ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்

மெக்ஸிகோ இயற்கை வளமுள்ள நாடு. இந்தியாவை விட வளமான பொருளாதாரம் என்றும் கருதப்படுவது.  மக்கள்தொகை அத்தனை இல்லையே. மேலும் நிறைய மெக்ஸிக மக்கள் அமெரிக்காவிற்கு உழைப்பாளிகளாகப் போய் தம் சொந்தங்களுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புகிறார்கள், அதுவும் ஒரு முக்கியமான பொருளாதார மேலெடுப்புக்கு உதவுகிறது. மெக்ஸிகோவின் எண்ணெய் வளமும் உதவுகிறது. மெக்ஸிகோவின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளிடையே அதிகாரத்துக்கு இழுபறி வெகு காலமாக நடக்கிறது. முக்கியக் கட்சியான PRI ஒரு நடுவாந்திரக் கட்சி. வெகுகாலம் அங்கு அரசியல் அதிகாரத்தில் இருந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கிய பெருமை இதற்குச் சேரும். 1929 இலிருந்து தொடர்ந்து பல பத்தாண்டுகள் பதவியிலிருந்த இந்தக் கட்சி 2000த்தில் பதவியையும் அதிகாரத்தையும் இழந்து ஒரு 12 ஆண்டுகள் வெளியில் இருந்தது. 2012 இல் மறுபடி மத்திய அரசில் அதிகாரத்தையும், அதிபர் பதவியையும் கைப்பற்றி இருக்கிறது. கீழே உள்ள ஒரு கட்டுரை, உண்மையில் மக்ஸ்வீனீஸ் என்கிற அமெரிக்க இலக்கியக் காலாண்டிதழுக்கு வாசகர் ஒருவர் எழுதிய கடிதம். மெக்ஸிக அரசியலை எளிதாக நமக்கு விளக்கும் இக்கடிதம், பல்வேறு வறிய நாடுகளிலும் வறுமையின் பிடியில் மக்கள் ஒரே விதமாகத்தான் துன்புறுகிறார்கள் என்று காட்டுகிறது.  இக்கடிதத்தில் பேசப்படும் பென்யா நியதோ இப்போது மெக்ஸிகோவில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர். இவர் டிசம்பரில் பதவி ஏற்க இருக்கிறார். இக்கடிதம் தேர்தலுக்கு முன்னால் 2012 இன் நடுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இக்கடிதத்தை மெக்ஸிக வம்சாவளியைச் சேர்ந்தவரும், இப்போது அமெரிக்காவில் சமூகவியல் பேராசிரியராக இருப்பவருமான முனைவர் சாரா ஹெர்னாண்டஸிடம் சேர்ப்பித்து அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தோம். அவற்றையும் இந்தக் கட்டுரைக்குக் கீழே தொடர்ச்சியாக அளித்திருக்கிறோம்.

அன்புள்ள மக்ஸ்வீனிஸ்,

அவருக்கு 45 வயதாகிறது ஆனால் பல ஒளிப்படங்களில் தோற்றத்தைப் பார்த்தால் 12 வயதே ஆனவர் போலத் தெரிகிறார்: குடும்பத் திருமணத்துக்காக ஆடை அணிந்தது போல, கருப்பு சூட்டும், சிவப்பு நிறத்தில் கழுத்து டையும் அணிந்த பையன் போலத் தோற்றம். அவருடைய வெளுத்தநிறத் தோலும், கருப்பான, வட்டநிலாக் கண்களும், ஜெல் தடவிப் பஃப் வைத்து வாரிய தலையுமாக உள்ளூரில் தயாரித்த ஒரு சீரியல் காட்சி ஹீரோ போலத் தோன்றுகிறார். அவர் பெயர், என்ரீகெ பென்யா நியதோ (Enrique Peña Nieto), கருத்துக் கணிப்புகளை நம்பினால் வருகிற தேர்தலில் வென்று மெக்ஸிகோவின் அதிபராகி விடுவார். (சொல்வனம் குறிப்பு: நியதோ, இவர் யூகித்ததுபோலவே தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார்.)

enrique-pena-nieto

[என்ரீகெ பென்யா நியதோ]

