கவிதைகள்

பிஞ்சுக் கதை

ஹரன்பிரசன்னா

மொழியறியாக் குழந்தை ஒன்றின்
கதை கேட்கத் தொடங்கினேன்
நல்லவர்கள் மட்டுமே வரும் கதை
குழந்தையின் தலையைச் சுற்றி
தேவர்கள் பூவோடு காத்திருந்தார்கள்
ரோஜா கொண்டு வந்த கைகளைக் கண்டு
குழந்தை சிரித்துக் கொண்டது
மஞ்சள் நிறப் பூ மலர்ந்தபோது
முகம் விரிந்தது
இரண்டு கைகளை
தலைக்கு இணையாக ஏந்தி
பூக்களைப் பெற்றுக்கொண்டே இருந்தது குழந்தை
இடைவேளையாக
வீறிட்ட குழந்தைக்குப் பால் கொண்டு வந்தாள் அம்மா
தேவர்கள் காத்திருந்தார்கள்
மீண்டும் பூக்கள் சொரிய
குழந்தை சிரிக்கத் தொடங்கியது
உச்சகாட்சியாகக்
குழந்தையைப் பார்க்க
கடவுள் வந்திருந்தார்
அவரைக் காக்க வைத்துவிட்டு
நல்லவர்கள் கதையை
எனக்குத் தொடர்ந்தது பிஞ்சு

தழல்

ஹரன்பிரசன்னா

அடி நெஞ்சின் ஆழக் கிடந்து
பல்லாண்டு ஊறி
பலம்கொண்ட வார்த்தைசெய்து
வீசியெறியப்பட்ட தழல்.
எங்கும் பற்றிக்கொண்டது
பைந்தழைகள் பற்றிக்கொண்டன
பசுமரம் எரியத் தொடங்கியது
வானெங்கும் தீ சூழ
எல்லாம் சிவப்பு நிறம்
எங்கும் செம்மை
கண்கள் காணுவதெல்லாம் செந்நிறம்
கண்களும் செம்மை கொண்டன
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
எல்லாம் ஒன்றானது
நீண்ட பெருமழையிலும்
விடாது எரிந்தது தீ
ஒரு வார்த்தையில்
உலகம் தீயானது
பசுமரத்தில் இடி விழுந்தது போல
இடி சொல்லாகுமா?
கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகளில்
இரண்டொரு கங்குகள் உருண்டன
தழலெறிந்தவனுக்கு
அவை அர்ப்பணம்.

-o00o-

சந்திர சமுத்திரம்

ராஜா

கரித்தொண்டை
விழுங்கிய மெர்க்குரி முட்டை
முழுதாய் கரையவில்லை.
அள்ளி எறிய
நீண்டு நெளிகின்றன கரங்கள்.
விடமேறி நீலம் பரவ
வாயில் நுரை தள்ளி
புரள்கிறது ஒரு கறுப்பு அமீபா.
ஆணவ உயரத்தில்
அமைதி முறுவலிக்கும்.

திணை மயக்கம்

– ராஜா

மரத்தினடியில்
மழைக்கு ஒதுங்கிய வாகனம்
நகர்ந்து விரைகிறது .

உழைத்து களைத்த பெண்ணுக்கு
பூச்சூடிய ஆண் அரணானது.

நகராது நிற்கிறது ஒரு உயிர்
அற்றது ஒன்று நகர்கிறது.

மாலை மழையில்
மயங்கும் இலக்கணம் .

One Reply to “கவிதைகள்”

Comments are closed.