அகிம்சையின் வெற்றி

அகிம்சைக் கொள்கை காலாவதியாகிவிட்ட நம்பிக்கைகளின் போராட்டம். ஏதோ ஒரு வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்த இளகிய மனம் கொண்ட இளிச்சவாய் எதிர் தரப்பினருக்கு எதிராக அது வேலை செய்துள்ளதே தவிர, அதை இன்றும் சுமந்துகொண்டு செல்வது அபத்தம். மேலும் அது வீரர்களின் வழியல்ல, உண்மையில் அது ஆண்மையற்ற போராட்ட முறை ஆகவே அதை கொண்டு எந்த பிரச்சனையையும் தீர்த்திட முடியாது

இது போன்ற குரல்கள் தெருமுனை டீ கடை முதல் தொலைக்காட்சி விவாதங்கள் வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இத்தகைய கருத்துகளை முன்வைப்பவர்கள் அதன் பின்புலமாக எந்த ஆதாரங்களையும் சுட்டுவதில்லை.

வன்முறையைத் தவிர்க்கும் அமைதிவழி எதிர்ப்புகள், குடிமக்கள் சமுதாயத்தின் எழுச்சிகள், ஒத்துழையாமை இயக்கங்கள் ஆகியன வரலாற்றில் என்ன பங்கு வகித்திருக்கின்றன, என்ன மாறுதல்களைக் கொணர்ந்திருக்கின்றன, எங்கெல்லாம் அவை முழுத் தோல்வியைச் சந்தித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன என்பனவெல்லாம் முறையான சோதனைக்கோ, ஆய்வுக்கோ ஆட்படுத்தப்படவில்லை என்பதே மேற்படி விவாதங்களுக்கு ஒரு தடைக்கல். அதற்கப்பால், அத்தகைய முயற்சிகள் தேவை இல்லை, உண்மை என்னவோ தெளிவாகத் தெரிகிறது, ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்யாத மக்களால் எதையும் சாதிக்க முடியாது, மாறாக ஆயுதப் புரட்சிகளெல்லாம் இறுதியில் வெல்கின்றன என்பது போன்ற ஒரு கருத்து சகஜமாக எதிர்ப்பில் இறங்குபவர்களிடையேயும், வன்முறை எழுச்சிகளையே அரசியலாகக் கொண்டவர்களிடமும் இருப்பதை நாம் எங்கும் காண்கிறோம். அது தற்செயல் இல்லை.

கடந்த இரு நூறாண்டுகளுக்கும் மேலாக அதையே யூரோப்பிய கருத்தியலில் ஒரு சாரார் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கின்றன. அந்தக் கருத்தியல் பல நாடுகளிலும் தோற்றிருந்த போதும், அவை கணக்கிலெடுக்கப்படாமல் தோற்றது சில சூழ்நிலைகளால், அந்தப் பாடங்களை மனதில் கொண்டு, மறுபடி சமுதாயத்தைப் புரட்டிப் போட்டால், வன்முறைப் போராட்டமே வெல்லும் என்ற கருத்து சர்வ நிச்சயமாக நம்பப்படுகிறது. இந்த வாதம், தோல்வியைக் கணக்கிலெடுக்க வேண்டாம், வெற்றி மட்டுமே கணக்கிலெடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு அணுகல், வன்முறையற்ற போராட்டங்களுக்கும் பொருத்தப்படலாமே என்றால் அதைக் கருதி யோசிக்க ஆட்களில்லை.

இதெல்லாம் கூட வியப்பைத் தரத் தேவையில்லை. வியப்பு எங்கென்றால், இதைப் பல நாட்டு அரசுகளும், அரசு அதிகாரிகளும் நம்புகிறார்கள், பல நாடுகளில் உள்ள பல்கலை ஆய்வாளர்களும், அறிவு ஜீவிகளும், ஊடகங்களில் நாயகத் தன்மையோடு விளங்குவோரும் கூட நம்புகிறார்கள் என்பதுதான் விசித்திரம்.

