சரக சம்ஹிதை

ஆற்றங்கரையோரம் பிரம்மாண்டமாக கிளைபரப்பி நிற்கும் ஆலமரத்தடியில் நீள்சடையும் வெண்தாடியும் புரள அமர்ந்திருந்தார் வெள்ளுடை தரித்த அந்த ரிஷி, கூடியிருக்கும் ஆறு சீடர்களும் விடைபெறும் நாளன்று. யுகம் யுகமாக பெருமௌனத்தில் ஆழ்ந்திருந்த கரும்பாறை உயிர்பெற்று உதிர்க்கும் முதல் சொல்லைப்போல் தன் அகத்தின் ஆழத்திலிருந்து வார்த்தையை துழாவி மௌனத்தை துளைத்தார் குருநாதர் ‘ விதைகள், நீங்கள் அறுவரும் ஆறு ஆலம் விதைகள், முளைத்தெழுந்து வனமாகுங்கள், களைத்தோருக்கு நிழல் தாருங்கள், அலைவோருக்கு அடைக்கலம் ஆகுங்கள்,’ .. தலைகுனிந்து விசும்பும் சீடர்களை நோக்கிச் சலனமின்றி பேசினார், ‘இதுவே உங்கள் இறுதி வேள்வி, நீங்கள் அனைவரும் எனக்குச் சமமெனினும் – வான்மழை சமமாக பொழிந்தாலும் நாழியின் ஆழம் பொருத்தே நீர் தங்கும், இது உங்களுக்கான சோதனை, உங்கள் ஆழத்தைக் கண்டுகொள்ள, உங்களை நீங்களே அறிந்துகொள்ள, பிணி நீக்கும் மருந்துவத்திற்குப் பயன்படாத பொருளொன்றை ஒரு யாமத்திற்குள் கொண்டு வாருங்கள். காரியம் சித்தியடையட்டும்’, கண்மூடி மென்முறுவலுடன் காத்திருந்தார் குரு.

கரும்பாறை ஒன்றை உருட்டிக்கொண்டு வந்தான் ஒருவன், வனமெங்கும் புதராக மண்டிக்கிடக்கும் களைசெடியை பிடுங்கிக்கொண்டு வெற்றி புன்னகையுடன் திரும்பினான் மற்றொருவன், மரமேறி நச்சுமிழும் பழம் பறித்துக்கொண்டு வந்தான் மற்றொருவன், கழுகுகள் உண்டழித்த அழுகிய சதைபிண்டத்திலிருந்து செந்நாய் மண்டையோட்டை கொணர்ந்தான் மற்றொருவன், ஆற்றுப்படுகையில் தொண்டையூதி கனைத்துக் கொண்டிருந்த உயிர் தவளைகளை கொண்டு வந்தான் மற்றொருவன், தத்தமது கண்டுபிடிப்புகளை எண்ணி புளங்காகித பெருமை அவர்கள் கண்களை நிறைத்தன. சரிந்து அலைந்து திரிந்து வியர்த்து வெறும் கையுடன் திரும்பினான் ஆறாமவன், ஏளனப் பார்வைகள் சூழ குருவின் முன் வந்து நின்றான். பார்வையில் குரு எழுப்பிய வினாவிற்கு வார்த்தைகளில் பதிலளிக்கிறான் சீடன், ‘குருவே, மன்னியுங்கள், மருந்திற்கு பயன்படாத எதையுமே என்னால் கண்டுகொள்ள முடியவில்லை, நான் கற்றுத் தேரவில்லை’ என்று குருவின் காலடியில் அழுது பிதற்றுகிறான். புன்னகையுடன், “நீ ஒருவனே பரீட்சையில் தேறியவன்” என்று ஆசீர்வதிக்கிறார் குரு.

