தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

scan0016-2

வெங்கட் சாமிநாதன்: ஜானகிராமன்… ஆரம்ப பாதிப்புகளைப் பற்றி உங்ககிட்டே கேக்கணும்.. இதுவரைக்கும் அது பற்றி தெரிஞ்சது கிடையாது. உங்க குடும்பச்சூழல், உங்க அப்பாவோட பாதிப்பு – இது பத்தி நீங்களும் எதுவும் சொன்னதில்லை. ஆனா ஒரு யூகத்துலதான் நான் சொல்றேன். அப்புறம் தஞ்சாவூர் ஜில்லா இருக்கு… அந்த ஜில்லாவில சங்கீத atmosphere இருக்கு… சமஸ்கிருதப் பிடிப்பு… அப்பாகிட்டேயிருந்து தெரிஞ்சுக்கிட்டது… நீங்க அந்தக் காலத்துல படிச்சது… உங்களுக்குத் தெரிய வந்த – அப்புறம் மற்ற எழுத்தாளர்கள் கு.ப.ரா., பிச்சமூர்த்தி இவர்களெல்லாம் நீங்க எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே எழுத ஆரம்பிச்சிருக்கா – இத எல்லாம் பற்றி – கு.ப.ரா பாதிப்புன்னு சொல்லும்போது என்னோட யூகம்தான் அது. இத எல்லாம் பற்றி சொல்லுங்களேன்.

தி.ஜானகிராமன்: பாதிப்புன்னு சொல்றப்போ ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையிலே பல பாதிப்புகள் ஏற்படறது. என்னோட கிராமம்தான் நான் பிறந்த ஊர். மன்னார்குடிக்குப் பக்கம் தேவங்குடின்னு ஒரு ஊர். ஆனால் ஆறு மாசம்தான் அங்க இருந்தேன். ரொம்பச் சின்ன கிராமம். அதுக்கப்புறம் கும்பகோணம் வந்தோம். அப்புறம் அங்கிருந்து தஞ்சாவூர் போனோம், கும்பகோணத்துக்குப் பக்கத்துல இன்னொரு கிராமம் – குடவாசல் கிட்டக்க, வலங்கைமானுக்கும் அதுக்கும் நடுவில. அங்கேதான் எங்களுக்கு பிற்பாடு குடியேறும்படியா ஆச்சு. தஞ்சாவூரில இருந்தாலும் கும்பகோணத்துல இருந்தாலும் கிராமத்தோட தொடர்பு அடிக்கடி இருந்துக்கிட்டிருந்தது. கிராமத்து மக்களோட பேச்சுக்கள், வழக்கங்கள் தொடர்பு நிறைய இருந்தது.

இலக்கியம்னு சொல்றபோது எனக்கு தகப்பனாரோட சார்பு அதிகம், அவர் சங்கீதத்துல ருசி உள்ளவர், நன்றாகப் பாடுவார், ரெண்டாவது நல்ல சமஸ்கிருதப் புலமை இருந்தது. அதை விளக்கறதிலே ரொம்ப சங்கீதத்தோட விளக்குவார். அந்தச் சார்பு நிறைய இருந்தது. அவர் எந்தக் கண்ணோட பார்த்தாலும் ஒரு இலக்கியக் கண்ணோட, சங்கீதக் கண்ணோட பார்ப்பார். அவரோட அடிக்கடி பழகிப்பழகி அவர் எனக்கு ஒரு ஹீரோ மாதிரி இருந்துக்கிட்டிருந்தார். அடுத்தாப்ல அவருக்கு ரொம்ப அசாத்தியமான ஒரு சக்தி இருந்தது. Mimicry – அதாவது யாரைப் பார்த்தாலும் அதே மாதிரி பேசறது, அதே மாதிரி நடக்கிறது – இந்த மாதிரி ஒரு பெரிய அனுகூரணமாக அனுசரிக்கிற சக்தி இருந்தது. அதெல்லாம் பாத்து நாங்க சிரிச்சிண்டு இருப்போம். இது ஒரு பெரிய அதிர்ஷ்டம் எங்களுக்கு. அதாவது பெற்றோர் குழந்தைகளைக் கூப்பிட்டு அதைச் செய்யாதே இதைச் செய்யாதே – இப்படியெல்லாம் சொல்லாமல் அவர் தினமும் இரவு 11-00 மணிவரை எங்களோடு உக்காந்து அரட்டையடிச்சிண்டு இருப்பார். அரட்டைன்னா சும்மா ஊர் வம்பா இருக்காது. காவியங்கள், சங்கீதம், அவர் கண்ட அனுபவங்கள் இதெல்லாம் பற்றி சொல்லிண்டிருப்பார். அதனால அவருடைய தாக்கம் ரொம்ப ஜாஸ்தி எனக்கு – என்னோட எழுத்துல.

அதுக்கப்புறம் கல்லூரியில் எனக்கு ஒரு புரொபசர் இருந்தார் – சீதாராமையர்னு. கும்பகோணம் காலேஜில இருந்தார். அவர் சங்கீதச்சூழல்ல இருந்து வந்தவர், அவருடைய தாக்கமும் எனக்கு ஜாஸ்தி. அவர் அடிக்கடி எனக்கு அதிகமா ஐரோப்பிய, ஆங்கில, அமெரிக்க இலக்கியங்களையெல்லாம் குடுத்து படிக்கச் சொல்வார். இதெல்லாம் நான் inter படிச்சப்போ நடந்தது. நிறைய வாசிச்சிட்டு இருந்தேன் அப்பொ, இன்னொண்ணு…

வெ.சா.: இவாள்ளாம் நீங்க எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னால…

