அப்பா பேனாவில் மஷியை (ink) விட்டு கொண்டிருந்தார். அப்பாவின் பக்கத்தில் பாட்டில், ஃபில்லர், பழைய துணி. மஷி விடுவது ஒரு யுத்த காண்டம் போல. பாரதப் போரில் பீஷ்மர் ரத கஜ துரக பதாதிகளுடன் இருப்பது போன்ற ஒரு காட்சிதான். மூக்கு கண்ணாடி எப்பொழுதும் போலவே மூக்கின் நுனியில் இருக்கும். லேசாக ஒரு காற்று வந்தாலே கண்ணாடி கீழே விழலாம். பேனாவில் மஷி விட்ட பிறகு கை, துணி எல்லாம் மஷியாக இருக்கும். இரண்டு பேனாக்கள் உண்டு. ஒவ்வொரு ஞாயிறு தோறும் அப்பா குளிப்பதற்கு முன்னால் அரங்கேறும் நிகழ்ச்சி.
அவர் மஷி விடுவது சற்று வித்தியாசமாக இருக்கும். இடது கை முழுவதும் மேலே எழும்பாது.ஒரு முறை மதியம் பள்ளிக்கூடம் விட்டு சாப்பிட வீடு வரும் போது சைக்கிள் ஓட்டிய ஒரு பையன் அவரை இடித்து கையில் மா கட்டு போட வேண்டியது ஆயிற்று. அரசு மருத்துவமனை மருத்துவர் தவறோ அல்லது மருந்து தவறோ,கை பழைய நிலையை அடையேவே இல்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் பள்ளியில் மட்டும் அப்படியே விட மாட்டார். மகா கண்டிப்பு. ஒரு முறை தேசிய கீதம் பாடும் போது ஒரு பையன் விளையாடிக்கொண்டிருந்தான் என்று பிரம்பை வைத்து அடி நொறுக்கி விட்டார்.
கை வெளங்காம போனப்பொறவும் இந்த அடி அடிக்காரு என்று அந்தப்பையன் அப்பாவை திட்டியதை பேசாது கேட்கும் படி ஆயிற்று.
அதே போல் ஏதாவது ஒரு மூடில் தீடீர் தேர்வு வைத்துவிடுவார்.
மதிப்பெண் குறைந்தால், “எங்கையாவது களை பிடுங்க போலாண்டே. எங்க உசிரெ எதுக்கு எடுக்கிய” என்பார்.
ஒரு முறை தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்ற காரணத்தால் அப்பாதான் தற்காலிகமாக தலைமை ஆசிரியாக இருந்தார். சத்துணவு அறிமுகப் படுத்திய நேரம் என்று நினைவு. இரு ஆசிரியர்கள் சிறுபிள்ளைத் தனமாக ஓரிரு மாணவர்க்குப் போதுமான உணவை ஒளித்துவிட அப்பாவிற்கு கோபம் வந்து விட்டது. என்னை வீட்டில் இருந்து உணவைக் கொண்டு வரச் சொல்லிவிட்டார். ஆனால் வீட்டில் படிப்பிற்காக அடித்ததே கிடையாது. படிப்பைப் பற்றி ஒரளவிற்குத்தான் கவலைப் படுவாரே ஒழிய படிப்பில்லை என்றால் வாழ்க்கை இல்லை என்று கூறும் ரகம் அல்ல. பொய் சொல்லக் கூடாது.
ஆங்கிலமும், வரலாறும் தான் அவர் பாடங்கள். அவர் இந்தியா வரைவது மிக வித்தியாசமாக இருக்கும் கீழே இருக்கும் தெற்குப் பகுதிக்கு ஆங்கிலத்தில் எழுத்தான ஒரு ’வி’ யைப் போடுவார். மேலே இருக்கும் வட இந்தியா ஒரு கெளபாய்த் தொப்பி. அந்த தொப்பியின் ஒரு புறத்தில் இருந்து ஒரு கோடு வரும். அந்த வளைந்த கோட்டில் மிஸோரம், நாகாலந்து, அஸ்ஸாம் மணிப்பூர் எல்லாம் அடங்கிவிடும். மேறகுப் பகுதி அம்போ…
அசல் இந்தியா வேணுண்னா எல்லாரும் அட்லஸ் பாருங்கலே என்று கூறிவிட்டார். அட்லஸே அறிமுகமானது அப்படித்தான். எட்டாம் வகுப்பு வந்தபின்தான் அட்லஸ் தெரிய வந்தது. ஆனாலும் அது ஒரு புதிய உலகத்தை அறிவித்தது. உலகம் என்பதும் அதில் உள்ள நாடுகளும் ஒரு வரைபடம் மூலம் அறிமுகமானது அப்படித்தான். உலகத்தையும் அதன் மக்கள் தொகை அளவையும் பார்த்து ஆச்சரியமாக இருக்கும். கொடிகளின் வண்ணங்கள். அரசியல் என்று ஒரு வரைபடம். இயற்கை என்று மற்றொரு வரைபடம்.