பஞ்சமகா பூதங்களின் சேர்க்கையில் உருவானதே இந்த பிரபஞ்சம். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும். இந்த ஊனுடலும் பஞ்சமகாபூதத்தில் உருவானதே. இதில் சஞ்சரிக்கும் முக்குற்றங்களான வாத, பித்த, கபங்களும் பஞ்ச மகாபூதங்களால் ஆனதே. புறக் சலனங்கள் மனிதனுக்குள்ளும் சலனங்களை ஏற்படுத்துகின்றன. பிரபஞ்சப் பேரிருப்பில் மனிதனும் ஒரு கண்ணியாகிறான். சீர்குலைவுகள் நோயாகின்றன, சமநிலையே ஆரோக்கியம். ஆனால், முழுமையான சமநிலை என்று ஏதேனும் உண்டா? துல்லியமான சமநிலை என எதுவுமே இல்லை, சார்புத்தன்மைக் கொண்ட சமநிலைதான் சாத்தியம். தோஷங்களின் முரணியக்கத்தில் கைகூடும் சமநிலையே ஆரோக்கியம்.

மேற்சொன்ன இந்தக்கதை ஆத்ரேயரையும் அவருடைய ஆறு சீடர்களான, அக்னிவேஷர், பேளர், ஜதுகர்னர், பராசரர், ஹாரிதர், க்ஷாரபாணி பற்றியது என்று சொல்பவர்கள் உண்டு, அந்த சீடர் குழாமில் தலைசிறந்து தனித்து விளங்கிய ஒருவர்தான் ஆயுர்வேத மூல நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையை உருவாக்கிய சரகரின் ஆதி குருவான அக்னிவேஷர். அக்னிவேஷர் இயற்றிய மருத்துவ நூலை தொகுத்து உருவாக்கப்பட்டதே சரக சம்ஹிதை. சரகர் முடிக்காத பகுதிகளை த்ருடபலா பூரணம் செய்தார் என்று சம்ஹிதையின் சில அத்தியாயங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த அக்னிவேஷர், சரகர், த்ருடபலர் என மூவர் சரக சம்ஹிதையின் உருவாக்கத்தில் பங்களிப்பாற்றியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

சரகரின் காலகட்டம் சார்ந்து பல குழப்பங்கள் இன்றும் நீடிக்கிறது. ஆயுர்வேதத்தின் முப்பெரும் நூல்கள் என்று சரக சம்ஹிதை, சுசுருத சம்ஹிதை மற்றும் வாக்பட்டரின் அஷ்டாங்க ஹ்ருதயத்தை குறிப்பிடுவார்கள். இதில் அஷ்டாங்க ஹ்ருதயம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஓரளவிற்கு நிறுவப்பட்டுள்ளது, இன்று கிடைக்கும் சரக சம்ஹிதை சுசுருதரின் காலத்திற்கு பின்னர் திருடபலரால் தொகுக்கப்பட்டது கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டிற்குள் உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தது இந்நூல் என்று நம்பப்படுகிறது. சரகரின் சம்ஹிதையும், அதன் மூலமான அக்னிவேஷரின் சம்ஹிதையும் பௌத்த காலகட்டத்திற்கு முன்பானவையாக இருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் எட்டு பிரிவுகள் உண்டு, எனினும் இருபெரும் மரபுகளே இன்று உயிர்ப்புடன் நீடிக்கிறது. ஆத்ரேயர் வழிவந்தவர்கள்- அக்னிவேஷர், சரகர் உட்பட மருத்துவ நிபுணர்கள், தன்வந்தரி வழிவந்தவர்கள்- சுஸ்ருதர் போன்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள். அறுவை சிகிச்சையின் முன்னவர் என்று கொண்டாடப்படும் சுசுரதர் அளவிற்கு ஆயுர்வேத உலகத்திற்கு வெளியே சரகர் அத்தனை பிரபலமில்லைதான். ஆனால், ஒரு ஆயுர்வேத ஆர்வலனாக, இலக்கிய வாசகனாக சரகர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.

