குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான ‘உடையும் இந்தியா?’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே அளிக்கப்படுகிறது.
இந்தியாவைக் குறி வைக்கும் மூன்று பண்பாடுகள்
இந்த நூல், இந்தியாவின்மீதான மேற்கத்தியத் தலையீடுகளையும் அதற்கு திராவிட-தலித் பிரிவினைவாதங்கள் பயன்படுத்தப்படும் விதத்தையும் குறித்தது. ஆனால் இந்தத் திராவிட-தலித் அடையாள அரசியலை சர்வதேசச் சக்திகள் இந்தியாவில் தலையீட்டுக்காகப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையின் ஒரு பரிமாணம் மட்டுமே.
இன்று மூன்று சக்திகள் வெளிப்படையாகவே உலக மேலாதிக்கத்துக்காக மோதுகின்றன. மேற்கு (குறிப்பாக அமெரிக்கா), சீனா மற்றும் இஸ்லாம். இவை ஒவ்வொன்றுக்கும் ஓர் உலகப்பார்வை உள்ளது. அதை அவை உலகின்மீதான தம் விரிவாதிக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துகின்றன. இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. மேற்கிடம் அறிவு, தொழில்நுட்பம், மூலதனம், ராணுவ பலம் ஆகியவை உள்ளன. சீனா இந்த விஷயங்களில் மேற்கோடு போட்டியிட்டு வெல்லும் பாதையில் முன்னேறுகிறது. இஸ்லாம் இந்த விஷயங்களில் இந்த இரு சக்திகளுடன் பின்தங்கியிருந்தாலும் மக்களை உத்வேகத்துடன் ஓரணியில் திரட்டிப் போராட வைப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளது. அது உலகை ஒரு நாள் தாருல் இஸ்லாமாக ஆக்க இலக்கு கொண்டுள்ளது.
அமெரிக்காவும் மேற்கும் இஸ்லாமுடன் போரிலும், சீனாவுடன் போட்டியிலும் இறங்கியுள்ளன. ஒன்று வெளிப்படையான ராணுவ மோதல். மற்றதில் அது வெளிப்படையாக இல்லை. ஆனால் நிலைமைகள் மாறலாம். சீனா மேலும் மேலும் பலம் பொருந்தியதாக மாற, இஸ்லாமுடனும் மேற்குடனும் மோதவேண்டி வரலாம். அல்லது அணிகள் அமையலாம். சீன-இஸ்லாமியச் சித்தாந்த மோதல்களும் ஏற்படலாம்.
உலக வாழ்வாதாரங்கள்மீதான போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, உலகம் தன் வாழ்க்கையை மேற்கத்திய வளர்ச்சி மாதிரிக்கு ஏற்ப மேலும் மேலும் மாற்றிவர, இந்த பண்பாட்டு மோதல்கள் மேலும் மேலும் உக்கிரமடையும். தேசியமோ, மதமோ, பண்பாடோ, சித்தாந்தமோ எதுவானாலும், கூட்டு அடையாளங்கள் அதிக முக்கியத்துவம் அடையக்கூடும்.
இந்தியர்கள், கண்களை மூடிக்கொண்டால் இந்தப் பிரச்னைகள் மறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். உலகம் ஒரு கிராமமாக மாறிவருகிறது என்றும் அதில் அடையாளங்கள் பொருள் இழந்துவிட்டன என்றும் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இது மட்டுமல்ல, மற்றோர் இயக்கமும் உள்ளது. இந்த இரண்டையும் காணலாம்.
1. பன்னாட்டு பிராண்ட்களும் எளிதாகப் பயணிக்கும் மூலதனமும் தொழிலாளர்களும் சேர்ந்து பின்நவீனத்துவ நுகரிய உலகைப் படைத்துள்ளன. இதனால், உலகின் பல்வேறு பகுதிளும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் சார்ந்துள்ளன.
2. உலக அளவிலான குழு அடையாளங்கள், தனித்துவ அடையாளங்களுக்கு மேலாக எழுகின்றன. வள ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துகொண்டிருக்கும் உலகில் அவை ஒன்றோடு ஒன்று கடுமையாகப் போட்டியிருகின்றன .
