கி.கஸ்தூரி ரங்கன் (1933 – 2011)

kasthuriranganசென்ற புதன் கிழமை, 4.5.2011 அன்று மறைந்த கி.கஸ்தூரி ரங்கன் தமிழ் இதழ் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பங்காற்றியவர். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியவர்களுடன் இணைந்து கணையாழி இதழைத் துவங்கிய நாள் முதல் அவர் தன் பணத்தில்தான் இதழை நடத்தியிருக்கிறார். சுஜாதாவின் “கடைசி பக்கங்கள்”, தி ஜானகிராமன்,அசோகமித்திரன், ஆதவன், து.ராமமூர்த்தி போன்றவர்களின் முக்கியமான நாவல்கள் கணையாழியில் வெளிவந்துள்ளன. பல புதிய எழுத்தாளர்கள் கணையாழி வழியாகவே வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர்.

தமிழிலக்கியத்தைச் செழிப்பாக்கிய பல எழுத்தாளர்கள் கணையாழியால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது ஊக்கப்பட்டுத்தப்பட்டவர்கள். அவர் நடத்திய கணையாழி அருமையான இளம் புதுக்கவிஞர்களை இனம் கண்டது. இன்று பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் கணையாழியில் எழுதத் தொடங்கியவர்கள்தாம். குறு நாவல் வளர்ச்சிக்காக அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது. கணையாழியில், அமரர் தி.ஜானகிராமன் பேரில் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடந்து வந்தது.  அவர் ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற “வானம் வசப்படும்’ என்ற நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.” என்று தினமணியில் எழுதிய இரங்கல் கட்டுரையில் குறிப்பிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி. இருந்தாலும், அவரது இறுதிச் சடங்கில் இலக்கியவாதிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு சோர்வளிக்கும் தகவலாக இருக்கிறது

1933-ஆம் ஆண்டு பிறந்த கஸ்தூரி ரங்கன், ந்யூ யார்க் டைம்ஸின் சிறப்பு நிருபராகப் பணியாற்றிவர். 1962-ஆம் வருடத்திய இந்திய-சீனப் போரைக் குறித்த இவருடைய செய்திக்குறிப்புகள் சிறப்பான கவனத்தைப் பெற்றவை. ந்யூ யார்க் டைம்ஸ் வேலையை விட்டபிறகு தினமணிக்கதிரின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். காந்திய சிந்தனைகளில் ஈடுபாடுடைய கி.கஸ்தூரி ரங்கன் ஸ்வச்சித் என்ற காந்திய அமைப்பை நிறுவியுள்ளார்.

கணையாழியின் சாதனைகள் சிறப்பானவை. அதன் வெற்றி, அது தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம் இவை எந்தவொரு சிற்றிதழுக்கும் போலவே, இணையப் பத்திரிகையாக சொல்வனத்துக்கும் உந்துதலாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள்.

கி.கஸ்தூரி ரங்கன் – ஜெயமோகன்
சொல் குறுக நிமிர் கீர்த்தி! – இந்திரா பார்த்தசாரதி
கணையாழியும், கஸ்தூரி ரங்கனும் – பாவண்ணன்
முடிக்காமல் விட்டவை – இரா.முருகன்