சரகர் கவிமனமும் உள்ளுணர்வும், தத்துவ நாட்டமும் கொண்ட ஆசான் அதன் காரணமாகவே சரகர் பிற ஆயுர்வேத ஆசான்களிடமிருந்து வேறுபடும் நுட்பமான தருணங்கள் பல உண்டு. சரகர் எனும் சொல் சர எனும் சம்ஸ்க்ருத வேர்சொல்லில் இருந்து உருவானது, சர என்றால் அலைந்து திரிந்தல் (சரியான சொல் நடமாட்டம், வழிதல் ) என பொருள் கொள்ளலாம், நாடெங்கும் தேசாந்திரியாக அலைந்து திரிந்ததால் அமைந்த காரணப்பெயர்தான் சரகர். ஆதிசேடன் மானுடர்களின் மனம், உடல், வாக்கு ஆகியவற்றின் தோஷங்களை நீக்க முறையே பதஞ்சலியாகவும், சரகராகவும், மகாபாஷ்யம் இயற்றிய பாணினியாகவும் பூவுலகில் அவதரித்தார் என்றொரு சுவாரசியமான தொன்மம் சொல்லப்படுவதுண்டு,

ida068

எட்டு பிரிவுகளில் 120 அத்தியாயங்களை உள்ளடக்கியது இந்த நூல். மருத்துவ நூல் என்று குறுக்கிவிட முடியாத அளவிற்கு தன்னளவில் விரிவானது, பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, கரு உருவாதல், மாதாமாதம் அது கொள்ளும் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்களை பற்றி, நோய்மையை பற்றி, நோய் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி, பிணி அண்டாதிருக்கும் வழிமுறைகளைப் பற்றி, மரண குறிகளை பற்றி, அன்றாட செயல்விதிகளை பற்றி, உணவு பழக்கங்களை பற்றி, உணவின் குணம் பற்றி, மண் பற்றி, இயற்கையைப் பற்றி, கால சுழற்சி பற்றி என வாழ்க்கையின் அனேக துறைகளைத் தொட்டு நீள்கிறது. இந்த எட்டு பிரிவுகளில் சிகிச்சை பிரிவு சரகரின் சிறப்பு என்று பிற்காலத்தில் வந்த பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நூலின் அமைப்பை மூன்று வகையாக பிரித்துக் கொள்ளலாம், சில இடங்களில் பல்வேறு தரப்பினர் இடையே நடக்கும் கூட்டு விவாதங்களின் சாராம்ச பதிவாகவும், பல இடங்களில் குரு சீட விவாத ,முறையாகவும், வேறு பல தருணங்களில் தட்டையான நேரடி விளக்கங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மறுஜென்மம், கருவில் முதலில் உருவாகும் அங்கம் எது என்ற கேள்வி, சுவைகளின் எண்ணிக்கை, புலன்களின் எண்ணிக்கை, வாதத்தின் தன்மை போன்றவற்றில் வெவ்வேறு தரப்பினரின் நம்பிக்கைகளை அவர்களின் குரலிலேயே பதிவு செய்து அதிலுள்ள தர்க்க பிழைகளைக் கொண்டு ஒன்று மற்றொன்றை இடைவெட்டும் வண்ணம் விவாதத்தை அமைக்கிறார் சரகர். குரு சிஷ்ய சம்வாதமுறையிலும் சுவாரசியங்களுக்கு குறைவில்லை, ஒரு விவாதத்தில் அக்னிவேஷர், அவருடைய குருவிடம் ‘இத்தனை சொல்கிறீர்கள், எனக்கு நம்பிக்கையில்லை, குருட்டுத்தனமாக மருந்து கொடுப்பவனுக்கும் சில நேரம் மருந்து வேலை செய்து சரியாகிவிடுகிறது, சரியாக கவனித்து திட்டமிட்டு மருந்துகொடுக்கும் மருத்துவனுக்கும் பல முறை தோல்வி ஏற்படுகிறது, மருந்து வேலை செய்வதும் செய்யாததும் அவனவன் அதிர்ஷ்டம்தான் போலும்’ என்று அங்கலாய்க்கிறார். எய்ட்ஸை விடுங்கள், ஒரு தொலைகாட்சி மருத்துவர் டவுன் சிண்ட்ரோமை குணப்படுத்துவோம் என்று விளம்பரம் செய்கிறார் – பீதியில் வியர்த்த அன்று நினைவுக்கு வந்த வரி இதுதான்.

