தஞ்சை பிரகாஷ் இன்று நடுவயதான இலக்கிய வாசகர்களுக்கு நன்கு தெரியக் கூடிய பெயர். தம் 20களில் தமிழிலக்கியத்தில் இன்று உலாவும் வாசகர்களில் சிலருக்கே இவரை உடனே தெரிய வரும் என்று நினைக்கிறேன். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தமிழிலக்கியத்துக்குப் பெரும் கொடை கொடுத்த பல பத்து இலக்கிய வாதிகளில் இவர் நிச்சயமாக ஒருவர். அப்படிப் பலரைப் போல இவரும் ஒரு இலக்கிய ஏட்டை நடத்தி, நஷ்டம் தாங்காது விட்டவர். க.நா.சு, தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா போன்ற சென்ற தலைமுறை ஆளுமைகளை நன்கு தெரிந்தவர். க.நா.சுவுடன் நெருங்கிப் பழகிய அனுபவமும் இவருக்கு உண்டு. நான் இவரைத் தஞ்சையில் ஒரு முறையும், என் வீட்டுக்கு இவர் வந்த போது ஒரு முறையும்தான் சந்தித்திருக்கிறேன். இனிய முறையில் பழகும் இவருடைய பல முக இயக்கங்கள் பற்றி எனக்குப் பின்னால்தான் நிறையத் தெரிய வந்தது. நான் சந்தித்துச் சில மாதங்கள் கழித்து திடீரென்று இவர் இறந்து விட்டாரென்ற செய்தி கேட்டு மனம் துயரப்பட்டது. தஞ்சையிலேயே நான் இருந்த சில மாதங்களில் இவரைப் பற்றி அதிகம் தெரியாததாலும், எனக்கியல்பான கூச்சத்தாலும் இவரைச் சந்திக்காமல் இருந்ததில் நிறைய இலக்கிய நடப்புகள் பற்றிய தகவல்கள் தெரியாமல் விட்டிருக்கிறோம் என்று பின்னாளில் தெரிந்தது. இளம்பிராயத்தில் வரலாறு குறித்த விழிப்புணர்வு அத்தனை வளர்ந்திருக்கவில்லை.
க.நா.சு சிறப்பிதழ் தயாரிக்க முனைந்தபோது இவர் சாஹித்திய அகதமிக்காக க.நா.சு பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறாரென்று தெரிந்தது. அந்தப் புத்தகத்தை என் நண்பர் ஒருவர் எனக்கு முந்தைய வருடம் வாங்கி அனுப்பி இருந்திருக்கிறார். அதை நான் பிரித்துப் படிக்காமல் விட்டு வைத்திருக்கிறேன். சென்னைக்கு வந்து சில மாதங்கள் இருந்து விட்டு ஊர் திரும்பியதும், க.நா.சு இதழைத் தயாரிப்பதில் எல்லாரும் முனைந்திருக்கையில், என் புத்தக அலமாரியை ஒரு கண்ணோட்டம் விட்டேன். இந்தப் புத்தகம் கண்ணில் பட்டு வியந்தேன். இது என்னிடம் இருப்பது எனக்கு ஏன் நினைவில்லை என்பது புரியவில்லை. ஆனால் சென்னையில் அவரைச் சந்தித்தபோது சேதுபதி அருணாசலம் இதை வாங்குவதற்குத் தேடிக் கொண்டிருந்தார் என்பது நினைவு வந்தது. சேதுபதியும், இன்னொரு நண்பரும் சாஹித்திய அகதமியில் இந்தப் புத்தகம் இருப்பில் இல்லை, தீர்ந்து விட்டது என்று சொன்னார்கள். அதனால் இந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன், இதிலிருந்து இந்தச் சிறப்பிதழுக்குச் சேர வேண்டியது அவசியமாக என்ன இருக்கிறதென்று பார்க்கும் உத்தேசத்தோடு.
இலக்கியகர்த்தா ஒருவரைப் பற்றிய புத்தகம் என்பதே தெரியாமல் ஏதோ ஒரு குறுநாவல் போல இந்தப் புத்தகத்தை வெகு வேகமாகப் படிக்க முடிந்தது. நடை அப்படி ஒரு ஓட்டம். பேசுவது போல எழுதி இருக்கிறார். அவர் எழுதுகையிலேயே நாளைக் காலையில் இதை அச்சடிக்கக் கொடுக்க வேண்டும் என்று முடிவோடு எழுதியது போன்ற ஒரு வேகம். நினைவிலிருந்து எழுதுபவரைப் போல ஒரு ஆற்றொழுக்கு. இதில் உள்ள பெருமளவு விவரங்கள், பிரகாஷுக்குப் பத்துப் பதினைந்தாண்டுகள் கழித்தே தமிழின் நவீன இலக்கிய உலகுக்குப் பரிச்சயம் பெற்ற என் போன்றாரில் பலருக்கும் தெரியாத விவரங்கள். தமிழில் சென்னை போன்ற ஒரு மாநகரின் தாக்கம் குறைந்து இதர பெருநகரங்களும், சிற்றூர்களும் அதிகத் தாக்கம் பெறத் துவங்கிய 80களில், 90களில் இலக்கியத்துக்கு வந்தவர்களுக்கோ இந்த உலகம் வினோதமானதாகவே இருக்கலாம்.
இன்று கர்ண பரம்பரைக் கதைகள் போலத் தெரியத் துவங்கி இருக்கும் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, எம்.வி.வெங்கட்ராம், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் போன்றாரின் வாழ்க்கை நடப்புகளும், அவற்றிடையே இருந்த பல உறவுப்பின்னல்களும், சம்பவங்களும் ஆங்காங்கே பல வேறு நினைவு கூரல்களில், வெவ்வேறு இதழ்களிலும் சிதறிக்கிடக்கிற தகவல்கள். இவற்றைத் தொகுத்து வரலாற்று உணர்வோடும், விமர்சன நோக்கோடும் புத்தகங்களாக மாற்றி தமிழ் இலக்கியம் வளர்ந்த பாதை பற்றிய விழிப்புணர்வை அடையுமளவு நம்மிடையே ஒரு அறிவுப் பாரம்பரியம் இன்னும் முழுதாக உருவாகவில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் ஓரளவு வரலாறு என்ற அளவில் இந்த புராண மரபுக் கதைகளைத் தொகுக்கத் துவங்கி இருக்கிறோம் என்று எனக்குப் படுகிறது. ஆனால் இன்னும் வரலாறாக இவை ஆகாமல் இருக்க, நம்மிடம் உள்ள பல மனச்சாய்வுகள் காரணம். அரசியல், பண்பாட்டு வெளிகளில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் சமுதாயத்தில் விதைக்கப்பட்ட பலவகைக் குரோதங்கள் இன்னும் நம்மைப் பிளந்த மக்களாக, சிதறிய மக்களாகவே வைத்திருக்கின்றன. இதைக் காலனியத்தின் விளைவு என்றும் சொல்லலாம், வேரறுந்த மக்களின் தவிப்பு என்றும் சொல்லலாம்.