பென்யா நியதோ அரசியலில் நடுவாந்திரத்தில் இருக்கும் அமைப்புப் புரட்சிக் கட்சியின் (Institutional Revolutionary Party -இது ஒரு இடக்கு மடக்கான பெயர்) உறுப்பினர். ஸ்பானிஷ் மொழி எழுத்துகளில் சுருக்கமாக PRI என்றறியப்படும் இந்தக் கட்சி மெக்ஸிகோவை 1929 இலிருந்து 2000 ஆவது ஆண்டு வரை ஆண்டது- நவீன வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் நடந்த அரசியல் நாடகம் இது. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் மெக்ஸிகோ மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். அந்தக் கால இடைவெளியில் நிறைய கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கணக்கு, அவை அனேகமாக வேலை வாய்ப்பைச் செயற்கையாக உருவாக்கிய திட்டங்களே. அவை தற்காலிக வேலைகளே என்றாலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வாய்ப்பளித்தன. ஆனால் ஏராளமான எளியவர்கள் – மெக்ஸிகோ மாநகரத்தைச் சுற்றி இருக்கும் சேரிகளில் வாழ்பவர்கள் – சஹாரா பாலைக்குத் தெற்கே உள்ள ஆஃப்ரிக்காவில் உள்ள கடும் வறுமையை ஒத்த நிலையில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாட்டவை அறிக்கை சொல்கிறது.

அனேகமாக எல்லா கருத்துக் கணிப்புகளும் பென்யா நியதோவை, இதர போட்டியாளர்களை விட இரட்டை இலக்கங்களில் கூடுதலான ஆதரவைப் பெற்றவராகக் காட்டுகின்றனவாம். அந்தப் போட்டியாளர்கள், இடதுசாரிக் கட்சியான ஜனநாயகப் புரட்சிக் கட்சி (PRD – Democratic Revolutionary Party) தவிர வலது சாரியின் நேஷனல் ஆக்ஷன் கட்சி (PAN – National Action Party) ஆகியவற்றின் வேட்பாளர்கள். இந்த வலதுசாரிக் கட்சி கடந்த 12 வருடங்களாக மெக்ஸிகோவை ஆண்டு வந்தது. அந்த வருடங்கள் படுமோசமான வருடங்கள் என்று அனேகரால் வருணிக்கப்படுகின்றன.

பென்யா நியதோ குறைகளற்றவர் அல்ல. சென்ற டிசம்பரில், அவர் எழுதியதாகச் சொல்லப்பட்ட ’மெக்ஸிகோ: பெரும் நம்பிக்கை’ (Mexico: La gran esperanza) என்னும் ஒரு தடிப்புத்தகத்தை க்வாடலஹ்ஹாரா புத்தகக் கண்காட்சியில் (ஸ்பானிய மொழி பேசும் உலகில் மிக முக்கியமான ஒரு கண்காட்சி) வெளியிடுகையில், ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும்  நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார். அதற்குப் பின், வரலாற்றாளர் என்ரீகே க்ரௌஸ் எழுதிய ‘லா ஸீயா டெல் அல்கீலா’ (La silla del águila) அவருக்கு எத்தனை பிடித்திருந்தது என்று சொன்னார். அந்த நாவலை எழுதியவர் கார்லோஸ் ஃப்வெண்டேஸ்.

அதற்குப் பின் அவர் இன்னும் கூடுதலாகக் குழம்பினார், தன்னால் நினைவு கூர முடியாத புத்தகங்கள், மேலும் எழுத்தாளர்களின் பெயர்களின் வட்டச் சுழலில் சிக்கிக் கொண்டார். கூடியிருந்த பார்வையாளர்களின் உதவியை நாடினார், தனக்குச் சில தகவல்களைக் கொடுத்து உதவுமாறு கேட்டார். இறுதியில் பென்யா நியதோ இரண்டு தலைப்புகளைச் சொன்னார், இரண்டுமே ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய பிரபலப் புத்தகங்களின் பெயர்கள். ஆர்ச்சர் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர், அவருடைய அரசியல் வாழ்வுமே, சட்டத்தின்படி உண்மை சொல்வதாக உறுதி எடுத்துக் கொண்ட பின்னர் பொய் சொன்னதால் தண்டிக்கப்பட்டு, சிறை சென்றதில் வீழ்ச்சி அடைந்தது. நியதோவின் சிரிப்பும், உடல் மொழியும் நமக்கு அசந்தர்ப்பமாகத் தெரிந்தன, இப்படிப் பெயர்கள் சொல்வதை அவர் ஏதோ நகைச்சுவையென்று நினைத்தது போல இருந்தது.

