கவிதையும், கருணையும் – தேவதேவனின் படைப்புலகம்

தமிழ்க் கவிதை உலகில், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இடையறாத உத்வேகத்துடனும், இயல்பான வெளிப்பாட்டுத் தன்மையுடனும் தொடர்ந்து இயங்கி வருபவர் தேவதேவன். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன், ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் விரிந்து கிடப்பது இவருடைய கவிதை உலகம். தமிழில் இவ்வளவு கூடுதல் எண்ணிக்கையில் எழுதியவர்கள் யாருமில்லை. படைப்புகளின் எண்ணிக்கை கூடும் போது அவற்றின் தன்மை நீர்த்துப் போகும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் ஏராளமாக எழுதிக் குவித்த போதும் மலினமடைந்துவிடாத ஒரு தரமும், தன்மையும் தேவதேவனின் படைப்புகளில் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழில் புதுக்கவிதை தோன்றியபோது, அதற்கான உருவத்தை மட்டுமின்றி உள்ளடக்கத்தையும் கூட மேற்கிலிருந்தே பெற்றுக் கொண்டது. இரு உலகப்போர்களுக்குப் பிறகான மனவெறுமையும், கையறுநிலையும், அவநம்பிக்கையுமே மேற்கத்திய கவிதைகளின் பிரதான தொனியாக வெளிப்பட்டது இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிறகான, இலட்சியவாதக் கனவுகளின் வீழ்ச்சி இங்குள்ள படித்த மத்தியதர வர்க்கத்தினருக்கு அதேமாதிரியான அவநம்பிக்கையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே தமிழ்ப் புதுக்கவிதையும், ஐரோப்பியக்கவிதைகளை முன்மாதிரியாகக் கொண்டு அதன் வடிவத்தையும், பாடுபொருளையும் பெரிய மாற்றம் ஏதுமின்றி சுவீகரித்து கொண்டது. அதனால் துவக்கம் முதலாகவே தமிழ்ப்புதுக்கவிதை என்பது பெரிதும் நவீனத்துவ படைப்புகளாகவே அமைந்துவிட்டன. தனிமனிதன் தன்னை மையமாகக் கொண்டு உலகை மதிப்பிடும்போது உண்டாகும் ஏமாற்றம், அவநம்பிக்கை, உளவியல் நெருக்கடி அதனால் ஏற்படும் துக்கம் மற்றும் இழப்புணர்வு போன்றவை நவீனத்துவ ஆக்கங்களின் சில பொதுப் பண்புகள். இன்றளவும் தமிழ்ப்புதுக் கவிதைகளில் இப்பண்புகளை பேரளவு காணலாம் ஆனால் தேவதேவனின் கவிதைகள் இத்தன்மைகளினின்றும் வெகுவாக மாறுபட்டவை.

24cm_devadevan_jpg_1309063g

[தேவதேவன்]

இப்பிரபஞ்சத்திலுள்ள கோடிக் கணக்கான உயிரிகளின் தொகுதியுள் தன்னையும் ஒரு உறுப்பாகக் கருதி, இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்தல் என்ற நமது கீழைத்தேய சிந்தனை மரபின் தொடர்ச்சியாக அமைபவை தேவதேவனின் கவிதைகள். ஒருவன் இயற்கையுடன் கொள்ளும் விதவிதமான தொடர்புகளும், அத்தருணங்களின் தீரா வியப்பும், அவற்றினூடாக மனம் கொள்ளும் விரிவும், அடையும் ஆனந்தமும், பெறும் அமைதியுமே தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தப்படுகிறது.

இவருடைய கவிதைகளின் ஊற்று முகத்தை “கருணை மிக்க பேரியற்கையின் முன் வியந்து நிற்கும் குழந்தமை” என்று ஒற்றை வரியில் சுருக்கிக் கூறிவிடலாம். இவருடைய கவிதைகளில் காணப்படும் காட்சி சித்தரிப்பு, படிமத்தன்மை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் அவற்றில் சங்கக் கவிதைகளில் காணப்படுவது போன்ற இயற்கை நவிற்சித் தன்மையும், வெளிப்பாட்டு மொழி என்று பார்த்தால் பக்தி இலக்கியங்களில் தென்படுவது போன்ற உணர்வு நெகிழ்ச்சியையும் ஒருசேரக் காணலாம். இந்நெகிழ்வையும் கருணையையும் சாந்தத்தையும் பிறிதொரு நவீனகவிஞனிடம் நாம் மிக அரிதாகவே காணவியலும்.

‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுககிவ் உலகியியற்றியான்’

என்ற வள்ளுவனின் அறச்சீற்றம்

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’

என்ற கணியன் பூங்குன்றனின் அகவிரிவு

‘வாடின பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேன்’

என்ற வள்ளலாரின் வருத்தம்

‘வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரிகின்ற விலங்கெல்லாம் நான்’

என்ற பாரதியின் ஒருமை உணர்வு, இவற்றின் தொடர்ச்சியாக வைத்துப்பார்க்கத் தக்கவை தேவதேவனின் பல கவிதைகள். உதாரணமாக “விரும்பியதெல்லாம்” தொகுப்பிலுள்ள பின்வரும் கவிதையை சுட்டலாம்.

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதிகொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக் கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும், மழலைகளின்
கொண்டாட்டமுமாய்
என்வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துகிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெய்யிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி
நடமாடவும் விரும்பினேன்
இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்.

மனிதப் பிறவியை ஒரு பேறாகவும், மனித வாழ்வை மிக நேர்மறையாகவும் காண்பவை தேவதேவனின் கவிதைகள். மனிதனின் நடத்தையிலுள்ள கீழ்மையை, விலங்குத் தன்மையை, புலனின்ப வேட்கையை அதற்கான அவனுடைய ஆழ்மன விருப்பங்களைப் பற்றிய கருமையான சித்திரங்கள் எதையுமே இவருடைய கவிதைகளில் நாம் காணவியலாது. மனிதன் அவனது இச்சைகளால் அலைகழிக்கப்படும் பிராணி மட்டுமன்று. அசாதாரணமான தருணங்களில் அவ்விச்சைகளையும் மீறி அவனை மேலெழச் செய்யும் ஆன்மாவும் கொண்டவனே மனிதன் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவராக தென்படுகிறார் தேவதேவன்.

அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள், சமூக உறவுகள் முதலியவற்றில் நாம் எதிர்கொள்ள நேரிடுகிற முரண்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றிற்கும் கூட மனிதர்களின் அகவறுமையை காரணம் எனக் காண்கிறார். அவருடைய முதல்தொகுப்பான “குளித்து கரையேறாத கோபியர்களில்” உள்ளது பின்வரும் சிறு கவிதை.

“காடு
தன் இதயச்
சுனையருகே தாகித்து நின்றான்
காடெல்லாம் அலைந்தும்
காணாத மான்கூட்டம்
காண.”

நாம் விரும்பி வேண்டிய ஒன்று, வெளியே இவ்வுலகம் முழுவதும் தேடி ஏமாந்தது, கடைசியில் நமக்குள்ளேயே இருப்பதை நம்மில் பலரும் உணருவதேயில்லை என்பதுதான் சோகம். “கிறுக்குப் பிடித்து திரிந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் மருந்துக்கும் காணக்கிடைக்காதிருக்கிறது அன்பு” எனத் தனது பிற்கால கவிதை ஒன்றில் எழுதுகின்ற தேவதேவனின் கவிதைகளில் திரும்பின பக்கமெல்லாம் தென்படுவது பரிவும், கருணையும், பிரியமும்தான்.

இதயம் கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும், அழகையும் கொண்டு
நான் யாதொரு பிரமாண்ட சிலையையும்
வடிக்க வேண்டாம்
வெளிப்படும் தூசு மாசு உண்டாக்க வேண்டாம்.
————————————-

அந்த சிலையின் கண்களின்றும்
நீர் வடிய வேண்டாம்
தற்கொலைக்கு வேண்டிய தனிமையற்று
அந்த சிலை தவிக்கவும் வேண்டாம்
அந்த சிலையை எவ்வாறு அழிப்பது எனத்
திணறவும் வேண்டாம்.
இதயம் கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும் அழகையும் கொண்டு
இப் பேரண்டத்தை நேசிக்கப் போகிறேன்
ஒரு சிறுகளிமண்ணையும் உருட்டாது.

