தமிழிலக்கியத்தில் நவீன யுகம் என்பது துவங்கியதெப்போது என்று அறுதியான முடிவேதும் தெரியவில்லை. உரைநடை 19ஆம் நூற்றாண்டிலேயே நவீனப்பட்டு விட்டது என்றால், நாவல், சிறுகதை, நாடகம் ஆகியன 20ஆம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில்தான் நவீனப்படத் துவங்குகின்றன. கவிதையோ பாரதியை விட்டு விட்டு நோக்கினால் ‘40களில்தான் நவீனப்படத் துவங்குகிறது.
இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாகவும் இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, அறிவுக் கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.
கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.
சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று. இதழை மூன்று விதமாகப் பிரித்து அமைத்திருக்கிறோம். க.நா.சு வின் எழுத்திலிருந்தே அவருடைய பன்முகச் செயல்பாட்டையும், வாழ்நாள் பூராவும் அவர் வலியுறுத்தி வந்த சில அடிப்படை அணுகல்களையும் தெளிவாகக் காட்டுவனவாகத் தெரியும் சில கட்டுரைகள், புத்தக முன்னுரை ஆகியவற்றை ஒரு பகுதியாக அமைத்திருக்கிறோம். இந்தத் தொகுப்பில், தனது முன்னோடியாகவும், ஆதர்ச புருஷராகவும் க.நா.சுவே பார்க்கும் பாரதியைப் பற்றிய கட்டுரையில் அவர் சுட்டும் நான்கு குணங்கள்- வேகம், நோக்கம், உண்மை, சுதந்திரம். ஆனால் கட்டுரையில் காட்டுவன- தனிமை, புதுமை, பொறுப்பெடுப்பது ஆகியன. இந்தக் கட்டுரை கிட்டத் தட்ட க.நா.சு என்ன மதிப்பீடுகளை வைத்துத் தன் வாழ்வை நடத்தினார் என்று கூடத் தெரிவிப்பதாகத் தோன்றுகிறது.
அடுத்து தமிழிலக்கியத்தில் அவர் பங்காக நன்கு அறியப்படும் இலக்கிய விமர்சனச் செயல்பாடு தொடர்பானது. இலக்கிய விமர்சனம் என்பது என்ன என்று அவர் கருதி ஒரு கட்டுரையில் சொல்வது- பழமையில் இருப்பது வளர்ச்சியாகாது. பழமை எல்லாம் ஒரே தரத்தது அல்ல. நம் விமர்சன மரபு நம் இலக்கியத்தில் இருந்து எழாமல், மேலை விமர்சன மரபிலிருந்து கடன் வாங்கிய கருத்துகள், சொற்களால் நகர்கிறது. இது வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது. நம் பண்டை, சமகால இலக்கியங்களை நாம் நம் பண்பாடு, சமூகம் ஆகியவற்றின் பின்னணியில் விமர்சிக்கத் துவங்கினால்தான் வளர்ச்சி ஏற்படும்.
இக்கட்டுரையில் அவர் சொல்லும் சில விஷயங்கள் வியப்பளிப்பவை. மேலை விமர்சன மரபு அத்தனை வளரவில்லை என்று முடிபாகச் சொல்கிறார். அது அலசலில் சிக்கித் தேங்கி விட்டது. இந்திய மரபோ அனுபவ விமரிசனமாகச் சிறிது நகர்ந்து நின்று விட்டது. அலசல் விமரிசனம் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது, ரஸனையைப் பொருத்தது அல்ல என்கிறார். ஆக அலசல் என்பதால் வளர்ச்சி இராது என்றும், அனுபவ விமர்சனம் என்பதிலும் ரஸனை இல்லையென்றால் முன்னேற்றம் இராது என்றும் அவர் கருதுவது தெளிவு. மேலை விமர்சனம் அவர் கருதியபடி தேக்கத்தில் இல்லை, அது பல வகைகளில் தன்னைத் தோலுரித்துப் புதுப்புதுச் சட்டைகளை அணிந்து இன்னும் ஒரு வசீகரமான பாம்பாகவே நெளிந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக முதலியத்தின் பல வடிவ மாறுதல்களோடு சமுதாய, உற்பத்தி முறை மாறுதல்களோடு மேற்கு தன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வது தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது ஏனென்றால் அங்கு விமர்சனம் என்பதற்கு பல நூறாண்டுகளாக ஒரு மரியாதை இருக்கிறது எனலாம். அந்த விமரிசன முறையை, பார்வையை, அணுகலை, நடைமுறையை வளர்க்காததாலேயே இந்தியாவும், தமிழகமும் பல நூறாண்டுகளாகத் தேக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தத் தேக்கமும் இன்று நீங்கி ஒரு வளர்ச்சிப் பாதை உருவாகத் துவங்கி இருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதைக்கு ஓரளவு வழியிட்டவர்களில் க.நா.சு ஒருவர்.
