க.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்

kanasu2

தற்கால தமிழ் இலக்கியத்தின் பல பரிமாணங்களைக் கொண்ட பல்துறை வளர்ச்சி இருபதாம் நூற்றாண்டில்தான் நிகழ்ந்தது. நாவல், சிறுகதை போன்ற மேலைநாட்டு இலக்கிய வடிவங்கள் நம் இலக்கிய செல்வங்களாயின. தற்கால தமிழ் இலக்கியத்தின் இவ்வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர் க.நா. சுப்பிரமணியம் (1912-1988). க.நா.சு வாழ்க்கை எவ்வளவு நீண்ட காலம் இருந்ததோ அவ்வளவு அவரின் படைப்புகளும், மொழி பெயர்ப்புகளும் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு இருக்கின்றன. க.நா.சு நடத்திய ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ’இலக்கிய வட்டம்’ பத்திரிகைகளிலும், அவர் பொறுப்பாசிரியராக இருந்த ‘ஞானரதம்’, ’முன்றில்’ பத்திரிகைகளிலும்தான் அவரது எழுத்துகளின் பெரும்பகுதி வெளியாகியுள்ளன. மற்றவர்கள் நடத்திய சிற்றிதழ்களிலும் சிறப்பிதழ்களிலும் மலர்களிலும்கூட அவர் எழுதினார். ஆங்கிலத்திலும் க.நா.சு நிறைய எழுதியுள்ளார். முழுநேர எழுத்தாளராகவே அவர் வாழ்ந்தார். எழுதுவது, படிப்பது, இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வது இவைதான் அவரது வாழ்க்கையாக இருந்தன. இதனால் அவரது வாழ்நாளின் இறுதிவரை பொருளாதார சிரமங்களும் கூடவே இருந்தன. அவர் விரும்பியிருந்தால் பணத்தட்டுப்பாடின்றி வாழ்ந்திருக்க முடியும். அதற்கு க.நா.சு, அவரது தந்தை கொடுத்த சொத்துக்களைக் காப்பாற்றி இருந்தாலே போதும். ஆனால் அவர் நேர்மாறாக நடந்து கொண்டார். தந்தையின் சொத்துக்களைப் புத்தகங்கள் வாங்கியும், புத்தகக்கடை நடத்தியும் கரைத்தார். இது தொடர்பாக அவர் வருத்தமுற்றதோ, வேதனைப்பட்டதோ இல்லை.

sachidhanandam‘சூறாவளி; முதல் இதழ் ஏப்ரல் 23, 1939 அன்று வெளியானது.  ‘க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள். இருபதாவது இதழ் அக்டோபர் 15, 1939 அன்று வெளியானது. இந்த இதழ்தான் ’சூறாவளி’யின் கடைசி இதழா என்பது தெரியவில்லை. ஞாயிறுதோறும் ‘சூறாவளி’ வெளியாகும். ‘சூறாவளி’யின் துணையாசிரியராக இருந்தவர் கி.ரா. இதில் இலக்கியம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலக அரசியல் ‘அகல் விளக்கு’, ‘அங்கே’ என்ற தலைப்புகளில் அலசப்பட்டன. ‘ஆயகலைகள்’ என்ற தலைப்பில் சங்கீதம், சினிமா போன்ற மற்றக் கலை வடிவங்கள் குறித்த கட்டுரைகள் வெளியானது. ஆசிரியர் குறிப்புகள் ‘சூறாவளி’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் வழவழப்பான ஆர்ட் காகிதத்தில் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘சூறாவளி’யில் க.நா.சு மட்டும் கிட்டத்தட்ட பதினைந்து புனைப் பெயர்களில் எழுதியிருக்கிறார். மயன், ராஜா, நசிகேதன், தேவசன்மன், சுயம் போன்றவைகள் அதில் சில. ச.து.சு யோகியார், சி.சு.செல்லப்பா, கே. பரமசிவம், பி.எஸ். ராமையா, கி.ரா, கு.ப.ரா, சாலிவாகனன், இலங்கையர்கோன், அ.கி.ஜெயராமன் போன்றவர்கள் சூறாவளியில் எழுதியுள்ளனர்.