நீ எங்கென எடம் வாங்குவடே என்றால் ஒருவன் அமெரிக்கா புள்ளா நமக்குத்தான் என்று விடுவான். அட்லஸில் அமெரிக்கா கையளவும் இல்லையே. பொழுது போகவில்லை எனில் அந்த அட்லஸை வைத்துத்தான் விளையாடுவோம். ஒரு குழு உலகத்தில் இருக்கும் அனைத்து இடங்களிலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். மறு குழு அட்லஸைப் பார்த்து அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு அருமையான விளையாட்டு. நாங்கள் அறியாமலேயே புவியியலில் அதிக மதிப்பெண் கிடைக்க தோதுவானது.
ஆங்கிலத்தில் மட்டும் அப்பா கொஞ்சம் கடுமையாக இருப்பார். ஜோக் எதுவும் இருக்காது. அவருக்கு பள்ளியின் அடைமொழியே “வெர்ப்” வெங்கடாசலம் தான்.
ஸீ..பாய்ஸ்… ’வாக்’ இஸ் எ வெர்ப்… வித் ஸிங்குலர் பெர்ஸன் யூ ஷுட் யூஸ் ’டஸ்’ என்பார்.
அவரு என்னடே ட்ஸ் புஸ்னு சொல்றார் ஒரு எளவும் மனஸாகிலெ (புரியவில்லை), என்று வகுப்பு மாணவர்கள் மெதுவாகப் பேசுவார்கள். அரசுப் பள்ளியென்பாதால் தனி அறைகள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு வகுப்பும் ஒரு தட்டியை வைத்து மறைக்கப் பட்டிருக்கும். சத்தம் போட்டு பேசினால் அடுத்த வகுப்பு டீச்சர்களும் கேட்பார்கள். ஆகவே சத்தம் போட முடியாது.
அப்படிப் பட்ட ஒரு நாளில் தான் என் வகுப்பில் ஒரு அறிவிப்பு நடந்தது. இந்த ஆண்டும் எட்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பில் தேர்ச்சி பெறும் மாணவ/மாணவியருக்கு ஆங்கில ஆசிரியர் ஒரு விலை உயர்ந்த மஷிப் பேனா பரிசாக அளிக்கறார் என்பதுதான். ஆங்கில ஆசிரியர் என் தந்தைதான்.
நான் எடுக்கேன் பாரு ஃபர்ச்ட்டு என்றான் அய்யப்பன். அய்யப்பன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன்.
வாத்தியார் பையன் இருக்க நீ எவம்பிலே சொல்லுத, சவுட்டி போடுவேன் இது விஷ்ணு.
நான் ஒரக்கண்ணால் விஷ்ணுவைப் பார்த்தேன். ப்ரதிவாதி ஒத்துக்கொள்ளாமலே லாயர் வாதாடும் வழக்கு. விஷ்ணுவிடம் சும்மாயிரு என்று சொல்லவும் முடியாது. அவன் வீட்டில்தான் கிராமத்திலேயே இருக்கும் நல்ல மாங்காய் மரம் உண்டு.
நீ என்ன சொல்லுக ரமேஷ் இது விஷ்ணு.
நீ உண்டுமாடே போட்டிக்கு அப்ப நான் விட்டு கொடுக்கேன், மேலும் ஒரு படி போனான் அய்யப்பன். என்ன செய்வது. கிராமத்தில் நடக்கும் கூத்துதான்.