தி.ஜா.: ஆமா… 1930-களில் நிறைய வாசிக்கறதுக்கு, ரெண்டு பேர்தான் தமிழ்நாட்டுல ரொம்ப ஊக்கம் கொடுத்தார்கள், ஒண்ணு ஆனந்தவிகடன் பத்திரிகை இருந்தது. கல்கி ஆசிரியரா இருந்தார். அவர் வந்து எல்லாரையும் படிக்கும்படியா பண்ணினார். அப்பொ ஒரு பெரிய powerful team – கல்கி, மாலி ரெண்டு பேரும் சேர்ந்துண்டு சங்கீதம், இலக்கியம் அப்புறம் அரசியல் எல்லா விஷயங்களையும் பற்றி சித்திர ரூபமாகவோ, கட்டுரை ரூபமாகவோ, கதை ரூபமாகவோ தந்தார்கள், அப்ப தமிழ்நாடு முழுக்க இந்த ஒரு பத்திரிகை கல்கியோட தாக்கம். ரெண்டாவது சுதேசமித்திரன் – அந்தக் காலத்துல வாரப் பதிப்பா வந்துகிட்டிருந்தது. அதில் C.R.சீனிவாசய்யங்கார் – ராமாயணத்துக்கு மொழிபெயர்ப்பு பண்ணியிருக்கிறார் – அவர் வந்து தியாகராஜர் கீர்த்தனைகளை மொழிபெயர்த்து ஸ்வரப்படுத்தி போட்டுண்டிருப்பார். 1930–களில் பேசறேன். 32-இல பொன்விழா நடந்தது. எங்கள் குடும்பத்துல ரெண்டு பத்திரிகை தாக்கம் இருந்தது. பல குடும்பங்களில் தாக்கம் இருந்தது. இந்த ரெண்டும் மக்களை நிறைய படிப்பில் ஈடுபடுத்தின. அதுக்கு முன்னாடி யாராரோ நாவல்லாம் எழுதிக்கிட்டிருந்தாங்க – வடுவூர், கோதைநாயகியம்மாள் இப்படி – அதெல்லாம் எங்க குடும்பத்துக்கு வந்ததில்லே. எங்க தகப்பனார் எங்களை சமஸ்கிருதப் படிப்பில் ஈடுபடுத்தினார். அவர் கண்டிப்பா ரெண்டு சொல்லிண்டிருப்பார். சீட்டாடக் கூடாது, சீட்டுக்கட்டைக் கண்டாலே கோபம் வந்துரும். என்னமோ சினிமாவுக்குப் போனா… (சிரிப்பு)

வெ.சா.: தஞ்சாவூர்க்காரங்களுக்கே சீட்டாடறது, சினிமா இதெல்லாம்…

தி.ஜா.: அப்புறம் கசமுசான்னு நாவல்கள் படிக்கக்கூடாது. எனக்கென்னமோ இந்தக் கட்டுப்பாடுகள் சரின்னுதான் தோன்றது – இப்ப வர்ற சில படங்களைப் பாக்கறபோது.

வெ.சா.: அந்தக் காலத்தில சினிமா வேற இல்லியா! Opera-வாக இருந்தது. புராணம்…

தி.ஜா.: இருந்தாலும் அதெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லிண்டிருப்பா. சிறுவயசுல இதெல்லாம் பாக்கவாண்டாம் அப்படின்னு.

வெ.சா.: நாடகங்கள்லாம்?

தி.ஜா.: நாடகங்கள் நிறைய பாத்திருக்கேன். கிட்டப்பா நாடகங்கள்…

வெ.சா.: அதுக்கெல்லாம் அவர் ஒண்ணும் சொல்றதிலே…

தி.ஜா.: ஒண்ணும் சொன்னதில்லே. வேடிக்கையா இருக்கும் எனக்கு… கிட்டப்பா நாடகங்கள் நிறைய பாத்திருக்கேன். அப்புறம் அனந்த நாராயணைய்யர், வேல் நாயர் – இவர்கள் நாடகங்களை சின்ன வயசுல ஏகப்பட்டது பாத்துருக்கோம். அவர் ஒண்ணும் சொன்னதில்லே. அவரும் கூட உற்சாகமா வருவார். அதுக்கப்புறம் சீத்தாராமைய்யர் பெர்ஸனலா நிறைய சொல்லியிருக்கார். அப்பத்தான் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். ஐரோப்பிய இலக்கியங்கள்லாம் படிச்சேன். பிறகு கல்லூரி முடிச்சப்புறம் கு.ப.ரா தொடர்பு 1942-இல் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் இறந்து போறவரைக்கும் சுமார் ரெண்டு வருஷம் நெருங்கிப் பழகிண்டிருந்தோம்.

வெ.சா.: எழுத ஆரம்பிச்சது எப்போ?

தி.ஜா.: எழுத ஆரம்பிச்சது சின்ன வயசிலேருந்து எழுதிண்டிருக்கேன். 1937-லிருந்து எழுதிண்டிருக்கேன். என்னத்தையாவது சின்ன சின்னதா விகடன்ல வந்திருக்கிறது இப்பொ ஞாபகமில்லே. 1942-க்கு அப்புறமாத்தான் அதிகம் எழுத ஆரம்பிச்சேன். கிராம ஊழியனில் கு.ப.ரா ரொம்ப ஊக்கம் கொடுத்துண்டிருந்தார். அவர் பரமரசிகர். ரொம்ப நயமும், நளினமும், விவேகமும் அவருக்கு. அவரோட பழகினது ஒரு பெரிய பாக்கியம். இதெல்லாம் எனது ஆரம்ப பாதிப்புகள். அப்புறம் சங்கீதத்துல சிலது, அத அப்புறமாச் சொல்றேன்.

