மும்மணிக்கோவை – இறுதிப் பகுதி

52ccf670a09217f90fb2dc84c4166f2a_small

மூத்த பிள்ளையார் திரு மும்மணிக் கோவை

இயற்றியவர் அதிராவடிகள் அதாவது அதிரா அடிகள். நடுக்கம், துளக்கம் இல்லாத மனம் உள்ளவர் என்பது பொருள். பதினோராம் திருமுறை நூலான இதன் ஆசிரியர் இயற்றியது இது ஒன்றுதான். அதிலும் முதல் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. மூத்த பிள்ளையார் என்றாலும் பிள்ளையார்தான். அவரை நாயகனாக்கிய அகத்துறை நூல் இது. ஆனால் அகத்துறை நூலென்று சொல்லும் எந்த அடையாளமும் காணப் பெறவில்லை.

சப்பாணி கொட்டும், மணியூசல் ஆடும், இக்கயம் கொள் மூவலயம் சூழ் ஏழ் தடவரைகள் திக்கயங்கள் பேர்ந்தாட செங்கீரை ஆடும் என்று பிள்ளைத்தமிழ் சுவடுகள் கொண்ட பாடல்கள் உண்டு.
வெண்பா ஒன்று பார்ப்போம்:

’நிலம் துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலம் துளங்கச் சப்பாணி கொட்டும் – கலந்து உளம் கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கட தடத்து
மாமாரி ஈன்ற மணி.’

நிலம் நடுங்க, மேரு மலை நடுங்க, நெடுவான் நடுங்க சப்பாணி கொட்டும், கலந்து உளம் கொண்ட காமனை எரித்த சிவபெருமான் ஈன்ற, கருங்கையும் மதச்சுவட்டில் இருந்து மாரி போல் பெருகும் மாமத நீரும் உடைய விநாயகப் பெருமான்.

பக்திப் பாடல் போல் இருக்கிறது என்பதைத் தாண்டி வேறேன்ன சொல்ல?

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்துப் பிள்ளை இயற்றியது ஒன்று மனங்கொளல் வேண்டும். ஔவையார், பட்டினத்தார், நக்கீரர், திருவள்ளுவர், கம்பர் எனும் புலவர்கள் காலந்தோறும் வாழ்ந்திருக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து பிற்காலத்தவர் வரை, வரிசையாக வரும் ஔவையார் ஒருவர் அல்ல. அதுபோன்றே மற்ற பலரும். திருவெண்காட்டு அடிகள் அருளிய நூல்கள் மொத்தம் ஐந்து. யோசித்துப் பார்க்கும்போது தமிழுக்குக் கொடை அளித்த புலவர் இயற்றிய நூலை, அருளிய என்று எழுதுவதில் தப்பு ஒன்றும் இல்லை. காமமும் வன்முறையும் பகையும், பண்பாட்டுக் கேடும் சுற்றுச் சுழல் மாசும் பரப்பும் ஏழாந்தர திரைப்படங்களைக்கூட ’பெருமையுடன் வழங்கு’கிறார்கள் இன்று.

கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒரு பா ஒரு பஃது என்பன அடிகள் இயற்றிய நூல்கள் ஆகும்.

திருப்பனந்தாள் காசித் திருமடப் பதிப்பில் கிடைக்கும் செய்திகள் ஆவன: கழுமலம் என்பது சீர்காழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். இந்நூலில், முதல் பன்னிரண்டு பாடல்களே கிடைத்துள்ளன. ஆ.சிங்காரவேல் முதலியார் அவர்கள் எழுதிய உரையுடன் வெளிவந்திருக்கும் நூலில் முப்பது பாடல்கள் உள்ளன. எனினும், அப்பாடல்கள் ஆறுமுக நாவலர் பதிப்பில் இடம்பெறவில்லை. 13 லிருந்து 30 வரையிலான பாடல்களில் இடம்பெற்றிருக்கும் வடசொற்கள் பலவற்றைக் காண, அவை திருவெண்காட்டு அடிகளால் பாடப்பெற்றவை அல்ல எனத் துணிதற்கு இடனாக உள்ளது.

