வெர்மீயர்

இது பாதுகாக்கப்பட்ட உலகமல்ல.இரைச்சல் சத்தம் அதோ அங்கிருந்து வருகிறது, அங்கே, சுவருக்கு அந்த பக்கம்,
மதுவிடுதியிலிருந்து,
அதன் சிரிப்பொலிகளும் ,கூச்சல்களும் , பல் வரிசைகளும் ,அதன் கண்ணீரும், கடிகார மணி ஓசையும்
மற்றும் அந்த அச்சுறுத்தும் மனம்பிறழ்ந்த வெறியன், கொலைகார மச்சானிடமிருந்தும்.

மிகப் பெரிய வெடிச் சத்தம் மற்றும் மீட்புக் குழுவினரின் தாமதமான வருகை,
கால்வாயில் ஒய்யாரமாக செல்லும் கப்பல்கள், பை மாறி விழும் பணம் ,
தவறானவனின் பையில்,
கெடுவிற்கு மேல் குவிந்த கெடு,
வாய்விரிந்த சிவப்பு மலர்களின் வியர்வைத் துளிகள் அறிவிக்கும் வரவிருக்கும் யுத்தம்.

அங்கிருந்து சுவரைத் துளைத்து சென்றால், ஒளிக்கூடிய கலைக்கூடத்தில்,
நூற்றாண்டுகள் வாழ வரம் பெற்ற வினாடிகள்.
தமக்கான பெயரை தாமே தேர்ந்த ஓவியங்கள்,
“இசை பாடம்” அல்லது “ஒரு நீலம் தறித்த பெண் கடிதம் படிக்கிறாள்”.
அவள் எட்டு மாத கர்பிணி.அவளுள் இரண்டு இதயங்கள் துடிக்கின்றன.
அவள் பின்னால் சுவரில், தெரியாத நிலத்தின் கசங்கிய வரைபடம்.
வெறுமனே சுவாசியுங்கள்…வகைதெரியாத நீல துணிகள் நாற்காலிகளில் அறையப்பட்டிருக்கின்றன.
அதன் தங்க ஆணிகள், பிரபஞ்ச வேகத்தில் விரைந்து
பட்டென அதில் அமர்ந்திருக்கின்றன,
அசைவின்மையன்றி வேறு எதுவும் அறியாதது போல.

காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.

சுவர்களைத் துளைத்துச் செல்வது மனிதர்களைக் காயப்படுத்துக்கிறது.அவர்கள் நிலைகுலைந்து விடுகிறார்கள்.
ஆனால், நமக்கு வேறு வழி இல்லை.
இவை எல்லாம் ஒரே உலகம் தான்.மீண்டும் சுவர்களுக்கு.
சுவர்கள் உங்களில் ஒரு அங்கம்.
ஒன்று அதை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும், அல்லது இல்லை. ஆனால், அது அனைவரிலும் ஒன்றே,
குழந்தைகளைத் தவிர.அவர்களுக்கு எந்தச் சுவரும் இல்லை.

தெளிந்த வானம், தன்னை சுவரில் சாய்த்தபடி நிரப்பிக் கொண்டிருக்கிறது
வெற்றுவெளியிடம் ஒரு பிரார்த்தனையைப் போல.
மேலும் வெற்றுவெளியானது
நம்மைத் திரும்பி பார்த்து
கிசுகிசுக்கிறது:
“நான் வெற்றுவெளியல்ல, திறந்த வெளி”.

ஆங்கில மொழிபெயர்ப்பு : ராபர்ட் ப்ளை (Robert Bly)[அடிக்குறிப்பு-3]
தமிழாக்கம் : ச.அனுக்ரஹா

[DDET ராபர்ட் ப்ளையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க இங்கே அழுத்தவும்]
It’s not a sheltered world. The noise begins over there, on the other side of the wall
where the alehouse is
with its laughter and quarrels, its rows of teeth, its tears, its chiming of clocks,
and the psychotic brother-in-law, the murderer, in whose presence
everyone feels fear.

The huge explosion and the emergency crew arriving late,
boats showing off on the canals, money slipping down into pockets
– the wrong man’s –
ultimatum piled on the ultimatum,
widemouthed red flowers who sweat reminds us of approaching war.