அதைத் தவிர- இலக்கியகர்த்தாக்களுக்கே உலகெங்கும் காணக் கிட்டும் அகங்காரங்களைத் தமிழிலும் நாம் காண முடியும், அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் கூட- இங்கு உள்ள வசதிகளும், வளங்களும் மிகக் குறைவு என்பது ஒரு பிரச்சினை. இருக்கும் சிறு வளங்கள் எல்லாம் அனேகமாக அரசின் தரப்பிலிருந்தே கிட்டுவதாக இருந்ததால் அரசியல் கருத்தியல்களே இங்கு இலக்கிய வெளியில் யார் பிழைத்திருக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதாக இருந்திருக்கின்றன. வளங்களுக்கு அருகில் கூடச் செல்ல முடியாது, தம் சொந்த வாழ்வைப் பணயம் வைத்து இலக்கியத்தில் ஈடுபடுவோரை இன்னும் தமிழிலக்கிய உலகு சிறிதாவது மதிப்பதற்கு இந்திய சமூகத்தில் எஞ்சி இருக்கும் அறவுணர்வே காரணம் என்பதை நாம் உள்ளுணர்வில் நிச்சயம் அறிவோம். இன்றைய ‘நவீன’, ‘முற்போக்கு’, ‘புரட்சி’ போன்ற முத்திரைகளைத் தாங்கி வலம் வரும் கருத்தியல்களால், மேலைத் தாக்கத்தின் விளைவால், காலனியத்தின் வீச்சில் அழிந்து போன தமிழரால்/ இந்தியர்களினால் ஒரு நூறாண்டுக்கும் மேலாக முயன்றும், இந்தியப் பாரம்பரியத்தை, பண்பாட்டை இன்னுமே அழிக்க முடியவில்லை, மலினப்படுத்த முடியவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பொதுவாகத் தமிழிலக்கியத்தில் இருக்கும் வைரி மனோபாவங்கள், குறிப்பாக 80களுக்கு அப்புறம் நிறையவே பரவி இருக்கிற பாசறை மனோபாவங்கள் நேர்மையான இலக்கிய அணுகலுக்குத் தடைக்கற்களை எங்கும் பரப்பி இருக்கின்றன. கருத்துப் பரிமாறல் எல்லாம் திரும்பத் திரும்ப ஜாதி அரசியல், மத அரசியல், வேறு ஏதேதோ துவேஷங்களில் சிக்கிக் கொள்வதற்கு இன்னும் மக்கள் நடுவிலிருந்து இலக்கிய முயற்சிகளுக்கு வலுவான ஆதரவு கிட்டாதது ஒரு காரணம். புத்தக வெளியீட்டாளர்களைக் கேட்டால் தெரியும் எத்தனை நூறு புத்தகங்கள் வாங்குவாரோ, படிப்பவரோ இல்லாமல் அவர்களின் கிட்டங்கிகளில் மக்குகின்றன என்பது. நூல்நிலையங்களோ அரசின் அரசியலிலும், ஊழலிலும் சிக்கியவை என்பதால் அவற்றிற்குப் புத்தகங்களை விற்பது என்பது தமிழ்/ இந்தியச் சமுதாயத்தின் அத்தனை மலினங்களிலும் புரண்டு எழுவதை முன் நிபந்தனையாக்குகிற வேலையாக இருக்கிறது. தனியார் நூலகங்கள் என்பவையோ இன்னும் சிறிது கூட வளராத நிலை.
இந்த நிலைகளைப் போன்ற பல, க.நா.சு போன்றாரின் பல பத்தாண்டு இலக்கிய முயற்சிகளுக்கு அன்றும் குழி வெட்டின என்பதைத் தஞ்சை பிரகாஷ் இந்த மெல்லிய புத்தகத்தின் நூறு பக்கங்களில் விரிவாகவே பதிவு செய்கிறார். புத்தகத்துக்கான கைப்பிரதிகளை அன்றும் மளிகைச் சாமான் போல எடை போட்டு விலை பேசினார்களென்று குறைப்படும் பிரகாஷுக்கு, இன்றும் நிலை அதிகம் மாறிவிடவில்லை என்பது நன்கு தெரியும். அவருமே புத்தகப் பிரசுரகர்த்தராக இருந்திருக்கிறாரே.
இந்த நிலை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது என்பதையும், ஒப்பீட்டில் இன்று புத்தகச் சந்தை வளர்ந்திருந்தாலும், இன்றை விட அன்று இலக்கியவாதிகளின் வாழ்க்கை ஒரு வேளை சிறிதாவது மேலாக இருந்திருக்குமோ என்று தோன்ற வைக்கிறது பிரகாஷின் புத்தகம். க.நா.சு என்னென்ன அகட விகடமெல்லாம் செய்தாலும் இறுதியில் வாழ்வுக்கான அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினை என்பதை அவரால் தீர்க்க முடியவில்லை, அவருடைய இலக்கிய முயற்சிகளுக்கும் அங்கீகாரம் என்பது அப்படி ஒன்றும் கிட்டி விடவில்லை என்பதைப் பிரகாஷ் கிட்டத் தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் சொல்லி மாய்ந்து போயிருக்கிறார்.
அத்தனை உதாசீனங்கள் நடுவில்தான் க.நா.சு, தன் சக்திக்கு எட்டாத விதங்களில் கூட இயங்க முயன்றிருக்கிறார் என்பதைப் பிரகாஷ் தன் உணர்ச்சிகரமான புத்தகத்தில் நமக்கு விளக்குகிறார். பத்திரிகை நடத்துவது என்ன ஒரு சள்ளை பிடித்த வேலை, அதை நடத்த எத்தனை மன உறுதியும், நிதி வலுவும் தேவை என்பது நடத்திப் பார்ப்பவர்களுக்கே தெரியும். க.நா.சுவின் பத்திரிகைகள் எல்லாமே அனேகமாக மோசமான தோல்வியைத் தழுவிய முயற்சிகள். இருந்தும் அவர் என்ன நம்பிக்கையின்பால் இயங்கி திரும்பத் திரும்ப பத்திரிகைகளைத் துவங்க முற்பட்டார், புத்தக வெளியீட்டில் இறங்க முயன்றார் என்பது நமக்கு எளிதில் விளங்காத புதிராகவே இருக்கும். ஆனால் பிரகாஷ் ஏதோ அது இயற்கையான ஒரு உத்வேகம், அதை எந்த தர்க்கத்தாலும் விளக்க முடியாது, விளக்கவும் தேவையில்லை என்பது போலவே எழுதிப் போகிறார். நண்பரொருவர் இன்று பேசியபோது சொன்னார், பிரகாஷின் இயக்கமுமே இப்படி ஒரு இயக்கம்தான். க.நா.சு போலவே அவரும் இலக்கியம், கலை என்று தன் வளங்களை இழந்தவர்தான் என்று சொன்னார். இனம் இனத்தைச் சேரும் என்பது இதுதான் போலும்.
