வணக்கம். இரண்டு நாட்களாக சொல்வனம் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கும்போதுதான் இத்தனை விசயங்களையும் தொகுத்து உங்களால் எப்படிக் கொடுக்க முடிந்தது என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. சேதுபதியின் கட்டுரையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஸ்வாமிநாத ஆத்ரேயனை தேடிக் கண்டுபிடித்து சந்தித்தது கட்டுரையாளர் எடுத்த சிரமத்திற்கு ஒரு சின்ன உதாரணம். ஏற்கனவே வந்தவையும் புதியவையும் கலந்த கதம்பமாக இருந்தது. சில கட்டுரைகள் ஏற்கனவே படித்திருந்தாலும் படித்தபோது புதியவைபோல இருந்தன. நான் விரும்பிப் படித்தது கரிச்சான் குஞ்சு, சுஜாதா, அசோகமித்திரன், வெங்கட்ராம் மற்றும் உமாவுடைய கட்டுரைகள். அது சரி, சிறுகதைகளுக்கு போட்ட புகைப்படங்கள் மிகப் பொருத்தமாக அழகாக இருந்தன. மற்றப் புகைப்படங்களும் கூட. வடிவமைத்தவருக்கு என்னுடைய விசேடமான பாராட்டுகள். நன்றி.
அன்புடன்
அ.முத்துலிங்கம்
நன்றி, தி.ஜா சிறப்பிதழிற்க்காக!
தி ஜா அவர்களின் வாழ்க்கை குறிப்புகளில் ஆரம்பித்து அவரது மகள், உற்ற நண்பர்கள், பிரபல எழுத்தாளர்களின் வழியாக அவரது பல பரிமாணங்களை – சங்கீத ஆர்வம்-அறிவு, மனிதாபிமானம், இயற்கை ரசிகத்தன்மை, விதம், காவேரிப்பற்று, தன் எழுத்துக்களைப்பற்றி நிறைய பேசாதது, பண விஷயங்களில் ஏமாந்தது – அறிந்து கொள்ள முடிகிறது.
அவரது எழுத்துகளில் இவைகள் எப்போதும் இருந்தாலும் நேரடியாக நண்பர்களின் வழியாக தெரிந்து கொள்வது அருமையான அனுபவம்.
சுவாரசிய highlights…
கரிச்சான் குஞ்சு – புதைகுழியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். பத்து ரூபாயிற்கு அறுபது சாப்பாடுகள்!
இரவெல்லாம் பனி, நாயன மழையில் நனைந்துவிட்டு காலையில் இட்லி!
திருவாடுதுறையிலிருந்து நடந்தே திருநாகேஸ்வரத்திற்கு (எவ்வளவு தூரம்?)
தஞ்சை பிரகாஷ் – பதிப்பகக்காரர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்…“மோகமுள்” நாவல் அச்சாகிப் பலவருடம் வெளியே வராமல் அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் அடைந்துகிடந்தது.
திஜா ரஜனியை கவர்ந்த எழுத்தாளர்! – ஒரு ‘பொம்மை பேட்டியில்! (எந்த கதையாக இருக்கும்!)
சுஜாதா – உரையாடலிலும் திஜா ஒரு உண்மையான கலைஞர்.
“சாமி இந்த தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே! எளுதின வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்கு சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க. எதுக்கு பொல்லாப்பு.”
சுஜாதாவிற்கு முப்பது வருடங்கள் கழித்து திஜாவின் எழுத்துக்கள் படித்தாலும் சிலிர்ப்பு மறுபடியும் இருந்தது(1982); இப்போது இன்னொரு முப்பது வருடங்கள் ஆயிற்று – இப்போதும் அப்படித்தான் சொல்லுவார். நமக்கும் அப்படித்தான்.
அசோகமித்திரன் சார், எனக்கு நம்பிக்கை இருக்கிறது!
அ.முத்துலிங்கம் – “பற்களிலிருந்து பாயாசம்” (எனக்கு பாயாசத்திலிருந்து “ஆரத்தி”)
‘அறம்’ புகழ் எம்விவி போலவே திஜாவிற்கும் ‘பதிப்பகதாரிடம் “நல்ல” அனுபவம் இருந்திருக்கிறது போல(“குழந்தைக்கு ஜூரம்”)
மதுரை மணி, கு.ப.ரா அவர்களுக்கு திஜா வின் அஞ்சலிகள், திஜாவின் மறைவின் போது வந்த அஞ்சலிக்கட்டுரைகள்…
மொத்தத்தில், திஜா சம காலத்தில் இருந்திராத திஜா ரசிகர்களுக்கு இது ஒரு அருமையான தொகுப்பு, எனது புத்தக அலமாரியில் நிரந்தரமாக வைத்துக்கொள்ள விரும்புவேன். திஜா அவர்களின் எழுத்துகளைப்பற்றி positive விமரிசனங்கள் போலவே எதிர்மறையான (கண்ணியமான) விமரிசனங்களும் வந்திருக்க வேண்டும்…அவைகளையும் பற்றி படிக்க ஆவல்…
சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி
திஜா சிறப்பிதழைக் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இப்போது வாசித்து முடித்துவிட்டேன். பழைய யாத்ரா படிக்காதவன் என்பதாலும் ஜானகிராமன் பைத்தியம் என்பதாலும் இன்றைய என் தினம் சுதினமாயிற்று.