And then straight through the wall — from there — straight into the airy studio
in the seconds that have got permission to live for centuries.
Paintings that choose the name: “The Music Lesson”
or ” A Woman in Blue Reading a Letter.”
She is eight months pregnant, two hearts beating inside her.
The wall behind her holds a crinkly map of Terra Incognita.

Just breathe. An unidentifiable blue fabric has been tacked to the chairs.
Gold-headed tacks flew in with astronomical speed
and stopped smack there
as if there had always been stillness and nothing else.

The ears experience a buzz, perhaps it’s depth or perhaps height.
It’s the pressure from the other side of the wall,
the pressure that makes each fact float
and makes the brushstroke firm.

Passing through walls hurts human beings, they get sick from it,
but we have no choice.
It’s all one world. Now to the walls.
The walls are a part of you.
One either knows that, or one doesn’t; but it’s the same for everyone
except for small children. There aren’t any walls for them.

The airy sky has taken its place leaning against the wall.
It is like a prayer to what is empty.
And what is empty turns its face to us
and whispers:
“I am not empty, I am open.”
[/DDET]

****    ****    ****

இதே கவிதையை ராபின் ஃபுல்டன் (Robin Fulton) மொழிபெயர்த்திருக்கிறார்.  அடுத்து அதன் தமிழாக்கம்:

புகலல்ல உலகு… சுவற்றின் மறுபுறம்
கூச்சல் எழுகிறது
மது சாலை எழுகிறது
அதன் சிரிப்பும் சச்சரவும், பற்களின் வரிசைகளும் கண்ணீரும், இரையும்
மணியொலிகளும்,
மனநோயாளி மைத்துனனும்- அவன் தாங்கி நிற்கும்
மரணத்தின்முன் எவருக்கும் விதிர்விதிர்க்கும்.

பெரு வெடிப்பும் மீட்பர்களின் மெத்தன வருகையும்,
கட்டுமிடத்தில் பகட்டாய் ஆடும் படகுகளும், பிழையானவன்
பையில் நழுவிச் சேரும் பணமும்,
கெடு மேல் கெடுவாய்க் குவியும் கட்டணக் கோரிக்கைகளும்,
விரிந்த செம்மலர் கிண்ணங்களின் வியர்வையும்- முன்னறிவிக்கும்
போரை.

ஆங்கு விலகி சுவரூடே நேராய், ஒளிரும் கலைக்கூடத்துள்,
நூறாண்டுகளாய் வாழும் அந்நொடிக்குள் நுழைந்தால்
இசைப் பாடம் என்றும்
கடிதம் வாசிக்கும் நீல ஆடை அணிந்த பெண் என்றும்
தலைப்புகள் தரித்த ஓவியங்கள்-
அவளுக்கு எட்டாம் மாதம், அவளுள் இரு இதயங்கள் உதைக்கின்றன.
அவள் பின்னே சுவற்றில், அறியப்படாத தேசத்தின் கசங்கல் வரைபடம்
தொங்கிக் கொண்டிருக்கிறது.

சுவாச அமைதி…. வகை தெரியாத நீலவண்ணத் துணியேதோ
நாற்காலியில் அறையப்பட்டிருக்கிறது.
கேட்டறியாத வேகத்தில் பொன் ஆணிகள் பறந்து உள்புகுந்து
திடுமென ஸ்தம்பித்து நிற்கின்றன
நிச்சலனமன்றி வேறெதுவுமாய் அவை இருந்ததேயில்லை போல்.
ஆழத்தாலோ உயரத்தாலோ செவிகள் இரைகின்றன.
சுவற்றின் மறுபுறத்திருந்து வரும் அழுத்தம் அது
ஒவ்வொரு உண்மையையும் நிறுத்தி வைக்கிறது
தூரிகையை திருத்தமாய் வைத்திருக்கிறது.

சுவர்களை ஊடுருவிப் போனால் வலிக்கும், உன்னை நோய்ப்படுத்தும்
ஆனால் அது தேவை.
உலகம் ஒன்று. ஆனால் சுவர்கள்…
சுவர்கள் உன்னில் ஒரு பாகம்-
உனக்குத் தெரிகிறதோ இல்லையோ, இது அனைவருக்கும் இப்படித்தான்.
அனைவருக்கும், குழந்தைகளைத் தவிர. அவர்களுக்குச் சுவர்கள் கிடையாது.