வெ.சா.: நீங்க சங்கீதம்னு சொன்னவுடனே ஞாபகம் வருது. அப்புறம் பாத்துக்கலாம். உங்க எழுத்த பாக்கும்போது ஒரு அடியோட்டமா அல்லது இழையாக ரொம்ப explosive-வான்னும் வச்சுக்கோங்களேன். உங்கள் எழுத்து பூராவும் அதுன்னு கூட சொல்லத் தோன்றது. பெண்களிடத்துல உங்களுக்கு இருக்கற ஆச்சரியம், வியப்பு – என்னடாது! பகவான் இப்படி ஒண்ணை படைச்சு வச்சிருக்கிறாரே – அப்படிங்கற ஒரு வியப்பு – ஆனா ஒரு ஆதங்கம், தாபம் – இதுவுங்கூட யுகம்யுகமா இவங்களை நாம ரொம்ப கொடுமைப்படுத்திட்ட மாதிரி ஒரு குற்ற உணர்வு இவை எல்லாத்தையும் சேர்த்து வச்சி பிராயச் சித்தம் பண்ற மாதிரி உங்க எழுத்தில் அவங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து கொஞ்சம் idealise பண்ணி, அது ஒரு நியாயத்தோட, அனுதாபத்தோட ஒரு admiration-னோட பாக்கற மாதிரி…ஆண் பாத்திரங்கள்லாம் ஒரு foil மாதிரி இவங்க characterisation முழுமையா வர்றதுக்கு ஒரு foil மாதிரி படறது. இதெல்லாம் சரியா? எப்படி? நான் சொல்றது சரிதானா?

thija-logo4தி.ஜா.: நீங்க சொல்றதை முக்காலும் ஒத்துக்கறேன். முக்கியமா பிராமண சமூகத்துல பெண்களுக்கு அந்தக் காலத்துல அவ்வளவோ சுதந்திரம் கிடையாது. என்னை பொதுவா கேட்டால், ஐரோப்பா, அமெரிக்காவை விட இந்திய சமூகத்துல பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். கிராமத்தில பாத்தா தெரியும், குடும்பத்துல அவதான் தலைவி, புருஷன் வெளியே போய் சம்பாதிச்சிட்டு வருவான், ஆனால் குடும்பம் நடத்தறது, அதோட வழக்குபாரங்களை பாக்கறது, இதெல்லாம் பாத்தீங்கனா நம்ப குடும்பத்துல பெண்களுக்கு செல்வாக்கு உண்டு. இதை அங்கீகரிச்சு வந்துருக்கோம். இடைக்காலத்துல என்ன ஆச்சோ தெரியலை சிறு வயசுல இந்த சில கொடுமைகளை பாத்திருக்கேன். விதவைகளை அலங்கோலப்படுத்தறது. வரதட்சணை கொடுமை – உறவினர் மத்தியில் குடும்பத்தில் சில சூழல்களில் அப்புறம் சுற்றியிருக்கிற வைதிகமாய் இருப்பவர்கள் பெண்களை எப்படி கொடுமைப்படுத்துகிறார்கள்? இவையெல்லாம் பார்த்துவிட்ட பின்தான் பெண்களுக்கு சரியான இடம் கொடுக்காததே இடைக்காலத்துல வந்த ஏற்பாடோன்னு படுது. தகப்பனாரோட அடிக்கடி சண்டை போட்டிருக்கேன் இதபத்தி. நம்ம ஊர்ல “ஸ்திரி ஸ்வாதந்தர்யம் ஆர்ஹதீ” ன்னு ஒண்ணு – பெண்கள் சுதந்திரத்திற்குத் தகுதியுள்ளவர்கள் அல்ல-ன்னு மனுஸ்மிருதியில இருக்குறாப்பல இருக்கு. என்னமோ எனக்குத் தெரியலெ biological-ஆ சொல்லலாம். அவர்களோட உடற்கூறு, வாழ்க்கையில செய்ய வேண்டிய கடமைகள், இதனால் சொல்றாங்களோ என்னமோ… எனக்கு இது பிற்போக்கான கருத்தாப்பட்டது. அந்தக் காலத்துல எப்படி இருந்ததோ இந்தக் காலத்தில ஒரு 500 வருஷமா இது சரின்னு எனக்குத் தோணல. இதனால் இருக்கலாம் – சின்ன வயசுல பார்த்த கொடுமைகள் எல்லாம் பார்த்தவுடனேதான் பெண்களைப் பற்றி எனக்கு ஒரு… வியப்பு உண்டு எப்போதும்…

வெ.சா.: வியப்பு எல்லோருக்கும் உண்டு.

தி.ஜா.: வியப்பு எல்லோருக்கும் உண்டு. அது sexual… (சிரிப்பு)

வெ.சா.: ஆ! அது அந்த வியப்பில்ல. இந்த மாதிரி ஒரு படைப்பைப் படைச்சு…

தி.ஜா.: ஆமா… பெண்கள் வந்து மனுஷ சிருஷ்டியில ஒரு ஆச்சரியமான பகுதி. அதனாலதானோ என்னமோ ஆண்கள் அநேகமா பலஹீனமா இருக்கிறார்கள். ஒரு சமயம் அது எனது பிரதிபலிப்பா இருக்கலாம். அப்படித்தான் தோண்றது எனக்கு.