அப்படி ஒரு அங்கலாய்ப்புப் பகுதியை பிரகாஷின் புத்தகத்தில் சில பக்கங்களிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
பக்கம் 19-28 இலிருந்து சில பத்திகள் கீழே. ஆங்காங்கு இடைவெளிகள் உள்ளதை புள்ளிகளால் சுட்டியுள்ளேன். கீழே உள்ள பத்திகளில் உள்ள சில பிழைகள் மூலப் புத்தகத்தில் உள்ளவை, மாற்றாமல், திருத்தாமல், பிரதி எடுத்திருக்கிறேன்:
சாதாரண தமிழ் ஜனங்களுக்கு மிக உயர்ந்த இலக்கிய விஷயங்களைத் தருவதற்காக ‘தழுவல்’ என்கிற இலக்கிய உத்தியின் மூலமாக அந்தக் காலத்து விகடன், சுதேசமித்திரன், இமயம், சக்தி ஜோதி போன்ற இதழ்களில் அவர் (க.நா.சு) செய்து வந்தார். க.நா.சுவை மறுக்கிற அவரது எதிர்விமர்சனக் கூட்டத்தினர் இதையே க.நா.சு வின் பலஹீனம் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. ஏராளமாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகப் பல்வேறு வழிகளையும் முயன்றார். வெகுஜன ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ஆனந்தவிகடன் இதழ்களுக்கும், மிகத் தீவிரமாக வெளிவந்த சிறந்த இலக்கியப் பத்திரிகைகளான கு.ப. ராஜகோபாலனின் ‘கிராம ஊழியன்’, சாலிவாஹனனின் ‘கலாமோஹினி,’ கு. அழகிரிசாமியின் ‘சக்திகோவிந்தனின் மலர்கள்,’ எம்.வி. வெங்கராமின் ‘தேனீ’, திருலோக சீர்த்தாராமனின் ‘சிவாஜி’ ஆகியவைகளுக்கும் இடையில் இரண்டுக்கும் நடுவாந்தரத்தில் வெகுஜனப் பத்திர்க்கை ஒன்றை க.நா.சு வெளியிட்டார் என்கிற பயங்கர சோதனை ஆச்சரியமானது.
விற்பனையால் ஈடுகொடுக்க முடியாத க.நா.சு வின் ’சந்திரோதயம்’ 35,000 ரூபாய்களைக் காவு கொண்டு ஒன்றரை ஆண்டுக்கும் மேல் தன் பயணத்தை நடத்த முடியாமல் தடுமாறியது. க.நா.சு வை பேசாமல் ஊருக்குப் போய்விடும்படி பல எழுத்தாளத் தோழர்களும் எச்சரித்தார்கள். மணிக்கொடி நின்றது. க.நா.சு. ’சூறாவளி’ என்னும் தீவிர இலக்கிய ஏட்டை துவக்கினார். இது சந்திரோதயத்துக்கு முன்னாலே நிகழ்ந்தது. மணிக்கொடியில் எழுதிக் கொண்டிருந்த பி.எஸ். ராமையா, மணிக்கொடியை முழுக்க முழுக்க சிறுகதைப் பத்திரிக்கையாக மாற்றினார். தமிழின் மகோன்னதச் சிறுகதைகள் பல நூறுகள் அதில்தான் வெளி வந்தன. புதுமைப் பித்தன், ந.சிதம்பர சுப்ரமணியன், சி.சு. செல்லப்பா, பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, எம்.வி. வெங்கட்ராம் ஆகியோரின் சவாலுக்குச் சவாலான கதைகளுக்கு இடையே க.நா.சுவின் அருமையான கதைகளும் வெளிவந்தன. என்றாலும் தமிழன் மணிக்கொடியையும் வாழவிடவில்லை. மணிக்கொடி சிதைந்தது ராமையா ஆல் இண்டியா ரேடியோவுக்கு ஓடினார். க.நா.சுவைப் பார்த்து ‘நீயும் வாருமேன்!’ என்றபோது ஊருக்குச் சென்று மீண்டும் பணம் கொணர்ந்து சந்திரோதயத்தை உயிர்ப்பிக்க க.நா.சு முயன்றார். ஊருக்குச் சென்றவுடன், மனைவியின் வற்புறுத்தலும், மாமனாரின் தூண்டுதலும், மீண்டும் நாராயணசுவாமி ஐயரிடமிருந்து ஒரு பெரும் தொகை ஒன்றைப் பெற்றுத் தந்தது. மீண்டும் சந்திரோதயத்தை உயிர்ப்பிப்பது பற்றி க.நா.சுவே சந்தேகப்பட ஆரம்பித்தார்.
….
புதுமைப்பித்தனும், பி.எஸ். ராமையாவும் அப்போது ஏறத்தாழ திரைப்படத் துறையை நோக்கித் தவம் இருந்தார்கள். தமிழுக்குப் புதிய ரத்தமும், புதிய உயிரும் பாய்ச்சி தமிழை நவீனமாக வளர்த்து உலக இலக்கியங்களோடு கை கோர்த்துவிட கங்கணம் கட்டிக் கொண்ட இளைஞர்களின் கதையில் க.நா.சுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆனார். ஏராளமான பணத்தை இழந்தார்.
……..
சென்னையில் அப்போது மொழிபெயர்ப்பு அலை வீச ஆரம்பித்த நேரம். பதிப்பகங்கள் ஒவ்வொன்றிலும் சில மொழி பெயர்ப்பு நூல்களையாவது செய்ய வேண்டும் என்ற ‘மேனியா’ தோன்றி இருந்த நேரம். க.நா. சுப்ரமண்யம் தனக்குத் தெரிந்த பதிப்பாளர்களிடம் முயன்று நூல்கள் வெளியிட முயன்றபோது அதுவும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை என்பதை உணர்ந்தார். அப்போதுதான் ஏ.கே.கோபாலன், அ.கி ஜெயராமன் சகோதரர்கள் மொழி பெயர்ப்புக்காகவே பதிப்பகங்கள் தொடங்கினார்கள். மிக அபாரமான நூல்களை அ.கி. கோபாலன் பப்ளிஷர், உலக இலக்கியங்களின் நோபல் பரிசு பெற்ற நாவல்களையும், படைப்புக்களையும் கநாசுவின் மூலம் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழுக்கு அது யோகமான காலம். அதற்குப் பின்னர் அந்த யோகமான காலம் திரும்பவே இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். இன்றும் கூட. அ.கி.கோபாலன் அந்தப் பணியை நிறுத்திவிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வெளியில் தோத்திரப் புத்தகங்கலை விற்கப் போய் விட்டார். நட் ஹம்ஸன், வில்லியம் சரோயன், அனடோல் பிரான்ஸ், லியோ டால்ஸ்டாய், ஸ்டின்பெர்க், பேர்ல்ஸ்பெக், செல்மாலாகர்லெவ், ரவீந்திரநாத் தாகூர் போன்ற உலகப் புகழ் பெற்ற படைப்பாளர்களின் படைப்புகளை இன்றும் தமிழில் தேடி அடைவது அரிதில் அரிதாகவுள்ளது. ஆனால் ஏ.கே.கோபாலன், அ.கி.ஜெயராமன், க.நா.சுப்ரமண்யம் ஆகியோரின் கூட்டுமுயற்சியால் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உலக இலக்கியங்கள்- நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகக் குறைந்த விலைகளில் வெளியிடப்பட்டன. அ.கி.ஜெயராமன் வங்காளியிலிருந்து மொழிபெயர்த்து பக்கிம்சட்டர்ஜி, சரத் சந்திர சட்டர்ஜி, ரமேஷ் சந்த்ர தத் ஆகிய சிறந்த படைப்பாளிகளின் வங்காள இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்தார். லைப்ரரிகளிலும் பொதுநூலகங்களிலும் அச்சிறந்த நூல்கள் அங்கீகரிக்கப்பட்டு பெரும்பயன் விளைவித்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. ….