சூறாவளிக்குப் பிறகு ‘சந்திரோதயம்’ பத்திரிகையை க.நா.சு கொண்டு வந்தார். ‘சந்திரோதய’த்தின் முதல் இதழ் 1945 ஆம் ஆண்டு வெளியானது. 1939க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலங்களில் அவர் பத்திரிகை ஏதாவது நடத்தினாரா என்பது குறித்துத் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்த ‘சந்திரோதயம்’ இதழ்கள் மாலை: 9, மலர் 10 முதல் மாலை:10, மலர் 24 வரையான (ஜூன் 20, 1945 முதல் ஜூலை 15, 1946 வரை, மாதமிருமுறை) அனைத்து இதழ்களையும் கொண்டு இதை எழுதுகிறேன். ‘சந்திரோதய’மும் ‘சூறாவளி’யைப் போலவே, ‘க்ரௌன்’ அளவில் 64 பக்கங்களில் வெளியானது. ஆனால் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரைக்கும் ‘சூறாவளிக்கும்’ ‘சந்திரோதய’த்துக்கும் இடையே பெரிய மாறுதல்கள்  உள்ளன. ‘சந்திரோதய’த்திலும் அரசியல் நிறையவே இடம் பெற்றுள்ளது. ‘ஊர்க்குருவி’ என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு அரசியல் பற்றியும், ‘திக்விஜயம்’ என்னும் தலைப்பில் இந்திய அரசியல் மற்றும் அயல்நாட்டு அரசியல் பற்றியும் அலசப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சி பற்றியும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.  சங்கீதம், சினிமா பற்றி ‘பாட்டும், கூத்தும்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளன. இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் மகளான லலிதா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள சமையல் கட்டுரைத் தொடர் ஒன்றும் வெளியாகியுள்ளது. உலக இலக்கியம், மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘காலத்தேவன் அடிச்சுவடு’ என்னும் பத்தியில் உலக இலக்கியம் பற்றி எழுதப்பட்டுள்ளன. ‘பெரிய மனிதர்’ என்னும் தலைப்பில் ஸ்டாலின், லெனின், ட்ரூமன் போன்ற அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்த அரசியல் தலைவர்கள் பற்றிய சொற்சித்திரங்கள் வெளியாகியுள்ளன.

இவையெல்லாவற்றிலும் எழுதியவரின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் எழுத்து நடையை ஒப்பிடும்போது அவற்றைக் க.நா.சுதான் எழுதியிருக்க வேண்டும் என்று படுகிறது. ‘சந்திரோதய’த்தில் ஒரு பெரிய மாறுதல் தெரிகிறது. புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்ரமணியம் போன்றவர்கள் எழுதியுள்ளனர். ‘சந்திரோதயம்’ எப்போது நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை.

‘சந்திரோதயம’, மாலை 10, மலர் 7 (அக்டோபர் 20, 1945) இதழில் பக்கம் 56 இல் கண்டனம் என்னும் பத்தியில் ‘மு. அருணாசலமும் தமிழ் மறுமலர்ச்சியும்’ என்னும் நூல் மதிப்புரை வெளியாகியுள்ளது. க.நா.சுவின் இலக்கியப் பார்வையும் அணுகுமுறையும் இனி வருங்காலத்தில் எப்படி இருக்கப் போகிறது என்பதன் பிரகடனமாக இதைக் கொள்ள முடியும். இதில் க.நா.சு. எழுதுகிறார், ’இலக்கியத்திற்குப் பண்டிதர்கள் மட்டும் விரோதிகள் அல்ல. இலக்கியத்தை முறையாகப் படித்து விட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிற எல்லோருமே பரம விரோதிகள்தான். தமிழை முறையாகப் படித்து விட்ட காரணத்தினால் மரபு தெரிந்து விடலாம். ஆனால் அறிவு மழுங்கி விடுகிறது. ரசனை குன்றி விடுகிறது.” 1945 ஆம் ஆண்டில் க.நா.சுவுக்கு ஏற்பட்ட இந்த எண்ணம் ஆண்டு செல்ல, செல்ல உறுதியாகி வருகிறது. இதற்குப் பிறகான அவரது படைப்புகளும், அவர் ஊக்குவித்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

1946 ஆம் ஆண்டு ‘சந்திரோதயம்’ பொங்கல் இதழில் (மாலை 16, மலர் 12) ’காலத்தேவன் அடிச்சுவடு’ பத்தியில் அவர் எழுதுகிறார்: “உலகத்து இலக்கியங்களிலே மகோன்னதமான சிகரங்கள் பல இருக்கின்றன… தமிழ் மரபு தெரியவேண்டும் என்றும் அதில்லா விட்டால் தமிழிலே இலக்கியமே சாத்தியமில்லை என்றும் கூறுகிறவர்களுக்குப் பதில் கூறுவது போல உலக இலக்கிய மரபுகள் தெரிய வேண்டும், அது தெரியாமல் இலக்கிய சிருஷ்டி செய்ய முற்படுவது வீண் வியர்த்தம் என்று சொல்லலாம்.”

