ஆயிரம் தெய்வங்கள் – 21

9. ஹிப்போலைட்டாவின் தங்க ஒட்டியாணம்

உலகப் பேரழகி அஃப்ரோடைட்டின் ஆசை நாயகனான ஏரஸ் தெய்வத்தின் ஆசை நாயகியைத் திகழ்ந்த ராணி ஹிப்போலைட்டா, அமேசான் இளவரசி பெந்தசீலியாவின் தாயும்கூட. ஏரஸ் ஒருமுறை தன் அன்பின் அடையாளமாக, அமேசான் அழகிக்கு தங்க ஒட்டியாணத்தைப் பரிசாக வழங்கினான். ஹீராவுக்கும் ஹிப்போலைட்டாவுக்கும் என்ன பகை என்று புரியவில்லை, அந்த தங்க ஒட்டியாணத்தைக் கவர்ந்து வரும்படி ஹீராக்ளீஸ் பணிக்கப்பட்டான். அந்த ஒட்டியாணத்தை யுரைஸ்தியசின் மகள் அத்மித்தே ஆசைப்பட்டதும் ஒரு காரணம்.

இக்கட்டளைப்படி தனது நோக்கத்தை அமேசான் ராணியிடம் ஹீராக்ளீஸ் கூறவே, அவள் மறுப்புச் சொல்லாமல் அந்த அன்புப் பரிசை இழக்கச் சம்மதித்துக் கழட்டித் தர உள்ளறைக்குச் சென்ற சமயம் பார்த்து வேண்டுமென்றே ஹீராவின் ரகசிய உத்தரவுப்படி ஹீராக்ளீசுடன் வந்த வீரர்கள் அமேசான் பெண்டிருடன் வம்பு செய்து சண்டைக்கு இழுத்தனர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட ஹீராக்ளீஸ் ஹிப்போலைட்டாவைக் கொன்றுதான் தங்க ஒட்டியாணத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பது தலையெழுத்து போலும்!

10. ஜெரியான் பசுக்கள்.

ஜெரியான் என்ற மாயாவி அரக்கனிடமிருந்து பசுக்களைக் கவர்ந்து வந்து யாகம் செய்ய ஹீரா விரும்பினாள். ஜெரியான் அரக்கன் க்ரைசாரின் மகனாவான். யாகப்பசுக்களை சூரியனையெல்லாம் கடந்து யூரைத்தியா என்ற தீவில் உள்ள பாதாள உலகத்தில் யுரைஷனும் யுரைஷனின் பொல்லாத நாய் ஓர்த்ரஸும் காவல் காத்தனர். சூரியனையும் சமுத்திரராஜன் ஓஷியானசையும் வென்று அவர்களின் உதவியுடன் ஓர்த்ரசைக் கொன்று படையுடன் வந்த ஜெரியானையும் வீழ்த்தி யாகப்பசுக்களைக் கவர்ந்து சென்று ஹீராவிடம் ஹீராக்ளீஸ் வழங்கினான்.

செர்பீரஸ் – காலபைரவர்?

ஹீராக்ளீசின் பதினொன்றாவது சாகசம் நமது புராணத்தில் காலபைரவரைப் போன்ற தோற்றமுள்ள செர்பீரசை ஆர்கோசுக்குக் கொண்டு வந்து ஹீராவிடம் ஒப்படைக்க வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் செர்பீரஸ் எலூசிஸ் என்ற எமன் உலகில் உள்ள காவல் தெய்வம்.எலூசிஸ் உலகை ஹேடஸ் ஆண்டு வருகிறான். எலுசிஸ் என்ற எமன் உலகில் நுழைவது மட்டும் கடினம் அல்ல. அப்படி நுழைந்தவர்கள் உயிருடன் பழையபடி மீண்டு வருவது இயலாத காரியம். அதைச் சாதித்தவர் ஹீராக்ளீஸ்.

எலுசிஸ் நுழைவு வாயிலில் இரண்டு துவார பாலகிகள் காரகன், மெடுசா என்ற பெயரக்கியரை வீழ்த்திவிட்டு ஹேடஸ் முன் நில்ன்றான். தனக்கு செர்பீரஸ் வேண்டுமென்று கேட்ட ஹீராக்ளீசை எள்ளி நகையாடிய ஹேடஸ், “உனக்கு சக்தியிருந்தால் அந்த காலபைரவரான செர்பீரசை அடக்கி ஆளலாம்” என்று உத்தரவு வழங்கினான்.