மதச்சார்பற்ற நவீன இந்தியர்கள் பலரும் உலகம் முதலாவது வழியில் செல்வதாகவே கருதுகிறார்கள். இரண்டாவது வழி, வெறும் பரபரப்பூட்டும் தீவிரவாதச் சிந்தனை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் இந்த நூல் காட்டுவதோ, முதலாம் வழி என்பது வெறும் மேல்பூச்சு மட்டுமே; அதன் கீழே அடித்தளத்தில் நிகழும் நிகழ்வுகள் இரண்டாவது வழியின் தன்மையையே கொண்டிருக்கின்றன என்பதே. அதனைப் புறக்கணிப்பது ஒரு தேசமாக, நாளை நமது நலனையே குழிபறிப்பதற்கு ஒப்பாகும்.
இந்த நூல் மேற்கத்தியத் தலையீடுகளையே மையமாகக் கொண்டு ஆராய்ந்துள்ளது என்றாலும் இந்த மூன்று பண்பாட்டுச் சக்திகளும் மேலாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டும்.
சீனா
சென்ற அத்தியாயத்தில் கூறியதுபோல சீனாவுக்கு, நேபாளத்தைத் தன் கட்டில் வைத்து ஹிமாலய நீர்வளங்களை, கங்கைக்கு இப்போது நீர் அளிக்கும் பெரும்பனிப் பாளங்களிலிருந்து வரும் நீரைத் தனக்குத் திருப்பிவிடும் நோக்கம் தீவிரமாக உள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தைக் கபளீகரம் செய்தால் பிரம்மபுத்திராவையும் சீனாவுக்குத் திருப்பிவிட முடியும். மற்றொரு முக்கிய
சிந்து நதி எற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மூலமாகப் பாய்கிறது. இவற்றின் விளைவுகள் இந்தியாவுக்கு மிகக் கொடுமையாக இருக்கும்.
சீனா தனது உலகாதிக்கத் திட்டத்தில் இந்தியாவை ஓர் இடைஞ்சலாக, அபாயமாக, போட்டியாளராகப் பார்க்கிறது. ஏற்கெனவே சீனா, தன்னை ஒரு பொருளாதாரச் சக்தியாக, உலக சக்தியாக அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. சீனாவை நேரடியாக எதிர்க்க அமெரிக்கா தயங்குகிறது என்பது வெளிப்படை. இந்தத் தயக்கம் இன்னும் அதிகமாகவே செய்யும். மாறாக இந்தியா ஒருபெரும் தேசமாக, சீனாவின் பல வாய்ப்புகளை மேற்குக்குத் தானும் அளிக்கிறது. இதுவே சீனாவுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது. பண்டைய காலம்முதல் சீனாவுக்கு இந்திய மனம் குறித்த ஒரு பிரமிப்பு உண்டு. இன்று அந்த பிரமிப்பு, பொறாமை கலந்த போட்டியாக மாறி, வெறுப்பாக வடிவம் கொண்டுள்ளது.
இந்தியாவின் இருபுறங்களிலும் சீனாவுக்கு நெருக்கமான நட்புநாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. மியான்மார் இன்றைக்கு சீனாவின் துணைக்கோளாக இயங்குகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையாளர்களோ தங்கள் முனைப்பின்மை காரணமாகவும் அமெரிக்கப் பார்வை மூலமாக மியான்மாரைப் பார்ப்பதாலும் அந்த நாட்டை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளனர். சீனாவோ மியான்மாரின் உள்கட்டுமானப் பணிகளுக்குப் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. வங்காள விரிகுடாவிலும் தன் வலையை சீனா பரப்ப ஆரம்பித்துள்ளது. மியான்மார் வழியாக சீனா, வங்காள விரிகுடாவையும் சீன உள் பிரதேசத்தையும் இணைக்கிறது. இதன்மூலம் மலாக்கா வழியாக சீனா ஈடுபடவேண்டிய கடல் செலவில் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் குறைக்கப்படும். இந்தியப் பெருங்கடலிலும் சீனாவுக்கு ஒரு வலிமையான பிடி கிடைக்கும்.