ஆனால் ரஸனை என்பதுதான் என்ன? தத்துவ தரிசனம் என்பதை ஒட்டியே ஒவ்வொரு வாழ்வும் அமைகிறதால் விமரிசகரின் ரஸனையில் ஒரு வாழ்க்கைப் பார்வை இருக்க வேண்டும், அதை ஒட்டி அவர் ஒரு இலக்கியப் படைப்பை எப்படி அனுபவிக்கிறார், அதில் குறை நிறைகளைக் காண்கிறார் என்பதே விமரிசனமாகும் என்று அவர் கருதுகிறார்.
1930களில் சிறு நகரங்களை விடுத்துச் சென்னை வந்த பல இலக்கியவாதிகளைப் போல சென்னைக்கு வரும் க.நா.சு அன்றிலிருந்து தன் வாழ்வு முடிவு வரை தேசமெங்கும் சஞ்சரிப்பவராகவே இருந்திருக்கிறார். க.நா.சு பற்றிய தன் சிறு புத்தகத்தில் தன் குடும்பத்தைப் போஷிக்குமளவுக்கு க.நா.சுவால் ஒரு போதும் பொருள் ஈட்ட முடிந்ததில்லை எனத் தஞ்சை பிரகாஷ் பல இடங்களில் சொல்கிறார்.
ஒரு முன்முடிவோடு சென்னைக்கு வந்த கதையைச் சொல்லும் கட்டுரையில் அவர் இளம் பிராயத்திலிருந்தே இலக்கியம் என்பதை ஒரு வாழ்க்கை முறையாகப் பாவித்ததாகச் சொல்கிறார். அது முழுக்க ஆண் தன்மை நிரம்பிய முயற்சியாக நமக்கு இன்று தெரியலாம். வேட்டையாடப் போகிற ஆண்கள் தொடர்ந்து தனியராக வாழ்வது அவசியமாகிப் போவதால், அதையே ஒரு நற்பண்பாக ஏற்று அதை ஒரு மதிப்பீடாக்கிக் கொள்வதைப் போல கநாசு தன் தனித்த, குடும்பத் தளைகளை விடுத்த, விடுதிகளில் அறைகளில் தங்கி உணவு விடுதிகளில் உண்டு வாழும் வாழ்வை ஒரு அவசிய மதிப்பீடாக்கிக் கொண்டு இருந்தார் என்பது தெரிகிறது. இலக்கியத்தில் குடும்பஸ்த்ரீகளுக்கும் விபச்சாரிகளுக்கும் உள்ள இடைவெளி குறைந்தால் இலக்கிய நோக்கம் தடைப்படும், தேங்கும் என்று ஜேம்ஸ் ஜாய்ஸின் கருத்தை அவர் எதிரொலிப்பதைப் பார்த்தால், நல் இலக்கியம் படைக்க விரும்பினால், தனியரான, சுதந்திர வாழ்க்கையைத்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியது புலனாகிறது. தன்னைத் தவிர வேறு எவருக்கும் பொறுப்பேற்றால் அது சமரசத்தில்தான் முடியும் என்று கருதியதாகத் தெரிகிறது. அவர் தேர்ந்தெடுத்த ஆதர்ச இலக்கியவாதிகளும் இப்படிப் பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்று நாம் எளிதாகவே ஊகிக்கலாம். அவருடைய முக்கியமான நாவலான பொய்த்தேவுடைய நாயகனும் இப்படி ஒரு தனியனாகவே இருந்து உறவுகளைத் தளைகள் என்றே கருதியவனாகப் படைக்கப் பட்டிருக்கிறான்.
