பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா – இரு காந்தியர்கள்

சி. சு. செல்லப்பா குறித்து சொல்வனத்தில் தொடரும் கட்டுரைகளில் இந்த இதழில் அவரது மனதுக்கு மிகவும் நெருக்கமான, பி.எஸ்.ராமையாவுக்கும், செல்லப்பாவுக்கும் இருந்த நட்பு, இணக்கம், செல்லப்பா வெளிக்கொண்டுவந்த ராமையா குறித்த திறனாய்வுப் புத்தகம் குறித்துப் பேசுகிறது இக்கட்டுரை.

பி.எஸ்.ராமையாவை சி.சு.செல்லப்பா எவ்வளவு உயர்வாகப் போற்றினார் என்பது உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட “வாசக பர்வம்” என்ற நூலில் எஸ். ராமகிருஷ்ணன் சொற்களில் கொஞ்சமும் உணர்ச்சி மிகையோ குறைவோ இல்லாமல் வெளிப்படுகின்றன:

scan0011-001செல்லப்பாவை மதுரையில் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்கவேயில்லை. வீடு தேடிச் சென்றதும் அதே உற்சாகம் குறையாமல் உள்ளே அழைத்து பாயில் உட்காரச் சொன்னார். வீட்டில் சாமான்கள் அதிகமில்லை. ஒரு பெரிய காகிதப்பெட்டி நிறைய புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் நிரம்பியிருந்தன. கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஈர வேஷ்டியும் துண்டுமே அவரது சொத்தாக மிஞ்சியிருந்தது.

ஆனால் இலக்கியம் பற்றிப் பேசத் துவங்கியதும் அவர் குரலில் அதே ஆவேசம். கண்களில் ஒளிரும் வேகம். புதிய விமர்சன முறைகளை விவரிக்கும் கறார்தன்மை. உலக இலக்கியத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும் தடையற்ற பிரவாகம். யாவும் கடந்து சகமனிதன் மீது கொள்ளும் நெருக்கமான அன்பும் அக்கறையும் அவரிடமிருந்தன.

ரங்கராஜனும் அவரும் விருது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். விருது வாங்கிக் கொள்வதில் தனக்கு உள்ள தயக்கத்தை வெளிப் படையாகப் பகிர்ந்து கொண்டபடியே தனக்கான பரிசுத்தொகையில் ஒரு புத்தகம் வெளியிட முடியுமா என்று கேட்டார்.

அவர் விருப்பபடியே செய்துவிடலாம் என்றதும் அவசர அவரசமாகத் தனது காகிதப் பெட்டிக்குள் இருந்த கையெழுத்துப் பிரதிகளைத் தேடி வெளியே எடுத்தார். ஒன்று பி.எஸ்.ராமையாவைப் பற்றியது. மற்றொன்று நவீனத் தமிழ் விமர்சனத்தின் வரலாறு பற்றியது என்று பத்துப் பதினைந்து கையெழுத்துப் பிரதிகள்.

அழகாக எழுதி, எண் இடப்பட்டு வெளியாவதற்காகப் பல வருடமாகக் காத்துக்கிடக்கின்ற பிரதிகள். உங்களுடைய சிறுகதைகளை வெளியிடலாம் என்று ரங்கராஜன் சொன்னதும் முதல்ல பி.எஸ்.ராமையா வரட்டும் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைப் பத்திய விபரங்கள் முதல்ல தெரியட்டும் என்று ராமையாவின் சிறுகதைகளைப் பற்றிய விரிவான கட்டுரைத் தொகுதியை முன்னால் எடுத்துக் காட்டினார்.”

சுமந்து சென்ற எழுத்து


எழுத்து – வெளி வெளியீடாக 1998ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட “ராமையாவின் சிறுகதைப் பாணி” நூலின் முன்னுரையில் சி.சு.செல்லப்பா இவ்வாறு எழுதுகிறார்:

தமிழ் இலக்கிய துறையில் சிறுகதை துறையை ஆரம்பித்து வைத்தவர் வ.வே.சு. அய்யர். இந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் (1900-1925) சிறுகதை துறையை ஒரு இயக்கமாக உருவாக்கியவர் பி.எஸ். ராமையா. இந்த நூற்றாண்டின் முப்பதுக்களில் (1930-35) இரண்டாம் பகுதியில் இயக்கமாகப் பரப்பியவர் பி.எஸ். ராமையா. வ.ரா.வின் வார மணிக்கொடிக்குப் பின் சிறுகதைக்கு என்றே அந்தப் பத்திரிக்கையை சாதனமாக ஆக்கி, தானும் எழுதி அதில் பல புதிய கதாசிரியர்களை எழுதவைத்து, சிறுகதை வளம் பெருக மூலகாரணமாக இருந்தவர். அந்த மணிக்கொடிக்காரர்களில் ஒருவனான நான், அவரது மொத்த முன்னூறு சிறுகதைகளை ஆய்வு விமர்சனம் செய்து, அவர் கதை எழுதும் பாணியை, தனி விசேஷத் தன்மையை விவரமாக ஆராய்ந்து இருக்கிறேன். ‘கரடுமுரடான பாதையில்’ என்று இந்த நூலில் எழுதியிருக்கும் அறிமுகக் கட்டுரையில் விவரமாக அவரைப் பற்றி எழுதி இருப்பதால் இங்கே எதுவும் மேலே எழுதவில்லை. தற்கால தமிழ் புதுக்கவிதைக்கு ந. பிச்சமூர்த்தியும் சிறுகதைக்கு ராமையாவும் முதல்வர்கள். உலக தற்கால புதுக்கவிதை, கதை இரண்டிலும் இந்த இருவரும் உலக அந்தஸ்துக்கு உரியவர்கள் என்பது என் விமர்சனப் பார்வையில் கணிப்பு”.


இன்று பி.எஸ். ராமையாவைப் பற்றி பேசுவோர் யாருமில்லை. 1998ல் ‘ராமையாவின் சிறுகதைப் பாணி” என்ற தலைப்பில் ஏறத்தாழ அவரது முன்னூறு சிறுகதைகளையும் ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து 368 பக்க புத்தகமாக சி.சு. செல்லப்பா பதிப்பித்த காலத்திலேயே ராமையா மறக்கப்பட்டு விட்டிருந்தார் – ‘ராமையா ஒரு நல்ல சிறுகதையைக்கூட எழுதியதில்லை’ என்ற க.நா. சுப்ரமணியத்தின் நிராகரிப்பை (பக்கம் 46) இந்தப் புத்தகத்தில் மீண்டும் மீண்டும் ஏற்கமறுக்கும் சி.சு. செல்லப்பா, தான் மேதை என்று மதித்த ஒரு மனிதருக்கு உரிய இடத்தை நிறுவும் முயற்சியில் தன்னாலான அர்ப்பணிப்பாக இந்தப் பணியை செய்திருக்கிறார்:

நான் படித்து ரசித்த ஒரு தமிழ் சிறுகதை மேதையின் சாதனையை நான் ரசித்த அளவுக்கு அதை எழுத்தில் பொரித்து வைத்துவிட்டுப் போக வேண்டும் என்ற ஒரு ரசிக, விமர்சன கடமையை செய்துவிட்டுப் போகும் ஒரு உணர்ச்சியுடன்தான் இந்த நூலை எழுதுகிறேன்.

ராமையா கதைகள் அடுத்த நூற்றாண்டு சிறுகதை இலக்கிய வாசகர்களுக்கு கிடைக்கக்கூடுமோ என்னவோ? நமது பழைய கால கவிதைகள் பல ஏட்டுச் சுவடிகள் கரையானுக்கு இரையாகிப் போயிருப்பது போல, இதுக்கும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எனக்கும். ஏதோ நடக்கட்டும். ஆனாலும் சில உரை ஆசிரியர்கள் உரைகளில், குறிப்புரைகளில் அந்த மறைந்த சுவடிகளின் பிரஸ்தாபம் இருப்பது போல, இந்த என் நூலாவது தகவல் அறிவிப்பதாக சிறு அளவு பயன்படலாம். இல்லை, இந்த நூலும் அப்படியே மறைந்துவிடவும் கூடும். தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு என்னை இப்படி பேச வைக்கிறது… ‘பலன் என்று எண்ணாமல் உழைக்கச் சொன்னார்’ என்று வேறு ஒருவித அர்த்தத்தில் கூறப்பட்ட பொன்மொழியை ‘பலன் என்றாவது ஏற்படும் என்று எண்ணி உழைக்கவேண்டும்’ என்று வேறு ஒருவித அர்த்தத்தில் கூறப்பட்ட பொன்மொழியை, ‘ஆப்டிமிஸ்டிக்’ நம்பிக்கை மனப்பாங்குடன், இந்த நூலை எழுதி, என் கடமையை செய்துவிட்ட திருப்தி போதும் எனக்குள்.” (பக்கம் 5,6)


பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளின் இலக்கியத்தரம் இன்று கேள்விக்குரிய ஒன்றாகக்கூட இல்லாத நிலையில், அவரது கதைகளைப் பற்றிய திறனாய்வுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒன்று, சி.சு.செல்லப்பாவின் கணிப்பு சரியானது என்று காலத்தால் மெய்ப்பிக்கப்படக்கூடும், அல்லது, செல்லப்பா தான் சரியென்று நினைத்த விஷயத்தை நிறுவுவதில் எத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார் என்பதற்கான இலக்கிய ஆவணமாக இது அமையக் கூடும். வாசகர்களும் விமரிசகர்களும் காலமும் மட்டுமல்ல, ராமையாவாலும்கூட கைவிடப்பட்ட கதைகள் இவை. அலட்சியப்படுத்தப்பட்டுக் கிடந்த இவற்றைத் திரட்டி, ஒருங்கமைத்து வகை பிரித்து விமரிசனம் செய்யத் தேவைப்படும் ஊக்கமும் உழைப்பும் பிரமாதமானவை:

எழுபதுகள் மத்தியில் சென்னையில் ராமையாவுடன் அவரது சிறுகதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ‘ராமையா, உன் கதைகளை இப்போது மொத்தமாகப் படிக்க விரும்புகிறேன்,” என்றேன். உடனே, ‘சரி, எடுத்துக் கொண்டு போ,’ என்று எழுந்து உயரே இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்து கீழே வைத்து, ‘இதுக்குள் எல்லாம் இருக்கு’ என்று சொன்னார். பெட்டிக்குள் பார்த்தேன். ஒழுங்காக அடுக்கி கட்டுகளாக இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக மானாங்காணியாக ஒன்றிரண்டு பைண்டு வால்யூம்களாகவும் மற்றவை உதிரிகளாகவும் சிதறி இருந்தன. ‘தினமணி கதிர்’ மட்டும் வால்யூம்கள். ‘ஆனந்த விகடன்’ கதைகள் அத்தனையும் உதிரிகள். அதோடு தன் கதைகள் பட்டியலாக அரைகுறையாக எழுதி வைத்திருந்ததையும் கொடுத்தார். ‘நீ என்ன வேணுமோ பண்ணிக் கொள்,’ என்று ஒரே வாக்கியத்தில் முடித்துவிட்டார். அவற்றை அசிரத்தையாக வைத்திருந்தவிதம் வியப்பாக இருந்தது. அவற்றை எடுத்துக் கொண்டு வந்து எல்லாம் சரிப்படுத்தி ஒழுங்குபடுத்த எனக்கு ஒரு மாதம் ஆகியது. கதைகள் பின் போடாமல் உதிரி பக்கங்களாக இருந்தன. எந்த கதைக்கு எந்த பக்கம் என்பதைக்கூட நிதானிக்கக் கஷ்டப்பட்டு கதைகளைப் படித்து தொடர்ச்சி பக்கங்கள் தேடிச் சேர்த்தேன். தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் இப்படித்தானே அந்த காலத்தில் குப்பையாகக் கிடந்த ஏடுகள் சேர்த்திருக்க வேண்டும் என்று யோசித்தேன். இன்னொரு விஷயம் இந்த குவியலும் ராமையா சேர்த்து வைத்தது அல்ல. ராமையாவின் தம்பி ‘கிட்டப்பா’ என்ற பி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, அவனும் கதை எழுதுபவன். பழைய புத்தகங்கள் வியாபாரம் செய்பவன். எப்படியெல்லாமோ தேடி சேர்த்துக் கொடுத்தது. அவன் செய்திருக்காவிட்டால் ராமையாவிடம் ஏதோ சிலதான் இருந்திருக்கக்கூடும். எனக்கு வியப்பாக இருந்தது ராமையா மனம். ராமையா ஒரு ‘டோன்ட்கெயர் மாஸ்டர்’தான். ஆனாலும் இதிலும் கூடவா? அது மட்டுமல்ல, தன் கதைகளை அத்தனையும் அவர் காலத்திலேயே புத்தகமாக வர முயற்சி செய்யவில்லையே. ஒரு சிலதான் அவர்களே கேட்டு வெளிவந்தது. அவரது மொத்த கதைகளில் ஐந்தில் ஒரு பங்குதான் புத்தகமானது.

அவைகூட இன்று அச்சில் இல்லை.