ஆயுர்வேதம் உண்மையில் ஒரு வகையான கணிதம் என்று எனக்கு தோன்றுவதுண்டு. கணந்தோறும் மாறும் முக்குற்ற விகிதாசாரங்கள் கொண்ட சிக்கலான கணிதம். காலசுழலில் எத்தனையோ புதிய நோய்கள், அரிய நோய்கள். – நாள்தோறும் ஒரு புதிய நோயின் பெயரை நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அத்தனை நோய்களும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதே முக்கியமான கேள்வி. அப்படி இல்லையெனில் அவற்றை அணுகுவதும் குணப்படுத்துவதும் சாத்தியம்தானா?

சரக சம்ஹிதையில் சிகித்சா ஸ்தானத்தில் மொத்தம் முப்பது நோய்கள் முப்பது அத்தியாயங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஆங்காங்கு குறிப்பிடப்பட்டுள்ள நோய்களையும் சேர்த்தால் மேலும் ஒரு ஐம்பது தேறலாம். சுசுரதரின் சம்ஹிதையில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது, அவர் அறுவை சிகிச்சைக்குரிய நோய்களையும் இணைத்துக்கொள்கிறார். காத்திரமான ஆயுர்வேத நூல்கள், கடைசியாக வந்த பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த யோக ரத்னாகரா, வங்கசேனை சம்ஹிதை, பைசஜ்ய ரத்னாவளி போன்ற நூல்களில் விவாதிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை சில நூறுகளைத் தொடலாம். ஒட்டுமொத்தமாகவே ஆயுர்வேத நூல்களில் விவாதிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டாது என்றே எண்ணுகிறேன். காலப்போக்கில் நோய்களின் எண்ணிக்கை அதிகமாக குறிப்பிடப்படும்தோறும் மருத்துவ பயன்பாட்டிற்குச் சூட்டப்படும் மூலிகை தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் இருக்கிறது என்பது சுவாரசியமான முரண். (இன்று சுமார் ஐம்பது மூலிகைகள் மட்டுமே நவீன ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் பயன்படுத்தும் அளவிற்கு இயற்கை மருந்துகளின் பரப்பு சுருங்கிவிட்டது).

இந்தச் சூழலில், நோயறிதலை பற்றிய அடிப்படைகளை சரகர் வரையறுக்கிறார். இன்றைய காலகட்டத்தை ஆயுர்வேதம் எதிர்கொள்ள சரகர் திறந்து விடும் பாதை என்றே அதை சொல்லலாம். நோய்கள் பல்கிப் பெருகிகொண்டே இருக்கும், நோயறிதலில் அதன் பெயரை கண்டுபிடிப்பதும், புதிய நோய்களுக்கு பெயர்சூட்டுவதும் முக்கியமில்லை என்கிறார் சரகர். நோயின் உட்கூருகளையும், காரணங்களையும் அறிவதே சிகிச்சைக்கு முக்கியம். அதாவது ஒவ்வொரு நோயின் வரைபடத்தையும் வாத பித்த கபங்களைக் கொண்டு புரிந்துகொள்வது. புறவயமான அளவுகோல்களை (objective parameters) மட்டும் கொண்டு நோயைப் புரிந்துகொள்ளக் கூடாது, அகவயமான (subjective parameters) அளவுகோல்களையும் கருத்தில் கொண்டாக வேண்டும் என்கிறார் அவர். இவை இரண்டிற்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது ஆயுர்வேதம். நெடிதுயர்ந்து நிற்கும் மரத்தின் உயரத்தைக்கொண்டு அதன் வேரின் ஆழத்தை அறிய முற்படுவது போல், புலனுக்குச் சிக்கும் குறிகளைத் துவக்கமாகக் கொண்டு, துயரரின் புறத்தே புலப்படாத அகவயப்பட்ட நோய்க்குறிகளை, மருத்துவர் தன் கற்பனையையும் உள்ளுணர்வையும் கொண்டு நிரப்பி, தர்க்கத்தின் துணையுடன் நோயின் ஆழத்தைக் கணக்கிடுவதே ஆயுர்வேதத்தின் வழிமுறை எனலாம்.