இந்தச் சூழலில் அண்மையில் எரிக்கா செனோவெத் மற்றும் மரியா ஜெ ஸ்டீபன் இருவரும் இணைந்து மேற்கொண்ட ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நாம் கவனிக்க வேண்டிய ஆய்வு இது. 1990 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை உலகெங்கிலும் நடைபெற்ற 323 சமூக போராட்டங்களை ஆய்வு செய்து சில முக்கியமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

எரிக்கா அரசுத் துறையில் பலகலைப் பேராசிரியர். சர்வதேச பாதுகாப்பு,பயங்கரவாதம், உள்நாட்டுப் போர் மற்றும் தற்காலப் போர்கள் ஆகிய விஷயங்களைப் பாடங்களாகக் கற்பிக்கும் பேராசிரியராக உள்ளார். சர்வதேச பயங்கரவாதம் மற்றும் வன்முறை வழிமுறைகளின் செயல்பாடுகளைக் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். அகிம்சை வழிமுறையை சந்தேகத்தோடு அணுகும் அனேக அறிவு ஜீவிகளைப் போல் தான் தானும் சமீப காலம் வரை இருந்ததாக ஒத்துக் கொள்கிறார்.

ஜனநாயகம் தீவிரவாதத்திற்கு மாற்று என்ற புஷ் அரசாங்கத்தின் கொள்கையை அடித்தளமாக கொண்டு ஆய்வு செய்தார். தீவிரவாதத்தைப் பெரிய அளவில் ஜனநாயகம் பாதிக்கவில்லை என்பதே அவரது ஆய்வு முடிவாக இருந்தது. வன்முறை மூலம் தங்கள் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று மக்கள் நமபுவதாகவே அவரும் எண்ணினார்.

இந்தச் சூழலில் அகிம்சை போராட்ட வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் மரியா பாதுகாப்புக்கான ஆய்வுத் துறை வல்லுநர்களுக்கு, வன்முறையில்லாத போராட்ட முறைகள் பற்றி போதிக்க நடத்திய ஒரு வகுப்பில் அவர் பங்கெடுக்கிறார். மரியா அதில் நிகழ்த்திய உரையை அவர் கேட்க நேரிட்டது ஓர் முக்கியமான திருப்புமுனை. பிலிப்பைன்ஸ்,செர்பியா போன்ற தேசங்களில் பல ஆண்டுகால ஆயுத போராட்டங்கள் சாதிக்க முடியாததை அகிம்சைப் போராட்டங்கள் வென்றெடுத்ததை அவர் விளக்கியதை எரிக்காவால் முழுமையாக நம்ப முடியவில்லை. அந்த வகுப்பில் இருந்தவர்கள் ஸ்டீஃபனின் உரையின் முடிவுகளுக்கு எரிக்கா காட்டும் பலத்த எதிர்ப்பு சரியா என்று சோதித்துப் பார்க்க அவரே ஒரு ஆய்வு நடத்தலாமே என்று கருத்து தெரிவிக்கவும், அப்படி ஒரு ஆய்விலிறங்க எரிக்கா முடிவு செய்து, ஸ்டீஃபனுடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் முடிவுகள் உலக அளவில், குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் அல்லது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்பும் அத்தனை வன்முறை குழுக்களுக்கும் பேரிடியாகத்தான் வந்திறங்கியிருக்கக் கூடும். அன்று அகிம்சையைத் தான் போதிக்கவில்லை, அது வெல்லும் என்றும் கருதவில்லை என்கிறார் எரிக்கா. ஆகவே தன் முன்முடிவை உறுதிபடுத்திக் கொள்வதற்காக அவர் இந்த ஆய்வைச் செய்யவில்லை என்பது நம் கவனத்துக்குரியது அவர்களுடைய Why Civil Resistance Works? The Strategic Logic of Nonviolent Conflict எனும் நூலின் மூலம் அகிம்சை, வன்முறை போராட்டங்களை காட்டிலும் இருமடங்கு பலனளிக்கக்கூடியது எனும் முக்கியமான கண்டடைதலை முன்வைக்கின்றனர். அண்மையில் எரிகாவின் நேர்காணல் ஒன்றை ஸ்ட்ரீட் ஸ்பிரிட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அண்மையில் நான் வாசித்த மிக முக்கியமான நேர்காணல்களில் இது ஒன்று.