ஆனந்தவிகடனில் இருந்து பிரிந்து புதிதாக ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியால் துவக்கப்பட்ட கல்கி பத்திரிக்கை, சுதேசமித்திரன் ஏடு ஆகியவை க.நா.சுவுக்குத் தொடர்ந்து சந்தர்ப்பம் அளித்து வந்ததை இந்த இடத்தில் நினைவு கூர வேண்டும். உழைப்பதும், உழைப்பதை விற்பதும், வேறு துறைகளில் சுலபமானதாக இருக்கலாம். ஆனால் எழுத்துத் துறையில் அப்படி அல்ல. வயிற்றெரிச்சலும், மதமாச்சரியங்களும், இனப்பண்புகளும் பொறாமைச் சழக்குகளும் நெருக்கியடித்துக் கொண்டிருந்த இடம் அது. சமகாலத்தில் பொதுவுடைமை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கென சில பத்திரிக்கைகளையும், ஜஸ்டிஸ் கட்சி, திராவிடக் கழக கட்சிகள் தங்களுக்கெனவே சில இதழ்களையும், ஜனங்களின் தேவைகளுக்கேற்ப அவர்களின் குழந்தைப் பருவ கோர ரசனைகளைத் தட்டிக் கொடுத்து, அவர்கள் பையிலிருந்து பணத்தை உருவுவதற்கு முயன்ற தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறுபட்ட ஆசைகளை வெளிக்காட்டும் பத்திரிகைகளும் புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருந்தன. ஆழமான இலக்கிய முயற்சிகளுக்கு அங்கு எங்குமே இடமில்லை என்பதை அதன் ஆசிரியர்கள் உணர்த்தினார்கள். காங்கிரஸ் இயக்கம் சார்ந்த பத்திரிககள் கூட க.நா.சுவின் கனம் வாய்ந்த எழுத்துக்களை ஒதுக்கினார்கள் என்றே சொல்ல வேண்டும். …
..விமரிசனம் ஒரு நாட்டின், மொழியின் இலக்கியத்தின், பாரம்பரியத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்பதை எடுத்துக் காட்ட முனைந்தார். ….தமிழில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ளாத எழுத்தாளர்களின் நடுவிலும், இனமானப் பிரச்சினைகளிடையே ஊர்ந்து வந்த தமிழ் இலக்கியம் என்றால் எது? நவீன இலக்கியம் என்பது எதைச் சார்ந்தது? யார் எழுதுவதுதான் இலக்கியம்? பத்திரிக்கை எழுத்து என்பதற்கும் இலக்கிய எழுத்து என்பதற்கும் என்ன வித்தியாசம்? உலக இலக்கியம் என்கிற அடியோட்டம் எங்கு ஓடிக் கொண்டிருக்கிறது? அதை இந்திய இலக்கிய பாரம்பரியத்துக்கு எப்படி கொண்டு வந்து சேர்ப்பது? பாரதிக்குப் பின்னால் மறைந்து போன அந்தப் பிரக்ஞையை அறிஞர் மத்தியிலும், அறிஞர் அல்லாதார் மத்தியிலும் எப்படிக் கொண்டு வந்து சேர்ப்பது? என்ற பயங்கரமான சிக்கல்கள் எல்லாவற்றையும் ஒரே வெட்டில் வீழ்த்தி தான் தான் அதற்காக அவதாரம் செய்திருப்பதாகவே ஒரு மாயையை உருவாக்கி தமிழ் இலக்கியத்தின் போக்கை சவுக்கடி கொண்டு வீசிச் சுழற்றி 1950களில் வெளிவந்த சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அவர் எழுதிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தாக்கம், தேக்கம், வீக்கம் என்ற மகத்தான கட்டுரை தமிழ் இலக்கியவாணரிடையே பலத்த வயிற்றோட்டத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அதுவரை நினைத்துக் கொண்டிருந்த பெரும் பேராசிரியத்தனங்கள் உடைந்து நொறுங்கின. பண்டித மனோபாவம் வரலாற்றுக்கு வரத் தயாரானது. பாரதிக்குப் பின்னர் யார்? என்ற கேள்விக்குச் சரியான பதிலை யாரும் சொல்ல முடியவில்லை. ஆதாரங்களை அடுக்கிப் பார்த்தார்களே தவிர, கேள்விக்குப் பதிலில்லை.
க.நா.சு ஒரு தடாலடி விமர்சகராக, அடாவடித்தனம் நிறைந்த ஒரு பார்ப்பனராக, கோலாகலமான புரட்டராக அறிமுகம் செய்யப்பட்டார். அதுவரை தூக்கி எறியப்பட்டிருந்த பெரியார் ஈவெராமசாமி நாயக்கரின் நூல்கள் மீண்டும் படிக்கப்பட்டன. கா.நா.சுவின் தடாலடி அபிப்பிராயங்கள் கம்யூனிஸ்ட்களிடையேயும் தூக்கியெறிந்து விமர்சிக்கப்பட்டன. ஆனால் ப.ஜீவானந்தம், அண்ணாத்துரை, சி.பி. சிற்றரசு போன்றாரால் க.நா.சுவின் கட்டுரைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டன. …
காங்கிரஸ் கட்சி சார்பில் 1949-50களில் துவக்கப்பட்ட விந்தனின் ‘மனிதன்’ என்கிற பத்திரிக்கைதான் தமிழின் முதல் முற்போக்குப் பத்திரிகை. மனித விடுதலையைப் பற்றி அது பேசியது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் முகாம்கள், இலக்கியத்தில் தங்கள் பார்வையைக் கூர்மைப்படுத்தின. வ. விஜயபாஸ்கரன் துவங்கி நடத்த ஆரம்பித்த ‘சமரன்’ இதழும் ‘சரஸ்வதி’ என்ற அற்புதமான இலக்கிய இதழும் தமிழை ஒரு கலக்கு கலக்கின. அதன் காரணம் க.நா.சு தான். இன்று, இப்போது சொன்னால் பலருக்குக் கஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். …
இந்த சில நிகழ்ச்சிகளால் க.நா.சுவின் பேர் எழுத்தாளர்கள் மத்தியிலும், விமரிசகர்களிடையிலும், பரபரப்படைந்தது. தமிழ் விரோதியாகவும், இனத்துரோகியாகவும், பிராமண வெறியராகவும் சித்தரிக்கப்பட்டார். …
தமிழும் அதன் போக்குகளும் பற்றி அதே சமகாலத்தில் கடுமையாகச் சாடி எழுதிய மற்றொரு எழுத்தாளர் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையாவார். ….