வெ.சா.: சமூகக் கொடுமைகளை, சரித்திர பூர்வமா வர்ற நிகழ்ச்சிகள் இதெல்லாம் மீறிக்கூட உங்களுக்குள்ளே ஒரு அனுதாபம் பெண்கள் கிட்டே…

தி.ஜா.: ஆமா… அது எப்போதும் உண்டு. ஆனா சொன்னாக்கா யாரும் தவறா நினைச்சுக்கக் கூடலாம். அந்தமாதிரி தவறா நினைச்சி சிலபேர் சொல்லிண்டு இருக்காங்க என்னைப்பத்தி. அதப்பத்தி நான் கவலைப்படலை. வேணுமனே தவறா நினைக்கிறவங்களைப்பற்றி நாம என்ன சொல்லமுடியும்? அது வேற விஷயம். ஆனால் பொதுவாக பெண்கள் வந்து நம்ம வாழ்க்கைக் கோணங்களை பார்வைக் கோணங்கள், செயற்கோணங்கள் எல்லாவற்றையுமே உருவகப்படுத்தக்கூடைய சக்தி உடையவர்கள். எனக்கு அந்தத் தாக்கம் ஆழ்ந்து இருந்துக்கிட்டிருக்கு.

வெ.சா.: குழந்தைகளைப் பார்த்தாலே ஒரு ‘இது’ ஏற்படுறதில்லையா அது மாதிரி பெண்களிடத்துலேயும்… அடுத்தாப்ல இதுப்பற்றி பேசலாமே… நீங்க பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர் ஜில்லா… காவிரிக் கரை… That was our seat of culture and continutes to be…

தி.ஜா.: அப்படின்னு இப்ப சொல்லிட்டிருக்கோம். தஞ்சை மாவட்டம் இன்னும் நம்ம பண்பாட்டுக்கு உறைவிடம் தலையிடம்னு சொல்லிண்டிருக்கோம்.

வெ.சா.: அநேகமா எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள் காவிரிக் கரையிலிருந்துதான்… திருச்சி தஞ்சாவூர் ஜில்லாவில் இருந்துதான்.

தி.ஜா.: ஆமா… காவிரிக்கரை ஒரு பெரிய நாகரிகத்துக்கு உறைவிடமா, வளர்ப்பிடமா, தொட்டிலா இருந்துக்கிட்டிருக்கு.

வெ.சா.: காவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றியிருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான் உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம். மோகமுள்ளில் கூட ஒரு இடத்தில் தாம்பாளம் விழறசத்தம் கூட… வெந்நீர் தவலை பட்டு எழுப்பற ஒலி கூட சங்கீதமா உங்க காதில விழுந்திருக்கு. இது ஏதோ ஒரு additional accomplishment-ன்னு இல்லாம ஒரு sensibility-னு தான் பாக்கணும்தான் தோன்றது. எழுத்தை ஒரு கலையா பாத்தா அதுவும் sensibility, கலையுணர்வு பற்றிய ஒரு விஷயம். பலர் எழுத்துல இது வரலை. அவர்கள் தஞ்சாவூர்க்காரர்களா இருந்தபோதும் கூட, இந்த sensibility-ங்கிறது எல்லாம் ஒண்ணை ஒதுக்கி இன்னொண்ணை எடுத்துக்கிடுமா என்ன? sensibility-ன்னா என்ன? பொதுவாகவே sensibility தானே!

தி.ஜா.: இது மற்ற எழுத்தாளர்கள் கிட்ட வந்திருக்கா என்கிறது தர்க்கத்துக்கு இடமான விஷயமா இருக்கலாம். ஆனா, மெளனி, லா.ச.ரா. இவங்களுக்கு வந்து – சங்கீதத்தின் இழைகளை அவர்களின் எழுத்தில் பார்க்கலாம். நீங்க முன்னாடி கேட்டதுணால சொல்ல வேண்டியிருக்கு எனக்கு வந்து… முன்னாடியே சொன்னேன். என் தகப்பனார்… அப்புறம் சங்கீதத்துல ஆசை இருக்கறது என்பது பிறவியிலேயே வருவது எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு… குழந்தைகள் எல்லாம் சங்கீதத்தைக் கேட்டு பிரமிக்கிறது, ஒரேயடியா சங்கீதத்துல ஈடுபாடு கொண்டு புரியறதோ புரியலியோ அதுகள் எல்லாம் சங்கீதத்தைப் பற்றி மோகம் அடையறது. வயசானப்புறம் இது போயிடலாம். எல்லாக் குழந்தைகளும் சங்கீதத்துக்கு react பண்றது, இது வயசானப்புறம் குறைந்து போயிடலாம். ஆனால் எங்களுக்கு வந்து குடும்பத்துலேயே சங்கீதக்காரர் தொடர்பு உண்டு. என்னுடைய தாத்தா ரொம்ப நல்லா பாடுவார்னு கேள்விப்பட்டிருக்கேன் – என்னுடைய தாய்வழி தகப்பனார் ரொம்ப நன்னாப் பாடுவாராம் அவருக்கு மகா வைத்யநாத பாகவதரோட தொடர்பு. ஏன் தகப்பனாரோட தாக்கமும் உண்டு. அதனாலதான் 11, 12 வயசுல எனக்கு சங்கீதம் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. சங்கீதத்துல இருந்திருந்தா இப்ப ஒரு சமயம் பாடகனா இருந்திருக்கலாம் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்னு வச்சுக்கோங்களேன். ஆனா எனக்கு பெரிய ஆசிரியர்களோடு பயிற்சி எல்லாம் கிடைச்சது.

வெ.சா.: நீங்கள் அந்தப் பயிற்சி எடுத்துக்கிட்டீங்களா? அல்லது அப்படி அப்பா வந்து பிள்ளையும் சங்கீதம் கத்துகிட்டும்னு விட்டாரா?

தி.ஜா.: ஆமா… எப்பவும் தகப்பனார்தானே அனுப்புவார்.

