தி.ஜானகிராமனின் இசையுலகம்

நெல்லு மிஷின் தாண்டியாயிற்று. உடையார் சவுக்கைத் தோப்புத் தாண்டியாகிவிட்டது. நடேசண்ணாவின் பியாகடை ராகம் என் உடல், உள்ளமெல்லாம் ஒரு தடவை வளைவிட்டு ஓடிற்று. கண்ணை மூடி அதைப் பார்த்தேன். இந்த மூங்கில் தோப்பைப் பார்க்கும்போதெல்லாம் இன்னும் தெளிவாக நடேசண்ணாவின் பாட்டு என் காதில் விழும். எப்படி இந்த சம்பந்தம் என் மனதில் ஏற்பட்டது என்று நினைவில்லை. நடேசண்ணா பாடும்போது கையை நீட்டி வளைக்கிறாரே, இந்த மூங்கில் கொத்து, சாலையின் இக்கரையில் நின்றவாறு அக்கரையில் உள்ள வாய்க்கால் மேலும் வளைந்து நிற்பது போல, அதனாலா? இல்லை, அவர் ராகம் வீச்சும் கணுவும் வளைவுமாக மூங்கில் போல் வியாபிப்பதனாலா? மூங்கில் போல எளிய நேர்மையும் ஆடம்பரமற்ற அழகுமாக இருப்பதனாலா?”

‘நடேசண்ணா’ சிறுகதையில் தி.ஜானகிராமன்.

சையில் ஆர்வமும், ரசனையும், தேர்ச்சியும் இருக்கும் எல்லோருக்கும் அதை வார்த்தைகளில் எழுதிக்காட்டும் வித்தை கைவருவதில்லை. நன்றாக எழுதவரும் பலருக்கு நேர்த்தியான இசை ரசனை அமைவதில்லை. உயரிய இசைக்கலைஞர்களையும், இசை வெளிப்பாடுகளையும் கேட்டு ரசிப்பதோடு மட்டுமில்லாமல், நல்ல எழுத்துத் திறமையும் உள்ளவர்கள் கூட – இசை என்ற கலை வடிவத்தை புறச்சூழல்களோடு தொடர்புபடுத்தி அணுகும் முறை சில சமயங்களில் பெரிய ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது. அவர்கள் ரசனை வெறும் தொழில்நுட்பத் தகவல்களோடு நின்றுவிடும் ஒன்றோ என்று நினைக்கவைக்கிறது. இசையறிவு, இசை நுண்ணுணர்வு (Musical sensibility), அந்த அனுபவத்தை வெளிப்படுத்த முடியும் எழுத்துத்திறன் – இவையனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதரைப் பார்ப்பது மிக அபூர்வமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அபூர்வ மனிதர்களுள் ஒருவர் தி.ஜானகிராமன்.

tjanakiramanமுதன் முதலில் ஜானகிராமனின் எழுத்து, இசை இரண்டோடும் எனக்குப் பரிச்சயமேற்பட்டது ‘மோகமுள்’ நாவல் மூலமாகத்தான். மோகமுள் காட்டிய இசையனுபவமும், ரங்கண்ணாவின் ஆளுமையும், பாபுவின் இசை கற்றுக்கொள்ளவேண்டுமென்ற ஏக்கமும் என்னை பிரமிக்க வைத்தன. இசை தெரிந்தவர்கள், எழுதத் தெரிந்தவர்கள், இரண்டும் தெரிந்தவர்கள் – எல்லோரிடமும் மோகமுள்ளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். சில வருடங்கள் கழித்து, தற்செயலாக நண்பரின் சேகரிப்பிலிருந்த நைந்து உதிர்ந்து போகும்படியிருந்த ஒரு ‘யாத்ரா’ இதழ் படிக்கக் கிடைத்தது. அது ஜானகிராமன் மறைவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். அதில் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், ஸ்வாமிநாத ஆத்ரேயன் போன்ற ஜானகிராமனின் நெருங்கிய நண்பர்கள் அவரைக் குறித்து கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

அதில் கரிச்சான் குஞ்சு எழுதிய கட்டுரையின் சில வரிகள் உடனே என் கவனத்தைக் கவர்ந்தன:

“இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு. அவன் தந்தையாருக்கு நல்ல ஸங்கீத ஞானமுண்டு. அவர் ராமாயணம் சொல்லும் முறையே ஒரு அருமையான அபூர்வமான முறை. அதாவது கதையில் வர்ணனை உரையாடல் முதலியவை எல்லாம் அந்தந்த சந்தர்பங்களுக்கு ஏற்ப பல ராகங்களில் வரும். அவர் வாக்கிலிருந்து அந்தக் காலத்துத் தஞ்சாவூர் சுருதிப்பெட்டி தம்பூராவை விடச் சுத்தமாய், அந்தர காந்தாரம் பேசும். ஒரு கட்டை சுருதியில் நாட்டையில் மங்களம் சுலோகம் – பூர்வ கதைச் சுருக்கம், பின்னால் ஒருவர் – அநேகமாக ஜானகிராமனுடைய அண்ணன் அல்லது அவனே மூலசுலோகங்களைச் சிறிதளவு ராகத்துடன் வாசிப்பார்கள். தொடர்ந்து அதே ராகத்தில் – கமகங்கள் குழையும் ஆலாபனைக் கிரமத்தில் கதை கூறுவார் தந்தை. அப்பொழுது வீட்டில் ஜானகிராமனுடைய சகோதரிகளுக்கு இசைப்பயிற்சி நடக்கும். இந்த வகையில் வயதுடன் கூடவே வளர்ந்தது அவனுக்கு ஸங்கீதம். பின்னர் கும்பகோணம், குற்றாலம், அய்யம்பேட்டை, சென்னை எல்லா இடங்களிலும் மேலும் மேலும் பயிற்சி செய்தான். பாடுவான். மேடை ஏறிக் கச்சேரி செய்யவில்லையே தவிர, ஒரு வித்துவானுக்குரிய அத்தனை லக்ஷண, லக்ஷய ஞானம் உண்டு அவனுக்கு.” என்று எழுதியிருந்தார் கரிச்சான் குஞ்சு.