சீனா பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஒரு ராணுவ தளத்தை அமைத்துள்ளது. சாலை, ரயில் பாதைகள், எண்ணெய்க் குழாய்கள் ஆகியவற்றை திபெத் மூலமாக சீனாவுக்குள் கொண்டுசெல்கிறது. இந்த சீன-பாகிஸ்தான் இணைவு, மிகவும் மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாகும். குறிப்பாக, இந்தியாவின்மீது பாகிஸ்தானுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கணக்கில் எடுக்கும்போது இதன் முக்கியத்துவம் புரியும். இதனால் சீனா இந்தியாமீது நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. சீனாவின் அந்த விருப்பத்தை எப்போதும் நிறைவேற்ற பாகிஸ்தான் சித்தமாக உள்ளது. சீனா ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு ராணுவத் தளவாடங்களையும், நிதி உதவியையும், தொழில்நுட்பத்தையும் அளித்துவருகிறது. சீனாவின் இந்தியத் திட்டம் பாகிஸ்தானுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது என்றே கருத இடம் இருக்கிறது. சீனா தன் பிராந்தியத்தில் சந்திக்கவேண்டியுள்ள இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு இது ஒரு சமரச உடன்படிக்கையாகக்கூட இருக்கலாம். வரலாற்றுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஒரு எதிரிகள் ஒரு பொது எதிரிக்காக ஒருங்கிணைவது. சீனாவுக்குத் தன் எல்லைக்குள் இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை மடை மாற்றம் செய்ய மிகச் சிறந்த இலக்கு இந்தியாதான்.
உலகளாவிய இஸ்லாம்
இஸ்லாமியக் கோட்பாடு, இஸ்லாமியர்கள் உலகெங்கும் பரவி அதனையே மனித குலத்துக்குக் கிடைத்த ஆகச்சிறந்த மதக் கோட்பாடாக மட்டுமின்றி, சமூகப் பொருளாதார அமைப்பாகவும் நிறுவவேண்டும் என்று தன் மதத்தைப் பின்பற்றுவோரிடம் கோருகிறது. இது, இந்த நூலின் பரப்புக்கு வெளியில் உள்ள ஒரு புலம். இஸ்லாமியர்களுக்குத் தங்கள் பரவுதலைக் குறித்த ஒரு பெருமித வரலாற்றுணர்வு உள்ளது. மசூதிகளில் நடத்தப்படும் குத்பா பிரசங்கங்கள் இஸ்லாமின் இறுதி வெற்றி குறித்த நம்பிக்கையை உருவாக்குகின்றன.
உலகம் எங்கும் பரவியிருக்கும் இஸ்லாமிய சமூகங்களிடையே வேற்றுமைகள் தெளிவாக உள்ளன. ஆசிய முஸ்லிம்கள், ஆப்பிரிக்க, அரேபிய, ஈரானிய, மேற்கத்திய முஸ்லிம்கள் என அவர்கள் பன்மைத்தன்மைகளுடன் உள்ளனர். இதில் சுன்னி, ஷியா, அகமதியா எனும் வேறுபாடுகளும் இணைகின்றன. ஆனால் இஸ்லாம் இல்லாத சக்திகளுடனான உறவில் இந்த வேற்றுமைகள் அனைத்துக்கும் அப்பாலான ஓர் ஒற்றுமை இஸ்லாமிய அகிலத்தை இணைக்கிறது. போன நூற்றாண்டின் கலீபாத் பிரச்னைமுதல் இன்றைய பாலஸ்தீனியப் பிரச்னைவரை இது தொடர்கிறது. இப்பிரச்னைகளில் முஸ்லிம்கள் உலகெங்கிலும் ஏறக்குறைய ஒரேவித எதிர்வினையுடன் அணி சேர்க்கப்படுகிறார்கள். இந்த வெளிப்புற ஒற்றுமையேகூட உள்ளே மிதமிஞ்சியிருக்கும் வேற்றுமைகளை மூடி மறைக்க ஏற்படுவது என்றுகூடச் சொல்லலாம். தாம் ஒரேவிதமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் ஒரேவிதமான எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ளப்போகிறவர்கள் என்பதுமே இஸ்லாமிய உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து மடை திறக்கிறது.
கடும் தூயவாத இஸ்லாமுக்கு எதிராக தாராளவாத இஸ்லாமியச் சக்திகள் உலகெங்கும் இயங்குகின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இத்தகைய தாராளவாத இஸ்லாமியர்களின் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கே அவர்களது வெற்றியின்மீது நம்பிக்கை இல்லை என்பது புலனாகும். ஏதோ ஒரு புள்ளியில் அவர்களும் கடும் தூயவாத இஸ்லாமில் கலந்துவிடுகிறார்கள். அவர்களில் பலர், கிறிஸ்தவ உலகில் சில நூற்றாண்டு காலச் சீர்திருத்தங்களுக்குப் பிறகே மதவெறி அடங்கி மானுடநேய மதச்சார்பற்ற அரசுகள் உருவாகின என்பதைக் காட்டுகிறார்கள். மேலும் அவர்கள், தங்கள் சமுதாயத்தில் மிகச் சிறிய, வலிமையற்ற ஒரு சிறுபான்மையினராகவே தங்களை உணர்கிறார்கள். இன்றைய இஸ்லாமிய உலகில் தீவிரவாத இஸ்லாமியமே மையம் கொண்டு செயல்படுகிறது. இன்னும் சில தலைமுறைகளுக்கு அதன் வேகம் அடங்குவது என்பது சாத்தியக்குறைவான விஷயமே.
