சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 9

பரணி

பரணி என்றால் பெரிய ஊறுகாய்ப் பரணி, நல்லெண்ணெய்ப் பரணி, சிறிய உப்புப் பரணி, தயிர்ப் பரணி என இன்று மணிவிழா வயதைத் தாண்டியவர் அறிந்திருப்பார்கள். திருநெல்வேலிக்காரர் ஒருபோதும் தாமிரபரணியை மறந்து வாழாதவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவர் மரபணுக்களில் சேமிதமான செய்தி அது. தமிழில் இலக்கியம் படைக்க வேண்டுமானால் தாமிரபரணித் தண்ணீர் குடித்திருக்க வேண்டும் என்றார் என் வயதொத்த மரியாதைக்குரிய கவிஞர். என்னைக் குறித்துக் கவலையில்லை. மூதாதையர் குடித்தவர்தாம். காவிரித் தண்ணீர் பற்றியும் முன்பு அவ்விதமோர் பேச்சு இருந்தது. ‘தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே, மண் ஆவதும் சோழ மண்டலமே’ என்றது போல் ‘தண்ணீரும் தாமிரபரணியே’ என்றும் பாடல் எழுதலாம். ஒன்றும் தவறில்லை. ஆனால் படைப்பின் தன்மை பாலைவனத்தையும் புறக்கணிப்பதல்ல. இது பற்றிப் பட்டிமண்டபம் கூட – முத்தரப்போ, எழுதரப்போ – நடத்தலாம். நமக்குப் பொழுதில்லை. இன்று போத்தல் தண்ணீரைத்தான் யாவரும் போற்ற வேண்டும். ஏனெனில் இன்று எந்த நதியின் தண்ணீரையும் நேரடியாகக் குடிப்பது என்பது நேரடியாகக் சாக்கடையைக் குடிப்பதற்கு சமம். இன்னும் சற்றுத் தீவிரமான நாஞ்சில் நாட்டுக் கொச்சை வழக்குக்குத் தாவினால் தூமையைக் குடிப்பதற்கு ஒப்பானது.

எதுவானாலும் ஊறுகாய்ப் பரணியையும் பொருநை எனப்படும் தாமிரபரணியையும் ஈண்டு நாம் பேசப் புகவில்லை. கடந்த எழுபது ஆண்டு காலமாக, பெரும்பாலும் திராவிட இயக்க மேடைகளில், ‘பரணி பாடுவோம்’ என்றொரு சொற்றொடைரைச் செவிப்பட்டிருப்பீர்கள். அந்த பரணியைத்தான் பார்க்கப் போகிறோம்.

பரணி எனும் நாள்மீனையும் ஒருவேளை அறிந்திருக்கலாம். ‘பரணி தரணி ஆளும்’ என்றொரு வழக்கும் உண்டு அந்த நட்சத்திரத்தில் பிறந்தவரைக் குறித்து. பரணி எனும் நட்சத்திரத்தின் தேவதைகள் காளியும் யமனும் ஆவார்கள். நல்ல கூட்டாட்சித் தத்துவம் தான். அந்த நாள்மீனால் அமைந்த பெயர்தான் இவ்வகை இலக்கிய நூலுக்கும் பெயராக அமைந்தது என்று மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் கருதுகிறார். போர்க்கள அதிபதிகள் யமனும் காளியும் என்பதால் இவ்வாறு கருதத் காரணம் இருக்கும். பொதுவாக, மாவீரரைப் புகழ்ந்து பாடுவதைப் பரணி பாடுவது என்றார்கள். பெரும்போரை சாமான்ய மன்னர்கள் வெல்ல முடியாது. பரணியை சாமான்யப் புலவர்கள் பாடவும் ஏலாது.

இருபதாம் நூற்றாண்டில் வந்த ‘சீனத்துப் பரணி’ வரைக்கும் தமிழில் இவ்வகை இலக்கியங்கள் கையாளப் பட்டிருக்கின்றன. சீனத்தை நாம் வென்றோமா என்பது பிரதானக் கேள்வி.

‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி’

என இலக்கண விளக்கம் கூறும். அது பரணியின் இலக்கணம். கடும்போரில் ஆயிரம் யானைகளை உடைய எதிரிப் படையை வென்ற மன்னவர் மீது மட்டுமே பரணி பாடப்படுவது மரபு. திராவிட இயக்கத்தவர் பஞ்சாயத்து தேர்தலில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றாலேயே பரணி பாடும் தகுதி வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, சோதிப் பிரகாசரின் அக்ஞவதைப் பரணி, மேகவதைப் பரணி, வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணி, சீனிப்புலவரின் திருச்செந்தூர்ப் பரணி, தொட்டிக்கலை சுப்ரமணிய முதலியாரின் கைலாச சிதம்பரேசர் பரணி என்பன தமிழின் பரணிகளில் சில.

பரணியைக் கலித்தாழிசையால் பாடுவது வழக்கம் என்கிறார்கள். முதலில் நமக்குத் தாழிசை என்றால் என்னவென்று தெரியவேண்டும். பிறகு கலித்தாழிசை. அது என்னவென்று தேடினால் கிடைக்காமலா போகும்? கலிங்கத்துப் பரணி 599 தாழிசைகளால் ஆனது என்றறிகிறோம்.

பெரும்பாலும் தோல்வியுற்றவரை ஒட்டித் தலைப்பிடுதல் பரணி இலக்கிய மரபு. கலிங்கத்துப் பரணி எனில் கலிங்கம் வென்றதும் தக்கயாகப் பரணி எனில் தக்கனை வென்றதுமான செய்திகள். அக்ஞவதை, பாசவதை, மேகவதை என்பதில் இருந்தும் இது புலனாகும். பரணி, புறப்பொருள் இலக்கியவகை என்றாலும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புச் செய்யுள்கள் அகத்துறைப்பாடல்களுக்கு சற்றும் குறைந்தன அல்ல.

கலிங்கத்துப் பரணி

வெண்பாவில் புகழேந்தி, விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன், கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன், பரணிக்கு ஓர் செயங்கொண்டான் என்று போற்றிப் பாடினார்கள். கவிச் சக்ரவர்த்தி எனும் பட்டம் பெற்ற செயங்கொண்டார் எழுதிய ஒப்பற்ற பிரபந்த வகை கலிங்கத்துப் பரணி. உண்மையில் கவிச் சக்ரவர்த்தி எனும் பட்டம் மன்னர்களால் செயங்கொண்டானுக்கும் ஒட்டக் கூத்தனுக்குமே வழங்கப் பெற்றது. கம்பனுக்கு எவரும் அந்தப் பட்டம் தரவில்லை. என்றாலும் கம்பனுக்கு மட்டுமே அந்தப் பட்டம் நிலைத்தது. அது மக்கள் வழங்கிய பட்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தப் பட்டியலில் சினிமாப் பாடலாசிரியர்கள் வாங்கும் பட்டங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். பலபட்டடைச் சொக்கநாதர் எனும் புலவர் ஏற்றிப் பாடிய பரணிக்கோர் செயங்கொண்டான்தான் தமிழின் முதல் பரணி இலக்கியம், கலிங்கத்துப் பரணி எனும் பெயரில் பாடுகிறார். தொண்ணூற்று ஆறுவகைப் பிரபந்தங்களில் பரணியும் ஒன்று. கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு, கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டார் மீது பெருமதிப்பு இருந்திருக்கிறது. புலமைக் காய்ச்சல் இல்லாது, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் அவர் பாடுவது, ‘பாடற் பெரும் பரணி, தேடற்கு அருங்கவி, கவிச்சக்ரவர்த்தி’ என்று.