“நட்சத்திர மீன்” தொகுப்பிலுள்ள இக்கவிதை தானென்ற நினைப்போடு கூடிய அன்பினால் உருவாக வாய்ப்புள்ள கேடுகளை பட்டியலிடுகிறது. தன்னை மீதமின்றி முழுமையாகக் கரைத்துக் கொண்டுவிடும்போதே எதிர் விளைவுகள் ஏதுமற்ற கருணை சாத்தியம் என்பதை உணர்த்துகிறது இந்தக் கவிதை.

தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்ப ஒரு படிமமாகவும், குறியீடாகவும், உருவகமாகவும் இடம் பெறுவது மரம். மரத்தை குறித்து எத்தனை முறைகள், எத்தனை விதமாக எழுதியும் தீரவில்லை இவருக்கு.

“மரம் அழைக்கிறது
மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்
தோழர்களாகிறார்கள்”

“ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாக நிற்க வைத்துவிட்டுப் போவேன்”

“மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்”

“எங்கே எங்கே என
எத்திசையும் கைநீட்டி ஏமாந்த மரத்தின்
மார்பிலேயே பூத்திருந்தது கனி”

“திடீரிட்ட
இன்பத்தின் காதற் கோலமோ என
பளீரிடும் மலர்க் கொத்துகளேந்தி நிற்கும்
பன்னீர் மரம்”.

“இருண்ட இம் மரக்கிளைகளில்
கருணையின் கார்மேகச் செழுமை”.

“எக்காலத்தும் எத்திசையும்
எல்லோரை நோக்கியும்
நீண்ட நீண்ட கைகளேயான
ஒரு பெருமரப் பிரமாண்டம்
அந்தப் பூங்காவில்”.

“கனவுகள் தோறும் புகுந்து
என்னைத் துரத்தியது
மரம் வெட்டப்பட்ட இடத்திலிருந்து
என் அறையை தாக்கிய வெய்யில்”.

இவருடைய கவிதைகளில் தொடர்ந்து இடம் பெறும் இந்த மரம், வெறும் பௌதீக இருப்பான மரத்தை மட்டும் சுட்டவில்லை. மாறாக நமது சிந்தனை மரபில் உருவகித்துச் சொல்லப்படும் பெருங்கருணை என்னும் காலாதீதமான பண்பின் குறியீடாகவே அது நிற்கிறது எனலாம்.

தனது வாழ்வில் தான் எதிர்கொண்ட சாரமான தருணங்களையெல்லாம் தன் படைப்பாக மாற்றியிருக்கும் தேவதேவனின் எழுத்தும், வாழ்வும் முரண்கள் ஏதுமற்று அகத்திலும், புறத்திலும் ஒன்றேயானது. அவருடைய பிற்கால கவிதைகளில் ஒன்று

நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நீங்கள் அவற்றை
நேரடியாக அறுவடைசெய்யமுடியாது.

வயலில் நிற்கும் நெற்கதிர்கள் நாம் நேரடியாக அறுவடை செய்யமுடியும். அது நம் வயிற்றுக்கு உணவுமாகும். ஆனால் நீரில் தெரியும் நெற்கதிர்களை நேரடியாக அறுவடை செய்ய முடியாது. அதற்கு நம் புலன்கள் விழிப்புநிலையை அடையவேண்டும்; தவிர மனமும் முதிர வேண்டும். சொர்க்கத்தின் விளைச்சலான அக்கதிர்கள் நம் ஆன்மாவிற்கான உணவாகும். எந்த அசலான ஒரு கலை இலக்கிய படைப்பினின்றும் நாம் பெறும் சாரமான அனுபவம் என்பது தேவதேவன் சுட்டும் நீரில் தெரியும் நெற்கதிர் போன்றதுதான்.