எஸ்.வையாபுரிப் பிள்ளை வ.ராவின் தீவிரத் தன்மையைக் குறைத்து ஆய்வுத் தன்மையை விரிவாக்கி ஆதார பூர்வமான தமிழனின் நவீன சித்திரத்தை ‘தமிழின் மறுமலர்ச்சி’ என்ற அற்புதமான புத்தகத்தின் மூலம் ஆக்ரோஷமாக வெளியிட்டார். என்றாலும் வையாபுரிப் பிள்ளையையும் ஒரு தமிழ்த் துரோகியாக சித்தரித்து தமிழ் எழுத்தாளர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தாராலும், கவிஞர்களாலும் ஏசப்பட்டார். ‘பாதக் குறடெடுத்து பன்னூறு முறை அடிப்பேன் உன்னை’ என்று பாரதிதாசன் அவரைக் கவிதைகளிலே சாடினார். ….
தமிழர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பிராமணவாதம், இனமொழிவாதம் போன்ற பல பிற்போக்கு வாதங்களை அடிப்படையாக நம்பிக் கொண்டிருந்த மூட மௌடீகக் கும்பல் வழக்கம்போல வையாபுரிப் பிள்ளையை எதிர்த்தது. ஆனால் வையாபுரிப் பிள்ளையின் ஒரு சார்பான கருத்துக்கள் காலக் கிரமத்தில் மறைந்து போனாலும், க.நா.சுவின் தீர்க்க தரிசனங்கள் மாறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
[மேற்கோள் முடிவு]
இந்த அத்தியாயத்தில், இவற்றிற்குப் பிறகு, திராவிட இயக்கத்துக்கும் க.நா.சுவுக்கும் இருந்த சில உறவுகள், புரசல்கள் பற்றியும், அதே போல கம்யூனிஸ்டு இயக்கத்தின் இலக்கியப் பத்திரிகைகளில் க.நா.சுவுக்குக் கிட்டிய இடமும், அதைக் கட்சி எப்படி ஒரு வழியாக எதிர் விமர்சனங்கள் மூலமும், க.நா.சுவுக்கு இடம் கொடுக்க மறுப்பது மூலமும் முடிவுக்குக் கொணர்ந்தது என்பதையும் பிரகாஷ் பதிவு செய்கிறார். சமரன் பத்திரிகை பற்றி ஓலைக் குடிசையில் இருந்தபடி க.நா.சுவும், விஜயபாஸ்கரனும் கனவுகள் கண்ட காலை, அதில் எழுதிய ஆவேசமான இளைஞர் ஜெயகாந்தன் என்ற தகவல் பக்கம் 30 இல். சரஸ்வதி பத்திரிகை பிரபலமானதை ஒடுக்க நினைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ப.ஜீவானந்தம், ‘தாமரை’ என்ற இதழைத் துவங்கியதும், பின் கட்சி உறுப்பினர்கள் சரஸ்வதி இதழைப் படிப்பது தடை செய்யப்பட்டதும், விஜயபாஸ்கரன் சோவியத் நாடு அலுவலகத்தில் வேலைக்கு அனுப்பப்பட்டதும், சமரனையும், சரஸ்வதியையும் ஒழித்தன என்கிறார் பிரகாஷ். இந்தக் கட்டத்தில் சி.சு.செல்லப்பா தன் ‘எழுத்து’ பத்திரிகையைத் துவக்கி விட க.நா.சுவும், ந.பிச்சமூர்த்தியும் அதில் எழுதத் துவங்குகிறார்கள். 1959 வாக்கில் ஒரே காலத்தில், ஜனசக்தி, தாமரை, மரகதம் (இலங்கை இதழ்), தொ.மு.சி ரகுநாதனின் ‘முல்லை’, எஸ்.ஏ. முருகானந்தத்தின் ‘சாந்தி’, ஆகியன வெளி வந்தன. இவற்றில் பெரும்பாலானவை இடது சாரி இயக்கம் சார்ந்தவை. கட்சி சாராமல் வந்த இதழ்களென, ‘கலா மோஹினி,’, அ.வெ. கிருஷ்ணசாமி ரெட்டியாரின் ‘எழுத்தாளன்,’ ‘கிராம ஊழியன்’, திருலோக சீத்தாராமின் ‘சிவாஜி’ போன்றன. இவையும், ‘கலைமகள்’, ‘அமுத சுரபி’ போன்றவையும் கநாசுவின் எழுத்துகளைப் பிரசுரித்தன. இவற்றின் இறுதியில் க.நா.சு ‘இலக்கிய வட்டம்’ இதழைத் துவங்கி நடத்துகிறார். பல ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுகிறார். ‘லிபி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட முனைகிறார். இறுதியில் வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்று, தில்லிக்குக் குடும்பத்தோடு போகிறார்.