ayurveda

மூலிகைகளை அடையாளம் காண பழங்குடி மக்கள் மற்றும் ஆடு மேய்ப்பவர்களின் உதவியும் அவசியம் என்கிறார் சரகர். ஒருவகையில் இந்த நூல்கள் எப்படி பழங்குடி மக்களின் அறிவுக் களஞ்சியத்திலிருந்து தொகுக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே இந்த வரி இருக்கிறது. தாவரவியல் களஞ்சியமாகவும் இந்த நூலை நாம் காணலாம். மருத்துவத்திற்கு எந்தெந்த தாவரங்களின் எந்தெந்த பாகங்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் சரகர். அதேபோல், உணவிற்கு பயன்படும் ஒவ்வொரு காய்கனி, தானியம், வெவ்வேறு ஜீவராசிகளின் மாமிசங்களின் குணாதிசயங்களையும் அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளையும் விரிவாகக் குறிப்பிடுகிறார். வெவ்வேறு வகையான தண்ணீர், உப்பு, பால், மூத்திரம் என பலவற்றையும் அட்டவணைப்படுத்தி அவைகளை உட்கொள்வதால் உடலில் வாத, பித்த கபங்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பிடுகிறார் அவர். ஆயுர்வேதம் சைவ உணவை ஆதரிக்கிறது என்று ஒரு சாரர் பிரச்சாரம் செய்வது வேடிக்கையான விஷயம்தான் – மருந்துகளிலும் உணவுகளிலும் வெவ்வேறு விதமான ஜீவராசிகளைப் பயன்படுத்துவதை பற்றி சரகர் உட்பட அனேக ஆசிரியர்கள் எந்த தடையுமின்றி பதிவு செய்துள்ளனர்.

பாதரசம், கந்தகம், அரிதாளம், போன்ற தாதுப் பொருட்களின் மருத்துவ பயன்பாட்டை பற்றி குறிப்பிடத்தக்க அளவிற்கு எதுவுமே இல்லை. பெரும்பாலும் வெளி பயன்பாட்டிற்கு மட்டுமே அவையும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை த்ருடபலர் காலத்து பிற்சேர்க்கையாக இருக்கலாம்.

மூலிகைகளின் பெயர்களையும் அடையாளங்களையும் மட்டும் தெரிந்துவைத்துக்கொள்வதால் ஒருவன் சிறந்த மருத்துவன் என்று சொல்ல முடியாது என்கிறார் சரகர்- எவனொருவன் காலம், தேசம், நோயாளியின் உடல், நோயின் தன்மை ஆகியவற்றை பூரணமாக உணர்ந்து ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்த வகையில் மருத்துவம் செய்கிறானோ அவனே சிறந்த மருத்துவன். புருஷம் புருஷம் வீக்ஷ்ய- எனும் இந்த ஒரு வாக்கியம் ஆயுர்வேத மருத்துவத்தின் மிக முக்கியமான அடிப்படைகளில் ஒன்று என நான் கருதுகிறேன். ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் கொண்டவன், ஆகவே அவனுக்கான மருத்துவமும் அப்படித்தான் இருக்க முடியும். ஒரு சுரம் என்று எடுத்துக்கொண்டால், அதில் எத்தனை வேறுபாடுகள்! உடல் வெப்பம் அதிகமடைகிறது எனும் ஒற்றை பொதுபண்புக்குப்பின் அது எத்தனையோ விஷயங்களை சுட்டலாம். காசம் எனும் ஒரு அத்தியாயத்தில் சுமார் நூறு நூற்றைம்பது ஔடத கல்பனைகளை விவரிக்கிறார். மருத்துவனின் திறன் என்பது அதிலிருந்து அல்லது அந்த அடிப்படையை மனதில் கொண்டு அவன் சரியாக தேர்ந்தெடுக்கும் மருந்தில் உள்ளது. ஒற்றை கல்லில் குறிபார்த்து மரத்தில் பழுத்து நிற்கும் மாங்கனியை அடித்து வீழ்த்துவதுப்போல் துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் ஒரு சாக்கு நிறைய கற்களை ஒட்டுமொத்தமாக வீசும் பாணியே இன்று பின்பற்றப்படுகிறது. எந்த கல் அந்த கனியை வீழ்த்தியது என்பது கல் எறிந்தவனும்கூட அறியமாட்டான்.

மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆயுர்வேதம் ஆழமாக விவாதிக்கிறது. சுரம் முதல் மேக நோய் வரை அனேக நோய்களுக்கு காமம், குரோதம், மோகம், பயம் போன்ற மனம் சார்ந்த காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் உன்மத்தம் போன்ற மன நோய்க்கு உணவு தொடர்பான காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒரு அத்தியாத்தில் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் என சிலவற்றை ஆச்சார ரசாயனம் எனும் பெயரில் பட்டியலிடுகிறார், அவைகளை பின்பற்றுவதன் மூலம் நோயற்று நூறாண்டுகள் வாழமுடியும் என்கிறார்.

நவீன மருத்துவத்துக்கு மாற்றான கீழை மருத்துவ முறைகள் என்று வரும்போது, சொல்லப்படும் மிக முக்கியமான விஷயம், நவீன மருத்துவம் , குறுக்கல் வாத கண்ணோட்டத்தை (reductionistic) அடிப்படையாகக் கொண்டது, கீழை மருத்துவமுறைகள் முழுமைவாத (wholistic) கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான். சரகரை ஆழ்ந்து வாசிக்கையில் நான் கண்ட உண்மை யாதெனில், ஆயுர்வேதம் குறுக்கல் வாத நடைமுறைகளை அரவே புறக்கணிக்கவில்லை, முழுமைவாதம் என்பதைக் காட்டிலும் அனைத்தையும் உள்ளடக்கிய பன்மைவாதம் (pluralistic) என்பதே பொருந்தும் என்று இன்று தோன்றுகிறது. லகஷணிக்க சிகிச்சை, அதாவது வெவ்வேறு அறிகுறிகளுக்கான சிகிச்சையை பற்றி சரகர் விரிவாகவே குறிப்பிடுகிறார்.

பொதுவாக சரக சம்ஹிதையை வாசிப்பவர்கள் புறக்கணிக்கும் இரண்டு பகுதிகள் சரீர ஸ்தானமும், இந்திரிய ஸ்தானமும்தான். அடிப்படைகளை விளக்கும் சூத்திர ஸ்தானமும், சிகிச்சைகளை விரிவாக பேசும் சிகித்சா ஸ்தானமும், நோய்களைக் கண்டறிய உதவும் நிதான ஸ்தானமும், பல்வேறு பஞ்ச கர்மங்களுக்கு தேவையான மருந்துகளையும், செய்வதற்கு உண்டான வழிமுறைகளையும் சொல்லும் சித்தி ஸ்தானமும் கல்ப ஸ்தானமும் பொதுவாக ஆயுர்வேத வட்டாரங்களில் பயன் கருதி ஓரளவேனும் பரிச்சயப்பட்ட விஷயங்கள். சரீர ஸ்தானம், இந்த உலகம் எப்படி உருவானது? உடல் எப்படி உருவானது? போன்ற தத்துவார்த்த தளத்தில் செயல்படுகிறது. சாங்கியம், நியாயம், வைசேஷிகம், யோகம், போன்ற ஞான மரபுகளை துணைக்கு அழைத்து தனக்கான பிரபஞ்ச பார்வையை வகுத்துக் கொள்கிறது.

தனித்தனியாக குழைந்த மண்ணும், கோலும், சக்கரமும் இருந்தால் குயவனின் கைவண்ணம் இல்லாமல் தன்னால் பானையாக உருவாகி விடுமா? அதைப்போல் பௌதிக பொருள்களின் கூட்டில் தன்னிச்சையாக உயிர் உருவாகும் எனும் கூற்று முட்டாள்தனமானது என்கிறார் சரகர். மனம், ஆன்மா, முக்தி என ஒரு மீபொருண்மை தளத்தில்தான் இந்த மொத்த ஸ்தானமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என கூறலாம். இந்த ஸ்தானத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சில ஆழமான கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு விடை தேடும் முயற்சியாகவே அந்தந்த அத்தியாயம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சிகிச்சை யாருக்கு? உடலுக்கா? உடலில் பொதிந்திருக்கும் மனதிற்கா? மனம்தான் மனிதனா? ஆனால் மனம் எண்ணுவதை ஏதோ ஒன்று கவனிக்கிறதே அது என்ன? ஆன்மாவிற்கு நோய் பீடிக்குமா? ஏன் சிலருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது? ஏன் சிலருக்கு பெண் பிறக்கிறது? ஆன்மாவிலிருந்து ஆன்மா பிறக்கிறதா? என விரியும் கேள்விகள் ஆழமானவை, அதற்கான விடைகளை, நாம் அறிவியலிலும் , தத்துவத்திலும், யோகத்திலும் அறிய முற்படலாம். ஆயுர்வேதம் அளிக்கும் விளக்கங்களும் அற்புதமானவை. தொடுகை என்பது இருவிதமாகும், புறத்தொடுகை ஒன்றுண்டு, அகத்தொடுகை என்றொன்று உண்டு அகத்தொடுகையே சுக துக்கத்தை முடிவு செய்கிறது என்கிறார் சரகர்.