அப்படியென்றால் இன்னொரு நண்பர் சொன்னதுபோல ஜானகிராமன் தோல்வியுற்ற பாடகர் இல்லையா? முறையான இசைப்பயிற்சி மேற்கொண்ட, இசை கைவரப்பெற்ற கலைஞர்தானா? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தஞ்சைக்கென்று ஒரு வளமான இசைப்பாரம்பரியம் உண்டு. பல பெரிய இசைமேதைகள், தஞ்சை – சோழமண்ணிலிருந்து வந்தவர்கள். ஜானகிராமன் காலம் (1921 – 1982) அத்தஞ்சை இசைப்பாரம்பரியத்தின் கிட்டத்தட்ட இறுதியான காலகட்டம் என்று சொல்லலாம். கரிச்சான் குஞ்சு ஜானகிராமன் முறையாக இசைகற்றுக்கொண்டார் என்று சொல்வது உண்மையாக இருந்தால், அவருக்கு குருவாக இருந்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வது தஞ்சையின் இசைப்பாரம்பரியத்தையே கூட காட்டிவிடும் என்று நினைத்து, அந்த விவரங்களைத் தேடத்தொடங்கினேன்.

அதே கரிச்சான் குஞ்சு கட்டுரையில், “கும்பகோணத்தில் சுப்பையர் என்பவர் மஹாமகக்குளத் தெரு அருகில் கௌதமேசுவரன் கோயில் தெருவில் இருந்தார். மிருதங்க வித்வான். சங்கீதம் மிக நன்றாகத் தெரியும். பாடாந்தரங்கள் சுத்த கர்னாடகப் பாணி. அப்போதே அவருக்கு வயது அறுபதுக்குமேல். அவருக்கு மகாராஜபுரம் விசுவநாதய்யர் தலைமுறைக்கு முன் தலைமுறைச் சங்கீதம் பற்றி நிறையத் தெரியும். அவர் ஜானகிக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுத்தார்.” என்ற தகவலும் கிடைத்தது. அடுத்து, வெங்கட் சாமிநாதன் புதுடெல்லி வானொலிக்காக தி.ஜானகிராமனை எடுத்ததொரு பேட்டியில், “[அப்பா] தஞ்சாவூர்ல வாசுதேவன் என்கிறவர்கிட்ட கொண்டுபோய் விட்டார். அவர்கிட்ட படிச்சேன் கொஞ்சநாளக்கி. ரெண்டு மூணுவருஷம் – அப்புறம் மன்னார்குடி சுவாமிநாதையர்னு ஒருத்தர் அவர்கிட்டேயும் படிச்சேன். அப்புறம் உமையாள்புரம் சுவாமிநாதையர்னு மகா வைத்யநாதய்யரோட சிஷ்யர். அவர்கிட்ட கொஞ்சநாள் படிச்சேன். தியாகராஜர் பரம்பரையில வந்தவர்னு அவரைச் சொல்வார்கள்,” என்று தன்னுடைய குருமார்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஜானகிராமன். இந்த உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், தன்னிகரற்ற கர்நாடக சங்கீத மேதையான மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு சங்கீதம் கற்றுத்தந்த குரு.

ஜானகிராமனின் இசைப் பாரம்பரியம் குறித்தும், அவர் எப்படிப் பாடுவார் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவரோடு சிறு வயதிலிருந்து நெருங்கிப் பழகியவர்கள் யாருடனாவது பேசிக்கேட்கவேண்டும் என்று நினைத்து ஸ்வாமிநாத ஆத்ரேயன் அவர்களை சில மாதங்களுக்கு முன் தஞ்சை சென்று நேரில் சந்தித்தேன். முதுமையின் காரணமாகவும், கீழே விழுந்து கால் முறிந்திருந்த வேதனையிலும் இருந்தாலும், ஜானகிராமனைக் குறித்தும், அவர் இசைப்பின்புலம் குறித்தும் கூறினார். ஜானகிராமனும், அவரும் சேர்ந்து உமையாள்புரம் சுவாமிநாத ஐயரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டதை  சுவைபடக் கூறினார்.

swaminatha-athreyan

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

“ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார். நாங்கள் நண்பர்களெல்லாம் கூடியிருக்கும்போது அவரைப் பாடச்சொல்லிக் கேட்போம். ஒருமுறை வானொலியில் மதுரை மணி ஐயர் கச்சேரிக்கு ஜானகிராமன் ஒரு அறிமுக உரையைப் போலப் பேசியிருக்கிறார். தஞ்சாவூரிலிருந்தபோது ஜானகிராமன் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்,” என்றார் ஆத்ரேயன். ஜானகிராமன் சென்னைக்கு இடம்பெயர்ந்தபின் அங்கே நிறைய ஹிந்துஸ்தானி கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஏதாவது நல்ல கச்சேரி இருந்தால் லெட்டர் போட்டு ஆத்ரேயனை வரச்சொல்லிக் கூப்பிடுவார் என்றும் கூறினார். உஸ்தாத் படே குலாம் அலி கான் ஜானகிராமனுக்கு மிகவும் பிடித்த பாடகர் என்றும் ஆத்ரேயன் மூலம் தெரிந்துகொண்டேன்.

ஜானகிராமனின் இசை ரசனை வெறுமனே தொழில்நுட்ப அறிவைச் சார்ந்தது இல்லை என்பதை அவர் இசை குறித்து எழுதிய படைப்புகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பெரிய மேதைகளிடம் இசை கற்றிருந்தாலும், நன்றாகப் பாடக்கூடியவராக இருந்தாலும் தன் மேதைமையை வெளிக்காட்டுவது ஜானகிராமனுக்குக் குறிக்கோளாக இருந்திருக்கவில்லை. அவருக்கு இசை என்பது வெறும் புற உலகைச் சார்ந்ததொரு சிற்றின்ப அனுபவமாக இருப்பதில்லை. அதைத் தாண்டிய – அக உலகம் முழுதும் விரியும் ஒரு பெரிய எழுச்சியாக இருக்கிறது. ஜானகிராமனை வசீகரித்த இன்னொரு பெரிய பிரம்மாண்டமான அனுபவம் இயற்கை. அந்த இயற்கையையும், இசையையும் ஒன்றாகவே பார்த்தார். அதனால்தான் பெரும்பாலும் அவருடைய இசை குறித்த வர்ணனைகள் இயற்கை சார்ந்ததாகவே, மலர்களை, பறவைகளை, இயற்கையின் பேரமைதியை நினைவூட்டுவதாக இருக்கிறது. இயற்கையின் முன்னால் ஒரு திறந்த மனதுடைய மனிதராகத் தோன்றும் பெரும் வியப்பு, இசை முன்னாலும் தோன்றுகிறது. அது வெறும் தொழில்நுட்ப அறிவால் மட்டும் வருவதல்ல.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நடேசண்ணாவின் பாடுமுறையை மூங்கிலின் கணுவோடும், வளைவோடும் ஒப்பிடும் மனநிலை அதற்கொரு உதாரணம். தன்னுடைய இருபத்திமூன்றாவது வயதில் அமரர் கு.ப.ரா-வுக்கு ஒரு இரங்கல் கட்டுரை எழுதுகிறார் ஜானகிராமன். அதில் கரிச்சான் பறவையின் கூவலை, கு.ப.ரா-வின் ஆளுமையை, இலக்கியத்தை, சங்கீதத்தை – இவை எல்லாவற்றையும் கரிச்சான் பறவை என்ற ஒரு உதாரணம் மூலமே சொல்லிவிடுகிறார். அநேகமாக அது அவர் எழுதிய முதல் கட்டுரையாக இருக்கக்கூடும். அதைப்போல திருவாலங்காடு சுந்தரேசய்யரை அவர் வியந்து பாராட்டுவது ஒரு மலரின் வாசனையோடு ஒப்பிட்டுதான்.