கிராமம் பெரிது. பெரிய தெரு. ஒன்றை ஒன்று பார்த்தால்போல் எதிரும் புதிருமாக நூறு வீடுகள். ஒரு வீட்டிற்கும் மறு விட்டிற்கும் பொதுவான சுவர். கொஞ்சம் காது வைத்து கேட்டால், அடுத்த வீட்டு விஷயம் எல்லாம் தெரிந்துவிடும். அகன்ற தெரு. எங்கள் உலகமே அந்தத் தெருதான். தெருவின் மத்தியில் ஒரு வீடுதான் பொது வீடு. தெருவின் சமுதாயத்திற்கு உடமையானது. ஊரின் நடக்கும் பஞ்சாயத்துக்கள், கூடிப்பேசும் இடம், அரசியல், வம்பு எல்லாமே அதுதான். ஊருக்கு பொதுவாக ஒரிரு நாளிதழிகள் அந்த வீட்டு திண்ணையில்தான் வரும். எங்கள் பொது அறிவு அதன் மூலம்தான் விரிவானது. பண்டிகை அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி என்றால் மட்டுமே அவ்வீட்டை கிராமத்துப் பெரியவர்கள் திறந்து வைப்பார்கள். தெருவில் எங்களை விட வயதில் பெரிய, திருமணமாகி இருக்கும் இளைஞர்கள் எங்களை உசுப்பேத்த ஒரு சிறிய உத்தியை உபயோகப்படுத்துவார்கள். ஒருவன் இன்னொருவன் மூக்கை தொட வேண்டும். விஷயம் சிறியதுதான். ஆனால் அதன் பக்க விளைவுகள் மிக அதிகம். இந்த விபரம் புரியாது, புரிந்த பிறகும் தள்ள முடியாத காலகட்டமும் கூடிய வயது. அன்றும் அப்படித்தான். பொது வீட்டு திண்ணையில் பேசிக் கொண்டிருக்கையில் பாபு அண்ணா வந்து விட்டான். மேற்கூறிய இளைஞர்களில் ஒருவன். நானும், குமாரும் பேசிக் கொண்டிருந்தோம். கண்ணாடி கணேசன் கூட இருந்தான். பாபு அண்ணா இது போன்ற சந்தர்ப்பத்தை சரியாக உபயோகிக்கும் ஆசாமி. அவனுக்கு எங்கள் கூட்டணியில் யாரை உசுப்பேத்த வேண்டும் என்றும் தெரியும். ஆனால் அண்ணா என்று கூப்பிட வேண்டும் என்ற கண்டிப்பு வேறு.
என்னைப் பார்த்து ’டே நீ கணேசனை தொடு பாப்போம். கண்ணாடி விளாம மூக்க தொடு’ என்றான்.
குமாருக்கு குஷி ஒரு புறம், நிம்மதி ஒரு புறம். அவனைக் கூப்பிடவில்லையே. பேர் சொன்னால் அவன் கூறப்பட்டவனின் மூக்கைத்தொட்டே ஆகவேண்டும். இல்லையென்றால் மூக்கை தொட முடியாதலெ ஒனக்கு, புடுக்கில்லா பய புள்ளை என்பான்.
நான் கணேசனைத் தொடப்போக அவன் ஒன்றும் சொல்லவில்லை. பாபு அண்ணாவிற்கு ஆச்சரியம்.
’லே கணேசன் தோத்தான் என்று டிக்ளேர்’ செய்து விட்டான். ’காயத்ரிக்கிட்டெ சொல்லுவேன்’ என்றான் அடுத்தபடியாக. கணேசனுக்கு தான் தோற்றதில் வருத்தமில்லவிட்டாலும், காயத்ரி என்ற பேர் ஆட்டிவிட்டது. காயத்ரி ஒரு அழகுப் பெண். எல்லோரிடமும் கல கலப்பாக பேசுவாள். எந்த உள்ளர்த்தமும் கிடையாது. ஆயினும் அவளின் கேலிக் கூத்தாக ஆவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
கணேசன் என்னை ஒரு அடி அடித்தான். ஆகா ஆரம்பித்தது. நான் கணேசனை அடிக்க, பாபு அண்ணாவின் வேலை முடிந்தது.
அது போன்றே இங்கே நான் விஷ்ணுவிடம் மாட்டிக்கொண்டேன்.
நீ என்னத்தெ விட்டு கொடுக்கது, நான் படிப்பேன் மார்க் வாங்குவேன்….என்றேன் அய்யப்பனிடம்.
அப்ப சரி பாக்கலாம் என்றான் விஷ்ணு. அவன் வேலையும் முடிந்தது.
அப்பாவின் மீது கோபமாக வந்தது. போயும் போயும் எட்டாம் வகுப்புதான் கிடைத்ததா. ஆனால் இது ஒவ்வொரு வருடமும் வரும் அறிவிப்புதான். பரிசு தான் வேறு. அதுவும் மஷி பேனா. நான் இவ்வருடம் எட்டாம் வகுப்பு என்றால் அவர் என்ன செய்வார். ஆனாலும் அவரின் ஞாயிறு காலை மஷி விடுதல் ஒரு காட்சிதான். அவர் பேனாவைத் தொடவிடமாட்டார்.
