திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. பல்வேறு பணிகள், பயணங்களுக்கிடையிலும் இத்தொடரை எழுதிய நாஞ்சில் நாடனுக்கு எங்கள் நன்றிகள். இத்தலைப்பில் அவர் தன் புத்தக அறிமுகங்களைத் தொடர்வதாகக் கூறியிருப்பது வாசகர்களுக்கும், எங்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.
பிள்ளைத்தமிழ் பொதுவாக ஆணானாலும் பெண்ணானாலும் பத்து பருவங்கள் எனும்போது ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 13 பருவங்களைக் கொண்டுள்ளது.
ஏழு பருவத்துப் பெண்கள் எனும்போது வயது வரம்பை இருவேறு பகுப்பில் பிரிக்கிறார்கள்
பேதைப் பருவம் 5 வயது முதல் 7 வயது வரை
பெதும்பைப் பருவம் 8 வயது முதல் 11 வயது வரை
மங்கைப் பருவம் 12 வயது முதல் 13 வயது வரை
மடந்தைப் பருவம் 14 வயது முதல் 19 வயது வரை
அரிவைப் பருவம் 20 வயது முதல் 25 வயது வரை
தெரிவைப் பருவம் 26 வயது முதல் 32 வயது வரை
பேரிளம்பெண் 33 வயது முதல் 40 வயது வரை
என்று.
இன்னொருவர் சொல்கிறார்
பேதை 10 வயதுக்குக் கீழ்
பெதும்பை 10 வயது முதல் 15 வயது வரை
மங்கை 15 வயது முதல் 20 வயது வரை
மடந்தை 20 வயது முதல் 25 வயது வரை
அரிவை 25 வயது முதல் 30 வயது வரை
தெரிவை 30 வயது முதல் 40 வயது வரை
பேரிளம்பெண் 40 வயதுக்கு மேல்
என்று.
வீரமாமுனிவர் குறிப்பிடும் பிரபந்தங்கள் 96 எனும் பட்டியலில் உள்ள பெயர்களில் பலரும் மாறுபடுகிறார்கள்.
அவரது பட்டியலில் வெண்பா என்பனவாகிய நளவெண்பா, கந்தர் கலி வெண்பா போன்ற நூல்கள் அடங்குமா? கீர்த்தனை என்பனவாகிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, ராம சரித கீர்த்தனை அடங்குமா, மணவாள மாமுனிகள் யாத்த நவரத்னமாலை, தாண்டவராய சுவாமிகளின் கைவல்ய நவநீதம் எவ்வகையில் அடங்கும் என்றெல்லாம் தெளித்துக் கூற எனக்குப் புலமை இல்லை, உள்ளொளியும் இல்லை. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைப்பதும் அறியேன்.
திரும்பத் திரும்ப நான் இதைக் கூறி வருவதன் காரணம், தமிழ் எனும் கடல் முன்னால் காலில் அலையடிக்க நிற்கும் சிறுவனாக உணர்வதால்தான்.
கம்பராமாயணம் என்னும் இராமாவதாரத்தில் பாயிரச் செய்யுள்களில் நான்காவது பாடலாகக் கம்பன் கூறுவான்.
’ஓசை பெற்று உயர் பார்கடல் உற்று ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன், மற்று, இக்
-காசில் கொற்றத்து இராமன் கதை அரோ’
என்று.
ஓசை பெற்று உயர்கின்ற பாற்கடலை அடைந்த ஒரு பூனை, முழுவதையும் நக்கிக் குடித்து விடுவேன் என்று புகுந்தாற் போல, குற்றமற்ற இராமன் கதையை ஆசை பற்றிக் கூறத் தொடங்கினேன் என்பது பொருள்.
கல்வியில் சிறந்த கம்பனுக்கே அம்பாடு எனில் நமக்கு எம்பாடு?
எல்லாவற்றையும்தான், கூடுமானவரைக்கும், கறையான் அரித்ததும் போகிக்கு எரித்ததும் போக எஞ்சியவற்றை சேகரித்து வைத்துள்ளோம். என்றாலும், நெல்லும் சாவியும் பிரித்து அறியப்படும். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்தில் ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ என்று தொடங்கும் ஒற்றைப் பாடல் போதும் அவரது தமிழ் ஆளுமை அறிய வேறு நற்சான்று வேண்டாம். அதுபோலவே சாவிகளையும் நம்மால் பிரித்து அறிய இயலும்.
