியும் மரையும் விளையாடும் ஒரு பால், விடம் கொண்ட பாம்பும் தோகை விரிக்கும் மயிலும் விருந்துண்டு அயர்ந்திருக்கும் ஒருபால். யாவும் பகை விலங்குகள். பகை மறந்து நட்பாய் இன்புற்றிருக்கும் மலைதான் எங்கள் பொதியமலை அம்மே! என்று தலப்பெருமை பாடுகிறாள் குறத்தி.

kurathi

[ஆவுடையார் கோயில் குறத்தி சிற்பம் – நன்றி: யாதும் ஊரே]

பகை கொண்ட விலங்குகள் கூட அமைதியாய் வாழும் பூமி எங்கள் மலை அம்மே! ஆனால் நாங்கள் எதை உண்டு, எதைப் பருகி, எதை அணிந்து, எங்கு உறங்கி வாழ்வோம் தெரியுமா? பாடலைப் பாருங்கள்:

‘கொழும்கொடியின் விழுந்த வள்ளிக் கிழங்கு கல்லி எடுப்போம்,
குறிஞ்சிமலர் தெரிந்து முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம்,
பழம் பிழிந்த கொழும் சாறும் தேறலும் வாய் மடுப்போம்,
பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்
செழுந்தினையும் நறுந்தேனும் விருந்து அருந்தக் கொடுப்போம்
சினவேங்கைப் புலித்தோலின் பாயலின்கண் படுப்போம்
எழுந்து கயற்கணிக் காலில் விழுந்து வினை கெடுப்போம்
எங்கள் குறக்குடிக்கு அடுத்த இயல்பிது காண் அம்மே!’

அரும்பொருட்கள் : கல்லி- அகிழ்ந்து; தேறல்- மது; பாயல் – படுக்கை; கயற்கணி – அங்கயற்கணி.

குறத்தி தான் குறி சொல்லும் திறத்தையும் அது பலிக்கும் விதத்தையும் எடுத்து உரைக்கிறாள்.

’முன்னொரு நாள் அம்மை தடாதகை பிறந்த நாளின்
முகக்குறி கண்டு இவள் உலகம் முழுது ஆளும் என்றென்;
பின்னொரு நாள் கைக்குறி பார்த்து, அம்மை, உனக்கு, எங்கள்
பிஞ்ஞகர் தாம் மணவாளப் பிள்ளை என்று சொன்னேன்;
அன்னை அவள் மெய்க்குறிகள் அனைத்தும் பார்த்து
உனக்கு ஓர் ஆண்பிள்ளை உண்டு, பிறந்து அரசாளும் என்றேன்.
சொன்ன குறி எல்லாம் என் சொற்படியே பலிக்கும்
தொகுத்து நீ நினைத்த குறி இனி சொலக்கேள் அம்மே!’

பிஞ்ஞகர் – சிவன் ‘பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!’
சிவபுராணம், மாணிக்கவாசகர்.

எங்கள் பக்கம் நான் சிறுவனாக இருந்தபோது ‘உடுப்பு’ என்றால் உடை என்று பொருள். சட்டை எனும் பொருளில் பயன்படுத்தினார்கள். ‘அவுனுக்கு ஒரு உடுப்புத் துணி எடுக்கணும், கேட்டேளா?’ என்றும், ’வெறைக்கிண்ணா ஒரு உடுப்பு எடுத்துப் போடப்பிடாதா?’ என்றும் தாய்மார்கள் பேசியதைக் கேட்டதுண்டு.

குறி சொல்வதற்குக் கூலியாகக் குறத்தி சொல்கிறாள் –

‘ஒரு காலம் கஞ்சியும் என் குஞ்சுத் தலைக்கு
எண்ணையும் ஓர் உடுப்பும் ஈந்தால்
பொருகால வேல் கண்ணாய் மனத்து நீ
நினைத்த எல்லாம் புகல்வன் கண்டாய்!’

’தாக்குவதற்கு வரும் கொடு வேல் கண்ணை உடைய அம்மே! ஒரு வேளை கஞ்சியும், என் சிறுதலை குஞ்சிக்கு எண்ணையும், ஓர் உடையும் ஈந்தால், மனதில் நினைத்தது எல்லாம் புகல்வேன் கண்டாய்’ என்பது பொருள். இன்று உடுப்பு எனும் சொல் நாஞ்சில் நாடு அடக்கம் எங்கும் பயன்பாட்டில் இல்லை.

31-ம் பாடலில் இருந்து 50-ம் பாடல் வரை சிந்துப் பாடல்கள்.

அங்கயற்கண்ணியை, மீனாட்சியை வாழ்த்தும் பாடல்கள்.

வானவர் கோன் முடி சிதறி
வடவரையில் கயல் எழுது
மீனவர்கோன் தனைப் பயந்த
மெல்லியலைப் பாடுவனே!

கான் மணக்கும் சடைக்காட்டில்
கவின் மணக்கும் கடிக்கொன்றை
தேன் மணக்கும் பிறை நாறும்
சீறடியைப் பாடுவனே!

இலை, குறியும் குணமும் நமக்கு
என்பார்க்கு வளைக் குறியும்
முலைக்குறியும் அணிந்திட்ட
மொய் குழலைப் பாடுவனே!

மூன்றாவது பாடல் சிந்துவைக் கவனிப்போம்.

குறியும் குணமும் நமக்கு இல்லை இல்லை என்பார்க்கு வளைக் குறியும் முலைக் குறியும் அணிந்திட்ட மொய் குழலே! உன்னைப் பாடுவனே! தோற்றமும் குணமும் இல்லாதவன் சிவன். அவனுக்கே வளைக் குறி வைத்த முலைக்குறி வைத்த அங்கயற்கண்ணியைப் பாடுவனே!

உண்மையைச் சொன்னால், இந்தத் தொடரை எழுதப் புகுந்த பின்னரே ‘மீனாட்சியம்மை குறம்’ என்ற நூலையே நான் கேள்விப்பட்டேன். ஒன்றிரண்டு பாடல்கள் முன்பு கேட்டதுண்டே தவிர, அவை இந்த நூலில் இருந்தன என்றும் தெரியாது. குமரகுருபரரின் தமிழ் ஆளூமை என்னை வியக்க வைக்கிறது.

[நாஞ்சில்நாடன் ஒளிப்படம் நன்றி: ச.திருமலைராஜன்

மீனாட்சியம்மை குறம் நூலை இணையத்தில் இங்கே படிக்கலாம்.]