இது நவீனச் சமுதாயத்தின் தாக்கம் என்று ஒருபுறம் தோன்றினாலும், இது பண்டைச் சமுதாயத்தின் ஒரு கூறின் நீட்சி என்றே கநாசு கருதியதாகத் தெரிகிறது. இதைத்தான் சென்னை பூராவும் தான் சுற்றி அலைந்து இருந்தாலும், அங்கு பல வருடம் வாழ்ந்திருந்தாலும், சாத்தனூர் வாசியாகவே தான் இருந்ததாக அவர் தெரிவிக்கிறார். நகரம் போலிகள் நிறைந்தது என்ற நினைப்பிலேயே அவர் ‘சென்னை வந்தேன்’ கட்டுரையை எழுதுகிறார். முதல் தலைமுறையாக நகரம் புகுந்தவர்களில் பலருக்கும் இந்த நகரம் போலிகள் நிறைந்த இடம் என்ற கருத்து இருப்பதை 50கள், 60களில் இருக்கும் எத்தனையோ கதைகள், சினிமாக்கள், நாடகங்களில் நாம் காண முடியும். இந்த ஒரு புள்ளியிலாவது க.நா.சு பொதுஜன ரசனையிலிருந்து விலகாமல் இருந்திருக்கிறார் என்பது அவருக்குத் தெரிந்தால் என்ன செய்திருப்பார் என்று ஊகிப்பது சுவாரசியமான ஒரு விளையாட்டாகத் தெரிகிறது.
இரண்டாம் பகுதிக் கட்டுரைகளில் க.நா.சுவின் சமகாலத்தவரான சி.சு.செல்லப்பா, அடுத்த தலைமுறை இலக்கியவாதிகளான சுந்தர ராமசாமி, பிரமிள், கி.அ.சச்சிதானந்தம் ஆகியோரின் விமர்சனப் பார்வைகள் இடம் பெறுகின்றன. மேலே சொன்ன பொறுப்புகள் தளைகள், சுதந்திரத்தை ஒடுக்குவன என்று க.நா.சு நினைத்தவராகத் தெரிகிறார் என்று சுட்டியது ஏதோ கற்பனை அல்ல. பொய்த்தேவு குறித்துச் சுருக்கமான கருத்து சொல்லும் பிரமிள், இதே கருத்தைச் சொல்கிறார். பொய்த்தேவு என்கிற நாவலைச் சிலாகிக்கும் பிரமிள், அதன் சில குறைகள் அதன் தத்துவ, கோட்பாட்டுக் குறிக்கோளால் உருவானவை, அந்தத் தத்துவத்திற்குக் கதையை, நம்மை இட்டுச் செல்லவென ஆனவை என்று சுட்டுகிறார். அவர் சொல்வதில் ஒரு வரி சுவாரசியமானது. க.நா.சுவின் எழுத்து மேலோட்டமான சரளபாவம் கொண்டது என்று சொல்லும் வரி அது. தோற்றத்தைப் பார்த்து நாம் ஏமாறக் கூடாது என்று சொல்லாமல் சொல்லும் வரி. அடுத்த பத்தியிலேயே பொய்த்தேவு என்ற சொல்லுக்கு பிரமிள் கொடுக்கும் விளக்கம் இந்த வரிக்குப் பொருந்தும். தோற்ற எளிமைக்குப் பின் ஒளிந்திருப்பது ஒரு சிந்தனை, தத்துவப் பார்வை. அதற்கு இந்தியப் பாரம்பரியமும் உண்டு, உலகச் சிந்தனைக் கருவூலத்திலும் தொடர்பு உண்டு.