“நீலகிரியில் ரோஜாவுக்கு அழகு அதிகம். இதழ்கள் அடுக்கடுக்காகப் பரந்து, பட்டின் வழவழப்புடன் கண்ணைக் கவரும். மூக்கைக் கவராது. நமக்கும் பூவைப் பார்த்ததும் முகர்ந்து பார்க்கத்தான் தோன்றும். ஏமாந்து விடுவோம். படோபடமில்லாமல் சற்று எளிய அமைப்புடன், அமர்ந்த வாசனையுடன் நம் புலவர்களையும் உள்ளத்தையும் குளிரவைக்கிற நம் ஊர் ரோஜாப்பூதான் உடனே நம் ஞாபகத்துக்கு வரும். புதிய புதிய ஒட்டுகள் போட்டு, உரம் இட்டு வர்ணம், அழகெல்லாம் கொண்டு வந்தவர்கள் முக்யமான காரியத்தை மறந்துவிட்டார்கள். மறந்துவிட்டார்களோ, முடியவில்லையோ. திருவாலங்காட்டு ரோஜாப்பூவின் பலம் எல்லாம் அதன் வாசனை. திருவாலங்காட்டில் ரோஜாப்பூவை நான் வாங்கினதோ பார்த்ததோ இல்லை. அந்த ஊரில் பூக்கிற ரோஜாப்பூ சுந்தரேசய்யரும் அவருடைய பிடிலும்தான்.” (திருவாலங்காடு சுந்தரேசய்யர் கட்டுரை.)

இசைப்பயிற்சி’ சிறுகதையில் மல்லி என்ற கதாபாத்திரத்துக்கு பவழமல்லியின் செங்காம்பைப் பார்க்கும்போதெல்லாம் தன்யாசி ராகம் நினைவுக்கு வருகிறது. மதுரை மணி ஐயரின் சங்கீதத்தைப் பற்றிப் பேசும்போது ஜானகிராமன் நினைவுக்கு வருவது காசித்தும்பை மலர்.

“[மணி ஐயர்] வெட்டி வெட்டி, கத்தரித்து கத்தரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை, தனக்காக வகுத்துக்கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு. அடுக்குக் காசித்தும்பை மலரில் புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை.”

ஆஸ்திரேலியப் பயணத்தில் குக்கா புர்ரா பறவையின் குரல் மனிதர்கள் சிரிப்பதைப் போலவே இருப்பதைக் கேட்டு வியக்கிறார். அவர் அப்படி அதை ரசிப்பதைக் கேட்டு அவர் ஆஸ்திரேலிய நண்பர் பரிந்துரைத்தபடி ப்ரிஸ்பேனில் கடையில் கிடைக்கும் பறவைகள், விலங்குகள் குரல்களைப் பதிவு செய்திருக்கும் கிராமஃபோன் தட்டை வாங்கிக்கொள்கிறார். “திருவனந்தபுரத்தில் நீலகண்டன் என்ற ஆங்கிலப் பேராசிரியர் இத்தகைய பிரத்யேகப் பிரதிபலிப்பின் உதவியுடன் பல பறவை ஒலிகளைப் பதிவு செய்திருக்கிறார். வேறு சிலர் செய்கிறார்களோ, என்னவோ! பொதுவாக இசை வகைகளை ஒலிப்பதிவு செய்கிற உற்சாகம், இயற்கை ஓசைகளைப் பதிவு செய்வதில் இருப்பதாகத் தெரியவில்லை,” என்கிறார்.

இசையைக் கேட்குமளவுக்கு, இயற்கையொலிகளைக் கேட்பதில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் ஜானகிராமன் குரலில் – மோகமுள்ளில் ரங்கண்ணா வாழைப்பட்டையைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார் – “பாபு, இதைப் பார்த்தியாடா? இதைப் பாரேன் என்னமோ தம்புரா, வீணைங்கிறானேடா இந்த சோற்றிலே இருக்கிற துவாரத்தைப் பாரு. லக்ஷக்கணக்கிலே இருக்கும் போலிருக்கு, எங்கேயாவது ஒரு கோணல் மாணல் இருக்கா பாத்தியா? பத்து வாத்தியத்தைச் சுருதி சேர்த்துண்டு, ஒருத்தனே ஏகக்காலத்திலே வாசிக்கிறாப்ல இருக்கு… இத்தனை அழகா ஒரு பாட்டுப் பாட முடிஞ்சாப் போரும்.”

இதுதான் ஜானகிராமன். அவருக்கு இயற்கை எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு இசை முக்கியம். எந்த அளவுக்கு இசை முக்கியமோ, அந்த அளவுக்கு இயற்கை முக்கியம்.

மோகமுள் நாவலில் சென்னைக்கு இடம்பெயர்ந்து ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கத் தொடங்கும் பாபுவுக்கு, கார் ஹார்ன், அலுவலக மணி, சுவர்க் கடிகாரம் எனக் கேட்கும் ஒலியிலெல்லாம் இசை நிரம்பி வழிகிறது. இது பாபுவுக்கு ரங்கண்ணாவிடமிருந்து கிடைத்த தரிசனம். ரங்கண்ணா நாதத்தையும், ஸ்ருதியையுமே உயிராகப் பிடித்துக்கொண்டிருந்தவர்.

“ரங்கண்ணா மனதையே, உடலையே சங்கீத மயமாக ஆக்கிக்கொண்டிருந்தார். தம்புராவை மீட்டிக்கொண்டே இருக்கும்போது, கிழவி உள்ளே அண்டாவில் நீர் எடுக்கச் செம்பால் மொள்ளும்போது ஞண் என்று ஒலித்தால், ‘என்னடா ஸ்வரம் அது!’ என்று கேட்பார். உடனே பதில் சொல்லவேண்டும். காக்காய் கத்தல், மாவு மிஷின் கரைதல், தாம்பாள சத்தம், கும்பேச்வரன் கோவில் மணி, வாசலில் போகும் குதிரை வண்டியின் ஹார்ன், சைக்கிள் மணி எல்லாவற்றிற்கும் இந்தக் கேள்விதான் எழும். சொல்லிச் சொல்லி இப்போது நமக்கும் அதே வழக்கமாகிவிட்டது. உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும், ஸ்வரங்களாகவும் கேட்கின்றன.”