மேற்சொன்ன செய்திகளை ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

இந்த நூலில், இலக்கணத்தில் ஒரு சிறு மாற்றம். வழக்கமாக மும்மணிக் கோவைகள் அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் வரிசை அடுக்கில் இயற்றப்பெறும். இந்த நூலில் இணைக்குறள் ஆசிரியப்பா வகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வெண்பா மட்டும் பார்ப்போம்:

‘மானும் மழுவும் திருமிடற்றில் வாழும் இருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் – வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்து என்
உள்ளத்தே நின்ற ஒளி.’

சீர்காழி போனவர்களுக்குத் தெரியும், மேல்நிலையிலில், கோயிலில், தோணியப்பன் என்று காட்சி தருவது. அந்தப் புராணச் செய்தி பொதிந்த பாடல் இது.

வானவர்க்கு வெள்ளத்தில் தோன்றி காட்சி கொடுத்து, சீர்காழியில் வீற்றிருந்து, என் உள்ளத்தே நின்ற ஒளியானது, மானும் மழுவும் திருக்கழுத்தில் இருள் போல நஞ்சும் பிறையும் தரித்திருக்கும் இது ஒரு அறிக்கை போல, statement போல இல்லையா? இதில் கவிதை எங்கேனும் மறைந்து இருக்கிறதா? ‘திருமிடற்றில் வாழும் இருள்’ எனும் பிரயோகம் மட்டும் சற்று வித்தியாசமானதாகத் தெரிகிறது என்றாலும் வெண்பாவில் பழுதில்லை, மொழி ஆளுமையில் குறையில்லை, பாவத்தில் பலவீனமில்லை.

mahalingeswarar_temple_thiruvidaimarudur

திருவிடை மருதூர் மும்மணிக்கோவை

இந்நூலாசிரியரும் பட்டினத்துப் பிள்ளைதான். திருவிடை மருதூர் சிவபெருமான் மீது பாடப்பெற்றது. இதுவும் இணைக்குறள் ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் அடுக்கில் 30 பாடல்கள்.

கட்டளைக் கலித்துறைப் பாடல் ஒன்று:

‘வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன்
புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன், இனிச்சென்று இரவேன்
ஒருவரை யாதொன்றுமே.’

’தேவார மரபின் வழிப்பட்ட வாய்ப்பான பாடல் இது. பொருள்கூட உரைக்கும் அவசியமில்லை. அத்தனை எளிமை.

இறந்தும், இறப்பதினால் மறுபடிப் பிறந்தும், பிறவிப் பெருங்கடல் நீந்தி வருந்தமாட்டேன். எல்லாப் பிறப்பும் பிறந்து இளைக்கமாட்டேன். மாயமாக மயக்கி ஈர்க்கும் ஐம்புலன்களின் ஆசை காட்டுதலுக்கு இணங்கி அந்த வழியில் சென்று பொருந்த மாட்டேன். நரகத்தில் புகுகின்றிலேன். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’, நரகத்தில் இடர்ப்படோம்’ என்று சொல்வதை ஒத்து, ஒருபோதும் நரகம் புகமாட்டேன். இசைபெற்ற திருவிடை மருதூரின் இறையாகிய பெருந்தேன் முகந்துகொண்டு, உண்டு, வேறு எதன்மீதும் விருப்பின்றி இருந்தேன். இனிச்சென்று ஒருவரையும் யாதொன்றும் இரந்து நிற்கமாட்டேன்.
இந்த செம்மாப்பு நமது சமய இலக்கியங்களில் மட்டுமே சிறப்பாக காணப்படுகின்ற ஒன்று. ‘காலா, என்னருகில் வாடா, உன்னைக் காலால் உதைக்கிறேன்’ எனும் பாரதியின் செம்மாப்பு.

ஒரு வெண்பா பார்க்கலாம்:

’அன்றென்றும் ஆம் என்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றொடு ஒவ்வாது உரைத்தாலும் – என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத்திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.’

இது சைவர்களுக்கு மிக உவப்பான பாடலாக இருக்கும். ஆறு சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என்பன இல்லை என்றும் ஆம் என்றும் ஒன்று ஒன்றொடு ஒவ்வாது உரைத்தாலும் என்றும் ஒருத்தனையே உன்னி நோக்குவார். அவர்தம் உள்ளத்து இருக்கும் திருவிடை மருதூர் சிவனையே நோக்கி வருவார்கள் என்பது பொருள். அதாவது ஆறு சமயங்களும் சைவத்தினுள் அடங்கும் என்பது குறிப்பு.