தெளிந்த வானம் தன்னைச் சுவரோடு சாய்வாய் வைத்திருக்கிறது.
வெறுமையை நோக்கிச் செய்யுமொரு பிரார்த்தனையைப் போல்.
வெறுமை தன் முகத்தை நம்பால் திருப்பிக்
கிசுகிசுக்கிறது:
“நான் வெறுமையல்ல, திறந்திருக்கிறேன்.”

ஆங்கில மொழிபெயர்ப்பு : ராபின் ஃபுல்டன் (Robin Fulton)

தமிழாக்கம் : நந்தின் அரங்கன்

[DDET ஃபுல்டனின் கவிதையை படிக்க இங்கே அழுத்தவும்]
No sheltered world . . . on the other side of the wall the
noise begins
the tavern begins
with laughter and bickering, rows of teeth, tears, the din
of bells
and the mentally disordered brother-in-law, the bearer
of death that everyone must tremble for.

The great explosion and the delayed tramp of rescuers
the boats that strut at anchor, the money that creeps into
the pocket of the wrong person
demands piled on demands
Cusps of gaping red flowers that sweat premonitions of
war.

Away from there and straight through the wall into the
bright studio
into the second that goes on living for hundreds of years.
Paintings titled The Music Lesson
or Woman in Blue Reading a Letter?
she’s in her eighth month, two hearts kicking inside her.
On the wall behind her hangs a wrinkled map of Terra
Incognita.

Breathes calmly . . . An unknown blue material is nailed
to the chair.
The gold upholstery tacks flew in with unheard-of speed
and stopped abruptly
as if they had never been anything but stillness.
The ears ring with either depth or height.
It?s the pressure from the other side of the wall
that leaves every fact suspended
and holds the brush steady.

It hurts to go through walls, it makes you sick
but it?s necessary.
The world is one. But walls . . .
And the wall is part of yourself?
Whether you know it or not it?s the same for everyone,
everyone except little children. No walls for them.

The clear sky has set itself on a slant against the wall.
It?s like a prayer to emptiness.
And the emptiness turns its face to us
and whispers,
“I am not empty, I am open.”
[/DDET]

******  *******

இந்த மொழிபெயர்ப்புகளுக்கெல்லாம் ஊற்றுக் கண்ணாக இருந்த ட்ரான்ஸ்ட்ரமரின் மூலக் கவிதையை மூல மொழியான ஸ்வீடிஷ் மொழியில் படிக்க விரும்புகிறீர்களா?  இதோ அது-

[DDET ட்ரான்ஸ்ட்ரமரின் கவிதை ஸ்வீடிய மொழியில்]
ngen skyddad värld… Strax bakom väggen börjar larmet
börjar värdshuset
med skratt och kvirr, tandrader tårar klockornas dån
och den sinnesrubbade svågern, dödsbringaren som alla
måste darra för.

Den stora explosionen och räddningens försenade tramp
båterna som kråmar sig på redden, pengarna som kryper ner i
fickan på fel man
krav som staplas på krav
gapande röda blomkalkar som svettas föraningar om krig.

Därifrån och tvärs genom väggen in i den klara ateljen
in i sekunden som får leva i århundraden.
Tavlor som kallar sig “Musiklektionen”
eller “Kvinna i blått som läser ett brev” –
hon är i åttonde månaden, två hjärtan sparkar i henne.
På väggen bakom hänger en skrynklig karta över Terra Incognita.

Andas lungt…En okänd blå materia är fastnaglad vid stolarana.
Guldnitarna flög in med oerhörd hastighet
och tvärstannade
som om de aldrig varit annat än stillhet.

Det susar i öronen av antingen djup eller höjd.
Det är trycket från andra sidan väggen.
Det får varje faktum att sväva
och gör penseln stadig.

Det gör ont att gå genom väggar, man blir sjuk av det
men det är nödvändigt.
Världen är en. Men väggar…
Och väggen är en del av dig själv –
man vet det eller vet det inte men det är så för alla
utom för små barn. För dem ingen vägg.