ஒரு மாட்டுக்கு கதைகளை சேர்த்து சிரமப்படுத்தி வரிசைப்படுத்தி, எழுதிய பத்திரிக்கைகள், கதைகள், வெளிவந்த ஆண்டுகள், இத்யாதிகள், அவர் கொடுத்திருந்த தகவல்கள், எனக்கு தெரிந்த தகவல்கள் என்று சேர்த்து கிட்டத்தட்ட முன்னூறு கதைகள் சேர்ந்தன. அவற்றை படித்து ஒவ்வொன்றுக்கும் உள்ளடக்க விஷய ரகம் பிரித்தேன். இரண்டாம் தடவை முழுக்க படித்து ஒவ்வொரு கதையின் கதையம்சம், உருவம், உத்தி, மதிப்பு இவற்றை குறிப்பு எடுத்து, கதைகள் இனம் பிரித்தேன். சில மாதங்கள் பிடித்தது. இந்த சமயம் என் சென்னை வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. என் உடல்நிலை கொஞ்சம் பாதித்தது. மனநிலையும் கூடத்தான். என்னை பாதித்த இரண்டு சம்பவங்கள். நான் நாற்பது ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய பிச்சமூர்த்தி 1976 இறுதியில் காலமானது அதிர்ச்சியாக இருந்தது. அப்போது நான் புத்தக விற்பனை சுற்றுப்பயணத்தில் இருந்தேன். பிறகுதான் வந்தேன். கடைசி நாட்களில் அவர் அருகில் இல்லை. அதே சமயம் சிதம்பர சுப்ரமண்யனும் கடும் வியாதியுற்று இருந்தார். அவரும் 1977 ஆரம்பத்திலேயே காலமாகிவிட்டார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் சேர்ந்தது. அவர்களை இழந்ததில் நான் தனியனாகி விட்டதாக உணர்ந்தேன். வியாதியும் துக்கமும் சேர சென்னை எனக்கு வெறுமையாகபட்டது. என் கடைசி நாட்களை என் கிராமத்தில் கழிக்க (1978) வத்தலகுண்டுக்கு போய் விட்டேன். அங்கே போய் ‘எழுத்துகளம்’ நூல் எழுதினேன். அதை அடுத்து ‘என் எதிர்வாதம்’ என்ற நூலை எழுதினேன். ராமையா கதைகளை மீண்டும் ஒவ்வொரு கதையாகப் படித்து, ‘ராமையா கதை பாணி’யை மூன்றாவது நூலாக எழுத ஆரம்பித்தேன்.

அதுக்கு முன் நடுவில் ஒரு தடவை சென்னைக்கு போயிருந்தபோது ராமையாவை பார்க்கப் போனபோது அவர் வீட்டில் இல்லை. அவரது மகள் இருந்தாள். ராமையா டாக்டர் வீட்டுக்குப் போயிருப்பதாகவும் தொண்டையில் ஏதோ உபத்திரவம் இருப்பதாகவும் சொன்னாள். எனக்கு திடுக்கிட்டது. நான் மறுநாள் போன் செய்து கேட்டபோது ஒன்றுமில்லை, சரியாப் போய்விடும் கவலைப்படாதே என்று அடித்துச் சொல்லிவிட்டார். அன்றே நான் ஊர் திரும்பிவிட்டேன். எனக்கு உள்ளூர கவலை. இருபத்தி நான்கு மணி நேரமும் வெற்றிலை பாக்கு புகையிலைக்காரரே அவர். அப்போது ராமையாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தன் கதைகளை புஸ்தகமாகப் போட விரும்புவதாகவும், அப்போது தனக்குக் கிடைத்திருந்த சாகித்ய அகாடமி பரிசுத்தொகையை (ஐயாயிரம்) கொண்டு பேப்பர் வாங்கிக் கொடுத்து ஒரு பிரசாரகரத்தரை போடச் சொல்லி ஏற்பாடு செய்ய உத்தேசம் என்றும் எனவே, ஐம்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து உடனே அனுப்பும்படியும் எழுதி இருந்தார்.