இந்த சம்பவம் மெக்ஸிகோவில் ஏற்படுத்திய பெரிய பரபரப்பு அனேகமாக மேல் தட்டு மனிதரிடையேதான் என்ற போதும், செய்தித்தாள்களிலும், சமூக ஊடகங்களிலும் பென் நியதோ பெரிதும் அவமதிக்கப்பட்டார். அவருக்குச் சார்பாகப் பேச வந்தவர்கள் நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கினார்கள். பென்யா நியதோவின் மகள் பௌலினா ட்விட்டரில் இப்படி எழுதினார்: “இன்னும் வேலைக்காரப் பயல்களாக இருக்கிறவர்கள்தான் இப்படிப் பொறாமையில் மற்றவர்களை விமர்சிக்கிறார்கள்.”[1]

பென்யா நியதோ ‘டெலிவிசாவின் வேட்பாளர்’. மெக்ஸிகோவின் மிக முக்கியமான டெலிவிஷன் நெட்வொர்க் இதுதான்; மெக்ஸிகோவின் தொலைக்காட்சிப் பார்வையாளர்களில் மிகப் பெரும்பான்மையினரை இந்த நெட்வொர்க் கவர்ந்திருக்கிறது. ‘தேர்ட் டிக்ரி’ என்னும் ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய அடெலா மீக்கா சொன்னார், “நன்றாகவோ, மோசமாகவோ ஆள்வதற்கும், எக்கச்சக்கமாக படிக்கும் பழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.”; அதே நிகழ்ச்சியில் தினசரி ஒன்றின் பதிப்பாசிரியரன கார்லோஸ் மாரின் ‘இந்த வேட்பாளரைக் கேலி செய்த பலரும் அந்த வேட்பாளரைப் போலவே அறியாமையில் மூழ்கியவர்கள்தான்’ என்று குறிப்பிட்டார்.

பென்யா நியதோவின் இந்த உளறலுக்கு மறுவினைகள் புத்தாண்டு துவங்கிய பிறகும் தொடர்ந்தன. “பென்யா நியதோ புத்தகக் கடை” என்ற ஐடியிலிருந்து ட்வீட்கள் நிறைய வெளிவந்த வண்ணமிருந்தன: “நாம் இன்று மார்டின் பர்கர் கிங் என்கிற எழுத்தாளரின் படைப்பில் சிலதைப் படிக்கலாமே,” என்றது ஒரு ட்வீட். இது போன்ற ட்வீட்கள் இந்த ஐடியில் தொடர்ந்து வெளியாகின. இதே நேரத்தில் மற்ற அரசியல்வாதிகளும் இதே போன்ற ஒரு பொறியில் சிக்கிக் கொண்டார்கள். ஒரு முன்னாள் சுகாதாரத்துறை காரியதரிசி (நம் ஊர் மந்திரிப் பதவி போன்றது), இந்தத் தடவை க்வானாஹ்வாடோ என்கிற மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு வேட்பாளராக நிற்பவர், தன்னைப் பாதித்து தன் வாழ்க்கையை மாற்றியமைத்த புத்தகம் என்று சொன்னது, ‘த லிட்டில் ப்ரின்ஸ்,’ அதை எழுதியவர் மாக்கியவெல்லி என்றும் அவர் சொன்னார்.

யுனெஸ்கோவின் புள்ளிவிவரங்கள் சொல்வதன்படி, மெக்ஸிகோவில் 93.4% மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். ஆனால் அதற்கு, அத்தனை பேருக்கும் சரளமாக எழுதப்படிக்க வரும் என்று அர்த்தமில்லை; இங்கு நான் முதலில் வசிக்க வந்தபோது, 1990 இல் நிறையப் புழங்கிய ஒரு புள்ளி விவரத்தின்படி, மெக்ஸிகர்கள் சராசரியாக வருடத்துக்கு அரைப் புத்தகமே படித்தார்கள். சமீபத்துப் புள்ளிவிவரமொன்று இதே விஷயத்தில் 1.9 புத்தகங்களை ஒரு வருடத்தில் அவர்கள் படிப்பதாகத் தெரிவிக்கிறது. ஒரு புத்தகம் 3000 பிரதிகள் விற்றால், அது ’பிரமாதமாக’ விற்றது என்று அர்த்தம்.

பொருளாதாரக் கூட்டுறவுக்கும், வளர்ச்சிக்குமான அமைப்பின் (OECD) புள்ளி விவரங்களின்படி 52 மிலியன் மெக்ஸிகர்கள் தேச வறுமை அளவுக்குக் கீழே வாழ்கிறார்கள்-அதாவது மாதத்துக்கு $130 (அமெரிக்க டாலர்கள்) தான் சம்பாதிக்கிறார்கள். இங்கு விலைவாசியோ அமெரிக்க விலைவாசிக்கு நிகராக உள்ளது. அதில் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் வறுமையில். இன்னும் ஏராளமான மக்கள் இந்த நிலைக்குச் சற்றே மேலேதான் உள்ளார்கள். மொத்த உழைப்பாளர்களில் 11 சதவீதம் பேர்தான் ஒரு நாளைக்கு $18.65 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