இந்த ரங்கண்ணா ஜானகிராமனின் குரு உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்தான் என்று ‘மோகமுள் பிறந்த கதை’ கட்டுரையிலிருந்தும், வெங்கட் சாமிநாதனுக்குக் கொடுத்த பேட்டியிலிருந்தும் தெரியவருகின்றன.

கிட்டத்தட்ட இதே போன்ற உணர்வு ஹிந்துஸ்தானி இசை மேதை உஸ்தாத் படே குலாம் அலிகானுக்கும் இருந்திருப்பதை அவர் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. அவருக்கு வாழ்க்கையில் இசையைத் தவிர வேறெந்த பொழுதுபோக்கும் இருந்ததில்லை. நல்ல மழை பெய்யும்போது கடற்கரையில் அமர்ந்து அலைகள் உயர்வது, சரிவதற்கேற்ப பாடியபடி இருப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. ஒருமுறை மீன் தொட்டியில் மீன்களைப் பார்த்துவிட்டுச் சொன்னாராம்: “அடேயப்பா, இந்த மீன்களின் துள்ளல் தோடி ராகம் போல இருக்கிறது இல்லையா? ச-ரி, ரி-க, க- ம… என?”

அப்படிப்பட்ட படே குலாம் அலிகான் மரணப்படுக்கையில் இருக்கிறார். அப்போது அருகிலிருந்த தன் மகன் முன்னாவர் அலிகானிடம் (இவரும் மிகச்சிறந்த பாடகர்தான்) இறுதியாகத் தன் வாழ்க்கையில் சொன்ன வார்த்தைகள்: “இந்த மின்விசிறியின் சத்தத்தை ஷட்ஜமாகக் கொண்டால், வெளியே நாய் குரைப்பது ரிஷபமாகவும், காந்தாரமாகவும் கேட்கிறது.”

thija-logo5பாபு ரங்கண்ணாவைப் பார்க்கும் முதல் காட்சியில் ரங்கண்ணா தனக்குத்தானே, தன் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நாதத்தைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருப்பார். அதைக் கலைக்க விரும்பாதபடி பாபுவும், மற்றவர்களும் தயங்கி நின்றிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று அது. ஜானகிராமனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘இவனும் அவனும் நானும்’ சிறுகதையில் நண்பனின் மனைவி மேல் காதல் கொண்டு அவளைத் தனிமையில் சந்திப்பதற்காகப் போகிறான் ஒருவன். அவன் எதிர்பாராதவிதமாக நண்பன் வீட்டில் இருக்கிறான். உள்ளறையில் உட்கார்ந்து வெறும் தம்புராவை மீட்டிக்கொண்டு அதன் ஸ்ருதியிலேயே லயித்தபடி இருக்கிறான். நண்பன் வீட்டிலிருக்கும் ஏமாற்றத்தில் அந்த நாதமே அவனுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. ஆனால் உள்ளே நுழைந்தவனை அந்த ஸ்ருதி, அந்த நாதம் உருக்கிக் கரைத்துவிடுகிறது. அந்த நாதத்தின் வலிமை மட்டுமே அவனை எரித்துப் புடம் போட்டு, அவன் தப்பெண்ணத்தை மாற்றிக் கொள்ளச் செய்கிறது. ஆனால், அந்தத் தூய்மை நிலைக்குமா, அல்லது மீண்டும் அழுக்குக்குத் திரும்புமா என்று யோசித்தபடி திரும்பிச் செல்கிறான்.

இசையில், தம்புரா ஸ்ருதியின் நாதத்தில், அதன் ஸ்வரத் துல்லியத்தில் ஒருமுறையாவது தன்னை இழக்காதவர்களுக்கு இது வெறும் தட்டையான, மிகையுணர்ச்சிக் கதையாகவே தெரியும். ஆனால் அந்த ஸ்வரத் துல்லியமும், அதில் உருகிக் கரைந்துவிட முடியும் லயிப்பும்தான் ஜானகிராமனது இசையெழுத்துக்கு மட்டுமல்ல, பொதுவான இலக்கியச் செயல்பாட்டுக்குமே அடித்தளம்.

மோகமுள் ரங்கண்ணா தம்பூராவை ஸ்ருதி சேர்ப்பதில் அதீத கவனம் செலுத்துபவராக இருக்கிறார்.

“சுருதி நன்றாகச் சேர்ந்துவிட்டது.

ரங்கண்ணா காதில் தண்டியை ஒட்டி ஒட்டி, கண்ணை மூடிமூடி, மீட்டிக் கொண்டேயிருந்தார். புருவத்தைச் சுருக்கி காய்களை அணு அணுவாக நகர்த்தினார். ஜீவாப்பட்டை திரித்துத் திரித்துப் பார்த்தார். மறுபடியும் காய்களைத் தள்ளினார்.

பத்து நிமிஷம் ஆயிற்று.

ரங்கண்ணா இன்னும் காதைத் தண்டியிலிருந்து எடுக்கவில்லை, காய்களையும், ஜீவாக்களையும், தள்ளியும் திரித்தும் முகத்தைச் சுளித்தார்.

‘சுருதி சேர்ந்திருக்காடா?… ம்’

‘சேர்ந்திருக்குண்ணா.’ [சாம்பன்]

‘நன்னாக் கவனி, மட சாம்பிராணி. எங்கே சேர்ந்திருக்கு? உன் காதைப் பொசுக்க.’

ரங்கண்ணா ஜீவாவைத் திரித்துத் திரித்து மீட்டிக் கொண்டிருந்தார்.

இருபது நிமிஷமாயிற்று. ரங்கண்ணா புருவத்தைச் சுளிக்காமல், கண்ணை மூடிக் கேட்டார். ஒரு நிமிஷம் கேட்டுவிட்டு மறுபடியும் மணியைத் தொட்டார். தண்டியைச் சாய்த்துக் கொண்டார். நாலு நிமிஷம் ஆயிற்று.

‘அப்பாடா ஏண்டா, செவிட்டு முண்டம். அப்பவே சேர்ந்துடுத்துன்னியே…’ என்று மறுபடியும் [சாம்பனை] செல்லமாகக் கேட்டுவிட்டு, ‘ஆரம்பிக்கலாமா?’ என்றார். ‘அ… சேந்துக்கோ…’

பாபு வாயைத் திறந்தான்.