Den klara himlen har ställt sig på lut mot väggen.
Det är som en bön till det tomma.
Och det tomma vänder sitt ansikte till oss och viskar
“Jag är inte tom, jag är öppen”.
[/DDET]

குறிப்பு :
1.வெர்மீயர் என்கிற ஓவியர் குறித்து ட்ரான்ஸ்ட்ரமர் எழுதிய ஒரு கவிதையைப் பலரும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். ராபர்ட் ப்ளை எனும் அமெரிக்கக் கவிஞரும், ராபின் ஃபுல்டனும் இந்தக் கவிதையை மொழி பெயர்த்திருக்கிறார்கள். ப்ளையின் வடிவைத் தாம் விரும்புவதாகத் தெரிவிக்கிற அனுக்ரஹா அக்கவிதையைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஃபுல்டனின் கவிதையைப் படித்த நந்தின் அரங்கன் அந்த வடிவை விரும்புவதால் அதை மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த இதழில் என்ன சோதனை முயற்சி என்றால், ட்ரான்ஸ்ட்ராமரின் ஸ்வீடிஷ் கவிதையை அதன் மூல வடிவில் இங்கு (கூடியமட்டும் அந்த வடிவில்) பிரசுரிக்கிறோம். ராபர்ட் ப்ளை, ராபின் ஃபுல்டன் ஆகியோரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புகளையும் பிரசுரிக்கிறோம். இந்த இரண்டின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் பிரசுரிக்கிறோம்.

இவற்றிற்கு வாசகர்களிடம் இருந்து என்ன மறுவினை எழுகிறது என்று பார்க்க உத்தேசம்.

பொதுவாக மொழிபெயர்ப்பு குறித்தும், குறிப்பாக ட்ரான்ஸ்ட்ராமரின் கவிதைகளின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புகள் குறித்தும் சமீபத்தில் சில நல்ல உரையாடல்கள் இங்கிலீஷ் பத்திரிகைகளில் நடந்திருக்கின்றன. இதே சமயம் பல இடங்களில் மொழி பெயர்ப்புகள் பற்றிய வெவ்வேறு சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. இவற்றின் சாரத்தைக் கொடுக்கும் ஒரு கட்டுரை அடுத்த இதழில் வெளிவரும். அதே இதழில் மேற்படி தமிழ் மொழிபெயர்ப்புகள் குறித்தும் ஒரு கட்டுரை வெளிவரும்.

2. சமீபத்தில் 2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் (Tomas Tranströmer) குறித்த கட்டுரை ஒன்று இந்த இதழில் வெளியாகியுள்ளது. அதைப் இங்கே படிக்கலாம் : http://solvanam.com/?p=17594

3. ட்ரான்ஸ்ட்ரமரின் ஸ்வீடிஷ் மூலத்திலிருந்து இங்கிலீஷுக்கு மொழி பெயர்த்த ராபர்ட் ப்ளை ஒரு பிரபல அமெரிக்கக் கவிஞர்.

இக்கவிதை பற்றி ராபர்ட் ப்ளையின் குறிப்பு:

ஜான் வெர்மீயர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர். டச்சு பரோக் எனப்படுவது இவருடைய ஓவிய பாணி. நடுத்தர மனிதர்களின் வாழ்க்கைகளில் வீட்டு உட்புறங்களைச் சித்திரிக்கும் தன் ஓவியங்களில் ஒளியைப் பயன்படுத்திய விதத்திற்காக மிகவும் புகழ் பெற்றவர். அப்புகழ் தகுந்ததே. அவருடைய ஆச்சரியப்படத்தக்க சாதனைகள் உலகிற்கு நன்கு தெரிய வந்தது சமீபத்தில் வெளிவநத ஒரு திரைப்படத்தால். ‘முத்துக் காதணி அணிந்த ஒரு பெண்’ என்கிற அப்படம் வெர்மீயரின் வாழ்வைச் சுற்றி எழுதப்பட்ட ஒரு நாவல். அது தவிர மாரிலின் சாண்ட்லர் மகிண்டையர் என்பார் இவருடைய ஓவியங்களில் சிலவற்றை வைத்து ஒரு கவிதைத் தொகுப்பு எழுதியுள்ளார். அதன் தலைப்பு: ’அமைதியான ஒளியில்: வெர்மீயரின் பெண்கள் பற்றிய கவிதைகள்.’