பிள்ளைத் தமிழ் நூல்களிலேயே சிறந்தது என்கிறார்கள் மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழை. குமரகுருபரர், தமிழின் ஒப்பற்ற புலவர்களில் ஒருவர். ஒரு இலக்கியத்தின் பெயர்மட்டுமே தெரியும், அதற்கு மேல் ஒன்றும் அறிகிலோம் எனும் நிலை கடந்து தமிழன் வெளிவரவேண்டும் மற்றொன்றையும் நாம் அறிதல் அவசியம். அது மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாள் பிள்ளைத்தமிழ் அல்ல. மதுரை மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ், சமயம் என்று எண்ணித் தமிழைப் புறக்கணிக்கலாகாது. சில சமயங்களில் தமிழை சமயம் ஆட்சி செய்கிறது. பல நேரங்களில் தமிழ் சமயத்தை ஆட்சி செய்கிறது. குளத்திடம் கோவித்துக் கொண்டு எவரேனும் குண்டி கழுவாமல் போவதுண்டா?
நமக்குத் தமிழ்தான் சமயம். தமிழுக்குள் சைவம் உண்டு, வைணவம் உண்டு, சமணம் உண்டு, பௌத்தம் உண்டு, கிருஸ்துவம் உண்டு, இஸ்லாமியம் உண்டு.
குமரகுருபரரின் மீனாட்சி பிள்ளைத்தமிழில் இருந்து ஒரு பாடலைப் பார்ப்போம்.
தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே, நறை பழுத்த
துறைத் தீம் தமிழின் ஒழுகு நறும்
சுவையே, அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே, வளர் சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே, எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே, மதுகரம் வாய்
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே, வருகவே!
மலய துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!!
இது நான்கு கழில் நெடில் அடிகளைக் கொண்ட பன்னிருசீர்ப் பாடல்தான். தொடுக்கும் , எடுக்கும், உடுக்கும், மடுக்கும் என்பன ஒவ்வொரு அடியிலும் முகப்பாய் அமைந்த நான்கு எதுகைகள்.
சினிமாவில் இசைக்குப் பாட்டு எழுதுபவர்கள் கூட சொல்லுக்கும் உவமைக்கும் பாவத்துக்கும் தொல்லிலக்கியம் கற்கிறார்கள். ஆனால் நவீன இலக்கியவாதிகளும், நவகவிகளும், வாசகரும் டாஸ்மாக் கடை வாசலில் நடமாடும் அளவுக்குக் கூட, தொல்லிலக்கியப் பரப்பில் மேம்போக்காகக் கூட மேய்வதில்லை என்பது நம் வருத்தம்.
வகைக்குச் சிலவாய் தூது, உலா, அந்தாதி, பரணி, குறவஞ்சி, பள்ளு, சதகம், கலம்பகம், கோவை என நம்மிடம் அற்புதமான நூல்கள் உண்டு. ஆவணக் காப்பகங்களிலும், நூலகங்களிலும், தொல்லியல் துறைகளிலும் தங்கரியம் செய்யவேண்டிய நூற்றுக்கணக்கான பிற நூல்களும் உண்டு. வரலாற்று ஆய்வாளருக்கும் இலக்கிய ஆய்வாளருக்கும் கல்வியாளருக்கும் அவை நிச்சயம் பயன்படும், இலக்கிய வாசகனுக்குப் பயன்தராவிட்டாலும் கூட.
இவற்றுள் பல நூல்களைப் புரட்டிப் பார்க்கும்போது இவை எவராலும் எதிர்காலத்தில் வாசிக்கப் பெறுமா என்ற கேள்வி எதிர் நின்று திகைப்பூட்டுகிறது. அந்த நூல்களின் கவிச்சிறப்பின்மையே அதற்குக் காரணம்.