‘ரொம்ப திறக்காதே, இது போரும்’ என்று உதட்டைச் சற்று திறந்தார் ரங்கண்ணா.

‘கொஞ்சம் இரு’ என்று பாபு ஆரம்பித்ததும் கையைக் காண்பித்தார் ரங்கண்ணா, சுருதி சேர்ந்திருக்கிறதா என்று மறுபடியும் சந்தேகம் வந்துவிட்டாற்போலிருக்கிறது. கண்ணை இடுக்கிப் புருவத்தைச் சுளித்து, தந்திகளை மீட்டி தலையைச் சற்று சாய்த்துக் கொண்டார்.

ஒரு நிமிஷம் ஆயிற்று.

தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து, செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று.

அப்பழுக்கில்லாத நாதமாகக் கூடம் முழுவதும் கமழ்ந்தது அது.

சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போல, இரவும், இருளும் போல, நிலவும் தண்மையும் போல, வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுதுவது போல. சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.”

ரங்கண்ணாவின் இந்த ஸ்ருதி சுத்தம் மீதான அதீதமான கவனம் வெறும் கற்பனை இல்லை.

26_vesawiththi“உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் ரொம்ப நுணுக்கமான செவி கொண்டவர். அவர் சுதி சேக்கறதுக்கு ஒரு மணி நேரமாகும். சுதி சேக்கத் தெரியாதுன்னு அர்த்தமில்லே. சுதில அவருக்கு அத்தனை லயிப்புண்டு. சரியா நூறு பெர்செண்ட் வர்ற வரையில் தம்பூராவில சுதி சேத்துண்டே இருப்பார். அவ்வளவு இம்மி குறையாம இருக்கணும் அவருக்கு. அதாவது கிட்டத்தட்ட ஒரு fantastic செவி அது. அவர் பேசிண்டேயிருக்கறப்ப ஏதாவது சத்தம் கேட்டதுண்ணா கவனிக்கச் சொல்வார். பறவைகள் சப்தம், செக்கு சப்தம், யாராவது பேசற சப்தம், குழந்தை அழற சப்தம் – இதெல்லாம் கேட்டுண்டு இருக்கச் சொல்வார். அதாவது இந்த உலகம் முழுக்க ஒலி மயம், பேசறபோது கூட பேசறவர்கள் எந்த சுதியில் பேசுகிறார்கள் – சுதி concept இருக்கே – சுதியப்பற்றி அடிக்கடி சொல்லிண்டே இருப்பார். இது வந்து எனக்கு ஒரு பெரிய விழிப்பா இருந்தது. ‘என்னடா’ எங்க பார்த்தாலும்… தாம்பாளம் விழறது… சமையல் உள்ள சத்தம் கேக்கறது… வாசல்ல மசியில்லாம வண்டி போகும் – இதையெல்லாம் கவனிக்கச் சொல்வார். உங்களுடைய basic note-லேருந்து எவ்வளவு தூரத்திலே இருக்கு என்பதையெல்லாம் பார்க்கச் சொல்வார். இது நமக்கு உள்ளுக்குள்ள இருந்த உணர்ச்சியை அதிகமா உத்வேகப்படுத்திக் கொண்டே இருந்தது,” என்று சொல்கிறார் ஜானகிராமன்.

இத்தனை உத்வேகமும், நாத லயிப்பும் கொண்ட அதே ரங்கண்ணா கதாபாத்திரம் இருக்கும் மோகமுள் நாவலில்தான், பாலூர் ராமு போன்ற ‘மேடைக்கலைஞரும்’ இருக்கிறார். கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து, பத்திரிகையாளர்களைக் கைவசம் வைத்துக்கொண்டால் பெரிய வித்வானாகிவிடலாம், ‘இன்று ஸ்ருதி இருக்கும், நாளைக்குப் போகும் இது ஒரு பெரிய விஷயமா’ என்று நினைக்கும் வித்வான்களால் அந்த இசைச்சூழல் நிரம்பியிருக்கிறது. அந்த இசைச்சூழல் ரங்கண்ணாவையும், பாபுவையும் மனக்கசப்பில் ஆழ்த்துகிறது.

தற்செயலாகக் கேட்க நேர்ந்த வட இந்திய யாத்ரீகர்களின் குரல் செறிவும், அப்பழுக்கற்ற ஸ்ருதியும் அவர்களை வியப்பிலாழ்த்துகிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட குரல் வீச்சைக் கொண்டிருக்கும் அப்பாடகர்களை, ஏதோ பிச்சைக்காரர்களைப் போல் பார்க்கிறார் ‘வித்வான்’ பாலூர் ராமு. இந்த மனநிலையைக் குறித்த தீவிரமான விமர்சனம் மோகமுள்ளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான உத்வேகமாக அக்கால வித்வான் ஒருவர் ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா?’ என்று கடந்து சென்றதைக் காரணமாகச் சொல்கிறார் ஜானகிராமன். [“ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது.” – மோகமுள் உருவான கதை] மோகமுள்ளில் பாபு – யமுனா உறவு ஓர் இழை என்றால், சரிந்துவரும் இசை குறித்த மதிப்பீடுகள் இன்னொரு இழை. ஸ்ருதி சுத்தம் என்பது இசையின் வெகு அடிப்படையான விஷயம்தான். ஆனால் அந்த அடிப்படை விஷயத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும், இசையை வெறும் கைதட்டலுக்குப் பயன்படுத்தும் விஷயமாகப் பார்ப்பதும் மோகமுள் காலத்திலிருந்து இன்றும் தொடரும் அவலம். இந்த ஸ்ருதி சுத்தம் குறித்த பிரக்ஞையை கிட்டத்தட்ட அவருடைய எல்லா இசை குறித்த படைப்புகளிலும் படிக்கலாம். மதுரை மணி ஐயரைக் குறித்த கட்டுரையிலும் அவருடைய முக்கியமான சிறப்பியல்பாக ஸ்ருதி சுத்தத்தைச் சொல்கிறார்.

ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் நாத லயிப்புக்கு முக்கியத்துவம் தருவதையும், பெரும்பாலான கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் வெறும் மேடைக்கச்சேரிக்கென்று வழிமுறையை உருவாக்கிக் கொண்டு பாடுவதையும், கணக்கு வழக்குகளில் தங்கள் மேதைமையைக் காட்டுவதையும் – மோகமுள்ளைக் காட்டிலும் இன்னும் அழுத்தமாகவே, பெயர்களைச் சொல்லியே ‘ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்’ என்ற சிறுகதையில் சொல்லியிருக்கிறார்.