வெ.சா.: அவரும் பாத்துருக்கணும் உங்களுக்கு ஈடுபாடு இருக்குங்கறதை

தி.ஜா.: ஆமா… பாடிண்டு இருந்தபோதுதான் தஞ்சாவூர்ல வாசுதேவன் என்கிறவர்கிட்ட கொண்டுபோய் விட்டார். அவர்கிட்ட படிச்சேன் கொஞ்சநாளக்கி. ரெண்டு மூணுவருஷம் – அப்புறம் மன்னார்குடி சுவாமிநாதையர்னு ஒருத்தர் அவர் கிட்டேயும் படிச்சேன். அப்புறம் உமையாள்புரம் சுவாமிநாதையர்னு மகா வைத்யநாதய்யரோட சிஷ்யர். அவர்கிட்ட கொஞ்சநாள் படிச்சேன். தியாகராஜர் பரம்பரையில வந்தவர்னு அவரைச் சொல்வார்கள் அவர்தான் இந்த சுருதி… வாழ்க்கையை பாக்கறபோது… எல்லாம்… வாழ்க்கையே ஒரு இசை மாதிரி அவர் பாத்துண்டு இருப்பார். அவர்கிட்ட நான் அடிக்கடி பாத்துருக்கேன். அதுக்கு முன்னாடியே என் தகப்பானார்கிட்டேயும் இந்தக் குணம் உண்டு. எதைப் பார்த்தாலும்… அதிகமான, முரட்டுத்தனமா பேசறது… முரட்டுத்தனமா சத்தங்ளைக் கேக்கறது இதெல்லாம் பிடிக்காது.

வெ.சா.: ‘மோகமுள்’ளில் பாபுவோட அப்பா… have you fashioned him after your father?

தி.ஜா.: ஆமா… கொஞ்சம் அத மாதிரித்தான் இருக்கு. of course… ஒரு பாத்திரம் உருவாகிறது என்பது alloy மாதிரி. ஒருத்தரை அப்படியே பண்ணமுடியாது பல மனிதர்களை ஒரே இதுல திணிச்சிருக்கலாம். ஆனால் அது கிட்டத்தட்ட எங்க தகப்பனார்னு சொல்லலாம். அதுமாதிரி அவருடைய குணங்கள்லாம் அதுல இருக்கு.

அந்த உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் ரொம்ப நுணுக்கமான செவி கொண்டவர். அவர் சுதி சேக்கறதுக்கு ஒரு மணி நேரமாகும். சுதி சேக்கத் தெரியாதுன்னு அர்த்தமில்லே. சுதில அவருக்கு அத்தனை லயிப்புண்டு. சரியா நூறு பெர்செண்ட் வர்ற வரையில் தம்பூராவில சுதி சேத்துண்டே இருப்பார். அவ்வளவு இம்மி குறையாம இருக்கணும் அவருக்கு. அதாவது கிட்டத்தட்ட ஒரு fantastic செவி அது. அவர் பேசிண்டேயிருக்கறப்ப ஏதாவது சத்தம் கேட்டதுண்ணா கவனிக்கச் சொல்வார். பறவைகள் சப்தம், செக்கு சப்தம், யாராவது பேசற சப்தம், குழந்தை அழற சப்தம் – இதெல்லாம் கேட்டுண்டு இருக்கச் சொல்வார். அதாவது இந்த உலகம் முழுக்க ஒலி மயம், பேசறபோது கூட பேசறவர்கள் எந்த சுதியில் பேசுகிறார்கள் – சுதி concept இருக்கே – சுதியப்பற்றி அடிக்கடி சொல்லிண்டே இருப்பார். இது வந்து எனக்கு ஒரு பெரிய விழிப்பா இருந்தது. ‘என்னடா’ எங்க பார்த்தாலும்… தாம்பாளம் விழறது… சமையல் உள்ள சத்தம் கேக்கறது… வாசல்ல மசியில்லாம வண்டி போகும் – இதையெல்லாம் கவனிக்கச் சொல்வார். உங்களுடைய basic note-லேருந்து எவ்வளவு தூரத்திலே இருக்கு என்பதையெல்லாம் பார்க்கச் சொல்வார். இது நமக்கு உள்ளுக்குள்ள இருந்த உணர்ச்சியை அதிகமா உத்வேகப்படுத்திக் கொண்டே இருந்தது. பிறகு நான் சென்னைக்கு வந்தப்புறம் பத்தமடை சுந்தரமய்யர் என்பவர் கிட்டக்க, முத்துசாமி தீட்சிதருடைய கீர்த்தனைகள் பல பாடம் பண்ணினேன். அவரும் சங்கீதத்துல ரொம்ப ஆராய்ச்சி பண்ணினவர். உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் போலவே ரொம்ப நுணுக்கமான பிரக்ஞையும், நுணுக்கமான நாத பிரக்ஞையும் கொண்டவர். அவரோட பழகினதுனாலேயும் எனக்கு பற்பல விஷயங்கள் தெரிந்தது. வாழ்க்கையப் பற்றி… சங்கீதத்தைப்பற்றி… வாழ்க்கையில் உள்ள அடிப்படையான தொடர்புகளைப் பற்றி அடிக்கடி என்கிட்ட பேசிண்டிருப்பார். அவர் என்னை ஒரு சீடனா கருதாமல் ஒரு நண்பனா கருதி எல்லாம் சொல்லிண்டு வருவார். அவர்கிட்டேயும் எனக்கு பல நுணுக்கங்கள் தெரிஞ்சிக்க முடிஞ்சது. நல்ல சங்கீதத்தை அனுபவிக்க தெரியறது… என்கிறதுக்கு நாம் இறைவனுக்கு கடமைப்பட்டிருக்கணும். அந்த மாதிரி ஒரு ஆற்றல் கொடுத்ததுக்கு. அதனால்தான்… ofcourse சங்கீதத்தை அனுபவிக்கறது அதிர்ஷ்டம்தான்… நல்ல சங்கீதம் கேக்கறது…

வெ.சா.: மத்தவங்களும் அந்த ஜில்லாவில இருந்து வந்தபோதும் கூட… ஒலிகள் எல்லாமே சங்கீதமா பாக்கற awareness இல்லாத காரணத்தால்தான் அவர்கள் எழுத்தில வரலையோ என்னமோன்னு எனக்குத் தோணறது.