ஞானபீடப் பரிசே பெற்றிருந்தாலும், அகிலன் நாவல்களை வாசிக்கும் அவசியம் என்ன வந்தது இன்று எனக்கு? மேலும் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல காலவகையினானே’, மணிகள் குறைந்து பதர் மிகுந்து போனதினால், சிற்றிலக்கியங்கள்பால் நமக்கு ஈடுபாடு குறைந்து போனதுவோ? கொண்டாடுவோர் இல்லாமற் போயினவோ? மட்டுமன்றி காலத்துக்குப் பொருத்தமும் உவப்பும் இல்லாத பெண் வருணனைகள். அழகுணர்ச்சி எனும் ஒற்றைக் கூற்றில் பொறுப்பு களைந்து புலவர்களால் விலகி ஓடிவிட இயலாது.
ஒருவன் தாசிவீட்டுக்குப்போய், பெருஞ்செல்வம் தொலைப்பான். பொருள் நோக்கி அவள் அவனைத் தன்னுள் மயக்கி முயக்கி காமபோதை ஊட்டி காமக் கரும்புனலாட்டி வைத்திருப்பாள். கலவி நுணுக்கங்கள் யாவும் பேசப்படும். அலங்காரம், அணிகலன்கள் பேசப்படும். வசிய வகைகள் விரித்துரைக்கப்படும். சகல செல்வமும் இழந்தபின் வறுமையும் நோவும் முதுமையும் தளர்வும் பெற்ற அவனைத் தாசி துரத்துவாள். திருந்தி, விறலியைத் தூதுவிட்டு, மனைவியை சமாதானப்படுத்தி, வீடு சேர்ந்து சௌக்கியமாக வாழ்வான். புதுமைப்பித்தன் சொல்வது போல ‘எப்போதும் முடிவிலே இன்பம்.”
புலவரின் நோக்கம் கொக்கோக சாஸ்த்திரத்தை விவரித்து, பல் விழுந்த, தலை நரைத்த, குறி தளர்ந்த ஜமீன்தார்களைக் குஷிப்படுத்துவது மட்டுமேதான். பொன் கிடைக்கும், பொருள் கிடைக்கும், நிலபுலன்கள் கிடைக்கும், கள் கிடைக்கும், காமப்பசியும் தீரும். . .
இதில் தமிழ் செய்த தவம் என்ன? தமிழுக்கும் புலமைக்கும் பெருமை என்றால் உரலை விழுங்கியது போல் உள்ளது. சமூகத்தில் நீலப்படங்களுக்கான தேவை இருக்கலாம். ஆனால் அவற்றைக் கலைப்படங்கள் என்று சாதிக்க இயலுமா? நீலப்படத்தில் பெண் படும் சித்திரவதையை கவனித்தால், அது கலையா பெண் கொலையா என்றறியலாம். அழகுணர்ச்சி, கலையுணர்ச்சி என்பதெல்லாம் ஒரு சம பாலினத்தை உடல்ரீதியாக, மனரீதியாகக் கேவலப்படுத்துவதல்ல.
சோழனோ, பாண்டியனோ, சேரனோ அல்லது சிவபெருமானோ இரதவீதிகளில் உலாப்போனால், முலை முற்றும் போந்திராத, முலை அப்போதுதான் போதருகின்ற, முலை உருப்பெற்றிருந்த, முலை பூரண வளர்ச்சி பெற்று விம்மிய, முலை சாய்ந்த, முலை தொங்கிய, முலை தோல் பாய்ந்த பெண்கள் அனைவரும் உலா வருபவன் மீது காமம் கிளர்ந்து எழும் மெய்ப்பாடு காட்டினார்கள் என்று பாடுகிறார்கள். காம உணர்ச்சி வாய்க்க வாய்ப்பே அற்ற சிறுமி முதல், மணமாகி பேரன் பேத்தி எடுத்த பேரிளம்பெண் வரை, தெருக்களின் இருவசத்தும் வாழ்ந்த பெண்கள் அனைவரும் மன்னனைக் கண்டால் மதனநீர் பெருக்கினார்கள் என்றால், அதுதான் அன்றைய சமூக ஒழுக்கமாக இருந்ததா?
மூவூர் உலா நூலின் இறுதியில், தமிழின் உலா நூல்கள் பற்றிய பட்டியல் ஒன்று தருகிறார் பதிப்பாசிரியர் பேராசிரியர் ம.வே.பசுபதி மற்றும் புலவர் ஞா.மேகலா ஆகியோர். மொத்தம் 81 உலா நூல்கள் காணப்படுகின்றன. இந்தத் தொடர் நூலாக்கம் பெறும்போது, இந்தப் பட்டியல், உலா பிரிவில் இணைக்கப் பெறும்.