இந்த நேர்காணலில் எரிக்கா முன்வைக்கும் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அகிம்சைப் போராட்டமா , ஆயுதப் போராட்டமா, எது சிறந்தது? ஏன் சிறந்தது? அகிம்சைப் போராட்டம் ஏன் தோல்வி அடைகிறது? ஆயுதப் போராட்டத்தின் விளைவுகள் என்ன? அகிம்சைப் போராட்டத்தின் விளைவுகள் என்ன? இது போன்ற ஆதாரக் கேள்விகளை நோக்கி இந்த நேர்காணல் விரிகிறது.

அகிம்சை வழிப் போராட்டங்கள், பொதுவாக அகிம்சை உறுதியாக தோல்வியடையும் என்று நம்பப்பட்ட- வன்முறையும் அடக்குமுறையும் நிறைந்த சூழலில் கூட வெற்றி பெறுவதை எரிக்கா சுட்டிக்காட்டுகிறார். மக்கள் தாங்கள் வன்முறையைக் கையிலெடுக்கக் காரணம் அங்கு அகிம்சை செயல்பட முடியாது என்பதால்தான் என்று சொல்வதை நாம் கேட்க முடிகிறது இத்தகைய போராட்டத்திற்கு முன்பு அங்கு தேர்ந்த சிவில் சமூகம் இல்லாத சூழலில் கூட அகிம்சை பலனளித்துள்ளது என்கிறார்.

அகிம்சைப் போராட்டங்களில் பொதுவாக வன்முறைப் போராட்டங்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிக மக்கள் பங்கேற்கின்றனர். மேலும் வன்முறைப் போராட்டங்களைக் காட்டிலும் அகிம்சைப் போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் அதிக முனைப்புடன் செயலாற்றுவதையும் எரிக்காவின் ஆய்வு பதிவு செய்கிறது.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளின் ஒத்துழைப்பை நம்பித்தான் எந்த ஒரு அரசும் இயங்க முடியும். குறிப்பாக உயர் வர்க்கத்து மக்கள், வணிகர்கள், மற்றும் ராணுவத்தின் துணையின்றி அரசு இயங்க முடியாது. கொடுங்கோல் அரசுகள் மக்களை அச்சுறுத்தி அனைத்து எதிர்ப்புகளையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணினாலும் அதை நிறைவேற்றுவது அத்தனை சுலபமல்ல. நீண்ட காலமாக, தொடர்ந்து அகிம்சை வழியிலான போராட்டம் நடைபெறும் பட்சத்தில் மேற்கண்ட சமூகக் குழுவினர்களின் ஆதரவை அரசு இழக்கும் அபாயம் உள்ளது. அதுவும் குறிப்பாக ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு பிரிவுகளின் ஆதரவை இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எரிக்கா முன்வைக்கும் மற்றுமொரு முக்கியமான கண்டுபிடிப்பு, அகிம்சைப் போராட்டத்தின் வழயே அடையப்படும் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஜனநாயகத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றன. மேலும், அங்கு மீண்டும் ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. மக்களின் அகிம்சை வழிப்போராட்டங்களின் மிக முக்கியமான இயங்கு முறை ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பரவலான மக்கள் சம்மதத்தை பெறுவதுதான். ஆகவே அத்தகைய வழிமுறைகளில் அடையப்படும் அரசும் அதே வழிமுறைகளையே, மக்களின் சம்மதத்தை நாடிப் பெறுவதையே ஆட்சி முறையாகக் கையாளும்.

ஆனால் ஒரு வன்முறைப் போராட்டத்தின்போது விதிமுறைகள் கத்தி முனையிலேயே உருவாக்கப்படுகின்றன. ஆகவே ஆயுதப் போராட்டத்தின் விளைவாக அமையப்பெறும் அரசாங்கம் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு உதாரணமாக போலந்தில் லெஹ் வாவென்ஸா அரசில் ஏற்பட்ட மாற்றத்தை சூட்டுகிறார் எரிக்கா. கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து அகிம்சை முறையில் போராடி ஆட்சியை அடைந்தார் லெஹ் வாவென்ஸா. ஆனால் அவரது அரசால் வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவோ முடியாமல் போன நேரம், கம்யுனிஸ்டுகளுக்கு எதிராகத் திரண்ட மக்களை காட்டிலும் அதிகமாக வாவென்ஸாவை எதிர்த்துத் திரண்டனர். இங்கு மக்கள் அரசாங்கத்தைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பது புலப்படுகிறது. வாவென்ஸா மற்றுமொரு கொடுங்கோலனாக மாறுவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. சிவில் சமூகம் முழுமையாக விழித்துகொண்டதே இதற்கு காரணம். ஒருக்கால் வாவென்ஸா வன்முறை வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சியை பிடித்திருந்தால், அவருக்கு எதிரான கிளர்ச்சிகளை அடக்குமுறை மூலமே அணுகியிருப்பார். போராட்டத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளைக் காட்டிலும் முக்கியமானது போராட்ட வழிமுறைதான். அதுவே வெற்றிக்குப் பின்னர் அரசு எப்படி அமையவிருக்கிறது என்பதைச் சுட்டுவதாகும் என்கிறார் எரிக்கா.