என் நூலை எழுதுவதை நிறுத்திவிட்டு மறுபடியும் ஆரம்பத்திலிருந்து கதைகளைப் பார்த்து, ஏ, பி, ஸி என்று பிரித்து ஐம்பது ஏ இன கதைகளை தேர்ந்து பட்டியல் இரண்டு வாரத்துக்குள் அனுப்பி வைத்தேன். அதை பார்த்துவிட்டு ராமையா எழுதினார், ‘நான் சோற்றுக்கு எழுதின கதைகளைக்கூட தேர்ந்தெடுத்திருக்கிறாயே.சரி, என் விருப்பத்தைச் சொல்கிறேன். குங்குமப்பொட்டு குமாரசாமி துப்பறியும் கதைகளை விட்டுவிட்டாயே. அதைச் சேர்க்க விரும்புகிறேன். உன் விருப்பத்தைத் தெரிவி,’ என்று எழுதினார். நான் என் பட்டியலைத் திருத்தி அந்த ஏழெட்டு கதைகளை சேர்த்துவிட்டு, முந்தினத்தில் உள்ள ஏழெட்டு கதைகளை எடுத்துவிட்டு மறுபட்டியல் அனுப்பி கூடவே எழுதிய கடிதத்தில் ‘ராமையா, படைப்பாளியின் விருப்பம்தான் முக்கியம். அப்படியே செய்திருக்கிறேன்’ என்று எழுதியிருந்தேன். பிறகு என் நூலைத் தொடர்ந்தேன். ஒரு மாசம் அல்லது கூட இருக்கும். ஒரு நாள் ராமையாவிடமிருந்து வந்த கடிதத்தில் தனக்கு புஸ்தகம் போடுவதில் ஆர்வம் குறைகிறது என்று கூறி நான் திடுக்கிடும்படியாக (பயந்தது போலவே) தனக்கு தொண்டையில் ‘கான்ஸர்’ என்று டாக்டர் அபிப்பிராயப்படுவ்தாகவும் தொண்டை வழியாக ஆகாரம் சாப்பிட முடியாமல் குழாய் மூலம் சாப்பிடுவதாகவும் தனக்கு அது ஒரு அனுபவமாக இருப்பதாகவும் என்னை கவலைப்படாதிருக்கும்படியும் எழுதியிருந்தார். தன்னை இலக்கிய நண்பர்கள் வந்து பார்க்கவில்லை என்றும் கேன்ஸர் தொற்றிக்கொள்ளுமோ என்று பயப்படுகிறார்களோ என்னமோ என்று எழுதியிருந்தார்.

நான் உடனே போயிருக்க வேண்டும். ஆனால் ஒரு வாரத்தில் போக வேண்டி இருந்ததால் ஒரு கடிதம் எழுதினேன். அதில் என் கவலையைத் தெரிவித்துவிட்டு, ‘ராமையா, உன் கதைகளில் மூழ்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். வேத வியாசரின் பாரதக் கதைகள் போல எத்தனை விதமான சிக்கல் கதைகள் எழுதியிருக்கிறாய். இன்னும் சில தினங்களில் நான் இதுவரை எழுதி இருப்பதை உனக்குக் காட்ட வருகிறேன்,’ என்று எழுதி இருந்தேன். ராமையா வீட்டுக்கு அருகில் இருந்த சிட்டி சுந்தரராஜனுக்கு கடிதம் எழுதி ராமையாவின் உடல்நிலையை பார்த்து எனக்கு உடனே எழுதும்படியும் எழுதி இருந்தேன். கடிதம் எழுதிய இரண்டாம் நாள் காலை வாசல் கட்டிலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். என் மகன் வெளியே போய் விட்டு திரும்பியவன், ‘அப்பா ராமையா மாமா போய் விட்டாராம். வழியில் ரேடியோவில் சொன்னான்’ என்றான். என் மனக்கோட்டை இடிந்தது. அதன்பின் சிட்டியிடமிருந்து கடிதம் வந்தது விவரமாக. எனக்கு கடிதம் எழுதியபின் வீட்டுக்குள் நடந்து போகும்போது விழுந்து இருக்கிறார். நான் பிறகு சென்னைக்கு துக்கத்துக்குப் போன போது அவர் மகள் சொன்னாள், ‘மாமா, அப்பா உங்கள் கடிதத்தைப் பார்க்கவில்லை. அவரை தகனம் செய்துவிட்டு வீடு திரும்பினபோது உங்கள் கடிதம் வந்தது’ என்று கதறிச் சொன்னாள். விடம்பனத்தை (ஐரனி) தன் சிறுகதைகளில் ஒரு சித்தாந்தமாகக் கொண்டு கற்பனை படைத்தவர் அவர். இந்த நடப்பு அதுக்கு உதாரணமாக அமைந்திருந்தது.