முதற் குலோத்துங்க சோழனுடைய ஆஸ்தானப் புலவராகத் திகழ்ந்த செயங்கொண்டார், சோழன் புகழையும் கலிங்க நாட்டு வெற்றியைத் தேடித் தந்த தலைமைப் படைத் தளபதியான கருணாகரத் தொண்டைமானின் சிறப்பையும் இந்தப் பரணியில் பாடுகிறார்.

செயங்கொண்டாரின் இயற்பெயர் என்னவென அறியக் கிட்டவில்லை. அவரது காலம் பெரும்பாலும் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் இறுதி அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கிறார்கள். அவரது ஊர் தீபங்குடி என்றோர் அனுமானம் உண்டு. தீபங்குடிகள், தொண்டை நாட்டில் ஒன்றும் சோழ நாட்டில் ஒன்றும் என இரண்டு உள்ளன என்றும் பெரும்பாலும் சோழ நாட்டில் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள தீபங்குடி இவர் ஊராக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

கலிங்கத்துப் பரணியைத் தவிர, ‘இசையாயிரம்’, ‘உலாமடல்’ போன்ற நூல்களை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. விண்டவர் கண்டிருக்கக் கூடும். சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியரும் செயங்கொண்டார் என்பார் சிலர்.

முதலாம் குலோத்துங்க சோழன் சோழ நாட்டை ஆண்ட பேரரசருள் ஒருவன். உண்மையில் அவன் குலோத்துங்க சோழன்தான். எவனாவது முதலாம் குலோத்துங்கன் என்று பெயர் வைத்துக் கொள்வானா? வரலாற்று ஆசிரியர்கள் முதலாம், இரண்டாம் மூன்றாம் குலோத்துங்கன் என்று அடையாளப் படுத்துகிறார்கள். பிற்காலத்தில், இதை எழுதுகிறவனும் இரண்டாம் நாஞ்சில் நாடன் என்று அடையாளப்படுத்தப்படக் கூடும். முதலாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1070 முதல் 1120 வரை. அவன் முதன்மைப் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமான் படை நடத்திக் கலிங்கத்தை வென்றது கி.பி. 1112 ஆம் ஆண்டு.

இங்கும் எனக்கொரு ஆட்சேபணை உண்டு. சமீபத்திய நமது ஆய்வுகள் சிலம்பின் காலம் கி.மு.79 என்றும் திருவள்ளுவரின் காலம் கி.மு.16 என்றும் தொல்காப்பியத்தின் காலம் கி.மு.7000 என்றும் வரையறுக்கின்றன. கால ஆராய்ச்சியும் கல்வெட்டு ஆராய்ச்சியும் எனக்கு தொடர்பற்றவை. ஆனால், எனது அடிப்படைக் கேள்வி எதற்காக கி.மு. அல்லது கி.பி. என்று குறிப்பிடப்பட வேண்டும்? கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும்?

இது என் மதம் பற்றிய பார்வை அல்லது அபிப்பிராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா! கிறித்து பிறப்பதற்கு முன்பான இத்தகைய தொல் பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும்?

அது கிடக்க…

599 நாழிகைகளால் பாடப்பெற்ற இந்தப் பரணி, மற்றெந்தப் பழந்தமிழ் நூலையும் போலவே, கடவுள் வாழ்த்தில் தொடங்குகிறது. உமா தேவன், திருமால், நான்முகன், கதிரவன், ஐங்கரத்தான், ஆறுமுகன், நாமகள், கொற்றவை, சப்த மாதர் எனப் பலரையும் பரவுகிறார் செயங்கொண்டார்.

பன்றி, கலப்பை, மான், சிங்கம், வீணை, வில், கயல் எனப்பட்ட சின்னங்களை உடைய கொடிகள் தாழ்ச்சி அடையவும் மேரு மலையில் பறக்க விடப்பட்டுள்ள ஒப்பற்ற சோழனின் புலிக் கொடி செழிக்கவும் எருமை, அன்னம், பேய், மயில், காளை, கழுகு, யானை எனும் ஏழு கொடிகளை உடைய சப்த மாதர்களான சாமுண்டி, அபிராமி, வராகி, கௌமாரி, மயேச்சுவரி, நாராயணி, இந்திராணி ஆகியோரின் பதினான்கு திருப்பாதங்களையும் பணிகிறது ஒரு பாடல்.