க.நா.சுவின் சமகாலத்தவரான சி.சு.செல்லப்பா ‘பொய்த்தேவு’ நாவலைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கொடுத்திருக்கிறோம். க.நா.சு அதிகம் மதிக்காத அலசல் பார்வை கொண்ட கட்டுரை இது. சி.சு.செல்லப்பாவின் அலசல் விமர்சனம் இந்த நாவலைப் பொருத்தவரை அசாதாரணமான முடிச்சவிழ்ப்புகளைக் கொடுப்பதிலிருந்தே க.நா.சுவின் அந்த அபிப்பிராயம் சரியில்லாதது என்பதை நாம் அறிய முடியும். இங்கு சி.சு.செல்லப்பாவின் கூர்மையான கவனிப்புகள் க.நா.சுவின் அணுகலில் எத்தனை தூரம் சிந்தனை, உணர்ச்சிகளுக்கு முன் சென்றிருக்கின்றது என்பதையும், அந்த நாவலின் உருவமைப்பு எவ்வளவுக்குத் திட்டமிட்டு நகர்கிறது என்பதையும் காட்டுகின்றன. க.நா.சுதான் அந்த நாவலை எழுதியவர் என்பதால் அவருக்குத்தான் எது திட்டமிட்டு நடந்தது, எது தன்னிச்சையாக, தற்செயலாக நிகழ்ந்தது என்பது தெரியும் என்பது உண்மைதான். ஆனால் எழுதுபவருக்கே தெரியாதவை வாசகருக்குத் தெரியும் என்பதும் ஒரு விமர்சன மரபின் உண்மைதானே?
சி.சு.செல்லப்பா காட்டும் ஒரு மேற்கோள், அந்த நாவலிலிருந்து கிடைப்பது. அது, வாழ்க்கைப் பாதையை முன் சிந்தனையால் வகுத்துக் கொண்டு அதற்குப் பிறகு வாழ வேண்டும் என்பதையே கெட்டிக்காரத்தனம் என்று அறிவிக்கிறது. ஆனால் செல்லப்பா அடுத்த பத்தியில் அந்த நாவலின் மையப் பாத்திரம் எப்படி இந்த வகை முன் தீர்மானமின்றி தானாகத் தட்டுப்பட்ட வழிகளாலேயே செலுத்தப்பட்டு பயணிக்கிறான் என்று வாதிக்கிறார். இந்த வாதம் எத்தனை தூரம் பொருத்தமானது என்பது தெளிவாக இல்லை. ஏனெனில் க.நா.சு வின் அணுகலில் சோமு முதலி என்ற பாத்திரம் எதையும் நுட்பமாக உணர்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு மற்றவருக்கு முன் நகர்ந்து விடுவதை விரும்புகிற பாத்திரம். அதன்படி அவ்வப்போது எழும் சூழல் வினோதங்களால் மூழ்கடிக்கப்படாமல் தாண்டிப் போவதே சோமு முதலியின் முன் முடிவு. தன் பயணத்துக்கு அடித்தளத்திலிருந்து எழும் அவசியத்தில் இருக்கும் சோமு முதலி, பிறரின் நடத்தைகள், தேர்வுகளைத் தான் நம்பி இருக்கிற நிலையில், அவர்களுக்கு முன்பாக ஊகத்தால் அடுத்த கட்டத்திற்குச் சமூகம் செல்லவிருப்பது எத்திசை, என்ன வண்ணம் என்பதைத் தான் அறிய வேண்டும் என்பதுதான். அதைத்தான் ‘கெட்டிக்காரத்தனமாக’ சோமு முதலி செய்ததாக க.நா.சு அமைத்திருந்தார் என்று வாதிட நம்மால் முடியும். அலசல் விமர்சனத்தின் பிரச்சினை இதுவாக இருக்கலாம் என்பதாலேயே க.நா.சு அதை விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது. இருந்த போதும் செல்லப்பாவின் விமர்சனம் அதன் கூரிய புரிதல்களால் நிச்சயம் நமக்கு ஒரு வழிகாட்டிதான்.