அடுத்து அகிம்சைப் போராட்டங்கள் ஏன் தோல்வி அடைகின்றன எனும் கேள்வியை ஆராய்கிறார் எரிக்கா. பரவலான மக்கள் பங்களிப்பு இல்லாமல் போவதே ஒரு அகிம்சைப் போராட்டம்தோல்வி அடைய மூல காரணம் என்கிறார் . அதையொட்டி எழுப்பப்படும் மற்றொரு கேள்வி, ஏன் மக்கள் பங்களிப்பு குறைகிறது என்பதே. அதற்கு மூன்று காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.முதலாவதாக, போராட்டம் மூலம் எதிர்க்கப்படும் குறைபாடுகள் பெரும்பாலான மக்களுக்குடையனவா? அவர்களுக்குப் போராட்டத்தில் கோரப்படும் நிவாரணங்கள் குறித்த செய்தி தொடர்புடையதா? இரண்டாவதாக, போராட்ட வழிமுறை, தேர்ந்தெடுத்த போராட்ட முறை அனைவருக்கும் ஏற்புடையதாக உள்ளதா? அனைவரையும் சென்று சேர்கிறதா? மூன்றாவதாக, போராட்டம் அன்றைய சூழலுக்கு ஏற்ப சரியான நேரத்தில் தொடங்கப்பட்டதாக இருக்கிறதா? இவையே அகிம்சைப் போராட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்கிறார்.

ஒரு அகிம்சைப் போராட்டம் வெற்றி பெற மாறுபட்ட பல தரப்புகளின் பங்களிப்பு முக்கியம் என்கிறார் எரிக்கா. சாதாரண மக்கள் எல்லாரும், குடும்பங்களாக– வயோதிகர்கள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து இனங்களும், பொருளாதாரக் குழுக்களும், மதக் குழுக்களும் என சமூகத்தின் பல்வேறு தரப்பினர் பங்குகொள்வது முக்கியமாகும். குறுகிய பாதை, சில குழுக்களுக்கு மட்டுமே ஆன பாதையில் போராட்டம் துவங்கினால் அது தோற்கும் என்கிறார்.

அகிம்சைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ஆதரவு குவிந்து பின்னர் அது நீர்த்துப் போக முக்கிய காரணம், அந்த போராட்டத்திற்கு உரிய வடிவமும், சரியான தலைமையும் இல்லாததுதான் என்கிறார் அவர். மேலும் நாளடைவில் இந்தத் தலைமை சிக்கல் காரணமாக, போராட்டத்தின் கட்டுக்கோப்பு குலைந்து விடுகிறது. இதற்கு உதாரணமாக ஓக்லாந்து (சமீபத்திய அமெரிக்க நகரம் ஒன்றில் அமைதிப் போராட்டக் குழுக்கள் நடத்தியது இது) நகரின் மையத்தில் நடந்த ஆக்கிரமிப்புப் போராட்டத்தைச் சுட்டுகிறார் எரிக்கா. ஆரம்பத்தில் உற்சாகத்தோடு கலந்துகொண்ட பலரும், போராட்டத்தின் கட்டுக் குலைந்து வன்முறையின் சாயல் தென்படத் தொடங்கியவுடன் அந்த போராட்டத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்குகின்றனர்.