நான் நிறைய மெக்ஸிக சிற்றூர்களுக்கும், சிறு நகரங்களுக்கும் போயிருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு செய்தித்தாள் விற்கும் கடை கூட இராது, புத்தகக் கடை எங்கே இருக்கும்? வறுமைக் கோட்டுக்கு அருகிலோ, கீழேயோ வாழ்வோரில் ஒருவராக நீங்கள் இருந்தால் உங்களுக்குப் புத்தக விலை கட்டுபடியாகாது.  (இப்படி வறியவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சிறுவர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.)  ஒரு சாதாரண காகித அட்டை உள்ள புத்தகத்தின் விலை $16 டாலர்கள். நூலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு, படுமோசமாகப் பராமரிக்கப்படுகின்றன, அவற்றில் சேகரமான புத்தகங்கள் எப்போதோ ஒரு முறைதான் புதுப்பிக்கப்படுகின்றன.

“நம் கல்வி அமைப்பிருந்த இடத்தைத் தொலைக்காட்சி பிடித்துக் கொண்டு விட்டது,” என்கிறார் செர்ஹியோ கொன்ஸாலெஸ் ரொட்ரீகஸ், ரிஃபார்மா என்கிற செய்தித்தாளின் பத்தியாளர் இவர். அரசியல், பண்பாடு ஆகியன பற்றிப் பல புத்தகங்கள் எழுதியவர். “இந்த ஊடகம் படிப்பை ஊக்குவிப்பதில்லை. தாம் தொலைக்காட்சியின் மூலம் தகவல்களைப் பெறுவதாக மக்கள் நம்புகிறார்கள், அதனால் படிப்பது முக்கியமில்லை என்று நினைக்கிறார்கள்.”

சட்டவழிப் பாதுகாப்புக் குழுக்கள் பற்றிய ஆய்வுக்காக நகரங்களின் கோடியில் வாழ்கிற, தன் உடலுழைப்பை மட்டுமே பிழைப்பதற்கு நம்பி இருக்கும் குடும்பங்களைச் சென்று பார்ப்பது என் வேலை. நான் பேட்டி கண்ட இளைஞர்களில் அனேகம் பேர் தமது சிறு பிள்ளைப் பிராயத்திலிருந்தே வேலைக்குப் போகிறவர்கள்; காலணிகளுக்கு பாலிஷ் போடுவது, மளிகைப்பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பது, தெருக்களில் இனிப்புப் பொருட்களை விற்பது போன்ற வேலைகள். பெண் குழந்தைகள் நடக்கத் தெரிந்ததிலிருந்தே வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு விடுகிறார்கள். சட்டம் வலியுறுத்துவதால் துவக்கப் பள்ளி, இரண்டாம் நிலைப்பள்ளி வரை படிக்கிறார்கள், ஆனால் அதற்குப் பிறகு பெற்றோருக்கு உதவ முழுநேர வேலைக்குப் போகிறார்கள். பெற்றோர்கள் 40 வயதுகளிலேயே ஓய்ந்து போன மனிதர்களாகி விடுகிறார்கள், உடைந்த பற்களும், திருகிக் கோணிய முதுகுமாக.

படிப்பினால் தம்மை உயர்த்திக் கொண்ட மனிதர்கள், முன்மாதிரியானவர்கள் என்று பெரியவர்களில் யாரையும் இளம்பருவத்தினர் காண்பதில்லை; அப்படி யாராவது இருந்தாலும் மிகச் சிலரையே பார்த்திருக்க முடியும். மெக்ஸிகோவில் சமூக உயர்வு என்பது அனேகமாக இல்லவே இல்லை; அனேகமாக வறியவராகப் பிறந்தவர்கள் அனைவருமே தம் வாழ்நாள் பூராவும் வறியோராகவே இருக்கத் தண்டிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அடித்துப் புரண்டு வறுமையிலிருந்து மேலெழுபவர்கள் அனேகமாக மூன்று வழிகளில் ஒன்றைப் பின்பற்றி இருப்பார்கள்: முதலாவது, கடும் உழைப்பு, அனேகமாக சில்லறை வியாபாரம் – இதுவும் அனேகமாக தெருவில் ஏதோ உணவுக் கடை ஒன்றை நடத்துவது மூலம்தானிருக்கும். இரண்டாவது, குற்றங்கள் புரிவது. மூன்றாவது – பல நேரம் இரண்டாவது வழியோடு பிணைந்ததாகவே இருக்கும் – அரசியல். மெக்ஸிக அரசியலாளர்கள் அமெரிக்காவிலும் யூரோப்பிலும் இருக்கும் அவரொத்தவர்களை விடக் கூடுதலான ஊதியம் பெறுகிறார்கள். ஊழல் மலிந்த வியாபாரங்களில் இறங்கத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஆகாயம்தான் எல்லை. மெக்ஸிகோ நகரத்தின் முன்னாள் மேயர் கார்லோஸ் ஹாங்க் கொன்ஸாலெஸ் சொன்னார், “ஏழையாக இருக்கும் ஒரு அரசியலாளரைக் காட்டுங்கள், உதவாக்கரை அரசியலாளரை அவரிடம் நான் காட்டுவேன்.”