க.நா.சு வுக்கு அடுத்த தலைமுறையினரான சுந்தர ராமசாமி, சமகாலப் படைப்பாளியாகவும் க.நா.சுவாலேயே சிறந்த சிறுகதை புனைவாளராக உயர்த்தப்பட்டு இருந்திருக்கிறார். அவருடைய கட்டுரையில் க.நா.சுவின் பன்முக ஆளுமை அலசிப் பார்க்கப்படுகிறது. சு.ரா சொல்வனவற்றில் நமக்குக் கிட்டுவன என்று பார்த்தால் பல தலைமுறை வாசகர்களின் மீது க.நா.சுவின் மொழிபெயர்ப்புகளின் தாக்கம் அபரிமிதமானது என்பதும், தமிழ் இலக்கியத்தில் எவை சிறந்த எழுத்துகள் என்று அவர் சுட்டிக் காட்டியவை இன்னும் நின்று கொண்டிருக்கின்றன, தலைமுறை தலைமுறைகளாக வாசகர்களுக்கு அவை நல்ல பாதையைத் திறந்து விட்டன என்பதும். க.நா.சுவின் வரலாற்றுப் பணியை விதந்தோதுவதாக, ஒரு காலகட்டத்திலிருந்து இன்னொரு காலகட்டத்திற்குத் தமிழிலக்கியம் மாறிப் பாய்வதற்கு வழிகளைத் திறந்து விட்ட பெருவெளிச் சஞ்சாரி, மாலுமி அவர் என்று சொல்வதாகத் தெரிகிறது.
இதற்கடுத்த பிரிவில் தமிழில், இன்றைய படைப்பிலக்கியம், விமர்சனம் ஆகிய வடிவு/ துறைகளில் முக்கியமானவராகக் கருதப்படும் ஜெயமோகனின் கட்டுரை, க.நா.சுவின் நண்பராகவும், பிரசுரகர்த்தராகவும் இருந்த தஞ்சை பிரகாஷின் புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு, இளைஞரும் இன்றைய தலைமுறை வாசகருமான ரா.கிரிதரன் க.நா.சுவின் முத்திரை நாவல் எனக் கருதப்படுகிற பொய்த்தேவு குறித்து எழுதிய ஒரு புத்தக மதிப்புரையும் இடம் பெறுகின்றன.
க.நா.சு தாமாகப் படைத்துச் சாதித்தவற்றை விட, அவர் பிறரிடம் சுட்டிக் காட்டி தரமெதுவென அறியக் கொடுத்த மதிப்பீடுகளும், முடிவுகளுமே மிக்க தாக்கம் உள்ளவை என்று சொல்லும் சுந்தர ராமசாமியின் நிலைபாட்டிலிருந்து தொடரும் ஒரு சிந்தனையாக, அதை மேலும் கூர்மைப்படுத்தும் ஒரு நிலைபாடாக ஜெயமோகனின் கருத்து வெளிப்படுகிறது.