வாழ்த்துப் பகுதியை அடுத்து, போருக்குச் சென்று, வெற்றி பெற்று, நாடு திரும்பி, தமது மனைவியரிடம் வாசலைத் திறக்கக் கோரும் பகுதி கடை திறப்பு, இரண்டாவது பகுதி.

தமிழ் இலக்கிய வளங்களின் உச்சங்களில் ஒன்று கடை திறப்பு. போருக்குச் சென்று, அமர் முடித்து, வெற்றிக் களிப்பில் வீடு திரும்புவர் வீரர்கள். நாட்டு மக்கள் வழி நெடுக அவ்வீரர்களைக் கொண்டாடுவர். ஆனால் பிரிவுத் துயர் உழன்ற இல்லக் கிழத்திகள், உள்ளே ஆர்வத்தோடும் வெளியே சினத்தோடும் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் ஊடலைத் தீர்க்கவும் அடித்த கதவங்களைத் திறக்க வேண்டுவதுமான பாடல்கள் கொண்ட பகுதி கடை திறப்பு. கடை திறப்பு என்பதை Shop Opening என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. 54 பாடல்கள் இப்பிரிவில். காமம், கற்பனை, உவமை, சந்தம், கவிச்சுவை செறிந்தவை.

முதற்பாடல் காதலியரின் உடலழகை வர்ணிக்கின்றது:

சூதளவு அளவேனும் இளமுலைத்
துடியளவு அளவெனும் நுண் இடைக்
காதளவு அளவெனும் மதர்விழிக்
கடலமுது அனையவர், திறமினோ!

அந்தக் காலத்தில் சூதாடும் கருவி ஒன்றிருந்தது. அந்தக் கருவியின் அளவை ஒத்தது இளமுலை. உவமை என்பதே உவமைச் சொல்லப்படும் பொருளை விளக்கத்தான். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. துடி எனில் உடுக்கை. தமருகம் என்றும் ஒரு சொல்லுண்டு. அந்த உடுக்கையின் அளவை ஒத்தன நுண்ணிய இடை. விழிகள் காதளவு நீண்டவை. எத்தகு விழிகள் எனில் செருக்குக் கொண்ட விழிகள். மதர், மதர்த்த, மதம் கொண்ட எனில் செருக்குக் கொண்ட எனப் பொருள். கடலின் அமுதினை ஒத்த பெண்களே, கதவைத் திறவுங்கள்.

அழகைப் புகழ்ந்த வீரர்கள் அடுத்து சரசப் பேச்சில் இறங்குகிறார்கள்.

விட்டமின் எங்கள் துகில் விட்டமின் என்று முனி
வெகுளி மென் குதலை, துகிலினைப்
பிடிமின் என்று பொருள் விளைய நின்று அருள்செய்
பெடை நலீர் கடைகள் திறமினோ!

“எங்கள் துகிலை விடுமின் விடுமின் என்று ஊடலால் உண்டாகும் கோபத்தால் மழலைச் சொல் குழறி, அந்த இடத்தை விட்டு அகலாமல் நிற்பீர்கள். அதன் பொருள் துகிலைப் பிடிமின், பிடிமின் என்பது. எனவே, அன்னப் பெடை நல்லீர், வாயிற் கதவுகளைத் திறவுங்கள்.

எனது அடங்க இனி வளவ துங்கன் அருள்
என மகிழ்ந்து, இரவு கனவு இடைத்
தன தடங்கள் மிசை நகம் கடந்த குறி
தடவுவீர்! கடைகள் திறமினோ!