காலம் போன காலத்தில், காளை மாடு அசை துப்பும் பருவத்தில், வாழ்க்கையின் தோல்வியை ஒப்புக் கொடுத்து எனக்குத் தோன்றுவது, பேசாமல் சமய சொற்பொழிவாளனாகப் போயிருக்கலாம், என்பது. சொந்த வசதிகளை செப்பனிட்டுக் கொண்டிருக்க முடியும். அரைத்ததையே மறுபடி அரைத்துக் கொண்டிருக்கலாம். அரிசி மில், மாவு மில்களின் வார் பட்டை இணைப்பு, மில் ஓடும்போது டடக், டடக் என்று சத்தம் எழுப்புவதைப் போன்று, பேச்சில் ஒரு தாளம் இருந்தால் போதும். ஆற்றுக்குள் இறங்கி நீராடி, திருநீறு தரித்து, கிழக்கு நோக்கி, சூரியனைப் பார்த்து, இருகரங்களையும் தலைக்குமேல் கூப்பி, அரஹரா, சிவ சிவா என்றாலும் உண்மையில் சொக்கலிங்கம் இருப்பது சோற்றுக்குள்தானே!

அது கிடக்கட்டும். மேலும் ஒரு வெண்பா:

’சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்திப் பொலிய – இடையே போய்
சங்கே கலையே மருதற்குத் தான் கொடுப்பது
எங்கே இருக்க இவள்’

ஒருத்தி, கங்கை, சடை முடிமேல் சமைந்திருக்கிறாள். இன்னொருத்தி, உமை, மேனிப் பாகத்தில் பொலிந்திருக்கிறாள். இந்தக் கொள்ளையில், சங்கு வளைகளையும் மென் துகிலையும் அணிந்துகொண்டு திருவிடை மருதூரான் மேல் மையல் கொண்ட இவள், இடையே எங்கே போய் இருப்பாள்?

அகத்திணை பாடல்தான். கற்பனையும் வளமானது.

tripurantakamural

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

இந்நூல் திருநாரையூரில் பிறந்த ஆதிசைவ மரபிரனாரான நம்பியாண்டார் நம்பி இயற்றியது. சைவத் திருமுறைகளைத் தொகுத்தது இவர் செய்த மாபெரும்பணி. இவர் இயற்றியது பத்து நூல்கள்.

திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத்தொண்டர் திரு அந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திரு அந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திரு மும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திரு உலா மாலை
ஆளுடைய பிள்ளையார் திருக் கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத் தொகை
திருநாவுக்கரச தேவர் திருவேகா தசமாலை

பத்து நூல்களில் ஆறு திருஞானசம்பந்தர் மீது பாடியது. நம்பி ஆண்டார் நம்பி காலம் கி.பி. 9ம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி பி 10ம் நூற்றாண்டின் தொடக்கம் என்கிறார்கள். இளம்பெருமாள் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் காலமும் இதுவே.

முதல் ஆசிரியப்பா 14 அடிகளில். திருஞானசம்மந்தரைப் போற்றுவது.

’திங்கள் கொழுந்தொடு பொங்கு அரவு திளைக்கும்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரல் கலுழியின்
இதழியின் செம்பொன் இடுகரை சிதறிப்
புதல் எருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப்பாளன்.’

என்பன முதல் ஐந்து வரிகள். எப்பேர்ப்பட்டவனின் திருவருள் பெற்ற ஞானசம்பந்தன் என்று உயர்த்துவது. இருபிறப்பாளன் என்பது முப்புரி நூல் அணியும் முன் ஒரு பிறப்பு, முப்புரி நூல் அணிந்தபின் இன்னொரு பிறப்பு எனும் அர்த்தத்தில். ஈழத்துத் தமிழ் படைப்புச் செம்மல் ‘இருவழியும் தூய வந்த வேளாளர்’ எனப் பல இடங்களில் நக்கல் செய்வார். எனது அப்பாவின் அப்பா திருநெல்வேலி சைவ வேளாளர். அவரது இரண்டாம் மனைவி நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி வெள்ளாடிச்சி. ஆகவே பள்ளிப் பருவத்தில் வந்த ஊர்ச் சண்டைகளில் ‘இரு சாதிக்குப் பிறந்த பயல்’ என்று பலமுறை நான் ஏச்சு வாங்கி இருக்கிறேன். என் அப்பா, சித்தப்பாவும் உறுதியாய் வாங்கி இருப்பார்கள். இது என் குலமுறைக் கிளத்துப் படலம்.