எனது வியப்பு, பதிப்பிக்கப்பட்ட 81 உலா நூல்களில் ஒன்று மட்டுமே ‘காளி உலா’ என்று, பெண் உலா பற்றியது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வேறு பெண் பாலர் மீது உலாக்கள் இல்லை. இவை சங்கடமான சில கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகின்றன.
1. ஏன் அரசிகள், அரசிளங்குமரிகள் உலா வரவில்லை? உலா வந்திருந்தால் ஏழு பருவத்து ஆண்களும் அவர்களைப் பார்த்து உளக்கிளர்ச்சியும் உடற்கிளர்ச்சியும்பெற்று வெவ்வேறு பருவத்து விதவிதமான குறிகள் தடிக்க நெளிந்துகொண்டு நின்றிருப்பார்கள் என்பதாலா? அரசனைப்பார்த்து ஏழ் பருவத்துப் பெண்களும் மதனநீர் பெருக்கினார்கள் எனில், அரசியைப் பார்த்து ஏழ்பருவத்து ஆண்களும் காமநீர் சொரிவார்கள் என்பதாலா?
2. காளி உலா தவிர்த்த மிச்சம் 80 உலாக்களிலும் முலைகள் பற்றிய 80*7=560 வகையான வர்ணனைகள்இருக்கின்றன.
3. உலாப் பாடியவர் அனைவரும் ஆண்பாற் புலவர்களா?
4. காமராசர் உலா பாடப்பெற்றிருக்கும்போது, தமிழ் மீது கடுங்காமம் கொண்ட திராவிடத்தலைவர் எவர் மீதும் ஏன் உலாப் பாடப் பெறவில்லை?
5. நாம் முன்பு குறிப்பிட்ட 25 பிள்ளைத் தமிழ் நூல்களில் பத்து பெண் தெய்வங்கள் மீது பாடப்பெற்றவை. பக்தி என்பதனால் இது சாத்தியமாயிற்றா? அல்லது பிள்ளைத் தமிழ் பாடும்போது காமத்துக்கான வெளியும் வாய்ப்பும் இல்லை என்பதினாலா?
6. நாஞ்சில் நாடன் உலா என ஒன்று இயற்றப்படவேண்டுமானால் உலாப்பாடும் புலமை உடையபுலவர் எவரும் இன்று உயிர் வாழ்ந்திருக்கிறார்களா? எனில் அதன் திட்டச்செலவு என்னவாகஇருக்கும்?
சிற்றிலக்கிய வகைகள் பலவற்றினுள்ளும் பக்தி பெரும் ஆட்சி செலுத்துகிறது. ஆனால் பக்தி எனும் காரணம் பற்றி, கற்பனை இல்லாத,மொழிவளம் இல்லாத, கவித்துவம் இல்லாத பல நூல்களைத் தாங்கித் திரிய இயலாது. பெரும்பாலானவை formula தயாரிப்புகள். அப்புலவர் யாவரும் யாப்பு தெரிந்தவர்தாம், எழுத்து எண்ணி பா யாத்தவர்தாம். இலக்கணம் அறிந்தவர்தாம். ஆற்றல் உடையவர்தாம். ஆனால் நூல் செத்த சவம் போலக் கிடக்கிறது.
பழையன என்பதற்காக தமிழன் எத்தனை காலம் இவற்றை சுமந்து திரிவது? மேலும் எந்தத் தமிழன் எதிர்காலத்தில் எல்லாச் சிற்றிலக்கியங்களையும் வாசிக்கப் போகிறான்? ’நாய் பெற்ற தெங்கின் பழம்.’ சிற்றிலக்கியங்கள் பலதையும் வாசிக்க நேர்கையில், குமரகுருபரர் மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்படுகிறது. இன்று சொற்பொழிவைத் தொழிலாகக் கொண்ட பலரும் – மன்னிக்க வேண்டும், இதை நான் இழிவுப்பொருளில் கையாளவில்லை – கம்பன் பேசுகிறார்கள், சிலம்பு பேசுகிறார்கள், சேக்கிழாரின் பெரியபுராணம் பேசுகிறார்கள், பாரதி பேசுகிறார்கள், ஆழ்ந்த சைவப் பற்றுடன் விரதம் இருந்து பாலும் பழங்களும் இளநீரும் மட்டுமே உண்டு கந்தபுராணம் பேசுகிறார்கள். ஆனால் எங்கும் குமரகுருபரர் கேட்டதாய் நினைவில்லை எனக்கு.