பிறகு நூலை இரண்டு பாகங்களாக எழுதி முடித்துவிட்டேன். சென்னை வெறுமையாக பட்டு வத்தலகுண்டு போனது போலவே ஆறு ஆண்டுகள் அங்கே இருந்தவன் அங்கும் வெறுமையை உணர்ந்து சென்னைக்கு திரும்பவும் வந்து சேர்ந்தேன். ‘மனது சொர்க்கத்தை நரகம் ஆக்கும், நரகத்தையும் சொர்க்கம் ஆக்கும்’ என்ற மில்டன் வாக்கு சரிதான். ஆனால், என் மனசுக்கு அந்த சக்தி இல்லை. சென்னை வந்து கொஞ்ச காலம் ஆனதும், ராமையாவின் கடைசி மகன் வந்து ராமையா கதைப் பிரதிகளை கேட்டு வாங்கிச் சென்றான். ‘நீ என்னவும் செய்து கொள் என்று ராமையா கூறி ஏழெட்டு ஆண்டுகள் என் வசம் இருந்த அவர் கதைகளைப் பிரிய மனம் இல்லைதான். ஆனால், சொத்து அவர்களுடையதுதான். திருப்பிக் கொடுத்தபோது சொல்லிக் கொடுத்தேன், ‘அப்பா, தாறுமாறாக இருந்ததை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன். இவை பொக்கிஷம். ஜாக்ரதையாகக் காப்பாற்றி வைத்து இவற்றை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். என்னாலான உதவியை செய்கிறேன். இவை கரையானுக்கோ பூச்சிகோ இரையாகி அழிந்துவிடக்கூடாது. ராமையா மறக்கப்படச் செய்துவிடாதீர்கள்,’ என்று சொல்லிக் கொடுத்தேன். ராமையா மறைந்து பத்து ஆண்டு காலம் ஆகிவிட்டது. அவை என்ன நிலையில் இருக்கிறதோ, என்ன ஆச்சோ, இன்றுவரை வெளித் தெரியவில்லை. இந்த நிலைமை சொல்லத்தான் இவ்வளவு எழுதியிருக்கிறேன்.

ஆனால் எனக்கு ஒரு திருப்தி. ராமையா கதைகள் ஒரு நீண்ட காலம் என்னிடம் இருக்காமல் இருந்திருந்தால் இந்த நூலை நான் எழுதும் வாய்ப்பே இருந்திருக்கிறது. ராமையா என்ற சிறுகதையாளர் என்ன எழுதியிருக்கிறார் என்பதாவது எதிர்காலத்துக்கும் தெரிய வாய்ப்பிறாது. அவ்வளவு மனவேதனையில் ஒரு சிறு அளவு திருப்தி எனக்கு” (பக்கம் 40-42)

bs_ramaiah


ராமையாவுடன் இருந்த நட்பையும் அவர் மீதிருந்த மதிப்பையும் தாண்டி தன் விமரிசன அளவுகோள்களின் அடிப்படையிலேயே செல்லப்பா அவரை உலகத் தரத்துக்கு எழுதிய சிறுகதையாசிரியர் என்று கூறுகிறார். ரசனை விமரிசனத்தைப் போல் கோட்பாட்டு விமரிசனமும், எத்தனைதான் தர்க்கத்தின் இரும்பு ஆணிகளால் தகர்க்க முடியாத கோட்டையாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், காலாவதியாகிவிடுகிறது என்பதையே இந்த நூலை வாசிக்கும்போது உணர்கிறோம். எந்தக் கோட்பாட்டை ஒட்டி இத்தகைய விமரிசனங்கள் செய்யப்படுகின்றனவோ, அந்தக் கோட்பாடு விமரிசிக்கும் புறவெளிச் சூழல்கள் மாற்றம் காணும்போது, அவை தம ஆதர்ச படைப்புகளை முன்வைத்து வெளிப்படுத்தும் அகவெளி தரிசனங்களும் வேறொரு சூழலின் வெளிச்சத்தில் மங்கி மறைந்து போகின்றன. பின்னொரு காலம் அவை வெளிச்சத்துக்கு வரலாமோ என்னவோ, எது எப்படியிருந்தாலும், ராமையாவின் சிறுகதைகளை செல்லப்பா கொண்டாடியதற்கான இலக்கியம் அல்லாத விழுமிய மதிப்பீட்டு அளவுகோல்கள் நாம் கருதத்தக்கவை:

“நூலை முடிக்குமுன் சில வார்த்தைகள். என் கணிப்பில் ராமையா உலகச் சிறுகதை துறையில் இடம் பெறக்கூடியவர், ஆண்டன் செகாவ், மாப்பஸான், ஓஹென்ரி, கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்ட், டி.எச். லாரன்ஸ், ஃபிராங்க் ஓ’கானர், ஹென்ரி ஜேம்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, எச். ஈ. பேட்ஸ் ஆகியோர் அடங்கிய முன்வரிசை சிறுகதையாளர்களில் ஒருவர் என்பது என் துணிபு. இவர்களிடம் தனித்தனியாகக் காணும் பல அம்சங்களையும் ராமையாவின் கதைகளில் ஒருங்கே காணலாம். அந்த அளவுக்கு அவரது முன்னூறு கதைகளில் ‘நானாவிதம்’ (வெரைடி) காணலாம். மனித சுபாவம் பற்றிய அதிகபட்ச குணாம்சங்களையும் நிறைகுறைகளின் சித்தரிப்பையும் காணலாம். மரபுக்கும் தற்காலத்துக்கும் உறவு ஏற்படுத்தியவர். பழமைக்கும் புதுமைக்கும் பொருத்தம் காட்டியவர். சென்ற கால நிகழ்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகளுக்கும் ஒற்றுமை வேற்றுமை உணர்த்தியவர். மண்ணிலே விண்ணைக் காட்டலாம் என்று பாரதி கவிதையில் கூறியபடி கதையிலே மனிதனிலே தெய்வத்துவத்தை படம் பிடித்தவர். ‘உடோபியா’ என்ற ராமராஜ்ஜியத்தை எட்டமுடியாவிட்டாலும் அதிகபட்ச லட்சியத்தை மனிதன் கடைப்பிடித்து அரிச்சந்திர ராஜ்யத்தை எட்ட முடியும் என்று கதைகளில் காட்டியவர். ஒருவேளை அதுவும் எட்ட முடியாவிட்டாலும் காந்தி ராஜ்யத்தை எட்ட முடியும் என்ற நடப்பு சாத்ய லட்சியத்தில் நம்பிக்கை வைத்தவர். அவரது கருத்துக்கள் சிலதை தருகிறேன்:

(1) ஹிரண்ய சக்தியை அழித்து மாற்ற’ புரட்சி செய்த பிரஹ்லாதனைப் போல ஒருவன் தோன்ற வேண்டும். அவனுக்கு உதவ ஒரு நரசிம்ம அவதாரம் வேண்டும். இந்த நாட்டு ஜீவசக்தி அடித்தளத்தில் கொப்புளம் விட்டுக் கொண்டிருக்கிறது. அதுக்கு நிவாரணம் கொடுத்துவிடும் என்ற நம்பிக்கை.

(2) காந்தி போட்ட வித்து முளைவிட்டு செடியாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த தியாக வெப்பம் தணிந்து விட்டதே என்று நீங்களும் நானும் அங்கலாய்த்து சிந்திக்கிறோமே, அதுவே ஒரு அறிகுறிதான். இப்படி எத்தனை பேர் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு சிந்தனையும் உணர்ச்சியும் பெருகி நிச்சயமாக பலன் அளித்தே தீரும். காந்தியை போன்ற ஒரு ஜீவசக்தி, ஆத்ம சக்தி ஐம்பது வருஷம் கொட்டிய உழைப்பு பலன் அளிக்காமல் போய் விட்டதென்றால் மனித குலத்தின் வரலாறே கட்டுக்கதை, கற்பனை என்று ஆகிவிடும்.

(3) முடிவாக சொல்கிறார், ‘வாழ்க்கையில் துன்பம், துயரம், இன்பம் இருக்கிறது. அதே போல தீமை, புன்மை, கயமை ஆகிய தன்மைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் அழகு இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அழகு இருப்பதாக, அல்லது அழகாக இருப்பதாக எழுதிவிட முடியும் – திறமை உள்ள ஒரு எழுத்தாளனானால். ஆனால் தீமையும் புன்மையும் கயமையும் எவ்வளவு அழகுபடுத்தப்பட்டாலும் இலக்கிய சரக்கு ஆகாது.

அப்போதைக்கு அது ;மயக்கத்தை எழுப்பலாம். நிலைத்து நீடித்து நிற்காது. அசிங்கத்தை அழகுபடுத்திக் காட்டுவது அரிய திறமைதான். ஆனால் அறிவாளிகள் அதை மதிப்பதில்லை’. இவற்றைக் கூறியவர், ‘மணிக்கொடி காலத்தில் கதைகள் எழுதியவர்கள் மனித உணர்ச்சியை ஆன்மீகத்திலிருந்து பிரித்ததே கிடையாது,’என்று கூறிவிட்டு இலக்கியத்தன்மை என்பதை விளக்குகிறார்:

‘இலக்கியத்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட எழுத்தை, அது கதையோ, கவிதையோ, நாவலோ, கட்டுரையோ நாம் படிக்கும்போது, அதில் உள்ள சொல் சேர்க்கைகள் நம் மனதில் எழுப்பும் அதைப்பு உணர்ச்சிதான். இதை ஒரே சொல்லால் தொட்டுக் காட்ட முடியாது. மனத்தளவில் உள்ள எடை அல்லது கருத்துதான் என்று நினைக்கிறேன். எந்த எழுத்துப் படைப்புக்கும் இலக்கியத்தன்மைதான் முக்கியம். அதுதான் நீடித்து தலைமுறை தலைமுறையாக மாறி வரும் சக்தி உள்ளது. இந்த இலக்கியத்தன்மையை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தி எழுத்தில் பயன்படுத்த வேண்டும்’.