கங்கைப் பெருநதியில் வேகமாகப் பாயும் வெள்ளத்தில், செங்கொன்றை மலர்கள் இருகரையும் சிதற, புதர் மண்டிக் கிடக்கும் எருக்கு மலர, பிள்ளை மதியும் சினம் கொண்ட அரவமும் அணிந்து முறுகிய சடை உடைய சிவபெருமான் ஆட்சி செய்வான். அந்த சிவனின் திருவருள் பெற்ற திருஞானசம்பந்தன். இதில் நிலாக்கீற்று, அம்புலியின் கீற்று,பிள்ளை நிலா என்பது போல திங்கள் கொழுந்து என்று பிரயோகிக்கிறார் நம்பி. எதுகைக்காக தேவாரப்பாடல்களில் ஆற்றை (கங்கையை), கீற்றை (அம்புலியின்) நீற்றை (திருநீற்றை) என்று வளமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சம்பந்தன் பெருமை கூறும் மேலும் சில வரிகள்:

’முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் உயர்த்த அறுதொழிலாளன்
ஏழிசை யாழை எண்திசை அறியத்
துண்டப் படுத்தத் தண்தமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்’

முத்தீ – ஆகவனீயம், காருக பத்யம், தட்சணாக்னி
நான்மறை – நான்கு வேதங்கள். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்
ஐவேள் – ஐந்து வேள்விகள் பிரம யாகம், தேவ யாகம், பிதிர் யாகம், மானுட யாகம், பூத யாகம்.
அறுதொழில் – ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல்
ஏழிசை – குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவை.
எண்திசை – கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டு திக்குகள்.

முத்தீ வேள்வியும் நான்மறைகளும் வளரும்படியான ஐவகை வேள்வியும் உயர்த்தியவன். ஆறு தொழில்களை உடையவன், ஏழிசை யாழை எட்டுத் திசைகளிலும் அறியும்படி யாழ்முறிப் பண்பாடித் துண்டாகச் செய்யும் பதிகம் பாடியவன்., தண்தமிழ் விரகன், சீர்காழி நாடன், கவுணியர்களின் தலைவன் திரு ஞானசம்பந்தன் என்று சீர் பரவும் பாடல். சம்பந்தர் போலவே நம்பியாண்டார் நம்பியும் சமணர்களைத் தூற்றச் சலிக்கவில்லை.

’பழி ஒன்றும் ஓராதே பாய் இடுக்கி வாளா
கழியும் சமண் கையர் தம்மை.’
என்கிறார். அதாவது ’வர இருக்கும் பழியை எண்ணாது, கையில் பாயை இடுக்கிக் கொண்டு, வீணே காலம் கழிக்கும் சமணர் தம்மை.’ என்கிறார். இன்னொரு பாடலில்,
– அருகந்தர்
முன்கலங்க நட்ட முடை கெழுமுமால் இன்னம்
புன்கலங்கல் வைகைப் புனல்.’

என்கிறார்.

அதாவது சமணர்கள் கலங்குமாறு முன்பு நட்டு வைத்த கழுமரங்களின் முடை கெழுமுவதால் இன்னும் வைகைப்புனல் புன்கலங்கி ஓடுகிறது என்று பொருள். கழுவேற்றப்பட்ட சமணர்களின் பிணங்கள் நிறைந்து வைகைபுனல் நாற்றமடித்துக் கலங்கி ஓடுகிறதாம். இதை ஒரு சம்பந்தர் பெருமையாக நம்பியாண்டார் நம்பி பாடுகிறார். அன்பே சிவம் என்று பேசியவர்களின் அன்பு வழி இதுதான் போலும்.
இதுவரை நாம் பார்த்த மும்மணிக்கோவைகள் அனைத்தும் பதினோராம் சைவத் திருமுறை சேமித்து வைத்துள்ள சிற்றிலக்கியங்கள். சமயமும், தமிழும், கவிதையும், புராணச் செய்திகளும், வரலாறும் சேமிதமாயுள்ளன. கடவுள் பெயரைக் காரணம் காட்டியாவது இவை காப்பாற்றப்பட்டு விட்டன. அதற்காக சைவத்துக்கு நன்றி.