இந்த்ரிய ஸ்தானம், மரணத்தை பற்றியும், அதை அறிவிக்கும் குறியீடுகள் பற்றியும் விரிவாக பேசுகிறது. இந்த்ரியம் என்றழைக்கப்படும் புலனுருப்புகளை கொண்டு மரண குறிகளை அறிய முற்படுவதால் ஏற்பட்ட காரணப் பெயர்தான் இந்த்ரிய ஸ்தானம். மனிதரின் இயல்பான குரல், நிறம் போன்றவைகளை சொல்லிவிட்டு, அதிலிருந்து விலகுபவைகளையும் சொல்கிறார் சரகர். ஹம்சம் (அன்னம்), துந்துபி மேளம், கபோதம் (புறா) போன்றவற்றின் குரலை ஒத்த குரல் மனிதர்களுக்கு இயல்பானது என்று சொல்கிறார். அடுத்து உருவாகவிருக்கும் கனியை நமக்கு செடியில் பூக்கும் மலர் உணர்த்துவது போல், உடலில் இருந்து எழும் நறுமணங்களை கொண்டு நாம் மரணத்தை உணர்ந்துகொள்ளலாம் என்கிறார் அவர். நவீன மருத்துவத்திலும் கீடோசிஸ் போன்ற நோய் நிலைகளுக்கு தனித்துவமான அழுகிய பழ வாடை உண்டு. இந்த ஸ்தானத்தில் குறிப்பிடப்படும் அறிகுறிகள், மரணத்தை அறிவிக்கின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை நாம் நோயறிதலில் பயன்படுத்தலாம் என்பதே முக்கியம். ஒரு நோய் கவனிக்கப்படாமல், அப்படியே விடப்பட்டால் என்னவாகும்? அதன் இறுதி குறிகள் எப்படி இருக்கும் ? இது போன்ற கேள்விகளை இந்த பகுதி பேசுகிறது.

மரபு தொடர்ச்சி அற்றுப்போன நவீன காலகட்டத்தில் சரகரின் சில கூற்றுகள் நமக்கு சரியாக பிடிபடுவதில்லை. உதாரணமாக முதலையின் சுக்கிலம் ஆண்மையைப் பெருக்க மிக சிறந்த மருந்து என்கிறார். இன்றைய சூழலில் இதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அப்பட்டமாக பொருள் கொண்டு எவரேனும் முயற்சி செய்தால் அவர் கதை என்னவாகும்? அந்த சமஸ்க்ருத சொல் ரகசிய குறி சொல்லாக இருக்கக்கூடும். அல்லது திரிபாகவும் இருக்கக்கூடும், ஆனால் இன்று அது வெறும் வரலாற்று பிதற்றலாகவே தென்படுகிறது. சில கருத்துக்கள் இன்றைய நவீன மருத்துவத்தின் உருபெராத ஆரம்பப் புள்ளிகளாக கண்டுகொள்ள முடியும். இன்னும் சில தகவல்களை, கருத்துக்களை பகுத்தறிவுக்கு ஒவ்வாத இன்றைய உலகத்திற்கு பொருள்படாத அர்த்தமற்ற குப்பைகளாக நினைத்துக் கொள்ளலாம் – ஆனால் அவை அனைத்தும் இணைந்ததே இந்த ஆக்கம்.