எரிக்கா இதனினும் முக்கியமான ஒரு பார்வையை முன்வைக்கிறார். புரட்சிகள் வெல்வதற்கு துடிப்பான இளைஞர்களின் பங்களிப்புதான் காரணம் என்று சொல்லப்படுவதை ஏற்க மறுக்கிறார் அவர். ஒரு புரட்சி போராட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்களிப்பு ஆற்றுபவர்கள் அதில் பங்கு பெறும் அனுபவம் வாய்ந்த முதியவர்களே என்கிறார். ஏனெனில் இத்தகைய போராட்டங்களில் அதிரடி செயல்பாடுகளை காட்டிலும் பொறுமையே மிக முக்கியம். 95% அமைதியும் 5% செயல்பாடும் இருந்தால் போதும் என்கிறார். இளைஞர்களுக்கு இந்தப் பொறுமை இருப்பதில்லை. மேலும் அகிம்சை வழியிலான போராட்டம் ஓரளவிற்கு உணரத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் குறைந்தது மூன்றாண்டுகளாவது ஆகின்றன என்பதை தங்கள் ஆய்வுகள் எடுத்துக்காட்டுவதாக சொல்கிறார். இளைஞர்கள் ஆறுமாதம் வரை காத்துக் கொண்டிருப்பார்கள், பின்னர் போராட்டத்தின் கட்டுக்கோப்பு குலைந்து விடத் தொடங்குகிறது.

மக்கள் பெருந்திரளாகப் பங்குபெற வேண்டும் என்றால் எதிர்தரப்பு அவர்கள் அனைவரையும் பாதித்திருக்க வேண்டும். அந்த கொடுங்கோல் அரசின் அடக்குமுறையை ஆழத்தில் உணர்ந்து அதை வெறுத்தால் மட்டுமே லட்சக்கணக்கான மக்களை திரட்ட முடியும். இதற்கு உதாரணமாக , ஈரானின் ஷா அரசாங்கம் தூக்கி எறியபட்டதையும், எகிப்தின் ஹோஸ்னி முபாராக் ஆட்சி தூக்கி வீசப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் எரிக்கா.

எந்த சூழலிலும் அகிம்சைப் போராட்டம் சாத்தியமே என்பதையும் எந்த சூழலிலும் ஆயுத போராட்டம் தவிர்க்க முடியாதது அல்ல என்பதையும் தங்கள் ஆய்வு உறுதியாக உலகிற்குக் காட்டுவதாகக் கூறுகிறார் எரிக்கா. சூழல்கள் போராட்ட வழிமுறைகளை முடிவு செய்வதில்லை, மாறாக மக்களின் தேர்வே அதை முடிவு செய்கிறது என்கிறார். அகிம்சைப் போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் ஒன்றுக்கொன்று மாற்றல்ல, அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் தேர்ந்தெடுக்கப் படுவது ஏதோ இயற்கையான நடப்பல்ல. மக்கள் சில நேரம் தேர்ந்தெடுத்துதான் ஆயுதப் போராட்டத்தில் இறங்குகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ, ஆயுதப் போராட்ட வழி என்பது நிச்சயம் தவறான தேர்வுதான் என்பது அவருடைய வாதமாக உள்ளது. மக்கள் அகிம்சை வழிமுறை பலனளிக்கவல்லது என்பதை ஏற்கத் தயராக இல்லை என்றால்,ஏதோ ஒருவகையில் ஒரு சித்தாந்தத்திற்கு அவர்கள் கடமைப்பட்டதாக உணர்வது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் எரிக்கா.

தங்களுடைய ஆய்வு உண்மையில் அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பயத்தை ஓரளவேனும் போக்கும். அவர்கள் தொய்வின்றிச் செயல்பட உதவும் என்கிறார் எரிக்கா. அதற்காக அதீத நம்பிக்கையுடன் செயல்படுவதும் ஆபத்தில் கொண்டுவிடலாம் என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

எரிக்கா பல சான்றுகளைக் கொண்டு தனது தரப்புகளை நிறுவுகிறார். உதாரணமாக பாலஸ்தீன போராட்ட வரலாறில் அவர்கள் அடைந்த அதிகபட்ச வெற்றி என்பது முதல் இன்டிஃபாடாவில்(intifida) அகிம்சை பின்பற்றப்பட்ட காலகட்டத்தில்தான். ஆனால் அதற்கு பின்பான உள்குழுப் போர் உண்மையில் ஒரு மகத்தான அகிம்சைப் போராட்டத்தை நிர்மூலமாக்கிவிட்டது என்கிறார். ஆயுதப் போராட்டங்கள் ஒரு போராட்டத்தின் காரணங்களை உயர்த்திக் காட்டி உலகக் கவனத்தைப் பெறலாம், ஆனால் அவை இலக்கை அடைய உதவுவதில் அத்தனை பயனற்றவை என்பது இவர்களுடைய முக்கியமான கவனிப்பு.