இனி சமீப காலத்திய மும்மணிக்கோவை ஒன்றுடன் இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.

திருவொற்றியூர் மும்மணிக் கோவை:

தனித்தமிழ் வித்தகர் மறைமலை அடிகள் (1856-1950) இளமைக்காலத்தில் நோய்வாய்பட்டுத் துன்பப்பட்டபோது ஒற்றியூர் முருகனை வேண்டி நோய் தீர்ந்து பாடப்பெற்றதாகும் இந்நூல்.

முருகனிடம் தலைவி, காமம் மிக்க கழிபடர் கிளவியால், தன்னோடு கோலாகலமாகக் கூடாமற் போன வருத்தத்தை, தனது இரங்கத்த நிலையை எடுத்து இயம்புவதே இந்நூல்.

அடிகளார் இந்நூலை 1900-ம் ஆண்டிலும் பின்னர் அவரது மாணாக்கர் இளவழகனார் எழுதிய உரையுடன் 1942-லும் பதிப்பித்துள்ளார். திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அதனை 1965-ல் மறுபதிப்புச் செய்துள்ளது. அதன்பின் மறுபதிப்புகள் வந்த விபரம் தெரியவில்லை. மும்மணிக்கோவை இலக்கணத்தில் இருந்து எள்ளும் வழுவாமல், காப்புச் செய்யுள் தவிர்த்து, அகவற்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் அடுக்கில் அந்தாதித் தொடையாக 30 பாடல்கள்.

இந்நூல் எழுதத் துவங்கப் பெற்றது 1899-ன் நடுவில், அடிகளாரின் இருபத்து மூன்றாம் வயதின் துவக்கத்தில் என்று அறிகிறோம். மறைமலை அடிகளாரின் மொழியையும், அவரது திறனையும் தெரிந்து கொள்வதற்காக, அவரது முன்னுரையில் இருந்து கீழ்க்காணும் வரிகள் எடுத்தாளப்படுகின்றன.

‘மேற் சொன்ன நோயால் துன்புற்ற நாளில் எமக்கு ஆண்டு 21; மிக இளைஞனாக இருந்த காலம்; அப்போதுதான் யாம் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்து மாணாக்கர்க்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்பித்து வரலானதும். அந்நாளில் யாம் பழைய தமிழ் இலக்கண இலக்கிய நூற்பயிற்சியில் மட்டுப்படா விழைவு கொண்டு கருத்தூன்றியிருந்தோம். எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி தொடங்கிய தமிழ் பயிற்சியானது எனது இருபத்தியோராம் ஆண்டில் பெரும்பாலும் நிரம்பியதென்னலாம். இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், திருச் சிற்றம்பலக்கோவையார் எனும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம்.; கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய நூல்களிற் பெரும்பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டன; சிவஞானபோதம், சிவஞான சித்தியார் எனும் நூல்களிரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டன; இவையேயன்றி நன்னூல் விருத்தி, தொல்காப்பிய சூத்திர விருத்தி, யாப்பெருங்கலக் காரிகை, இறையனாரகப் பொருளுரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டனவாகும்.’

ஒரு இருபத்தியோரு வயது இளைஞனின் வாக்குமூலம் இது. எனதாச்சரியம், ஒரு வாக்கியத்தில் அவர் கையாளும் கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள். இன்று அரைப்புள்ளி பயன்படுத்தி எவரும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. இலட்சத்துக்கும் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாரா?