ஹீராக்ளீஸ் தன் சாகசத்தால் எம உலகுக்கு வழிகாட்டும் காலபைரவராகிய செர்பீரசைக் காயப்படுத்தித் தோளில் சுமந்தபடி ஆர்கோஸ் திரும்பினான். ஹீராக்ளீசையும் செர்பீரசையும் கண்டு தொடை நடுங்கிய பொம்மை அரசன் யூரைஸ்தீயஸ் ஒரு ஜாடிக்குள் பதுங்கிக் கொண்டான். யூரைஸ்தீயஸ் செர்பீரசைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதால் கால பைரவர் விடுவிக்கப்பட்டு ஹேடசிடம் பழையபடி ஒப்படைக்கப்பட்டது.

தங்க ஆப்பிள் பழங்கள்

ஹெஸ்பரைடஸ தோட்டத்தில் ஆப்பிள் பழங்கள் தங்கமாகத் தொங்குவதாக மரபு. அந்தத் தங்க ஆப்பிள்களைப் பறித்து மூட்டையாகக் கட்டி ஆர்கோஸ் திரும்ப வேண்டுமென்பது கட்டளை. ஹெஸ்பரைடஸ் என்றால் மயக்கும் நாக கன்னியர். இத்தோட்டத்தைக் காவல் காப்பது ஒரு நூறு தலை நாகம். இந்த நூறு தலை நாகத்தை எகித்னே – டைஃபோன்’அரக்கன்- அரக்கி தெய்வங்கள் இணைந்து உருவானதாம். ஹீராக்ளீசுக்கு அப்படிப்பட்ட தோட்டம் எங்குள்ளது என்பதே தெரியாத சூழ்நிலையில், ஊக்கமாக எரிடோனஸ் வருமுன் ஏரஸின் புதல்வன் சைக்லோஸ் கொல்லப்பட்டான். அங்கு வாழ்ந்து வந்த சில நாககன்னியர் மூலம் நீரியஸ் என்ற கடல் தெய்வத்துக்கு மட்டுமே வழி தெரியும் என்ற உண்மையை அறிந்தான். நீரியசை வென்று கைதியாக்கிய பின்னரே அவன் வாய் திறந்தான்.

ஹீராக்ளீசின் தங்க வேட்டை சுயநலத்துக்கு இல்லையென்றாலும் இதில் பெற்ற வெற்றியின் முடிவு இருபதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ‘மேக்கென்னாஸ் கோல்டு’ போன்ற பல ஹாலிவுட் படங்களுக்குரிய கதைக்கருவை வழங்கியுள்ளதாகவே கவனிக்கலாம். நீரியஸ் காட்டிய பாதை அப்படிப்பட்டது. ஹீராக்ளீஸ் லிபியாவுக்கு வந்து எர்த்தின் புதல்வன் ஆன்டீயஸ்ஸுடன் நிகழ்த்திய போர் கடுமையானது. ஆன்டீயஸ் பூமி மாதாவின் புதல்வன். பூமியில் கால்படும்போது அதிக பலத்துடன் தாக்குவதை கவனித்த ஹீராக்ளீஸ் அவனை அந்தரத்தில் வைத்து மென்னியை முறித்துக் கொன்றான். லிபியாவைத் தாண்டி எகிப்துக்கு வந்து நரபலி கேட்கும் மன்னன் புசிரசையே நரபலியாக்கிவிட்டு அரேபியா வருகிறான். ஈமேஷன் கொல்லப்படுகிறான். பின்னர் செங்கடலுக்குச் சென்று சூரியனை வம்புக்கு இழுத்து சூரியப்படகைக் கடனாகப் பெற்று கடல் கடந்து காக்கேஷியன் மலைத் தொடரில் ஸீயஸ்ஸின் தண்டனைக்கு ஆளான புரோமித்தியாஸை ஒரு ராட்சசக் கழுகு அணு அணுவாய் அவன் உடலைக் கொத்தி சித்திரவதை செய்து கொண்டிருந்ததை கவனித்த ஹீராக்ளீஸ் அவனை விடுவித்து சாபவிமோசனம் வழங்கினான். இதற்கு நன்றிக்கடனாக ஹீராக்ளீஸின் நோக்கத்தை அறிந்து தங்க ஆப்பிள் பற்றிய ரகசியத்தைக் கூறினான். அட்லஸ் ஒருவனைத் தவிர வேறு எவராலும் தங்க ஆப்பிளைத் தொட்டுப் பறிக்க முடியாதாம். விண்ணைத் தன் தோளில் சுமப்பதுதான் அட்லாஸின் கடமை அல்லது தண்டனை. அட்லஸிடம் வந்த ஹீராக்ளீஸ் தங்க ஆப்பிளைப் பறித்துத் தரும்படி கேட்டான். விண்ணின் சுமையைச் சற்று இறக்கி வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து அதை ஹீராக்ளீஸிடம் வழங்கி விட்டுத் தங்க ஆப்பிள்களுடன் வந்த அட்லாஸ் தானே ஆர்கோஸ் சென்று யூரைஸ்தீசியஸிடம் தங்க ஆப்பிள்களை வழங்குவதாகக் கூறவே, அட்லஸ் மீது சந்தேகம் கொண்டு, “சரி, சரி, நீயே கொண்டு போய் தரலாம்.” என்று ஒப்புக்கு சம்மதித்து “விண்ணின் பாரம் அழுத்தாமல் இருக்க ஒரு பஞ்சு மெத்தையை வைத்துக் கொள்கிறேன்.அதுவரை இந்தா பிடி.” என்று அட்லாஸ் மீதே சுமத்தி விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்க ஆப்பிளுடன் ஆர்கோஸ் வந்த ஹீராக்ளீசுக்கு அடுத்த சோதனை, ஹீரா அவற்றை ஏற்காததுதான்.