தமிழ்ப் புதுக்கவிதையின் மையப்போக்காக அமைந்துவிட்டிருக்கும் நவீனத்துவ ஆக்கங்களின் அழகியல் மதிப்பீடுகளுக்கு பழகிவிட்டிருக்கும் இளம் வாசகர்களுக்கு தேவதேவனின் கவிதைகள் காலத்தால் சற்று பழமையான ஒன்றாகக் தோன்றக்கூடும். அதற்கு அவருடைய கவிதைகளின் கட்டமைப்பும், மொழியுமே காரணம். அவருடைய “மார்கழி” தொகுப்பிலுள்ளது பின்வரும் கவிதை.

இறையியல்
எவ்விடமும் கோயில்களேயானதால்
கோயில் என்று தனியான தொன்று இல்லை.
யாவும் தொழுகைக்குரிய விக்ரகங்களேயானதால்
விக்ரகம் என்று தனியானதொன்று இல்லை
காணும் பொழுது
காணும் இடத்து
நெஞ்சுருகக்
கண் பனிக்கக்
கைதொழலாகாதா?

devadeaகாண்பனவற்றிலெல்லாம் நெஞ்சுருகத் தொடங்கும் இந்த நெகிழ்வான மனநிலையும், நாளாந்த வாழ்வில், நாம் பார்த்துக் கடக்கும் சாதாரண நிகழ்வொன்றிலிருந்து கூட அசாதாரணமான தரிசனமொன்றை அடைய எத்தனிக்கும் அவருடைய பார்வைக் கோணமும், பலசமயங்களில் அவரது மனவெழுச்சிக்குத் தக புனைவுற்று புதுக்கோலம் காட்ட முயலாத அவருடைய கவிமொழியும், கூடி அவருடைய கவிதைகளுக்கு பழகியதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் கவிதையின் இந்த மேல் தோற்றத்தை பெரிதாக பொருட்படுத்தமாட்டான். ஏனெனில் கவிதை வாசிப்பில் ஒரு பிரதியின் அடிப்படையான புரிதல் என்பதே அதன் பரிச்சயமழிப்பு என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. அவ்வகையில் கவிதையை ஒரு ஆழமான கலாச்சார பிரதியாகவும், வாழ்வை அர்த்தப்படுத்தும் சின்னஞ்சிறு தருணங்களின் சொற்தொகுப்பாகவும், மரபின் சாரமான தொடர்ச்சியாகவும், மனிதனின் ஆன்மவல்லமையை கோடிட்டுக் காட்டக் கூடிய மொழி செயற்பாடகவும் காணக்கூடிய வாசகர்களுக்கு தேவதேவன் கவிதைகள் நல்குவது அசாதாரணமானதொரு அகவிரிவை எனலாம். அவருடைய மற்றுமொரு கவிதை. அதன் தலைப்புமே கவிதைதான்.

கவிதை
நீர் நடுவே
தன்னை அழித்துக் கொண்டு
சுட்டும் விரல்போல் நிற்கும்
ஒரு பட்டமரம்
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.

நிலத்தின் நடுவே கிளை, இலைகளோடு செழித்திருக்கும் மரத்தினை நாடி பறவைகள் வருவது இயல்பானது. உணவும், நிழலும், இடமும் கிடைக்கும். ஆனால் நீரில் பட்டுப் போய் நிற்கும் மரத்தில் ஒரு புள் ஏதோ புரிதலில் வந்தமர்கிறது. அப்புரிந்துணர்வு எதுவாக இருப்பினும் உணவு, நிழல், இடம் என்பது போல் லௌகீகமானது அல்ல. லௌகீகத்திற்கு அப்பாற்பட்டது அதனாலேயே அது பொன் முத்தம். மொழி நடுவே தன்னை அழித்துக் கொண்டு எதையோ சுட்டுவது போல் பட்ட மரமென நிற்கிறது பிரதி. அதில் வாசகப் புரிந்துணர்வின் பொன்முத்தமாய் வந்து அமர்கிறது ஒரு மனம்.

(தேவதேவன் புகைப்படம் நன்றி: தி ஹிந்து)

3 Replies to “கவிதையும், கருணையும் – தேவதேவனின் படைப்புலகம்”

Comments are closed.