சோழன் குலோத்துங்கனைப் புகழும் பாடல் இது. சோழனின் காதலியரே! இனி வளவன் குலோத்துங்கன் அருள் முழுதும் எனது அடக்கம் என இரவில் கனாக் கண்டு, கனவிலேயே களிப்பு எய்தி, முலைகளில் நகம் கடந்த குறி உண்டு என மயங்கி, நனவிலும் அந்த நகக் குறிகளைத் தடவித் தேடிப் பார்க்கும் பெண்களே, வாயிற் கதவுகளைத் திறவுங்கள்.

கடை திறப்பு என்பது உண்மையில் காமக் கபாடம் திறப்புத்தான். அனைத்துப் பாடல்களும் ஒரே ரசம், காம ரசம். கம்ப ரசம் பேசியவர்கள் கலிங்கத்துப் பரணியின் காம ரசத்தை மேடை தோறும வாயூறிப் பேசினார்கள்.

இத்துயில் மெய்த்துயில் என்று குறித்து, இளைஞோர்
இது புலவிக்கு மருந்து என்று மனம் வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர் நயனக்
கடை திறவா மடவீர்! கடை திறமின் திறமின்

இளைய கணவர் மீது ஊடல் கொண்டு, கள்ள உறக்கம் கொண்டு கிடப்பீர்கள்! அது உண்மையான துயில் என்று எண்ணி, கணவனோ ஊடல் நீக்கி இது புணர்ச்சிக்கு வாய்ப்பு என்று எண்ணி, அடியில் கை வைத்ததும் மீண்டும் பொய்த்துயில் நடிப்பீர்கள். கடைக்கண் கூடத் திறக்க மாட்டீர்கள், பாசாங்கு செய்வீர்கள் மடவீர்களே, கடை திறமின் திறமின்!

செயங்கொண்டாருக்குக் கற்பனை வளம் அதிகம்.

முத்து வடம் சேர் முகிழ் முலை மேல்
முயங்கும் கொழுநர் மணிச் செவ்வாய்
வைத்த பவள வடம் புனைவீர்
மணிப்பொன் கபாடம் திறமினோ!

மொட்டுப் போன்ற முலைமேல் முத்துவடம் சேர்ந்துள்ளது. இனி முயங்கும் கொழுநர் மணிச் செவ்வாய் வைத்த பவள வடம் புனைவீர்! மணிப் பொன் கதவுகளைத் திறவுங்கள்.

கலவியின் களி மயக்கத்தால் உடுத்திருந்த துணி அகன்று கிடக்க, கலைமதியின் நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்கள். நீண்ட பொற்கதவம் திறக்க மாட்டீர்களா என்கிறது ஒரு பாடல்.

கல்விக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்
நீள்பொன் கபாடம் திறமினோ!

என்பது பாடல்.

கலவி என்பது களிப்பு என்பதோர் பொருள். களி எனில் பண்டைத் தமிழில் விளையாட்டு என்றும் பொருள். மலையாளத்தில் இன்றும் அச்சொல் உயிருடன் ஆட்சி செய்கிறது. கதகளி, சீட்டுக் களி, வள்ளம் களி, கிரிக்கெட் களி என்பன எடுத்துக் காட்டுகள். “எந்தா, களிக்கிகை யானோ?” (என்ன, விளையாடுகிறாயா?) “களிக்கான் போயி” (விளையாடப் போனேன்) என்பன அன்றாட வழக்குகள். கலைபோய் அகல எனும் இடத்தில் கலை என்பதற்கு ஆடை என்றும், கலை மதியின் நிலவை எனும் இடத்தில் கலை என்பதற்கு பிறை என்றும் பொருள். கலவியின் களி மயக்கத்தில் ஆடை அகன்று கிடக்க நிலவின் கற்றையை ஆடை என எடுத்து உடுத்தாள் என்பது ஒரு வரியில் பொருள்.

பெண்ணை வர்ணிப்பதில் பெரும்பாலான தமிழ்ப்புலவர்கள் காமுகர்களாகவே நம் கண்ணில் படுகிறார்கள். இங்கு காமுகன் என்பதற்கு காமம் மிக்கவன் எனும் நிதானமான பொருள் கொளல் தகும்.