அத்தியாயம் 4 க.நா.சுவின் வரலாற்றை மேலும் விவரங்களோடு பேசுகிறது. இதில் காலப் பிரமாணம் தெளிவாக இல்லை, ஆனால் அவரது இலக்கியப் பயணத்தில் சில மைல்கல்கள் தெளிவாகச் சுட்டப்படுகின்றன. பத்திரிகையில் வேலை பார்க்கும் ஊழியராகவோ, கட்சி சார்ந்த அமைப்புகளில் பத்திரிகை வேலை செய்பவராகவோ இருக்கச் சம்மதியாத க.நா.சு, முழு நேர எழுத்தாளராகத் தனியராக இயங்க முயன்று பட்ட பாட்டைச் சுருக்கமாகச் சொல்லும் இந்த அத்தியாயம், அவர் ஆங்கிலத்தில் எழுதி அதன் மூலம் தன் வயிற்றுப் பாட்டை ஓரளவு கவனித்துக் கொண்டார் என்று விளக்குகிறது. அதே நேரம் அவரது மதிப்பீடுகளைத் தமிழகத்து எழுத்தாளர்கள் கூர்ந்து கவனித்த போதும் அவரைத் தனிப்பட்ட மனிதராக ‘அரை லூஸ்’ என்றே ஒதுக்கினர் என்று பிரகாஷ் எழுதுகிறார். எப்படி தொ.மு.சி ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ என்ற புத்தகம் க.நா.சுவை உசுப்பி விட்டது என்பதைச் சுட்டும் பிரகாஷ், அதற்குப் பிறகு க.நா.சு விமர்சனக் கோட்பாடுகள் பற்றிய தன் கருத்துகளைக் கொண்டு ஒரு விமரிசன நூலை எழுதினார், அது முன்னூறு பக்கமுள்ள ‘விமரிசனக் கலை’ என்ற நூல் எனச் சொல்கிறார். அதற்கு முன்பு தமிழில் பலர் எழுதிய விமர்சன நூல்கள்- சில காட்டுகள், டாக்டர் முத்துசாமி எழுதிய ‘இலக்கியச் செவ்வி’, டி.எஸ் கோதண்டராமன் எழுதிய ‘முக்கூடற் பள்ளு’, குத்தூசி குருசாமியின் ‘திருந்துமா?’, திருப்பழனம் வ.ராமசாமி ஐயங்கார் (வ.ரா) எழுதிய ‘கற்றது குற்றமா?’ ‘இலக்கிய விமரிசனம்’ இப்படிப் பல நூல்கள் எல்லாம் மேம்போக்கான கருத்துகள் கொண்டிருக்க தாக்கமின்றி மழுங்கிக் கிடந்தன,
க.நா.சுவின் இந்தப் புத்தகமோ தமிழிலக்கிய விமரிசனத்தில் ஒரு முன்னோடி என்கிறார். 1955 இல் வெளிவந்த இப்புத்தகம் வெளிப்படையாக ஏற்கப்படவில்லை, ஒப்புக் கொள்ளப்படவில்லை, இன்று வரை இதன் முக்கியமும், ஸ்தானமும் தமிழிலக்கியத்தில் நிதானப்படவில்லை என்று சொல்லி, ஆனாலும் இது படிக்கப்படுகிறது, இலக்கிய விமரிசனம் தமிழில் எப்படி அமைந்தது என்பதை அறிய விரும்புபவர்கள் தவிர்க்கவியலாமல் படிக்க வேண்டிய முதல் புத்தகம் இது என்கிறார் பிரகாஷ். அதே போல இலக்கிய வட்டம் பத்திரிகையில் அவர் எழுதிய தலையங்கங்கள் முக்கியமானவை என்னும் பிரகாஷ், க.நா.சு பிறருக்காக வாதாடிப் பல புத்தகங்கள் வெளிவரக் காரணமாக இருந்ததையும் சொல்கிறார். மௌனியின் மணிக்கொடிச் சிறுகதைகளின் தொகுப்பு, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது, சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தில்லியில் வெளியிட்டது என்று பல முதல் எட்டுகளை க.நா.சு எடுத்துத் தமிழை முற்படுத்தினார் என்பது பிரகாஷின் தரப்பு.
அடுத்த அத்தியாயத்தில் க.நா.சுவின் இலக்கியப் பணியின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. அவரது பல நாவல்கள் தமிழில் வெளி வந்து அவருடைய படைப்பாற்றல் வெளித்தெரிய வந்தாலும், பிரசுரகர்த்தர்கள் அவற்றைச் சரிவர வெளியிடவில்லை என்று பிரகாஷ் வருந்துகிறார். ஆனால் தன் 70ஆவது வயதில் கூடப் பல பிரசுரகர்த்தர்களைச் சந்தித்துத் தமிழின் பல எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கொணரச் சொல்லி வற்புறுத்தியதைத் தானே கூட இருந்து நேரில் கண்டதைச் சாட்சியமாகச் சொல்கிறார். இப்படி அவர் வலியுறுத்தி உந்திக் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் சில: புதுமைப்பித்தனின் 100 சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், மிச்சமுள்ள கட்டுரைகள் ஆகியன. ஆர்.ஷண்முகசுந்தரம், இதர மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகள், ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமனின் கதைகள் ஆகியனவற்றை அவர் பல பிரசுரகர்த்தர்களைத் தூண்டிப் பிரசுரிக்க வலியுறுத்தி வந்தார் என்றும் தெரிகிறது. அல்லயன்ஸ் பதிப்பகத்தின் மூலம் எஸ்.வி.வி என்ற ஒரு நகைச்சுவை எழுத்தாளரின் புத்தகங்களுக்கு மறு உயிர் கொடுக்க வைத்ததும் க.நா.சு. இவரும், சி.சு.செல்லப்பாவும் தொடர்ந்து போராடிப் பேசிப் பலரைச் சந்தித்து வலியுறுத்தியதன் விளைவாகப் பல ஆண்டுகளுக்குப் பின் தமிழ்த் துறைகளில் பல்கலைகளில் தற்கால இலக்கியம் என்பதைக் குறித்த அணுகல் வெகுவாக மாறியது என்கிறார் பிரகாஷ். இருவரும் தம் முதிய பிராயத்திலும் கல்லூரிகளில் உரைகளாற்றி இந்தப் பணியைத் திறம்படச் செய்தனராம்.
இங்கு, இந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பத்தி கொடுக்கிறேன். :
எந்தவொரு இலக்கியப் படைப்பும் உலகத்தாரால் அங்கீகரிக்கப்பட்டபோதுஅதை எதிர்த்து மறுத்தார். எந்தவொரு கலைப்படைப்பும்-எந்த ஒரு சமூகத்தாராலாவது உடனே ஏற்றிப் புகழப்பட்டால் அதை உடனே சந்தேகிக்க வேண்டும், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. 40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80-90 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 தத்துவ விசாரங்கள், ‘இலக்கிய விசாரம்’ என்ற கேள்வி-அதில் நூல் ஒன்று, ‘உலகத்துச் சிறந்த நாவல்கள் பத்து’, உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள், மூன்று தொகுதிகள் படித்திருக்கிறீர்களா? என்ற அறிமுகத்துடன் தொகுக்கப்பட்ட 48 நூல்களின் தொகுப்பு, இலக்கிய விமரிசன நூல் ஒன்று, முதல் ஐந்து தமிழ்நாவல்கள் என்ற அறிமுகங்கள் இரண்டு, ஆங்கிலத்தில் தமிழ் பற்றிய அறிமுக நூல்கள் 10, உரை நூல்கள், விரிவுரை நூல்கள் என 10 என்று தனது 86 வயதுக்குள் அவர் எழுதிக் குவித்தவை பல்லாயிரக்கணக்கான பக்கங்கள். …
[மேலே உள்ள மேற்கோள் பத்தியில் க.நா.சுவின் வயது 86 என்பதாக எழுதி இருப்பது தவறு. க.நா.சு 76 வயதுதான் வாழ்ந்தார். இப்படிச் சில தகவல் பிழைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. சாஹித்திய அகதமி ஒரு நல்ல பதிப்பாசிரியரைக் கொண்டு இந்த வகைப் புத்தகங்களைச் சீராக்கிப் பதிக்காமல் இருப்பதுதான் என்ன ஒரு வேதனை தரும் விஷயம். புத்தகப் பிரசுரம் எப்படி சிரத்தையில்லாமல் நடத்தப்படுகிறது என்பதற்கு இந்தப் புத்தகமே ஒரு சான்று. பதிப்பாசிரியரால் நன்கு செப்பனிடப்பட்டிருந்தால் இந்தப் புத்தகம் ஒரு அருமையான வரலாற்று ஆவணமாகவும், இலக்கிய நூலாகவும் மிளிர்ந்திருக்கும்.]