இந்தியப் பாதுகாப்பு குறித்துப் பேசும் எந்தச் சட்டகமும் இந்தச் சக்திகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட முடியாது. ஏதோ தாராளவாதச் சக்திகள் வெல்லும் என்பதாக நல்லெண்ண அடிப்படையில் தேசப் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்க முடியாது. இஸ்லாமியத்துக்குள் நடக்கும் சக்திகளின் மோதலில் இறுதி விளைவு இன்னும் முடிவு செய்யப்பட முடியாததாகவே உள்ளது. எனவே தீவிரவாத இஸ்லாம் மையம் கொண்டு இயங்கும் இஸ்லாமியத்துடன் வாழ, அதனை எதிர்கொள்ளப் பழகுவதும் பயிற்சி கொள்வதும் அவசியமாகிறது. அதன் இருப்பையே புறக்கணிப்பது முட்டாள்தனமானது.
குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாம் குறித்துக் கூறவேண்டுமென்றால் முதலில் இந்திய முஸ்லிம்கள் உலகின் வேறெந்தப் பகுதி முஸ்லிம்களைக் காட்டிலும் தாராளமான விசால மனப்போக்கு உடையவர்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்களுடன் இணைந்து வாழ்ந்து இருவருக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தேசபக்தி உடையவர்கள். தேசியவாதிகளும்கூட. பலர் மதச்சார்பின்மையை ஏற்றவர்கள். நல்ல கல்வியறிவு பெற்றவர்கள். பல முக்கியத் தொழில் துறைகளிலும் உயர் வேலைவாய்ப்புகளிலும் இருப்பவர்கள்.
ஆனால் இந்தியா எங்கும் 29,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவி வருகிறது. காஷ்மீரின் பயங்கரவாதமும் இவற்றுள் சிலவற்றுக்குள் பாய்ந்திருக்கிறது. இந்தியா சந்திக்கும் வறுமை, வேலையின்மை, மதச்சார்பற்ற கல்வி இஸ்லாமிய சமுதாயத்துக்குப் பரவலாக போதிய அளவில் சென்றடையாமை, வெளிநாட்டு இஸ்லாமியத் தாக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பல்வேறு அன்னியச் சக்திகளுக்கு இரையாகும் நிலையில் இஸ்லாமியச் சமுதாயம் உள்ளது. இந்த அன்னியச் சக்திகளில் ஒன்று பாகிஸ்தான். ஹிந்து-முஸ்லிம் நல்லுறவுடன் திகழும் இந்தியா, பாகிஸ்தானின் இருப்புக்கே பிரச்னையான ஒன்றாக உள்ளது. ஏனெனில் காந்தி வலியுறுத்தி வந்த ‘மதங்கள் கடந்த ஒரு தேசக் கோட்பாட்டை’ அது நிறுவும். பாகிஸ்தான் உருவாவதற்கு அடிப்படையாக விளங்கும் இரு தேசக் கோட்பாட்டை அது நிராகரிப்பதாகும்.
சுருக்கமாக, இந்திய இஸ்லாமியர்களைத் தூண்டிவிடும் பாகிஸ்தானியத் தலையீடு இனி வரும் காலங்களிலும் தொடரும். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த எந்தச் சமன்பாட்டிலும் இடம் பெறவேண்டிய கணிப்பு இது. தன்னுடைய அணு ஆயுத வலிமை, தாலிபனிய இறக்குமதி ஆகியவற்றுடன் பாகிஸ்தானுக்குச் சீனாவுடனான வலிமையான கூட்டணியும் உள்ளது.