சமய இலக்கியமாகவே இருக்கட்டும், என்றாலும் குமரகுருபரரின் மொழி ஆளுமையைக் கவனியுங்கள்:
பெரும் தேன் இறைக்கும் நறைக் கூந்தல் பிடியே வருக!
முழு ஞானப் பெருக்கே வருக!
பிறை மௌலிப் பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் விருந்தே வருக!
மும்முதற்கும் வித்தே வருக!
வித்தின்றி விளைக்கும் பரம ஆனந்தத்தின் விளைவே வருக!
பழ மறையின் குருந்தே வருக!
அருள் பழுத்த கொம்பே வருக!
திருக் கடைக்கண் கொழித்த கருணைப் பெருவள்ளம் குடைவார்
பிறவிப் பெரும்பிணிக்கு ஓர் மருந்தே வருக!
பசுங்குதலை மழலைக் கிளியே வருகவே!
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக! வருகவே!
பாடலை, வரிசை குலையாமல், அடிபிறழ்ந்து கட்டுடைத்துக் தந்திருக்கிறேன்.
இந்தச் செல்வத்தை நாம் இழக்க ஒண்ணாது.
படைக்கப்பட்ட காலத்தின் பல செய்திகளைத் தருகின்றன சிற்றிலக்கியங்கள். விறலி விடு தூதுக்கள், காம நுணுக்கங்கள், வசிய மருந்துகள், ஒப்பனை விதங்கள், பட்டுச் சேலைகளின் பட்டியல், ஆபரணங்களின் பட்டியல் என விரிவாகத் தருகின்றன. என்றல் குறவஞ்சி நூல்களில் இருந்து 80 பறவைகளின் பெயர்கள் அறிந்து கொள்கிறொம்.
1. அகத்தாரா
2. அன்றில்
3. அன்னம்
4. ஆந்தை
5. ஆரா
6. ஆலா
7. ஆனைக்கால் உள்ளான்
8. இராசாளி
9. உள்ளகன்
10. கபிஞ்சலம்
11. கம்புள்
12. கருநாரை
13. கரும்புறா
14. கருவாலி
15. கவுதாரி
16. கருப்புக் கிளி
17. காட்டுக்கோழி
18. காடை
19. காணாக்கோழி
20. கிளிப்பிள்ளை
21. குயில்
22. குருகு
23. கூழைக்கடா
24. கேகை
25. கொக்கு
26. கொண்டைகுலாத்தி
27. கோரை
28. சக்கரவாகம்
29. சகோரன்
30. சம்பங்கோழி
31. சம்பரன்
32. சாதகம்
33. சாரா
34. சிகுனு
35. சிச்சிலி
36. சிட்டு
37. சிட்டுல்லி
38. செந்நாரை
39. செம்போத்து
40. சேவரியான்
41. தண்ணிப் புறா
42. தாரா
43. தீவகக் குருவி
44. தூக்கணம்
45. நத்தைகொத்தி நாரை
46. நாங்கண வாச்சி
47. நாகை
48. நீர்க் காக்கை
49. நீர்த் தாரா
50. பகண்டை
51. பச்சைப்புறா
52. பஞ்சவர்ணக்கிளி
53. பஞ்சிலை
54. பணி
55. பருந்து
56. பாரத்துவாசம்
57. பிருகு
58. மஞ்சணத்தி
59. மணித்தாரா
60. மயில்
61. மாட்டுக்குருகு
62. மாடப்புறா
63. மீன்கொத்தி
64. லாத்தி
65. வட்டத்தாரா
66. வட்டா
67. வரிக்குயில்
68. வரிசாளி
69. வல்லூறு
70. வலியான்
71. வாலாட்டிக் குருவி
72. வாலான்
73. வானம்பாடி
74. வெட்டுக்கிளி
75. வெண்கிளி
76. வெண்ணாரை
77. வெண்புறா
78. வெள்ளைப்புள்
79. வெள்ளைப்புறா
80. வேதாளி
இவற்றுள் சில தொன்மங்களுள் வாழும் பறவைகள். மேலும் சில, இன்று நாம் மாற்றுப் பெயர்களில் அடையாளம் காணலாம். பேராசிரியர் க. ரத்தினம் போன்றவர்களை அணுகினால் பல தகவல்களை அறியலாம்.