அந்தப் புத்தகக் கண்காட்சியில் தோன்றியதற்குப் பின், பென்யோ நியதோ மேன்மேலும் சறுக்கல்களைச் சந்தித்திருக்கிறார். சில பொது நிகழ்ச்சிகளில் அவர், தனக்குக் குறைந்த பட்ச ஊதியம் என்பது என்னவென்றோ, ஒரு கிலோ டோட்டியா (ஒரு வகை தயார் நிலை ரொட்டி) விலை என்னவென்றோ தெரியாது என உறுதி செய்திருக்கிறார், (பின்னதற்கு அவருடைய விளக்கம்- “நான் ஒரு மனைவியா? இல்லையே?” ) ஜனவரி இறுதியில், ஒரு நிருபரிடம் தன் முதல் திருமணம் பற்றிப் பேசுகையில், அந்த நாட்களில் தான் வரிசையாகப் பல பெண்களோடு கள்ள உறவு வைத்திருந்ததாகவும், அப்படி உறவுகளில் இரண்டு குழந்தைகளும் பிறந்தன என்றும் சொல்லி இருக்கிறார். இப்படி திருமணத்துக்கு வெளியில் பிறக்கும் குழந்தைகள், “ஆண் பெருமை மிக்க மெக்ஸிக சமூதாயத்தின் திட்டமான அமைப்பில் மிகச் சாதாரணமான விஷயமே.”  என்று நாவல் எழுத்தாளர் ஜே.எம். செர்வின், பதிலுக்குச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.  மேலும் இந்தத் தகவல், பென்யோ நியதோவுக்கு ஆண் வாக்காளர்களிடையே கூடுதலான ஆதரவைக் கூடப் பெற்றுத் தரும் என்றார்.

நியதோவின் முதல் மனைவி மிகவும் சந்தேகத்துக்குரிய சூழ்நிலையில் 2007-இல் இறந்தார். ஒரு பேட்டியில் பென்யா நியதோ தனக்கு என்ன காரணத்தால் அவர் இறந்தார் என்பது நினைவில்லை, ஆனால் அது ”வலிப்பு நோய்” போன்ற ஒன்று, என்று சொல்லி இருக்கிறார். நிறைய பேர் (எந்த ஆதாரமும் இல்லாமல்) அவர்தான் அப்பெண்ணைக் கொன்றிருக்கிறார் அல்லது அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இருந்த போதும், இந்த சறுக்கல்கள், அம்பலப்படுத்தல்கள் ஆகியன கருத்துக் கணிப்புகளில் இவருக்கு இருக்கும் ஆதரவைச் சிறிதும் குறைக்கவில்லை.

நாவலாசிரியர் கீயார்மோ ஃபாடனெல்லியோ, அனேக மெக்ஸிகர்கள் பென்யா நியதோவின் ‘இலக்கிய’ச் சறுக்கல்களை வரவேற்கக் கூடும் என்கிறார். “படிப்பறிவற்ற ஒரு மக்கள் கூட்டத்துக்கு, படிப்பறிவில்லாத ஒரு வேட்பாளர் தம் கூட்டாளியாகத் தெரியலாம்,” என்கிறார். “இங்கேயுள்ள பலருக்கு ‘அறிவு ஜீவி’ என்கிற வார்த்தை இழிவைச் சுட்டும் வார்த்தைதான்.”

பென்யா நியதோ பெரும் பணக்காரர், வெள்ளை நிறத்தோல் கொண்டவர், பார்க்க நன்றாக இருக்கிறார், அப்புறம் ஒரு சினிமா நட்சத்திரம் போன்ற மனைவியும் கொண்டவர். ஆன்ஹெலிகா ரீவெரா, ஒரு முன்னாள் தொலைக்காட்சி சீரியல் நாடக நட்சத்திரம். தன்னுடைய விளம்பரப் படங்களில், பென்யா நியதோ, சட்டையும், தளர்த்தி விடப்பட்ட கழுத்து டையும் அணிந்து,  ஒரு படகுக் காரிலிருந்தபடி மக்களிடம் தனக்கிருக்கும் தீவிர பற்றுதல் பற்றிப் பேசுகிறார்.