ரொம்ப ரசித்தது இரண்டு கட்டுரைகள். கரிச்சான் குஞ்சு எழுதியது ஒன்று. அதுவும் அந்தக் கடைசிப் பத்தி. எத்தனை பெரிய உணர்ச்சிமயமான பெருங்கதையை ஏழெட்டு வரிகளுக்குள் சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்களைக் கதாபாத்திரமாக ஆக்குவதில் இருக்கிற சிக்கல் குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அப்படிச் சொன்ன யாரும் ”அம்மா வந்தாள்” மாதிரி ஒரு கதை எழுதியதில்லை. மரப்பசுவைக் குறித்த ஜானகிராமனின் அந்த ஒருவரித் தீர்மானம் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது. இறுதிவரை திறக்கப்படாத அவர் மனத்தின் இன்னொரு பெரும் அறையை மானசீகத்தில் திறந்து பார்க்கத் தூண்டிய பத்தி அது.
இரண்டாவது கட்டுரை அவரது சங்கீதம் குறித்த சேதுபதியின் கட்டுரை. சுவாமிநாத ஆத்ரேயனைச் சந்தித்து எழுதியது சந்தோஷமளித்தது. ஒரு காலத்தில் மோகமுள் படித்துவிட்டு பைத்தியம் பிடித்த மாதிரி கும்பகோணத்துக்கு பஸ் பிடித்து இரண்டு நாள் வீதி வீதியாகத் திரிந்தவன் நான். பெரிய ஏமாற்றம்தான். ஜானகிராமன் காட்டிய கும்பகோணம் எனக்குத் தென்படவில்லை. அவருக்கே கூட அது அவர் விரும்பிய கும்பகோணம்தானோ, பார்த்ததில்லையோ எனவும் நினைத்தேன். ஒரு நகரத்தையே இசைமயமாக உருவகித்துக் காட்டிய எழுத்து அது. அந்த உணர்வு இந்தக் கட்டுரை வாசிக்கும்பொதும் கிடைத்தது.
இதழில் எனக்குப் பிடிக்காத ஒரே அம்சம் அசோகமித்திரனின் பேட்டி. வாணி ஜெயராம் பாட்டுக்கு வலயப்பட்டி சுப்பிரமணியம் பக்கவாத்தியம் வாசிப்பது மாதிரி இருக்கிறது. மற்றபடி உங்கள் கடின உழைப்புக்கு நியாயம் செய்யும்விதமாகவே இதழ் வந்திருக்கிறது. எனக்குப் பாராட்டத் தோன்றவில்லை.
நன்றி சொல்லத்தான் தோன்றுகிறது.
வெங்கட் சாமிநாதனுக்கு என் வணக்கங்களைச் சொல்லுங்கள். அவரைப் பார்த்து, பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னை அவர் மறந்தேகூடப் போயிருக்கலாம். முடிந்தால் அவரது மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பித்தாருங்கள்.
மிக்க அன்புடன்
பாரா
சொல்வனம் – 50 அற்புதமான இதழ் ! சேதுபதியின் கட்டுரை மிகவும் அழகு. மிகவும் ரசித்துப் படித்தேன்!
வித்யா
சொல்வனத்தின் புது இதழைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன். ஐம்பதாவது இதழுக்கு இதைவிட பெருமை சேர்த்திருக்க இயலாது. ஒவ்வொரு கட்டுரையும் கதையும் அபாரம். அதுவும் சேதுபதியின் கட்டுரை அருமையாய் இருந்தது. இத்தனை இசை பாண்டித்யமும் பாடமும் உள்ள தி ஜா இசைக்கு மேல் எழுத்தை தேர்ந்தெடுத்தது வாசகர்களின் நல்ல காலம். நீங்கள் அவரது கதைகளிலிருந்து தேர்வு செய்து சுட்டி இருந்த பகுதிகளைப் படித்ததும் மீண்டும் அந்த நூல்களையும் கதைகளையும் தேடிப்பிடித்து படிக்க வேண்டும் என்றொரு ஆசை – இதோ ஆரம்பித்துவிட்டேன். நன்றி.
இது போன்ற ஒரு அருமையான இதழை வெளிக்கொண்டுவந்ததுக்கு உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
regards
usha