தி.ஜா.: இருக்கலாம். ஆனா நான் அதைச் சொல்ல எனக்கு கூச்சமா இருக்கு.

வெ.சா.: வெறும் ஒரு பயிற்சியாக…

தி ஜா.: வெறும் ஒரு பயிற்சியாக இருக்கக்கூடாது. சங்கீதம்னு சொன்னா you should look at life as a musical piece. அதுமாதிரிதான் எனக்குத் தோண்றது. அது இயற்கையில் ஏற்பட்ட ஒரு குணம்தான்.

வெ.சா.: The whole world is a manifestation of music.

தி.ஜா.: ஆமா.. ஒரு kind of music மாதிரிதான் பாக்க முடியறது. பேச்சில கூட முரட்டுத்தனமா யாராவது பேசினால் அல்லது பொருள், அடக்கம், தொனி இதெல்லாம் கொஞ்சம் அசப்தமா பேசினா நமக்கு உடம்ப என்னமோ பண்றது. அவ்வளவுதான் சொல்ல முடியும். வேற என்ன சொல்றது? இரைஞ்சு பேசினாக்கூட சிரமமா இருக்கு…

வெ.சா.: குழந்தைகள்கிட்ட இருக்கிற பிரியம், பெண்கள்கிட்ட ஏற்படுற அனுதாபம், வியப்பு இதெல்லாம்கூட சங்கீதத்துல இருந்து…

தி.ஜா.: அப்படித்தான் நினைக்கிறேன் நான். இதனுடைய manifestationதான். அநேகமா சங்கீதத்துல ஈடுபாடு உள்ளவர்கள், அநேகமா பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் சங்கீதமா பார்ப்பார்கள்னு நினைக்கிறேன்.

வெ.சா.: அடுத்தாப்ல ஜானகிராமன்… ஆரம்பத்திலிருந்து இன்னிக்கு வரைக்கும் பார்க்கற ஒரு விஷயம்… நீங்க பிறந்த ஊரைப் பத்திச் சொன்னீங்க. முன்னால எனக்குத் தெரியாது. இப்பத்தான் தெரியும் மன்னார்குடிப் பக்கம் தேவங்குடின்னு ரொம்ப சின்ன கிராமம். 10, 12 வீடோ என்னமோதான் (இரு)க்கும்.

தி.ஜா.: ம்… ஆமா…

வெ.சா.: சரி… அதுலேருந்து கும்பகோணத்துக்கு… கும்பகோணத்துக்குப் பக்கத்துலே ஏதோ ஒரு ஊருக்கு வந்தீங்க நீங்க… பின்னால கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல்ல இருந்தேளா?

தி.ஜா.: ம்… டவுன் ஹைஸ்கூல்ல ஆசிரியரா இருந்தேன். ஒரு வருஷம் ஆசிரியரா இருந்தேன். அப்பத்தான் வந்து எனக்கு கு.ப.ரா.வோட நெருங்கின தொடர்பு.

வெ.சா.: ம்… கிராம ஊழியன்ல எழுதிட்டு இருந்தப்போ.

தி.ஜா.: அப்ப வந்து இன்னும் எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு அவர்கள்லாம்… சுவாமிநாத ஆத்ரேயன்… அப்ப ஒரு groupஆ இருந்தோம். அப்ப அப்படி அவரோட தினமும் சல்லாபிக்கக்கூடிய வாய்ப்புகள் நிறையக் கிடைச்சது.. கு.ப.ராவோட.

வெ.சா.: ம்… என்னமோ சொல்ல வந்தேன்.. அப்புறம் 54ல்லயோ என்னமோ நீங்க மெட்ராஸ் வந்துட்டீங்க இல்லியா?

தி.ஜா.: ஆமா மெட்ராஸ் ரேடியோவில 54-ல வந்தேன்.

வெ.சா.: 67 வரைக்கும் அங்க.

தி.ஜா.: 67 வரைக்கும் அங்க… 68ம் வருஷம் டில்லிக்கு வந்துட்டேன்.

வெ.சா.: அப்புறம் டில்லிக்கு வந்துட்டேள். இப்ப இதெல்லாம் பாக்கறபோது இந்த வாழ்க்கையில பாதிக்கு மேல் மெட்ராஸிலேயோ டில்லியிலேயோ இருந்திருக்கீங்க. தஞ்சாவூர்ல ஒரு கிராமத்திலேருந்து இப்ப டில்லி ஒரு metropolitan city வரைக்கும். உங்க பிடிப்பு ஆனா உங்க எழுத்திலேருந்து பாக்கறபோது உங்க பிடிப்பு பூராவுமே கிராமத்துல, அந்த நாகரிகத்துல, அந்த மனுஷாள், கிராமத்து மனுஷாளோட இருக்கறதாதான் எனக்குப் படறது. ஆனா நகர வாழ்க்கையில உங்களுக்கு அவ்வளவா பிடிப்பு ஏற்படலை.