இங்கு பிரகாஷ் க.நா.சு எப்படி மோசமான கையெழுத்து கொண்டவர், அதனால் டைப்ரைட்டிங் எந்திரத்தை வைத்துக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு விரலால் டைப் அடித்து இத்தனையையும் எழுதினார் என்று சொல்கிறார். இதுவே ஒரு உலகச் சாதனை என்று நமக்குத் தோன்றுகிறது. மேலும் பிரகாஷ்:
க.நா.சுவின் நூல்கள் வரிசையில் இன்னும் பல விட்டுப் போயிருக்கின்றன என்பதை அறிவேன். இந்திய நூலாசிரியர்கள் பற்றியும், இந்தியப் பிறமொழி இலக்கியங்கள் பற்றியும், இந்திய அறிஞர்கள் பற்றி அவர் எழுதிய குறிப்புகள் பலவற்றையும் சேகரித்தாலது பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் என்று எனக்குத் தெரியும்.
அடுத்த அத்தியாயத்தின் தலைப்பு: ‘க.நா.சுவும் புதுமைப்பித்தனும்’. பழசைத் திரும்பிப்பார்த்து அது கடந்து போனது குறித்த அங்கலாய்ப்பாக, அந்தக் கட்டத்தில் தானும் பகுதி நேரமாவது இருந்த நினைவை அசை போட்டு மகிழ்வதாக இருக்கும் இந்த அத்தியாயம் பிரகாஷின் உள் மனதிலிருந்து எழுதப்பட்டு பிரவஹிக்கிறது. புதுமைப் பித்தனும், க.நா.சுவும் வேறு வேறு இலக்கிய தரிசனமும், வெளிப்பாட்டுத் தேர்வுகளும் கொண்டவர்கள் என்ற போதும் இருவரும் அத்யந்த நண்பர்கள் என்ற கருத்தைப் பிரகாஷ் இதில் நிறுவுகிறார்.
பணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.
இருந்திருந்தால் மணிக்கொடி பட்டுப் போயிராது, சந்திரோதயம் அமாவாசையாகி இராது. இதே அத்தியாயத்தில் வ.ரா என்ற ஒரு பேராளுமை குறித்த தன் ஆழ்ந்த மரியாதையைப் பிரகாஷ் தெள்ளென வெளிப்படுத்துகிறார். மேற்சொன்ன நபர்கள் அனைவருக்கும் வ.ரா எப்படி ஒரு முக்கியமான தூண்டுகோல், ஒரு முன்னோடி என்பதைச் சொல்கிறார். தமிழில் அன்றும் அதற்கு முன்பும் ஏன் இன்றும் கூட தற்சார்பும், அரசியல் சார்பும், வேறு சார்புகளும் ஊடுருவாத நேர்மையான விமர்சனம் என்பது காணக் கிடைப்பதில்லை என்று குறை சொல்லும் பிரகாஷ் ஒருவிதத்தில் கடந்த நவீனத்துவம் என்ற பேரலையால் சிறிதும் நனைக்கப்படாதிருக்கிறார் என்று தெரிகிறது.
ஏனெனில் இந்தப் புத்தகத்தை அவர் பிரசுரித்த வருடம் 2001. இந்தியாவில் கூட கடந்த நவீனத்துவம் அப்போது வீசி அடித்து ஓயத் துவங்கி இருந்தது. இந்த நனைப்பில் இலக்கிய விமர்சனம் என்பதை இப்படிச் சார்பின்றி எழுத முடியும் என்ற நம்பிக்கை அடித்துக் கூழாக்கப்பட்டிருந்தது. ஒருவரின் அடையாளமே அவருடைய பேச்சு என்றே முடிபுகள் எங்கும் ஒலித்தன, இன்னும் ஒலிக்கின்றன. அடையாளத்தை மீறிய பேச்சு என்பதே சாத்தியமில்லை என்ற கதவடைப்பு, இருட்டடிப்பு இன்னும் தமிழில் உலவுகிறது, அதிகாரத்தில் இருக்கிறது. அதை வைத்தே பெரும் வியாபாரமும், அரசியல் அதிகாரத் தேட்டையும் சாத்தியமாகிறபோது அதை எப்படிக் கை விடப் போகிறார்கள்? இது போதாது என்று பிரகாஷ் ’விமர்சனம் என்பது விஞ்ஞான அடிப்படையில் சொல்லப்படுவது ஓரளவுக்கேனும் சரியாகச் செயல்படுவது அரசியல் சார்புள்ள பத்திரிகைகளில்தான்’ என்று வேறு வருத்தம் தெரிவிக்கிறார். அவருக்கு விமரிசனம் என்பது குறித்து நிறைய குழப்பம் உள்ளது என்பதுதான் நமக்குப் புரிகிறது.
இருந்த போதும், அன்றைய சமூக விழிப்புணர்வு குறித்துப் பிரகாஷ் சொல்வன ஏதும் புரை ஓடிய கருத்துகள் அல்ல, ஏனெனில் அவர் சுட்டிய முடிவுகள் இன்றும் பொருத்தமாகவே இருக்கின்றன. வ.ராவின் பெயரை இன்றும் யாரும் அதிகம் அறிவதில்லை. வ.ராவின் சீடராகத் தம்மைக் காட்டிக் கொண்ட க.நா.சுவும் அதனால் பெயர் பெறவில்லை என்பது சரியான கணிப்பா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் இந்தத் தொடர்பு க.நா.சுவுக்கு ஏதும் மதிப்பைச் சேர்த்ததாகவும் நமக்குத் தெரியவில்லை. மாறாகப் புதுமைப்பித்தனின் பெயர் இன்று ஓங்கி ஒலிப்பதற்குக் க.நா.சு அவரைப் பிராபல்யப்படுத்த எடுத்த முயற்சிகளும் ஒரு பங்கு வகித்திருப்பதைப் பிரகாஷ் வலியுறுத்துகிறார்.