பறவைகள் போல், பள்ளு இலக்கியங்கள் மீன்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றன. எனது ‘பனுவல் போற்றுதும்’ தலைப்பிலுள்ள கட்டுரைத் தொகுப்பில் ‘ செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப’ எனும் கட்டுரையில் மீன்கள் பற்றிச் சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
சங்கப்பாடல்கள் 17 வகையான மீன்கள் பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றன. ஆனால் பள்ளு இலக்கியங்கள் ஏறத்தாழ நூறு மீன்களைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றுள் பெரும்பானமையும் நன்னீர் மீன்கள். ’மீன்கள் அன்றும் இன்றும்’ எனும் நூலில் முனைவர் ச. பரிமளா தரும் தகவல்களை எனது முன்குறிப்பிட்ட கட்டுரையில் தந்துள்ளேன்.
தமிழில் 50 வகைப்பட்ட பள்ளு நூல்கள் உண்டு.என்றும் அவற்றுள் 27 நூல்களே அச்சேறியுள்ளன என்று கூறும் அவர், பள்ளு இலக்கியம் கையாண்ட மீன்கள் பற்றித் தரும் தகவல்கள் சுவையானவை.
பள்ளுப் பாடல்கள் குறிப்பிடும் மீன்களின் எண்ணிக்கை:
தென்காசிப் பள்ளு – 26
பொய்கைப் பள்ளு – 10
பள்ளுப் பிரபந்தம் – 11
குருகூர்ப் பள்ளு – 22
கண்ணுடையம்மன் பள்ளு – 8
செண்பகராமன் பள்ளு – 1
திருவாரூர் பள்ளு – 20
முக்கூடற் பள்ளூ – 38
வையாபுரிப் பள்ளு – 34
திருமலை முருகன் பள்ளு – 34
சிவ சயிலப் பள்ளு – 38
தண்டிகைக் கனகராயன் பள்ளு – 37
கதிரை மலைப் பள்ளு – 36
பறாளை வினாயகர் பள்ளு – 68
கட்டி மகிபன் பள்ளு – 28
இந்த எண்ணிக்கையைக் கூட்டி 411 மீன்கள் வருகின்றனவே என்று கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இவற்றுள் திரும்பத் திரும்பப் பேசப்படும் மீன்கள் அதிகம் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!
இவற்றை எல்லாம் பேசும்போது, எந்தப் பயனும் அற்ற பிரபந்தங்களே அதிகம் என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை. பறவைகள், மீன்கள், தாவரங்கள், விலங்குகள் பற்றிய தகவல்கள் எவ்வளவு முக்கியமானவை!
பெருந்தெய்வ மரபிலும் சின்ன ஊர்களில் உறையும் இறைவர் பெயராலும் அமைந்த சிற்றிலக்கியங்கள் தரும் பல தகவல்களை நாம் புறக்கணித்து விடுவதற்கு இல்லை.
முறையாக தமிழ் கற்கவியலாத வெறும் வாசகன் என்னும் விதத்தில், 37 ஆண்டுகளாகத் தமிழ் படைப்பிலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவன் எனும் தகுதியில், முழுதும் ஆழ்ந்தும் தோய்ந்தும் வாசித்திராவிட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நுனிப்புல் மேய்ந்திருப்பதாலும், எனக்குப் புலப்படுவது – தமிழின் சிற்றிலக்கியங்கள் மணியும் பதருமாய் விரவிக் கிடக்கின்றன. பதர்கள் காலவெள்ளத்தில் மிதந்து போகும். மணிகள் என்றும் மொழிக்குள் நிலைத்து நிற்கும். அந்த மணிகளை நாம் கையொழிந்து விடலாகாது.
சிலசமயம் வெட்கமாகவும் இருக்கிறது. சில சிற்றிலக்கிய நூல்கள் பெயரன்றிப் பிறிதொன்றும் அறிந்திராததும் பல சிற்றிலக்கிய நூல்களின் பெயர்கூட அறிந்திராததும். எடுத்துக்காட்டுக்கு ‘தசாங்கம்’ என்றொரு இலக்கிய வகை. தசம் எனில் பத்து. தசரதன், தசமுகன் என்பார்கள் பத்து ரதங்களை ஓட்டும் அயோத்தி மன்னனையும், பத்துத் தலை இராவணனையும்.