தி.ஜா.: பிடிப்பு ஏற்படலை. அதப்பத்தி சொல்றதுன்னா, நகர வாழ்க்கை பற்றி அதிகமா எழுதலை. எழுத முடியலை. எனக்குக் காரணம் என்னன்னா நகர வாழ்க்கையினுடைய, அந்த மக்களினுடைய ஆசாபாசங்கள், இதெல்லாம் எனக்கு இதெல்லாம் பொதுவா இருக்கலாம் மனிதர்களுக்கு, பொதுவா ஆசாபாசம் ஒண்ணாத்தான் இருக்கு. இந்த தேசத்துல மாத்திரமில்லே எல்லா நாடுகளிலேயும் அடிப்படையிலே மனிதர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அது இருக்கும். ஆனால் சிறுவயசுலேயே கிராமத்திலேயே பழகினதானாலேயே என்னமோ கிராமத்தை விட்டு மனசு இன்னும் வரமாட்டேங்குது. நகர வாழ்க்கை மக்களைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால் டில்லியைப் பற்றி எழுதறதுன்னா டில்லி எனக்கு இன்னும் பழக்கமாகலே. 11 வருஷம் இங்கே இருந்தும்கூட டில்லியைப் பத்தி எழுதறதுக்கு ஒரு விஷயமும் கிடைக்கலை. ரெண்டாவது, பாக்கறதுக்கு வந்து, மனசும் அதுல துடிப்பா ஏற மாட்டேங்குது.

வெ.சா.: கிராமத்துக்குத்தான் பின்னே, you go back to.

தி.ஜா.: அதில்லாட்டி சின்ன நகரங்கள் இருக்கே. இந்த பஞ்சாயத்து டவுன்கள். நான் பஞ்சாயத்து டவுனில் 7 வருஷம் இருந்திருக்கேன். அய்யம்பேட்டைன்னு ஒரு ஊர்ல இருந்தேன்.

வெ.சா.: அதெல்லாம் கிராமம். overgrown village.

தி.ஜா.: ஆமா… பெரிய கிராமங்கள் அது…

வெ.சா.: கும்பகோணத்தைகூட நான் கிராமம்னுதான் சொல்வேன்.

தி.ஜா.: ஆமா… பெரிய கிராமம்னுதான் சொல்லணும். ஓரளவுக்கு மெட்ராஸ்கூட பெரிய்ய கிராமம்னு சொல்லலாம். ஏன்னா அங்கே மனிதர்கள் எல்லாம் அவர்களுடைய அடிப்படைகளை அப்படியே காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள். இப்ப கல்கத்தா கூட அப்படிச் சொல்லலாம். அதும் ஒரு பெரிய extended village மாதிரி. ஏன்னா ஜனங்கள்… அந்த ஊர்க்காரர்கள் அந்த ஊர்க்காரனா இருக்கான். இப்ப டில்லி அந்த மாதிரி இல்லை. இது ஒருத்தருக்கும் சொந்தமான ஊரில்லே. இதில் பல மக்கள் டில்லியிலே முன்னாடி இருந்தவங்களுக்கு சொந்தமா இருக்குமோ என்னமோ, மனித அடிப்படையில் பார்த்தா, spiritualஆ இது யாருக்குச் சொந்தம்னு தெரியலை. அதனால இங்க மனசு ஒட்டறது சிரமமா இருக்கு.

வெ.சா.: ம்ம்…

தி.ஜா.: எனக்குப் பொதுவா நகர வாழ்க்கையில ஈடுபாடு கிடையாது. என்னமோ இருக்க வேண்டிய தொல்லைகள் வந்துட்டதே ஒழிய… வயிற்றுப்பாட்டுத் தொல்லைகள். அதுனால இருக்கணும். இருந்தாலும் மனசு முழுக்க கிராமங்களில்தான் இருக்கு. ஏன்னு சொல்ல முடியலை. அத சிறு வயசுனுடைய இதுவா இருக்கலாம். இல்லே நம்ம கிராமத்து மக்கள்கிட்ட இருக்கற தனித்தன்மை… அங்கதான் அதிகமாக கிடைக்கிறது.

வெ.சா.: Frank and outspoken.

தி.ஜா.: ஆமா… 40 வீடு இருந்ததுன்னா 40 தினுசான மக்களை பாக்கலாம். இங்க டில்லியில வந்து ஒரு பேட்டை முழுக்க ஒரே ஆளைப் பாக்க முடியும். ஒரு ஆளையே… 10 லட்சம் பேர்களில் ஒரு ஆளையே பாக்க முடியும். அங்க ஒரு ஆளில் ஒரு ஆளைத்தான் பார்க்கலாம்.

வெ.சா.: அதுவும் கிராமத்துல ஒருத்தர் இருந்தார்னா அடுத்த வீட்டுக்காரனைப்பத்தி, இந்தக் கிராமத்துல இருக்க மற்றவனைப்பத்தி, அண்டை அலுவல்களைப்பற்றி கவலைப்படுவான். இங்க அடுத்த வீட்டுக்காரனைப் பற்றி கவலையே கிடையாது.

தி.ஜா.: கவலையே கிடையாது.

வெ.சா.: பச்… Hypocrisy.

தி.ஜா.: Hypocrisyயோ என்னமோ… இந்தச் சூழ்நிலையில இவர்களுக்கெல்லாம் privacyன்னு சொல்றமே… அதாவது நம்ம பிரத்தியாரோட பார்வைகள், அவர்களுடைய… அவர்கள் நம்மைப்பற்றி அதிகம் தெரிஞ்சுக்கக்கூடாது; தெரிஞ்சுண்டா சிரமம் – இப்பிடிங்கறதினாலேயே தனித்தனியா கூண்டுல ஏறிட்டாங்க எல்லாரும். இந்தக் கூண்டுகள் இல்லாம இருக்கு கிராமம். எல்லோரும் வந்து அது நல்லதோ பொல்லாதோ, எல்லாத்திலேயும் பங்கெடுத்துக் கொள்வார்கள். அந்த ஒரு தொடர்பு interaction எல்லாம் இருக்கு.