ஆக, க.நா.சு. தன் வாழ்க்கை இனி என்னவாக இருக்கப் போகிறது என்பதை முடிவு செய்துவிட்டார். இதற்குப் பிறகான ஆண்டுகளில் அவரது வாழ்வு தமிழ் இலக்கியத்தைப் பற்றி எழுதுவதிலும், உலக இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் கழிகிறது. ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ இரு பத்திரிகைகளும் க.நா.சுவின் 28 ஆவது வயதிலிருந்து 35 வயதுக்குள் வெளிவந்தவை. அவருக்கு இலக்கியம் தவிர அரசியல், சங்கீதம், சினிமா போன்ற துறைகளிலும் அக்கறையும் அறிவும் இருந்தன என்பதற்கு இவ்விரு பத்திரிகைகளும் சாட்சி.

‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ பத்திரிகைகளுக்குப் பிறகு க.நா.சு நடத்திய பத்திரிகை, ’இலக்கிய வட்டம்’.  இதன் முதல் இதழ் நவம்பர் 22, 1962 இல் வெளியிடப்படுகிறது.  1946க்கும் 1963க்கும் இடைப்பட்ட காலங்களில் அவர் பத்திரிகை நடத்தினதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தக் காலகட்டங்களில் வெளியான அவரது பங்களிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இக்கால கட்டத்தில்தான் அவர் ஒரு தீவிர இலக்கிய விமர்சகராக மாற்றமடைகிறார். “நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்கள் கதை சொல்லி மக்களின் பொழுதைப் போக்குவதற்காக உருவானவை அல்ல” என்பதை மூர்க்கமாகச் சொல்கிறார். ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜு, வை.மு.கோதைநாயகி அம்மாள், அநுத்தமா, காண்டேகர், கல்கி, அகிலன், அண்ணாதுரை, நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன் போன்ற அந்தக் காலத்தில் மக்கள் ஆராதித்த பல எழுத்தாளர்களின் எழுத்துகளை , அவை இலக்கியமல்ல என்று சாடினார். இதற்காக அவர் கொடுத்த விலையும் அதிகம். தமிழ்ப்பண்டிதர்களையும், தற்கால எழுத்தாளர்களையும் பற்றி விமர்சனம் செய்ததால் இரு முனைகளிலும் இருந்து கண்டனங்களையும் கடும் எதிர்ப்பையும் அவருக்குச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் இம்மியளவும் கலங்கவில்லை, கவலைப்படவும் இல்லை.  “நான் உன்னத உலகப் படைப்புகள் பற்றிய என் அறிவைக் கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் சொல்கிறேனே தவிர என் சொந்த விருப்பு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி கொண்டு சொல்லவில்லை” என்பதுதான் க.நா.சுவின் பதிலாக இறுதி வரை இருந்தது. தமிழில் யார், யாருடைய எழுத்துகள் இலக்கியமில்லை என்பதுடன், எவர், எவர் இலக்கியம் படைக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதையும் தன் பணியாக இறுதிக் காலம் வரை செய்து வந்தார் அவர். அவரின் இடையறாத பிரச்சாரத்தால்தான் புதுமைப்பித்தன், மௌனி பெயர்கள் தற்கால தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைபேறு அடைந்தன.