20120703_505276_01

இந்தக் குறியீடுகள் எவையும் மக்களின் யதார்த்த வாழ்வோடு சம்பந்தப்பட்டவை அல்ல. மாறாக அவை மக்களின் பெருவிருப்புகளைப் பிரதிபலிக்கின்றன. அவர்கள் அவரைகளை (beans) அறுவடை செய்வதிலும், காலணிகளைப் பாலிஷ் போடுவதிலும், டாக்கோக்களையும், டமாலீக்களையும் தெருவில் விற்பதிலும், மற்றவர்கள் வீடுகளைப் பெருக்கித் துடைப்பதிலும், பிறருடைய கார்களைக் கழுவுவதிலும் கழித்துக் கொண்டிராமல் வேறு விதமான வாழ்க்கை வாழ முடிந்தால் எப்படி வாழ விரும்புவார்களோ அப்படி ஒரு வாழ்வு அது. பென்யா நியதோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அப்படி ஒரு விருப்பத்தை, கனவை வாழ்வதாக அவர் சித்திரிக்கிறார் என்பதால்தான் இருக்கும். அவர் தன் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூடப் படித்திராவிட்டால்தான் என்ன?

டேவிட் லீடா
மெக்ஸிகோ நகரம், மெக்ஸிகோ.
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: மைத்ரேயன்

மக்ஸ்வீனீஸ் என்கிற காலாண்டுப் பத்திரிகை அமெரிக்க சஞ்சிகை உலகில் ஒரு அசாதாரணமான பத்திரிகை. இதில் இலக்கியத்தோடு, பல வகை கருதுபொருள்களைப் பற்றிய கட்டுரைகளும் பிரசுரமாகின்றன. மேலே உள்ளது முந்தைய இதழொன்றில் வெளியான மெக்ஸிகோவின் இன்றைய அரசியல் நிலை பற்றிய ஒரு கட்டுரைக்கு மறு வினையாக ஒரு வாசகர் எழுதிய கடிதம். இது மெக்ஸிகோவை கச்சிதமாகச் சித்திரிக்கிறதா இல்லையா என்பதை சொல்வனம் வாசகர்கள் வலையில் சிறிது தேடினால் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இது மெக்ஸிகோ பற்றிய ஒரு வெளிநாட்டவரின், ஒரு அமெரிக்கரின் பார்வை என்பதாக நாம் கருதலாம். இது மக்ஸ்வீனிஸ் பத்திரிகை எண் 41, கோடை2012 இதழில் வெளியான கடிதத்தின் மொழி பெயர்ப்பு. மக்ஸ்வீனிஸ் பத்திரிகைக்கு சொல்வனத்தின் நன்றி.

1. அந்த ட்வீட் வாக்கியங்கள் இங்கிலீஷில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பௌலீனா நிச்சயம் ஸ்பானிஷ் மொழியில்தான் எழுதி இருப்பாரென்று நினைக்கிறேன். ‘Regards to the bunch of assholes, who are all proles and only criticize those who they envy.’

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

டேவிட் லீடாவின் கடிதம் எவ்வளவு தூரம் யதார்த்தத்துக்கு அருகிலான ஒன்று என்ற சந்தேகம் அதைப் படித்ததும் எழுந்தது. இது ஆழ்ந்ததொரு அலசல் இல்லை; பல்கலைக்கழக ஆய்வுகளில் கிட்டும் வரலாற்று, பொருளாதார, சமூக ஆய்வுகளின் முடிவுகள் இந்தக் கடிதத்தில் இல்லை. ஆனால் தனிநபர் ஒருவரின் பல பத்தாண்டு கால வாழ்வனுபவத்தின் மூலம் கிடைத்த ஒரு துரிதப் பார்வை இது. இதன் மூலம் நமக்கு மெக்ஸிகோவின் அரசியல் நிலைகள் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் என்று நினைத்து மொழிபெயர்த்தேன். பின்பு  மிஷிகன் பல்கலையில் சமூகவியல் துறையில் ‘மெக்ஸிக உழைப்பாளர்கள் வரலாறும், தொழிற்சங்கங்களும்’ குறித்த ஆய்வுக்கு முனைவர் பட்டம் வாங்கியவரான சாரா ஹெர்னாண்டஸைத் தொடர்பு கொண்டு இந்தக் கடிதம் எத்தகையது, எவ்வளவு இதில் யதார்த்தம் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டேன். சாரா ஹெர்னாண்டஸ் இப்போது அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலத்தில், நியு காலேஜ் என்கிற ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மெக்ஸிகோ இவர் வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடித்த நாடு. இன்னும் இவரது உறவினர்கள் அங்கு உள்ளனர் என்பதால் அடிக்கடி மெக்ஸிகோவுக்குப் போய் வருகிறார். இவரது ஆய்வுகள் இன்னும் மெக்ஸிகோ பற்றியே அமைகின்றன.  பேராசிரியர் சாரா ஹெர்னாண்டஸின் பதில் கீழே மொழிபெயர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறிப்பைப் பிரசுரிக்க அனுமதி அளித்ததற்கு, அவருக்கு என் சார்பிலும், சொல்வனம் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் சாரா ஹெர்னாண்டஸ் எழுதுகிறார்:

டேவிட் லீடா பென்யா நியதோவைப் பற்றிய மிகச் சரியான பிரதிபலிப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் அந்தத் தப்பிதங்களைச் செய்தது உண்மை.  அதேபோல மெக்ஸிகர்கள் படிப்பறிவைப் பெரிதாக மதிப்பதில்லை என்பதும் ஒரு தீவிரமான பிரச்சினையே. இந்த சமுதாயம் ஒரு படிப்பு மையச் சமுதாயம் அல்ல, கேள்விஞானத்தை நம்பும் சமுதாயமாகவே இன்னும் உள்ளது, அது இன்னும் மாறவில்லை. நிஜத்தைச் சொன்னால், பெரும்பான்மை மெக்ஸிகர்கள் வானொலியைத்தான் நிறைய கேட்கிறார்கள். இது குறித்து அத்தனை ஆய்வுகள் ஏதும் நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் வானொலி தொலைக்காட்சியை விட அதிகமான மக்களைச் சென்றடைவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வானொலியோடே அதிக நேரமும் செலவழிக்கின்றனர் என்று நான் ஊகிக்கிறேன். இருந்தும், அச்சு ஊடகத்தை விட தொலைக்காட்சி பிரபலமானது என்பதில் ஐயம் இல்லை.

மெக்ஸிகோவில் வர்க்க வேறுபாடுகளும், அசமத்துவமும் பெருகிவருகின்றன என்பதும் உண்மைதான். ஆனால் வர்க்க மேலெழுதல் என்பது இல்லவே இல்லை என்பது சரியில்லை என்று நினைக்கிறேன். மெக்ஸிகர்களின் வர்க்க மேம்படுதல் அனேகமாக அமெரிக்க மக்களின் மேலெழும் வாய்ப்புகளை, நிலையை ஒத்ததாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தகைய ஒப்பீட்டிலும் முனைப்பான ஆய்வுகளை நான் இன்னும் காணவில்லை. மெக்ஸிகோவில் 90களின் துவக்கத்தில் ஒரு அளவு துரித மேம்படுதல் இருந்தது, ஆனால் ’94 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் துவங்கி, அப்போது அரசு  சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்ததும், மக்களின் நிலை கீழ் நோக்கிச் சரிவதை நாம் கவனிக்கிறோம்.

mexico

சமீபத்தில் நடந்த தொழிலாளர் சட்டங்கள் குறித்த விவாதம் பற்றி – இந்தச் சட்டங்கள் பற்றி ஏராளமான எதிர்ப்புக் கூட்டங்கள் நடக்கின்றன, அமெரிக்க ஊடகங்கள் இவற்றைப் பற்றிப் பேசுவதே இல்லை. இங்கே நான் கொடுத்திருக்கிற விடியோவில் ஒருவர் பெரும் சலிப்போடு சொல்கிறார், அரசியல்வாதிகள் மேன்மேலும் மக்களைக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க விரும்புகிறார்கள் போலிருக்கிறது, ஏனெனில் இந்த தொழில் சட்டங்கள் உழைப்பாளர்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும், அவர்களுக்கு வேறு தேர்வுகளே இல்லாமல் செய்யும் என்கிறார்.