எந்த ஒரு இலக்கிய வடிவிலும், ஒரு படைப்பாளியாக க.நா.சு முதன்மை நிலையில் இல்லை என்று சொல்லும் ஜெயமோகன் அவரை ஒரு இலக்கிய மையம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் குறிப்பிடுகிறார். அங்கிருந்து பலருக்குப் புறப்பாடும், நெடும்பயணத்துக்கான ஊக்கமும் கிட்டி இருக்கிறது என்பது ஜெயமோகனின் கருத்து. ஆனால் க.நா.சு தன்னளவில் ஒரு ஆளுமை இல்லை என்பதையும் சொல்கிறார். இருந்த போதும் படைப்பிலக்கியத்துக்கு உள்ள நெகிழ்ச்சியான அமைப்பால், க.நா.சுவின் பல படைப்புகள் தம் அமைப்பிலுள்ள குறைபாடுகளைத் தாண்டிய தாக்கம் பெறுவதையும் சுட்டுகிறார். இவரும் பொய்த்தேவு என்பதைத் தமிழின் நவீன இலக்கியத்தில், நாவல் என்ற வடிவின் முதல் மைல்கல்லாகச் சுட்டுகிறதைக் கவனிக்க வேண்டும். இந்த மதிப்பிடலை விட ஜெயமோகனின் முக்கிய அளிப்பாக இக்கட்டுரையில் வெளியாவது, க.நா.சுவிடம் இருந்த பழமை மீதான ஈர்ப்பும், விலகலும் குறித்த அவரது அவதானிப்புகள். இதை உய்த்துணர ஒருவர் தாமே ஒரு சஞ்சாரியாகவும், பின்னர் ஓரிடத்தில் நிலைத்த வாழ்வைச் சில காலம் பெற்றவராகவும் இருப்பது அவசியம். ‘வீட்டுக்குத் திரும்புதல்’ என்பதைக் குறித்த ஒரு நாவலை இந்த இதழில் விமரிசனம் செய்யும் எம்.ஏ.சுசீலா இந்தக் கருத்தோட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். தற்செயலாக இந்த இதழில் பொருந்திய அந்த விமர்சனம், க.நா.சுவின் உள்மனக் கிடக்கை குறித்த ஜெயமோகனின் அவதானிப்புடன் பொருந்துகிறது. இரண்டும் சஞ்சாரிகளின் மனதில் ஏற்படக் கூடிய ஒரு பொய்த்தேவு இந்த ஊர் திரும்புதல் பற்றிய வேட்கை என்று சுட்டுகின்றன.
இந்த அவதானிப்பு ஏதோ விமரிசகர் தன் உள்ளக்கிடக்கையை க.நா.சுவின் மீது ஏற்றிப் பார்க்கிற ஒன்றல்ல என்பதைத் தஞ்சை பிரகாஷ், க.நா.சு தன் இறுதி வருடங்களில் தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றோரம் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கு தங்கி விட வேண்டும் என்று விரும்பியதைச் சொல்கையில் நமக்கு உறுதியாகிறது. சாஹித்திய அகதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் பற்றிய புத்தக வரிசையில் க.நா.சு பற்றிப் பிரகாஷ் எழுதிய புத்தகத்தின் விவரிப்பு மைத்ரேயனின் கட்டுரையில் கிட்டும். அடுத்தடுத்த தலைமுறைகளிடம் க.நா.சு தொடர்ந்து எழுப்பிய மறுவினைகள், அதிர்வலைகள், உள்ளக் கிளர்ச்சிகள் இப்படி சுந்தர ராமசாமி, கி.அ. சச்சிதானந்தம், பிரமிள், தஞ்சை பிரகாஷ், என்று இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் பிறந்த மனிதர்களில் துவங்கி அதற்கடுத்த இன்று இயங்கி வரும் தலைமுறையினரான ஜெயமோகன், ரா.கிரிதரன் போன்றார் வரை தொடர்கின்றன என்பதை இந்த இதழில் வெளியாகி இருக்கிற ட்டுரைகளிலிருந்து நாம் அறியலாம்.
இங்கு பிரசுரமானவற்றை இப்படிப் பாகுபடுத்திப் பார்க்கலாம். க.நா.சுவின் செயல்பாட்டின் தர்க்கங்கள், அவரது மதிப்பீடுகள், அவர் போக நினைத்த திக்குகள் என்பன அவரது சில கட்டுரைகளில் கிட்டுகின்றன. அவற்றிலிருந்து ஒரு சிறு தொகுப்பை முதல் பிரிவில் வைக்கலாம்.