“தங்க ஆப்பிள் என்பது எப்போதும் எட்டாக்கனியாக இருக்க வேண்டுமென்பதுதான் ஆண்டவன் கட்டளை. அதை மீறக்கூடாது என்பதால் எங்கே அவற்றை எடுத்தாயோ அங்கேயே அவை பழையபடி இருக்கட்டும்” என்று ஹீரா கூறவே, ஹீராக்ளீஸ் பட்ட பாட்டுக்கு அர்த்தம் உண்டா, இல்லையா, அர்த்தம் புரிந்தால் சரிதான். தெய்வம் என்றாலும்கூட மிகவும் கொடூரமான மாமியாரை, அதாவது ஹீராவை, சமாளித்த தீரச் செயல்தான் அல்சீடஸ் என்ற பெயரைப் பெற்றவன் ஹீராக்ளீஸ் – ஹீராவின் அன்புக்கும் பாத்திரமானான்.

ஹீராக்ளீஸின் சாதனை தங்க ஆப்பிளோடு முடிவு பெறவில்லை. ஏதாவது காரியம் ஆக வேண்டியிருந்தபோது ஹீராக்ளீசை வணங்கி வரவேற்றவர்கள் வாக்குறுதி மீறும்போது பிற்காலத்தில் அவன் பழிவாங்கிய படலமும் உண்டு. இலியாத் போர் நிகழ்வதற்கு முன்பே தன் படைகளுடன் ட்ராய் நகரைச் சூறையாடியிருக்கிறான். இளவரசி ஹிஷோனியை அரக்கர்களிடமிருந்து காப்பாற்றினால் வேண்டிய குதிரைகள் தருவதாகப் பேச்சு. ஆனால் பேச்சுப்படி யாகக் குதிரைகளை மன்னன லாவோமிடான் வழங்கவில்லை. ட்ராயின் வாரிசாக போடார்சஸ் என்ற ப்ரியம் (பாரிசின் தந்தை) மட்டும் மிச்சம் வைக்கப்பட்டான். ஹிஷோனியை ஹீராக்ளீஸின் படைத்தளபதி டெல்மான் கவர்ந்து சென்று மணமுடித்தான். ஆகேயன் மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்திய செயலுக்கும் வாக்குப்படி பணம் தராததால் எலிஸ் நகர் சூறையாடப்பட்டு ஒலிம்பியாவின் அடித்தளம் நிறுவப்பட்டது.

ஹீராக்ளீஸ் பிறந்த மண்ணில் அரசாண்ட நெலீயஸ் கொல்லப்பட்டான். சீகராபஸ் என்ற கடற்கொள்ளையர்களும் கொள்ளப்பட்டு கிரீஸ் பாதுகாக்கப்பட்டது.