1988-90 காலகட்டத்து பர்மிய போராட்டம் தோல்வி அடைய முக்கிய காரணம் என்று சில புள்ளிகளை முன்வைக்கிறார். மக்கள் போராட்டங்களில் மக்களை ஓரிடத்தில் குவிய செய்வது (ஊர்வலம், பொதுகூட்டம்) ஒரு முறை என்றால் பரவலாகப் போராட செய்வது மற்றொரு முறை (வேலைநிறுத்தம், ஒத்துழையாமை). இதில் மக்களைக் குவியச் செய்யும் போராட்ட முறைகள் எப்போதுமே ஆபத்தானவை. அங்கு எதிர்தரப்பு வலுவாக வன்முறையைப் பிரயோகிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பர்மியப் போராட்டத்தின் தோல்விக்கு மற்றுமொரு காரணம், சூச்சி எனும் ஒரு ஆளுமையை மட்டுமே அது சார்ந்திருக்க வேண்டியிருந்தது. சூச்சியும் திட்டமிடல்களில் சில தவறிழைத்தார் என்கிறார் அவர்.

அமெரிக்காவின் ஆதரவில் ஃபிலிப்பைன்சை ஆண்டுவந்த பெர்டினன்ட் மார்கசின் ஆட்சிக்கு எதிராக இரண்டு வலுவான ஆயுதப் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன, கம்யுனிச ஆயுதப் போராட்டமும், இஸ்லாமிய ஆயுதப் போராட்டமும் சாதிக்க முடியாததை அகிம்சைப் போராட்டம்சாதித்து காட்டியது. இந்த நிகழ்வு அகிம்சைப் போராட்டத்தின் மெய்யான வலிமையை பறைசாற்றுவதாகும்.

எகிப்தில் நடந்த சமீபத்துப் போராட்டங்களை முன்வைத்து, ஒரு அகிம்சைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற மூன்று அடிப்படைகள் அவசியமென முன்வைக்கிறார். ஒற்றுமை, திட்டமிடல், கட்டுப்பாடு ஆகியவையே அகிம்சை போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் காந்தியையும் அவர் முன்னின்று நடத்திய போராட்டங்களையும் புரிந்துகொண்டால் உணமையில் அவருடைய மகத்துவம் பன்மடங்கு உயர்கிறது. உலகமெங்கிலும்அடக்குமுறைகளுக்கு எதிராக செயலாற்றும் ஒவ்வொரு மக்கள் குழுவையும் காந்தி ஏதோ ஒருவகையில் ஆழமாக பாதித்துள்ளார்,

அண்மையில் நான் வாசித்த மிக சிறந்த நேர்காணல்களில் இதுவும் ஒன்று. இந்த புத்தகம் எழுதியதால் இதுவரை தான் சந்திக்காத பல மிரட்டல்களைச் சந்திப்பதாகச் சொல்கிறார். உண்மையான அதிகாரம் ஆயுதங்களில் இல்லை, மக்களின் மனங்களில் அது உள்ளது என்பது மற்றுமொரு முறை இதன் மூலம் நிருபிக்கப்படுகிறது. அரசு மக்கள் மீது செலுத்தும் அதிகாரம் என்பது யானையின் காலில் கட்டப்படும் சங்கிலியை போலத்தான். அறியாமையின் காரணமாகவோ அல்லது விருப்பத்தின் பேரிலோதான் அது அந்த சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்கிறது என்பதை அரசாங்கம் ஒருநாளும் மறக்க கூடாது.

நேர்காணலை இங்கே வாசிக்கலாம் : http://www.thestreetspirit.org/discovering-the-unexpected-power-of-nonviolence-street-spirit-interview-with-erica-chenoweth-4/

எரிக்கா இதே விஷயம் குறித்து நிகழ்த்திய உரை :

One Reply to “அகிம்சையின் வெற்றி”

Comments are closed.