வெ.சா.: ம்ம்…

தி.ஜா.: அதனால்தானே என்னமோ கிராமம் எனக்கு கவர்ச்சியா இருக்கு… அதனால கிராமம் வந்து ரொம்ப சிறந்ததுண்ணு சொல்ல வரலை.

வெ.சா.: ம்…

தி.ஜா.: அங்கேயும்…

வெ.சா.: பிடிப்பு ஏற்பட்டா அது சிறந்ததா இருக்கும். இது பிடிப்பு ஏறபடலை 25 வருஷம் 30 வருஷம் இருந்தும்.

தி.ஜா.: எனக்கு நகரங்களில் பிடிப்பு ஏற்பட மாட்டேங்குது.

வெ.சா.: கடைசியா ஒரே ஒரு கேள்வி. இப்ப 11 வருஷமா டில்லியில இருந்திருக்கீங்க. சென்னையில இருந்தபோது நீங்க எழுதினதை ஒப்பிட்டு பார்த்தால், இப்ப 11 வருஷமா அதிகமா எதுவும் எழுதலைன்னு எனக்கு தோண்றது, தப்போ ரைட்டோ…

தி.ஜா.: இல்லே அதிகமா..

வெ.சா.: அதிகமா எழுதலை?

தி.ஜா.: இங்க வந்து ஒரு பிரயாணக்கதை எழுதினேன். அப்புறம் ஒரு நாவல் எழுதினேன். இப்ப இன்னமொரு நாவல் எழுதிண்டிருக்கேன். இங்க வந்து வேலையினால அடிக்கடி ஊர்ப்பயணம் போறது. அதனால எழுதறதுக்கு போது கிடைக்க மாட்டேங்குது. உந்துதலும் அதிகமா இல்லை.

வெ.சா.: ஹ்ம்…

தி.ஜா.: ரெண்டாவது இந்த நகரச் சூழ்நிலை. டில்லி போன்ற யாருக்கும் சொந்தமில்லாத நகரச் சூழ்நிலையில் இருக்கிறபோது நீங்க சொன்ன காரணமெல்லாம் அதுலயும் இருக்கு. எனக்கு அதிகமா எழுதணும்னு தோணமாட்டேங்குது. ஒரு சமயம் நான் திரும்பி ஊருக்குப் போனால் நான் இன்னொரு…

வெ.சா.: ஆ… அதைத்தான் நானும் கேட்க வந்தேன்.

தி.ஜா.: ஒண்ணு அல்லது ஒன்றரை வருஷத்துக்குள்ள நான் திரும்ப சென்னைக்கோ அல்லது கிராமத்துக்கோ போகலாம். அப்ப வந்து நிச்சயமா எனக்கு எழுதறதுக்கு வாய்ப்புக்களும் இருக்கும். சரக்குகளும் நிறைய இருக்கும் (சிரிப்பு).

வெ.சா.: கிராமத்துக்கே முதல்ல திரும்பப்போறேள். அப்புறம் வேலைக் கொடுமைகள், வயித்துப்பாடு இதெல்லாம் இருக்காது.

தி.ஜா.: இன்னொண்ணு எனக்கு வந்து… எனக்கு… எப்பவுமே உடனே ஒரு சம்பவத்தைப் பார்த்தாலோ, மனிதர்களைப் பார்த்தாலோ எனக்கு உடனே எழுத வராது. எனது மந்த புத்தி காரணமா இருக்கலாம். ரொம்ப நாள் கழிச்சுத்தான் அதப்பத்தி யோசிக்கறது வழக்கம். டில்லியைப் பற்றிக் கூட நான் ஊருக்குப் போனதுக்கு அப்புறம் எழுதலாம் ரொம்ப நாள் கழிச்சி…

வெ.சா.: தாக்கங்கள் எல்லாம் ரொம்ப நாள் ஆனப்புறம்தான் ஆகும்.

தி.ஜா.: இருக்கும்… எனக்கு எப்பவுமே ரொம்ப நாள் கழிச்சித்தான் எதுக்கும் react பண்ற வழக்கம்.

வெ.சா.: எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான்… உடனுக்குடனே எழுதறதில்லை… reportersஆ இருந்தாலொழிய…

தி.ஜா.: ம்ம்… அதனால ஒரு சமயம் இந்தத் தாக்கமும் ஏற்படலாம். ஆனால் எனக்கு வந்து கிராமம்… அதைத்தான் எதிர்பார்த்துண்டு இருக்கேன். மெட்ராஸோ… மெட்ராஸ்னு ஒரு பெரிய கிராமத்திலேயோ அல்லது வேறு கிராமங்களிலேயோ குடியேறத்தான் நான் எதிர்பார்த்துண்டு இருக்கேன்.

வெ.சா.: பழைய ஆவேசத்தோட பழைய வேகத்தோட மறுபடியும் எழுதுவீங்க.

தி.ஜா.: எழுதமுடியும்னு நினைக்கிறேன். பார்ப்போம். அதுக்குள்ளேயும்…

வெ.சா.: ரொம்ப சந்தோஷம்.

தி.ஜா.: நமக்கு உடம்பிலேயும் சக்தி இருக்கணும்.

வெ.சா.: ரொம்ப நன்றி. ரொம்ப சந்தோஷமான விஷயம் அது.

தி.ஜா.: நன்றி.

தி. ஜானகிராமனுக்கும், சாகித்ய அகாடமியின் தமிழ் பரிசு கொடுக்கப்பட்டதை ஒட்டி, வானொலியில், டெல்லி, திருச்சி, கோயம்புத்தூர் நிலையங்களில் ஜனவரி-பிப்ரவரி, 1980ல் ஒளிப்பரப்பான பேட்டி.

நீலமலை பனிமலர், இதழ் 12-14, ஆகஸ்ட், 1980.