அடுத்த அத்தியாயமான ‘க.நா.சுவும் நானும்’ என்ற அத்தியாயம் என்னைக் கவர்ந்த ஒன்று. ஒரு காரணம் அதன் கதைப்புலன், எனக்கு மிகப் பழக்கமான ஒன்று. அந்த ஊர்கள் எனக்குத் தெரிந்தவை. அதில் வரும் பலர் எனக்குத் தெரிந்தவர்கள். நான் சிறுவனாக அவர்களைப் பார்த்திருக்கிறேன் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், முக்கியமாக க.நா.சு எப்படி துவக்கத்திலிருந்து, இறுதி வரை பிடிவாதமாக ஒரு கனவுலகிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது இங்கு நிறுவப்படுகிறது, அது எனக்கு வினோதமாகவும், வசீகரமாகவும் தெரிந்தது. தன் பிடிவாதத்தால் அந்தக் கனவுலகை அவர் நிஜமாக்கி விட முயன்றார். அதில் ஒரு அளவு, சிறு அளவென்றாலும், அவர் வெற்றி பெறாமல் இல்லை. தனது 12 ஆவது வயதில் க.நா.சுவையும், தி.ஜானகிராமனையும் சந்தித்ததாகப் பதிவு செய்யும் பிரகாஷ் எப்படி அவர்களின் இறுதி நாட்கள் வரை அவர்களின் நட்பு தனக்குக் கிட்டி இருந்தது என்பது ஒரு பெரும் பாக்கியமாகவே தனக்கு இருந்தது என்பதையும் சொல்கிறார். வெறும் பக்தி மனோபாவமில்லை இது,
ஏனெனில் இவர்களும், மற்றவர்களும் அவரவரளவில் எங்கெல்லாம் தோற்றிருந்தனர், எங்கு வாகை சூடினர் என்பதெல்லாம் பிரகாஷுக்குத் தெரியாமலில்லை. ஆனால் நட்பு என்பதைத் தாண்டி அவர்களுடைய மனிதத் தன்மை மீது பிரகாஷுக்கு ஒரு பேரபிமானம் உள்ளது என்பது தெரிகிறது. அதற்கு அவர்கள் உகந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. அவர்கள் என் இளம் வயதில் நான் இருந்த ஊர்களிலேயே உலவி இருந்திருக்கின்றனர். நான் அவர்கள் பற்றித் தெரிந்து கொண்டிருந்தேன். ஆனால் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்களுடைய உலகை நேர்முகமாக அறிந்து கொள்ளவோ எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை என்பது ஒரு இழப்பாகவே எனக்குத் தோன்ற வைத்ததில் பிரகாஷ் வெற்றி பெற்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தனைக்கும் பிரகாஷின் மொத்தப் புத்தகத்தையும் முடித்த பின்னும் க.நா.சுவின் இலக்கியப் பார்வை என்ன என்பது குறித்து நமக்கு எந்தத் துப்பும் கிட்டுவதில்லை. அதே சமயம் அடுத்த அத்தியாயத்தில் (பக்.81இல்) ஒரு வரியில் புதுமைப்பித்தனும், க.நா.சுவும் ‘பொதுவில் இதுவரையில் விமரிசனத் துறையில் இல்லாத குறிப்பியல் திறனாய்வு முறையைச் செய்தனர்.’ என்றும், ‘இது சரியான வழியா? விமரிசனம்தானா? பலனுண்டா ? என்பது பற்றியெல்லாம் வேறு ஒரு புத்தகத்தில்தான் விவரித்து விமரிசனம் செய்ய வேண்டும்.’ என்றும் சொல்லி விடுகிறார். அதனால் இந்தப் புத்தகத்துக்கு ஒரு விமரிசனமாக அதைச் சொல்ல முடியாது. இருந்தும் இலக்கியச் சிற்பிகள் பற்றிய புத்தக வரிசையில் பதிக்கப்படும் ஒரு புத்தகத்தில் க.நா.சுவின் இலக்கிய அளிப்புகளில் அவரது விமரிசனங்களும் முக்கியப் பங்கு வகித்தன என்று சொல்லும் ஒரு புத்தகம், அவை என்ன ஜீவராசி என்றாவது நமக்கு அடையாளம் காட்டிக் கொடுக்காதது ஒரு குறைதான்.
அடுத்த சில அத்தியாயங்கள், க.நா.சுவும், தமிழில் புதுக்கவிதை இயக்கம் தோன்றிய பாதையும் தொடர்பு படுத்தப்படுகின்றன -க.நா.சு ‘மயன்’ என்ற பெயரில் அந்த விதக் கவிதைகளை எழுதினார்., அவரது ரசனை எப்படி அவரது விரிந்த பார்வையோடு தொடர்பு கொண்டது என்பதையும், அவருடைய காலத்தில் அவர் எப்படி சக எழுத்தாளர்களிடையே ஒரு அபிப்பிராயச் சிற்பியாக உலவினார் என்பதையும் சொல்கின்றன. இவையும் நமக்கு க.நா.சு இலக்கியத்தை தன் வாழ்வின் மைய விசையாக, ஜீவனுக்கான உந்து சக்தியாக, கிட்டத் தட்ட அனைத்துக்கும் அர்த்தம் கொடுக்கும் ஒரு ஒளியாகக் கருதி வாழ்ந்திருக்கிறார் என்பதைச் சுட்டுகின்றன.
எனக்கு எழும் கேள்விகள் சில; அப்படி ஒரு முழு முக்குளிப்பு அவசியமா? அதனால் அந்தத் தனி மனிதருக்கோ, சமூகத்திற்கோ கிட்டும் பயன் தான் என்ன? பயன் கருதா இயக்கம்தான் அதன் வலுவா? இத்தகைய உழைப்பாகட்டும், அதன் விளை பொருட்களாகட்டும், திரள் மக்களின் அங்கீகரிப்பை, பாராட்டுதலை, அல்லது அறிதலைப் பெறவில்லை என்றாலும், ஒரு கணிசமான எண்ணிக்கை சிந்தனையாளர், எழுத்தாளர் நடுவே கூட அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றால் அந்த வித உழைப்பு, அம்மனித வாழ்வின் தேய்மானம், அது கொடுக்கும் ஏராளமான வருத்தம் எல்லாவற்றையும் பின் வரும் தலைமுறையில் இவற்றைக் கவனிக்கும் நாம் எப்படி அணுக வேண்டும்?
இப்புத்தகம் தமிழில் நவீன இலக்கியத்தைப் பற்றிய ஒரு துரிதப் பார்வையைக் கொடுப்பதோடு, அதன் துவக்க கால மனிதர்களின் பல வகைப்பட்ட இயக்கங்கள், துன்பங்கள், குதூகலங்கள் ஆகியன பற்றித் தெரிந்து கொள்ள மிக்க உதவி செய்யும் என்பதைச் சொல்லி விட வேண்டி இருக்கிறது. அந்த மட்டிலாவது பிரகாஷ் ஒரு சில பத்தாண்டுகள் மீது ஒரு அரிய ஒளியைப் பாய்ச்சிச் சென்றிருக்கிறார்.
புத்தக விபரம்:
’க.நா. சுப்ரமண்யம்’ – எழுதியவர்: தஞ்சை ப்ரகாஷ்; வெளியீட்டாளர்: சாகித்திய அக்காதெமி; இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை வெளியீடு; முதல் வெளியீடு-2001; 125 பக்கங்கள்