ராமையாவின் வாழ்க்கை கொள்கை, படைப்பு கொள்கை, சிறுகதை ரசனை கொள்கை ஆகிய அடிப்படைக் கருத்துகளை நாம் தேவையான அளவுக்கு இவற்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம். ராமையா ஒரு ‘ரியலிஸ்டிக் ஐடியலிஸ்ட்’, அதாவது காரியார்த்த லட்சியவாதி. நடைமுறை வாழ்க்கைக்கு இசைந்த, சாத்யமாகிய லட்சிய பார்வை கொண்டவர். மானிட நம்பிக்கைவாதி. ‘சினிக்’ மானிட மானிடவேஷ அழாமூஞ்சி அல்ல. ராமையா கதைகள் நீதியை நேரடியாக, அப்பட்டமாக போதிப்பவை அல்ல. ஆனால் தொனிப்பு அடிநாதமாக ஒலிக்கும். ராமையா தன் கதைகளில் இக்கட்டான நிலையை ஒரு புதிர்கேள்வி எழுப்பிவிட்டு வாசக மனம் தானே அதுக்கு பதில் சொல்லிக் கொள்ள விட்டு விடுகிறார். ஆனால் அவரது கேள்வியிலேயே அவரது கருத்துச் சார்பு நிழல் வீசுவதை உணரலாம்.

முடிவாக… பாரதி ‘மகாகவி’ என்றால் ராமையா ‘மகாகதைஞன்’. அவரைப் போன்ற மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை

…முடிந்தது…”


ஒரு மனிதன் எவ்வளவு தவறாக இருக்க முடியும்? செல்லப்பா ஒரு காந்தியர் என்ற அடிப்படையில்தான் நாம் அவரது வாழ்வையும் எழுத்தையும், அவரது விமரிசனத்தையும் அதன் தேர்வுகளையும் துணிபுகளையும் அணுக வேண்டும். அதை மறந்து செல்லப்பாவைப் பேசும்போது எதுவும் சரியாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பில்லை. ஒரு பேச்சுக்கு, காந்தி ஒரு தமிழ் இலக்கியவாதியாக இருந்திருந்தால் எப்படி வாழ்ந்திருப்பார், என்ன செய்திருப்பார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் நமக்கு செல்லப்பாவில் காந்தியின் சாயல் தென்படலாம். தர்மாவேசமும் கடுமையான தியாகமும் முரட்டுத்தனமான பிடிவாதமும் செல்லப்பாவுக்கு மட்டும் உரியதல்ல. காந்தி வெற்றி பெற்றார், தேசப்பிதாவாகக் கொண்டாடப்படுகிறார். செல்லப்பா தோற்றதால் பாரதிக்கு அடுத்தபடியான பைத்தியக்கார தேசபக்தராக, தன் குடும்பத்தைப் புறக்கணித்த மூர்க்க இலக்கிய வெறியராக நம் மனதில் உருவாகிக் கொண்டிருக்கிறார். ‘ஒரு காந்தியவாதிக்கு தியாகம் சுபாவமானது” (பக்கம் 317) என்று எழுதும் செல்லப்பா, ‘சுதந்திரம் வந்ததிலிருந்து இந்திய மனநிலை தேய்ந்து சுருங்கிக் கொண்டே வந்து, இன்று அவனவன் தன் தனக்கு என்ற மனோநிலை மேலோங்கி வருகிறது,” என்று சக காந்தியரான ராமையா சொல்வதாகப் பதிவு செய்கிறார் (பக்கம் 345). இதற்கு உடன்பட மறுத்ததில்தான், ஒரு மனிதனாகவும், இலக்கியவாதியாகவும், சி.சு. செல்லப்பாவின் மேன்மை இருக்கிறது.

இந்த நூல் முழுதும் ஆங்கில இலக்கியம் பேசப்படுவதால், இங்கே W.B. Yeatsக்கு அஞ்சலியாக W.H. Auden எழுதிய ஒரு கவிதையை மேற்கோள் காட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். செல்லப்பாவைப் போலவே தன் தேசத்தால் காயப்பட்டவன் அவன் – “Mad Ireland hurt you into poetry” என்று எழுதுகிறார் Auden, ‘In Memory of W.B. Yeats” என்ற கவிதையில்’.

“Intellectual disgrace
Stares from every human face,
And the seas of pity lie
Locked and frozen in each eye,”

என்று எழுதிவிட்டு,

“In the deserts of the heart
Let the healing fountain start,
In the prison of his day,
Teach the free man how to praise.”


என்று முடிக்கிறார். சுதந்திர இந்தியாவில் மறக்கப்பட்டு வரும் காந்தியர்களில் ஒருவரான செல்லப்பாவுக்கும் இதைதான் நாம் கோர முடியும்.