எந்த மொழியும் நமது வளர்ப்பு நாயல்ல, சொடக்குப் போட்டுக் கூப்பிட்டதும் நமக்குப் பின்னால் ஓடிவர. தமிழ் கற்றலின், கற்பித்தலின் கதி இன்று காட்டானை தேய்ந்து கருவண்டு ஆனது போல் இருக்கிறது. நாமொரு சூத்திரம் பற்றி ஐயம் கேட்டால், அது எந்த அதிகாரம் என்று கூடத் தெரியவில்லை. இது செம்மொழியின் மிகப்பெரிய அவலம். ஆனால் வந்தவன் போனவன் எல்லாம் இங்குக் கூவித் திரிகிறான் ‘தொல்காப்பியம், தொல்காப்பியம்’ என்று கூண்டுக்கிளி போல. இவை எதுவும் என் குற்றப் பத்திரிகை அல்ல, என் நெஞ்சொடு கிளத்தல்.

இனி நூலுக்குள் நுழைந்து பார்ப்போம். தோழி கிளியைத் தூதுபோக வேண்டுவதாக ஒரு வெண்பாப் பாடல்.

’மொழியும் குழற முழு உடம்பும் பைத்து
விழியும் துயில் கூடா வெய்யோன் – பழியைத்
திருவொற்றிச் சேயோற்கு உரையாய்! கிளியே
உரு உன்னை ஒப்பது உணர்ந்து.’

உரையாசிரியர் உரை பின்வருமாறு.

அருமைக் கிளியே! தெளிவின்றிச் சொல்லாடலாலும், முழு உடம்பும் பசந்து நிற்றலாலும், கண் இமைகள் துயில் கூடாமையாலும் என் தலைவியின் உருவும் உன்னையே ஒத்து உனக்கு இனமாதல் உணர்ந்து ஊரவர் அலருக்கு ஏதுவான அடக்குதற்கு அரிய இத்துயர நிலைகளை திருவொற்றி முருகற்கு எடுத்துச் சொல்வாயாக.

சற்று எளிமையாகச் சொல்லிப் பார்க்கலாம். கிளியே, உன்னைபோல என் தலைவிக்கும் மொழி குழறுகிறது. உன் உடல் பசுமை நிறம். என் தலைவிக்கு உடல் பசலை பாய்ந்துள்ளது. உனக்கும் கண் இமை கூடுவதில்லை. என் தலைவிக்கும் இமைகள் துயில் கூடவில்லை. ஆகவே என் தலைவியின் உருவம் உன்னையே ஒத்து, உன் இனம் போல இருக்கிறாள். எனவே கிளியே, நீ இதனை உணர்ந்து, ஊரார் அலர் தூற்றுவதற்கு ஏதுவான – மொழி குழறுதல், முழு உடம்பும் பசலை பாய்தல், விழி துயில் கூடாது இருத்தல், ஆகிய நிலைகளை உணர்ந்து, இவற்றை அடக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதனையும் உணர்ந்து, இத்துயரப்பாடுகளை திருவொற்றியூர் சேயோனாகிய முருகனுக்கு உரைக்க மாட்டாயா?

29-வது பாடல் வெண்பா.
’சிறந்த பொருள் ஒற்றிச் செவ்வேள் இவரை
மறந்து இங்கு உயிர் வாழ மாட்டோம் – பறந்து ஓடித்
திண்தோள் தழுவுவம் இன்றேல் செழுவரையைக்
கண்டு ஏறிக் கீழ் விழுவன் காண்.’

பாடல் எளிமையாகவே இருக்கிறது. உரையாசிரியர் உரையும் எளிமைதான். ஏழையேன் உயிர்க்குச் சிறந்த பொருள், திருவொற்றி நகரில் எழுந்தருளி நின்ற முருகப் பெருமானே.ஆவார். இப்பெருமானை மறந்து இவ்வுலகில் உயிர்வாழமாட்டோம்., விரைந்து சென்று அவரது வலிய தோளைத் தழுவுவோம், அங்ஙனம் அது கூடாதாயின், பெரிய மலையைக் கண்டு அதன் உச்சியில் ஏறிக் கீழே உருண்டு விழுந்து உயிர் துறப்போம்.

பெரும்பாலும் மேற்சொன்ன மும்மணிக்கோவை நூல்களில், அகத்துறை இலக்கியச் சாரம் உடையது அடிகளாரது நூலேயாகும்.

உங்களுக்குத் தோன்றலாம், கட்டளைக் கலித்துறைப் பாடல் எதையும் நான் மேற்கோள் காட்டவில்லை.என்று. பாடல்களின் நீளமே காரணம் எனத் தோன்றுகிறது.