ஆர்டூரோ அல்கால்டே ஒரு வழக்கறிஞர். அரசியல் சார்பில்லாத தொழிலாளர் சங்கங்களுக்கு வேலை செய்பவர், தொழிலாளர் உரிமைகளைக் காக்க இயங்குபவர். இந்தப் புதுச் சட்டத்தால் தொழிலாளர்களுக்கு என்னவொரு மோசமான பாதிப்புகள் நிகழவிருக்கின்றன என்று இவரும் மேலே உள்ள காணொளித் துண்டில் பேசுகிறார். பென்யா நியதோ பதவி ஏற்க இன்னும் சில மாதங்களே உள்ளபோது, இந்தச் சட்டங்களை ஏன் இப்போது நுழைத்து அமல்படுத்த முயல்கிறார்கள் என்பது எனக்குமே வியப்பாக இருக்கிறது. பிஆர் ஐ (PRI) கட்சிக்கு இந்தச் சட்டம் மக்களிடம் ஆதரவு இல்லாதது என்பது தெரியும், அதனால்தான் பதவி ஏற்குமுன், பிஏஎன் (PAN) கட்சி இந்த மோசமான வேலையைச் செய்து விட்டுப் போய்விடுவதை பிஆர்ஐ கட்சி விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன். பிஆர்ஐ கட்சியின் தேசிய மக்களவை உறுப்பினர்கள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து இருக்கிறார்கள். இச்சட்டம் இப்போது மேலவையின் (செனெட்) ஆமோதிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த காணொளித் துண்டில் சில மக்கள் இரண்டு கட்சிகளும் ஒன்றேதான் என்று பார்க்கத் துவங்கி இருப்பதைக் காணலாம்: PRIAN என்று இவற்றை அழைக்கவும் துவங்குகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து ஊதியங்களையும், இதர நலன்களை மேன்மேலும் கீழ் நிலைக்குத் தள்ளுவதும், மக்களின் வாழ்வுத் தரத்தைச் சரிப்பதும்தான் நடக்கவிருக்கின்றன. இவை நாட்டில் பெரும் அமைதியின்மையை, நிலை பிறழ்வைத்தான் கொணரவிருக்கின்றன.

மறுபடி டேவிட் லீடாவின் கடிதத்துக்குப் போவோம்- இவரோடு ஒரு விஷயத்தில் நான் பெரிதும் மாறுபடுகிறேன். பென்யா நியதோ வென்றதற்கு மெக்ஸிக மக்கள் தொலைக்காட்சி நடிகர்கள் போல ஒரு மத்திய தர வாழ்வை வாழ ஆசைப்படுகிறார்கள் என்பதல்ல காரணம். அது மிகக் குறுகிய பார்வை. வாக்காளர்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதைப் பற்றி அப்படிக் கருதுவது மிகக் குறுகிய பார்வை. சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் பிஆர் ஐ கட்சிக்கு வாக்களித்ததற்கு ஒரு முக்கியக் காரணம் அவர்கள் பிஏஎன் (PAN) கட்சியின் மோசமான ஊழல்கள், மேலும் நிர்வாகத் திறனில்லாமை மீது பெரும் வெறுப்பு கொண்டு விட்டார்கள் என்பதே. மேலும் அவர்கள் நிலைமையை  இடதுசாரிகள் முன்னேற்றுவார்கள் என்பதையும் சிறிதும் நம்பவில்லை. நிறைய மக்கள் இடது சாரிக் கட்சியான பிஆர்டி (PRD) பற்றி அச்சம் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், நாட்டில் புது-தாராளவாதக் கருத்துகள் மேலோங்கி இருக்கின்றன என்பது. இதனால் மக்கள் பிஆர்டி ஆட்சிக்கு வந்தால் வறுமையை மேன்மேலும் பரவலாக விநியோகம் செய்வர் என்றும், ஏழைகளுக்கு மிக்க அதிகாரம் கொடுப்பதால் பொது நிர்வாகம் இன்னுமே மோசமாகும் என்றும் கருதுகிறார்கள். பிஏஎன் கட்சி பிஆர்ஐ கட்சியின் நீண்ட கால ஊழல்களைத் தானும் தொடர்ந்ததோடு மட்டும் நில்லாமல், நிறைய பதவிகளில் முற்றிலும் திறனற்றவர்களை அமர்த்தி இருக்கிறது என்பதால் நிலைமை மிகவுமே மோசமாகி இருக்கிறது. இருந்தாலும், இதெல்லாம் ஒரு சார்பான கருத்துகளே, லீடாவின் கருத்துகள் மதிக்கப்படும் அளவு இவையும் கருதி மதிக்கப்பட வேண்டும்.

முனைவர். சாரா ஹெர்னாண்டஸ், பி.எச்.டி
பேராசிரியர், சமூகவியல் துறை
புதுக் கல்லூரி, ஃப்ளாரிடா
18 அக்டோபர் 2012

Solvanam Magazine thanks Dr.Sarah Hernandez of New College, Florida for her comments, and also for permitting us to translate and publish her reaction to David Lida’s letter on Mexico’s political changes this year.

One Reply to “ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்”

Comments are closed.