“கர்நாடக சங்கீதக்காரர்கள் பாடும்போது கண்ணைத் திறந்து கொண்டுதான் கேட்பார் லோகநாதய்யர். யாராவது வடநாட்டுச் சங்கீதக்காரர்களைப் போல ஒரு ராகத்தை ஒரு மணி நேரம் பாடினால் கண்ணை மூடிக்கொள்வார். மற்ற சமயத்தில் படார் படாரென்று கையிலும் தொடையிலும் தாளம் போட்டு அவர்களோடு சேர்ந்து கும்மாளம் போடுவார். விரல் விரலாக எண்ணுவார். சீட்டாட்டத்தில் சின்னத் துருப்பால் பெரிய சீட்டுகளை வெட்டுவதுபோல் ஓங்கிக் கையைத் தட்டுவார். சுரம் பாடுவது என்கிறார்களே அப்போது அய்யர் விரல் எண்ணுவதையும் சப்பாணி கொட்டுவதையும் தொடை நோக அடிப்பதையும் பார்க்க வேண்டும்.”

பொதுவாக ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் ஸ்வரம் பாடும் விஷயம், வெறும் இலக்கண நுட்பம் நிறைந்த – பாடகர் தன்னுடைய மேதைமையைக் காட்டிக் கொள்ளும் விஷயமாகவே தெரிந்தது. அதைக் குறித்த விமர்சனத்தை ஹிந்துஸ்தானி கலைஞர்கள், விமர்சகர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். அதே விமர்சன மனநிலை ஜானகிராமனுக்கும் இருந்திருக்கிறது.

“இப்பொழுது அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இல்லை. பெரிய நஷ்டம்தான். ஆனால் சின்ன வாரிசுகள் அவர் மறைவை நஷ்டம் என்று ஆக்கிவிடாமல் பார்த்துக்கொண்டுவிட்டார்கள். தொண்ணூறு நிமிஷத்தில் தொண்ணூறு பாட்டுப் பாடுவார்கள். ஜட்கா வண்டி சக்கரத்தைச் சாட்டைக் கழியால் சீந்துவது போலவும், ஜன்னல் கம்பிகள் மீது கம்பை ஓட்டுவது போலவும் சுரம் பாடி உண்மையான இசையை எழுப்பி வருகிறார்கள்.” கணையாழியில் எழுதிய ஒரு இசை விமர்சனத்தில் தியாகராஜ ஆராதனையில் கூட, கணக்கு வழக்காக ஸ்வரம் பாடி, தங்கள் திறமையைக் காட்டும் இசைக்கலைஞர்களை விமர்சித்திருக்கிறார்.

ஜானகிராமனின் இசை விமர்சனம் இப்படி வெறும் ஸ்ருதி சுத்தத்தோடு நின்றுவிடவில்லை. இசைக்கலைஞர்களுக்குத் தங்கள் இசை மீது இருக்கும் அக்கறையின்மையும், உண்மையான மேதைமையை அங்கீகரிக்காமலிருப்பதும், மேடைக்காக வேஷம் போடுவதும் ஜானகிராமனுக்குக் கடும் வெறுப்பை ஏற்படுத்தின. அதற்கு மோகமுள்ளிலிருந்தே பாலூர் ராமு பாகவதரைப் பற்றி எழுதியிருக்கும் பல பத்திகளை உதாரணமாகக் காட்டலாம். ‘ரசிகரும், ரசிகையும்’ என்றொரு சிறுகதையில் அந்த விமர்சனம் இன்னும் அழுத்தமாக விழுகிறது. திருவையாறு தியாகராஜ உற்சவத்துக்குச் செல்லும் ஒரு வித்வான் அங்கே ஒரு தாசி வீட்டில் தங்குகிறார். இரவு காமப்பிதற்றலில் தியாகராஜர் கீர்த்தனையும், அப்பெண்ணின் அழகும் ஒன்று என அப்பெண்ணிடம் சொல்கிறார். தியாகராஜர் மீதும், இசை மீதும் அளவற்ற மரியாதை கொண்ட அப்பெண் இரவென்றும் பார்க்காமல், பாகவதரை வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறாள். அப்பெண்ணுக்குப் பாட வராது. ஆனால் வித்வான் தன் பாட்டுத்திறமையால் சபையையே மயக்கிக் கட்டிப்போடக்கூடியவர். ஆனால் இசையின் உன்னதத்தை அப்பெண்ணும், பாகவதரும் அணுகும் விதங்கள் வெவ்வேறு.

மேடைக்கச்சேரி என்ற சூத்திரத்தில் கர்நாடக சங்கீதம் சிக்கிக்கொண்டதில் ஜானகிராமனுக்குப் பெரிய வருத்தம் இருப்பது ‘ஆயிரம் பிறைகளுக்கப்பால்’ சிறுகதையில் தெளிவாகவே தெரிகிறது. அப்படி மாறிவரும் இசைச்சூழலில் நாதஸ்வரம் போன்ற நீண்ட நேர வாசிப்புக்கேற்ற அற்புதமான வாத்தியமும், உயர்ந்த இசைக்கலைஞர்களும் அழிந்து வருவதைக் குறித்த மனப்பதிவுதான் ‘செய்தி’ சிறுகதை. உயரிய இசையை வாசித்துவரும் இசைக்கலைஞர், பிழைப்புக்காக மக்களை குஷிப்படுத்தும் தரமில்லாத பாடல்களை வாசிக்கவேண்டி வருகிறது. மாறிவரும் அந்த இசைச்சூழல், இசையின் உயர்வில் மூழ்கிக் குளித்த மூத்த வித்வானைக் கலவரப்படுத்துகிறது. ஒரு குறுகுறுப்பு தூண்ட அந்த இசையையும்தான் வாசித்துப் பார்ப்போமே என்று நினைக்கிறார் வித்வான். “ஏதோ ஆவல் தூண்ட, பிள்ளை அவசர அவசரமாக உறையை அவிழ்த்து, நாயனத்தை உதட்டில் வைத்தார். அந்த அபஸ்வரம் அவருக்கு வரவில்லை. எந்த ஸ்வரத்திலும் சேராமல், ஒரு பிடி ஒன்று அவரைத் திணற அடித்தது. வாய் நிறையத் தண்ணீரை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்தவாறே நீளமாகத் துப்பினால் நுனியில் போய் வளைந்து விழுமே அந்த மாதிரி ஒரு பிடி.” ஆனால் உயரிய இந்திய இசையை அதற்கு முன் கேட்டிராத ஒரு ஐரோப்பியரால் பிள்ளை வாசிக்கும் கர்நாடக சங்கீதத்தை அணுகிக் கண்ணீர் மல்கி ரசிக்கமுடிகிறது. அதாவது உயரிய இசை ‘ட்ரெண்ட்’ போன்ற விஷயங்களைப் பொருத்ததல்ல, மனத்தடை இல்லாமல் கேட்கும் யாராலும் அதை உள்வாங்கி ரசிக்கமுடியும் என்பது ஜானகிராமன் நமக்குச் சொல்லும் ‘செய்தி’.