அமெரிக்கக் கழுகின் இரட்டைப் பார்வை
இவை எல்லாவற்றுக்கும் இடையில் பல இந்தியர்கள், அமெரிக்காவே இந்தியாவின் சிறந்த துணைவன் என்று நம்புகிறார்கள். இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அமெரிக்கா ஒற்றைப்பார்வை மட்டும் கொண்டதல்ல என்பதைப் பல இந்தியர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்தியாவிடம் அமெரிக்கா காட்டும் நிலைப்பாடுகள் உறுதியானவையல்ல; நிலையானவையும் அல்ல. அவை காலங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பவை. அமெரிக்க அரசியல் காற்று தான் வீசும் திசையை மாற்றியபடியே உள்ளது. இந்தியாவுக்குள் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் போலவே, ஒவ்வொரு பிரச்னை குறித்தும் பல போட்டியிடும் பார்வைகளுடன் அது மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்திய-அமெரிக்கத் தொடர்புகளை ஆராயப் புகும் முன் சீனாவுடனும் இஸ்லாமிய தேசங்களுடனும் அமெரிக்கா கொண்டிருக்கும் உறவுகளைக் குறித்து நாம் சற்று ஆராயவேண்டும். அமெரிக்கா தன்னைக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாடாகவும் அதே நேரத்தில் மதச்சார்பற்ற, நவீன மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாடாகவும் கருதுகிறது. இது அதற்கு ஒரு பிளவுண்ட ஆளுமையை அளிக்கிறது. இந்த இரு பிளவாளுமைகளும் பிற பண்பாட்டுச் சக்திகளால் அச்சுறுத்தப்படுகின்றன.
சீனாவுடனான அமெரிக்க மோதல் நவீனத்துவங்களின் மோதல் எனலாம். இங்கு போட்டி என்பது மதத்தையோ அல்லது சித்தாந்தத்தையோ குறித்ததல்ல. மாறாக, பொருளாதார பலம், தொழில் உற்பத்தித் திறன், அரசியல் வலிமை, நுகர்வோரியம் ஆகிய பொருளாதார, வர்த்தக விஷயங்கள் சார்ந்தது. சீனா, தாங்கள் அமெரிக்காவை மிஞ்சும் அமெரிக்கர்களாக ஆகப்போவதாகக் காட்டுகிறது. அமெரிக்கா உற்பத்தித்துறையில் சந்திக்கும் பின்னடைவும், தம் வேலைகளையும் உற்பத்தியையும் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஏற்றுமதி செய்வதும் அமெரிக்கத் தொழில்துறையின் இதயத்தை அரித்து வருகிறது. அமெரிக்கா ஒரு கடன்பட்ட தேசமாக நாளுக்கு நாள் மாறி வரும்போது சீனா அந்தக் கடனை வழங்கும் தேசமாக ஆகிவருகிறது.
அமெரிக்கா சீனாவின் நவீன தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களை வழங்கியது. தொழில்நுட்ப அறிவை வழங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டது. சீனாவுக்கு மட்டுமல்ல, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா தன் தொழில் மையங்களை இறக்குமதி செய்தது. இன்று இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் தொழில் உற்பத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் போட்டியாளர்கள் ஆகிவிட்டனர். அமெரிக்கா சந்திக்கும் முதல் பெரும் அதிர்ச்சி இது.
அமெரிக்கா சந்திக்கும் இரண்டாவது பெரும் மோதல், அடிப்படைவாதங்களின் மோதல். சீன அபாயத்தைப்போல, இஸ்லாமிய அபாயம் நவீனத்துவம் குறித்ததல்ல. இஸ்லாமிய நாடுகள் நவீனமயமாவது குறித்துச் சிந்திக்கவில்லை. மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதம் கிறிஸ்தவ அடிப்படைவாதத்துடன் போட்டி போடுகிறது. இரு பக்கத்தினரும் இறைத்தூதர்கள், இறைமகன்கள் குறித்த மாறுபட்ட இறையியல் பார்வைகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பக்கமும் தமக்கே இறுதி மற்றும் உண்மையான இறைவார்த்தை அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. கூடவே, மறுபக்கத்தைப் பொய்யானது என மறுக்கிறது. இந்த உண்மைக்கான குத்தகை உலகம் தழுவியது. தனித்துவமுடையது.
இன்னொருவர் பங்கு கேட்க முடியாதது.கிறிஸ்தவத்துக்குப் பின்னால் அதன் வழியில் வந்த இஸ்லாம் இப்போது தன் ஆபிரகாமியத் தாய் மதங்களை எதிர்ப்பது சுவாரசியமான விஷயம்.
ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் இஸ்லாம் என்ற இரு அபாயங்களுக்கு இடையில் அமெரிக்கா ஒரு மனபிளவுத்தன்மையுடன் இந்தியாவை அணுகுகிறது. எனவேதான் இந்தியா குறித்த அமெரிக்க நிலைப்பாடு தெளிவாக இருப்பதில்லை, இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று இருப்பதில்லை.
கீழே உள்ள வரைபடம் அமெரிக்கா இந்தியா விஷயத்தில் இரு எல்லைகளில் எடுக்கும் முடிவுகளையும், அமெரிக்கப் பார்வையில் அதன் சாதக பாதகங்களையும் லாப நஷ்டங்களையும் காட்டுகிறது.
இந்த வரைபடத்தின் இடது பக்கத்தில் ஒலிக்கும் குரல்கள், ‘இந்தியச் சந்தையில் முதலீடு செய்வோம்; இந்தியத் தொழிற்சாலைகளையும் இந்தியத் தொழிலாளர்களையும் பயன்படுத்துவோம்; இந்தியாவுடன் ராணுவ உறவுகளைப் பலப்படுத்துவோம்; இந்தியாவே அமெரிக்காவுக்கு உகந்த தெற்காசியப் பிராந்தியத் தோழன்; சீனப் போட்டிக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கும் எதிரான நல்ல பங்குதாரர் இந்தியாவே; மூன்றாம் உலகநாடுகளில் ஒரு நிலைத்தன்மையை உருவாக்க இந்தியா வலுவான நாடாக இருப்பது உதவும்’ என்றெல்லாம் கூறுகின்றன. அமெரிக்க வர்த்தகத் தேவைகளும் அமெரிக்க நலன்களும், இந்தியா அமெரிக்காவுடன் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுடனும் ஜப்பானுடனும் நல்ல வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறது. அத்தகைய முதலீடுகள் நடந்தவாறும் உள்ளன. ஆனால் இந்தியா சிதறுண்டால் அல்லது பலவீனம் அடைந்தால் அவையெல்லாம் சிதறிவிடும்.
இன்றைய அமெரிக்க நிர்வாகக் கல்லூரிகளில் இந்தியா குறித்த ஒரு நேர் சொல்லாட்சி உருவாகத் தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு பண்பாடற்ற எல்லைப்பிரதேசம் என்ற கருத்து மாறிவருகிறது. பாம்பாட்டிகளில் தொடங்கி சாதிக்கொடுமைகள் வரையிலான மோசமான இந்தியா அல்ல இது; மாறாக, அதன் காலம் பிறந்துவிட்ட ஒரு தேசம் என்று அவர்கள் இந்தியாவைக் காண்கிறார்கள்.
ஆனால் அந்த இடது பக்க வரைபடத்தின்கீழ் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது. இந்தியா தொடர்ந்து வலிமையடையும்போது அதுவும் சீனா போல அல்லது அதைவிட வலிமை வாய்ந்த ஒரு போட்டியாளாராக, அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துவிடக்கூடும். ஒரு சீனாவே போதுமான தலைவலி. அதற்கிடையில் ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மற்றொரு தலைவலியா? இந்தியா வலிமையாக இருப்பது அமெரிக்காவுக்கு ஏற்றதே. ஆனால் மிகவும் வலிமையாக இருந்துவிடக்கூடாது.