“இலக்கிய வட்டம்”, பன்னிரெண்டு பக்களில் இராமல் இராயல் அளவில் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகியுள்ளது. இதற்கு அட்டை கிடையாது. ‘நியூஸ்பிரிண்ட்’ தாளில் அச்சடிக்கப்பட்டு, 26 நையா பைசா விலையில் நவம்பர் 27, 1963 அன்று முதல் இதழ் வெளியிடப்பட்டது. கடைசி இதழான 38ஆவது இதழ் ஏப்ரல் 30, 1965 அன்று வெளி வந்தது. சில இதழ்கள் கால தாமதம் காரணமாக இரட்டை இதழ்களாக வெளியாகின. ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ போல அல்லாமல், ‘இலக்கிய வட்டம்’ இலக்கியம் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தது. இப்பத்திரிகையை க.நா.சு துவங்கக் காரணம், சி.சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ பத்திரிகைதான். சி.சு.செல்லப்பா, க.நா.சு இருவருமே இலக்கிய விமர்சகர்கள் எனச் சுவடு பதித்தவர்கள். இருவரின் திறனாய்வுப் பார்வையும் அடிப்படையிலேயே மாறுபடுபவை. சி.சு. செல்லப்பா ஒரு படைப்புத் தரமானது என்பதற்கான காரணங்களை அப்படைப்பின் உருவம், உள்ளடக்கம், உரையாடல், சூழல், கதைப்பின்னல், பாத்திரங்களின் வார்ப்பு இவற்றின் தன்மைகளைக் கொண்டு முடிவு செய்தார். க.நா.சு. வோ, “இத்தகைய அலசல் விமர்சனம் திறனாய்வாளனின் வாய்ப்பந்தல் போடும் கெட்டிக்காரத் தன்மையில்லாமல் வேறு அல்ல,” என்றார். சி.சு.செல்லப்பா, “க.நா.சு செய்வது வெறும் மனப்பதிவு விமர்சனம். பட்டியல் தயாரிப்பு விவகாரம்,’ எனப் பதில் கொடுத்தார். இதனால் ‘எழுத்து’வில் எழுதுவதைக் க.நா.சு. நிறுத்திக் கொண்டார். இப்போது பார்க்கும்போது ‘எழுத்து’வின் தொடக்க கால இதழ்களில் க.நா.சுவின் படைப்புகள் அதிகம் இடம் பெற்றுள்ளதையும், பிற்கால இதழ்களில் எதுவுமே இல்லாமல் இருப்பதையும் காண முடியும். ‘எழுத்து’வில் எழுதுவதில்லை என முடிவெடுத்த பின்னர் தன்  கருத்துகளையும், எண்ணங்களையும், திட்டங்களையும் தாங்கி வருவதற்கு ஒரு பத்திரிகை தேவை என்று க.நா.சு உணர்ந்திருக்க வேண்டும். இப்படித்தான் அவர் ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையைத் தொடங்கினார்.

’இலக்கிய வட்டம்’  பக்கங்களில் இலக்கியத்துக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டன . குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் சுப்பிரமணிய பாரதியார், கு.அழகிரிசாமி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ஆனந்த குமாரசாமி இவர்கள் பற்றி வெளியிடப்பட்ட தனிச் சிறப்பிதழ்கள். இவ்விதழ்களில் இவர்களின் புகைப்படங்கள் முழு அளவில் வெளியிடப்பட்டன. மேலும் எல்லா ‘இலக்கிய வட்டம்’ இதழ்களிலும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வெளியாகின. உலக அளவில் பேசப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள், மொழி பெயர்ப்புகள், மதிப்புரைகள் வெளியிடப்பட்டன. க.நா.சு. ‘இலக்கிய வட்டத்தில்’ எழுதிய தலையங்கங்கள் எக்காலத்துக்கும் படிக்கத் தக்கவை. உலக இலக்கியங்களைத் தேடிப் படித்து, அவற்றைத் தன்னால் இயன்ற அளவுக்குத் தமிழில் மொழி பெயர்த்தார். மேலை நாட்டு இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் திறனாய்வாளர்களை, பண்டிதர்களைக் கிண்டல் செய்தார். ஆனால் தமிழில் திறனாய்வுக் கோட்பாடுகளும், கொள்கைகளும் தமிழ்ப் படைப்பில் இருந்தே உருவாகி வர வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ‘நான் விமர்சகன் அல்லன்’ என்றும் எழுதி வந்தார்.