தொப்பூள் குழியில் இருந்து உரோமப் பசுந்தாட்களால் ஆன கொடி ஒன்று முளைத்து எழுகிறது. அதில் கூம்பிய இரு தாமரை மொட்டுக்கள் பூத்திருக்கின்றன என்றொரு உவமை.

உந்திச் சுழியின் முளைத்து எழுந்த
உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு
அந்திக் கமலம் கொடு வருவீர்
அம்பொன் கபாடம் திறமினோ!

என்பது பாடல்.

சந்தப் பாடல்களுக்கு செயங்கொண்டாரைச் சிறப்பாகச் சொல்வார்கள்.

விளையிலாத வடமுலையிலாட விழி
குழையிலாட விழைகணவர் தோள்
மலையிலாடி வருமயில்கள் போல வரும்
மடநலீர் கடைகள் திறமினோ!

என்பது ஒரு சந்தப் பாடல். பொருள் புரிவதற்காகப் பிரித்தும் எழுதலாம்.

விலை இ(ல்)லாத வடம் முலையில் ஆட விழி
குழையில் ஆட விழை கணவர் தோள்
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும்
மட ந(ல்)லீர் கடைகள் திறமினோ!

விலை மதிக்க ஒண்ணாத முத்துவடம் அல்லது பொன்வடம் அல்லது பவள வடம் அல்லது இரத்தின வடம் முலைகளின் மேல் ஆட, காதில் அணிந்திருக்கும் கனக குழைகளில் விழிகள் வந்து மோதி ஆட, பெருங்காதல் விருப்புடன் அழகிய பெண்களே, கடை திறமினோ! உண்மையில், நமது இந்தக் கட்டுரைகளை வாசித்து வரும் எவருக்கும் இப்படிப் பொருள் எழுதுவதுகூட அவசியமில்லை. அரும்பதங்களுக்குப் பொருள் சொன்னாலே போதுமானது. அப்படிப் பார்த்தால் இந்தப் பாடலில் அரும்பதம் என ஒரு சொல்கூட இல்லை என்பதே உண்மை.

நகக்குழி, பற்குறி, என்பன கலவிக் களியின் கூறுகள். அவை பெண்கள் மீது ஆண்கள் மட்டுமே வைப்பார்கள் என்பதற்கு காம விஞ்ஞான நூல்களில் எந்த ஆதாரமும் இல்லை. ஆண் செய்யும் அத்தனையும் பெண்ணும் செய்வாள். மறுதலையும் எய்தும். எனினும் ஆண்பாற் புலவர் பாடும்போது காதற்கிழத்தியர், காமக் கிழத்தியர் மீது நகக்குறி, பற்குறி வைத்ததாகப் பாடுவது மரபு. அவ்விதம் கலவியின்போது கொழுநன் மனைவியின் முலைமீது கை நகம் மேவும் குறியை வைப்பான். அது வேண்டுமென்றே எவனும் வைப்பானா என்றொரு ஐயம் எனக்கு என்றும் உண்டு. தற்செயலாக நகம் படுவதோ, பல் தடம் பதிவதோதானே இயல்பு? ஆனால் நகக்குறி வைத்தல் எனும்போது ஒரு திட்டமிடல் இருப்பது போலத் தோற்றம் வருகிறது. இயல்பான கலவியில் அது தற்செயலாக நிகழலாம் என்பதன்றி யோசிப்பதற்கு நேரம் இருக்காது என்பது எனது துணிவு. அல்லாது போனால் அது பெண் சார்ந்த கலவி வன்முறை இன்பம் ஆணுக்கு ஏற்படுவது என்று பொருளாகும். சாடிசம் என்று சொல்கிறார்களே, அது போல. Cat-O-Nine எனும் கலவி வன்முறைச் சவுக்கு போல.

(தொடரும்)