இப்படத்தின் வலது பக்கம் இந்தியாவைத் துண்டாடுவது அல்லது பிரிவினைச் சக்திகளைப் பலப்படுத்தி இந்தியாவை பலவீனமாக வைத்திருப்பது எனும் குரல். இந்தியாவுடன் இணைந்து கட்டமைப்போம் என்பதைவிட இந்தியாவைக் கட்டுடைப்போம் எனும் குரலுக்கு அமெரிக்காவில் நெடிய வரலாறு உண்டு. குறிப்பாக அதன் பனிப்போர்க் காலத்தின் வெளியுறவுத் துறை நிலைப்பாடுகள் அப்படித்தான் இருந்தன. 1950-களிலும் 1960-களிலும் நேரு சோவியத் யூனியன் பக்கமாகச் சாய்ந்திருந்தார். அப்போதிருந்தே, அமெரிக்க அரசும் அதன் அமைப்புகளும் இந்தியாவின் பிரிவினைச் சக்திகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டன. எப்படி அமெரிக்கச் சக்திகள் ஆதரிக்கப்பட்டன திராவிட இயக்கத்தை நைச்சியமாக ஆதரித்தன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இந்தியாவின் எந்த ஒரு இனம் சார்ந்த, மொழி சார்ந்த, மதம் சார்ந்த பிரிவினையையும் இந்தியாவை பலவீனப்படுத்த அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது. அது தலித்துகள்-பிராமணர்கள் என்பதாகவோ திராவிட-ஆரிய மோதல் என்பதாகவோ, சிறுபான்மையினர்-ஹிந்துக்கள் என்பதாகவோ, ஏன் பாலியல் பிரிவுகளாகவோகூட இருக்கலாம். இங்கு உருவாக்கப்படுவது பண்பாடற்ற இருண்ட ஓர் எல்லைப் பிரதேசமான இந்தியா என்பதும் அதனை அமெரிக்கத் தலையீட்டினால் மட்டுமே நிர்வகிக்கமுடியும் என்பதுமான கருத்தாக்கம்.
இப்படி இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும். வலிமையற்ற இந்திய அரசு
இருக்கும்போது மதமாற்றத்தைத் தீவிரமாகச் செய்ய முடியும். இது அமெரிக்க ஆதரவு மக்கள் குழுமங்களை இந்தியா எங்கும் விதைக்கும். இதனால் ஏற்படும் மோதல்கள், மேற்கத்திய ஆயுத வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டித் தரும்.
ஆனால், இந்தியாவை இப்படிக் கூறுபோடுவது முழு உள்நாட்டுப் போர்களாக வெடித்தால் அதன் இறுதி விளைவு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கொடுங்கனவாக இருக்கும். ஈராக்கையும் ஆப்கனிஸ்தானையும் பாகிஸ்தானையும்விடப் பல மடங்கு பெருங்குழப்பங்கள் ஏற்படும்.
அமெரிக்கா இந்தியாவிடம் காட்டும் இந்த இரு-துருவ நிலைப்பாடு, இந்திய தேசம் முழுமையாக, ஒன்றாக இருப்பதற்கான ஆதரவு என்பதிலிருந்து இந்தியா பல்வேறு துண்டுகளாகச் சிதறவேண்டும் என்பதுவரையாக இரு உச்சங்களுக்கு இடையே ஊசலாடியபடி உள்ளது. இந்திய உள்விவகாரங்களில் தலையிட்டு இந்தியாவின் உள்-மோதல்களைத் தன் கட்டுப்பாட்டுக்கு உகந்த கருவிகளாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது அமெரிக்கா. மானுட உரிமைகள் என்ற
பிரம்பு இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சீனா அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததால் அது அடைந்த பிரம்மாண்டமான வளர்ச்சி இந்தியாவுக்குக் காட்டப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் இயங்கும் ஜனநாயகச் சூழலை சீனாவின் அதிகாரக் குவிமையச் சூழலுடன் ஒப்பிட முடியாது. அதன் ஜனநாயக உரிமை மீறல்கள் வெளிப்படையானவை. அதீதமானவை. ஆனால் ஜனநாயகப் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் ‘மிகவும் சலுகை தரவேண்டிய தேசங்களின்’ பட்டியலில் சீனாதான் இருக்கிறது. இந்தியா அல்ல.
இருந்தாலும் இந்தியாவைச் சிதறுண்டு போகவைப்பதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்கக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அது நிச்சயமாக அமெரிக்க நன்மைக்கு ஏதுவான விஷயமல்ல. ஆனாலும் அதைத்தான் அவர்களில் பலர் தூண்டிவிட்டுச் செயல்படுத்துகிறார்கள். இந்திய நிலைப்பாட்டை வடிவமைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: எந்த அரசியல் சதுரங்கத்திலும் அமெரிக்கர்கள் இருபக்க அணியிலும் ஆடுவார்கள்.
(முற்றும்)
குறிப்பு : இந்தப் புத்தகத்தை இந்த இணையச் சுட்டியின் மூலம் வாங்கலாம் : https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html.
தொலைபேசி மூலம் வாங்க இந்த எண்களை அழைக்கவும் : 94459 01234, 9445 97 97 97
நன்றி : கிழக்கு பதிப்பகம்
இப்புத்தகம் குறித்த விமர்சனத்தை இங்கே படிக்கலாம் : இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்
2 Replies to “உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி”
Comments are closed.