தன் ஸ்வீடியக் கவிதையில் ட்ரான்ஸ்ட்ராமர் வெர்மீயரின் ஓவியக் கூடம் ஒரு மதுச்சாலைக்கு அண்டை வீட்டில் இருப்பதாக, ஒரு சுவர் இரண்டுக்கும் பொதுவாக இருப்பதாகக் கற்பனை செய்கிறார். மதுச்சாலையில் பெருங்குழப்பமும், ஆரவாரமும் நிலவியிருக்கையில் வெர்மீயரின் கூடத்தில் அமைதி நிலவுகிறதாகவும், இந்தப் புறம் ஒளியும், நல்வாழ்வும் இருப்பதாகவும் கற்பனை செய்கிறார். இருந்தும் ஓவியன் எது அப்புறமிருந்து வந்தாலும் அதைச் சமன நிலையில் ஏற்கும் திறந்த மனப்பாங்குடன் இருப்பதாகக் கற்பனை செய்கிறார் ட்ரான்ஸ்ட்ராமர்.

4. ராபர்ட் ப்ளை மேலும் எழுதுகையில் வெர்மியர் பற்றிய இந்தக் கவிதையைப் படிக்கையில் காஸ்பெல்களில் கிருஸ்து தன் சீடர்களுக்குக் காட்சி தர வருகையில் சுவரூடே வந்த கதை நினைவுக்கு வந்தது, ஏனெனில் சி.எஸ்.லூயிஸ் என்ற புகழ் பெற்ற கிருஸ்தவ மாயக் கதைகளை எழுதிய நாவலாசிரியரின் குறிப்புப்படி சாதாரண மனிதர்கள் சுவர்களூடே நடந்தால் அவர்கள் புண்படுவார்கள், கிருஸ்து உடலால் வரவில்லை என்ற கருத்து தனக்கு நினைவு வந்ததாகச் சொல்கிறார்.
யொஹான்னஸ் வெர்மீயர் என்பதே ஓவியரின் பெயர். சில எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஜான் வெர்மீயர் என்ற பெயரைப் பயன்படுத்தினாலும், அந்த ஜான் என்ற நடுப்பெயரை முதல்பெயராக வெர்மீயர் பயன்படுத்தியதாக எந்த சான்றும் இல்லை என்று டச்சுப் பெயர்களை உச்சரிக்க உதவும் ஒரு வலைத் தளம் சொல்கிறது. ராபர்ட் ப்ளை இங்கு பயன்படுத்துவது ஜான் வெர்மீயர் என்பதைக் கவனியுங்கள். யோஹான் என்பதே வெர்மீயரின் முதல் பெயர். அவர் திருமணம் செய்து கொண்டபோது, தன் மாமியாரின் வற்புறுத்தலுக்காக கத்தோலிக்கத்துக்கு மாறினார், அப்போது கொடுக்கப்பட்ட பெயர் யோஹான்னிஸ் என்று தெரிகிறது. ராபர்ட் ப்ளை நார்வீஜியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் ஒரு லூதரன் (ப்ராடஸ்டண்ட்) வளர்ப்பில் இருந்திருப்பார். பிற்பாடு கல்லூரிப் படிப்பை முடித்துப் பேராசிரியராக வேலை செய்த வருடங்களில் அவர் கிருஸ்தவத்துக்கு முந்தைய காலத்து ‘மதங்களில்’ ஈடுபாடு கொண்டு பண்டைப் புராணங்கள் வழியே தம் உளப் பிரச்சினைகளுக்கும், சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பல உளவியல் சிக்கல்களுக்கும் வழி தேட முயன்றார். இதனால் கதோலிக்கப் பெயரான யோஹான்னிஸ் என்பதை இங்கு தவிர்த்து ஜான் என்று வெர்மீயரை அழைக்கிறார் என்று தோன்றுகிறது. மாயன் நாகரீகத்துக்கும் கிருஸ்தவத்துக்கும் இடையே நடந்த ஒரு போராட்டம் பற்றிய ஒரு புத்தகத்துக்கு ராபர்ட் ப்ளை எழுதிய மதிப்புரையை இங்கு காணலாம்.

http://www.robertbly.com/r_r_martinprechtel.html

இந்த மதிப்புரை அவருடைய பல பத்தாண்டு கருத்து நிலையைப் பிரதிபலிக்கிறது என்பதே உண்மையாக இருக்கும்.