விமரிசனத்தின் நோக்கம்- கநாசு
சென்னைக்கு வந்தேன் – க.நா.சு
மூன்று சிறுகதையாசிரியர்கள்- கநாசு
பொய்த்தேவு முன்னுரை- கநாசு
உலக இலக்கியம்- கநாசு
க.நா.சுவின் சமகாலத்தவராகவும், அடுத்த தலைமுறை இலக்கியகர்த்தாக்களாகவும் இருந்த சிலரின் பார்வையில் க.நா.சு அன்றும் இன்றும் எப்படி இருந்தார், இருக்கிறார் என்பதைச் சுட்டும் கட்டுரைகளின் தொகுப்பு அடுத்த பகுதி.
பொய்த்தேவு- சி.சு.செல்லப்பாவின் விமரிசனக் குறிப்புகள்
கநாசுவின் இலக்கியச் செயல்பாடு- சு.ரா
பொய்த்தேவு குறித்து- பிரமிள்
கநாசுவின் இலக்கிய வட்டம்- கி.அ. சச்சிதானந்தம்
மேல்கண்ட தலைமுறைக்கு அடுத்த சில தலைமுறையினர்களின் கருத்தில், பார்வையில் க.நா.சுவின் உலகம் எப்படி எடை போடப்படுகிறது என்பதை, தஞ்சை பிரகாஷின் புத்தகம் பற்றிய குறிப்பிலிருந்தும், இன்று எழுதி வரும் எழுத்தாளர்களில் படைப்பிலக்கியவாதியாகவும், விமர்சகராகவும் நன்கு தெரியவந்துள்ள ஜெயமோகனின் கூரிய சீர்தூக்கலிலும், பொய்த்தேவு என்னும் பாதை திறப்பு நாவலை இன்றைய வாசகராகக் கவனித்து மதிக்கும் கிரிதரனின் கட்டுரையிலும் காணலாம்.
கநாசுவின் படைப்புகள்- ஜெயமோகன்
பொய்த்தேவு ஒரு பார்வை- ரா.கிரிதரன்
க.நா.சு பற்றிய தஞ்சை பிரகாஷின் புத்தகம்- மைத்ரேயன்
இவை தவிர க. நா.சு பற்றி இணைய வெளியில் கிட்டும் பல கட்டுரைகளுக்கான சுட்டிகளை இங்கு கொடுத்திருக்கிறோம். க.நா.சுவை தம் சொந்த வாழ்விலேயே நன்கு அறிந்தவர்களான, வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் போன்றாரில் துவங்கி இன்றைய தலைமுறையினர் பலர் வரை இந்தச் சுட்டிகள் பல பத்தாண்டுகளின் அனுபவங்களைச் சுமப்பவை. வரலாற்றுணர்வுள்ள எவரும் இவற்றைத் தொகுத்துப் பார்க்க இது ஒரு நல்ல தருணம்.
சொல்வனத்தில் க.நா.சு:
க.நா.சு – கனவும் காரியங்களும் – எம்.கோபாலகிருஷ்ணன்
க.நா.சுப்பிரமணியன் பற்றிய புதிய நூல் – அசோகமித்திரன்
இணையத்தில் க.நா.சு:
அழியாச்சுடர்கள் – க.நா.சு தொகுப்பு
விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம் – செங்கோட்டை ஸ்ரீராம்
வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்
க.நா.சுவின் தட்டச்சுப்பொறி – ஜெயமோகன்
க.நா.சு.வும் நானும் – வெங்கட் சாமிநாதன் – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3
சமரசங்களை விரும்பாத க.நா.சு – ராஜாமணி
க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம் – சுகுமாரன்
க.நா.சுவின் எழுத்து மேஜை – சுகுமாரன்
க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் – உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல் – ஜி.குப்புசாமி
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் – பழ.அதியமான்
எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு – பாரதி மணி
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! – பாரதி மணி
[இந்த இதழில் இடம்பெறும் க.நா.சு கோட்டோவியத்துக்கு காலச்சுவடு இதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதழில் மீள் பிரசுரம் செய்திருக்கும் கட்டுரைகளுக்காக, எழுதிய படைப்பாளிகளுக்கும், வெளியிட்ட இதழ்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.]
One Reply to “க.நா.சு சிறப்பிதழ்”
Comments are closed.