ஆயுர்வேத மூல நூல்களை அவை எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டு இரண்டு கோணங்களில் அணுகலாம், எக்காலத்திற்கும் பொருந்தும் அடிப்படைகளைப் பேசும் பகுதிகள் ஒருபுறமும், அக்காலத்திற்கு மட்டும் பொருந்தும் நடைமுறைகளை பேசும் பகுதிகளும் கொண்டவையே செவ்வியல் ஆக்கங்களாக மகிக்கப்படுகின்றன. ஒவ்வாத சில அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு ஆக்கத்தை அல்லது மருத்துவ முறையை முற்றிலுமாக புறக்கணிப்பதும், குருட்டு நம்பிக்கையில் நூலில் உள்ள அனைத்தையும் மறுபரிசீலனை இன்றி ஏற்றுப் பின்பற்ற முயல்வதும்- இவை இரண்டுமே அறிவீனமான செயல்பாடுகள்தான்.

சரகர் முன்வைக்கும் மருத்துவ அறத்தை பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். மருத்துவர், நோயாளி, மருந்து, பரிசாரகர் (நோயாளியை கவனித்துக் கொள்பவர்) ஆகிய நான்கும் நாற்காலியின் நான்கு கால்களைப்போல் வலுவாக பொருத்தமாக அமைய வேண்டும், இவை ஏதேனும் ஒன்றில் கோளாறு இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காது என்கிறார் சரகர்.

சரக சம்ஹிதை அல்லது ஆயுர்வேதத்தில் என்னை உலுக்கும் ஒற்றைவரி உண்டென்றால் அது சரகரின் இந்த வரிதான் ‘ஒவ்வொரு நோயாளியையும் உன் சொந்த மகனைப்போல் நடத்து’. நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ துறையில் இந்தவரியை எவரேனும் இன்று சொன்னால், நகைப்புக்குள்ளாக வேண்டிவரும். ஆனால், இந்த வரியின் விரிவும் ஆழமும் அதை பற்றி சிந்திக்கும்தோறும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துவது. உயிர்களின் மீது பெரும் கருணை கொண்ட ஒரு மனமே இதை எண்ணியிருக்க முடியும். அசிரத்தையாக நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கப்படும் சோதனை மருந்துகள் எத்தனை? அனாவசிய மருந்துகள் எத்தனை? அவசியமற்ற பரிசோதனைகள் எத்தனை? ஒரு மருத்துவன் ஒருநாளும் தன் மகனுக்கு இவைகளைச் செய்யமாட்டான். தேற வேண்டும் எனும் கவனமும், கவலையும் மட்டுமே இருக்கும். பொருளியல் சார்புகள் அவனுடைய தேர்வுகளை முடிவு செய்யாது. மருந்துகளின் ஆபத்தும், பின்விளைவுகளும் அவனுக்குத் தெளிவாக தெரிந்து தேவையற்ற மருந்துகளை தவிர்ப்பான். ஒவ்வொரு மருத்துவரும் இந்த ஒற்றை வரியை தங்கள் அறமாகப் பேணிப் பின்பற்றும்போது எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்தால் இதன் வீச்சும் ஆழமும் எளிதில் புரியும்.

சரக சம்ஹிதையை ஒரு ஆயுர்வேத நூலாக மட்டுமின்றி, வரலாற்று ஆவணமாகவும் இலக்கிய ஆக்கமாகவும் தத்துவ நூலாகவும் வாசிக்க இடமுண்டு என்பதே அதன் இன்றைய முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதாக உள்ளது. வெவ்வேறு பின்புலங்களில் பொருத்தி ஆழமான ஆய்வுகளைக் கோரி நம்முன் புறக்கணிக்க முடியாத ஒரு மகத்தான படைப்பாக அது தன்னைத் திறந்து வைத்துக்கொண்டு நிற்கிறது. அதை நிராகரித்து முன்னகர்வதாக இருந்தால்கூட, நாம் நேர்மையானவர்களாக இருந்தால், அது கோரும் வாசிப்பையும் முனைப்புடன் கூடிய உழைப்பையும் நாம் அந்த ஆக்கத்திற்கு செலுத்தும் மரியாதையாக கொடுத்தே அதையும் நிகழ்த்திட முடியும்.