தசாங்கம் எனில் பத்து அங்கங்கள், பத்து உறுப்புகள். பாட்டுடைத் தலைவனின் பத்து அங்கங்களைப் பாடுவது தசாங்கம். அந்த அங்கங்களாவன் – மலை, ஆறு, நாடு, ஊர், முரசு, குதிரை, யானை, மலை பெயர் கொடி. என்பன. பத்து நேரிசை வெண்பாக்களால், மேற்சொன்ன பத்து அங்கங்களும் அமையப் பாடினால் அந்த நூல் தசாங்கப் பத்து. இதுவும் ஒரு சிற்றிலக்கிய வகை. இதே பாங்கில் 100 நேரிசை வெண்பாக்களில் தசாங்கம் அமையப் பாடினால் அந்த இலக்கிய வகை – சின்னப் பூ. இதுவும் ஒரு சிற்றிலக்கிய வகை. இந்த இரு இலக்கியவகைகளில் மாதிரிக்குக்கூட நான் ஒன்றைப் பார்க்கவில்லை. இது என் இயலாமை அல்லது அலட்சியம்.
இந்தத் தொடரை நான் எழுதிவரும்போது பலர் எனக்குப் புத்தகங்கள் தேடித் தந்தனர். நான் போகும் இடமெல்லாம் வெளிச்சம் பாய்ச்சும் அண்ணா சௌந்தர் வல்லத்தரசு, சிலம்புச் செல்வர் ம.பொ.சி யின் மகன் வயிற்றுப் பேத்தி முனைவர் தி. பரமேஸ்வரி, நெல்லைத் தோழர் கிருஷி, மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நூலகத்தினர், அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கிய கள ஆய்வாளர், முனைவர், அறிஞர், அ.கா.பெருமாள், முனைவர், திறனாய்வாளர் வேதசகாய குமார் ஆகியோருக்கு என் நன்றி.
’சொல்வனம்’ இணைய இதழின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இன்றேல், இந்தத் தொடர் ‘பனுவல் போற்றுதும்’ சாத்தியப் பட்டிராது. கையெழுத்தில் இருந்த கட்டுரைகளைத் தட்டச்சு செய்த முகமறியா நண்பர்கள், தொடர்ந்து கட்டுரை கையில் கிடைத்தவுடன் வாசித்துக் கருத்துச் சொன்ன எனது நெருங்கிய நண்பர் வ.ஸ்ரீநிவாஸன், நான் எவ்வளவு தாமதித்தும், இடைவெளி விட்டும் அத்தியாயங்களை அனுப்பினாலும் முகம் சுளிக்காது இடமளித்த சேதுபதி அருணாசலம், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாஸ்டன் நகரில் இரண்டு நாட்கள் இந்தத் தொடர் பற்றி உரையாடிய ரவிஷங்கர் யாவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இத்தொடரை எழுத ஆரம்பித்த பின்னரே, குறிப்பிட்டிருக்க வேண்டிய பல நூல்களை என்னால் பார்க்க முடிந்தது. எடுத்துக்காட்டுக்கு, தூது இலக்கிய வகை பற்றிய கட்டுரை வெளியான பிறகே நான் ‘அழகர் கிள்ளை விடு தூது’, ‘தமிழ் விடு தூது’ ஆகிய நூல்களை வாசித்தேன். எனவே இந்தத் தொடரில் வெளியான கட்டுரைகள் அனைத்தையும் திருத்தியும் விரிவுபடுத்தியும் எழுதிய பிறகே நானிதை நூலாக்கம் செய்ய முடியும். அது அடுத்த வேலை.
‘பனுவல் போற்றுதும்’ தலைப்பில் வேறு வகையான கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதுவேன். படைப்பு இலக்கியமும் கை பற்றி இழுக்கின்றது. உங்கள் ஆதரவுடன் எல்லாம் சாத்தியமாகும். தமிழ் எமக்கு வாழ்நாளும் உடல்நலமும் வசதியும் தரும்!
மீண்டும் நன்றியும் வணக்கமும்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர்.- 641028
14.10.2012