இசை ஆராய்ச்சி செய்து பட்டங்கள் பெற்று முனைவர்களாகும் விதம் குறித்த விமர்சனம் – எள்ளலாக வழங்கப்பட்டது ‘ஐயரும் ஐயாறும்’ சிறுகதையில். திருவையாறுக்குச் சென்று தியாகராஜர் குறித்து ஆராய்ச்சி செய்து கட்டுரை சமர்ப்பிக்கும் ஏழு மாணவிகளைப் பற்றிக் கிண்டலாக எழுதப்பட்டது. ஜானகிராமனின் கூர்மையான நகைச்சுவை அருமையாக வெளிப்பட்ட சிறுகதை இது. ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு விதமான மனிதரை அணுகிப் பேட்டி எடுக்கிறாள். அதில் ஒரு பெண் ஒரு பாட்டியிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று: “தியாகராஜருக்கு என்னென்ன பட்சணம், சாப்பாடு எல்லாம் பிடிக்குமாம்?”

பேட்டி எடுக்கப்பட்ட இன்னொரு மனிதர் சொல்லும் கருத்து: “கலை என்னும் ஏணியில் சங்கீதம் என்பது அடிப்படி. அதாவது மிக மிகத் தாழ்ந்தது. கலைகளில் சிறந்தது இலக்கியம்தான். அதற்குப் பிறகுதான் சிற்பம், ஓவியம், நடனம், இசைக்கலை எல்லாம் வரும். இலக்கியத்திலும் தலையாயது உரைநடை இலக்கியமே. கவிதை கடையானது. உரைநடையிலும் சிறுகதையும், நாவலும்தான் தலையாயவை. தியாகராஜர் நாவல் எழுதியிருந்தால் நோபல் பரிசு வாங்கியிருப்பார்.” இக்கருத்தோடு அக்கால, இக்கால இலக்கியவாதிகள் பலரும் ஒத்துப்போவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. இசையை வெறும் மன மயக்கத்துக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்கும் ஒரு விஷயமாகவும், இலக்கியவாதி அதைத் தாண்டி ‘ஆத்ம பரிசோதனை’ செய்பவன் என்றும் பலருக்கும் ஒரு கருத்து உண்டு.

‘பாஷாங்க ராகம்’ என்ற சிறுகதை இசை விமர்சகர்களையும், ‘மிஸ்டர் கோடு கோடு கோடு’, ‘நாத ரட்சகர்’ சிறுகதைகள் சபை காரியதரிசிகளையும், புரவலர்களையும் விமர்சிக்கிறது. ‘இசைப்பயிற்சி’, ‘நடேசண்ணா’ இரு சிறுகதைகளும் இசை குறித்து பொதுமக்கள் அணுகும் விதத்தை விமர்சிக்கிறது. அதிலும் ‘இசைப்பயிற்சி’ இசை கேட்டல் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி தீவிரமான ஜாதீய விமர்சனமாகவும் அமைகிறது. கிராமத்திலிருக்கும் ஒரு தேர்ந்த இசைக்கலைஞர், இசையாசிரியருக்கு நல்ல சிஷ்யர்களே கிடைப்பதில்லை. தற்செயலாகக் கேட்க நேர்ந்த சேரியில் வசிக்கும் குப்பாண்டியின் குரல் அவரை வியப்பிலாழ்த்துகிறது. குப்பாண்டிக்கு இசை கற்றுக்கொடுத்து அவனைப் பெரிய வித்வானாக்கவேண்டும் என்று அவருக்கு ஆசை பிறக்கிறது. ஆனால் கிராமமே சேர்ந்துகொண்டு அவரைப் பரிகாசம் செய்கிறது. “ஆலயப்பிரவேசம் ஆயிடுத்து. தெருப்பிரவேசம் ஆயிடுத்து. கிருகப்பிரவேசமும் நீர் மனசு வச்சா காந்தி மாதிரி அதுவும் நடக்க வேண்டியதுதானே. என்னமோ! யார் எதைத் தடுக்க முடியப் போறது இந்த நாளிலே! ஜமாயும்,” என்று சொல்லி துண்டை உதறி எழுந்து செல்கிறது. குப்பாண்டிக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்கும்போது சுற்றி நின்று சிரிக்கிறது. இவர்களத்தனை பேரையும் மீறி குப்பாண்டிக்கு இசை சொல்லித் தந்தே தீருவது என்று ஆசிரியர் முடிவெடுப்பதுதான் ‘இசைப்பயிற்சி’.

நடந்தாய் வாழி காவேரி’யில் காவேரியையும், இசையையும் இணைத்துப் பேசும் ‘இசை வெள்ளம்’ என்றொரு தனி அத்யாயமே இருக்கிறது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக இசை குறித்தே அவர் குறுங்கட்டுரைகள் கணையாழியில் எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில கட்டுரைகள்தான் ’திருவாலங்காடு சுந்தரேசய்யர்’, ’மதுர மணி’ போன்ற கட்டுரைகள். ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற ஆஸ்திரேலியப் பயணம் குறித்த புத்தகத்தில் கடைசி அத்யாயம் முழுக்க இசையைப் பற்றிதான் பேசுகிறது. ஆஸ்திரேலியா போகும் ஜானகிராமன் கையோடு கர்நாடக இசைக் கச்சேரி ஒலிப்பதிவைக் கொண்டுபோய் ஆஸ்திரேலியர்களின் அபிப்ராயத்தைக் கேட்கிறார். மேற்கிசையோடு இந்திய இசையை ஒப்பிடுகிறார். Improvisation என்ற விதத்தில் ஜாஸ் இசைக்கும், இந்திய மரபிசைக்கும் உள்ள இணைத்தன்மைகளைக் குறிப்பிடுகிறார். ஆஸ்திரேலியாவைப் போலல்லாமல் நம் பள்ளிகளில் இசையை ஒரு பாடமாகக் கற்பிப்பதில்லை என்ற வருத்தத்தையும் பகிர்ந்துகொள்கிறார். ஒரு கல்வி அதிகாரியாக நம் தொடக்கல்வி முறைகள் மீது அவருக்கு இருக்கும் தீராத ஆற்றாமையையும் பதிவு செய்கிறார். ஆஸ்திரேலியப் பயணப்புத்தகத்தின் கடைசி பத்தி இது: “தொடக்கப் பள்ளிகளில் நூற்றுக்கு ஐம்பது குழந்தைகள் பாதியில் விட்டுவிடுகின்றன என்று கல்வி அதிகாரிகள் புலம்புகிறார்கள். ஏழ்மையும் வீட்டில் உதவி செய்கிற நிர்ப்பந்தமும் நாலு காசு சம்பாதித்து வீட்டுக்குக் கொடுக்கிற பரிதாபமும் காரணமாக இருக்கலாம். ஆனால் பாதி காரணம் தொடக்கப்பள்ளி வேண்டாத பாடமும் இசையும் இன்பமற்ற சிறையுமாக இருப்பதுதான்.”

