சரித்திரத்தை அழிக்கப்போகும் சாலை

06frpanangatiswara_1044615f

 ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியான இக்கட்டுரையை கட்டுரையாசிரியரின் அனுமதியோடு இங்கே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம்.

1300 ஆண்டுகள் பழமையான சிவாலயம் ஒன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இடிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கிறது. அந்த ஆலயம் ச்மபந்தரால் பாடப்பட்ட ஒன்று. சோழ அரசர்களின் கல்வெட்டுகள் கோவிலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. திருப்பரவூர் பனங்காட்டீஸ்வரர் கோவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் கிராமத்தில் உள்ளது. அதையொட்டி பெண்ணையாறு ஓடுகிறது. பரவைபுரம் என்றும் அந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

 160 கிமி நீளமுள்ள விக்கிரவாண்டி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 45C யை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவுபடுத்தி வருகிறது. அது இந்த விரிவுபடுத்தப்பட்ட சாலை பிளந்து செல்லும் பாதையை ஆலயத்தின் வெளிச்சுவற்றிலும் உட்புறத்திலும்  பெரிய அம்புக்குறிகளால் குறித்து வைத்திருக்கிறது.

விரிவுபடுத்தப்பட்ட நெடுஞ்சாலையில் தொலைந்து போகப்போகும் ஆலயப் பகுதிகளை அடையாளப்படுத்தும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலயத்துக்கு வெளியே கற்களைக் குவித்து வைத்திருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், பனங்காட்டீஸ்வரர் இருக்கும் ஆலய கர்ப்பகிரகம், அவரது இறைவி சத்யாம்பிகையின் சந்நிதி மற்றும் ஆலயத்தின் இன்னும் பிற சந்நிதிகளில் பெரும்பாலானவை இடிக்கப்படும். பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4000 கிராமத்தினர் மற்றும் பாப்பனாப்பட்டு, முண்டியம்பாக்கம், கப்பியம்புலியூர் மற்றும் துறவி கிராமங்களைச் சேர்ந்த மக்களை இச்செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கி கொபப்படச் செய்திருக்கிறது. அவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் வி சம்பத் அவர்களைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

உறுதியான நிலைப்பாடு

பனையபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.பி. புகழேந்தி, “எங்களுக்குத் தூக்கம் கொள்வதில்லை. கர்ப்பகிரகம், அன்னை சத்யாம்பிகையின் சந்நிதி, கணேசர் மற்றும் முருகர் சந்நிதிகள் உட்பட ஏறத்தாழ ஆலயத்தில் அனைத்துமே இடிக்கப்படப் போகிறது. கொடிக்கம்பமும் சனீஸ்வரர் சந்நிதியும் மட்டும்தான் மிச்சமிருக்கும். கோயிலுக்கு மேற்கே விரிவுபடுத்தப்பட்ட சாலை செல்வதற்குத் தேவையான நிலம் இருக்கிறது. அல்லது தேசிய நெடுஞ்சாலை 45க்கு புது அலைன்மெண்ட் கொடுக்கலாம். கோவிலின் ஒரு கல்லை எடுக்கக்கூட விட மாட்டோம்”.என்றார்.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர்.நாகஸ்வாமி, 1300 ஆண்டுகள் தொன்மையான இந்த ஆலயத்துக்கு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் வருகை தந்திருப்பதாகக் குறிப்பிட்டார். லிங்கோத்பவரை சம்பந்தர் பாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பகுதியில் பனைமரங்கள் நிறைந்திருப்பதால் லிங்கோத்பவர் பனங்காட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

1012 முதல் 1043 வரை ஆட்சி புரிந்த முதலாம் ராஜேந்திர சோழன், அவரது மகன் இரண்டாம் ராஜேந்திர சோழன், ஆதி ராஜேந்திரா, முதலாம் குலோத்துங்கன், முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன் மற்றும் பலருக்கு உரிய கல்வெட்டுகள் ஆலயத்தில் உள்ளன.

கண் நோய்களைப் போக்குபவர் என்ற பொருளில் மூலவரை ராஜேந்திர சோழனின் கல்வெட்டு நேத்ரோதாரக சுவாமி என்றழைக்கிறது. ஆலயத்துக்கு நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்டதையும், வழிபாட்டுக்கு பொருளுதவி செய்யப்பட்டதையும், வேறு பல காணிக்கைகளையும் அந்தக் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. ராஜேந்திர சோழன் கடாரம் வென்றதை இந்தக் கல்வெட்டு பேசுகிறது (இன்றைய மலேஷியாவில் உள்ள கெட்டா என்ற இடம்தான் அன்று கடாரம் என்று அழைக்கப்பட்டது. அது ஸ்ரீவிஜய பேரரசுக்கு உரியதாக இருந்தது). 1020க்கும் 1040க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் சோழப் பேரரசர் இந்தக் கோயிலை மறுநிர்மாணம் செய்த செய்தியும் குறிப்பிடப்படுகிறது என்று சுட்டிக் காட்டினார் முனைவர் நாகசாமி.