ஹீராக்ளீசின் மரணம்

ஹேடசின் பாதாள உலகில் கலைடான் இளவரசன் மெலிகரைக் காப்பாற்றியதால் இருவரும் நண்பர்களாயினர். ஹீராக்ளீஸ் பல்வேறு வீரதீரங்களைச் செய்து வந்தபோது மீண்டும் மேலிகரைச் சந்திக்கிறான். மெலிகர் தன் சகோதரி தேவநீராவை மணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான்.அவள் ஒயினசின் புதல்வியும்கூட. அதே சமயம் தேவநீராவைத் தனக்கு மணமுடிக்க வேண்டுமென்று ஏக்கிலஸ் நதி தெய்வம் வலியுறுத்தவே, ஏக்கிலசை வீழ்த்திவிட்டு தேவநீராவை ஹீராக்ளீஸ் மனமுடிக்கிறான். மாமனார் வீட்டில் இருக்க மனமில்லாமல் இருந்துவரும் ஹீராக்ளீஸ் ஒருமுறை ஒயினசின் உறவினர் ஒருவரைக் கொள்ள நேர்ந்தது. இதனால் ராஜதண்டனையாக ஹீராக்ளீஸ் குடும்பத்துடன் நாடு கடத்தப்படுகிறான். எவன்ஸ் நதியைக் கடக்கும்போது படகோட்டி வந்த சென்டாரஸ் (நெஸ்ஸஸ்) கரைக்குப் படகு வந்ததும் ஹீராக்ளீசும் அவன் மகன் ஹைலசும் தரையில் இறங்கியதும் சென்டாரஸ் பழையபடி படகைத் தண்ணீருக்குத் திருப்பி தேவநீராவைக் கெடுக்க முயன்றான். குரல் கேட்டுத் திரும்பிய ஹீராக்ளீஸ் கரையிலிருந்தபடி அம்பைத் தொடுத்து சென்டாரசைக் கொன்றான்.இறக்கும் சமயம் சென்டாராஸ் தேவநீராவிடம் அவளது மேலங்கியைத் தனது ரத்தத்தில் தோய்த்து வைத்திருந்து பத்திரப்படுத்தும்படி கூறினான். இந்த ரத்தம் தோய்ந்த அங்கியை அணியும் எந்த ஆண்மகனும் மனைவியைத் தவிர வேறு பெண்களை நாடமாட்டான் என்று மரணவாக்குமூலம் வழங்கிவிட்டு இறந்து விடுகிறான்.

இடையில் இரண்டாண்டுகாலம் ஓம்ஃபேல் என்ற பெண் தெய்வத்துக்கு அடிமையாக பணிபுரிந்தபோது யூரைத்தீசின் மகள் அயோலாவை அபகரித்துக் கொண்டான்.ஆர்கோஸ் மன்னன யூரைத்தீசை வென்ற மகிழ்ச்சியில் தனக்கு ஒரு புதிய அங்கி வேண்டுமென்று கேட்டான். ஹீராக்ளீசை அயோலாவிடமிருந்து பிரித்து தான் மட்டும் வரித்துக் கொள்ளும் வழியாக சென்டாரசின் ரத்தம் உறைந்த அங்கியை தேவநீரா வழங்கினாள். அதை ஹீராக்ளீஸ் அணிந்து கொண்ட மறுகணமே அந்த அங்கி ஹீராக்ளீசின் உடம்புடன் ஒட்டிக கொண்டு விஷத்தைப் பாய்ச்சியது. சென்டாரசின் பேச்சைக் கேட்டு மோசம போனதை உணர்ந்த தேவநீரா தற்கொலை செய்து கொள்கிறாள்.விஷ ரத்தத்தால் தான் மாய்ந்து வீழ்வது திண்ணம் என உணர்ந்து கொண்ட ஹீராகளீஸ் மிகவும் இளவயது மனைவியான அயோலாவைத் தன் அன்பு மகன் ஹெலசின் பொறுப்பில் விட்டுவிட்டு ஒயிட்டா மலை மீது ஏறினான்.அங்கு ஒரு பெரிய யாகத்தீ வளர்க்க உத்தரவிட்டான்.அப்படிப்பட்ட பெரிய யாகத்தீயை வளர்க்க யாரும் முன்வராதபோது பிலாக்டீட்டஸ் மட்டுமே முன்வருகிறான்.இதற்குப் பரிசாக ஹீராக்ளஸ் தன் வசமுள்ள வில் அம்புகளையும் வேறு பல அச்திரங்களையும் பிலாக்டீட்டஸிடம் வழங்கி விட்டு அம்மாபெரும் யாகத்தீயில் தன்னைத் தியாகம் செய்தான்.பூதவுடல் எரிந்து சாம்பலானதும் ஆன்மா ஜோதி வடிவில் இறைவனுடன் கலந்தது. ஓலம்பஸ் என்ற தேவலோகத்தில் நிலையான இடம் பெற்றான்.ஹீராக்ளீசின் மகன் ஹைலஸ் ஆர்கோஸ் மன்னன் யூரைஸ்தீயசைக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டாலும்கூட ஆர்கோசை ஆள விரும்பாமல் தான் பிறந்த மண்ணான போன்னசஸை மீட்டுக் கொண்டான்.

(தொடரும்)