ஒரு வகையில் ஜானகிராமன் இசை குறித்து எழுதிய கிட்டத்தட்ட எல்லா படைப்புகளிலுமே நம் இசைச்சூழலைக் குறித்த விமர்சனம் இருக்கிறது. கர்நாடக சங்கீதம் கச்சேரி வடிவத்துக்குச் சுருக்கப்பட்டு அதன் ஆத்மார்த்தத்தை இழந்துவிட்டதைக் குறித்த வருத்தம், முயற்சியில்லாத இசைக்கலைஞர்கள், ஒரு சூழலுக்குள் சங்கீதத்தை அடைக்க நினைக்கும் சமுதாயம் என அத்தனையைக் குறித்தும் அவர் தொடர்ந்து தன் வருத்தத்தைக் கொட்டியபடியே இருந்திருக்கிறார். இத்தனை தீவிரமாக நம் மரபிசை மீது வைக்கப்பட்ட விமர்சனம் ஜானகிராமனைத் தவிர வேறெவராலும் முன்னெடுக்கப்படாதது நம் துரதிர்ஷ்டம்தான். அக்கால கர்நாடக சங்கீதம் குறித்த இசை விமர்சனங்கள் வெகு சில கலைச்சொற்களுக்குள்ளும், அசட்டு நகைச்சுவைக்குள்ளும் அடங்கிவிடக்கூடிய பத்திகள்தான். இன்னும் கூட வெகு ஜன இதழ்களில் வரும் இசை விமர்சனங்கள் அம்மரபை வழுவாமல் பின்பற்றி வருகின்றன.

இத்தனை நுணுக்கமான இசைப்பிரக்ஞையும், தேர்ந்த இசைமேதைகளிடம் இசைப்பயிற்சியும் பெற்றிருந்த ஜானகிராமன் ஏன் தொழில்முறைப் பாடகராகவில்லை? அதற்குக் காரணம், சிலருக்கு இருக்கும் அபிப்ராயம் போல அவருக்குப் பாட வராது என்பதாலோ, தோல்வியுற்ற பாடகர் என்பதாலோ இல்லை என்றே கரிச்சன் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் போன்றோர் சொல்லும் கருத்துகளிலிருந்து தெரியவருகிறது. மோகமுள் எழுதிய பின் புதுடெல்லிக்குச் சென்றிருந்த ஜானகிராமனை ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை ஒரு பேட்டி எடுத்திருக்கிறது. அதில் அவர் தெளிவாகவே, “நான் பத்தாண்டுகளாக இசை பயின்று வருகிறேன். இப்போது முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் கீர்த்தனைகளைப் பயின்று வருகிறேன். ஆனால் நான் மேடைக்கச்சேரி செய்வேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள்.” என்று சொல்கிறார். அதாவது மேடைக்கச்சேரிகள் செய்வதில்லை என்பது அவர் விரும்பி எடுத்த முடிவாகவே இருக்கிறது. (அப்பேட்டி கொடுத்தபின்னும் பல வருடங்கள் அவர் பத்தமடை சுந்தரமய்யரிடம் இசை கற்றார்.) ‘இலக்கியம், இசை என்ற இருவழிகளில் இலக்கியத்தை விரும்பியே தெரிவு செய்தேன் என்று சொல்லியிருக்கிறார்,’ என ஜானகிராமனின் மகள் உமா சங்கரி சொல்கிறார்.

ஆனால் ‘தொழில்முறைப் பாடகராவதில்லை’ என்ற அந்த முடிவை ஏன் எடுத்தார் என்பதற்கான காரணத்தை எங்கும் அவர் சொன்னதாகத் தெரியவில்லை.

அவர் படைப்புகளையும், இசையெழுத்தையும் வைத்து மேடைக்கச்சேரிகளையும், வெறும் தொழிலாக இசையை வைத்துக்கொள்வதையும், மதுரை மணி ஐயர், லால்குடி ஜெயராமன் போன்ற பெரிய இசைக்கலைஞர்கள் நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் இசையைக் கொண்டாடுபவராக இருந்தாலும், தொழிலாகிவிட்ட ஆத்மார்த்தமற்ற இசைச்சூழலையும் அவர் வெறுத்தார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. “நம்ம ஆத்மா ஆனந்தப்படறதுக்காக ஏற்பட்ட சாமானை யாராவது அம்பலத்திலே காமிச்சு பிச்சை வாங்குவானோ?” என்று ரங்கண்ணாவின் குரலாக மோகமுள்ளில் பேசுவது ஜானகிராமன் என்றே தோன்றுகிறது.

இவைபோக பொதுவாகவே புகழ் வெளிச்சத்தைக் கூசும் ஜானகிராமனின் இயல்பும் காரணமாக இருக்கவேண்டும். தனக்குத்தானே நோட்டீஸ் அடித்து, போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து, விழா நடத்திக் கொள்ளும் நம் இசை, இலக்கியச்சூழலில் ஜானகிராமன் ஒதுங்கியிருக்க விரும்பியதில் ஆச்சரியமில்லை.

“உண்மை படோபடமில்லாதது. எளிமை இருக்கும். ஒளி இருக்கும். அனாவசிய உடுப்புகள், அங்கிகள் எல்லாம் அதன்மேல் இராது. சங்கராச்சாரியாரை விட அவர் மடத்தில் வேலை செய்கிற சிப்பந்திகளுக்குதான் உடை அதிகம். இந்த உண்மையை சங்கீதத்தில் காண திருவாலங்காடு சுந்தரேசய்யரின் வாசிப்பைக் கேட்கவேண்டும்.”

இது ஜானகிராமன் திருவாலங்காடு சுந்தரேசய்யர் குறித்து எழுதிய கட்டுரையின் கடைசிப்பத்தி. இது ஜானகிராமனின் ஆளுமைக்கும், எழுத்துக்கும் கூட பொருந்திப்போகிறது.