ஒரு மொழியில் இலக்கியம் வளர்வதற்கு வளமான சிந்தனைப் பின்னணி தேவை என்று க.நா.சு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதனையும் தானே செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கிறதே என்று ஆதங்கத்தில் ஓர் அறிவிப்பை ‘இலக்கிய வட்டம்’, 6ஆம் இதழில் வெளியிட்டார். ‘இலக்கிய வட்டத்தின்’ ஆதரவில் ஏப்ரல் 14, 1964 இல் தொடங்கி இன்றைய இலக்கியச் சிந்தனை சிற்பிகள் என்ற ஒரு வரிசைத் தமிழ் நூல்கள் வெளி வரும். இன்றைய நம் வாழ்வின் வளத்தைப் பூரணமாக அறிந்து கொள்ள இவ்வரிசை நூல்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். கீழ்கண்ட எட்டுச் சிந்தனையாளர்கள் பற்றிய நூல்கள் இந்த வரிசையில் வெளி வரும். 1) ராஜாராம் மோகன்ராய், 2) ஜோதி ராமலிங்கம், 3) ஸ்வாமி விவேகானந்தர், 4) யோகி அரவிந்தர், 5)மகாகவி பாரதியார், 6) குருதேவ் தாகூர், 7) டாக்டர் ஆனந்த குமாரசாமி, 8. மகாத்மா காந்தி. ஒவ்வொன்றும் 96 பக்க அளவில் தரமான நூல்களாக வெளி வரும்.”

இந்த நூல்களில் சிலவற்றின் கையெழுத்துப் பிரதிகளைக் க.நா.சு வீட்டுக்குச்  சி.சு.செல்லப்பாவுடன் சென்றபோது நான் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்த வரை இந்த நூல்களில் ஒன்று கூட புத்தக வடிவம் பெறவில்லை. மிகப் பின்னாடி, பல ஆண்டுகள் கழித்து, கிட்டத்தட்ட முப்பது சிந்தனையாளர்களைப் பற்றி, நான்கிலிருந்து ஆறு பக்க அளவில் தினமணிக் கதிரில் தொடர் கட்டுரைகள் எழுதினார் க.நா.சு.

1965 இல் ‘இலக்கிய வட்டம்’ நின்று விட்டது. தமிழில் எழுதிச் சம்பாதித்துக் குடும்பம் நடத்துவது முடியாத காரியம் என்ற நிர்பந்தத்தால் சென்னையை விட்டு க.நா.சு. தில்லிக்குச் சென்றார். ஆங்கிலத்தில் எழுதுவதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம்தான் அவரால் ஓரளவுக்குச் சம்பாதிக்க முடிந்தது. தில்லியிலிருந்து கி.கஸ்தூரிரங்கனை ஆசிரியராகக் கொண்டு வந்த ‘கணையாழி’க்கு க.நா.சு எழுதினார். தில்லியில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்புகளில் பங்கேற்றார். இருபதாண்டுகள் கழித்து சென்னைத் திரும்பினார். முழுநேர எழுத்தாளராக மீண்டும் சென்னையில் வாழ முயற்சித்தார். முடியாமல் தில்லிக்குத் திரும்பினார். க.நா.சு 1988 இல் காலமாகி விட்டார்.

க.நா.சு என்ற படைப்பாளியின் இலக்கிய ஆளுமை முழுவதையும் வெளிப்படுத்திய பத்திரிகையென்று ‘இலக்கிய வட்ட’த்தைக் கொள்ளலாம்.  ஒரு மொழி இலக்கிய வளம் பெறுவது தன்னலமற்ற உழைப்பு, அக்கறை, உண்மையான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம்தான் சாத்தியம். அதைத்தான் நாம் க.நா.சுவிடம் பார்க்கிறோம்.

’இலக்கிய வட்டம்’ இதழ்களில் சில மொழி பெயர்ப்பு கவிதைகளும், சில சிறுகதைகளும் மொழி பெயர்த்தவரின் பெயர்  இடப்படாமலேயே வெளி வந்துள்ளன. இலக்கிய வட்டத்திலிருந்து இத்தொகுப்பில் சேர்க்கப்பட்ட படைப்புகள் சிறந்தவைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவைகள் மட்டுமே அல்ல. அப்பத்திரிகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவையே ஆகும்.  ஒரு இலக்கியச் சிற்றேடு எப்படிப் பன்முகத் தன்மை கொண்டிருந்தது, கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டவை இப்படைப்புகள்.

தொகுப்புரை
இலக்கியவட்டம் – இதழ்தொகுப்பு, சந்தியா பதிப்பகம்
25.12.2004
சென்னை