அப்பாவிடம் ஒரு கைப்பெட்டி உண்டு. அதுதான் அவர் சொத்து. பழைய பத்திரம் முதல் எல்லாமே அதில்தான். அந்த பெட்டி அருகில் செல்வதோ, பொருட்களை தொடுவதோ தெய்வகுற்றம். அதை ஒரு உள்ளறையில் வைத்திருப்பார். வேலை பார்க்கும் நேரத்தில் மட்டும் அப்பெட்டி கூடத்தில் வந்துவிடும். ஒரு நாள் அப்படி எதோ எழுதும் போது அவரிடம் என்ன எழுதுகிறார் என்று கேட்டேன். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாதமும் தான் எடுக்குவிருக்கும் பாடங்களை, தேர்வில் வரும் பாடப்பகுதிகளை சுருக்கமாக ஒரு நோட்டில் எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கவேண்டும். தேர்வு வினாத்தாள்களின் ஒரச்சு அதில் இருக்கும். எனெனில் ஒருக்கால் மாணவரிடம் கொடுக்கும் வினாத்தாளில் எதாவது பழுது ஏற்ப்பட்டால் என்று விளக்கினார். எனக்கு அதற்கு மேல் கேட்க பொறுமையில்லை.
பொதுவாக பிடித்த பாடம் தமிழ்தான். தாய் மொழியான காரணமாக இருக்கலாம். அல்லது தமிழ் ஆசிரியை காதில் குண்டலங்களை ஆட்டியவாறு, கேரள நாட்டின் கருநீளக் கூந்தலோடு கண்ணை உருட்டி நேர் நேர் தேமா என்று கூறிய காரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஆங்கிலம் கொஞ்சம் வீக்.
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார் அப்பா. மற்றபடி எந்த விமர்சனமும் கிடையாது. ஒரு முறை சவரம் செய்ய ஃப்ளேட் வாங்கி வரச்சொன்னார். நான் கடைக்கு சென்று வாங்கி வந்து தந்து விட்டேன். வினை அங்கல்ல. ஃப்ளேட் விலை 13 காசுகள். 2 காசுகளுக்கு மிட்டாய் சாப்பிட்டு விட்டேன். ஃப்ளேட் என்ன விலைடா? என்றார். கேட்ட பொழுது சொல்லியிருக்கலாம். அதுதான் எல்லாம் சரியாகி விட்டது என்று மகாபாரத தர்மனைப் போல் சொல்லியும், சொல்லாமலும் விட்டுவிட்டேன். அவரும் எதுவும் சொல்லவில்லை. நானும் என் புத்திசாலித் தனத்தை மெச்சிக்கொண்டேன். ஆனால் அன்றிரவு புயல் மையம் எடுத்து சரியான அடி. கடைக்காரன் போட்டு கொடுத்து விட்டான்.
நான் வகுப்பில் முதல் அல்லன். ஆனால் முதல் ஐந்து பேரில் ஒருவன். ஆனால் பேனா ஆசை யாரை விட்டது. படிக்க வேண்டுமே. அதுவும் ஆங்கிலம். அய்யப்பனும் விஷ்ணுவும் சேர்ந்து செய்த சதியில் வேறு மாட்டி கொண்டாகிவிட்டது.
அப்பாவும் அம்மாவும் என் முன் நிறைய பேசிப் பார்த்தது குறைவு. மிக அபூர்வமாக சில நாள் நான் புலர்ந்தும் புலராத காலையில் முன் பாதி தூக்கத்தில் தலயை உயர்த்தி பார்ப்பேன்.யாரோ பேசும் குரல் கேட்கும். அதுவும் தூக்கத்தில் பக்கத்து வீட்டின் சத்தமாக கூட இருக்கலாம். ஆனால் அது அப்பாவும் அம்மாவும் பேசும் குரல் என்று தெரியும். நேரம் போவது தெரியாமல் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் பையை அப்படியே போட்டுவிட்டு விளையாட ஓடினால் இருக்கும் முன்றைய தின களைப்பு கண்ணை சுழற்றும்.
என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் பேசவே மாட்டார்கள். ஆனால் என்னை பற்றிய ரிப்போர்ட் எல்லாம் போய்விடும்.எப்படி, எந்த நேரத்தில் என்று தெரியாது.
தேர்வில் நான் தான் முதல் ஆங்கிலத்தில். அன்றிரவு முதல் அப்பா என்னிடம் பேசவே இல்லை. வழக்கமாக என்னைக் கொஞ்சும் அம்மாவும் கமுக். மஷி பேனா என்னைப் பார்த்து சிரித்தது.