“இந்த கிராமம் பரவைபுரம் என்றும் அழைக்கப்படுகிறது என்பது இன்னொரு சிறப்பு,” என்றார் அவர். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் துணைவியார் பரவை. அவர் நடன மங்கையர் குலத்தைச் சேர்ந்தவர், சிவாலயங்களில் இன்றும் அவர் சுந்தரருடன் வழிபடப்படுகிறார். முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பரவை என்ற உதவியாளர் இருந்தார், அவரை ‘அணுக்கி’ என்று அழைத்தனர். இந்தப் பரவை சுந்தரரின் துணைவியாரின் பெயரால் அழைக்கப்பட்டார் (அரசர்களின் நம்பிக்கைக்குரிய பெண் உதவியாளர்கள் அணுக்கி என்றும், ஆண் உதவியாளர்கள் அணுக்கன் என்றும் அழைக்கப்பட்டனர்). திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவிலை பரவை நிர்மாணித்து அதன் கோபுரத்தைப் பொன்னால் வேய்ந்தார் என்ற தகவலை முனைவர் நாகசாமி தெரிவித்தார்.

பரவையைப் போற்றுதல்

பரவையைப் பெருமைப்படுத்தும் வகையில் முதலாம் ராஜேந்திர சோழன் அவரை அரச தேரில் தன்னருகில் அமர்த்தி, தியாகராஜர் கோவிலைச் சுற்றியுள்ள நான்மாட வீதிகளிலும் திருவுலா சென்றார். அவளைப் போன்ற இரு வெண்கலச் சிலைகளைச் செய்து அவற்றை திருவாரூர் கோவிலின் மூலவர் சன்னதியில் வைத்து வழிபட்டார் அவர். கல்வெட்டு எழுத்துகளை வாசிப்பதில் நிபுணரான முனைவர் நாகசாமி, “இந்தத் தகவல் ஒரு நீண்ட செய்தியாக திருவாரூர் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். பனையபுரம் கோவிலை பரவையைப் பெருமைப்படுத்தும் வகையில் முதலாம் ராஜெந்திரச் சோழன் மறுநிர்மாணம் செய்தான். அப்போது அவள் உயிருடனிருந்தாள். ஆலயத்தைச் சூழ்ந்த ஊருக்கு அவள் பெயரிடப்பட்டது.

1062 முதல் 1064 வரை ஆட்சி புரிந்த இரண்டாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக்கள் இரண்டும் இந்த ஆலயத்தில் உள்ளன. அவை 1058ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டவை. ராஜேந்திர சோழ வளநாடு என்ற ஆட்சிப் பகுதிக்குட்பட்ட ‘பனையூர் நாட்டில் பரவைபுரம் நகரில் பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவருக்கு” நெல் வயல்கள் கொடை தரப்பட்ட செய்தி ஒரு கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1068 முதல் 1071 வரை ஆட்சி புரிந்த ஆதி ராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்றும் ஆலயத்தில் உள்ளது. 1070ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில்,, யாத்ரிகர்களுக்கு உணவிடும் நோக்கத்தில் பரவைபுரம் வணிகக் கூட்டமைப்பினர் இந்த ஆலயத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக் கொடை தந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1070 முதல் 1122 வரை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழனால் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இன்றைய சென்னையில் உள்ள அரும்பாக்கத்தைச் சென்றத பொன்னம்பலக் கிழான் என்ற குழுத்தலைவன் அணையா விளக்கேற்ற பொற்காசுகள் பரிசளித்த சித்தியைப் பதிவு செய்கிறது.

“ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருநாளன்று ஆலயச் சன்னதியில் உள்ள லிங்கத்தின்மேலும் சத்யாம்பிகையின் விக்கிரகத்தின் மீதும் சூரியனின் கதிர்கள் விழுகின்றன என்பது பனையபுரம் ஆலயம் குறித்த ஒரு சிறப்புச் செய்தி,” என்றார் முனைவர் நாகசாமி. “இந்த ஆலயம் அவ்வளவு நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது தவறாமல் நிகழ்கிறது, சிறப்பு பூஜைகள் பூஜைகள் நடத்தப்படுகின்றன”

கிராம மக்கள் ஆலயத்தைக் காப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என்று கோயில் குருக்கள் எஸ்.கணேச குருக்கள் உறுதியாகச் சொன்னார். “நாங்கள் சென்னை சென்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்,” என்றார் அவர்.

இது குறித்து தொடர்பு கொண்ட பொது என்ஹெச்ஏஐ’யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “நாங்கள் இந்த ஆலயத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிக்கிறோம். கிராமத்தினரின் ஆட்சேபனைகள் குறித்து என்ஹெச்ஏஐயின் தலைமையகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.